>ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புத்தம் புது முயற்சிதான் உங்கள் கையில் ஒரு நூலாகத் தவழ்கிறது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக முற்போக்கு இலக்கியத்தோடும், இடதுசாரி அரசியலோடும் உறுதியாக நின்ற ஒருவரான நீர்வை பொன்னையனின் இலக்கியப் பங்களிப்பு முழுவதையும் கூறுகூறாக பரிசீலிக்க முயல்கின்ற முதல் முயற்சியின் பலனாக இது கைகூடுகிறது. புனைவின் மூலம் வாசகன் மனத்திற்குள் பயணித்து சமூகத்தை நேர்ப்படுத்த முடியும் என நம்பிய ஒருவரின் படைப்பாளுமையை விமர்சிக்கிற முயல்கிறது இந்நூல்.
இலக்கியமும் ஒரு நுகர்ச்சிப் பொருள்தான். ஆயினும் நாடகம், சினிமா, இசை போன்ற கலைப் படைப்புகள் அளவிற்கு இது ஜனரஞ்சனமானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமே. ஆயினும் ஒரு சமூகம் எழுச்சியுறும் காலங்களில் இலக்கியங்கள் மக்கள் மயப்பட வேண்டியது அவசியமாகிறது. காரணம் எந்த இலக்கியமும் ஒரு குறுகிய நுகர் வட்டத்திற்குள் நிற்கும்போது அதன் ஆற்றல் மட்டுப்படுகிறது.
ஒரு சமூகம் புதிய எல்லைகளை எட்ட முயலும்போதும், உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போதும், அல்லது அடிமைத்தளங்களை அறுத்து சுதந்திரத்தை வேண்டி நிற்கும்போதும், சமூக மேம்பாட்டில் அக்கறை உள்ள இலக்கியங்களை பொதுமக்கள் பரப்பிற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அதற்கான முயற்சிகளும் என்றும் இருந்து கொண்டே இருக்கிறன.
முற்போக்கு இலக்கியமானது இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவதற்கும், மக்களை இலக்கிய மயப்படுத்துவதற்கும் என்றுமே முன்னுரிமை கொடுத்து வருவதை அறிவோம். அவ்வாறு பொதுமைப்படுத்துவதற்கு மொழி சார்ந்த, இனம் சார்ந்த, பிரதேசம் சார்ந்த, தேசியம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
உலகளாவிய ரீதியில் மாக்ஸிம் கார்க்கி அத்தகைய ஆளுமை எனவும், பாரதியை தமிழ் நாட்டின் ஒரு முக்கிய ஆளுமை எனவும் உதாரணம் காட்டலாம். இவர்கள் ஒவ்வொரு உதாரணங்கள் மட்டுமே. இவர்கள் போன்ற பலரின் பங்களிப்புடனேயே இலக்கியங்கள் செழுமையுற்றன. இதேபோல ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பல இலக்கிய ஆளுமைகள் தமது ஆழமான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர். இவ்வாறு ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த ஆளுமைகள் எவை, அவை ஆற்றிய பங்களிப்பின் பெறுமதி எத்தகையது போன்ற விடயங்களில் விழிப்புணர்வு எம்மிடையே இருக்கிறதா? அவை பற்றிய ஆய்வு ரீதியான, கனதியான புலமை சார் கண்ணோட்டங்கள் காணவும் கிடைப்பதில்லை என்பதே நிஜமாகிறது.
வேறொரு கோணத்தில் நோக்குவோம். தமிழ் விமர்சனத் துறையை எடுத்துக் கொண்டால் நயத்தலிலும் உவத்தலிலும் மட்டுமே திளைத்துக் கிடந்த காலத்தில் அதனை மார்க்கஸியக் கண்ணோட்டத்தில் விஞ்ஞான ப+ர்வமாக அணுகுவதற்கு வழிகாட்டியவர்கள் நாம் பெருமை அடித்துக் கொண்டது உண்மையான போதும், அதற்கு பின்னர் ஒரு அடி கூட முன் எடுத்து நகர்வதற்கு நாம் முயலவில்லை என்பதும் மற்றொரு கசப்பான உண்மைதான். நீண்ட தேக்கத்தின் பின்னரும் கூட புதிய பார்வைகள், புதிய வீச்சுக்கள் அந்தி வானில் கூட தென்படவில்லை என்பது கவலைக்குரியது. எம்மிடம் விமர்சனம் இருக்கிறது. அவை பெரும்பாலும் ஒவ்வொரு தனித்தனிப் படைப்புகள் பற்றிய பதிவுகளாகவும் உரையாடல்களாகவுமே உள்ளன. படைப்பிலக்கியம், சினிமா, நாடகம், கவிதை போன்றவை பற்றியே பெருமளவு கண்ணோட்டங்கள் வெளியாகின்றன. வாசகர் நுகர்விலும், வெளியீட்டுப் பரப்பிலும் பெரும் இடத்தை அடக்கிக் கொள்ளும் கட்டுரை இலக்கியங்கள் பற்றிய மதிப்பீடுகள் கூட மிக அரிதாகவே வெளியாகின்றன.
இவற்றிற்கு மேலாக இலக்கிய ஆளுமைகள் பற்றிய பூரண ஆய்வுகள் இல்லை என்றே சொல்லலாம். தனித் தனி மரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஒழிய முழுமையாகத் தோப்பைப் பார்க்கவோ ரசிக்கவோ எமக்குத் தெரியவில்லை. யானை பார்த்த குருடர்களாகத் திருப்தியடைந்து விடுகிறோம். அதாவது ஒரு படைப்பாளியின் ஒட்டுதொத்த படைப்புகளையும் ஒருங்கு சேர்த்துப் பார்த்து, அவரின் படைப்பாற்றலையும் சமூக அரசியல் பங்களிப்புகளையும் விமர்சிக்கும் கலை எங்களுக்கு இன்னமும் கை கூடவே இல்லை. ஒருவரின் கதையையோ, கவிதையையோ, நாவலையோ விமர்சிப்பதுடன் அல்லது பாராட்டுவதுடன் நாம் நின்றுவிடுகிறோம், ஒப்பீட்டு விமர்சனம் கூட இங்கு வளர்ச்சியுறவில்லை. மணிவிழா மலர்களின் வெற்று வார்த்தைப் புகழ்ச்சிகளும், பொன்னாடை போர்த்தும் நிகழ்வின் புகழாரங்களுமே எஞ்சி நிற்கின்றன.
ஆனால் தமிழ் நாட்டில் இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் நம்பிக்கை ஊட்டுவதுடன் முன்நகர்ந்து செல்வதாகவும் உள்ளது. 1975 லிலேயே பொதிகைவெற்பன் புதுமைப்பித்தன் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இலக்கியச் சிந்தனை அமைப்பு 1987 முதல் வருடப் பிறப்பிற்கு முதல் நாளில் இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வு நூல்களை வெளியிட்டு வந்திருக்கிறது. கு.அழகிரிசாமி, சிதப்பரசுப்பிரமணியன், ஜெகசிற்பியன், கு.பா.ரா, கரிச்சான் குஞ்சு, பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, மௌனி, திலீப்குமார் ஆகியோர் பற்றிய நூல்கள் வெளியாகியுள்ளன. காவ்யா 90களில் வெளியிட்ட ‘கநாசு வழித்தடங்கள்’ என்ற நூலில் அவர் பற்றி தமிழவன், ஞானி, பிரமிள் முதலான ஐவரின் விமர்சனப் பார்வைகள் அடங்கியிருந்ததாக ஞாபகம். இதேபோல புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மௌனி, நகுலன், போன்ற பலரது படைப்புலகங்களும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தனித்தனி நூல்களாக காவ்யாவால் வெளியிடப்பட்டிருந்தன. இவை ஒருவர் பற்றிய பலரது பார்வைகளின் திரட்டுக்களாகும். இதற்கு மாறாக ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை ஆழ்ந்து நோக்கும் நூல்களும் வெளியாகியுள்ளன. உதாரணமாக சுந்தர ராமசாமி, ஜீவா மற்றும் சி.சு.செல்லப்பா பற்றியும், அதேபோல ஜெயமோகன் சுந்தர ராமசாமி மற்றும் ஜெயகாந்தன் பற்றியும் எழுதிய நூல்களை உதாரணங்களாகக் கூறலாம்.
ஆனால் இங்கு அத்தகைய முயற்சிகள் எழுந்ததாகத் தெரியவில்லை. இந் நிலையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியாக விபவி கலாசார மையம் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பற்றி தொடர்ச்சியான ஒரு ஆய்வை நடாத்தியமை முக்கியமான திருப்பம் எனலாம். இது பற்றி “ஒரு குறித்த படைப்பாளியின் படைப்பு ஆளுமையைப் பல நிலைகளில், பல கோணங்களில் ஆய்வு செய்யும் நோக்குடன் இலங்கை முற்போக்கு கதை இலக்கியப் பேரவையும், விபவி கலாசார மையமும் இணைந்து ஒரு தொடர் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடாத்தி வந்துள்ளது” என நீர்வை பொன்னையன் ‘முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச் சுவடுகள்’ என்ற நூலின் தொகுப்புரையில் கூறுகிறார். அக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச் சுவடுகள்’, ‘முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள்’ என இரு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
நீர்வை பொன்னையன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். அதன் வளர்ச்சிக்கு ஆரம்ப காலம் முதலே உரம் ஊட்டியவர்களில் முக்கியமானவர். ஆயினும் தனது படைப்புகளுடாக அன்றி சில்லறைச் சலசப்புகளுடாக தன்னை முன்னிலைப்படுத்த முனையாத பண்பாளர். இவரது ஜந்து சிறுகதைத் தொகுப்புகளும், கட்டுரைத் தொகுதி ஒன்றும், இவரால் மீள மொழியப்பட்ட உலகத்து நாட்டார் கதைத் தொகுதி ஒன்றும் வெளியாகியுள்ளன. விபவி கலாசார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராக அண்மைக் காலம் வரை கடமையாற்றியதுடன், இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் செயற்படுகிறார்.
“பொன்னையன் நீண்டகாலமாக, காலமாற்றங்களுக்கும், கருத்து காலமாற்றங்களுக்கும் முகம் கொடுத்து அவ்அவ் காலப்போக்குகள் யாவற்றையும் அவதானித்து அவை பற்றி எழுதி வந்துள்ளார் என்பதும், எழுதுவதை இடைநிறுத்தவில்லை (அல்லது வற்றவில்லை என்பதும்) என்றும் மேலாகத் தான் வரித்துக் கொண்ட நிலை மாறாது அல்லது சமரசம் செய்யாது கடந்த நாலரை தசாப்தங்களாக இயங்கி வந்துள்ளார் என்பதும் புலனாகிறது” என அவரைப் பற்றி கலாநிதி வ.மகேஸ்வரன் பதிவு செய்துள்ளதையும் குறிப்பிடலாம்.
இலக்கியம் என்பது மொழியால் ஆனது. ஆனால் மொழியப்படுவாது அனைத்தும் இலக்கியம் ஆவது இல்லையே. மொழி என்பது வெறும் வெளிப்பாட்டுச் சாதனம். ஒருவரின் கருத்தை மற்றவருக்கு கொண்டு செல்லும் சாதாரண ஊடகம். ஆனால் கருத்தைக் கனதியாகவும், இனிமையான சங்கீதம் போல நளினமாகவும், மற்றவர் மனத்தை ஊடுருவித் திளைக்க வைப்பதாகவும் வார்க்கும்போது அது இலக்கியமாக வியாபகம் பெறுகிறது. நீர்வையின் கருத்துக்கள் பலமானவை. இலட்சிய வேகம் கொண்டவை. அவற்றை மற்றவர்களுக்குக் கடத்தும் அவரது மொழி வளம் தீர்க்கமானது, சொற்செட்டுக் கொண்டது. நளினமும் வசீகரமும் இணைந்து வருவன. இதனால் அவரால் வாசகன் மனத்தைச் சொற்களால் திறக்க முடிகிறது.
நீர்வையின் படைப்புலகை பல்வேறு கோணங்களில், பல்வேறு நிலைப்பட்டவர்கள் கணித்த கருத்துக்கள் இந்நூலை அலங்கரிக்கின்றன. பத்துக் கட்டுரைகள் இதில் அடங்குகிறன. அவரது பரந்த படைப்புலகை முழவதையும் கலாநிதி வ.மகேஸ்வரன், பூரணமாக ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது முற்கூறிய கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரையின் விரிவாகும்.
அமரர் வ.ராசையாவின் ‘நீர்வையின் படைப்புத் திறன் எட்டியுள்ள புதிய திறன்’ என்ற ஆய்வுக் கட்டுரையானது நீர்வையின் ‘வேட்கை’ என்ற சிறுதைத் தொகுப்பை முன்நிறுத்தி எழுதப்பட்டது. மிகுந்த ரசனை உணர்வுள்ள ராசையா மாஸ்டர் நீர்வையின் படைப்புகளின் உருவம் உள்ளடக்கம், பாத்திர வார்ப்பு, மொழித்திறன், பெண் பாத்திர இயல்புகள், போர்க் காலப் படைப்புகள், அவரது படைப்புகள் சொல்லும் அரசியல் என பல திசைகளிலும் தனது கூர்ந்த அவதானிப்பை முன் வைக்கிறார்.
நீர்வையின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ பற்றி, சுமார் நாற்பத்து மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டாம் தொகுப்பு வெளிவந்த நேரத்தில் மொழியப்பட்ட கட்டுரை எம்.கே.முருகானந்தன் அவர்களது ஆகும். சிறுகதை இலக்கியம் இலங்கையில் வளர்ச்சியுற ஆரம்பித்த காலங்களிலேயே, சிறுகதை என்ற இலக்கியத்தின் வடிவம் பற்றிய பிரக்ஞையும் அதன் பல்வேறு படைப்பு முறைமைகள் பற்றியும் தெளிவான சிந்தனையும் உள்ளவராக நீர்வை இருந்தார் என்பதை அவரது படைப்புகளிலிருந்தே உதாரணங்களோடு எடுத்துக் காட்டும் கட்டுரை இது. அவர் எடுத்தாண்ட பல்வேறு சிறுகதை உத்திகள், வடிவங்கள், பரீட்சார்த்த ரீதியான படைப்புகள் ஆகியவை பற்றியும் சுருக்கமாகக் கூறுகிறது.
மேற் கூறிய கட்டுரைகள் இரண்டும் ஒவ்வொரு தனி நூல்களில் சஞ்சரித்து கருத்துக் கூற முனையும் போது, முனைவர் பா. மதிவாணன் (தமிழ் இணைப் பேராசிரியர், கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்) ‘பாதை’, ‘வேட்கை’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளின் ஊடாக நீர்வை பொன்னையனின் படைப்புலகத்தைப் பார்க்க முயல்கிறார். இக் கட்டுரை தமிழ்நாடு என்.சீ.பி.எச் வெளியீடான ‘ஆய்வு நோக்கில் அயல்நாட்டுத் தமிழ்ச் சிறுகதைள்’ என்ற நூலில் வெளியானது.
நீர்வையின் ‘பாதை’ தொகுதியில் உள்ளடங்கிய சிறுகதைகள் நீர்வை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகவும் அதன் கட்சி வார இதழ்களான ‘தேசாபிதானி’, ‘தொழிலாளி’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிய காலத்தில் எழுதப்பட்டவையாகும். இதனால் போலும் 70களில் எழுதப்பட்ட சிறுகதைகளை ‘வாய்ப்பாட்டு’ சிறுகதைகள் என வரையறுக்க முனைவர் முயல்கிறார். தான் பற்றிக் கொண்ட கொள்கை வழி நின்று அதனைப் பரப்ப முயன்ற காலை எழுதப்பட்ட ‘கட்சி இலக்கியம்’ ஆகும் அவை என்பதை தொகுப்பாளர் என்ற ரீதியில் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளேன்.
முனைவர் பா. மதிவானனின் கூற்றிற்கு நேர் எதிரான கருத்தை ந.இரவீந்திரன் ‘நீர்வையின் படைப்புகளும் ஏனைய முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளும் ஒப்பீடு’ என்ற தனது கட்டுரையில் சொல்கிறார். நீர்வையின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பான ‘நீர்வை பொன்னையன் கதைகள்’ பற்றிய ஆய்வின் போது ‘… தொகுப்பில் கட்சி இலக்கியச் சிறுகதைகள் எதுவும் இடம் பெறாதது துரதிஸ்டம்… நீர்வையின் தனித்துவப் பங்களிப்பு என்ற வகையில், ஒரு கட்சி இலக்கியப் படைப்பாவது இடம் பெற்றிருந்தால் இத் தொகுப்பு மேலும் செழுமைப்பட்டிருக்கும்’ என்றும், ‘… கட்சி இலக்கியம் என்பது பெரும் கூச்சம் ஒன்றை உணர்துவதாகக் கருதப்படல் கூடாது. அப்படி ஒரு இலக்கியம் அமைந்துள்ளதைக் கவனிப்பது அவசியம், அவ்வளவே.’ என்றும் ந.இரவீந்திரன் கூறுவது ஊன்றிக் கவனிக்கத்தக்கது.
மேற் கூறிய ‘நீர்வை பொன்னையன் கதைகள்’ என்ற நூலில் பொன்னையன் இற்றைவரை எழுதிய 60க் மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட 23 படைப்புகள் அடங்குகின்றன. இந் நூலின் வெளியீட்டு விழாவின் போது அத் தொகுப்பில் அடங்கிய சிறுகதைகளை மையப்படுத்தி 5 விமர்சகர்கள் நீர்வையின் படைப்புலகை வௌ;வேறு கோணங்களில் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. ஏனெனில் அவை நீர்வையின் படைப்புக்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுக்கு எடுக்காத போதும் அவரின் முக்கிய படைப்புக்களை ஒட்டு மொத்தமாகப் பார்பதால் அவரது படைப்புலகின் பரப்பளவை அளந்து செல்வதாகக் கொள்ளலாம்.
தேவகௌரி நீர்வையின் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் பற்றி ஆய்வு செய்கிறார். இதனை அவர் இரண்டு வகைகளில் செய்ய முயன்றுள்ளார். முதலாவதாக அவரது பெண் பாத்திரங்களுடாகப் பார்ப்பது. இரண்டாவதாக பெண் பற்றிய எத்தகைய கருத்தாக்கங்கள் அவரால் முன்வைக்கப்படுகின்றன என்பது. ‘பெண் என்றாலே உடலாகப் பார்க்கும், அதிலிருந்து விம்பம் அமைக்கும் தன்மைகள் இல்லாது எல்லோருக்கும் சமூக நீதி, நியாயம், நேர்மை, அன்பு என்பன பொது ஒழுங்கங்களாக்கப்பட்ட கதைகள் அவை’ எனச் சிலாகித்து கூறுகிறார். அதாவது பெண்ணிற்கு மட்டும் கற்பு, கண்ணியம், அடக்கம் போன்ற ‘பெண்ணின் உடல் சார்ந்த ஒழுக்கத்தை மையப்படுத்திய கதைகள் இல்லை என்பது சாஸவதமானது’ எனக் கூறுகிறார். நீர்வையின் தலைமுறை சார்ந்த எழுத்தாளத் தலைமுறையினருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் முற்போக்கான பெண்நிலை சார்ந்த கருத்தெனக் கொள்ளலாம்.
கலாநிதி வ.மகேஸ்வரனது கட்டுரை நீர்வையின் படைப்புகளில் உருவமும் உள்ளடக்கமும் என்பதாகும். நீர்வைக்கு ‘கரு தொடர்பான சிரமம் அதிகமாகத் தெரியவில்லை’ என்று ஆரம்பித்து இவரது படைப்புகளில் உள்ள அழகியல் அம்சங்களை கதையின் அளவு, கட்டுக்கோப்பு, கதைகளை ஆரம்பிக்கும் அழகு, கலாபூர்வமான முடிவுகள், மொழி ஆற்றல், படிமங்களைக் கையாளும் ஆற்றல், புத்தம் புதிய உவமைகள், பேச்சு வழக்கு என மிகவும் நுணுக்கமாக புலமைசார் அறிவுப் பின்னணியல் ஆய்ந்துள்ளார். ‘படைப்பாற்றலில் அழகியல் எனும்போது அவர் அச்செயன் முறையிலும் அவதானமாகவே இயங்கியுள்ளார்’ எனக் கட்டுரையை நிறைவு செய்வது கவனத்தில் கொள்ளத்தக்கது.
சிவா சுப்பிரமணியம் ‘நீர்வை பொன்னையயின் கதைகளில் சமூகமும் அரசியலும்’ பற்றி ஆய்வுக் கட்டுரை. ‘மார்க்சியவாதியான பொன்னையன் அச் சித்தாத்துக்கூடாகவே சமூகத்தைப் பாரக்கிறார் அந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சமூக முன்னேற்றத்திற்கான வழியைக் காட்டுகிறார்’ என அடித்துக் கூறுகிறார். ‘இலக்கியம் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும், அதன் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டவேண்டும், அதை அகற்றுவதற்கான முயற்சிகளையும் சித்தரிக்க வேண்டும்.’ அதைத்தான் நீர்வையின் படைப்புகள் செய்கின்றன எனத் தெளிவாகக் கூறுகிறார்.
தெ.மதுசூதனின் கட்டுரை நீர்வையின் ‘பாத்திரப் படைப்பு’கள் பற்றி அலசுகிறது. அவரது இலட்சிய நோக்கு படைப்பின் உள்ளியக்கத்தின் ஆற்றுப்படுத்தலாக எவ்வாறு மேவுகிறது என்பதை சில சிறுகதைகளிலிருந்து உதாரணம் காட்டுகிறார். “கதையும் பாத்திரமும் நீர்வை வரித்துக்கொண்ட சிந்தனையின் முறைமைக்கு உட்பட்டவை. இதைத்தான் நீர்வை தனக்கான அடையாளங்களாக மீளக் கட்டமைக்கிறார்.” என்பது அவரது அவதானிப்பாக உள்ளது. மேலும் “நீர்வையின் பாத்திர வாரப்பும் கதைக்களமும் விரிவானது, பன்முகச் சாயல் கொண்டது … ” என சிலாகிப்பதுடன் நின்றுவிடாது, இறுதியில் “சிறுகதையின் இலக்கியப் பண்புகள் தொடர்ந்து மேலும் ஆட்சி செலுத்தியிருந்தால் சிறுகதை இலக்கிய வகைமையின் கூர்மையான அம்சங்கள், பண்புகள் உள்வாங்கப்பட்டிருக்கும்” என விமர்சிக்கிறார்.
பாத்திரப் படைப்புகள் பற்றிய மதுவின் கருத்தாடலைத் தொடர்ந்து திக்குவலைக் கமாலின் அதே தலைப்பிலான கட்டுரையைப் பார்ப்பது சுவாரிஸமானது. திக்குவலைக் கமால் ‘வேட்கை’ சிறுகதைத் தொகுதியை முன் வைத்தே நீர்வையின் பாத்திரப் படைப்பு பற்றிப் பேசுகிறார். “ கதைப் புலங்கள் யாவும் யதார்த்தபூர்வமாக இருப்பது போலவே, எல்லாக் கதா பாத்திரங்களும் உண்மையானவர்களாக இயங்குகின்றனர். ஒரு கணப்போழுது வந்து போகும் பாத்திரம் கூட இதற்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை” என்கிறார். மேலும்“ கதாசிரியர் காட்டுகின்ற அந்தக் கிராமிய உலகிலே, பல்வேறு வகைமாதிரியான மனித உணர்வுகளையும் கொண்டியங்கும் கதாமாந்தர்களைக் காண முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அப்பாத்திரங்கள் வாசகனையும் அரவணைத்துக் கொண்டு இயங்குவது போலவும் தெரிகிறது” என நயந்து கூறுகிறார்.
மேற் கூறிய ஐந்து கட்டுரைகளும் நீர்வை பொன்னையன் கதைகள் என்ற நூல் பற்றிய ஆய்வரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளாக இருக்க, பேராசிரியர்கள் சபா ஜெயராசாவும், அருணாசலமும் அதே நூலை முன்வைத்து நீர்வையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளைத் தருகிறார்கள்.
பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை ‘நடப்பியலும் நீர்வையின் சிறுகதைகளும்’ என்பதாகும். நடப்பியல் (Realism) என்றால் என்ன?, அதன் கூறுகள் எவை, அது ரொமான்டிசம், கிளாசிசம் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?, நடப்பியலில் அழகியல் போன்ற பல விடயங்களை மிக ஆழமாக, பொருத்தமான கலைச் சொற்களுடன் புலமைப் பின்புலதில் எடுத்தியம்பி நீர்வையின் படைப்புலகு எவ்வாறு அதனுள் பொருந்தி வருகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார். ‘நடப்பியலைச் சிக்கனமான சொற் கட்டுமானங்களுக்கள் கொண்டு வரும் சிறுகதையாளர் வரிசையில் நீர்வை பொன்னையன் தனித்துவமானவர்’ என்பது அவரது கணிப்பில் அடங்குகிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மட்டுமின்றி இலக்கிய மாணாக்கர்களுக்கும் மிகவும் பயன்படக் கூடிய அரிய கட்டுரை இதுவாகும்.
பேராசிரியர்.க.அருணாசலம் ‘நீர்வை பொன்னையனின் கதைகளில் மனிதநேயம்’ பற்றி எழுதுகிறார். நீர்வை சித்தரிக்கும் பாத்திரங்கள், அவற்றின் பின்புலம், அங்கு மக்கள் படும் துன்பங்கள், அடக்கு முறைகள் பற்றியும் அவற்றை நீர்வை எப்படி மனிதநேயத்துடன் அணுகுகிறார் என்பதை மிகவும் எளிமையான தமிழில் எல்லோரும் சிரமம் இன்றிப் புரியும்படி சொல்லியிருக்கிறார்.
மேற்படி தொகுப்பு நூல் பற்றி கார்த்திகாயினி சுபேஸ், வசந்தி தயாபரன் ஆகியோர் பத்திரிகைகளுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரைகளும் இந் நூலில் அடங்குகின்றன. “மனித மனங்களின் உணர்வலைகளை எழுத்துக்களாக்கி உணர்ச்சிபூர்வமாகப் படைக்கும் திறனை ஆசிரியரிடத்தே காணமுடிகிறது. இதனால் கதையில் உயிரோட்டம், யதார்த்தம் என்பன ஒன்றிணைந்து கதையோடு ஒன்றச் செய்துவிடுகிறது” என்கிறார் கார்த்திகாயினி சுபேஸ். “கதைகளின் மண் வாசனையும் பண்பாட்டு அம்சங்களும் தாய்மடியில் இருக்குமாற் போன்ற சுகானுபவம் தருவன. நீர்வை மனநெகிழ்ச்சியுடன் எழுதுவார். அதே சமயம் சிறுமைகளைச் சாடி வார்த்தைகளால் சுடுவார். குடும்ப உறவுகளின் பிணைப்பு, தெறிப்பு, சமூகத்தின் பொய்மை, போலகள், மானிடத்தின் அடக்குமறைகள், எழுச்சிகள் இவை நீர்வையின் பாடுபொருட்கள். அங்கு நாம் காண்பவை எமது சொந்த முகங்கள்” என்கிறார் வசந்தி தயாபரன்.
அவரது படைப்புலகு முழுவதையும் ஒட்டுமொத்த ஆய்வுக்கு உள்ளாக்குவதால் நூலின் சிகரக் கட்டுரையாக இடம் பெறுவது கலாநிதி மகேஸ்வரனின் ‘படைப்பு- பதிவு- பிரசாரம் நீர்வை பொன்னையனின் சிறுகதைகளை முன்நிறுத்தி’ என்பதாகும். நீர்வை பொன்னையனின் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் ஒன்று சேர்த்து நோக்கி தனது ஆய்வுப் பணியின் கனதியுடன் அவதானிப்புகளாக முன் வைக்கிறார். நீர்வையின் எழுத்துப்பணி;யை பிரவேச காலம், இயங்கு காலம், பின்னைய காலம் என மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து அவரது படைப்புலகை அளக்க முற்படுகிறார்.
மேலும், அவரது படைப்புகளை தொழிலாளர் பிரச்சனை, விவசாயம் மற்றும் நிலம் சார்ந்த பிரச்சனை, சாதீயம், இனப்பிரச்சினை, ஏனைய பிரச்சனைகள் எனப் பொருள் அடிப்படையிலும் வேறொரு கோணத்திலும் ஆய்வு செய்கிறார். இவற்றிற்கு மேலாக அவரது படைப்புகளின் படைப்பாக்க முறைமைகள், நடை, மொழி ஆற்றல், போன்ற கலை அம்சங்களையும் ஆராயத் தவறவில்லை.
இவை யாவும் நீர்வை பற்றிய அவரின் படைப்புலகம் சார்ந்த அதாவது அவரது சிறுகதைகளை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகளேயாகும். பொன்னையன் பேனாவை ஆயுதமாகக் கொண்ட ஒரு படைப்பாளி தனது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக சகல வழிகளையும் வசப்படுத்தி முன்நகர்வார் என்பது தெரிந்ததே.
இந்த வகையில் அவரது ஏனைய இலக்கிய முயற்சியான அவரால் மொழியப்பட்ட உலகத்து நாட்டார் கதைகள் என்ற நூலும் பலரால் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மூதறிஞரும் கவிஞருமான முருகையன் அந் நூலுக்கு எழுதிய முன்னுரையானது விமர்சனம் அல்லவென்ற போதும் ஒரு முக்கியமான பதிவாகும். அதேபோல க.சண்முகலிங்கம் “மக்கள் இலக்கியம் என்னும் இலக்கியக் கோட்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்த நீர்வை பொன்னையன் நாட்டார் இலக்கியத்தின்பால் அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது வியப்புக்குரியது அல்ல” என எழுதுகிறார். எம்.கே.முருகானந்தன் “ .. புத்தாக்கங்களுக்கு ஒதுக்க வேண்டிய அரிய நேரத்தை, இத்தகைய தமிழில் மீள்மொழியும் பணிக்கு அளித்த தன்னலங்கருதா முயற்சிக்கு நாம் கடமைப்பட்டு நிற்கிறோம்” என்கிறார்.
‘நாம் ஏன் எழுதுகிறோம்’ அரசியல், கலை இலக்கியக்; கட்டுரை நூலை தெ.மதுசூதனன் விமர்சிக்கிறார்.
‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’ என்ற, சர்வதேச பிரபல்யம் பெற்ற பத்து முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களை அறிமுகம் செய்யும் நீர்வையின் தொகுப்பு நூல் பற்றி திரு சிவா சுப்பிரமணியம் ‘முற்போக்கு இலக்கியத்தின் அனுபவத் தடங்கள்’ என்ற தலைப்பில் விமர்சிக்கிறார். “பத்து முற்போக்கு எழுத்தானர்களும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் எத்தகைய பிர்ச்னைகளுக்கு முகம் கொடுத்தார்கள் அவற்றை எவ்வாறு சமாளித்துச் முன்னேற்றத்திற்கான தங்கள் பங்களிப்பைச் செலுத்தினார்கள்” போன்ற விரிவான தகவல்களை நீர்வை தந்திருப்பதைச் சிலாகிக்கிறார்.
இவற்றிற்கு அப்பால் சிந்திக்கும்போது இலக்கியம் தவிரவும், தனது தொழில் முயற்சி, மேடைப் பேச்சு, மற்றும் ஏனைய செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தே லட்சியப் பாதையில் சென்றிருப்பார் என்பது தெளிவு. இவ்வாறு நோக்கும் போது இவரது கல்விக் காலம், தொழிலற்ற இளைஞனாயிருந்த காலப்பகுதி, கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியம், ‘தேசாபிமானி’, ‘தொழிலாளி’ ஆகிய கட்சிப் பத்திரிகையின் ஆசிரிய குழுப்பணி, திரைப்படக் கூட்டுத்தாபனப் பணி, விபவி மாற்றுக் கலாசார மையம் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான பணி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாகவும் இலங்கை முற்போக்கு கதை இலக்கியப் பேரவை ஊடாகவும் ஆற்றிய பணிகள் போன்ற பலவும் விமர்சனத்திற்கு உட்படாமல் இருப்பது புரிகிறது.
மேலும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் பல, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு தேவைகளுக்காச் செய்யப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமின்றி, நூல் அறிமுகக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், ரசனைக் கட்டுரைகள், பத்திரிகை விமர்சனம், நூல் முன்னுரை எனப் பல வகைப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகிறது. இதனால் இதனை முழுமையான ஆய்வு நூல் எனக் கொள்ள முடியாது என்பது உண்மையே. தொகுப்பு நூல் என்பதால் பல கருத்துக்களும், விடயங்களும் மீளச் சொல்லப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே நபரினால் அல்லது ஒரு குழுவினால் முழுமையான ஆய்வும் செய்யப்பட்டிருந்தால் கருத்தொருமைப்பாடு இருந்திருக்கும். மீள்மொழிவு தவிர்க்கப்பட்டிருக்கும், பல விடயங்கள் ஆய்வுக்கு அகப்படாமல் தப்பித்திருப்பதற்கான வாய்ப்பு குன்றியிருக்கும். தெளிந்த முடிவுகள் சாத்தியப்பட்டிருக்கும் என்பன உண்மையே. இத்தகைய குறைபாடுகள் உள்ள போதும் நூறு பூக்கள் மலர்ந்து கதம்ப மணம் வீசும் மலர் வனம் போன்ற நிறைவை இத் தொகுப்பு கொடுக்க முயல்கிறது என்பதும் உண்மையே.
இது முதல் முயற்சி மட்டுமே. மேலும் பல நிறைவான இத்தகைய நூல்களின் வரவிற்கு இது வழிவகுக்குமே ஆயின் அதுவே போதுமானது. இந் நூலுக்கான தொகுப்புரையை எழுதக் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கான வாய்ப்பைத் தந்த நீர்வைக்கும், இலங்கை முற்போக்கு கதை இலக்கியப் பேரவைக்கும் எனது நன்றிகள்.
எம்.கே.முருகானந்தன்
நீர்வை பொன்னையன் இலக்கியத் தடம் என்ற நூலுக்கு எழுதப்பட்ட தொகுப்புரை இது.
Read Full Post »