Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2008

>

‘இந்தக் கால் புண் கனநாளாப் பிரச்சனை குடுக்குது. எவ்வளவு நாள் மருந்து கட்டியும் மாறயில்லை. எவ்வளவு மருந்து சாப்பிட்டும் பிரயோசனமில்லை.’ அவருக்கு நீரிழிவு இருப்பது எனக்குத் தெரியும். அது பற்றி விசாரித்தேன்.

‘பத்து வருசமா இருக்கு. முந்தி கொஞ்சம் கவனம் இல்லைத்தான். இப்ப ஒரு வருசமா நல்ல கொண்ரோல். பிளட் சுகர் வலு நோர்மலா இருக்கு’ என்றார். ‘எவ்வளவு நோர்மலா வைச்சிருந்தும் புண் காயுதில்லையே’ சலிப்பு வார்தைகளாகச் சிந்தியது.

உண்மைதான்! இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாக இருக்கும் பல நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் சுலபமாகக் குணமாகிவிடுகின்றன. ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவை மிக அக்கறையோடு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பலரின் புண்கள் மாதக்கணக்கில் மாறாது தொல்லை கொடுக்கன்றன.

இது ஏன்? இரத்தத்தில் சீனி அதிகரிப்பதால் புண்கள் ஆறாதிருக்கும் நிலை உடனடியாக ஏற்படுவதில்லை. அது தொடர்ந்து அதிகரித்திருக்கும் போது, உடலில் படிப்படியாக தோன்றும் பல்வேறு பாதிப்புகளால்தான் புண்கள் ஆறாத நிலை ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளர்களின் புண்கள் காயாதிருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணமானது அவர்களது கால்கள் நீரிழிவு நோய் காரணமாக மரத்துப் போவதாகும். நரம்புகள் பாதிப்புறுவதால் அவற்றின் செயற்திறன் குறைந்து கால்களில் உணர்வு குறைந்து போகும். ஆரம்ப கட்டத்தில் நோயளர்கள் இதை உணர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் நாட் செல்லச் செல்ல கால்களில் விறைத்த உணர்வு தெரியவரும். நடக்கும் போது மெத்தையில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படும்; பின்பு செருப்பு கழன்றால் கூடத் தெரியாத நிலை ஏற்படலாம். முள்ளு அல்லது ஆணி குத்தினாலோ, செருப்பு வெட்டினாலோ, தார் வீதி சுட்டுக் கொப்பளிப்பதோ தெரிவதில்லை.

கால்கள் மரத்திருப்பதால் ஏதாவது காயம் ஏற்படும்போது, வலி தெரியாது. அதை உணராது, மேலும் மேலும் அழுத்தி நடப்பதால் புண்கள் மாறாதிருப்பதுடன் பெருகவும் செய்யும்.

இரண்டாவது காரணம் நீரிழிவு நோய் காரணமாக காலிலுள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய இரத்தம் பாய்ச்சப்படுவதில்லை. எனவே காயம் அல்லது புண் உண்டாகும் போது அவற்றிக்கு போதிய இரத்தம் கிடைக்காது, இதனால் திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் புண்கள் ஆறுவதற்கும் தேவையான ஒட்சிசன் கிடைக்காது போய்விடுகிறது.

மூன்றாவது காரணம் விரைவில் கிருமிகள் தொற்றுவதாகும். முதல் கூறிய இரண்டு காரணங்களாலும் நீரிழிவு நோயாளர்களுக்கு புண்களில் கிருமி தொற்றுவதும், பெருகுவதும் அதிகம். இதனால் புண்கள் விரைவில் ஆறுவதில்லை. எனவே நீரிழிவு நோயுள்ளவர்கள் தமது இரத்த சீனியின் அளவை ஆரம்பம் முதல் எப்பொழுதும் சரியான அளவில் பேணுவது அவசியம். அதனால் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதும் அவற்றை இலகுவாக குணமாக்குவதும் சாத்தியமாகும்.

ஆனால் நாட்பட்ட புண்கள் ஏற்பட்ட பின்தான் நீரிழிவைக் கட்டுப்படுத்த முயல்வதாவது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதுதான்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் கழிந்து விட்டபோதும், தமிழகத்துக்கு நிகராகவே ஈழத்திலும் சிறுகதைப் படைப்புலகம் பரிணமித்துவிட்ட போதும், எது நல்ல கதை என்ற தெளிவு இங்குள்ள படைப்புலகிலும், நுகர்வுலகிலும் பரந்தளவில் இல்லாதிருக்கிறது. ஈழத்தின் பல முன்னணிப் படைப்பாளிகளிடம் கூட சிறுகதையின் நவீன வடிவங்கள் அகப்பட மறுத்து, ஏய்த்து நகைக்கின்றன.

அத்திபூத்த மலர்களாக சட்டநாதன், சாந்தன், குந்தவை, எஸ்.எல்.எம்.ஹனிபா போன்ற சிலருடன் திரேசா, திருக்கோவில் கவியுகன், ராகவன் போன்ற இளைய எழுத்தாளர்களும் புதுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றனர். சுவார்ஸமான சம்பவங்களின் தொகுப்பே சிறுகதை என்ற மயக்கம் தீராதிருப்பதன் காரணமாக செய்தி நிருபர்களே படைப்பாளிகளாக வலம் வருகின்ற பாவ பூமி இது.

இந்த வட்டத்திற்குள் அகப்படாமல் தப்பித்து தமக்கென ஒரு தனித்துவமான படைப்பு வெளியை விரித்து வைத்திருப்பவர்களில் குப்பிளான்.ஐ.சண்முகம் முக்கியமானவர். புகழுக்காகவோ பக்கங்களை நிரப்புவதற்காகவோ, மலர்களில் பெயர் பதிக்க வேண்டும் என்பதற்காகவோ, நிர்பந்தங்களுக்காகவோ பேனா திறக்க மறுப்பவர் இவர் எனலாம்.

“மாறாக சண்முகனின் கதைகளில் ஒரு அலாதியான புனைகதைப் பெருவெளியினை அவதானிக்கக் கூடியதாக இருப்பதும், ஆழ்ந்த வாசிப்பில் அந்தப் பெருவெளியினுள் பிரவேசித்து அலைவதனூடகப் பரவசம் எய்த முடிகின்றது என்பதும் முக்கியமானது” என இன்றைய நம்பிக்கையூட்டும் படைப்பாளியான இராகவன், சண்முகனின் படைப்புகள் பற்றி சத்திய வாக்குமூலம் தருவதும் குறிப்பிடத்தக்கது.

‘உதிரிகளும் …’ என்ற, நயந்து நினைவூற வைக்கும் தலைப்புடன் கூடிய சிறுகதைத் தொகுப்பை அண்மையில் சண்முகன் தந்துள்ளார்.

அது என்ன உதிரிகளும் …?

“.. நான் முன்னர் எழுதிய 26, 27 கதைகளில் தெரிந்தெடுத்த இருபத்தியொரு கதைகள் எனது முன்னைய தொகுப்புகளான கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும் ஆகிய நூல்களில் வெளிவந்துவிட்டன. ஆகவே நான் அப்பொழுது தெரிவு செய்யாதுவிட்ட உதிரிகளும், பின்னர் எழுதிய கதைகளுமே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன” என தனது சிறிய முன்னுரையில் விளக்கம் சொல்லி விடுகிறார்.

ஆக, இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்குகின்றன. இவற்றுள் 8 சிறுகதைகள் 1971 க்கு முன் எழுதப்பட்டதாக இருக்க, இறுதி நான்கு சிறுகதைகளான பருவம் தப்பிய மழை, தரு, ஹீரொ, சிதம்பரம் ஆகியன முறையே 1989, 1990, 2005, 2004 ஆண்டுகளில் வெளியாகியுள்ளன.

‘கழித்துவிட்ட’ உதிரிக் கதைகளாகப் படைப்பாளியான தானே கருதும், இவரது ஆரம்பகாலப் படைப்புகள் உண்மையில் கழிக்க வேண்டிய கதைகள்தாமா?

அல்ல! என்றே சொல்லத் தோன்றுகின்றது. இவை என்ன கருத்துக்களை எமக்குக் கடத்த முயல்கின்றன? இக்கதைகளை ஆக்கிய போது, எல்லைகளை அறுத்து, வானத்திலும் சஞ்சிரிக்கும், கனவுகளுடன் குலவும் இருபது வயதுகளேயான வாலிபப் பருவத்தில் இருந்திருப்பார். அப்பருவமானது கனவுகளும் லட்சியங்களும் களைபோலச் செழித்து வளரும் சேனைப் பயிர்க் கன்னி நிலம். புத்தம் புதிய உலகை அவாவும்; இளைஞனின் யுகம் அது. அத்தகையவனது படைப்புகளாகவே இவற்றைக் காண்கிறேன்.

உதாரணமாக விமலாவைக் காதலித்து பின் சீலியை மணப்பதும், பிறேமலதாவுடனான காதலில் உறுதியாக நிற்பதும், சுமணாவை மணம் செய்து சந்தோசமாக வாழ்வதும் ஆன மூன்று கதைகள். இவற்றில் சிங்கள தமிழ் கலப்பு மணம் பேசப்படுகிறது. தேசிய ஒற்றுமைக்கு இத்தகைய கலப்பு மணங்கள் வித்திடும் என ஒரு காலத்தில் கனவு கண்ட வாலிபர்களின் உணர்வுகளையே சண்முகனும் பிரதிபலிக்கிறார்.

சாதிய முறையை வெறுத்து அது மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதால் அதை இல்லாதொழிக்க வேண்டும் என அவாவும் ஒரு உயர்சாதி ஆசிரியன். ஆனால் வறுமையில் வளர்ந்தவன். அவனது செய்கைகையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் இன்னுமொரு இலட்சியச் சாயமூட்டப்பட்ட கதைதான் ‘மாற்றங்கள்’

‘விசித்திர உலகம்’ என்பது உலகத்தவர் கண்களில் விசித்திர மனிதனாகத் தென்படும் மனிதாபம் மிக்க ஒருவன் பற்றியது. பட்டம் பதவிகளை எதிர்பார்க்காது சமூகத்திற்கு உதவிக் கரம் நீட்டும் அவனை, அவனது உதவியால் நிவாரணம் பெற்ற இன்னொருவனே விசித்திர பைத்தியம் என அவனது இறப்பின்போது குறிப்பிடுகிறான். போலியான விழுமியங்கள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்ட எமது சமூகத்தை நளினமாக விமர்சிக்க முயலும் படைப்பு எனலாம்.

தங்கள் தங்கள் சுயநலத்திற்காக மக்களிடையே வேண்டாத பிளவுகளை ஏற்படுத்தி, அட்டூழியம் செய்பவர்களை நினைத்து நெஞ்சு கொதிக்கும் ஒருவன் பற்றிய படைப்பு. ஒரே நாடு ஒரே உலகம் என இலட்சிய வேகம் கொள்பவன், சிங்களப் பெண்ணை நேசிப்பதால் சமூகத் துரோகி என தூசிக்கப்பட்டு தாக்கப்படுகிறான். இருந்தபோதும் ‘மனிதன் மத, இன உணர்வுகளால் வெறிகொண்ட வெறியனாக வாழாது, மனிதனாக வாழ்ந்தால் அவன் உண்மையில் தெய்வமாகிறான்’ என்ற கொள்கையில் உறுதியுடன் நிற்பதைச் சொல்லும் கதை ‘மனிதன் தெய்வமாகிறான்’.

‘பால்வண்ண நிலவு’ என்பது முன்பு ஒருத்தியைக் காதலித்து மற்றொரு பெண்ணை மணந்த ஒருவனின் குற்ற உணர்வையும், மனைவிக்கு இதைத் தெரிவிக்கும் போது ஏற்படும் உள்ளுணர்வுகளை அலசும் படைப்பு.

உலகைப்பற்றி அக்கறை கொள்ளாது, அழகை ஆராதித்து, கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஒருவனது மன ஆழங்களை எட்ட முயலுகிறது மற்றொரு கதை. வாழ்விற்காக கூட உழைக்க விரும்பாது அழகிலும் ரசனையிலும் ஆழ்ந்து கிடக்கும் ஒருவன் உலகியலின் நிதர்சனத்தைத் தரிசிக்கும் போது ஏற்படும் தாக்கத்தின் அகவுணர்வைப் பேசாது பேசி, எமது கற்பனைக்கு கதவு விரிக்கிறது. ‘அவனுக்கென்று ஒரு உலகம்’ எனும் இது பேசாஉணர்வுகளைப் பேசும் சொற்சித்திரமா என மயங்கவைக்கிறது.

1971 க்கு முன் எழுதப்பட்ட இவரது கதைகளில் பெரும்பாலானவை கருவைப் பொறுத்தவரையில் அன்றைய பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்து போலவே அக்காலகட்டத்தின் ‘ஜனரஞ்சக’ விடயங்களான இன ஒற்றுமை, இலங்கை என்ற தேசப்பற்று, சாதீயம் போன்றவற்றையே பெரும்பாலும் பேசின. இருந்தபோதும் குப்பிளானின் கதை சொல்லும் பாங்கில் அழகியல் உணர்வும், அகம் நோக்கிய பார்வையும் மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம். கதைகளின் கரு ஒருபுறமிருக்க கதைக்கு மேலாக மனித உணர்வுகளை,அவனது பாடுகளை, சிந்தனைகளை சொல்லுக்குள் அடக்கும் வாலாயம் அன்றே சித்தித்தவராக இருப்பதால்தான் மற்றவர்களிடமிருந்து அன்றே வேறுபடுவதைக் காண்கிறோம்.

ஆரம்ப காலக் கதைகள் இவ்வாறிருக்க பிற்காலக் கதைகள் எதைச் சொல்கின்றன, எவ்வாறு சொல்கின்றன எனப் பார்ப்பது சுவார்ஸமானது.

‘பருவம் தப்பிய மழையைப் போலவே..’ என்பது மழை பற்றிய ஒரு அற்புத சித்திரம்.

மழை ஒரு ஊற்றுப் போன்றது. வானத்தில் இருந்து சிந்தும் ஆகாய கங்கை போலாவது. சொட்டுச் சொட்டாகவோ, சாரல் சாரலாகவோ கொட்டிச் சிரிக்கும். கற்பனையும் கலையுணர்வும் கொண்டவனின் மனஊற்றையும் மடைதிறக்கும் பேராற்றல் கொண்டது. ஒரு மழை நாளின் அற்புத அனுபவங்களை நாம் எல்லோருமே அனுபவித்திருக்கிறோம். ஆனால் ஆழ்ந்துணர்ந்து கிளர்வதில்லை. ஆனால் குப்பிளானின் ரசனை சிந்தும் வாக்கியங்கள் எம்மீது சொரிந்து, ஊறிப் பதனப்படுத்தும்போது, மனஊற்றை பெருக்கெடுத்துப் பாய வைக்கிறது.

‘சூரியன் முகங்காட்டி சிறிது சந்தோசத்தைக் கொடுத்துவிட்டு- திடீரென சிணுங்கலாக ஆரம்பித்துக் கொட்டும் மழை. இரவின் ஆழத்தில் சங்கீதம் போல ஒரே சீராகப் பெய்யும் மழையில் ஒரு இதம்..’

‘மழையில் காலையில் முழுகல், கிணற்றைச் சுற்றியுள்ள வாழைக்கொல்லையின் இடையே ஓடிய கொடியில் உடுக்கும் சாறத்தையும், துவட்டும் துவாயையும் போட்டுவிட்டால் வாழையிலைகளில் பட்டு ஒன்றாய் உருண்டு திரண்டு வரும் ஓரிரு மழைத் துளிகளைத் தவிர அவை நனையாது ..’

‘மழையைப் பாராது புறப்பட்டான். முழங்காலளவிற்கு மடித்த முழுக்காற்சட்டை, நீலக்குடை ..’

‘மழை பெய்து கொண்டிருக்கிற வாரவிடுமுறைகள் இதமானவை போலும் … மழைக்கால ஓய்வு நாட்கள் ஒரு புதிய மெருகையும் பரிமாணத்தையும் கொடுக்கின்றன.’

‘மழைக்குளிரின் சுகத்தில் விடிய விடிய கதகதப்பான படுக்கையில் புரண்டு படுத்தல் சுகம், மிகு சுகம்’

‘வீதி, வீதியோரத்துக் கடைகள், தியேட்டர் எல்லாமே வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. அங்கும் இங்குமாய்த் தென்பட்ட இரண்டொருவரும், அந்த மழை நாளில் அப்படி இருப்பதற்காகவே படைக்கப் பட்டவர்களாய்த் தோற்றம் கொண்டார்கள்.’

‘மழை பெய்து ஓய்ந்திருக்கின்ற இன்றும் கூட நண்பன் வரலாம். வந்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். பேச்சு பேச்சு ஒரே பேச்சு..’

‘மழை காலப் பொழுதுகள் சந்தோசமானவை என்றாலும்..’

இவ்வாறே சண்முகனுடன் கூடவே நாமும் அந்தச் சந்தோசங்களுள் ஆழ்ந்துவிடுகிறோம். நிச்சமாக இது கிளுப்பான சம்பவங்களையும், திடீர்த் திருப்பங்களையும், எதிர்பாராத முடிவுகளையும் அவாவும் வாசகர்களுக்கான படைப்பு அல்ல. படைப்புக்குள் முழ்கி முத்தெடுப்பதில் சுகம் காண்பவர்களுக்கானது.

1990 ல் திசையில் எழுதப்பட்ட ‘தரு’ ஒரு மிக முக்கிய படைப்பு. கவிதையா கதையா என மயங்கவைக்கும் நடை. ஏனைய பல கதைகளைப் போலவே இதிலும் மனசோடு இதமாகப் பேசுகிறது.

‘இவளை அவள் போக்கிலேயே இயங்கவிட்டு பின் கட்டி இழுப்பதாய், நூல் மாட்டிய பம்பரம்போல் ஓடவிட்டு இழுத்து நிறுத்துவதுமாய் …’ இப்படி இப்படியே, ஆண்களின் அதிகாரமானது பெண்ணின் மீது நிதானமாகவும், தீர்க்கமாகவும் படர்வதைச் சொல்லிச் செல்லும் கதை. ஆனால் ‘அந்தக் காட்டு மனிதனின் வெறித்த பார்வையும் அவனிலான பிறேமியின் வாத்சயல்யமும்’ அவனுக்கு ‘குளிர் தருவின் கீழும் பாலையின் வெப்பக் காற்று புகுந்தது போல.’ தொல்லை கொடுத்தது. அவனால் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தாங்கவும் முடியாது போயிற்று.

கட்டியக்காரன் நாடகத்தின் இடையே வந்து பேசிவிட்டுப் போவது போலவே கதையின் இறுதியில் நடை மாற்றம். கட்டுரைப் பாங்கு போல. இது குப்பிளானின் சறுகல் அல்ல. ஒரு புதிய வடிவைத் தேடும் அவாவின் பேறு. வாசிக்க வாசிக்க , மீண்டும் வாசித்துச் செல்ல புதிய உணர்வுகளை விதைத்துச் செல்லும் படைப்பு. அதனால்தான் போலும் திசையில் வெளிவந்த படைப்பு மீண்டும் மனிதம் சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது

சிதம்பரம் என்ற இறுதிக் கதை சிதப்பர ரகசியத்தை உள்ளடக்குவது போன்ற இன்னுமொரு வித்தியாசமான படைப்பு.

“உலகின் மூலைமுடக்கெங்கும் ‘மனிதரின் வெறிகொண்ட செயற்பாடுகளின்’ அனர்த்தங்களினால் பலியாகும் ஆயிரக்கணக்கான பச்சிளம் பாலகர்களின் நினைவுகளுக்கு …” இந்நூலை அவர் அர்ப்பணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முடிவாக என்ன சொல்லலாம்? ‘புறச் சூழலையும் நிகழ்வுகளையும் தனது படைப்புகளில் நுட்பமாய்ப் பதிவு செய்துள்ளாராயினும், அடிப்படையில் அவர் ஒரு அகவயவாதி, ஆன்மிக நம்பிக்கையும், மெல்லுணர்வுகளும், அழகியல் ரசனைத் திளைப்பும் கொண்டவர்’ என அ.யேசுராசா பின் அட்டையில் கூறுவது என் எண்ணங்களையும் பிரதிபலிக்கிறது எனலாம்.

அவ்வாறே ‘ஒரு தனித்துவமான, வெகு நிதானமான மென்போக்கில் செல்லும் சண்முகனின் புனைகதைகளிலிருந்து அநேகமான வாக்கியங்கள் எனக்குள் சேகரமாயிருப்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்’ என இராகவன் எழுதியது போலவே என்னுள்ளும் நிறைந்துள்ளது. நிச்சயம் உங்களையும் பற்றிக் கொள்ளும்.

விலை:- ரூபா 120.00

தொடர்புகளுக்கு:-
குப்பிழான்.ஐ.சண்முகன்
‘மாணிக்கவளவு’
கரணவாய் தெற்கு
கரவெட்டி

எம்.கே.முருகானந்தன்

நன்றி- ஞாயிறு தினக்குரல்
23.03.2008

Read Full Post »

>’சுந்தரராமசாமியின் ஜே.ஜே குறிப்புகள், ஜெயமோகனின் விஸ்ணுபுரம் போன்றவை நாவல்களேல்ல’ என்கிறார் ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான செங்கை ஆழியான். ஞானம் 94இதழில் அதன் ஆசிரியரான தி.ஞானசேகரனுக்கு வழங்கிய நேர்காணலில் இக்கருத்தை அவர் மிகத் திடமாக ஒளிவுமறைவின்றி முன்வைக்கிறார்.

தமிழ் இலக்கியத் துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளான அவர்களது இப்படைப்புகள் நாவல்கள் அல்ல என்பதும், வெறும் பரிசோதனை முயற்சிகள் மட்டுமே என்பதும் விவாதத்திற்கு உரிய கருத்துகளாக தெரிகின்றன. ஏனெனில் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாக இவற்றைப் பலரும் கருதுகிறார்கள். உங்கள் கருத்தென்ன?

நேர்காணலில் செங்கை ஆழியான் இது பற்றிக் கூறியவற்றை முழுமையாக கீழே தருகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.

‘நாவல்கள் என்ற பெயரில் சுந்தரராமசாமி, ஜெயமோகன், கோணங்கி என்போர் பரிசோதனைப் படைப்புகளை எழுதியுள்ளனர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே குறிப்புகள், ஜெயமோகனின் விஸ்ணுபுரம், கோணங்கியின் எழுத்துக்கள் ஆகிய பரிசோதனைப் படைப்புகளை நாவல் என்ற பெயரில் எழுதித் தந்துள்ளனர். உண்மையில் கூறுவதாயின் இவை நாவல்களேயல்ல. இவர்களது நாவல்களில் யதார்த்தப் பண்பு இருக்காது.

‘மனம்போன போக்கில் கிறுக்கி வைத்ததை வாசகர்கள் மீது சுமத்துகின்ற மனப்பாங்கு இருக்கின்றது. தமிழில் இதுவரை வந்திருக்காத நாவல் இலக்கியத்துடன் இலக்கண ரீதியாக ஒப்பிட்டுக் கூறமுடியாத, தான் தோன்றித்தனமாய் தன்னை வடிவமைத்துக் கொண்டு வெளிவந்திருக்கிறது’ என த.ராசு போன்றோர் சுந்தரராமசாமியின் ஜே.ஜே குறிப்புகள் பற்றிக் குறிப்படுவர்.

சுந்தரராமசாமியின் துதி பாடுவோர் தமக்கு விளங்கியதாகக் கூறிப் போற்றிக் கொள்வர். நிர்வாணமாக நிற்கும் அரசன் தான் கண்களுக்குத் தெரியாத ஆடை அணிந்திந்திருப்பதாகச் சொல்வது போலவும், அதை நம்பிக் கொள்வது போலவும் நடிக்க வேண்டும்.

விஸ்ணுபுரமும் இந்தக் கருத்துக்கு சோடை போனதல்ல. இப் படைப்புகளைப் புரிந்து கொள்வதற்கு ஆசிரியர் கூடவே இருந்து விளக்கம் தந்தால்தான் முடியும்.

இவை தமிழ் நாவல் துறையில் வந்திருக்கும் பரிசோதனைகளாயின், நாவல் என்ற சம்பிரதாய அமைப்புக்கு அப்பாட்பட்டவையாயின் அதில் எமக்கும் உடன் பாடே. ஆனால் நாம் நல்ல இலக்கிய நாவல்கள் என்று கருதுவனவற்றிற்கு அப்பால் சிறப்புடையனவாக வற்புறுத்துவார்களாயின், தமிழிலக்கியத்தில் நாவலுக்கு அடுத்ததாக ஒரு புதிய இலக்கியத்துறை வரும்போது (அறிமுகமாகும் போது)அத்துறையின் ஆரம்ப முயற்சிகளாக இந்நாவல்கள் நிச்சயம் இடம் பெறும்.’

நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.

Read Full Post »

>நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லா லடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
வாயில் பிராணியை வதைக்காதே

எத்துணை இனிமையான பாடல்! எளிய நடையும், ஓசை நயமும் கொண்ட அற்புதமான குழந்தைப் பாடல். அப் பாடலைப் படிக்கும் போது வாய்விட்டுப் பாட வேண்டும் என உங்கள் நா குறுகுறுக்கவில்லையா? கவிஞர் யாழ்ப்பாணன் எழுதிய இப் பாடல் நாம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களாக இருந்த காலத்தில் எமது தமிழ்ப் பாட நூலாகிய பாலபாடத்தில் இடம் பெற்றிருந்தது.

கால ஓட்டத்தால் மறக்கடிக்கப்பட்ட இந்தப் பாடலைப் படிக்கும் வாய்ப்புப் கிட்டியபோது எனது மனம் களியுவகை கொண்டு சிறகடித்துப் பறந்தது. மாணவப் பருவ நினைவுகளில் கால் பதித்து தோகை விரித்தாடியது. செ.சுதர்ஸன் அவர்களால் தொகுப்பும் பதிப்பும் செய்யப்பட்ட ‘மறுமலர்ச்சிக் கவிதைகள்’ என்ற நூலிலேயே இப்பொழுது இக் கவிதையைப் படிக்கக் கூடியது.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துடன் பரிச்சியம் உள்ள எவருக்கும் நிச்சயம் மறுமலர்ச்சிக் காலம் பற்றித் தெரிந்திருக்கும். கற்பனை உலகிலும், கடுமையான தமிழ் நடையிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஈழத்து இலக்கியத்தை மயக்கம் தெளிவித்து யதார்த்தத்திற்கு கொண்டுவரச் செய்யப்பட்ட முதல் கூட்டு முயற்சிதான் மறுமலர்ச்சி இயக்கமாகும். எமது மக்களின் மலர்ச்சிக்காக, அவர்களது வாழ்வையும், அவர்களது பிரச்சனைகளையும் சிக்கல்களையும் அவர்களது மொழியிலேயே சொல்வதற்கு எடுத்த முயற்சி அதுவாகும்

மறுமலர்ச்சி இயக்கம்.பற்றியும், சஞ்சிகை பற்றியும், அதில் வந்த சிறுகதைகள் பற்றியும் பரவலாகத் தெரிந்திருந்த போதும், அதில் வந்த கவிதைகள் இதுவரை கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவை கைக்கு எட்டுவாற்கு அரியனவாக இருந்ததே முக்கிய காரணமாகும். செங்கைஆழியான் ஏலவே மறுமலர்ச்சிச் சிறுகதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்ந்த செல்லத்துரை சுதர்ஸனின் இந் நூல் வெளியீட்டு முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். பெறுதற்கு அரிதான (1946-48 ல் வெளியான) மறுமலர்ச்சி இதழ்களை யாழ் சென்று தேடிக்கண்டு பிடித்து, காலத்தால் சிதைவுறும் தறுவாயிலிருந்த தாள்களைப் பொறுமையுடனும், மிகுந்த அவதானத்துடனும் ஆராய்ந்து, அவற்றில் வெளியான கவிதைகளைத் தன் கையாலேயே படி எடுத்து நூல் ஆக்கிய அவரது முயற்சியானது மிகுந்து பொறுமையும், விடாமுயற்சியும், கால அவகாசமும் வேண்டி நிற்கதாகும். தனது நாளாந்தப் பணிகளிடையே இந்த ஆக்க பூர்வமான பணியைச் செய்த அவருக்கு ஈழத் தமிழ் உலகம் கடமைக்கட்டுள்ளது.

மறுமலர்ச்சி சஞ்சிகை 1946 பங்குனி முதல் 1948 ஜப்பசி வரையாக 23 இதழ்கள் வெளியானதாக அறிகிறோம். ‘மறுமலர்ச்சி இதழில் 51 கவிதைகளும் ஒரு மொழிபெயர்ப்புக் காவியமும் வெளியாகின’ என நூலாசிரியர் தனது அறிமுக உரையில் குறிப்பிடுகிறார். ‘க.சோமசுந்தரப் புலவர், சுவாமி விபுலானந்த அடிகள், மஹாகவி (து.உருத்தரமூர்த்தி), யாழ்ப்பாணன (வே.சிவக்கொழுந்து), சோ.நடராஜன், நாவற்குழியூர் நடராஜன், சாரதா (க.இ.சரவணமுத்து), வரதர் (தி;.ச.வரதராஜன்), கலைவாணன், கதிரேசன், வ.இ., சோ.தியாகராஜன், காவலூர்க் கைலாசன், கோட்டாறு.எஸ்.ஆதிமூலப் பெருமாள், பரமேஸ், கவிஞன், கோட்டாறு தே.ப.பெருமாள், கு.பெரியதம்பி, தில்லைச்சிவன், வித்துவான் வேந்தனார், நடனம் ஆகிய கவிஞர்களின் கவிதைகளே மறுமலர்ச்சி இதழ்களில் வெளியாகின’ என மேலும் விபரமாகக் கூறுகிறார்.

இன்னும் சற்று கூர்மையாகப் பார்க்கும் போது நாவற்குழியூர் நடராஜன் 10 கவிதைகளையும், சாரதா 9 கவிதைகளையும், யாழ்ப்பாணன் 7 கவிதைகளையும், மஹாகவி 4 கவிதைகளையும் எழுதியுள்ளார்கள். ஏனையோர் தலா ஒன்று அல்லது இரண்டு கவிதைகளையே எழுதியுள்ளனர்.

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பொழுது போக்கிற்காகவோ, புகழுக்காகவோ எழுதியவர்கள் அல்ல. இலட்சியத்தோடு களம் இறங்கியவர்கள். ‘இனி கற்பனைகள், ஆழமான தத்துவந்கள்- இவை எல்லாம் எளிய நடையிலே, புதிய வசன இலக்கியங்களிலே சிருஷ்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்…. பழமையைப் புதுப்பித்தலாலும், பிறநாட்டு நல்ல இலக்கியங்களைத் தமிழுக்கு கொண்டு வருவதாலும், புதிதாக இலக்கியங்களைச் சிருஷ்டிப்பதாலும், தமிழ் மொழிக்கு புத்துயிர் அளிக்க விரும்புகிறோம்’ என்ற கொள்கைப் பிரகடனத்தோடு படைப்பில் இறங்கியவர்களாகக் காண்கிறோம்.

இக் கூற்றின் அடிப்படையில் அவர்களது கவிதைகளைப் படிக்கும்போது, ஈழத்துக் கவிதை மரபில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனப் பிரஞ்ஞை பூர்வமாக முயன்றிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. பாரதியை தமது லட்சியக் கவிஞனாகக் கொண்ட இவர்கள் தமது கவிதைகளையும் இலகுவான தமிழ் நடையில் ஆக்க முயன்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும் இதற்கு மேலாகச் சில கவிதைகள் பாரதியின் புகழ் பெற்ற கவிதைகளை ஞாபகப்படுத்துமாறு புனையப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கவே செய்கிறது. உதாரணமாக காவலூர்க் கைலாசனின் புது யுகத்தில்… என்ற கவிதையையும், வேந்தனாரின் ஆட்டை வெட்டும்… என்ற கவிதையையும் குறிப்படலாம்.

பேச்சுத் தமிழை சிறுகதை இலக்கியத்தில் கொண்டு வந்தது போலவே கவிதைகளிலும் இவர்களில் சிலர் கொண்டு வந்திருப்பது இவர்களது மற்றுமொரு சிறப்பம்சம் எனலாம்.

‘கூச்சலிடும் ரேடியோக் கூக்குரல்கள்…’
‘பட்டணத்திலேயுள்ள பளபளப்பெல்லாம் …’,
கனபேராய் திரண்டெழுந்தால்…’,
‘மோட்டுப் பயலொருவன்…’,
‘சோச்சி அம்மா பாச்சி…’,
‘சும்மா சும்மா என்ரை மனசு சுத்தித் திரியுது…’,
‘குருவிக் கூண்டைச் சருவாதே…’
போன்ற சில வரிகளை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுவது போதுமாயிருக்கும்.

கவிதையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் சமூக மறுமலர்ச்சி நோக்கிய சீர்திருத்தக் கருத்துக்கள் பெருமளவு எடுத்தாளப்படாமை முக்கிய குறைபாடாகத் தெரிகிறது. மறுமலர்ச்சிக் கால சிறுகதைகள் சமூக மாற்றங்களையும், சீரிதிருத்தங்களையும் அவாவி நின்ற நிலையில் கவிதைகளில் ஏன் அவை முனைப்புறவில்லை என்பது சிந்தனைக்குரியது.

ஆயினும் கோயில்களில் மிருக பலிக்கு எதிரான இரண்டு கவிதைகளும், உழைக்கும் தொழிலாளர்கள் கட்டுக்களை உடைத்தெறியத் திரண்டெழ வேண்டும் என வலியுறுத்தும் கவிதை ஒன்றும் இடம் பெற்றிருப்பதானது அவர்களில் சிலராயினும் புதிய உலகைக் காணும் வேட்கை கொண்டவராய் இருந்தமைக்குச் சான்றாகிறது.

இந்நூலின் முக்கிய அம்சமாகக் கூறக் கூடியது தொகுப்பாசிரியரின் அறிமுக உரையாகும். மறுமலர்ச்சிக் காலம் பற்றியும், அது உருவானதற்கான காலத்திக் தேவை பற்றியும், அதன் அங்கத்தவர்கள், அவர்களின் ஒன்று கூடல், கையெழுத்துச் சஞ்சிகை முதலாக மறுமலர்ச்சிக் காலம் பற்றிய ஒரு பூரண பதிவைத் தர முயன்றுள்ளார். மிகுந்த தேடலுடனும், நுணுகிய ஆய்வுக் கண்ணோட்டத்திலும் இது எழுதப்பட்டுள்ளது. இவ்வுரை நூலின் சிகரம் போல அமைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.

‘… இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகும். அக் காலகட்டத்துக் கவிதைப் போக்கை மதிப்பிடுவதற்கும், ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் மறுமலர்ச்சியின் பங்கை நிர்ணயிப்பதற்கும் இந்நூல் நமக்கு வாய்ப்பாக அமைகிறது’ என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறியது மிகவும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என்பதில் சந்தேகம் இல்லை.

எமது நவீன கவிதை இலக்கியத்தின் ஆரம்பத் தடங்களை தேடும் ஒரு முயற்சி என இந் நூலின் வரவைக் கூறலாம். பதிப்பாசிரியரான சுதர்ஸன் தனது சொந்தச் செலவில் இதை வெளியிட்டுள்ளார். ஒரு பல்கலைக்கழகம் அல்லது விநியோன வளம் உள்ள நூல் வெளியீட்டாளர்கள் ஆற்ற முயற்சியை தனியொருவனாக செய்த சுதர்ஸனுக்கு இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் கை கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

தொடர்புகளுக்கு:-

செல்லத்துரை சுதர்ஸன்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

email:Suda3379@yahoo.com”

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-

மல்லிகை

Read Full Post »

>உங்கள் மார்புக் கச்சையின் அளவு என்ன? அது 20 வயதில் எத்தனையாக இருந்தது?

இருபது வயதில் ஒருவர் அணியும் மார்புக் கச்சையின் அளவை வைத்து அவருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் (Type 2 diabetes) வருமா என எதிர்வு கூற முடியும் என கனடாவில் செய்யப்பட்டு CMAJ மருத்துவ இதழில் அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பெரிய மார்புக் கச்சையை இளவயதில் உபயோகிக்க நேர்ந்தவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என அக்கட்டுரை தெரிவிக்கிறது.

A அல்லது அதற்குக் குறைந்த ( A cup size) அளவான மார்புக் கச்சையை சாதாரண அளவாக ஆய்வாளர்கள் கொண்டார்கள். B,C,D யும் அதற்கு மேலானவையும் சாதாரணத்திற்கு மேலான அளவுகளாகக் கொள்ளப்பட்டன. A அளவிற்கு மேல் தேவைப்பட்டவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான சாத்தியம் அதிகமாம். மார்புக் கச்சையின் அளவென்பது உண்மையில் அதன் கனபரிமாணத்தை (Volume) குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. இதை அளவிடுவதற்கு ஸ்கான் முதலான பல வழிகள் இருந்தாலும் அவை காலத்தையும் பணத்தையும் அதிகம் வேண்டுவன.

மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் அதன் கனபரிமாணத்தில் 15 சதவிகித மாற்றங்கள் இயல்பாகவே ஏற்படுகின்றன. அதாவது அதன் பருமனில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே அளவிடும் முறையில் ஏற்படக் கூடிய சிறிய வேறுபாடுகள் பற்றிக் கவனம் கொள்ள வேண்டியதில்லை.

ஆய்வுக்கு உட்பட்டவர்களின் பரம்பரையில் நீரிழிவு இருத்தல், தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி வாழ்க்கை முறை ஆகியற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தபோதும் மார்புக் கச்சையின் அளவிற்கும் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியத்திற்கும் ஆன தொடர்பு தெளிவாகத் தெரிந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குசானோ குழுவினர் (Kusano and colleagues) செய்த மற்றொரு ஆய்வானது மார்புக் கச்சையின் அளவிற்கும் மார்புப் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பிருப்பதை எடுத்துக் காட்டியது.

அளந்து பார்ப்பதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வெட்கம் டாக்டர்கள் மார்புக் கச்சையின் அளவைக் கேட்கிறார்களே என எரிச்சல் வருகிறதா? `ஈர்க்கிடை போகா இளமுலை மாதர் தம், என்று பாடினார் மாணிக்கவாசகர். சிவபெருமானின் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் மனக்கண்ணில் தோன்றி ஞானம் அளித்த அளவிற்கு பெண்களின் மார்பினது பருமனும் அழகும் ஞானிகளுக்கும் கண்ணில் பட்டு கவிபாடும் அளவிற்கு கவர்ச்சியாக இருந்திருக்கின்றது. இதனால் போலும் பெண்களின் அக்கறைக்குரிய அங்கமாகவும் இருக்கிறது.

ஆய்வு மார்பின் கவர்ச்சி காரணமாகவல்ல. அதன் பருமனைப் பற்றியது. அதன் பருமனானது உடற் திணிவு (Body mass Index-BMI) க்கு ஓரளவு ஒத்ததாக இருக்கிறது. உடற் திணிவைக் கணிப்பதற்கு ஒருவரின் உயரம், எடை ஆகியன அளக்கப்பட்டு பின் கணிக்கப்பட வேண்டும்.

அதேபோல வயிற்றின் சுற்றளவிற்கும் உடற் திணிவிற்கும் இடையேயும் தொடர்பு இருக்கிறது. அதையும் ஆடை நீக்கி அளந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தனது மார்புக் கச்சையின் அளவு தெரியாத பெண்களே இருக்க மாட்டார்கள்.

எனவே, நீரிழிவு வருமா என எதிர்வு கூறுவதற்கு சிகிச்சை நிலையத்தில் எடை பார்க்கும் மெசினைத் தேடவேண்டியதோ சட்டையைக் கழற்றி அளவுகள் எடுக்க வேண்டிய சங்கடமோ இல்லை. சுலபமாக அளவு பற்றிய சுயதகவலுடனேயே முடிவு எடுக்கலாம். நீரிழிவு வருமா என மதிப்பீடு செய்வதற்கு இவ் அளவு மட்டும் போதுமானதல்ல. ஏனைய பல தரவுகளுடன் இதையும் இணைத்துப் பார்த்து வைத்தியர்கள் முடிவுக்கு வரலாம்.

சரி ஆய்வின் முடிவுக்கு வருவோம்.

இளம் பெண்களே! மார்பின் அளவு அல்லது திணிவு மிக அதிகமாக அதிகரிக்க இடமளிக்க வேண்டாம். ஏனெனில் அது பின்பு மார்புப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஏற்பட வழிவகுக்கும். மார்பின் அளவை சரியான அளவில் வைத்திருப்பதற்கு ஒரே வழி உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவதுதான்?

Read Full Post »

>தடுப்பூசி இருந்தால் எவ்வளவு நல்லது. பயப்பட வேண்டியது இல்லைதானே! பலரின் அங்கலாய்ப்பு இது. முக்கியமாக அங்கும், இங்கும் எங்குமாக பாலுறவுக்கு ஆள் தேடுபவர்களின் நப்பாசைக் குரல் தான் இது.

எந்த நோயைப் பற்றிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா?

எயிட்ஸ் நோய்க்குத்தான்!

ஆம் மக்களை மிகவும் பீதி கொள்ள வைக்கும் நோயாக எயிட்ஸ் இருக்கிறது.

ஏன்?

விரைவாகத் தொற்றுவதால் கொள்ளை நோய் எனவும், குணப்படுத்த முடியாதது என்பதால் மிக ஆபத்தான நோய் எனவும் பலரையும் கலங்க வைக்கிறது. பாலியல் தொடர்புகளில் கட்டுப்பாடாக இருப்பவர்கள் தப்பிவிடுவார்கள். சபல புத்தியுள்ளவர்கள் பாடு திண்டாட்டம் தான். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நிலையோ மிகவும் பரிதாபம். பணமிருந்தால் இன்று மருந்துகள் மூலம் நோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மையே.

“இரண்டு வருடங்களுக்குள் தடுப்பூசி தயாராகிவிடும்”என்றார்கள் 1984 ஆம் ஆண்டில்.

அதாவது, எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை முதலில் கண்டுபிடித்தவுடன். 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. உலகெங்கும் 32 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், ஒவ்வொரு நிமிடமும் 4 பேர் இந்நோயால் மரணிக்கிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி பற்றி நம்பிக்கைக் கீற்று தென்படுகிறதா என்றால் இல்லை என்று தான் இன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

அண்மையில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அது மனிதர்களில் கள ஆய்வுக்கும் விடப்பட்டது. ஆனால், அதன் முடிவுகள் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அனைவரையுமே அதிர்ச்சித் திகிலில் ஆழ்த்திவிட்டது. காரணம் என்னவென்றால் தடுப்பூசி போட்டவர்களுக்கு தடுப்பூசி போடாதவர்களை விட அதிகமாக எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது.

காரணம் என்ன?

தடுப்பூசி தரம் கெட்டதா, அல்லது அதன் வீரியம் போதாதா, அல்லது தடுப்பூசியினுள் எயிட்ஸ் கிருமி தவறுதலாக இருந்ததா?

எதுவுமே இல்லை!

இத் தடுப்பூசியானது மனித உடலில் ரி செல் கலங்களின் செறிவை அதிகரிக்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டது. ரி. செல் என்பது எமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் ஒரு அங்கமாகும். இது எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களைக் கண்டறிந்து அழிக்க வல்லது. எனவே, இதன் உற்பத்தியை அதிகரித்தால் ஒருவரது உடலில் எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களை அழித்து நோய் ஏற்படாமல் தடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவ்வாறு தான் இவ்வளவு காலமும் நம்பப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மாறாக ரி செல் அதிகரித்த போது கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

எனவே, தடுப்பூசி தயாரிப்பு என்பது மீண்டும் ஆரம்ப கட்டத்திற்கே போய்விட்டது. ஏனெனில், இந்தத் தடுப்பூசி மட்டுமின்றி இதுவரை தயாரிப்பு நிலையில் இருந்த தடுப்பூசிகள் யாவுமே இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே (அதாவது ரி செல் அதிகரித்தால் நோய் தொற்றாது) தயாரிக்கப்பட்டன. ஆனால், கள ஆய்வு முடிவு எதிர்மாறாக அமைந்து விட்டது. இதனால், இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தயாரிப்பில் இருந்த அனைத்துத் தடுப்பூசி ஆய்வுகளையும் தயாரிப்புகளையும் கிடப்பில் போட வேண்டியதாயிற்று.

ஆம் தடுப்பூசிக்குள் அகப்படமாட்டேன் என முரண்டு பிடிக்கிறது. எயிட்ஸ் வைரஸ்.

இந்தக் கள ஆய்வின் போது தடுப்பூசி போட்டும் நோய்க் கிருமி தொற்றிய அனைவருமே ஆண்கள் என்பது இன்னுமொரு முக்கியமான விடயமாகும். பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளர்கள் ஆன போதும் அவர்கள் எவருக்குமே எயிட்ஸ் கிருமி தொற்றவில்லை என்பதும் மிக முக்கியமாக அவதானிக்கபட வேண்டியதாகும்.

இது எதனைக் குறிக்கிறது?

பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆணுறை அணியாமல் உறவு வைக்க அனுமதிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு தொற்றவில்லை. ஆனால், தடுப்பூசி போட்ட ஆண்கள் கவலையீனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது, உறவின் போது பாதுகாப்பாக இருக்க வில்லை. அதனால் தான் தொற்றியது எனலாம். இது அனுமானம் மாத்திரமே. நிச்சயமான ஆய்வு முடிவல்ல.

இவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன? தடுப்பூசி வரலாம், வராமல் விடலாம். அல்லது அது வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. உடலுறவின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, திருமண உறவுக்கு வெளியே பாலியல் தொடர்பு வைக்க வேண்டாம். அப்படி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆண் பங்காளியானவர் ஆணுறை அணிய வேண்டியது மிகமிக அவசியம்.

பிற்சேர்க்கை

ஆல்பேர்டா பல்கலைக்கழக (University of Alberta) விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM22 என்ற ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி scienceblog.com ல் வெயியாகியுள்ளது.

இந்த பரம்பரை அலகானது எச்.ஐ.வி வைரஸ் மனித கலங்களில் பெருகுவதைத்த தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கண்டுள்ளனர். ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் இது ஏன் செயற்பட்டு கிருமி பெருகுவதைத் தடுக்க முடியவில்லை என்பதை அவர்களால் இன்னமும் அறியவில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸக்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.

நம்பிக்கையோடு காத்திருப்போம்! ஆயினும் இன்னும் எத்தனை தசாப்தங்கள் காத்திருக்க வேண்டுமோ?

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »