Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2007

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள்.

அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.

ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும்.

ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

>இவடம் எவடம்
புங்கடி புளியடி
இவடம் எவடம் …

சிறுவயதில் நீங்கள் கண்களைப் பொத்தி விளையாடிய பருவகாலத்து நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வருகின்றனவா? எவ்வளவு இனிமையான நாட்கள்! காற்றைப் போல சுதந்திரமாக ஆடிப் பாடி விளையாடித் திரிந்த நாட்கள் அவை. ஆனால் இன்று?

இவடம் எவடம்
வீட்டின் படிப்பறை
இவடம் எவடம்
சிட்டுக்குருவியின் சிறை முகாமடி
சிட்டுக்குருவியின் வதை முகாமடி

என்றுதான் ஏக்கத்தோடு பாட முடிகிறது.

இது பா.இரகுவரன் எழுதிய சிட்டுக் குருவிகள் நாடகத்தின் ஆரம்பக் காட்சியில், விருத்த மொட்டில் பாடகர் பாடும் வரிகளாகும். ஆம்! இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கையானது பள்ளிக்கூடம், வீட்டின் படிப்பறை ஆகியவற்றுள் சுருங்கிவிட்டது. அதுவே சிறையும் ஆகிவிட்டது. ஏனைய பிள்ளைகளுடன் கூடிக் கூத்தும் கும்மாளமும் அடிப்பது எல்லாம் பழங்கனவாகி, கானலாகிக் கலைந்தும் விட்டன. அவர்களின் வாழ்க்கையானது இயந்திர மயமாகி விட்டதுடன் பிள்ளைப் பருவத்தின் கனவுகளையும் கற்பனைகளையும் கூட இல்லாதொழித்து விட்டன.

பா.இரகுவரன் ஒரு ஆசிரியர். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அடிப்படையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரான அவர் கலையுணர்வும் மென்னுணர்வுகளும் கொண்டவராதலால் நாடக அரங்கியலை சிறப்புப் பாடமாக படித்துப் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றுவதுடன் நாடக ஆசிரியராகவும், நெறியாளராகவும் கலைப் பங்களிப்பைச் செய்து வருகிறார். பாரம்பரிய நாடக மரபுகள் பற்றியும், பிரதேச வாழ்வியல் மரபுகள் பற்றியும் கள ஆய்வுகள் செய்து ஆவணப்படுத்தவும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

50 க்கு மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இவற்றுள் குழந்தை சண்முகலிங்கம், மௌனகுரு, நிலாந்தன் ஆகியோரின் நாடகப் பிரதிகளும் அடங்கும். அண்மைக் காலமாக தானே நாடகங்களைப் புனைந்து மேடையேற்றுகிறார். இத்தகைய இவரது நாடகப் பிரதிகள் மட்டும் 15க்கு மேல் வரும்.‘கல்லூரி நாடகங்கள்’ என்பது இவர் தயாரித்தளித்த ஆறு நாடகப் பிரதிகளை உள்ளடக்கிய புதிய நூலாகும்.

ஆழ்ந்த சமூக நோக்கும், விரிந்த பார்வையும் கொண்டவர் அவர். ‘நாடகம் முதலான எந்தவொரு கலை வடிவமும் சொல்ல வந்த விடயத்தை, அனுபவத்தை உன்னத அழகியலுடன் படைக்கப்பட வேண்டும். பேரானந்த நிலையை மட்டுமின்றி, அடுக்கடுக்கான பல தளங்களில் சிந்தனையைத் தூண்டி நிற்பதாக அக் கலை வடிவம் அமைய வேண்டும். தன்னைப் பற்றியும், சக மனிதன் பற்றியும், சமூகம் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான புரிதலுக்கு கலைவடிவம் வெளிச்சமூட்ட வேண்டும். இதயத்தில் நெகிழ்வையும், அக ரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்த விளையாத எந்தக் கலையும் பயனற்றது’ என தனது முன்னுரையில் கூறுவதிலிருந்து அவரது படைப்புகள் எத்திசை நோக்கி ஆக்கப்பட்டிருக்கும் என்பதை முன் கூட்டியே ஊகிக்க முடிகிறது.

முதல் நாடகமான ‘சிட்டுக் குருவிகள’; சிறு பராயத்து மாணவர்களை படி படி ஓயாமல் நச்சரித்து, கற்றல் நடவடிக்கைகளைத் திணித்து, பரவலான உலக அனுபவங்களை உணர விடாது தடுத்து, அவர்கள் ஆளுமைகளைச் சிதறடிப்பதை ஆணித்தரமாக, அதே நேரம் நகைச்சுவை அனுபவங்களோடு கலந்து கொடுக்கிறது. ‘குரு பீடம்’ நாடகமும் கல்வியோடு சம்பந்தப்பட்டதாயினும், உயர் வகுப்பு மாணவர்களின் ஆர்வங்கள் சற்றுத் திசை திரும்புவதையும், அதை மாற்றி கல்வி கற்றலில் ஈடுபட வைப்பதை நோக்கமாகக் கொண்டது. கடமை உணர்வு கொண்ட ஆசிரியரின் வாழ்வியல் கோலங்களும் இதில் காட்சியாகின்றன.

‘முற்றத்து வேம்பு’ சூழல் பாதுகாப்பில் தாவரங்களின் பங்களிப்புப் பற்றியது. தனிமனிதன் ஒருவனுக்கும் வேப்ப மரத்திற்கும் இடையேயான உறவின் பின்னணியில் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நல்லதம்பி மாஸ்டர் மேடையில் பார்வையாளர்களை ஈர்க்கும் பாத்திரமாக இருந்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. ‘அழிதல் காணும் பூவுலகம்’ மனிதன் சூழலைப் பேணாவிடடால் உலகத்தின் இயக்கமே முடங்கிவிடும் என்ற நிலையிருக்கையில் அதற்குக் பெருமளவு காரணமான அமெரிக்காவோ அதனைத் தட்டிக் கழித்து சனத்தொகை மிகுந்த ஏழை நாடுகளின் மேல் சுமையை ஏற்றுவதைத் தட்டிக் கேட்டும் தன்னார்வக் குழவினர் பற்றியது. இவ் இரு நாடகங்களுமே விஞ்ஞானக் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட நாடகங்களாகும்.

‘கணிதவியலாளன்’ நாடகமானது, ஆங்கிலத்தில் எழுதிப் புகழ் பெற்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதையை கருவாகக் கொண்டது. வாழ்வோடு இசைந்து போகாத வெற்று விஞ்ஞான அறிவு கொண்ட அறிவு ஜீவிகளின் அறிவோ அனுபவமோ நல்வாழ்விற்கு பயனற்றது என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது. இன்னொரு நாடகமான ‘மெல்லத் தமிழ் இனி’ புலோலியூர் கந்தசாமி எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தொலை தொடர்பு நிலையத்தில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் ஊடாக உறவினர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பதால் தழிழ்ச் சமூகத்தில் தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பண்பாட்டுச் சிதைவுகளையும் நையாண்டியாகச் சித்தரிக்கிறது. சிந்திக்க வைப்பதும் கூட.

இந் நாடகங்கள் எழுத்துப் பிரதி என்ற வகையில் வாசிப்புத் திருப்தியைத் தருகின்றன. ஓவ்வொரு நாடகத்திற்குமான அரங்க அமைப்பு வரை படமாகத் தரப்பட்டுள்ளது. இவற்றோடு எமது கற்பனைக் குதிரையையும் சற்றுத் தட்டிவிடும் போது மேலான அனுபவம் கிட்டுகிறது. ஆயினும் நாடகங்கள் காட்சிப் புலனுக்கானவையே அன்றி வாசிப்புக்கானவை அல்ல என்பதை நான் முன்பு மேடையில் பார்த்த இரகுவரனின் நாடகங்களை நினைந்தபோது தெளிவாகியது. ஊமமும் வேசமும், ஆட்டமும் பாட்டமுமாக எங்கள் உணர்வுகளுக்குள் ஊறித் பொசிந்தவை அவை. இரகுவரன் என்ற நாடக ஆசிரியர், நெறியாளராகவும் கைகோர்க்கும் போதுதான் அற்புதமாக வெளிப்படுகிறார் என்பது பின்நோக்கிப் பார்க்கும் போது புரிகிறது.

இந் நூலில் அடங்கிய அனைத்தும் கல்லூரி நாடகங்கள். இவற்றிற்கும் ஏனைய நாடகங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வகுப்றைப் போதனைகளுக்கு வெளியேயான கற்றலாக, பரந்துபட்ட அனுபவங்களுக்கான களமாக, ஆளுமை வளர்ச்சியாக, அக உணர்வுகளின் வெளிப்பாடாக, கலை உணர்வுகளைத் தூண்டுவதாக அமைய வேண்டும். இவற்றை மனத்தில் கொண்ட, சமூக அக்கறை கொண்ட ஒருவரால் இந் நாடகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

இந்த வகையில் பார்க்கும் போது ‘பாடசாலை அரங்கப் பொறுத்த வரையில்… இத்தனை பேருக்கு உட்பட்டதாக நாடகம் அமைய வேண்டும் என்பதை விட, இத்தனை பேருக்கு மேம்பட்டதாக நாடகம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையே பொருத்தமானது’ என நூலாசிரியர் குறிப்பிடுவதாவது தனது நாடகத்தின் வெற்றியை விட, அதிக மாணவர்களை அரங்கில் ஏற்றி அவர்களை ஆளுமையை விருத்தி செய்வதில் அக்கறை கொண்ட ஒருவராலேயே மொழியக் கூடியது.

‘அரங்கு அமைவிடத்திற்கான மொழி நடையும், பாத்திரங்களின் பெயர்களும் அமைவது சபையைக் கவரக் கூடியதாக அமைந்துள்ளது’ எனவும், ‘விஞ்ஞானக் கருத்துக்கள் நாடகங்களில் இழையோடி நிற்பது சமகாலத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது’ எனவும் ஹாட்லிக் கல்லூரியின் பிரதி அதிபர் திரு.மா.இராஜஸ்காந்தன் தனது அணிந்துரையில் எழுதியுள்ளதையும் இங்கு ஞாபகப் படுத்தலாம்.

‘அகவை அறுபதாகி இவ்வாண்டில் மணிவிழாக் காணும் இனிய நண்பர் ‘இலக்கியச் சோலை’ திரு.து.குலசிங்கம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம’, என குறிப்பிடப்ட்டிருப்பது மனதை நெகிழ வைக்கிறது. வடமராட்சி மண்ணில் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் தன் நிழலில் ஒதுங்க இடம் அளித்துப் போசித்து வளர்த்து விட்டு, பேசாமல் ஒதுங்கி நின்று பார்த்து மகிழ்ந்து, இலக்கிய ரசனையில் மட்டுமே சுகம் காணும் ஒருவருக்கு நூலைச் சமர்ப்பித்திருப்பது மிகவும் பொருத்தமானதே.

இது இரகுவரனின் மூன்றாவது நூலாகும். முதலாவது நூலான ‘ஊரும் வாழ்வும்’ என்பது தும்பளைக் கிராமம் பற்றிய சமூகவியல் ஆவணமாகும். ‘பண்டைத் தமிழ் நாடகங்கள்’ என்ற இவரது இரண்டாவது நூல் நாடகத் துறை மாணவர்களை இலக்காக் கொண்ட முயற்சி.

பல்வேறு இடறுகளிடையே சிக்கித் திணறும், நவீன அச்சக வசதிகள் அற்ற, யாழ் மண்ணிலேயே வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட ‘கல்லூரி நாடகங்கள்’ என்ற இந் நூலின் வரவு காலத்தின் தேவையாகும். மல்லிகையை பள்ளிக் கொப்பியில் அச்சடித்து வெளியிட்ட ஜீவாதான் ஞாபகத்துக்கு வருகிறார். உயிரச்சம் நிலவும் சூழலிலும் கலையார்வம் துளிர்த்து நிற்பது வெளியே நிற்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். ஆனால் இதுதான் எமது மக்களின் நிஜமான வாழ்வு.

இந் நூலின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 8ம் திகதி தும்பளை ஞானசம்பந்தர் கலை மன்றத்தில் ஹாட்லிக் கல்லூரி அதி;பர் திரு தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரபல எழுத்தாளர் தெணியான் கலந்து கொள்ள யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பாரம்பரிய நாடகக் கலையில வழித் தோன்றலும் நடிகருமான கலாமணி வெளியீட்டுரையை நிகழ்த்தினார். மெதடிஸட் பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி செல்வமலர் சுந்தரேசன், வேலாயுதம் மகாவித்தியாலய அதிபர் திரு ஜெகநாதன், பருத்தித்துறை இலங்கை வங்கி முகாமையாளர் ஆனந்தநடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்புகளுக்கு:-
பா.இரகுவரன்,
பிராமண ஒழுங்கை,
தும்பளை,
பருத்தித்துறை.
இலங்கை.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி-: மல்லிகை

Read Full Post »

>பிளக் ஹிந்திப் படம் பார்த்திருக்கிறீர்களா? படத்தின் இறுதிப் பகுதியில் அமிதாப் பச்சானுக்கும் வருகிறதே ஒரு நோய். தனக்கு மிக நெருக்கமான , தனது நீண்ட அயராத கற்பித்தல் முயற்சியால் உருவாக்கிய பார்வையற்ற மாணவியைக் கூட இனங்காண முடியாத நோய் .மறதி நோய்!.

அண்மைக்கால சம்பவங்களை மறத்தலில் ஆரம்பித்து பின் குழப்ப நிலையை அடைந்து இறுதியில் மோசமான முடிவுகளை எடுக்க வைக்கிற நோய். இதனை, படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்ற (சிகிச்சையால் குணப்படுத்த முடியாத)`முதுமை மறதிப் பைத்தியம்’ எனலாம். அது தான் அல்ஸீமர் நோய்.

வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். இது பொதுவாக 65 க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் சில வேளைகளில் நடுத்தர வயதினருக்கும் தோன்ற வாய்ப்புண்டு. 80 வயதிற்கு மேற்பட்டோரில் 22 சதவிகிதமானவர்கள் இந் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி வழமையான வயது முதிர்வதால் ஏற்படுவதில்லை.

அல்ஸீமர் நோயல்லாத வேறு ‘நினைவு மங்கும் நோய்’களும் உள்ளன. `அறளை பெயர்தல்’ என்ற சொல் கூட இவற்றிற்குப் பொருந்தலாம்.

ஏக்கம், கலக்கம், செய்ததை மீண்டும் மீண்டும் செய்தல், காரணமின்றி அலைதல், தூக்கமின்மை, சத்தமிடுதல் போன்றவை இவர்களது சில அறிகுறிகளாகும். மிகுந்த பதற்றப்படுபவர்களாகவும், பாதுகாப்பு உணர்வு அற்றவர்களாகவும் மாறுகின்றனர்.மனக் குழப்பமும் ஏற்படுகிறது. இதனால் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகிறது. கிராமங்களில் அவர்களை ஓரளவு சமாளிக்க முடிந்தாலும், தொடர் மாடி வீடுகளில் இவர்களை வைத்திருப்பது ஏனையோருக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாகிறது. இதனால் இந்த நோயானது நோயளர்களை மாத்திரம் துன்புறுத்துவதில்லை. அவர்களது குடும்பத்தவர்களையும் பராமரிப்பவர்களையும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குகிறது.

இந்த நோயை வைத்தியர்கள் நோயின் வெளிப்படையான அறிகுறிகளை வைத்து, நோயாளியின் அறிவார்ந்த செயற்பாடுகளைக் கணக்கெடுத்து, தங்களது அனுபவ அறிவைக் கொண்டு தான் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. எயிட்ஸ் நோய்க்கு செய்வது போலவோ, நீரிழிவுக்கு செய்வது போலவோ, ஏனைய பல நோய்களுக்குச் செய்வது போலவோ இரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது.

மருத்துவ நோய் நிர்ணயத்திற்கு அனுபவ அறிவைக் கொண்டு அல்லது அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு கண்டு பிடிப்பதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்துடன், நோயின் ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதும் முடியாததாகும். சீரி ஸ்கான் மற்றும் மூளை மற்றும் முண்நாணுக்குள் இருக்கும் Cerebro Spinal Fluid ஆகியவற்றை எடுத்துப் பரிசோதித்தல் போன்றவை சில காலமாக பயன்பாட்டில் இருந்த போதும் அவையும் மிகச் சரியான முடிவுகளை நேரகாலத்துடன் கொடுப்பதில்லை.

இப்பொழுது ஒரு எயிட்ஸுக்கு செய்வது போல எலிசா ( Elisa- enzyme- linked immunoaorbent assay) பரிசோதனை ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

எப்படி இந்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்தார்கள்?

அல்ஸீமர் நோயுள்ள 85 பேரினதும் ஆரோக்கியமான 79 பேரினதும் குருதியை எடுத்து அதன் பாயத்தில் உள்ள புரதங்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்கள். முக்கியமாக இந்நோயை இனங்காணக்கூடியவை என நம்பப்பட்ட 120 புரதக் கூறுகளை ஆராய்ந்த போது அதில் 18 புரதக் கூறுகள் அல்ஸீமர் நோயாளிகளின் குருதியில் மட்டும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இப்பொழுது ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அதாவது இந்தப் புரதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு அல்ஸீமர் நோய் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இலகுவான பரிசோதனை முறை உருவாக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனை முறை எந்தளவு நம்பிக்கையானது?

அல்ஸீமர் நோயாளர்களை 90 சதவிகிதம் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அது மட்டுமல்ல மிகக் குறைந்தளவு அறிவார்ந்த செயற்பாட்டுக் குறைபாடுகள் உள்ளவர்களின் இரத்தங்களைப் பரிசோதித்த போது அல்ஸீமர் நோய் வருவதற்கு 2-5 வருடங்கள் முன்னதாகவே இப்பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

வெளிப்படையான அறிகுறிகள் தெரிவதற்கு முன்னரே இந்நோயைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், இந்த ஆய்வு முடிவுகள் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்த நிறுவனம் சொல்கின்றனவாகவே இருக்கின்றன. தனிப்பட்ட ஆய்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

அல்ஸீமர் நோயால் 40 இலட்சம் பேர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேர்த்தியான சிகிச்சை முறை அல்லது நோயைத் தடுக்கும் முறை கண்டு பிடிக்கப்படாவிட்டால் 2050ம் ஆண்டளவில் இது 140 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. அமெரிக்காவில் மரணங்களுக்கான காரணங்களில் இது நான்காவதாக முன்னணியில் இருக்கிறது.

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>’ஒரு செக்கண்ட், ஒரு செக்கண்ட்தான், எனக்கு நேற்று திடீரென ஒரு பக்க கையையும் காலையும் இழுத்தது போலிருந்தது. மகனைக் கூப்பிடுவதற்கிடையில் எல்லாம் மாறிவிட்டது’ என உங்கள் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்கிறார். கலவரமின்றிப் பேச்சோடு பேச்சாகச் சொல்கிறார்.

அவரைப் பார்க்கிறீர்கள், மிக நன்றாகப் பேசுகிறார், நடக்கிறார், கை கால்கள் வழமைபோல இயங்குகின்றன. ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்! ஏதோ பயந்திட்டார் போல என நினைக்கிறீர்கள். ‘அப்பாவின்ரை அண்ணா இரண்டு மாதத்துக்கு முந்தித்தான் ஸ்ரோக் வந்து இறந்தவர். அதை நினைச்சிட்டார் போல’ என மகன் அலட்சியமாகச் சொல்கிறார்.

அலட்சியப்படுத்தக்கூடிய விடயமாகத் தெரியவில்லை. இவரைப்போன்ற 21000 பேரின் மருத்துவ ஏடுகளை ஆராய்ந்து பார்த்து, அவர்களை மேலும் விசாரித்த ஒரு கள ஆய்வின் பிரகாரம் அவர்களில் பலருக்கு உடல் ரீதியாகவும் நரம்பு மண்டல ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தான் முணுமுணுக்கும் பக்கவாதம் என்கிறார்கள்.

இது ஏதோ புதிதான வியாதியோ அல்லது எப்போதாவது ஒரு சிலரை மட்டும் தாக்கும் முக்கியமற்ற பிரச்சினை என எண்ணி விடாதீர்கள். 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இவ் ஆய்வைச் செய்த டாக்டர் ஜோர்ஜ் ஹோவர்ட் கூறுகிறார். இவர் அலபாமா பல்கலைக்கழககத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவராக இருக்கிறார்.

அதென்ன ‘முணுமுணுக்கும் பக்கவாதம்’ என்கிறீர்களா? பக்கவாதம் பற்றி நிச்சயம் அறிநிதிருப்பீர்கள். சிறிய அளவிலான பக்கவாதம் (Minor Stroke) பற்றியும் கேள்விப்பட்டிருக்கக் கூடும், அது பற்றிய எனது கட்டுரையை வாசித்திருக்கவும் கூடும். இப்பொழுது முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றிப் பேசலாம்.

இவர்களுக்கு பக்கவாதத்தை ஒத்த சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆயினும் அவை மிக அற்பமாக இருப்பதால் பாதிக்கப்பட்டவரை கலவரப்படுத்துவதில்லை, வைத்தியர்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்ப்பதில்லை. இது வெளிக்காட்டாத பக்க வாதத்திலிருந்து (Silent Stroke) வேறுபட்டது. வெளிப்படையாக எந்தவித அறிகுறிகளுமற்ற போதும் CT Scan செய்து பார்க்கும் போது மூளையில் பாதிப்புகள் ஏற்பட்டது தெரிய வருவதையே ‘வெளிக்காட்டாத பக்க வாதம்’ என்கிறோம்.

‘நிச்சமற்ற அறிகுறிகளாக இருப்பதாலும், வெளிப்படையான பாதிப்புகள் அதிகம் இல்லாததாலும் முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, வீண் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டியதும் இல்லை’ எனச் சில மருத்துவரகள் கருதுகிறார்கள். ஆயினும் ‘பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, அறிவார்ந்த செயற்பாடுகள் பாதிப்புறுகின்றன, மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனவே இது வெளிக்காட்டாத பக்க வாதத்தை ஒத்ததாக இருக்கலாம்’ என கருதுகிறார் டொக்டர் ஜோர்ஜ் ஹொவேட்.

அதாவது CT Scan போன்ற மேலதிக பரிசோதனைகளைச் செய்தால் தான் தெரியவரும்.அத்துடன் இது சிறிய அளவிலான பக்கவாதமாக இருக்கக் கூடம் என்பதும், அவ்வாறாயின் அத்தகையவர்களுக்கு பெரியளவிலான பக்கவாம் வருவதற்கான சாத்தியங்களும் அதிகம் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

முணுமுணுக்கும் பக்கவாதம், வெளிக்காட்டாத பக்க வாதம், சிறிய அளவிலான பக்கவாதம் போன்றவை வந்தவர்கள் தங்களது அறிகுறிகளை அலட்சியம் செய்வது புத்திசாலித்தனமானது அல்ல. அவர்கள் தங்களது இரத்த அழுத்தம், இரத்த சீனி அளவு, இரத்த கொலஸ்டரோல் அளவு ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்து, அவை கூடுதலாக இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதன் மூலமும் எதிர்கால ஆபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

பக்கவாதத்தினது அறிகுறிகள் அல்லது பக்கவாதம் வருகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

திடீரென முகம், கை, கால் ஆகியவற்றில் தோன்றும் விறைப்புத்தன்மை அல்லது செயலிழப்பு மிக முக்கியமான அறிகுறியாகும். பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இது தோன்றுவதுண்டு.

திடீரென ஏற்படும் மாறாட்டம் மற்றும் பேசமுடியாதிருப்பது, மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிரமப்படுவது, சடுதியாக ஏற்படும் பார்வைக்கோளாறு அல்லது முற்றாக பார்வைத் திறனை இழத்தல் இன்னுமொரு முக்கிய அறிகுறியாகும். ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் இது தோன்றலாம்.

சடுதியாக ஏற்படும் வேறு அறிகுறிகளான நடப்பதில் சிரமம், உடற் சமநிலை தளம்புதல், ஈடாட்டம், தலைச்சுற்று, உடல் உறுப்புகளின் செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் சிரமம் ஆகியவற்றிற்கும் முணுமுணுக்கும் பக்கவாதமே காரணமாகலாம்.

காரணம் சொல்ல முடியாத மிகக் கடுமையான தலைவலி மற்றுமொரு முக்கிய அறிகுறியாகும்.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அவை மிகக் குறைந்த நேரம் மட்டுமே நீடித்தாலும் இலேசாக எடுத்து, கவனத்தில் கொள்ளாமல் விடவேண்டாம். உடனடியாக பாதிப்புற்றவர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

Source; American Health Association

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »

ஓளி மங்கி அரங்கம் இருளாகிறது. ‘எல்லாரும் ஒரு நிமிசம் கண்ணை மூடுங்க.. அப்படியே உங்க பள்ளிக் காலத்துக்கு போங்க.. ‘என்ற அறிமுக வசனம் காதில் கணீரென ஒலிக்கிறது.

ஆயினும் என் துடுக்குத்தனம் கண்களை மூடவிடவில்லை. இருந்தபோதும் அவ் வார்த்தைகளால் என் மனத்திலும் சில அதிர்வுகள் ஏற்படவே செய்தன. தங்கர் பச்சான் எங்களை வழமையான தமிழ் திரைப்படங்களில் இருந்து காப்பாற்றி ஒரு புது அனுபவத்திற்கு அழைத்துப்போவார் என்ற நப்பாசை கூடியது. அத்துடன் பள்ளிக்கூட அனுபவங்களைக் கொண்ட படம் என ஏற்கனவே வாசித்திருந்ததால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டது.

திரைப்படங்கள் பற்றி உங்களைப் போலவே எனக்கும் சில கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கவே செய்கின்றன. எமது ஆழ் மனத் தட்டுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் சில நெஞ்சுக்கு நெருக்கமான சுய அனுபவங்களை உயிர்த்தெழச் செய்யும் கலைகளும் இலக்கியங்களும் தான் நல்ல படைப்புகள் எனலாம். ஏனெனில் அவைதான் எமது உள்ளத்தோடு பேச வல்லவை. ஆனால் சினிமா என்று வரும்போது இவற்றிற்கு மேலாக அவை திரை மொழியைப் பேசுவனவாகவும் அமைய வேண்டும். எமது செவிப் புலனுடனும், கட்புலனுடனும் ஒரே நேரத்தில் பேசும் கலை வடிவம் என்பதால் காட்சிகளின் சட்டம், ஒளிச் சேர்க்கை, பின்னணி இசை, அவை யாவும் ஒருங்கிணைந்து எம்மை ஒரு புள்ளியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும்.

ஆனால் பிரமிக்க வைப்பதுடன் வேகமாக நகரும் காட்சிகளும் ஒரு நேரத்தில் தனி ஒருவனாக 50 பேரை அடித்துத் துவைக்கும் ‘வீரமும்’ தான் இன்றைய பெரும்பாலான சினிமா இரசிகர்களின் கனவுலகமாக இருக்கிறது என்பது வேறு கதை.

இந் நிலையில் எமது மனத்தில் சில அருட்டல்களைக் ஏற்படுத்தும் படைப்புக்களாக வெளிவந்த ஆட்டோகிராவ், அழகி, அழியாத கோலங்கள் போன்றவை நாம் எல்லோரும் ஒரு காலத்தில் அனுபவித்த பள்ளிக் கால நிகழ்வுகளை கலை அழகோடு அள்ளிக் கொண்டு வந்தன. இப்பொழுது தங்கர் பச்சான் அத்தகைய பள்ளிப்பருவ நிகழ்வுகளின் களனான பள்ளிக் கூடத்தையே கதாநாயகனாக்கி ஒரு கலைப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்.

சிறப்பான பாராட்டத்தக்க முயற்சி. ஓவ்வொருவரும் தத்தமது பள்ளி நினைவுகளை அசை போட வைக்கிறது. அத்துடன் பள்ளியின் வளர்ச்சிக்கு நாமும் கைகொடுக்க வேண்டும் என்ற சிந்தனையையும் தெளித்து நகர்கிறது. ஆயினும் தனது படைப்பாக்க முயற்சியில் அவர் வெற்றி அடைந்திருக்கறாரா என்பது விவாதத்திற்கு உரியது.

பாராமரிப்பில்லாமல் இடிந்து விழும் நிலையில் இருக்கும் தங்களுடைய பள்ளியை இழுத்து மூடாமல் தடுப்பதற்கும், அதனைப் புதுப்பிப்பதற்காகவும் ஒரு விழா எடுப்பதற்கு ஊரார் முடிவெடுக்கிறார்கள். இதற்கான உதவிகளைப் பெறுவதற்காக தன்னுடைய பள்ளித் தோழனான நரேனைச் சந்திக்க பட்டணம் போகிறார் தங்கர் பச்சான். தங்கர் இல்லாமையிலும், உள்ளத்தில் கறையற்ற அப்பாவியாக, கிராமத்து விவசாயியாக வருகிறார். பட்டணத்தில் தங்களது இன்னொரு பள்ளிக்கூட நண்பனான திரைப்பட இயக்குனர் சீமானை தற்செயலாக இவர்கள் சந்திக்கிறார்கள். அதே பள்ளிக்கூடத்தில் ரீச்சராக இருப்பவர் சினேகா.

தங்கர், நரேன், சீமான், சினேகா ஆகியோரின் பழைய நினைவுகளாக பள்ளிக்காலச் சம்பவங்களும், இன்றைய நிகழ்கால நடப்புகளாகவும் காட்சிகள் மாறிமாறி அழகாக நகர்கிறன. கிராம நர்ஸாக ஸ்ரேயா ரெட்டி. இவர்களை ஓய்வு நேரங்களில் அழைத்து பாடம் சொல்லித் தருகிறார். மாணவர்களான இவர்களுக்கும் ஸ்ரேயாக்கும் இடையேயான அன்னியோன்ய உறவு சுவார்ஸமானது. திரைக்கதை பள்ளிவிழாவை நோக்கி நகர்கிறது. தங்கர் நரேனுக்கு கல்யாணமாகிவிட்டது என சிநேகாவிற்கு சொல்லியதால் கடைசியில் சிறு இழுவல் சஸ்பனஸ். ‘சுபம்’ ஆனாலும் திருமணத்தில் முடிக்காமல் ஒரு சற்று வித்தியாசமாகப் படத்தை முடித்திருக்கிறார் தங்கர்.

75 வயதென மூப்படைந்த பள்ளிக் கூடம் அது. வயது ஏற ஏற மனிதன் போன்ற உயிரினங்களதான் மூப்படைந்து தளர்ச்சியுறுகின்றன. நல்ல நிறுவனங்கள் காலத்தால் வலிமையுறுகின்றன. ஆனால் இந்தப் பள்ளிக் கூடத்திலோ மழை பெய்தால் வகுப்பறைகளுக்கு உள்ளேயே வெள்ளம் பாய்கின்றது. மாலையானால் மாடுகள் ஆசுவாசமாகப் படுத்து அசை போடுகின்றன. காலையில் அவற்றை விரட்டி சுத்தப்படுத்தித்தான் வகுப்புகளை ஆரம்பிக்க முடியும். இவ்வாறு நலிந்த நிலை. உடைந்து காரை பெயர்ந்த சுவர்கள், சிதைந்த ஓடுகள், எனக் கட்டிடமோ சிதிலமடைந்து கிடக்கிறது.

மழை பெய்யும் போது கூரை நீர் உள்ளே சிந்தி ஆவணங்களைச் சிதைப்பதைத் தடுக்கும் முயற்சியில் வாங்கு மேல் கதிரை போட்டு ஏறிநின்று ஓட்டையை அடைக்கும் முயற்சியில் ஆசிரியரும் மாணவர்களும் ஈடுபடும் காட்சியோடுதான் திரைப்படம் தொடங்குகிறது. பாடசாலையை இழுத்து மூட நினைப்பதற்குக் காரணம் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்தாலும் பள்ளியை நடாத்துகிற ஊர்ப் பெரியவருக்கு அதை பாராமரிப்பதில் உள்ள பொருளாதாரச் சுமையும் அசமந்தமும்தான்.

நல்ல கதை. ஆயினும்; குற்றம் சொல்ல முடியாதது அல்ல. எமது வாழ்வின் அத்திபாரமான கல்வியையும், அதை வழங்கும் பள்ளிக் கூடத்தையும் காட்ட முயலும் இப்படத்தின் பள்ளிக் காதலும் சுவார்ஸமானதுதான். ஆயினும் படத்தின் வேகம் குறைவு. பல இடங்களில் காட்சிப்படுத்தலில் கவனம் எடுக்காது வசனங்களில் தஞ்சம் புகுந்திருப்பதைப் பார்க்கும்போது தமிழ்ப்படங்கள் உன்னதத்தை எட்ட இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது புரிகிறது.

பல நெகிழ்வான காட்சிகள் உள்ளத்தை நெருங்கி வந்து அருட்டுகின்றன. டைரக்டர் சீமான் பாவித்துக் கழித்துவிட்ட உடைகளை தனக்கு என எடுத்து மடித்து வைக்கும் காட்சி நெகிழ வைப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைக்கிறது. மனிதர்களிடேயே ஏற்றத் தாழ்வுகள். ஆடம்பர உடைகளையே ஓரிரு தடவைகள் உபயோகித்து விட்டு கழித்துவிடும் மனிதர்கள் உள்ள உலகில் ஒரு கந்தல் துணிக்குக் கூட வக்கற்ற எத்தனை மனிதர்கள். ஒரு முறை சிறுநீர் கழித்துவிட்டு கழிவுப் கோப்பையைச் சுத்தம் செய்ய பல லீட்டர் சுத்தமான நீரை விரயம் செய்யும்போது, மலம் கழித்த பின் கழுவுதற்கு நீர் இல்லாமல் இலைச் சருகால் துடைத்துச் சுத்தம் செய்வதுடன் திருப்திப்பட வேண்டிய மனிதர்களும் வாழ்கிறார்கள்.

கலக்டர் அலுவலகத்திற்கு நரேனைச் சந்திக்க தங்கர் செல்லும் போது ஊர்ப் பணியாரங்களை மூட்டையாகக் கட்டிச் செல்வதும், அங்கு இளநிலை ஊழியர்களால் அவமானப்படுவதும், தகவல் அறிந்து நரேன் துடித்து ஓடிவருவதும் ரசிக்கத்தக்க காட்சிகள். காதலால் பட்ட அவமானத்தாலதான் ஊருக்கே போகாமல் இருக்கிறான் நரேன்.

நடிப்பைப் பொறுத்தவரையில் சிநேகா அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். நரேனுக்கும் இவருக்குமான பள்ளிக் காதல் சமூக ஏற்றத்தாழ்வு காரணமாக உறவினர்களால் நிஸ்டுரமாக நசுக்கப்படுகிறது. சிதைந்த காதலை மனத்தில் அடக்கிக் கொண்டு காத்திருக்கும் பெண்ணாக, பள்ளிக்கூடத்தின் நன்மைக்காக உறவினர்களுடனேயே போராடும் சமுதாய நோக்குள்ள பிரஜையாக, கிராமத்துப் பள்ளி ஆசிரியையாக அழுத்தமான நடிப்புடன் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறாhர். மேக்கப் இல்லாத நடிப்பு, அதிகம் பேசாத பாத்திரம்.

டைரக்டர் தங்கரை நடிகர் தங்கர் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார். அப்பாவிக் கிராமத்து விவசாசியான ஐயோடி குமாரசாமி அவருக்கென்றே அளவெடுத்த சட்டைபோன்ற பாத்திரம். நன்கு பொருந்திவிடுகிறது. கிராமத்து மருத்துவமாதாக ஸ்ரேயா ரெட்டி குறையின்றிச் செய்திருக்கிறார். நரேன் இன்னும் நிறைய முயற்சி செய்ய வேண்டும்.

‘மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம் . . .’ பாடல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இனிமையான இசையும், திரைப்படத்துடன் இணைந்து போகும் கருத்தாளமும் கொண்டதால் நிச்சயம் நீண்ட நாள் நினைவில் நிலைத்திருக்கும் என நம்பலாம். இசை பரத்வாஜ். ரசிக்க முடிகிறது. ஆயினும் காதலுடன் நின்றுவிடாமல் காமம் வரை செல்லும் மற்றொரு பாடல் காட்சி இப் படத்தில் இடம் பெறுகிறது. இப்படி ஒரு பாடல் காட்சி இத்தகைய படத்திற்கு அவசியம்தானா?

நாம் எல்லோரும் எமது பள்ளிகூடத்தையும் அங்கு படிப்பித்த ஆசிரியர்களையும், எல்லாவற்றிக்கும் மேலாக எமது பள்ளித் தோழர்களையும் உயிருள்ளவரை மறக்க மாட்டோம். அங்கு பெற்ற அனுபவங்கள் ஊனோடு கலந்து, உள்ளத்தில் ஊறித் திளைத்தவை. அவற்றை மீள நினைத்து இரைமீட்க வைத்த தங்கருக்கு எனது நன்றிகள். குறைகள் பல இருந்தபோதும் தங்கர் எங்களை முழுமையாக ஏமாற்றி விடவில்லை.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி- ஞானம்

Read Full Post »

>’தமிழ் மண்ணில் உடலரசியலின் மூன்றாம் பரிமாணம்.’ இது குட்டி ரேவதி எடுத்துக் கொண்ட ஆய்வுக் கட்டுரைக்கான தலைப்பு.

பெண் கவிஞர்கள் பெண் உறுப்புக்களை படிமங்களாக் கொண்டு எழுதும்போது அதைக் கொச்சைப்படுத்துகிறார்கள். சொந்த வாழ்வில் பாலியல் திருப்தி காணாதவர்கள் என அநாகரிமாகக் கூறுகிறார்கள். ஒரு கவிதையில் யோனி என்ற சொல் வருகிறது. ஆனால் கவிதையின் இறுதி வரிகளில் அது சடப் பொருளாக அல்லாமல் உயிருள்ள, அழகுள்ள, உணர்வுள்ள வண்ணத்துப் பூச்சியாக உருவகப்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம்.

உண்மையில் பெண்கள் தங்கள் பாடுகளைக் கூறவே பெண் உறுப்புக்கள் பற்றிப் பேசுகிறார்கள். ஆண்டாண்டு காலமாக அனுபவித்த அடக்குமுறையை காத்திரமாக எடுத்துக் காட்டவே இவ்வாறு பயன்படுத்துகிறார்கள். ஆண்களும் பெண் உறுப்புகள் பற்றிப் பேசாமல் இல்லை. அவர்கள் உடலுறுப்பை இன்ப நுகரச்சிப் பொருளாகவே பாரக்கிறார்கள் பெண் எந்தப் பிரச்சனை பற்றியும் எழுதக் கூடியதாக இருக்கிறது. ஆனால் பெண் உறுப்பைப் பற்றி எழுத முடியாது இருக்கிறாள். அப்படி எழுதினால் அவமானப்படுத்தப்படுகிறாள். இன்ரநெட், ஈமெயில், கற்பனை நேர்காணல் என பாலியல் ரீதியான உரையாடல்களால் அவமானப் படுத்துகிறார்கள். பல பிரபல ஆண் எழுத்தாளர்களும் இதில் அடங்குகிறார்கள். இது அவர்களின் உள்மன அரசியலை அப்பட்டமாக்குகறது.

இன்னொரு கருத்தையும் சொல்லலாம். ஆண்கள் பெண் உறுப்புகள் பற்றி ஒற்றைப் பரிமாண அர்த்தம் கொடுத்தே எழுதுகிறார்கள். ஆனால் பெண்களோ தங்கள் பாடுகளைக் கூற அவற்றிக்கு பல புதிய அர்த்தங்களைத் தேடுகிறார்கள். பல சாதாரணப் பெண்களுக்கு பெண் உறுப்பு மற்றும் பாலியல் பற்றிய தெளிவின்மையைத்தான் ஆண் ஆதிக்க சமுதாயம் விட்டுச் செல்கிறது. பெண் டாக்டரிடம் சென்றுதான் கேட்டறிய வேண்டியதாயுள்ளது.

இவையும் இன்னும் பல கருத்துக்களும் இவரால் முன் வைக்கப்பட்டன.

கொழும்பு பெண்கள ஆய்வு மையத்தில் ‘தேசியம், மதம், அரசியல், வாழ்வியல் போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் பெண்நிலைவாதம்’ என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு சென்ற கார்த்திகை 30, மார்கழி 01, 2007 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்வுகளில் மூன்று மணிநேரம் மட்டும் கலந்து கொண்டபோதே இக்கருத்துக்களை என்னால் கேட்க முடிந்தது.

மேற்படி ஆய்வுக் கட்டுரையின் முடிவில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் சபா ஜெயராசா உடல் அரசியல் என்பது பெண்களின் போராட்டத்தின் ஒரு வாயக்காலாக மட்டுமே உள்ளது. அதன் மூலம் மாற்றததைக் கொண்டு வர முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

மதுசூதனன் கருத்துக் கூறும்போது கவிதையில் பெண்மொழி பற்றி ஆழமான விமர்சனங்கள் வைக்கப்படாதது பெரும் குறை என்றார்.

இதனை ஒத்துக் கொண்ட ரேவதி ஒரிரு குறிப்புகள் தவிர ஆழமான விமர்சனங்கள் கூட ஆண் எழுத்தாளர்களால் வைக்கப்பட்வில்லை. மொழியில் ரீதியில் ஆய்வுகள் முன்வைக்கப்படவில்லை. நாங்களை எமது கவிதைகள் பற்றிப் பேச வேண்டியுள்ளது.

இந்த அரங்கு ச.ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. ஏனைய அரங்குகளுக்கு செல்வி திருச்சந்திரன், பத்மா சோமகாந்தன், சித்ரா மௌனகுரு ஆகியோர் தலைமைகளில் நடைபெற்றன.

ஏனைய ஆய்வுக் கட்டுரைகள்:-

காலக் கனவு: தமிழில் ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்- பொன்னி அரசு

தலித் பெண்நிலை பார்வையில் சாகித்திய ஆணாதிக்கம் மற்றும் அடையாள அரசியல்: இமையத்தின் சேடல் ஒரு விமர்சன வாசிப்பு- ச.ஆனந்தி

போரையையும் வன்முறையையும் பற்றி இலக்கியத்துக்கு ஊடான பெண்களின் எதிர்வனை- சித்ரா மௌனகுரு

முரண்படும் சமூகத்தில் தமிழ் எழுத்தின் இன்றைய பெண்நிலை வாதம்- திலகபாமா

பெண்- வெளிப்பாடு- இயக்கம்- மதுசூதனன்.

பெண்நிலை வாதமும் தேசியவாதமும்: ஈழத்துப் பத்திரிகை சர்ச்சைகளின் அடிப்படையில் சில அவதானிப்புகள்- செ.யோகராசா

உலகமயமாக்கலும் பெண்களும்- பவானி முகுந்தன்

பெண்களும் அனர்த்த முகாமைத்துவமும்- சே.அனுஸியா

குட்டி ரேவதியின் ஆய்வுக் கட்டுரையின் போதும் அது சம்பந்தமான கலந்துரையாடலின் போதும் மட்டுமே பிரசன்னமாக இருந்ததால் ஏனையவை பற்றிக் குறிப்பு எதுவும் தர முடியவில்லை.

மிக அமைதியாக ஆடம்பரமற்ற சூழலில் இக் கருத்தரங்கு நடைபெற்றது. குறைந்த அளவிலான ஆனால் மிகவும் காத்திரமான நபர்களின் பங்களிப்பும் கருத்துப் பரிமாறல்களும் நிகழ்வுக்கு கனதியைத் தந்தன. பயனுள்ள பொழுதாயிற்று.

Read Full Post »