>மூளை களைப்படைந்து சோர்வுற்றுவிட்டது. ஆயினும் நிறைவேற்றி முடிக்க வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. ஒரு சிகரட் அடித்தால் சுறுசுறுப்பாகிவிடுவோம் என நினைக்கிறீர்கள். சுறுசுறுப்பு ஏற்படக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பாரதூரமானவை.
சுவாசப்பை, குரள்வளை, தொண்டைக்குழி, உணவுக் குழாய், சிறுநீரகம், சிறுநீரகப்பை, மற்றும் கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமானது புகைப்பதினால் மிகவும் அதிகரிக்கிறது.
ஆனால் மிகவும் சாதாரணமான, விலை மலிவுள்ள வல்லரை “மூளையானது களைப்படைந்து திறமையாகக் கவனிக் குவிப்புச் செய்ய முடியாது போகும் வேளைகளில் அதனைத் தளர்த்தி சுமுகமாக்கக் கூடியது” எனக் கூறுகிறார் டொக்டர் வசந்தி தேவராஜா சிறீஸ்கந்தராஜா.
இன்னும் பல மூலிகைகள் பற்றியும் மிக விபரமாகக் கூறியுள்ளார் ‘ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற தனது புதிய நூலில். நாம் வழமையாக உணவில் உபயோகிக்கும் மஞ்சள், திராட்சை, கோவா, உள்ளி, வெண்காயம், அதிமதுரம், இஞ்சி, உள்ளி, வெண்காயம் போன்ற பல மூலிகைகள் பற்றியும், மருந்தாக மட்டும் அல்லது மருத்துவத்தில் பயன்படுத்தும் பட்டிப்பூ, பருத்தி, கற்றாளை, குங்கிலியம், போன்ற பல மூலிகைகள் பற்றியும் இங் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நூற்பரப்பில் அதுவும் முக்கியமாக மருத்துவம் மற்றும் நலவியல் சார்ந்த துறைகளைப் பொறுத்த வரையில் இந் நூலின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இந் நூலானது மருத்துவத்தின் ஒரு புதிய அலகை இலங்கையின் தழிழ் மருத்துவ நூல் வெளியீட்டுத் துறையில் அறிமுகப்படுத்துகிறது. இதனால் மருத்துவத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் (மருத்துவ, தாதிய, சுகாதார சேவைப் போதனாசிரியர்கள், ஆய்வு கூட பணியாளர்கள்), அத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஊசாத் துணை நூலாகும்.
ஈழத்து தமிழ் மருத்துவ நூல் வெளியீடு என்பது நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதில் மேலைத் தேய மருத்துவத் துறை சார்ந்த நூல்கள் டொக்டர் கிறீனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இந் நூல்கள் இரண்டு வகையானவை. மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்குமான பாடப் புத்தகங்களை டாக்டர் கிறீனும் பின்னர் பேராசிரியர் சின்னத்தம்பியும் எழுதி வெளியிட்டார்கள். இது முதல் வகை.
இரண்டாவது வகை பொதுமக்களை பயனாளர்களாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். இதற்கும் முன்னோடி டொக்டர் கிறீன் அவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து டொக்டர் இராசரத்தினம், பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவராஜா, டொக்டர்களான நாகநாதன். எம்.கே.முருகானந்தன், சுகுமார், பத்மலோஜினி, சீர்மாறன், சிவயோகன் போன்ற பலரும் நலவியல் துறை சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இன்னும் பல பெயர்கள் எழுதும் அவசரத்தில் விடுபட்டிருக்கும் என்பது உண்மையே. திரு.கா.வைத்தீஸ்வரன், கோபாலமூர்த்தி, திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற சுகாதார ஆலோசகர்களும் நலவியல் இலக்கியத்திற்கு நிறையப் பங்களித்துள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் அறிவியல் துறை சார்ந்த நூல்களின் வெளியிடப்படுவது மிகவும் குறைவாக இருந்த சூழலில் நலவியல் துறை மட்டும் விதிவிலக்கு எனலாம். ஆயினும் அத்துறையில் நூல் எழுதுவதும், வெளியிடப்படுவதும் போதுமானதாக இல்லை என்பதும் உண்மையே.
திருமதி திலகவதி தர்மராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவாக அன்னாரின் பெறாமகள் டாக்டர் வசந்தி தேவராஜா ஸ்ரீகாந்தராஜாவினால் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற நூல் இன்று (11.08.2007) கொழும்பில் வெளியாகிறது. அந்த நூல் பற்றிய ஆய்வே இது.
இத்தகைய சூழலில் டாக்டர் வசந்தியின் நூல்கள் சற்று வித்தியாசமானவை. இவை மருத்துவத்தின் விசேட துறைகள் சார்ந்த ஆழமான நூல்களாகும். முன்னைய வெளியீடான முதுமை பற்றிய “முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்” என்பது முதுமை பற்றிய ஒரு பூரணமான நூலாகும்.
இப்பொழுது வெளியாகும் “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு” என்பது புற்றுநோய் பற்றியது. அதிலும் விசேடமாக ஒட்சிசனெதிரிகள் (Antioxidents) மூலமாக புற்றுநோயை எதிர் கொள்வது பற்றியது.
இது ஆய்வு நூல் அல்ல. ஆனால் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட பல ஆய்வுகளின் விஞ்ஞான பூர்வமான தகவல்களை ஒன்று திரட்டி, அவற்றை வகைப்படுத்தி இயலுமானவரை இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதியுள்ளார்.
புற்று நோயானது மனிதர்களின் உடலையும் உள்ளத்தையும் மிகவும் பாதிக்கும் ஒரு நோயாகும். நோயாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி முழுச் சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுகிறது. எனவே நோய் வந்த பின் அதன் சிகிச்சைக்காக அலைவதை விட அது வராமல் தடுப்பது மிகவும் பொருத்தமானதாகும். அதனைப் பற்றியே இந் நூல் பேசுகிறது என்பதால் எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய நூல்கள் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு மருத்துவர்கள் , தாதியர்கள், சுகாதாரப் போதனையாளர்கள் ஆகியோருக்கு மிகவும் உபயோகமானவை. அவர்கள் துறை சார்ந்த நவீன தகவல்களுடன் தங்களை இற்றைப்படுத்த இவை உதவுகின்றன.
அதே நேரத்தில் ஓரளவு விஞ்ஞானக் கல்வியறிவுள்ள எந்தப் பொதுமகனும் வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள எவரும் படித்துப் பயன்படக் கூடிய நூலாகும்.
இந்நூல் ஆறு முக்கிய அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.
(1) புற்றுநோயின் நிகழ்வு விகிதம்
(2) கலம் ஒன்றின் அடிப்படைக் கட்டமைப்பு
(3) புற்றுநோய்
(4) தாராள மூலவேர்களும் ஒட்சினெதிரிகளும்
(5) பொதுவான வகைப்பற்று நோய்கள்
(6) புற்றுநோய்க்கு எதிரான மற்றும் ஒட்சினெதிரிக் கீரைவகைகள்.
முதல் அத்தியாயத்தில் புற்றுநோயானது சமூகத்தில் எந்தளவு காணப்படுகின்றது? அவை எப்படியான புற்றுநோய்கள், பால் ரீதியாக எப்படிப் பாதிக்கிறது, அவற்றிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் போன்ற பல பயனுள்ள தகவல்களை, மஹரகம,கண்டி, காலி ஆகிய புற்றுநோய் சிகிச்சை நிலையங்களின் பதிவுகளின் அடிப்படையில் தருகிறது.
அத்துடன் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் புற்றுநோயின் பரம்பல் எவ்வாறு உள்ளது என்பதையும் சொல்கிறது.
இரண்டாவது அத்தியாயம் ஒரு கலத்தின் அடிப்படைக் கட்டமைப்புப் பற்றியது. எந்த ஒரு உயிரினதும் அடிப்படைக் கூறான கலம் என்பது என்ன? அதன் கூறுகள் யாவை? அவை எப்படிப் பிரிகை அடைகின்றன போன்ற அடிப்படைத் தகவல்களை விவரிக்கிறது. தொடர்ந்து டி.என்.ஏ யிலுள்ள தனியொரு மரபணுவில் (Gene) ஏற்படுகின்ற குறைபாடே புற்றுநோய் வருவதற்கான முதற்படி என விளக்குகிறார்.
ஆயினும் இம்மாற்றங்கள் புற்றுநோயாக உருவெடுக்க 1 முதல் 30 வருடங்கள் எடுக்கலாம். இதன் நீட்சியாக வயது ஏறும்போது புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதும் விளக்கப்படுகிறது.
மூன்றாவது அத்தியாயத்தில் புற்றுநோய் என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அவற்றின் ஆரம்ப அறிகுறிகளும், எச்சரிக்கை அடையாளங்களும் எவை? சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பேசுகின்றது.
அத்துடன், பிழையான உணவு முறைகளும், உடற்பயிற்சியின்மை, மித மிஞ்சிய மதுபாவனை, பரம்பரை அம்சங்கள் போன்றவை எவ்வாறு புற்றுநோய்க்கு காரணமாகின்றன போன்ற முக்கிய விவரங்களும் சொல்லப்படுகின்றன.
நான்காவது அத்தியாயம், தாராள மூலவேர்களும் (Free Radicals)ஒட்சினெதிரிகளும் (Antioxidents) என பொதுமக்களுக்கு பரிச்சயமில்லாத விஞ்ஞானச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது நாளாந்த உணவு முறைக்கு உதவக் கூடிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. பல்வேறு தாவர உணவுகளில் உள்ள புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒட்சிசனெதிரிகள் பற்றி விவரமாகக் கூறுகிறது.
ஐந்தாவது அத்தியாயம், பொதுவாக எமது சமூகம் எதிர் நோக்கும் பல்வேறு புற்றுநோய்களைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு புற்றுநோயும் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? அறிகுறிகள் எவை? நோயை எவ்வாறு நிர்ணயம் செய்வது போன்ற விடயங்களை விளக்குகிறது.
ஆறாவது அத்தியாயம்தான் இந்நூலின் தலைப்புச் சுட்டும் கருத்தின் விரிவாகும். கார்சினோஜின் எனப்படும் புற்றுநோய்களைத் தூண்டும் பொருட்களுக்கு எதிராக மூலிகை மற்றும் உணவு வகைகள் பற்றிப் பேசுகிறது.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கீரைவகைகள், இலைகள், பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் உள்ள மருத்துவ குணாம்சங்கள் பற்றியும் அவை புற்றுநோய்த் தடுப்பிலும், சிகிச்சை முறைகளிலும் எவ்வாறு உதவுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக தேநீரில் உள்ள பொலிபெனோலிக் சேர்வை புற்றுநோயைத் தடுக்கும்.
இதேபோல வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, அதிமதுரம், கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, உள்ளி, திராட்சை, பூக்கோவா போன்ற இன்னும் பல மூலிகைகளின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்தியம்புகின்றது.
திருமதி திலகவதி தர்மராசா நினைவாக வெளியிடப்படும். இந்நூலை வெளியிடுவதற்கு, நூலாசிரியரின் சிறிய தந்தையாராகிய க.மு. தர்மராசா உற்சாகமும் ஊக்கமும் அளித்துள்ளார். மறைந்த ஒருவரின் நினைவாக இத்தகைய ஒரு பயனுள்ள நூலை மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டு அதன் வருவாயை கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பது மிகவும் சமூக அக்கறை கொண்ட செயலாகும் என்பதில் ஐயமில்லை.
இதேபோல தர்மராசா தனது மனைவியின் நினைவாக சென்ற வருடம் வெளியிட்ட “மூத்தோரைப் பராமரித்தல்’ பற்றிய நூலின் வெளியீட்டு விழா நிகழ்வுகள், நினைவுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் யாவற்றையும் வண்ணப்படங்களுடனும் தனி நூலாக வெளியீட்டு பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் அளித்தமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
‘முதியோரைப் பராமரித்தல்’ என்ற முன்னைய நூலும், இந்நூலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை செம்மையான தமிழாக்கம் ஆகும். அரிய கலைச் சொற்களைத் தேடி எடுத்து தமிழாக்கம் செய்த பணி பாராட்டத்தக்கது.
ஆங்கிலத்தில் நூலாக்கம் செய்யப்பட்ட போது எடுத்த அதே கவனிப்பும், ஆழமும் கருத்தூன்றிய செயற்பாடும் தமிழாக்கத்திலும் பேணப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். இந்நூலை மொழிபெயர்த்தவரான எட்வேட் பீரிஸின் திறமையும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.
மூப்பியல் சான்றிதழ் பெற்ற வைத்திய கலாநிதி வசந்தி, இத்தகைய ஆழமும் விரிவும் கொண்ட நூலைத் தமிழில் தந்துள்ளமை தமிழ் நலவியல் எழுத்துத் துறைக்கும், நூல் வெளியீட்டுத்துறைக்கும் புதிய வீச்சையும், வேகத்தையும் கொடுத்துள்ளன. அவரது பணி தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு கிட்டவேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன்.
நூலின் பெயர்:- ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு
நூலாசிரியர்:- டொக்டர். வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜா (மூப்பியல் சான்றிதழ்)
நூலின் ஆய்வுரை:
டொக்டர் எம்.கே. முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல், வீரகேசரி, சுடரொளிஉங்கள்
Read Full Post »