Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2007

>இன்ஹேலர்களை உபயோகிக்கலாமா?”

உது பழகிப்போகும். பாவிச்சால் விட ஏலாது. எனக்கு பம் வேண்டாம். குளிசை தாங்கோ.” “போற இடமெல்லாம் தூக்கிக் கொண்டு திரிய வேணும். அரியண்டம். எனக்கு இன்ஹேலர் (Inhaler) வேண்டாம்.”

“உது கடும் ஆஸ்மாகாரர்களுக்கு இல்லோ. எனக்கெதுக்கு.”

“எனக்கு வெறும் இருமல்தானே! இழுப்பு இல்லை; எனக்கேன் பம்.”

உட்சுவாசிக்கும் மருந்துகளை (Inhaler) உபயோகிக்கும்படி எழுதிக்கொடுத்தால் பலரும் சொல்லும் மறுமொழிகள்தான் அவை. ஆனால் இவை யாவும் தவறான தகவல்களாகும்.
ஆஸ்மா என்பது இழுப்பாக இருக்கவேண்டும் என்பதில்லை. வெறும் இருமலாகக் கூட இருக்கலாம் என்பதை முன்பும் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். ஆஸ்மா இழுப்பாக இருந்தாலும் சரி, இருமலாக இருந்தாலும் சரி அதற்கான மிகச் சிறந்த மருந்து பம் என்று பொதுவாக சொல்லப்படும் Inhaler தான். அதில் கூட பல்வேறு வகையான மருந்துகள் உள்ளன. ஆயினும், அவை பற்றிய நுணுக்கங்களைத் தவிர்த்து அவற்றின் நன்மை தீமைகள் பற்றியும் பார்ப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலும் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி இவற்றின் நன்மை தீர்க்கமாக நிறுவப்பட்டுள்ளது.

பலரும் நம்புவதற்கு மாறாக உட்சுவாசிக்கும் மருந்து (Inhaler) மிகவும் ஆபத்தற்றது. காரணம் இதில் பாவிக்கப்படும் மருந்தின் அளவு மிகக்குறைவாகும். மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் அளவு மில்லிகிராமிலிருக்க, பம்மில் உள்ளது மைக்ரோகிராமிலுள்ளதே இதற்கு சான்றாகும். மருந்தின் அளவு குறைவாக இருப்பதால் மாத்திரைகளை உபயோகிக்கும் போது ஏற்படும் பதற்றம், கைகால் நடுக்கம் போன்றவை பம் பாவிக்கும்போது ஏற்படுவதில்லை. அத்துடன், ஆபத்தான பக்கவிளைவுகளும் இல்லை.

அத்துடன், பம் உபயோகித்ததும் ஒரு சில நிமிடங்களில் சுகம் தெரியும். ஆயினும், மாத்திரைகளை எடுக்கும்போது குடலில் செரிந்து இரத்தத்தில் கசிந்து சுவாசத்தில் வேலைசெய்ய ஆரம்பிக்க 2-3 மணி நேரம் எடுக்கும். மாத்திரைகளானது ஆஸ்மா வந்தால் அதை தணிக்க மட்டுமே உதவும். ஆயினும், பம் மருந்துகள் ஆஸ்மாவை விரைவாக தடுப்பது மாத்திரமின்றி, அடிக்கடி வராமல் தடுக்கவும் உதவுகின்றன. தடுப்பு ஆற்றல் இருப்பதால் பெரும் இருமலாகவோ, சிறிய இழுப்பாகவோ இருப்பது எதிர்காலத்தில் கடும் ஆஸ்மாவாக மாறுவதையும் தடுக்கும்.

பழக்கப்படுவதற்கு இது போதை மருந்து அல்ல. பாவித்தால் தொடர்ந்து பாவிக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். ஒவ்வொரு நோயாளியினதும் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப குறுகிய காலமோ, நீண்ட காலமோ உபயோகிக்க நேரிடும். விலை, மாத்திரைகளை விட சற்று அதிகமாயினும் ஆபத்திற்கு விரைவாகவும் நன்றாகவும் குணமாக்கும் இன்ஹேலர்களை உபயோகிக்க தயங்க வேண்டியதில்லை.

Read Full Post »

>நீரிழிவின் முன்நிலை Pre Diabetes


நீரிழிவின் முன்நிலை (Prediabetes) என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய கட்டமாகும். இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சீனியின் அளவு (Fasting blood sugar) 110 முதல் 126 வரை இருந்தால் `நீரிழிவின் முன்நிலை’ எனலாம். இந்நிலை பற்றி முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் உள்ளவர்கள் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். அல்லது அதுவராமல் நீண்டகாலம் தள்ளிப்போடலாம் என்பது இப்பொழுது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

உங்களுக்கு `நீரிழிவின் முன்நிலை’ இருக்குமாயின் அது நீரிழிவு நோயாக மாறாமல் தடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

முதலாவது வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குருதியில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவது இரண்டாவது மருந்துகள் உட்கொள்வதன் மூலம் செய்வது.

வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன எவை?

உணவு முறையில் மாற்றங்கள் செய்தல்,
எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்,
தினசரி உடற்பயிற்சி செய்தல்
ஆகியனவே அவை.

இவற்றை ஒழுங்காகக் கைக்கொண்டால் அவருக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதத்தினால் குறைகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில், வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கின்ற காலம் வரைதான் நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என்பதில்லை. அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட அது நீடிக்கிறது.

உதாரணமாக இந்த ஆய்வு ஏழு வருடங்களுக்குச் செய்யப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடித்த அந்த நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட மேலும் 3 வருடங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருந்தது என்பது நம்பிக்கை அளிக்கும் முடிவாகும்.

வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயற்படுத்த முடியாதவர்களுக்கும் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தும் குருதியில் சீனியின் அளவைக் குறைக்க முடியாதவர்களுக்கும் மருந்துகள் உதவக்கூடும்.

மெட்போமின் (Metformin), அகாபோஸ் (Acarbase), ரொஸிகிளிட்டசோன் (Rosiglitazone) ஆகிய மாத்திரைகள், நீரிழிவு வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன. இதுவும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நீரிழிவு வரவாய்ப்புள்ளவர்கள், மேற்கூறியவற்றில் ஒரு முறையை வைத்திய ஆலோசனையுடன் கடைப்பிடிப்பது உசிதமானது.

அத்துடன், பிரஸர் இருந்தால் அதற்கு உபயோகிக்கும் மருந்துகளையும் அவதானமாகத் தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில், அடனலோல் (Atenolol), எச்சிடி (HCT) ஆகியனவும் அவை சார்ந்த மருந்துகளும் நீரிழிவு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும்.

Read Full Post »