Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2007

>நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

அந்த முதியவருக்கு இருமல். கடுமையானது அல்ல. ஆயினும் நீண்ட நாட்களாத் தொல்லை கொடுக்கின்றது. சளி கிடையாது. வெறும் வரட்டு இருமல்.

‘பார்க்காத வைத்தியர் கிடையாது. (என்னையும் சேர்த்துத்தான் சொன்னார்) செய்யாத சிகிச்சையும் கிடையாது. செத்தாப் பிறகுதான் நிற்கும்போலை’ என மிகுந்த மனக் கவலையுடன் கூறினார்.

கேட்டபோது மனவேதனையாக இருந்தது. குற்ற உணர்வும் ஏற்பட்டது.அவரைச் சோதித்துப் பார்த்தபோது எந்த வித்தியாசமான குறிகளும் தெரியவில்லை. பழைய பரிசோதனை அறிக்கையிலும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மீண்டும் மிக நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு காதிற்குள்ளும் குடுமி அடைந்திருப்பது தெரிந்தது.

காதுக் குடுமி இயற்கையாக உற்பத்தியாவது. நோயல்ல. காதுக்குள் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவமே அடிப்படையானது. இது காதின் பாதுகாப்பிற்காகவே சுரக்கின்றது. வாயை மென்று உண்ணும்போது தசைகளில் ஏற்படும் அசைவுகள்மூலம் தானாகவே சிறிது சிறிதாக வெளியேறி விடுகின்றது. சிலருக்கு காதின் தோலிலிருந்து உதிரும் கலங்களும் ரோமங்களும் அதனுடன் சேர்ந்து இறுகிக் கட்டியாகி விடுவதுண்டு.

காதுக் குடுமி இயற்கையானது என்பதால் பொதுவாக எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை. முன் கூறியது போல இறுகிக் கட்டியாகி விட்டால் கூட பலருக்கும் எவ்வித தொந்தரவும் ஏற்படுவதில்லை. காது கேட்பது மந்தமாக இருக்கலாம். சிலருக்கு மென்மையான வலி ஏற்படலாம். தலைக்கு முழுகும்போது அல்லது நீந்திய பின்னர் காது அடைப்பது போலிருப்பதுடன், வலியும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு காதிற்குள் இரைச்சல் ஏற்படக்கூடும். தலைச் சுற்றும் வரக்கூடும். வெகு அரிதாகவே நாட்பட்ட இருமல் காரணமாக காதுக் குடுமி இருப்பதுண்டு. அதனால் வைத்தியர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. அந்த முதியவருக்கு தொல்லை கொடுத்த நாட்பட்ட இருமலானது காதுக் குடுமியை அகற்ற நின்றுவிட்டது.

இதை வாசித்தவுடன் நாட்பட்ட இருமல் உள்ளவர்கள் காதுக் குடுமியை அகற்றுவதற்கான ஆயுதங்களைத் தேடி ஓடவேண்டாம். என்ன ஆயுதங்கள்? காது கிண்டி, நெருப்புக் குச்சி, சட்டைப்பின், கடதாசிச் சுருள், பஞ்சு முனைக் குச்சி (Ear Buds) இப்படி இன்னும் பல. இவற்றை நீங்கள் உபயோகிப்பது ஆபத்தானது. எடுக்க முயலும்போது குடுமி வழுகி உட்புறமாகத் தள்ளுப்பட்டு செவிப்பறையை சேதமாக்கலாம். இதனால் காது செவிடுபடவும் வாய்ப்புண்டு. அல்லது கிண்டுவதால் உரசல் ஏற்பட்டு புண்படலாம். கிருமித் தொற்று ஏற்பட்டு சீழ் வடியலாம். இப்பொழுது காதில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பஞ்சு முனைக் குச்சிகள்தான் காரணம் எனக் காது வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்திருந்து அவற்றை உபயோகிப்பதைத் தவிருங்கள்.

காதுக்குடுமி இருந்தால் வைத்திய ஆலோசனை பெறுங்கள். அது கரைந்து வெளியேறுவதற்கான துளி மருந்துகளை அவர் தரக்கூடும். அது தானே கரைந்து வெளியேறும் இல்லையேல் வைத்தியர் காதைக் கழுவி அகற்றுவார். சிலருக்கு கருவிகள் மூலமும் அகற்றக்கூடும்.

காதுக் குடுமியை அகற்ற வேண்டுமா? வேண்டாமா? அகற்றுவது அவசியமாயின் எந்த முறையில் அகற்றுவது என்பன பற்றி வைத்திய ஆலோசனைப்படியே நடவுங்கள்.

Read Full Post »

>ஊசியா? வேண்டவே வேண்டாம்

ஊசி போடுவதென்றால் யாருக்குத்தான் பயமில்லை? ஏத்தனை நெஞ்சுத் துணிவு உள்ளவராயினும் ஊசி என்றவுடன் மனதிற்குள் சற்றுத் துணுக்குறவே செய்யும். ஆயினும் அந்தப் பீதியானது சாதாரண நிலைக்கும் மேலாக, நியாயப்படுத்த முடியாத அளவிற்கு அதீதமாக தொடர்ந்து நீடிப்பதாக இருந்தால் அதை ஒரு வகை பீதி நோய் எனலாம். ஊசிப் பீதி நோய் (Belonephobia) என்று கூறுவார்கள்.

இந்த ஊசிப் பீதி என்பது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். எந்தவொரு சமூகத்திலும் 3.5 சதவீதம் முதல் 10 சதவீதம் ஆனவர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் பெரும்பாலும் 5 வயதாகும் முன்னரே இந்தப் பயப் பிரச்சினை ஆரம்பித்து விடுகிறதாம். இது ஒரு பரம்பரை நேயல்ல என்ற போதும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஊசிப் பீதி உள்ளவர்களில் 80 சத வீதமானவர்களின் நேரடி உறவினர்களில் (தாய், தந்தை, சகோதரர்கள்) வேறு யாருக்காவது இப் பிரச்சினை ஏற்கனவே இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.

ஊசிப் பீதி என்பது பயப்படக் கூடியதோ அல்லது ஆபத்தானதோ இல்லை. ஆயினும் ஊசி பற்றிய வீண் பீதி காரணமாக தங்களது உடல் நலத்திற்குத் தாங்களாகவே கேடு விளைவித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. உதாரணமாக அன்றொரு நாள் விழுந்து உரசல் காயப்பட்டு வந்தவரைச் சொல்லலாம். காயத்தைச் சுத்தப்படுத்தி மருந்து கட்டிய பின்னர் ஏற்புத் தடை ஊசி போட வேண்டும் என்று சொன்னோம். “இந்த ஊசி போடுற வேலை என்னட்டை வேண்டாம். இது வேண்டாம் எண்டுதானே கொலஸ்டரோலுக்கு இரத்தம் சோதிக்கக் கூடப் போகாமல் இருக்கிறன்” என்று சொல்லிக் கொண்டு எழுந்து ஓடத் தயாரானார்.
மிகவும் ஆபத்தான நோயான ஏற்பு வராமல் இருக்கப் போடப்படும் தடை ஊசியை வேண்டாம் என்கிறார். அத்துடன் பக்கவாதம், மாரடைப்பு ஆகியன வராமல் தடுப்பதற்கான இரத்தப் பரிசோதனைகளுக்கு செல்லத் தவறியிருக்கிறார். அறிவுபூர்வமற்ற வீண்பயம் என உங்களுக்கும் எனக்கும் புரிகிறது. அவருக்குப் புரியவில்லை. இல்லை! அவருக்கும் புரிந்திருக்கும், ஆனால் ஊசிப் பீதி நோய் அவரது கண்களை மறைத்திருக்கிறது.

இப் பீதி நிலையின் போது உடல் வெளிறலாம், கடுமையாக வியர்க்கலாம், கை, கால்கள் குளிரலாம், வாந்தி வரலாம், மூச்செடுப்பதில் சிரமமும் தோன்றலாம், தன்னுணர்வு இன்றி சலம் மலம் வெளியேறவும் கூடும். மயங்கி விழவும் செய்யலாம். நாடித் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும், எனவே இப் பிரச்சினையுள்ளவர்கள் வைத்தியரிடம் செல்லும் போது அதனைத் தெரிவிப்பது அவசியம். பிரச்சினையிருப்பது தெரிந்தால் அவர் நோயாளிக்கு உளவளத் துணை மூலம் மனத் தென்பளிப்பதுடன் பீதி ஏற்படாத வகையில் ஊசி போடவோ இரத்தம் எடுக்கவோ கூடும்.

