Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘தினசரிகள்’ Category

>

எனது உறவினர் ஒருவர் இருந்தார் வயதானவர். நான் பள்ளிச் சிறுவனாக திரிந்தபோது அவருக்கு எழுபது வயதிருக்கும். அவர் கழிப்பறை சென்றால் வெளியே வர குறைந்தது ஒரு மணிநேரமாகும். அவ்வளவு நேரம் அதற்குள் என்ன செய்கிறார் சில குறும்புப் பையன்கள் ஆராச்சி செய்ய முனைவார்கள். ஆனால் அதன் இரகசியம் உள்வீட்டுப் பையனான எனக்குத் தெரிந்திருந்தது. முதல் நாள் வெளிவந்த ஆங்கிலத் தினசரியுடன் உள்ளே சென்றால், அதில் கரை கண்டு முடியவும் அவரது கழிப்புக் கடன் தீரவும் சரியாக இருக்கும். அதன் பின்தான் மிகுதி வேலை எல்லாம்.

அவரைப் போலவே பலருக்கும் தினசரிகள் இல்லாமல் காலை விடிவதில்லை.

மற்றொரு வயதானவரையும் எனக்குத் தெரியும். பத்திரிகையின் முற் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வெளியூர்ப் பதிப்பு என்ற வசனத்தில் படிக்க ஆரம்பித்தால், எந்த நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என்ற கடைசி வரி படித்து முடியும் வரை சார்மனைக் கதிரையிலிருந்து எழுந்திருக்கவே மாட்டார்.

இவை அந்த நாள்கதைகள். இப்பொழுது காலையில் ரீவி ஒலிபரப்பில், பத்திரிகை நியூஸ் வாசிப்பதை அவ்வப்போது அரைக் காது கொடுத்துக் கேட்பது மாத்திரமே பலருக்கு பத்திரிகை படிப்பதாகிட்டது.

சில தகவல்கள்

இத் தருணத்தில் பத்திரிகை என்ற ஊடகத்தின்; தோற்றம் பற்றியும் சில தகவல்களை நினைத்துப் பார்ப்பது சுவார்ஸமாக இருக்கும்.
2009 ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் 12,297 பத்திரிகைகள் பிரசுரமாகின்றன என World press trends அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் மிக அதிகமான எண்ணிக்கையில் பிரசுரமாகும் பத்திரிகை ஜப்பானிலிருந்து வெளிவரும் Yomiuri Shimbun என்பதாகும். தினமும் 10,020,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன என அறியும்போது ஆச்சரியம் மேவுகிறது.

உலகில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை எது என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. பத்திரிகைகளின் முன்னோடியான வடிவங்கள் ஜேர்மனியில் தொடங்கியதாகத் தெரிகிறது. கையால் எழுதப்பட்ட அந்தப் பிரதிகளாவன அங்குள்ள வர்த்தகர்களிடையே பரவியிருந்தன. நாட்டு நடப்பு, போர் செய்திகள், பொருளாதார வர்த்தகச் செய்திகள் எனப் பல அவ்வாறு அவர்களிடையே பகிரப்பட்டன. இது கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தது.

அச்சில் முதலில் வெளிவந்ததும் ஜேர்மனியில்தான். கைப்பிரசுங்கள் வடிவில் வந்த அவை பெரிதும் பரப்பான விடயங்களைப் பேசின. இவை 1400களின் பிற்பகுதியில் தோற்றம் பெற்றன.

லண்டன் கஸட் என்ற பத்திரிகையே ஆங்கிலத்தில் முதல் முதலாக வந்த செய்திப் பத்திரிகையாகும். இத 16666ம் ஆண்டு வெளியான போதும் அதற்கு முன்னரே இதற்கு முன்னோடியான 1662 The Weekly Newes ல் வெளிவர ஆரம்பித்துவிட்டது.

பணிகள்

செய்திப் பத்திரிகைகள் என்றால் என்ன என்பது பற்றி எங்கள் எல்லோருக்கும் தெரியும். உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகள், உபயோகமான தகவல்கள் இவற்றோடு பத்திரிகைகளை வாசகர் வாங்கும் அளவில் குறைந்த விலையில் விற்பதற்கு உதவியாக விளம்பரங்களும் நிறைய இடம் பெறும். நூல்களைப் போல உயர்தரக் கடதாசியாக அல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் வெளியாவதும் விலை உயராமல் தடுப்பதற்கே ஆகும்.

இப்பொழுது பத்திரிகைகளின் எல்லைகள் அகன்றுவிட்டன. தனியே செய்திகள் என்றில்லாமல் இலக்கிய ரீதியாக கதை, கட்டுரை, கவிதைகள், விஞ்ஞானத் தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என் பலவற்றையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஒரு காலகட்டத்தில் இணைந்தது. இப்பொழுது அவற்றுக்காக தனி இணைப்புகளை சஞ்சிகைகள் வடிவில் வழங்க வேண்டியும் இருக்கிறது.

தினசரிப் பத்திரிகைகள் எதிர்நோக்கும் போட்டிகளும் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாகின்றன. போட்டி என்பது பத்திரிகைகளுக்கு இடையே என்ற நிலையையும் தாண்டி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என புதிய சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றால் வாசகர்கள் மேலதிக பயன்பெறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

தினக்குரல்

தினக்குரலும் இத்தகைய போட்டிகளுக்கு ஈடுகொடுத்து தனது தனித்தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான பத்திரிகையாக தினக்குரல் இன்று இருக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் நெருக்கடியான நிலையிலிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களை வெளிப்படுத்தவும், அவர்களது குரலைத் தேசிய அளவில் ஒலிக்கச் செய்யவும், தமிழ்தேசிய உணர்வுக்கு ஆதரவாகவும் ஆரம்பிக்கப்பட்டதால் மிகுந்த இக்கட்டான நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சவால்களைத் தாண்டி கட்டிளம் பருவமான 15 வருட காலத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்து இருக்கிறது.

எனது விருப்புகள்

தினக்குரலை எடுத்ததும் முற்பக்கச் செய்திகளை மேய்ந்துவிட்டு நான் தாவிப் பாய்வது அதன் நடுப்பக்கத்திற்கே ஆகும். முக்கியமாக கவனத்தை ஈர்ப்பது அங்கு நாலாம் பக்கத்தில் இடம்பெறும் ஆசிரியர் தலையங்கம் ஆகும். கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் அதில் அலசப்படுவது வழக்கம். மிகவும் சிறப்பாகவும், பரந்த பார்வையுடன், நல்ல தமிழில் அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.

நல்ல பல புதிய தமிழ்ச் சொற்களை அங்கு ஆசிரியர் பயன்படுத்துவது வழக்கம். தமிழ் எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பயனுடையாக இருக்கிறது. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலையங்கங்கள் ‘ஊருக்கு நல்லதைச் சொல்வேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்ததும் அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றதும் அறிந்ததே.

5ம் 6ம் பக்கங்களில் வெளியாகும் சிறப்பான கட்டுரைகள் என்னைக் கவரும் மற்றொரு அம்சமாகும். உள்நாட்டு அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான முன்னேற்றம் போன்ற பல்வேறு விடயங்களில் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அங்கிருக்கும். அவற்றிடையே முற்போக்குச் சிந்தனையுள்ள கட்டுரைகளும் இடம்பெறுவது ஏனைய பத்திரிகைகளில் காண முடியாத விடயமாகும். மறைந்த எழுத்தாளர் டேவிட் ராஜ் அவர்களது இதழ்க் கீற்றான ‘ஒளிவு மறைவின்றி….’ கருத்துச் சித்திரம் ஆகியவற்றை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ஞாயிறு தினக்குரலில் வெளியாகும் நேர்காணல்கள், நூல் விமர்சனம், என்னைக் கவரும் பல சிறந்த சிறுகதைகளையும் அது தொடர்ந்து தருகிறது. பெண்ணியம், உளவியல் சார்ந்த கட்டுரைகளும் அதில் சிறப்பானவையாகும்.

தமிழ்ப் பத்திரிகைகள்

தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் விடயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளியிடும் முறைக்கு அளிப்பதில்லை. பக்க வடிவமைப்பில் நிறைய முன்னேற்றங்களுக்கு இடம் உண்டு. விடயங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் கண்களுக்கு இதமாக, வாசிப்புக்கு கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தால்தான் உள்ளடக்கம் வாசகனைச் சென்றடையும். பத்திரிகைத்தாளின் தரத்திற்கும் வாசக நுகர்ச்சியைத் தூண்டுவதற்கும் நிறையத் தொடர்பு உண்டென்பதையும் மறக்கக் கூடாது.

