Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Computed tomography’ Category

>‘சரியான நாரி வலி (கீழ் முதுகு வலி). திரும்பிப் பார்க்க, சரிஞ்சு படுக்க ஒண்டுமே முடியுதில்லை’ என்று வேதனையுடன் சொன்னவர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

அவருடைய பிரச்சனையை விபரமாகக் கேட்டு அறிந்ததிலும், முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்ததிலும் அவரது வலிக்கு அடிப்படைக் காரணம் கடுமையான நோய் அல்ல எனத் தெளிவாகத் தெரிந்தது. வெறும் தசைப் பிடிப்புத்தான்.



எனவே சில இலகுவான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, மருந்துகளும் எழுதிக் கொடுத்தேன்.

இருந்தபோதும் அவர் கதிரையிலிருந்து எழவில்லை. முகத்தைப் பார்த்தால் அதில் திருப்தியைக் காணவில்லை.

‘வேறையும் ஏதாவது பிரச்சனையும் இருக்கோ’ எனக் கேட்டேன்.

பரிசோதனைப் பயிற்சி படங்கள் நன்றி:- www.netterimages.com/image/1705.htm

‘இல்லை ….’ என்றவர், தயக்கத்துடன் ‘..ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் நல்லதுதானே’ எனக் கேள்வியாக தனது விருப்பை மறைமுகமாகத் தெரிவித்தார்.



நாரிப்பிடிப்பிற்கு (Low Backache)பல காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்படிப்பு (Muscular Pain), எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி(Arthritis), முள்ளத்தண்டு இடைத்தட்டம் விலகல் (Prolapsed Disc), அதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி (Sciatica) மோசமாகி கால்களுக்கு பரவுதல் எனப் பல.

நோயின் அறிகுறிகளை தெளிவாகக் கேட்டு அறிவதாலும், உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதாலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதற்கு ஏற்பவே சிகிச்சைகளையும் வழங்குவார்கள். இது போதுமானது.

தேவை ஏற்பட்டால் மட்டுமே இரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகளையும், எக்ஸ் ரேயையும் நாடுவார்கள்.

இப்பொழுது மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. சாதாரண எக்ஸ் ரே, சிடி ஸ்கான் (CT) , எம்ஆர்.ஐ (MRI)போன்ற பரிசோதனைகள் இலகுவாகச் கிடைக்கின்றன.

இப் பரிசோதனைகள் பற்றி நோயாளர்களும் நிறையவே அறிந்துள்ளார்கள். பண வசதி இருந்தால் உடனடியாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது. அதனால் நோயளர்களதும் உறவினர்களதும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இவற்றைச் செய்துவிட்டால் உடனடியாக நோயைத்தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம், விரைவில் குணமாக்கி விடும் என நம்புகிறார்கள். எனவே இவற்றைச் செய்யும்படி மருத்துவர்களையும் நெருக்குகிறார்கள்.



ஒரு ஒரு ஆய்வின் முடிவு இதனைத் உறுதியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, எக்ஸ் ரே பரிசோதனையால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிந்த போதும் 80 சதவிகிதமான நோயாளிகள் அதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்பியதாக தெரிய வந்தது.

இதன் மூலம் நோயாளிகளின் விருப்பத்திற்கும் மருத்துவ ரீதியான உண்மைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது.

மருத்துவர் கடுமையான நோய் இருக்கிறது என உணர்ந்து அதைக் கண்டுபிடிக்க, அல்லது உறுதிப்படுத்த மேற்கூறிய பரிசோதனைகள் தேவை எனக் கருதினால் ஒழிய இப் பரிசோதனைகளால் நோயாளர்களால் எதிர்பார்க்கப்படும் பலன் கிட்டப் போவதில்லை. இதனை 1800 நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு 6 ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல மருத்துவ சஞ்சிகையான The Lancet அண்மையில் (February 7, 2009) ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் நோயாளர்களின் தேர்வுகளினதும் விருப்பங்களினதும் அடிப்படையில் தேவையற்ற பல எக்ஸ் ரே பரிசேதனைகள் செய்யப்படுவதை மறுக்க முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேசியரீதியான மருத்துவச் செலவில் வீண்விரயத்தை குறைக்க முடியும்.

நோயாளிகளைப் பொறுத்தவரையில் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அவசியமற்ற ரேடியம் கதர்வீச்சிற்கு ஆளாவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தான பின்வளைவுகளைத் தடுப்பதற்காக அவியமற்ற எக்ஸ் ரேகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அது. இது மிக முக்கியமானதல்லவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-

ஹாய் நலமா? தினக்குரல்

Reblog this post [with Zemanta]

Read Full Post »