இத்தகையவர்களில் பலருக்கு இரத்தத்தைக் கண்டாலும் பீதி, மயக்கம் ஆகியன ஏற்படுவதுண்டு மிருகங்களைக் கண்டால் பயம். கரப்பான் போன்ற பூச்சிகளுக்குப் பயம், இருட்டறைக்குள் செல்லப் பயம், உயரங்கள் ஏறுவதில் பயம், லிப்டில் செல்லப் பயம், நோய்கள் பற்றிய பீதி போன்றவையும் ஊசிப் பீதி போன்றவையே. குறித்தவைக்கான பயம் (Specific Phobia) என மருத்துவத்தில் இவற்றைக் குறிப்பிடுவார்கள். இவை யாவும் வெட்கப்படவோ, மறைக்கப்படவோ வேண்டிய பிரச்சினைகள் அல்ல. இருந்தால் உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்.

Read Full Post »

>சிறுநீர் காலடியில் சிந்துகிறதா?

“அடிக்கடி சலம் போகுது, நித்திரை குழம்பிச் சினமாகக் கிடக்கு, நீரிழிவாக இருக்குமோ என்று சலம், இரத்தம் சோ திச்சுப் பார்ப்போமோ” எனக் கேட்டார், அறுபது வயது மதிக்கக் கூடிய அந்த முது இளைஞர்.

சிறு நீர் அடிக்கடி கழிவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். நீரிழிவு, புரஸ்ரேட் சுரப்பி வீக்கம், மனம் அமைதியின்மை, சிறுநீரில் கிருமித் தொற்று, பிரஸர் மற்றும் இருதய நோய்களுக்கு உட்கொள்ளும் சில மாத்திரைகள் போன்ற பல.

எனவே, அவரது சிறுநீர் எப்படிப் போகிறது என்பது பற்றி சற்று விபரமாக விசாரித்தேன்.

” அடிக்கடி போகுது ஆனால் அதிகம் போவதில்லை”
“சலம் விட்டிட்டு வந்தாலும் முழுக்க போன உணர்வில்லை- கொஞ்ச நேரத்திலை திரும்பப் போக வேணும்.”
“போக வேணும் போல இருக்கும், போனால் டக்கெண்டு போகாது கொஞ்சம் முக்கினால்தான் போகும்”
“முந்தின மாதிரி முழுவீச்சிலை போகாது. மெதுவாகத்தான் போகும். சிலவேளை காலடியிலை சிந்துகிற மாதிரி மிக மெதுவாகப் போகும்.”

அவர் கூறிய, அந்த அறிகுறிகள், பொதுவாக புரஸ்ரேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படுவன. புரஸ்ரேட் என்பது எமது சலப்பைக்குக் கீழே, சலக் குழாயைச் சுற்றியிருக்கும் ஒரு சுரப்பி. ஆண்களில் மாத்திரம் இருப்பது. வயதாக, ஆக அது சற்று வீக்கமடைவதுண்டு. அப்படி வீங்கினால் சிறுநீர் சுலபமாக வெளியேறுவது தடைப்பட்டு மேற் கூறிய அறிகுறிகள் வரக்கூடும்.

கையுறை அணிந்து, மலவாயின் ஊடாக விரலைச் செலுத்தி புரஸ்ரேட் வீக்கம் அவருக்கு இருப்பதை உறுதிப்படுத்தினேன். ஸ்கான் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டன.

“இது புற்று நோயாக இருக்குமோ” என்பது அவரது சந்தேகம்.

உண்மைதான். புரஸ்ரேட் வீக்கத்தில் வயதாகும் போது எற்படும் (Benign Prostrate Hypertrephy) சாதாரண வீக்கமும் உண்டு அல்லது புற்று நோயும் இருக்கலாம். மலவாயில ஊடாக விரல் விட்டுச் சோதித்த போது அவ்வீக்கம் மெதுமையாகவும் வழுவழப்பாகவும் இருந்ததால் புற்று நோயாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதும் இரத்தப் பரிசோதனை செய்து புற்று நோய் இல்லை என நிச்சயப்படுத்தினோம்.

புரஸ்ரேட் பிரச்சினையைக் குணப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சத்திர சிகிச்சை, மற்றது மாத்திரைகள்.

மாத்திரைகளை குறைந்தது ஆறுமாதம் உபயோகித்தால்தான் சுகம் தெரியும்.மேலும் தொடர்ந்து உபயோகிக்க நேரிடும், சிறு நீர் வாயிலூடாக குழாயைச் செலுத்தி, வெளிக்காயமின்றி சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. ஆபத்தற்ற, உடலுக்குத் துன்பம் விளைவிக்காத சத்திரசிகிச்சை, நோயின் நிலைக்கு உகந்த சிகிச்சை முறையை வைத்தியர் தீர்மானிப்பார். மேலே குறிப்பிட்ட நோயாளிக்கு சத்திரசிகிச்சை தேவைப்படவில்லை.

Read Full Post »

உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!

அந்த ஜயா மிகவும் வசதியானவர்.
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவர். அவவிற்கு சிறிய வருத்தம் என்றால் கூட அலட்சியம் பண்ண மாட்டார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துப் போவார்.
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்வார். மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்.

ஆயினும், மனைவியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண முடிவதில்லை.

மற்றவர் அவ்வளவு வசதியானவர் அல்ல.

ஆயினும், தனது மனைவியின் சௌகர்யத்திற்காக தனது தகுதிக்கு மேல் போய் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். ரி.வி., பிரிட்ச், மைக்ரோ அவன், வோஷிங் மெசின், பிரஸர் குக்கர் என எது தேவையென்றாலும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுப்பார். ஆயினும், அவராலும் மனைவியின் மனதைக் கவர முடியவில்லை. வேறு என்ன செய்வது என அங்கலாய்க்கிறார்.

இன்னுமொருவர், மனைவியின் திருப்தியின்மைக்குக் காரணம் அவளது தனிமையும் பொழுது போக்கின்மையும்தான் என நம்பி நீண்ட லீவு போட்டுவிட்டு கோயில், குளம், சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம் என பலதும் முயன்றுவிட்டார். ஆயினும் எதுவித முன்னேற்றமும் இல்லை.

இப்பெண்கள் எல்லாம் எதிலும் திருப்தியடையாத தாழ்ந்த மனம் கொண்டவர்களா? இல்லை. அவர்கள் அணுகு முறையில்தான் ஏதோ தவறு இருக்க வேண்டும்.

லெபனானின் பெய்ரூடடில் செய்யப்பட்ட ஆய்வு உங்களுக்கு உதவலாம். 1,650 திருமணமான தம்பதியர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு அது.

  • வீடு கூட்டுதல்,
  • தூசி தட்டுதல்,
  • உடுப்பு தோய்த்தல்,
  • சமையல், தேனீர் தயாரித்தல்,
  • படுக்கையை சுத்தம் செய்தல்,
  • பாத்திரம் கழுவுதல்

போன்ற இருபத்தைந்து நாளாந்த வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வீட்டு வேலைகளில் கணவன் எந்த அளவுக்கு உதவுகிறான் என்பதையும் மனைவியின் மன நிலை, குடும்ப வாழ்வில் அவளது திருப்தி அல்லது திருப்தியின்மை, அவளது கவலை போன்றவற்றோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள்.

வீட்டு வேலைகளில் மிகக் குறைந்தளவே பங்களித்த கணவன்மாரின் மனைவிகள் கூடுதலாகப் பங்களித்தவர்களின் மனைவிகளைவிட,

  • 1.6 விகிதம் உள நெருக்கடியில் இருந்தார்கள்.
  • 2.96 விகிதம் கணவனோடுடனான உறவில் அசௌகரியப்படுவதாக உணர்ந்தார்கள்,
  • 2.69 விகிதம் கூடுதலான கவலையோடு இருந்தார்கள்.

“வீட்டு வேலைகளில் கணவன் ஈடுபடுவதற்கும்,
மனைவியின் மன ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை
இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது”

என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தும்புத்தடியில் ஆரம்பியுங்கள்.

வீடு கூட்டுவதில் ஆரம்பித்து
ஏனைய வீட்டு வேலைகளிலும்
பங்கு பற்றுங்களேன்,
மனைவி மகிழ்வார்.

வீட்டில் என்றும் வசந்தம்தான்!

Read Full Post »

>மனப்பதற்றமும் மாரடைப்பும்

அவருக்கு சென்ற ஒரு வருடத்திற்குள் எத்தனை தடவை ஈ.சீ.ஜி. எடுக்க நேர்ந்திருக்குமோ தெரியாது. கடவுளுக்குத்தான் வெளிச்சம்! சற்று நெஞ்சு வலி இருந்தால் உடனடியாக வைத்தியரிடம் ஓடுவார்.மாரடைப்பா என அறிய; ஈ.சீ.ஜி. எடுத்துப் பார்ப்பார்.

எதுவும் இருக்காது .
நெஞ்சு வலி இருக்க வேண்டும் என்று கூட இல்லை நெஞ்சு நோவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட வைத்தியரிடம் ஓடுவார்.

மாறிமாறி வெவ்வேறு டாக்டர்களிடம் ஓடுவார். அவ்வளவு மனப் பதற்றம்! தனக்கு மாரடைப்பாக இருக்குமோ என்று சதா சஞ்சலம்.

இத்தகைய கடுமையான மனப்பதற்றம் (Anxiety) உள்ள நோயாளிகளுக்கு , மாரடைப்பு வருவதற்கு அல்லது அதனால் மரணமடைவதற்கான சாத்தியம் ஏனையவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

இது பற்றிய விபரம் American College of Cardiology யின் மே 22, 2007 இதழில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருதய நோயுள்ள 516 பேரிடையே மூன்று வருடங்களுக்கு மேல் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு அது.

இன்னுமொரு முக்கிய விடயமும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் எந்தளவு மனப்பதற்றம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, காலப்போக்கில் எந்தளவு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் முக்கியமானது.

ஆரம்பத்தை விட காலப் போக்கில் மனப் பதற்றம் அதிகமானால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் பத்து சதவீதத்தினால் அதிகரிக்கிறது.
மாறாக மனப்பதற்றம் குறைந்தால் மாரடைப்பிற்கான சாத்தியப்பாடு குறைகிறது.

நீங்கள் மனப்பதற்றம் உள்ள இருதய நோயாளி எனில் செய்ய வேண்டியது என்ன?

மாரடைப்பைக் கொண்டுவரக் கூடிய ஏனைய பிரச்சினைகளான புகைத்தல், பிரஸர் , நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்றவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துங்கள்.

அத்துடன் மன அமைதியைக் கொண்டுவரக் கூடிய உடற்பயிற்சி, தியானம், யோகாசனம், இறைவழிபாடு போன்றவற்றில் மனதார ஈடுபடுங்கள்.

உங்களுடன் ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் பேசக்கூடிய இருதய வைத்திய நிபுணருடன் உங்கள் நோய் பற்றியும் அதனால் ஆபத்துகள் வராமலிருக்க நீங்கள் செய்யக்கூடிய நாளாந்த நடைமுறைகள் பற்றியும் தெளிவாக கலந்துரையாடுங்கள்.

இது நோய் பற்றிய உங்களது தேவையற்ற பயத்தை நீக்கி மன அமைதியை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை நீடிக்கும்.

நோய் பற்றிய வீண் பீதியைக் கிளறிவிடும் நண்பர்களையும் உறவினர்களையும் தவிருங்கள்.

” திறமையான கவனிப்புக்கு உள்ளாகும் இருதய நோயாளிகள் மகிழ்வுடன் நீடுழிவாழ முடியும்” என இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் சார்ள்ஸ் பிளட் கூறியது உங்களையும் சேர்த்துத்தான். அவர் ஹவாட் மருத்துவக் கல்லூரியின் இருதய நோய் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரும் பேராசிரியரும் ஆவார்.

பின் இணைப்பு June 2010.

மன அழுத்தத்திற்கும் (Stress) மாரடைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அண்மைய ஆய்வுகள் சுட்டுகின்றன. பிரித்தானிய சுகாதார சேவைகளின் NHS இணைய தளத்தில் இந்த வருட ஆரம்பத்தில் வந்த தகவலை படியுங்கள்.

மன அழுததத்தின் போது அதற்கான ஹோர்மோனான கோர்ட்டிசோல் (Cortisol) இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிவதை அதிகரிப்பதால் இது நடக்கிறது எனச் சொல்கிறார்கள்.

கடுமையான மன அழுத்தத்தின்போது இருதயத்திற்கு குருதியை வழங்கும் Coronary artery களில் திடீரென தற்காலிக இறுக்கம் ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாகக் கருதுவோரும் உண்டு

Read Full Post »

உள்ளி சாப்பிடுவது நல்லதா?

உள்ளி பற்றிய எனது முதல் ஞாபகம் சிறுவயதிலேயே ஆரம்பமாகிறது. வயிற்றுக் குத்து, வயிற்றுப் பொருமல், அஜீரணம் என எந்த வயிறு சார்ந்த பிரச்சினை என்றாலும் அம்மா உடனடியாக உள்ளிக்குளிசைதான் தருவா.

சர்வரோக நிவாரணி மாதிரி!

எமது ஊரைச் சேர்ந்த வரத கணபதிப்பிள்ளை பரியாரியாரின் உள்ளிக்குளிசை அந்தக் காலத்தில் மிகவும் பிரபல்யம். கொழும்புக்குப் பயணம் போபவர்கள்கூட கைக்காவலாக எடுத்துச் செல்வார்கள்.

அத்துடன், எமது உணவில் பெரும்பாலும் சேர்த்துக் கொள்ளும் பண்டமாகவும் உள்ளி இருந்தது.

பிற்காலத்தில் உள்ளிக்கு பல மருத்துவ பயன்கள் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக் கூறின. உள்ளியில் உள்ள Alicine என்ற பொருளுக்கு அழற்சிக்கு எதிரான (Anti-inflammatory) சக்தி இருப்பதாக தெரியவந்தது.

அத்துடன், ஆய்வுகூட பரிசோதனைகளில் (மனித உடலில் அல்ல) அலிசின் என்ற உள்ளியில் உள்ள பொருள் கொலஸ்ட்ரோல் உற்பத்தியை தடுப்பதாகவும் அறியப்பட்டது. வேறுபல மருத்துவப் பயன் கொண்ட இரசாயனப் பொருட்களும் உள்ளியில் இருப்பதாக தெரியவந்தது.

இவற்றின் பயனாக உள்ளியின் பாவனை மேலை நாடுகளிலும் பிரபல்யமானது. கொலஸ்ட்ரோலைக் குறைக்கும், இருதய நோய்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளி,பதப்படுத்தப்பட்ட உள்ளி, அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரசாயனங்கள் ஆகியவற்றின் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரித்திருந்தது.

ஆயினும், அண்மையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆதரவில் செய்யப்பட்ட உள்ளி பற்றிய ஆய்வு இந்த நம்பிக்கைகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

சிறிய ஆய்வுதான். 192 பேரைக் கொண்டு ஆறு மாதங்களுக்குச் செய்யப்பட்ட ஆய்வு. ஆயினும், மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஆய்வு. எந்தவித முன் நம்பிக்கைகளுக்கும் கட்டுப்படாத ஆய்வு.

இந்த ஆய்வின் முடிவானது உள்ளியோ அதன் இரசாயனப் பொருட்களோ குருதியில் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பதில் எந்தவிதத்திலும் உதவாது என்பதே.

இன்னும் தெளிவாகச் சொன்னால், கெட்ட கொலஸ்ட்ரோல் எனப்படும் LDL இன் அளவைக் குறைப்பதிலோ அல்லது நல்ல கொலஸ்ட்ரோல் எனப்படும் HDL இன் அளவை அதிகரிப்பதிலோ எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதேயாகும்.

உள்ளி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் முடிவு என்பதில் ஐயமில்லை. ஆயினும், உள்ளி சாப்பிடுபவர்கள் அதனை நிறுத்த வேண்டியதில்லை.

ஏனெனில், உள்ளியானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுமா? கொலஸ்டரோல் இரத்தக் குழாய்களில் படிவதைக் குறைக்குமா?
இருதய நோய்களைக் குறைக்குமா?

போன்ற விடயங்களில் இந்த ஆய்வு ஈடுபடவில்லை. எனவே, ஏனைய நல்ல விளைவுகள் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது.

சிலவகை மூளைப் புற்று நோய்களுக்கு இது உதவும் என  ஒரு ஆய்வு கூறியது. அது பற்றிப் படிக்க கிளிக் பண்ணுங்கள்

அதுவரை உள்ளியை அதன் சுவைக்காகவும் நல்ல மருத்துவ விளைவுகளைத் தரக் கூடும் என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து சாப்பிடுங்கள். தவறு ஏதும் இல்லை.

உள்ளி பற்றிய அமெரிக்க CDC சொல்வது பற்றி அறியவும்
அதிலிருந்து Roasted Squash with Potatoes & Garlic
சமைக்கும் முறை பற்றி அறியவும்  கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »

>பசுப்பால் சளியை தடுக்கும்

“இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை” என்றாள் தாய்.
வளரும் குழந்தை முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.

“நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?” எனக் கேட்டேன்.

மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.
பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை.

அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.

பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.

5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.

இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.

பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.

பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.

இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.

எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.

பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

தினக்குரல் தினசரியின் ஹாய் நலமா பத்தியில் நான்  எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

Read Full Post »

Older Posts »