முற்பக்கத் தலைப்புச் செய்தி வாசகனைக் கவருமாறு எல்லாப் பத்திரிகைகளும் தலைப்புக் கொடுக்கின்றன. இது போலவே ஏனையவற்றிக்கும் கவனம் அளிப்பது அவசியமாகும். கவர்ச்சியும் கொச்சைத்தனமான இரண்டாம் தரத் தலைப்புகள் பொதுவாக இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆயினும் வாசிக்கத் தூண்டும் ஆவலை விதைக்காவிட்டால் அவை வாசகனைச் சென்றடையப்போவதில்லை.

இப்பொழுது பத்திரிகைகள் அதிகரித்துவிட்ட அளவிற்கு தேவையான விடயதானங்கள் கிடைப்பதில்லை போலிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் இணையத்தில் இருந்தும் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பல கட்டுரைகளும் தகவல்களும் எங்கிருந்து பெறப்பட்டன, யாரால் எழுதப்பட்டன என்ற தகவல்கள் இல்லாமல் அனாதைப் பிள்ளைகள் போல சிதறி வெளியாகின்றன. இதனால் அவற்றின் நம்பகத்தன்மை கெடுகிறது. பகுத்தறிந்து வாசிக்கத் தெரியாத வாசகனை மாயையில் சிக்க வைப்பதுமுண்டு.

உதாரணத்திற்கு நலவியல் தொடர்பான கட்டுரைகள் செய்திகளைச் சொல்லலாம். என்னிடம் வரும் நீரிழிவு நோயாளர்களில் சிலர் சீனியின் அளவு அதிகரித்த நிலையில் வந்தபோது அவர்களது உணவு முறையயைத் தீர விசாரிக்க நேர்ந்தது. பலர் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதாகக் கூறியதுண்டு. “நீரிழிவுக்கு நல்லது” எனப் பத்திரிகைளில் படித்ததாகச் சொல்லுவார்கள். பத்திரிகைச் செய்தி என்பது உண்மையா பொய்யா என்பது தெரியாது.

அது கலோரிச் செறிவுள்ள பழம் என்பதால் மிகக் குறைவாகவே நீரிழிவு நோயாளர்கள் சாப்பிட வேண்டும். தகமையற்றவர்கள் எழுதியதைப் பகிர்ந்து கொள்வதால் வரும் வினை இது. யாரால் எழுதப்பட்டது, அவர் மருத்துவராயின் அவர் எத்துறை சார்ந்தவர், நவீன மருத்துவத்துறை சார்ந்தவரா சுதேசிய மருத்துவ துறை சார்ந்தவரா, அவரது கல்வித்தகமை என்ன அல்லது அது கை வைத்தியமா, என்பது போன்ற விடயங்களை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். வாசகன் தனக்கேற்றதைத் தெரிவு செய்து படிக்க உதவும்.

மருத்துவக் கட்டுரைகள் இணையத்தில் இருந்து பெறப்பட்டதாயின் அது எந்தத் தளத்திலிருந்து பெறப்பட்டது. அது நம்பிக்கையான தளம்தானா? அது தகுதியானர்களால் எழுதப்பட்டதா என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இணையம் கட்டுப்பாடுகள் அற்றது. யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் எழுதலாம்.

நலவியல் கட்டுரைகள் மாத்திரமின்றி எத்துறை சார்ந்த தகவல்களுக்கும் இது பொருந்தும்.

எதிர்காலம்

பத்திரிகைகளுக்கு சவால்கள் பல காத்திருக்கின்றன. வாசகர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. நடுநிலைமையுடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு. ஆனால் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு மறைவான தடைகளும், உயிராபத்து அடங்கலான அச்சுறுத்தல்களும் முன் நிற்கின்றன. தினக்குரலுக்கு இது புதிய சவால் அல்ல. பொறுப்புகளை நிறைவேற்ற திறமையும், சாதுர்யமாக செயற்படும் வழிமுறையும் தெரிந்திருக்கிறது.

எனவே வளமான எதிர்காலம் தினக்குரலுக்கும் அதன் வாசகர்களுக்கும் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

தினக்குரல் 15 அகவை விசேட மலரில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »