>‘வலிகளில் வலியது எதுவோ’ என திருவிளையாடல் திரைப்படத்தில் நாகேஸ் கேட்பது போல உங்களைக் கேட்டால் உங்கள் விடையெதுவோ எனக்குத் தெரியாது. ஆனால் சிவபெருமானாக இருந்தால் கூட சிறுநீரகக் கல் குத்து (Renal Colic) என்பதுதான் விடையாக இருக்கும் என்பது நிச்சயம்.
நின்றாலும், நடந்தாலும், படுத்தாலும், அழுத்தினாலும், எது செய்தாலும் அடங்காமல் துடிக்க வைப்பது அக் குத்து. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் கொடூரம் புரியும்.
பித்தப்பைக் கற்களால் ஏற்படும் வலி கூட அதேபோலக் கடுமையானவை என்பது உண்மைதான். ஆனால் இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற வேறு வேறு நோய்களாகும்.
சிறுநீரகக் கல் குத்து வயிற்றின் வலது அல்லது இடது பக்கத்தில் வரும். அதாவது வயிற்றின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் சிறுநீரகங்களில் அல்லது சிறுநீரகக் குழாய்களில் ஏதாவது ஒன்றில் இருக்கும் கற்கள் காரணமாக கல்லுள்ள பக்கத்தில் வலி வரும். நாரியிலிருந்து வயிற்றுக்கு அல்லது வயிற்றிலிருந்து சலவாயிலுக்கு செல்வது போன்றே பெரும்பாலும் இவ்வலி இருக்கும்.
சல எரிவும் கூட ஏற்படலாம். சிலவேளைகளில் இரத்தமும் கலந்து போகலாம். சிறுநீரில் கிருமித் தொற்று ஏற்படுவதும் உண்டு. வலியின் கொடுமை உங்களை உடனடியாகவே வைத்தியரிடம் இட்டுச் செல்லும். ஊசி போட்டு அல்லது மலவாயில் ஊடாக மாத்திரை வைத்து வலியை உடனடியாகவே தணிப்பார்.
ஆயினும் வலி நிற்பதுடன் சிகிச்சை நிறைவடைந்து விடுதில்லை. கல் இருக்கிறதா? அது எங்கிருக்கிறது? அதன் பருமன் என்ன? என்பன போன்றவற்றை ஆராய்ந்து கண்டு பிடிப்பதிலிருந்தே முறையான சிகிச்சை தொடங்கும்.
எப்படித் தோன்றுகின்றன?
போதிய நீர் அருந்தாமையாலும், கடும் வெயில் அல்லது கடுமையான வேலையால் உடல் நீர் வியர்வையாக வெளியேறுவதாலும் சிறுநீரின் செறிவு அதிகரிக்கும். இதனால் கல்சியம் படிந்து சிறுநீரகத்தில் சிறு கற்கள் உருவாகும். இவை பெரும்பாலும் கல்சியம் ஒக்ஸலேட் அல்லது கல்சியம் பொஸ்பேட் (Calcium oxalate அல்லது phosphate) கற்களாகவே இருக்கும்.
மிகச் சிறிய கற்கள் சிறுநீருடன் வெளியேறிவிடும். சற்றுப் பெரிய கற்கள் சிறுநீரகத்தில் இருந்து வெளியே வந்து சிறுநீர்க் குழாயினுள் (Ureter) தங்கிவிடும். இக்கற்கள் கீழிறங்க முற்படும்போது முடியாமல் திணறும்போதே அத்தகைய கடும் வலி ஏற்கடுகிறது.
வலி உண்டாவது மட்டுமே பிரச்சனை அல்ல. கற்கள் அடைத்துக் கொண்டிருப்பதால் சிறுநீரக் குழாய் வீக்கமடையும். இதனால் உண்டாகும் பின் அழுத்தத்தால் சிறுநீரகம் பாதிப்படையும். உயர் இரத்த அழுத்தமும் உண்டாகும். சிறுநீரில் கிருமித் தொற்றும் ஏற்படலாம். இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் அக் கற்களை வெளியேற்ற வேண்டும். எப்படி?
பரிசோதனைகள்
இக் கற்களைக் கண்டு பிடிக்க அல்ரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை, எக்ஸ்ரே, நிறம் ஊட்டி செலுத்தப்பட்டு எடுக்கப்படும் (IVP) விசேட எக்ஸ்ரே, சி டி ஸ்கான் (CT Scan) போன்ற பல பரிசோதனைகள் உள்ளன. இப் பரிசோதனைகள் மூலம் கற்கள் எங்கே இருக்கின்றன, அவற்றின் பருமன் எவ்வளவு?, அவற்றால் சிறுநீரகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா போன்ற பல முக்கிய விடயங்களை அறியலாம்.
சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் கல் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த இரசாயனப் பொருள் எதுவாக இருக்கிறது என்பதையும் அறியக் கூடியதாக இருக்கும்.
சிகிச்சை முறைகள்
சிறிய கற்களாக (5மி.மி; க்கு குறைவான அளவுடையவை) இருந்தால் போதியளவு நீர் (தினமும் சுமார் முன்று லீட்டர்) அருந்தினால் தானாகவே அவை சிறுநீருடன் வெளியேறக் கூடும். அவ்வாறு வெளியேறாவிட்டால் அவற்றை அகற்ற பாரிய சத்திரசிகிச்சைகளே முன்னர் செய்யப்பட்டன. ஆனால் இப்பொழுது மிக இலேசான சிகிச்சை முறைகள் உள்ளன.
உடலுக்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் அதிர்ச்சி அலைகளை உடலூடகச் செலுத்தி கற்கள் மீது கூர் முனைப்படுத்துவதன் மூலம் அவற்றை சிறு துணிக்கைகளாக உடைப்பது முதல் முறையாகும். பின் அத் துணிக்கைகள் சிறுநீருடன் தானாகவே வேளியேறும். Extracorporeal shockwave lithotripsy (ESWL) எனப்படும் இச் சிகிச்சை முறைதான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.
சிறுநீரகக் கல் பெரிதாக இருந்தால் அல்லது முற் கூறிய முறை மூலம் உடைப்பதற்கு கடினமான இடத்தில் இருந்தால் கல் இருக்கும் இடத்திற்கு நேராக முதுகுப் புறத்தில் ஒரு துவாரம் இட்டு சிறுநீரகத்திற்குள் (Nephrostomy tube) நெவ்ரோஸ்டமி குழாயை செலுத்தி அதனூடாக கல்லை அகற்றுவார்கள். இம்முறையை (Percutaneous nephrolithotomy) என்று சொல்லுவார்கள்.
சிறுசீரகக் குழாயின் கீழ் அல்லது நடுப்பகுதியில் உள்ள கற்களை அகற்ற கமரா பொருத்தப்பட்ட (Ureteroscope) குழாய்களைப் பயன் படுத்துவார்கள். சிறுநீர் வாயிலூடாக கமரா பொருத்தப்பட்ட குழாயைச் செலுத்தி, சிறுநீர்ப்பையை அடைந்து அங்கிருந்து அதனை சிறுநீரகக் குழாய்க்குள் செலுத்தி கல்லை சிறுகூடு போன்ற உபகரணத்தின் உதவியோடு அகற்றுவார்கள்.
கற்கள் தோன்றாமல் தடுக்க முடியுமா?
கற்கள் தோன்றாமல் தடுப்பதற்கு நீங்கள் செய்யக் கூடிய முதல் முயற்சி போதிய நீராகாரம் அருந்துவதுதான். தினமும் மூன்று லீட்டருக்கு குறையாத நீர் அருந்துங்கள்.கல்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளான பசுப்பால், நெத்தலி, முருங்கை, கீரை போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் கல்சியம் கற்கள் உற்பத்தியாவதைத் தடுக்க முடியும் என முன்பு வைத்தியர்கள் ஆலோசனை கூறினார்கள்.
ஆனால் கல்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளால் கற்கள் தோன்றுவதில்லை என அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன.
ஆயினும் கல்சியம் மாத்திரைகளை உட்கொள்வதானது கல்சியம் கற்கள் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
கல்சியம் ஒக்ஸ்சலேட் கல்லுள்ளவர்கள் பீட்ருட், சொக்கிளேட், கொக்கோ, கோப்பி, தேநீர், விதைவகைகள், கீரை போன்றவற்றை குறைவாகச் சாப்பிட வேண்டும்.. ஆயினும் அவற்றை உட்கொள்வதை முற்றாக நிறுத்தக் கூடாது. ஏனெனில் அவ் உணவுவகைகளில் எமது உடலுக்கு அத்தியாவசியமான பல போசாக்குப் பொருட்கள் உள்ளள.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- ஜீவநதி