Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2007

எனது உலகம் சிறியது. உலக அனுபவங்கள் அதனிலும் குறுகியவை. ஆனால் இதற்கு முன் எப்போதும் கிட்டாத அற்புத அனுபவங்கள் இப்பொழுது திடீரெனச் சாத்தியமாயிற்று. சலசலத்தோடும் ஆபிரிக்காவின் பெருநதியான நைல் நதியில் வெசங்காவோடு குளித்தேன். குளியறை இல்லாத யப்பானிய குடியிருப்பொன்றில் வேண்டியளவு தண்ணீர் கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால், தண்ணீர் நிரப்பிய பிளாஸ்ரிக் தொட்டிகளுள் கணவனும் பின் குழந்தைகளும் குந்தியிருந்து குளித்தபின் மனைவி கடைசியாக அதே தண்ணீருக்குள் குளிப்பதை ஆச்சரியத்தோடும் ஒரு வித அசூசையோடும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தொடர் ஹர்த்தால்களின் இறுக்கமான கெடுபிடிகளால் டெலிபோன் கூட இயங்க முடியாத டாக்கா நகரில் மலேரியாக் காச்சலினால் நடுங்குபவன் குயினைன் மாத்திரைகளோ, அதை விழுங்குவதற்கு குடிதண்ணீரோ இல்லாது தவித்து அவலப்பட்டதை அருகிருந்து பார்த்துச் சலனப்பட்டேன். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வீடொன்றின் பின்வளவில் அந்நாட்டின் தேசிய மரமான யூக்கலிப்டஸ் அருகே மட்டுவில் முட்டுக்கத்தரி காய்த்துக் குலுங்குவதையும் கருவேப்;பி;லை கமகமப்பதையும் கண்டு அதிசயப்பட்டேன். இத்தனைக்கும் நான் இலங்கையில் பிறந்து இலங்கையிலேயே வாழ்பவன். இந்தியா தவிர்ந்த உலக நாடெதையும் என்றுமே கண்டதில்லை. இருந்தபோதும் இத்தகைய பரந்த அனுபவங்களையும் சாத்தியமாக்கியவர் ஆசி.கந்தராசா, தனது ~உயரப் பறக்கும் காகங்கள; சிறுகதைத் தொகுப்பின் ஊடாக.

பத்துச் சிறுகதைகளை அடக்கிய இத்தொகுப்பில் தவக்கோலங்கள் என்ற முதற்கதை மட்டுமே இலங்கையை அதுவும் கதாசிரியரின் பிறந்த மண்ணான கைதடியை களமாகக் கொண்டது. நான்கு சிறுகதைகள் அவரது புகுந்த வீடான அவுஸ்திரேலியாவையும், இன்னும் நான்கு கதைகள் ஆபிரிக்காவையும் களமாகக் கொள்கின்றன. பங்களாதேஷ், யப்பான் பற்றி தலா ஒவ்வொரு கதைகளும் இருக்கின்றன. வாசகனுக்கு புதிதான முற்றிலும் அந்நியமான கருக்களையும், களங்களையும், அங்கு வாழும் மக்களின் கலை கலாசாரப் பண்புகளையும் விலாவாரியாக சித்தரிப்பதால் மட்டும் எந்தப் படைப்பும் சிறந்த சிறுகதைகளாகிவிட முடியாது. டாக்டர் இந்திரகுமார், மணியன் முதலாக இன்று வரையான பலரின் பயணக் கட்டுரைகளை நாம் வாசித்திருந்த போதும் அவை எவற்றிலும் கிட்டாத நெருக்கமும், கலையழகும் இத்தொகுப்பில் கிட்டின.

வெவ்வேறு மனிதக் குழுமங்களின் வாழ்க்கை முறை வேறுபாடுகளை விமர்சனக் கடிவாளம் இன்றி, மனிதநேயமும் திறந்த மனமும் கைகோத்துவரச் சித்தரிப்பது கதாசிரியரின் தனிச் சிறப்பாகும். இவற்றோடு இக்கதைகளில் உண்மைத் தன்மையும்; இழையோடும்;போது செறிவான வாசக அனுபவத்தைச் சாத்தியமாக்கிற்று.

ஈழத்துச் சிறுகதை இலக்கியமானது ஆனந்தன் என அறியப்பட்ட சச்சிதானந்தனின் சிறுகதைகளோடு இலக்கியமயப்பட்டு இன்று பலபடி உயர்ந்து வளர்ந்துவி;ட்டது. கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா, முற்போக்கு, நற்போக்கு என்பன போன்ற தத்துவார்த்த கோட்பாட்டு விவாதங்களைத் தாண்டி தன்னளவில் பலம் கொண்ட இலக்கிய வடிவமாக நிமிர்ந்து நிற்கிறது. ஆயினும் அதன் உச்சங்களை ஒருசிலரால் மட்டுமேயன்றி மற்றவர்களால் நெருங்கவும் முடியவில்லை என்பது கவலைக்குரியதே.

இந்தநிலையில் புலம்பெயர் இலக்கியம் இன்று ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு வலு சேர்த்த வண்ணம் புதுப் புனலாக மற்றொரு புறம் வளர்கிறது. அது ஈழத்து இலக்கியத்தின் ஒரு முக்கிய அலகாக மாறியுள்ளதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இந்தப் பின்னணயில் பார்க்கும்போது ஆசி.கந்தராசாவின் உயரப் பறக்கும் காகங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் வரவு முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் அடிப்படையில் மூன்று வகையானவை. அவை புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்துக்கும் பொதுவானவைதான். தான் விட்டுப் பெயர்ந்த தாயகத்தின் நினைவுகளிலும் நிகழ்வுகளிலும் தன்னிரக்கப்படுவது முதல் வகை. இழந்த தாயகத்தின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவதாகவும், கடந்த நினைவுகளை இரைமீட்பதாகவும், தாயகத்தை விட்டுப் பிரிந்த மனவடுவையும் குற்ற உணர்வையும் ஆற்ற எழுதப்படுபவையுமாக அமைவனவே இவை.

இத்தகைய படைப்புகளே புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பகட்டத்தில்; எழுந்தன, ஆயினும் அவர்களில் பலர் இன்றும் இந்த ஆரம்ப கட்டததைத் தாண்டாது அதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இத் தொகுப்பில் அடங்குபவற்றுக்குள் ~தவக்கோலங்கள் என்ற ஒரு கதை மட்டுமே இந்த வகையைச் சார்;ந்தது. பூமணி ரீச்சர் ஊடாக யாழ்பாணச் சமூகத்தின் சின்னத்தனங்கள், போரால் ஏற்பட்ட அழிவு, இவற்றையெல்லாம் தாண்டி அனாதைக் குழந்தைகளுக்கான ஆதரவுக்கரம் நீள்வது எனப் பலவற்றை இக்கதை சொல்லிச் செல்கிது. ஆயினும் சலிப்பின்றி வாசிக்கக் கூடியதாக கதையாக அமைகிறது.

புலம் பெயர்ந்தவர்கள் புதிய தேசத்தில் வாழ ஆரம்பிக்கும்போதும், தமது அடுத்த பரம்பரை அங்குள்ள கலாசாரத்துடன் நெருங்கிக் கலக்கும்போது கிளர்ந்தெழும் பண்பாட்டு முரண்பாடுகளைப் பதிவு செய்யும் கதைகள் அடுத்த வகையானவை. இவை புலம்பெயர் இலக்கியத்தின் வளர்ச்சிப்படியின் இரண்டாம் கட்டம் எனலாம்.

யாழ்ப்பாணத்தின் சின்னத்தனங்களும், வெளிப்பகட்டும் பதவி ஆசைகளும், அவுஸ்திரேலியாவிலும் தொடர்வதை ~முன்னிரவு மயக்கங்கள், ~கோபுரதரிசனம் போன்ற கதைகள் பேசுகின்றன. வெள்ளைத்தோலில் மோகமும், ஆங்கிலமொழி பேசுவதே கெளரம் எனவும் மேலைத்தேய வாழ்க்கைமுறையில் நாட்டம் கொண்டு எம்மவர்கள் எவ்வளவுதான் உயரப் பறக்க முனைந்தாலும் தரைக்கு வந்தே ஆகவேண்டும் என்பதையும் எமக்குத் திருப்தியையும் அமைதியையும் கொடுக்கும் வாழ்க்கை எமது பண்பாட்டிலேயே கிடைக்க முடியும் என்பதையும் ~உயரப் பறக்கும் காகங்கள் அழகாகச் சொல்கிறது.

மூன்றாவது வகைக் கதைகள் பயணிப்பவர் சொல்வது போன்றவை. இது தமிழ் இலக்கியத்திற்கு முன்னுதாரணம் இல்லாத சுவார்ஸயம் நிறைந்த புது வரவாகும். பயணிப்பவர் கதைகள் என்பதால் மட்டும் இவை முக்கியத்துவம் பெறுவதில்லை. உள்ளுர் மற்றும் உலக அரசியலையும், மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுப் புளித்துப்போன தத்துவக் கோட்பாடுகளையும் இசங்களையும் கைவிட்டு, முற்று முழுதாக மனித நேயத்தையும், தம் உள்ளுணர்வின் எழுச்சியையும் மட்டுமே துணைகொள்வதால் புதிய எல்லைகளை எட்ட முயலும் படைப்புகள் இந்த வகையுள் அடங்கும்.

அ.முத்துலிங்கமும், ஆசி.கந்தராசாவும் மட்டுமே எனது குறுகிய வாசிப்பு உலகுக்குள் இந்த வகைப் பயணிகள் கதைகளை எழுதியிருப்பதாக நான் அறிந்திருக்கிறேன். நந்தியின் பங்களாதேஜ்சைப் பகைப்புலனானக் கொண்ட கதை ஒன்றும் இவ்வகைக்குள் அடங்கும். ஆசி.கந்தராஜா டீழை வநஉ¡ழெடழபல துறைசார்ந்த பேராசிரியர். ரு¦¨எநசளவைல ழக றுநளவநச¦ ளுலனநெல யில் பணியாற்றுகிறார். யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்த காந்தாராஜாவின் பயணம் ஜோ;மனி, அவுஸ்திரேலியா ஆகிய வதிவிடங்களுக்கு மேலாக இந்தியா, சீனா, பங்களாதேஜ், யப்பான், ஆபிரிக்கா என உலகளாவப் பரந்துள்ளது.

படைப்பாளியான அவருக்கு பல்வேறுவிதமான அற்புத அனுபவங்களை அப் பயணங்கள் கொடுத்திருக்கின்றன. இவை மற்றறெந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கனவுகளுக்கும் எட்டாத அனுபவங்களாகும். இவற்றை அவர் பதிவு செய்திருக்கும் முறையும் சிலாகிக்கத்தக்கது.

இவரது பதிவு விமானத்திலிருந்து தூர நின்று புதினம் பார்க்கும் அண்டவெளிச் சித்தரிப்பு அல்ல. சாலையில் செல்லும் வாகனத்தின் யன்னலூடகப் பார்ப்பவனின் மேலோட்டப் பதிவும் அல்ல. அவற்றில் முக்களித்து எழுந்து அனுபவித்தால் மனித வாழ்வின் முழுமையையும் உள்ளடக்க முயலும் படைப்புகள்.

வெசங்காவின் தாயின் தந்தையே அவனுக்கும் தந்தையானவன் என்ற அவலத்திற்கு மேலாக அவனது காதலியையும் அத் தந்தையே வஞ்சகமாக அபகரிக்க முயல்வதை ~துர்க்கா தாண்டவம் சொல்கிறது. இதனை அவர் விமர்சனக் கணையோ, பண்பாட்டுப் புனிதம் பேணும் ஆசாரக் கோபமோ இன்றி நோ;த்தியாகப் புனையப்பட்ட கதையாகத் தருகிறார். கலாசரங்களுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வுகளையோ, நியா¡ய அநியாயங்களையோ கண்டு சீறும் விமர்சகா;கள் போலன்றி ஒழுங்காகக் கதையாடும் கதாசிரியனாகத் தன் பணியை முடித்துக் கொள்கிறார். இதேபோல போட்டிப் பரீட்சையில் சித்தி பெறாத பன்னிரண்டு வயது யப்பானியச் சிறுமியான கெய்கோ தற்கொலை செய்வதை ~தேன் சுவைக்காத தேனீக்கள் கூறுகிறது. வெறும் சம்பவம் என்பதற்கு மேலாக அந்த அவல மரணம் அந்த வீட்டிலோ, அந்தச் சமூகத்திலோ கேள்விகளையோ, சலனங்களையோ கிளப்பாது ஒரு சாதாரண நிகழ்வாக நினைவழிந்து போவதை உணர்ச்சி வயப்படாத ஒரு பயணியின் அனுபவம் போல் தட்டையாகச் சொல்லிப் போகிறார்.

ஆனால் அவரது வார்த்தையாடலின் நுணுக்கமும், சம்பவங்களின் ஒழுங்கமைப்பும், எளிமை கூடிவரும் சொற்தேர்வும் அற்புதமானது. வெளிப்படையாகத் தன் கருத்தை வலியுறுத்தாவிடினும் வாசகர் மனதைப் பெரும் கிளறல் செய்துவிடுகிறார். அவனைத் தன்னுள் ஆழ்த்தி சிந்தனை மயப்படுத்தும் வீறு கொண்டது அவரது எடுத்துரைக்கும் பாணி.

பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படுத்தி கண்ணீர் சிந்த வைக்கும் டிவி டிராமாக்கள் போல வாசகனை மூளைச் சலவை செய்து, காட்டாறு போல தன்னோடு இழுத்துச் செல்லாமல் அவனது சுயசிந்தனையைக் கூர்மைப்படுத்துகின்றன. கதாசிரியன் மெளனம் காக்க வாசகனின் மனம் பேசிகிறது. இவரது இவ்வித எழுத்தாக்க முறைமை சிலாகிக்கத்தக்கது.

இதேபோல ~வெள்ளிக்கிழமை விரதம் இன்னுமொரு அற்புதமான படைப்பு. பெண்களின் கற்பு என்பதற்கு எம் மரபுவழிச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட புத்தம் புதிய சிந்தனைச் சுடரை ஏற்றிவைக்கிறது. ஈழத்து இந்துவான தனக்குப் புனிதமான வெள்ளிக்கிழமைகளில் ஆபிரிக்கப் பெண்மாணவிகள்; விரிவுரைகளுக்கு ஏன் வராமல் விடுகிறார்கள் என்ற விரிவுரையாளரின் கேள்வியோடு ஆரம்பிக்கும் கதையிது. பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுக்க வேண்டிய ஆபிரிக்காவில் காதலன் மட்டுமே உழைத்து பெற்றவளின் தகப்பன் நிர்ணயிக்கும் ~சீதனத்தை கொடுத்து விட முடியாத நிலை நிலவுகிறது. மொறிஸ்ம், குளொறியாவும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்து நேசிக்கிறார்கள். ஆனால் அதேநேரம் குளொறியா தான் வேலை செய்யும் மதுச்சாலைக்கு வரும் ஆண்களுடன் நெருக்கமாகப் பழகுகிறாள். இது விரிவுரையாளருக்கு முரணாக தென்பட்டபோதும், தன்னையே விலையாக்கி சம்பாதிக்கிறாள் என்பது பிற்பாடு தெரியவருகிறது. இந்த இரட்டை முகம் ஏன்? தனது காதலன் தன் தகப்பனிடமிருந்து தன்னைச் சீதனம் கொடுத்து வாங்குவதற்காக அவள் உழைத்துக் காக்கும் விரதம் அது. வாரவிடுமுறைக்கு முதல்நாளான வெள்ளிக்கிழமை இதற்கு தோதான நாளாக அவளுக்கு அமைகிறது. அவள் மாத்திரமல்ல இன்னும் பல மாணவிகள் அத்தகைய விரதம் காப்பதால்தான் அவரது வெள்ளிக்கிழமை வகுப்புகளுக்கு மாணவிகள் வரவு குறைவாக இருக்கிறது என்ற செய்தி மெதுவாகப் புரிய எம் மனம் துணுக்குறுகிறது.

பாலன் பிறக்கிறான் என்ற கதை ஆப்பிரிக்க பண்பாடு பற்றிய இன்னுமொரு முக்கிய தகவலை வாசகனுக்குத் தரும் கதை. இரட்டைக் குழந்தை பிறப்பது சமூகத்திற்கு தோஷம் எனக் கருதும் ஆபிரிக்கப் பழங்குடி மக்கள் அக்குழந்தையைக் கொன்றுவிடுவது வழக்கம். இதைத் தடுத்து தாயின் துயரத்தைத் தீர்க்க அக்குழந்தை தனக்கே பிறந்ததாகக் ஒரு கன்னியாஸ்திரி காப்பாற்றுவதை இக்கதை கூறுகிறது. வாசகா;களை அதிர்ச்சி வைத்தியத்துக்கு உள்ளாக்கும் திரைப்படப்பாணியிலான அதிமிகை முடிவுவென எனக்குப் படுகிறது. தீபாவளி, நத்தார், புதுவருடம் போன்ற பண்டிகைக் காலங்களில் பத்திரிகைகளை அலங்கரிக்கும் ஒரு பண்டிகைக் காலக் கதை என்பது போன்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

குழந்தைகளின் உலகமும் கந்தராசாவின் அக்கறைக்கு உட்பட்டதாக இருக்கிறது. யப்பானிய பிள்ளைகளின் பரீட்சை பற்றிய பயமும், மனஅழுத்தமும் அவர் மனத்தை உறுத்துகிறது. போட்டிப் பரீட்சையில் ஜெயித்தும், பணம் கட்ட முடியாததால் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல முடியாத டாக்காவிலுள்ள ஹோட்டல் உதவியாளர் யூசுப்பின் மகனுக்காக உள்ளுர ஏக்கப்படுகிறார். சிட்னியிலும் ரியூசன் மோகம். குழுந்தைகளுக்கு ரியூசன் கொடுக்காவிட்டால்; நல்ல புள்ளிகள் எடுக்மாட்டார்கள் என்ற பயத்தில் பெற்றோர்கள் அவர்களை வகுப்புகளுக்காக மாறிமாறி காரில் ஏற்றி இறக்கி அல்லல்படுத்துவதை அக்கறையோடு பதிவு செய்கிறார். இன்னும் பல உதாரணங்களைக் காட்டலாம். இன, நிற, மத வேறுபாடுகளுக்கு அப்பால் குழந்தைகளின் மீதான அவரது அக்கறையும், வசீகரமும் இவற்றில் வெளிப்படுகிறது. கல்வியில் ஆர்வமும், கல்வி பற்றிய நவீன சிந்தனைப் பரிச்சியமும் கொண்ட பேராசிரியரின் அகஉணர்வு இவற்றைப் பேச வைக்கிறது போலும்.

கந்தராஜாவின் சிறுகதை ஆக்கமுறைமை யதார்த பாணியிலானது. எழுத்து நடை ஆற்றொழுக்கானது. வாய்விட்டுச் சிரிக்கவைக்காத ஆனால் முகத்தில் முறுவலை மட்டும் தோற்றுவிக்கும் இலேசான அங்கதமும் எள்ளலும் ஆங்காங்கே பரவிக்கிடந்து வாசகனின் ரசனையைதை; தூண்டுகிறது. நவீனத்துவங்களுடன் தனக்குப் பரிச்சயம் இருக்கிறது என்பதைப் பறைசாற்றுவதற்காக நவீனத்துவத்தையோ பின் நவீனத்துவத்தையோ இழுத்துக் கெடுக்கும் பல எழுத்தாளர்களின் போலித்தனம் இவரிடம் இல்லை.

எஸ்.சிவபாலனின் ஓவியங்கள் ஒவ்வொரு கதையையும் அலங்கரிக்கின்றன. கதைகளின் முக்கிய பாத்திரங்களை அல்லது கதைகளின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதால் கதைகளுக்கு அணி செய்கின்றன. ரசனைக்குரிய கோட்டோவியங்கள். பாரட்டுக்குரியன. ஆனால் அட்டைப்படம் உணர்வின் வெளிப்பாடாக இல்லை. உயரப் பறக்கும் காகங்கள் என்ற கதைத் தலைப்பின் உட்பொருளை கருத்தில் கொள்ளாது வெறுமனே காகங்கள் உயரப் பறப்பதைக் வரைந்துள்ளார். இருந்தபோதும் கரும்பச்சைப் பின்னணயில் வெள்ளை எழுத்துக்களிலான அட்டைப்படம் எட்ட நின்றாலும் கண்ணில் படுவதை மறுக்க முடியாது. இது காகங்கள் இல்லாவிட்டால் கூட இது சாத்தியமாகியிருக்கும்.

மொத்தத்தில் இப்புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என நியாயமாகவே நம்புகிறேன். இது போன்றதும், இன்னும் வித்தியாசமானதுமான ஆக்கங்களை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை அல்லவா? தமிழ் சிறுகதை வரலாற்றில் ஆ.சி.கந்தராஜாவும் அவரது இந்நூலும் ஆழமான தடத்தைப் பதித்து நிற்கும் என்பது திண்ணம்.

சில ஆண்டுகள் முன்னே எழுதப்பட்ட கட்டுரை இப்பொழுது எனது வலைப்பதிவில் மீள் பிரசுரமாகிறது.

– எம்.கே.முருகானந்தன் –

நன்றி:- பதிவுகள்

Read Full Post »

>’இவனுக்கு சாப்பாடு ஒண்டும் உட் செல்லாது… சோடா வேணும் எண்டு அடம் பிடித்துக் குடிப்பான்’ என்று அம்மா சொன்னதைக் கேட்டுப் பெருமையுடன் சிரித்த அந்தப் பிள்ளையின் வாய் முழுக்கச் சொத்தைப் பற்கள்.

இனிப்புச் சோடாக்கள், இனிப்புட்டப்பட்ட பழச்சாறுகள் போன்றவை எந்தக் குழந்தைக்குத்தான் பிடிக்காது. ‘சாப்பாடு போகுதில்லை, இதையாவது குடிக்கட்டும்’ என்றோ, ‘பாவம் சின்னஞ் சிறிசு ஆசைப்படுகிறதைக் கொடுக்கத்தானே வேணும்’ என்றோ கட்டுப்பாடில்லமல் இவற்றைத் தாராளமாகக் கொடுத்தால் ஆரோக்கியம் தான் கெடும்.

அதீத எடை வைப்பதற்கும், பற்கள் சொத்தை ஆவதற்கும் இத்தகைய இனிப்புப் பானங்கள்தான் முக்கிய காரணம் என்பது சொல்லியா தெரிய வேண்டும்.

இன்னுமொரு தாயின் பிரச்சனை முற்றிலும் எதிர்மாறானது. அவளின் குழந்தை குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பானம்! இவனுக்கும் சாப்பாடு உட் செல்லாதுதான். நிறையப் பால் குடிப்பான். இரண்டரை வயதாகியும் இன்னமும் போத்தலில்தான்.

‘இனி போத்தலில் பால் கொடுக்க வேண்டாம். கோப்பையில் குடிக்கக் வையுங்கள். தினமும் இரண்டு கப் பால் கொடுங்கள்’ என ஆலோசனை வழங்கப்பட்டது. காரணம் போத்தலில் குடிப்பது இலகுவானது. விரைவாக வயிறு நிறைந்துவிடும். எனவே சாப்பிடத் தோன்றாது.

பால் போஷாக்குள்ள பானம்தான். அதிலுள்ள புரதம், கல்சியம், விற்றமின் A&D ஆகிவை குழந்தையின் உடல் வளர்ச்சி, பொதுவான ஆரோக்கியம், திடமான பற்கள், உறுதியான எலும்பு ஆகியவற்றிற்கு உதவும். ஆயினும் ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திட உணவும் அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது. பாலைத் தவிர யோஹட், சீஸ் ஆகியவற்றிலும் பாலிலுள்ள போஷாக்குகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? மூன்று வேளை உணவிற்கும் பின்னர் பால் கொடுப்பதில் தவறில்லை. இடையில் கொதித்து ஆறிய நீரைக் குடிப்பதற்கு குழந்தையைப் பழக்கப்படுதுங்கள். பழச் சாறுகளும் நல்லது. போத்தலில் அடைக்கப்பட்ட இனிப்பூட்டிய பழச்சாறுகள் அல்ல. உடன் பிழிந்து கரைத்துக் கொடுங்கள். படிப்படியாக பழத்தைச் சாறாக்காமல் முழுமையாக உண்பதற்கும் பழக்கப்படுத்துங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>’எனக்கு கொலஸ்டரோல் இருக்கு. இவருக்கும் (கணவருக்கு) கொலஸ்டரோல் இருக்கு எண்டபடியால் பிள்ளைக்கும் எண்ணெய்ச் சாப்பாடு குடுக்கிறதே இல்லை’ எனப் பெருமை அடித்துக் கொண்டாள் அந்த இளம் தாய்.

பாவம் அந்தப் பிள்ளை!

அதற்கு நான்கு வயது கூட இருக்காது. ‘பாவம்’ என நான் குறிப்பிட்டது அப் பிள்ளைக்கு வாய்க்கு ருசியான சாப்பாடு கிடைக்காது என்பதற்காக மட்டும் இல்லை. தனது அறியாமையால், வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான ஒரு முக்கிய வகை போஷாக்கு உணவைக் கொடுக்காமல் தவிர்க்கிறாரே என்ற ஆதங்கத்தில்தான்.

மனிதர்களின் குருதியில் கொலஸ்டரோல் என்பது திடீரென ஏற்படும் பிரச்சனை அல்ல என்பது உண்மைதான். சிறுவயதிலிருந்தே இது ஆரம்பிக்கத் தொடங்குகிறது. எனவே சிறுவயதிலிருந்தே உணவில் அதீத கொழுப்புப் பண்டங்களைச் சேர்ப்பது நல்லதல்ல என்பதும் உண்மைதானே. அவ்வாறெனில் அந்தத் தாய் செய்ததில் என்ன தவறு என்று உங்களுக்குத் தோன்றலாம்.

மாப்பொருள், புரதம், கொழுப்பு, விட்டமின்கள், கனியங்கள் இவை யாவும் எமது உடலுக்கு அவசியமானவை. அதிலும் முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை. இப் போஷணைப் பொருட்கள் ஒவ்வொன்றும் சரியான விகிதத்தில் உணவில் கலந்திருக்க வேண்டும். மிகுந்தாலும் தீமை பயக்கும், குறைந்தாலும் ஆகாது. வளர்ந்த ஒருவர் தினசரி உட்கொள்ளும் உணவின் கலோரிப் பெறுமானத்தில் 15 சதவிகிதமளவு எண்ணெய், கொழுப்புப் பொருட்களாக இருக்க வேண்டும்.அதற்கும் மேல் இருப்பதும் நல்லதல்ல.

ஆயினும் இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரையில் எண்ணெய், கொழுப்பு. கொலஸ்டரோல் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. இரண்டு வயதிற்கு மேல் அவர்களின் உணவின் தினசரிக் கலோரிப் பெறுமானத்தில் 30 சதவிகிதம் கொழுப்பிலிருந்து கிடைக்க வேண்டும்.

இதை வாசித்தவுடன் ‘குழந்தைகளுக்கு டொக்டர் கொழுப்பு உணவு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்’ என்று சொல்லியபடி கிழங்குப் பொரியல், வடை, மிக்ஸர், பட்டர், சொக்கிளேட் என அள்ளி அள்ளி ஊட்ட வேண்டாம். அவை நல்ல கொழுப்புகள் அல்ல. நீங்கள் கொடுப்பது நல்ல வகையான கொழுப்பாக இருக்க வேண்டியது அவசியம். பால், முட்டை,சோயா பட்டர் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பு குழந்தைகளுக்கு உகந்தது.

சட்டம் வைத்து, சத்தம் போட்டு, அடி கொடுத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முடியாது. பெற்றோராகிய நீங்கள்தான் முன்மாதிரியாக நடந்த வழி காட்ட வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »