Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2007

>மூளை களைப்படைந்து சோர்வுற்றுவிட்டது. ஆயினும் நிறைவேற்றி முடிக்க வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. ஒரு சிகரட் அடித்தால் சுறுசுறுப்பாகிவிடுவோம் என நினைக்கிறீர்கள். சுறுசுறுப்பு ஏற்படக் கூடும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பாரதூரமானவை.

சுவாசப்பை, குரள்வளை, தொண்டைக்குழி, உணவுக் குழாய், சிறுநீரகம், சிறுநீரகப்பை, மற்றும் கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமானது புகைப்பதினால் மிகவும் அதிகரிக்கிறது.

ஆனால் மிகவும் சாதாரணமான, விலை மலிவுள்ள வல்லரை “மூளையானது களைப்படைந்து திறமையாகக் கவனிக் குவிப்புச் செய்ய முடியாது போகும் வேளைகளில் அதனைத் தளர்த்தி சுமுகமாக்கக் கூடியது” எனக் கூறுகிறார் டொக்டர் வசந்தி தேவராஜா சிறீஸ்கந்தராஜா.

இன்னும் பல மூலிகைகள் பற்றியும் மிக விபரமாகக் கூறியுள்ளார் ‘ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற தனது புதிய நூலில். நாம் வழமையாக உணவில் உபயோகிக்கும் மஞ்சள், திராட்சை, கோவா, உள்ளி, வெண்காயம், அதிமதுரம், இஞ்சி, உள்ளி, வெண்காயம் போன்ற பல மூலிகைகள் பற்றியும், மருந்தாக மட்டும் அல்லது மருத்துவத்தில் பயன்படுத்தும் பட்டிப்பூ, பருத்தி, கற்றாளை, குங்கிலியம், போன்ற பல மூலிகைகள் பற்றியும் இங் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நூற்பரப்பில் அதுவும் முக்கியமாக மருத்துவம் மற்றும் நலவியல் சார்ந்த துறைகளைப் பொறுத்த வரையில் இந் நூலின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இந் நூலானது மருத்துவத்தின் ஒரு புதிய அலகை இலங்கையின் தழிழ் மருத்துவ நூல் வெளியீட்டுத் துறையில் அறிமுகப்படுத்துகிறது. இதனால் மருத்துவத் துறை சார்ந்த மாணவர்களுக்கும் (மருத்துவ, தாதிய, சுகாதார சேவைப் போதனாசிரியர்கள், ஆய்வு கூட பணியாளர்கள்), அத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஊசாத் துணை நூலாகும்.

ஈழத்து தமிழ் மருத்துவ நூல் வெளியீடு என்பது நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதில் மேலைத் தேய மருத்துவத் துறை சார்ந்த நூல்கள் டொக்டர் கிறீனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இந் நூல்கள் இரண்டு வகையானவை. மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்குமான பாடப் புத்தகங்களை டாக்டர் கிறீனும் பின்னர் பேராசிரியர் சின்னத்தம்பியும் எழுதி வெளியிட்டார்கள். இது முதல் வகை.

இரண்டாவது வகை பொதுமக்களை பயனாளர்களாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். இதற்கும் முன்னோடி டொக்டர் கிறீன் அவர்கள்தான். அவர்களைத் தொடர்ந்து டொக்டர் இராசரத்தினம், பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவராஜா, டொக்டர்களான நாகநாதன். எம்.கே.முருகானந்தன், சுகுமார், பத்மலோஜினி, சீர்மாறன், சிவயோகன் போன்ற பலரும் நலவியல் துறை சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இன்னும் பல பெயர்கள் எழுதும் அவசரத்தில் விடுபட்டிருக்கும் என்பது உண்மையே. திரு.கா.வைத்தீஸ்வரன், கோபாலமூர்த்தி, திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்ற சுகாதார ஆலோசகர்களும் நலவியல் இலக்கியத்திற்கு நிறையப் பங்களித்துள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் அறிவியல் துறை சார்ந்த நூல்களின் வெளியிடப்படுவது மிகவும் குறைவாக இருந்த சூழலில் நலவியல் துறை மட்டும் விதிவிலக்கு எனலாம். ஆயினும் அத்துறையில் நூல் எழுதுவதும், வெளியிடப்படுவதும் போதுமானதாக இல்லை என்பதும் உண்மையே.

திருமதி திலகவதி தர்மராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவாக அன்னாரின் பெறாமகள் டாக்டர் வசந்தி தேவராஜா ஸ்ரீகாந்தராஜாவினால் ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த் தடுப்பு’ என்ற நூல் இன்று (11.08.2007) கொழும்பில் வெளியாகிறது. அந்த நூல் பற்றிய ஆய்வே இது.

இத்தகைய சூழலில் டாக்டர் வசந்தியின் நூல்கள் சற்று வித்தியாசமானவை. இவை மருத்துவத்தின் விசேட துறைகள் சார்ந்த ஆழமான நூல்களாகும். முன்னைய வெளியீடான முதுமை பற்றிய “முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்” என்பது முதுமை பற்றிய ஒரு பூரணமான நூலாகும்.

இப்பொழுது வெளியாகும் “ஒட்சிசனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு” என்பது புற்றுநோய் பற்றியது. அதிலும் விசேடமாக ஒட்சிசனெதிரிகள் (Antioxidents) மூலமாக புற்றுநோயை எதிர் கொள்வது பற்றியது.
இது ஆய்வு நூல் அல்ல. ஆனால் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட பல ஆய்வுகளின் விஞ்ஞான பூர்வமான தகவல்களை ஒன்று திரட்டி, அவற்றை வகைப்படுத்தி இயலுமானவரை இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதியுள்ளார்.

புற்று நோயானது மனிதர்களின் உடலையும் உள்ளத்தையும் மிகவும் பாதிக்கும் ஒரு நோயாகும். நோயாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி முழுச் சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுகிறது. எனவே நோய் வந்த பின் அதன் சிகிச்சைக்காக அலைவதை விட அது வராமல் தடுப்பது மிகவும் பொருத்தமானதாகும். அதனைப் பற்றியே இந் நூல் பேசுகிறது என்பதால் எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டியது அவசியமாகும்.

இத்தகைய நூல்கள் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு மருத்துவர்கள் , தாதியர்கள், சுகாதாரப் போதனையாளர்கள் ஆகியோருக்கு மிகவும் உபயோகமானவை. அவர்கள் துறை சார்ந்த நவீன தகவல்களுடன் தங்களை இற்றைப்படுத்த இவை உதவுகின்றன.

அதே நேரத்தில் ஓரளவு விஞ்ஞானக் கல்வியறிவுள்ள எந்தப் பொதுமகனும் வாசிப்பதற்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள எவரும் படித்துப் பயன்படக் கூடிய நூலாகும்.

இந்நூல் ஆறு முக்கிய அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.
(1) புற்றுநோயின் நிகழ்வு விகிதம்
(2) கலம் ஒன்றின் அடிப்படைக் கட்டமைப்பு
(3) புற்றுநோய்
(4) தாராள மூலவேர்களும் ஒட்சினெதிரிகளும்
(5) பொதுவான வகைப்பற்று நோய்கள்
(6) புற்றுநோய்க்கு எதிரான மற்றும் ஒட்சினெதிரிக் கீரைவகைகள்.

முதல் அத்தியாயத்தில் புற்றுநோயானது சமூகத்தில் எந்தளவு காணப்படுகின்றது? அவை எப்படியான புற்றுநோய்கள், பால் ரீதியாக எப்படிப் பாதிக்கிறது, அவற்றிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் போன்ற பல பயனுள்ள தகவல்களை, மஹரகம,கண்டி, காலி ஆகிய புற்றுநோய் சிகிச்சை நிலையங்களின் பதிவுகளின் அடிப்படையில் தருகிறது.

அத்துடன் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் புற்றுநோயின் பரம்பல் எவ்வாறு உள்ளது என்பதையும் சொல்கிறது.

இரண்டாவது அத்தியாயம் ஒரு கலத்தின் அடிப்படைக் கட்டமைப்புப் பற்றியது. எந்த ஒரு உயிரினதும் அடிப்படைக் கூறான கலம் என்பது என்ன? அதன் கூறுகள் யாவை? அவை எப்படிப் பிரிகை அடைகின்றன போன்ற அடிப்படைத் தகவல்களை விவரிக்கிறது. தொடர்ந்து டி.என்.ஏ யிலுள்ள தனியொரு மரபணுவில் (Gene) ஏற்படுகின்ற குறைபாடே புற்றுநோய் வருவதற்கான முதற்படி என விளக்குகிறார்.
ஆயினும் இம்மாற்றங்கள் புற்றுநோயாக உருவெடுக்க 1 முதல் 30 வருடங்கள் எடுக்கலாம். இதன் நீட்சியாக வயது ஏறும்போது புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதும் விளக்கப்படுகிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் புற்றுநோய் என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அவற்றின் ஆரம்ப அறிகுறிகளும், எச்சரிக்கை அடையாளங்களும் எவை? சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பேசுகின்றது.
அத்துடன், பிழையான உணவு முறைகளும், உடற்பயிற்சியின்மை, மித மிஞ்சிய மதுபாவனை, பரம்பரை அம்சங்கள் போன்றவை எவ்வாறு புற்றுநோய்க்கு காரணமாகின்றன போன்ற முக்கிய விவரங்களும் சொல்லப்படுகின்றன.

நான்காவது அத்தியாயம், தாராள மூலவேர்களும் (Free Radicals)ஒட்சினெதிரிகளும் (Antioxidents) என பொதுமக்களுக்கு பரிச்சயமில்லாத விஞ்ஞானச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது நாளாந்த உணவு முறைக்கு உதவக் கூடிய பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளது. பல்வேறு தாவர உணவுகளில் உள்ள புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒட்சிசனெதிரிகள் பற்றி விவரமாகக் கூறுகிறது.

ஐந்தாவது அத்தியாயம், பொதுவாக எமது சமூகம் எதிர் நோக்கும் பல்வேறு புற்றுநோய்களைப் பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு புற்றுநோயும் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? அறிகுறிகள் எவை? நோயை எவ்வாறு நிர்ணயம் செய்வது போன்ற விடயங்களை விளக்குகிறது.

ஆறாவது அத்தியாயம்தான் இந்நூலின் தலைப்புச் சுட்டும் கருத்தின் விரிவாகும். கார்சினோஜின் எனப்படும் புற்றுநோய்களைத் தூண்டும் பொருட்களுக்கு எதிராக மூலிகை மற்றும் உணவு வகைகள் பற்றிப் பேசுகிறது.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் கீரைவகைகள், இலைகள், பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் உள்ள மருத்துவ குணாம்சங்கள் பற்றியும் அவை புற்றுநோய்த் தடுப்பிலும், சிகிச்சை முறைகளிலும் எவ்வாறு உதவுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக தேநீரில் உள்ள பொலிபெனோலிக் சேர்வை புற்றுநோயைத் தடுக்கும்.
இதேபோல வல்லாரை, மஞ்சள், பட்டிப்பூ, அதிமதுரம், கற்றாளை, நெல்லி, நிலவேம்பு, குங்கிலியம், கீழ்காய்நெல்லி, புளித்தோடை, பருத்தி, சோயா, உள்ளி, திராட்சை, பூக்கோவா போன்ற இன்னும் பல மூலிகைகளின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்தியம்புகின்றது.

திருமதி திலகவதி தர்மராசா நினைவாக வெளியிடப்படும். இந்நூலை வெளியிடுவதற்கு, நூலாசிரியரின் சிறிய தந்தையாராகிய க.மு. தர்மராசா உற்சாகமும் ஊக்கமும் அளித்துள்ளார். மறைந்த ஒருவரின் நினைவாக இத்தகைய ஒரு பயனுள்ள நூலை மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டு அதன் வருவாயை கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பது மிகவும் சமூக அக்கறை கொண்ட செயலாகும் என்பதில் ஐயமில்லை.

இதேபோல தர்மராசா தனது மனைவியின் நினைவாக சென்ற வருடம் வெளியிட்ட “மூத்தோரைப் பராமரித்தல்’ பற்றிய நூலின் வெளியீட்டு விழா நிகழ்வுகள், நினைவுரைகள், பத்திரிகைக் கட்டுரைகள் யாவற்றையும் வண்ணப்படங்களுடனும் தனி நூலாக வெளியீட்டு பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் அளித்தமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

‘முதியோரைப் பராமரித்தல்’ என்ற முன்னைய நூலும், இந்நூலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை செம்மையான தமிழாக்கம் ஆகும். அரிய கலைச் சொற்களைத் தேடி எடுத்து தமிழாக்கம் செய்த பணி பாராட்டத்தக்கது.

ஆங்கிலத்தில் நூலாக்கம் செய்யப்பட்ட போது எடுத்த அதே கவனிப்பும், ஆழமும் கருத்தூன்றிய செயற்பாடும் தமிழாக்கத்திலும் பேணப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியதாகும். இந்நூலை மொழிபெயர்த்தவரான எட்வேட் பீரிஸின் திறமையும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.

மூப்பியல் சான்றிதழ் பெற்ற வைத்திய கலாநிதி வசந்தி, இத்தகைய ஆழமும் விரிவும் கொண்ட நூலைத் தமிழில் தந்துள்ளமை தமிழ் நலவியல் எழுத்துத் துறைக்கும், நூல் வெளியீட்டுத்துறைக்கும் புதிய வீச்சையும், வேகத்தையும் கொடுத்துள்ளன. அவரது பணி தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு கிட்டவேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன்.

நூலின் பெயர்:- ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்று நோய்த் தடுப்பு

நூலாசிரியர்:- டொக்டர். வசந்தி தேவராசா சிறீஸ்கந்தராஜா (மூப்பியல் சான்றிதழ்)

நூலின் ஆய்வுரை:
டொக்டர் எம்.கே. முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல், வீரகேசரி, சுடரொளிஉங்கள்

Read Full Post »

>

குன்றில் ஏற்றிய தீபம் குடத்தில் இட்ட விளக்குப் போல வாழ்ந்த கதை.

கைதடி சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு அவரில் மிகுந்த பிரியம். காரணம் அவர்களுடன் அத்துணை பிரியமாக பிழங்குபவர். அவர்கள் தங்களுக்கு ஒரு ரிவி வாங்கித் தரும்படி அவரிடம் கேட்டார்கள். ரிவி பாவனைக்கு வந்த 80 களின் முற்பகுதி. அவர் அவர்களுக்கு ஒரு கலர் ரிவி வாங்கிக் கொடுத்தார். அப்பொழுது அவர் வீட்டில் இருந்ததோ ஒரு கருப்பு வெள்ளை வெள்ளை ரிவீ தான். அவர் வீட்டிலும் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கும் கலர் ரிவியில் பார்பதற்கு விருப்பம்தான். ஆயினும் அவர் கருப்பு வெள்ளை வெள்ளை ரிவீ யை தங்களுக்கு வைத்துக் கொண்டு கலர் ரிவி யை அன்பளிப்பாகக் கொடுத்தார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. நண்பர்களுக்குக் கூடத் தெரியவில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் விளம்பரப் படுத்தாமல் கொடுத்தார். இதைத்தான் இடது கை அறியாமல் வலது கை கொடுப்பது என்பதா?
இதைச் செய்தவர் யார்?
குன்றில் ஏற்றிய தீபமாக ஒளிர்ந்த ஒருவர், குடத்தில் இட்ட விளக்குப் போல தன்னை மறைத்து வாழ விரும்பினார். தன்னை எத்தனை தூரம் மறைக்க முயன்ற போதும் அந்த ஒளிப் பிரவாகத்தின் பிரகாசத்தை, காருண்யத்தை அனைவரும் புரிந்து போற்றவே செய்தனர். ஆம் புகழுக்கும் பெயருக்கும் ஆலாயப் பறக்கும் இந்த உலகில் தனக்கு நியாயமாகவே கிடைக்க வேண்டிய புகழைக் கூட வெளிக் காட்டாது மறைத்து வாழும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கவே செய்வர். நான் அறிந்த அத்தகைய ஒரே ஒரு மனிதர் எங்கள் சோமா ஒருவர் தான்.
சோமா, சோமர், சோமா அங்கிள், எக்கவுண்டன் அய்யா, எக்கவுண்டன் சோமா, இப்படி எத்தனையோ விதமாக பாசத்தோடு அழைத்து நேசத்தோடு நெகிழ்ந்த அன்புள்ளங்களை தவிக்க விட்டுவிட்டு நிரந்தர விடை பெற்றுவிட்டார்.
பருத்தித்துறை சிவன் கோவிலடியில் பிறந்த அவர் தனது கல்விச் சிறப்பாலும், கடின உழைப்பாலும் ஹாட்லிக் கல்லூரி ஆசிரியராக, பட்டயக் கணக்காளராக, பல்கலைக் கழக விரிவுரையாளராக, மேர்சன்ட் பினான்ஸ் நிதி நிறுவன அதிபராக, பல்கலைக் கழக செனட் உறுப்பினராக தன் தொழிற் தகமையை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் அவரது பெருமைக்கும், புகழுக்கும், காரணம் அவரது கல்வித் தகமைகளோ உயர் பதவிகளோ அல்ல. மக்களை மதித்தவராக, துன்பப்பட்டவர்களின் துயர் தீர்க்க உதவிக்கரம் நீட்டியவராக, உயர் விழுமியங்களைக் கடைப் பிடித்தவராக வாழ்ந்த மனித நேயம் மிக்க இயல்புதான் காரணம்.
கடந்த 27 ஆண்டுகளாக அவரோடு ஓரளவு நெருங்கிப் பிழங்கிய காரணத்தால் தான் அவரை நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. நான் பருத்தித்துறையில் குடும்ப வைத்தியனாக தொழில் புரிய ஆரம்பித்த 1980 களிலேயே அவரது நட்பு கிடைத்தது எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என் நண்பர் என்று சொல்வது வெறும் பேச்சுக்குத்தான். உண்மையில் அவரை எனது வழிகாட்டி எனலாம். அல்லது குரு என்று கூட மகுடம் சூட்டலாம். காரணம் நான் உண்டு எனது தொழில் உண்டு என்று வாழ்ந்த என் முன் ஒரு புதிய உலகைத் திறந்து வைத்தவர் அவர். மற்றவர்களுக்கு உதவுவதும், துன்பப்பட்டவர் துயர் தீர்ப்பதும் எமது கடமை. அதில் மனம் நிறைய வேண்டும் என்பதை தனது வாழ்வின் திறந்த அத்தியாயங்கள் ஊடாக எங்களுக்கு சொல்லாமல் சொல்லித் தந்தவர் அவர். தன்னை ஒறுத்தாவது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியதற்கு முன்பு கூறிய ரீ.வி சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.
அவரோடு இணைந்து செயற்பட்ட காலங்களை நினைவுத் தட்டுகளில் இருந்து இறக்கி வைத்து நினைந்து பார்ப்பதில் ஆனந்தம் கொள்ளும் பல நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். அரிமா கழகத்தின் ஊடாக ஆரம்பத்தில் செயற்பட்ட போது டொக்டர் பாலகிருஸ்ணன், பேராசிரியர் கணேசலிங்கம், வெற்றினரி டொக்டர் கதிரவேற்பிள்ளை, நடனசபாபதி, ஞானசம்பந்தர் கலை மன்ற அங்கத்தவர்கள், சிவராஜசிங்கம், சிவயோகன், போன்ற பலரும் சேர்ந்து இயங்கினோம்.
மதுபானம் பாவிக்காத, ஆடம்பர உணவுகளில் செலவழிக்காத, கேளிக்கைகளில் ஈடுபடாத, சேவைப்பணிகளில் மட்டும் ஈடுபட்ட வித்தியாசமான கழமாக அன்றைய பருத்தித்துறை அரிமா கழகம் இயங்கியதை பலரும் இன்றும் நினைவு கூர்கிறார்கள். அகதிகளுக்கு உதவி, மருத்துவ முகாம்கள், பரமானந்த ஆஸ்சிரம மாணவர்களுக்கு வருடா வருடம் பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதற்கு வழிகாட்டியாக, இயக்கு சக்தியாக விழங்கியது எமது சோமாதான் என்பதை கூறித்தான் தெரிய வேண்டுமா?
பரமானந்த ஆஸ்சிரம மாணவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உணவு வழங்குவது ஒரு இனிய அனுபவம் ஆகும். குறிப்பிட நாளுக்கு ஒரிரு நாட்களுக்கு முன்னரே பொருட்களை வாங்கிச் சேர்ப்பது சோமாதான். அரிசி பருப்பு, மரக்கறி வகைகள், தேநீர் தயாரிப்பதற்கான பொருட்கள், சிற்றுண்டி வகைகள் மட்டுமின்றி, சமையலுக்குத் தேவையான உப்பு புளி விறகு என எதுவும் தப்பாது சேர்த்து விடுவார். காலையில் அவரது காரில் முதல் கோஸ்டி போய்விடும். மற்றவர்கள் ஏனைய சிலரின் கார்களில் போவோம். எல்லோரும் கூடி நாங்களே சமைத்து நாங்களே அவர்களுக்கு வயிறாற உணவு பரிமாறுவோம். இறுதியில் அவர்களில் சிலர் பரிமாற நாம் உண்போம். எத்துணை இன்பமான நாட்கள். மற்றவர் திருப்தியில் மகிழ்வுறக் காட்டி வைத்தார்.
ஆஸ்சிரம மாணவர்கள் திருமண வயதடையும் போது அப் பெண்களுக்கு தாலி கூறை போன்றவற்றை நண்பர்கள் உதவியுடன் வழங்குவதற்கு திட்டமிட்டு நிதி சேகரித்து அளிப்பார். அவரது பங்களிப்பு எப்பொழுதுமே கணிசமான அளவு இருக்கும். நாட்டு நிலமைகளால் பருத்தித்துறை அரிமா கழகம் செயலிழந்த போதும் எல்லாம் பணிகளுமே தொடர்ந்தன. சில நண்பர்கள் ஆதரவுடன் இவற்றை சோமா கொண்டு நடத்தினார்.
பருத்தித்துறை சாரதா ஆஸ்சிரம சுவாமி சித்ரூபானந்தாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து அதனூடாக இலவச மருத்துவ முகாம்களை நடாத்தியதும் கூட அவரது முயற்சியால்தான். இலக்கியம், சமூகம், ஆன்மீகம் என பல தளங்களில் நான் கால் ஊன்றிய போது எனது வாழ்வின் அடித்தளமே குடும்ப வைத்தியன் என்ற எனது தொழில்தான் என்பதை நினைவூட்டி அதில்தான் முதற் கவனம் இருக்க வேண்டும் எனப் போதித்தவர். இன்று வரை அக் கூற்றை வேத வாக்காக ஏற்று நடக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
இலக்கியவாதிகளிடமும் அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. மல்லிகை ஜீவா அவரது அன்பிற்கு பாத்திரமானவர். ஜீவாவை அழைத்து ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் விழா எடுத்ததற்கு அவரது ஆர்வமும் ஒரு முக்கிய காரணமாகும். மல்லிகையின் வளர்ச்சிக்கு அவர் பல வழிகளில் உதவி செய்துள்ளார். மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்களில் ஒருவராகக் கணித்த ஜீவா அவரைப் பற்றி மல்லிகையில் பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
ஆன்மீக வாழ்வைப் பொறுத்த வரையில் சடங்கு சம்பிரதாய பூசை புனஸ்காரங்களில் ஈடுபாடற்றவராக இருந்தபோதும் ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் அவர். எனது வாழ்விலும் கூட பகவான் சத்திய சாயி பாபாவின் ஒளிவெள்ளத்தில் திளைத்து நல்வாழ்வு வாழ வழி காட்டியதில் அவரே முதல் காரணியாவார்.
தாய் மண்ணை நேசித்தவர் அவர். வெறும் வாய்ப் பேச்சு வீரர் அல்ல . அதன் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபாடு காட்டியவர் அவர். கடல் வளத்தைப் பெருக்கி பொருளாதார அபிவிருத்தி காண்பது அவரது கனவுகளில் ஒன்று. இது தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும் சிபார்சுகளும் நூலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான ஒரு நிறுவனத்தையும்(கடல் வளம்) ஆரம்பித்த போதும் நாட்டு நிலைமைகளால் தொடர முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. தாய் மண் மீதான அவரது நேசம் வாய்ச் சொல்லால் பேச முடியாதது. சூழ்நிலைகளின் தாக்கத்தால் முழுக் குடும்பமுமே புலம் பெயர்ந்து சென்ற போதும் மண்ணை விட்டு வெளியேறாதவர் சோமா. அவரது ஆசைப்படி பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சையும் தனது மண்ணில், தனது வீட்டிலேயே விட்ட சோமா அங்கேயே தகனமாகி யாழ் மண் பூராவும் காற்றோடு கலந்து சங்கமமாகி விட்டார்.
அவரது வாழ்ந்து காட்டியதை நாம் கடைப்பிடிப்பதே நாம் அவருக்கு செய்யக் கூடிய கைமாறாகும். அவர் ஆன்மா சாந்தியடைய பரம்பொருளை வேண்டுகிறேன்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- மல்லிகை செப்டம்பர் 2007.

Read Full Post »

உடல் தளர்ந்து, கண்களும் சோர்ந்திருந்த அவரது முக்கிய பிரச்சனை ‘நித்திரை வருகுதில்லை’ என்பதுதான்.உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா போன்ற நோய்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கின்றன.

“பகல் முழுதும் கதிரையில் இருந்து தூங்குவார். இரவும் எட்டு மணிக்கே படுத்திடுவார். ஆனால் எப்பவும் நித்திரை இல்லை எண்டுதான் சொல்லூர்” என்று அலட்சியமாகக் கூறினாள் கூட்டிக் கொண்டு வந்த மகள்.

இது அவருடைய பிரச்சனை மட்டுமல்ல. பெரும்பாலான வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைதான். பகலெல்லாம் தூங்கி விழுவது, நேர காலத்துடன் இரவு 7-8 மணிக்கே படுத்துத் தூங்குவதும், அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்து எழுந்து சிரமப்படுவதும் பல வயதானவர்ளைப் பாதிக்கும் பிரச்சனை தான்.

இதற்குக் காரணம் வயதாகும் போது எமது உடலியக்கத்தின் ஒழுங்கு லயத்தில் ஏற்படும் குழப்பங்களே ஆகும். இதனை முன்நகர்ந்த நித்திரை (Advanced Sleep Phace) என்பார்கள். அதாவது தூக்க நேரம் முன்னகர்கிறது.

உண்மையில் இது தூக்கக் குழப்பமே அன்றித் தூக்கக் குறைபாடு அல்ல. அத்தோடு தூக்கக் குறைபாடும் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவாக மனிதர்களுக்கு 6 முதல் 7 மணிநேர நித்திரை தினசரி தேவை.அவ்வாறு தூங்கினால்தான் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். தூக்கம் குறைந்தால் அல்லது குழப்பமான தூக்கமாக இருந்தால் உடல் சோர்வடையும், மனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. சிந்தனைத் திறனும் குறையும்.

மேற் கூறிய முன்நகர்ந்த நித்திரையைத் தவிர வேறு பல காரணங்களாலும் வயதானவர்களின் தூக்கம் குறையலாம்.

மூட்டு வாதம், பார்க்கின்சன் நோய், ஆஸ்த்மா, இருதய நோய்கள், உணவுக் கால்வாய் நோய்கள், பக்கவாதம், மனச் சோர்வு போன்ற பல்வேறு மூப்புக் கால நோய்களும் அவர்களது தூக்கததைக் குறைக்கும்.

வயதாகும் போது பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கக் கூடும் அல்லவா? ஆஸ்தமா, பிரஜர், தைரொயிட் சுரப்பி நோய்கள், மனச் சஞசலம் போன்ற பல்வேறு நோய்களுக்கு தினசரி உபயோகிக்கும் மருந்துகளும் தூக்கக் குழப்பத்திற்குக் காரணமாகிறது.

எனவே தூக்கக் குழப்பம் உங்களைத் துன்பப்படுத்துகிறதாயின் உங்கள் வைத்தியருடன் வெளிப்படையாகக் கதையுங்கள். அவரது ஆலோசனைகள் உங்கள் பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கவும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் உதவும்.

வேறு நோய்களுக்கு எடுக்கும் மருந்துகள்தான் காரணம் என அவர் கருதினால் அம் மருந்துகள் உட்கொள்ளும் நேரத்தை மாற்றக் கூடும் அல்லது மருந்தையே மாற்றவும் கூடும்.

உங்கள் தூக்கக் குழப்பத்தை தீர்க்க நீங்களும் சில முயற்சிகள் செய்யலாம்.

  • உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் எந்தச் செய்கையிலும் படுக்கைக்குப் போவதற்கு முன்னரான ஒரு மணி நேரத்திற்குள் ஈடுபட வேண்டாம்.
  • உதாரணமாக விறுவிறுப்பான தொடர் நாடகங்களை ரீவியில் பார்ப்பது, ஆர்வமூட்டும் நூல்களைப் படிப்பது, சுவார்ஸமான விவாதங்களில் ஈடுபடுவது, உணர்ச்சி மயப்படுவது போன்ற செய்கைகளை படுக்கைக்குச் செல்லும் தருணங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
  • கடுமையான வெளிச்சமும், இரைச்சலான சூழலும் உங்களைத் தூங்கவிடாது. எனவே ஆரவரமற்ற, ஒளி குறைந்த சூழலில் படுக்கைக்குப் போவதற்கு முந்திய சில நிமிடங்களைக் கழியுங்கள். படுக்குமிடமும் அத்தகையதாக இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே தெரியும்தானே.
  • நரம்புகளைத் தூண்டும் பானங்களான கோப்பி, மது, கோக் போன்றவற்றை மதியத்திற்குப் பின் அருந்த வேண்டாம். மதியத்திற்குப் பின் அதிக நீராகாரம் அருந்த வேண்டாம்.
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்ந்தால் தூக்கம் குழம்பும் அல்லவா? தூங்கப் போவதற்கான நேரத்தை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள். உதாரணமாக இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுவது போன்ற உங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு ஒழுங்கான நேர அட்டவணையை தினசரி தவறாமல் கடைப்பிடியுங்கள்.
  • மதிய உணவிற்குப் பின் தினசரி தூங்குபவராயின் அதனை 15 முதல் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்துங்கள்.
  • மாலை நேரத்தில் சற்று உலாவச் செல்லுங்கள்.
  • தினசரி கை கால்களைச சற்று நீட்டி மடக்கி சிறிது உடற் பயிற்சி செய்யுங்கள்.

இவற்கைக் கடைப்பிடித்துப் பாருங்கள் உங்கள் தூக்கத் தொல்லை தீரும்.

0.0.0

Read Full Post »

>’குழந்தைக்கு சளியா? என்ன செய்வீர்கள்’? ‘கவனியாமல் விட்டுவிட்டால் சளி கூடி பிள்ளைக்கு முட்டுப் பிடித்து மோசமாகிவிடும்’ என்று வைத்தியரிடம் உடனடியாகக் தூக்கிக் கொண்டு ஓடுவீர்கள்.

வைத்தியர் சளிக்கான ஏனைய மருந்துகளுடன் பெரும்பாலும் நுண்ணுயிர் கொல்லி மருந்தையும் (Antibiotic) தரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தையாயின் தூசி, புழுதி போன்றவற்றில் விளையாடுவதைத் தவிர்க்கும் படி கூறுவார். படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி துவைப்பதுடன் நல்ல வெயிலில் காயவைக்கும்படியும் கூறுவார். வெயிலில் காயவைக்க முடியாவிடின் அவற்றை மின்அழுத்தியால் அழுத்தும்படியும் கூறக்கூடும். படுக்கையில் சேரக் கூடிய தூசிப்பூச்சி போன்ற நுண்ணுயிர்களை அழிப்பதற்காகவே இந்த ஆலோசனை.

அத்துடன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை குழந்தையின் படுக்கை அறையில் நுளைய விடக் கூடாது எனவும் ஆலோசனை கூறக் கூடும். அவற்றின் ரோமம் ஒவ்வாமையைத் தூண்டி ஆஸ்த்மாவை வரவழைக்கக் கூடும் என்பதற்காகவே வைத்தியர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றானது ஆஸ்த்மா, நாய், நுண்ணுயிர் கொல்லி மருந்து ஆகியன தொடர்பாக புதிய பார்வையை முன்வைக்கிறது. University of Manibota மற்றும் MacGill University in Montreal ஆகியவற்றில் செய்யப்பட்ட ஆய்வு அது. ஒரு வயது ஆவதற்கு முன்னரே நுண்ணுயிர் கொல்லி மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் ஏழு வயதாவதற்கு முன்னரே ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதிலும் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் தொடர்புறாத குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும்.

நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பொறுத்த வரையில் கெபலோஸ்போரின் (Cephalosporins)என்ற வகை மருந்தைப் பாவித்த குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகமாகும்.

நாய் பற்றிய ஆய்வுதான் மிகவும் சுவார்சிமானது. நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் குழந்தைகளை அதிலும் முக்கியமாக சளி, ஆஸ்த்மா உள்ள குழந்தைகளை அதிகம் அளையவிடக்கூடாது என்பதே இதுவரை நம்பப்பட்ட கருத்தாகும். ஆனால் இந்த ஆய்வின் முடிவு இக் கருத்திற்கு முற்றிலும் மாறானதாகும். அதாவது நாயுடன் தொடர்புறாத குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்கிறது.

காரணம் என்ன? நாயின் உரோமத்தில் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. குழந்தை நாயுடன் தொடர்புறும் போது, அந்த நுண்ணுயிர்கள் குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை இயல்பாக வளர்ச்சியுறுவதற்கு தூண்டி விடுகின்றன. இளவயதிலேயே இவ்வாறு நாயிலிருந்து வரும் நுண்ணுயிர்களுடன் தொடர்புறுவதால் குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தி, வலுவடைந்து ஆஸ்த்மா தோன்றுவதைத் தடுக்கிறது என அந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மாறாக நாயுடன் தொடர்புறாத குழந்தைகள் குறைந்தளவு நுண்ணுயிர்களுடனேயே தொடர்புறுவதால் நோயெதிர்ப்புச் சக்தி் வலுவடையாது ஆஸ்த்மாவுக்கு கூடியளவு ஆட்படுகிறார்கள்.

எனவே நீங்கள் செய்யக் கூடியது என்ன? குழந்தையுள்ள உங்கள் வீட்டில் ஒரு நாய் வளருங்கள். நாய்க்கு தடுப்பூசிகள் போட்டு குளிப்பாட்டி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள். நாயை குழந்தை வளரும் இடங்களுக்கு வந்து செல்ல அனுமதியுங்கள். ஆயினும் குழந்தை நாயைச் சீண்டிக் கடிபடாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு, அதிலும் முக்கியமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் வந்தால் அவசரப்பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைக் கொடுக்க வேண்டாம். முக்கியமாக வைத்திய ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம். ஆயினும் சில தருணங்களில் மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இருந்தால் அது கெபலோஸ்போரின் வகை மருந்தாக இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு நாயின் ரோமங்களில் உள்ள ஒவ்வாமை தூண்டிகள் ஆஸ்த்மாவை மோசமாக்கலாம்.

Source: Chest, 131:1753-1759
நன்றி: இருக்கிறம் 15.08.2007

Read Full Post »

ஏப்பம் தொல்லை மானத்தை வாங்குகிறது

ஏவ்! ஏவ் என்ற பெரிய ஏப்பச் சத்தம் வைத்தியசாலை முழுவதும் எதிரொலிக்குமாற் போல ஓங்காரமாக ஒலித்தது. எனது நோயாளர் சந்திப்பு அறையை நோக்கி அச் சத்தம் நெருங்கவும் நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். உடல் கனத்த பெரியவர் உற்சாகமற்ற முகத்துடன், மிகுந்த சோர்வுடன் உள்ளே நுழைந்தார். கூட வந்த பெண் முகத்தில் சேலை அவிண்டு விழ அம்மணமாக நிற்பது போன்ற அவமானம் முகத்தில் தெறித்தது.

“இவருக்கு சரியான வாய்வுத் தொல்லை. பெரிய சத்தமாகப் பறியும். பிளட்ஸ்(Flats) வீடு, அக்கம் பக்கமெல்லாம் சிரிப்பாய் சிரிக்குது. மானம் பறக்குது” என்றாள்.

உண்மையில் வாய்வு, ஏப்பம் போன்றவையெல்லாம் இயற்கையான நிகழ்வுகள்தான். இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை. ஆயினும் நாலு பேர் மத்தியில் வெளியேறும் போது சற்று அநாகரீகமான, மரியாதைக் கேடான செயலாகத்தான் சமூகத்தில் கணிக்கப்படுகிறது.

வாய்வு என்பது என்ன? நாம் உண்ணும் உணவுகள் ஜீரணமடையும் போது நுண்ணங்கிகளின் தாக்கத்தால் வாய்வுகள் இயற்கையாக குடலுக்குள் வெளியேறுகின்றன. அத்துடன் உணவு உண்ணும் போதும், நீராகாரம் அருந்தும் போதும் அவற்றோடு சேர்ந்து உட்செல்லுகின்ற காற்றும் சேர்ந்து விடுகிறது. இந்த வாய்வுக்கள் இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறுகின்றன. இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால் வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஏப்பம் என்பது ஒருவருக்கு தன்னிச்சையாக வாய்வு வெளியேறுவதாக அமையலாம். அல்லது அவர் தானாக விரும்பி வெளியேற்றுவதாகவும் நடைபெறலாம். அதாவது வயிறு உப்பலாக அல்லது வயிற்று முட்டாக இருந்தால் ஒருவர் தானகவே காற்றை ஏப்பமாக வெளியேற்றிச் சுகம் காண முயலுவதுண்டு.

ஏப்பமானது எப்பொழுதும் பெரிய சத்தமாகத்தான் வெளியேறும் என்றில்லை. சத்தமின்றி அல்லது மிகவும் தணிந்த சத்தத்துடன் வெளியேறும் ஏப்ப வாய்வு எமது கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதே உண்மையாகும். உணவின் பின் மூன்று நான்கு தடவைகள் ஏப்பம் விடுவது எவருக்குமே சாதாரண நிகழ்வுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதே போல ஒவ்வொருவருக்கும் தினமும் ஆறு முதல் இருபது தடவைகள் வரை வாய்வானது மலவாயில் ஊடாக வெளியேறலாம் என்கிறார்கள். பெரும்பாலும் மலம் கழிக்கும் போது வெளியேறுவதால் எவரும் கவனிப்பதில்லை. ஆனால் ஓட்டைக் கார் புற்படுவது போன்ற பெரிய சத்தத்துடன் வெயியேறும்போது சங்கடமாகவே இருக்கும். ஆசூசையான மணத்துடன் குசுவாக வெளியேறுவது குடலில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம்.

வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்?

அவசர அவசரமாக உணவுகளையும் நீராகாரங்களையும் உட்கொள்ளாதீர்கள். அவ்வாறு உட்கொள்ளும் போது அவற்றுடன் காற்றும் உட்சென்று வாய்வுத் தொல்லை ஏற்படும்.
சோடா போன்ற மென்பானங்களில் நிறைய காற்று சேர்ந்திருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
பயறு, கடலை, சோயா, பருப்பு போன்ற உணவு வகைகளில் உள்ள புரதங்கள் சமிபாடு அடைவதற்கு சிரமமானவை. இவற்றை நன்கு வேக வைத்து உண்டால் சுலபமாக சமிபாடு அடைவதுடன் வாய்வு தோன்றுவதும் குறையும்.

பலரும் சொல்வது போல மலச்சிக்கலால் வயிற்று ஊதல் ஏற்படுமே ஒழிய வாய்வுத் தொல்லை ஏற்படுவதில்லை. மலக்குடற் சிக்கல், குரொனஸ் நோய் போன்றவையும் வாய்வுத் தொல்லையை உண்டாக்கலாம்.

இவற்றைத் தவிர மனோவியல் காரணங்களாலும் ஏப்பம் வரலாம். உடல் நோயின்றி ஏற்படும் Functional dyspepsia அவ் வகையைச் சார்ந்தது. இந்த நோயாளியின் நோயும் அத்தகையதே. பூரண குணமாவதறடகு நீண்ட கால சிகிச்சை தேவைப்பட்டது.
எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>நீரில் இறங்காமல் நீச்சலா?

பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. “நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. “விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை… இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது.”

இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை.

ஆனால், நீரில் இறங்காமல் நீந்தப் பழக முடியுமா?

உடற்பயிற்சி எல்லோருக்கும் அவசியம்தான். ஆனால், எவ்வளவு தேவை?

இதுபற்றிய மருத்துவர்களின் கருத்துகள் கூட காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. “வாரத்தில் மூன்று நாட்களுக்கேனும் 20 நிமிடங்களாவது ஓடுவது போன்ற கடும் பயிற்சி தேவை” என 70- 80 களில் கூறினார்கள். ஆனால், 90 களில் கடும் பயிற்சி தேவையில்லை. வேகமாக நடப்பது போன்ற நடுத்தர வேகமுள்ள பயிற்சிகளை வாரத்தில் 5 நாட்களுக்கேனும் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும் என்றார்கள். இப்பொழுது தினமும் 60 நிமிடங்கள் வரையான நடுத்தர பயிற்சி மீண்டும் என்கிறார்கள்.

எனவே, உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

Dr.Timothy S.Church தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள் JAMA 2007:297:20812091 இதழில் வெளியாகியிருந்தன. மாதவிடாய் நின்றுவிட்ட, அதீத எடையுள்ள, உடலுழைப்பு அற்ற 464 பெண்களை உள்ளடக்கிய ஆய்வு அது. ஆறு மாதங்கள் செய்யப்பட்டது. உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வெவ்வேறு அளவிலான பயிற்சிகளைச் செய்தவர்கள் என நான்கு பிரிவினராக வகுத்துச் செய்யப்பட்ட ஆய்வு அது.

தினசரி 10 நிமிடங்கள் அதாவது வாரத்தில் 75 நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்தவர்களுக்குக்கூட அவர்களது இருதயத்தினதும் சுவாசப்பையினதும் ஆரோக்கியமானது எந்தவித பயிற்சிகளையும் செய்யாதவர்களை விட அதிகரிக்கிறது என அவ் ஆய்வு புலப்படுத்தியது.

ஆனால், இந்தளவு பயிற்சியானது ஒருவரின் எடையைக் குறைக்கவோ, பிரஸரைக் குறைக்கவோ போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆயினும், வயிற்றின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கிறது. இது பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குறைந்த அளவிலான பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் மேம்பட்டால் பிற்பாடு கூடியளவு பயிற்சி செய்வதற்கான உடல் நிலையையும் மேலும் தொடர்ந்து பயிற்சிகளைத் தொடர்வதற்கான மன ஊக்கத்தையும் பெறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது மேலும் கூடிய உடல் ஆரோக்கிய எல்லைகளை எட்டுகிறார்கள் என்பதே முக்கியமானது.

எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.

Read Full Post »

« Newer Posts