>
மனிதன் ஒரு சமூக விலங்கு. தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, தான் தனியாக வாழ்தல் என்பது முடியாத ஒன்று. பிறைடே (Friday) பாத்திரம் சேர்ந்திராவிட்டால் கற்பனைக் கதையில் கூட ரொபின்சன் குரூசோ போன்ற மனிதன் சோபித்திருக்க முடியாது.
ஆகவே தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களோடு நல்ல உறவைக் கொள்ளுதல் என்பது மிக முக்கிய வாழ்வுக் கூறு ஆகிறது. மற்றைய உயிரினங்களோடு நல்ல உறவைக் கொள்ள முடியாதவர்களுக்கு இப் பூமியில் உள்ள பகற்காலங்களும் இருளாகவே இருக்கும். ஏனெனில் உறவுதான் மனித மனங்களுக்கு ஒளியைத் தந்து இதமூட்டுகிறது. மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் உறவாடல் இவை எல்லாம் கலைகள் என்று சொல்லப்பட்டாலும் கூட அவை கற்றுக்கொள்ளக் கூடிய கலைகளும்தான்.
நூல்களில் இவற்றைக் கற்கலாம். அதைவிட இலகுவாக எமக்குள் வாழும் ஆளுமையில் சிறந்த மனிதர்களிடம் இருந்தும் கற்கலாம். இம்மாதம் 27ம் திகதி தனது 60அகவையை நிறைவு செய்யும் எழுத்தாளர், விமர்சகர், வைத்தியர் எம்.கே.முருகானந்தனிடம் இருந்து நிறையவே கற்கலாம்.
தொடர்பாடல் திறன்
வளர்ச்சியைத் தூண்டும் உறவுகளில் மனிதத் தொடர்பாடல் மிக முக்கியமானது. ஓவ்வொரு மனித நடத்தையின் அடியிலும் ஒரு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கும். இதனை விளங்கிக் கொண்டு, அந்தத் தேவையை ஏற்றுக் கொண்டு, தொடர்புகளை மேற்கொள்ள முனையும்போது அது இலகுவில் வெற்றி பெறும் என்ற உண்மையைத் தெரிந்து அதன்படி அநாயாசமாக வாழும் மனிதர் எம்.கே.எம் அவர்கள்.
வெளித் தோற்றத்தில் ஒரு சிறிய உருவம். எந்நேரமும் மலர்ந்து சிரித்த முகம். அம் முகத்திற்கு மேலும் சோபை தருவன அந்தக் கண்களும் கண்ணாடியும்.
மிகப் பெரிய மருத்துவமனைகளில், மிகப் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களிடம் காட்டி மாறாத நோயாளிகள் பலரும் டொக்டர் எம்.கே.எம்மிடம் காட்டிய பின் நோய்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?
நோயாளியின் உள்ளத்தோடு வேலை செய்யும் தனித்திறனால் இது சாத்தியமாகிறது என்றே நான் நம்புகிறேன்.
தான் தரம் 3 அல்லது 4 படித்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை எம்.கே.எம் இப்படி நினைவு கூருகிறார். “எனது வருத்தத்திற்காக ஒரு சிவப்பு மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. நான் அந்தக் கலர் மருந்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனது உறவினர் ஒருவர் அதைத் திரும்ப எடுத்துச் சென்று பச்சைக் கலர் மருந்து வாங்கி வந்தார்.”
எம்.கே.எம் பாக்கியசாலி. அவரது இளமைக் கால அனுபவம் ஒன்று- அல்லது பல- இப்படி நேராய் அமைந்ததால் மருந்து குடிப்பதில் நோயாளியின் விருப்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தோடு உடன்படும் ஒரு வைத்தியராக இன்றுவரை பணியாற்றுகிறார்.
கடந்த பத்து வருட காலத்தில் ஏறத்தாள ஐம்பதாயிரம் நோயாளர்களைத் தனது கணினி பதிவு செய்திருக்கிறது என்று சொல்லும் எம்.கே.எம்மிடம் அவ்வளவு பேர் அள்ளுப்பட்டு வருவதற்கு அவரது தொடர்பாடல் திறன் முக்கிய காரணி என்பதை யாரும் மறுக்க முடியாது.
உற்றுக் கேட்டல் திறன்
நோய் நொடி வரும் சந்தர்ப்பங்களில் எமது குடும்பத்தினரும் எம்.கே.எம் அவர்களிடமே செல்வோம்.எமது குடும்ப வைத்தியர் என்ற வகையில் அவரது உற்றுக் கேட்டல் திறனைப் பல சந்தப்பர்ப்பங்களில் நான் அவதானித்து வியந்துள்ளேன்.
உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் பகுதியான கேட்டல் செய்பவர்களாகவே இருப்பதை நான் அவதானித்துள்ளேன். தொலைபேசியில் உரையாடிப் கொண்டே தனக்கு முன்னால் இருக்கும் ஊழியருக்குப் பதில் சொல்லும் அதிகார்கள் எமக்கு நல்ல பரிச்சயம். கையெழுத்துக்களைப் போட்டுக் கொண்டும், காதில் ஒட்டிக் கொண்ட தொலைபேசியைக் கழுத்தைச் சரித்து அணைத்தபடி உரையாடிக் கொண்டும் முன்னால் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளரின் பிரச்சனையைக் கேட்கும் வங்கி அதிகாரிகளை எமக்கு நன்கு தெரியும். அது ஒரு சிறப்பான தகமை (ஒரு நேரத்தில் மூன்று வேலை) என்றும்தான் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எமது மூளை ஒரு கணத்தில் ஒரு விடயத்தை மட்டுமே கிரகிக்கும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.
தனக்கு முன்னால் இருக்கும் நோயாளியின் முறைப்பாட்டை அவர் எவ்வளவு நேரம் எடுத்துச் சொன்னாலும், உடலும் மனமும் முழுமையாக ஈடுபட்ட நிலையில் கேட்கும் வைத்தியர் நோயாளியின் மனத்தை வென்றவர் ஆகிவிடுகிறார் அதற்கான மிகச் சிறந்த உதாரணம்தான் எம்.கே.எம் அவர்கள்.
நோயாளியின் கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைத் தருவதில் அவர் என்றுமே தயக்கம் காட்டியதில்லை. “நலவியல் சம்பந்தமாக எழுதுகிறவர்கள் பொதுவாக நோயாளிகளுக்கு விளக்கம் தருவதில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று தான் எங்கோ வாசித்ததை நினைவு கூருகிறார் எம்.கே.எம். ஆக, இவர் ஒரு நல்ல எழுத்தாளராக இருப்பதும், வெற்றி பெற்ற வைத்தியராக இருப்பதும் எப்படி ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒன்றை ஒன்று அணைதுச் செல்கிறது என்பதைப் பார்க்கிற போது வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது.
ஒத்துணர்வுத்திறன்
ஒரு மொழியில் வன்மையான சொற்களும், இனிமையான சொற்களும் கலந்தே காணப்படும். ஆயினும் மனித உறவுகளை மேம்படுத்த விருப்புவோரும், கற்றறிந்தோரும், சான்றோர்களும், நல்ல விழுமியங்களை உடையோரும் இனிமையான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கதைப்பர் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் கருத்து.
“யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே”
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”
போன்ற பழம் பாடல்கள் இதை உணர்த்தும்.
இனிமையாகப் பேசுவது என்பது ஒரு கொடைதான் ஆயினும் அக அமைதியும் உளச்சமநிலையும் உடையோர்க்கு மட்டுமே அது சாத்தியப்படும். இனிமையாகப் பேசுபவர்களிடம் ஏனைய மனிதர்கள் யாவரும் ஈர்க்கப்படுவது இயல்பு.
டொக்டர் எம்.கே.எம் அவர்கள் நோயாளிகளுடன் ஒத்துணர்வுடன் கதைப்பதைப் பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்துள்ளேன். தனது மருத்துவ அநுபவத்தில் ஏறத்தாள ஒன்றரை இலட்சம் நோயாளர்களைச் சந்தித்திருக்கக் கூடிய ஒருவர், தான் அவர்கள் யார் மீதும் கோபப்பட்டதாகப் பெரும்பாலும் நினைக்கவில்லை என்று கூறுகிறார். இதுவே அவரது அகச் சமநிலைக்குச் சிறந்த சான்றாகும்.
இனிமையாகப் பேசுதல் என்ற பெரும் பரப்பினுள்ளே ஒத்துணர்வுடன் பேசுதல் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விசேட திறன் ஆகும். ஒருவருடைய உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்வது அல்லது விளங்கிக் கொள்வது கடினமானது. அதிலும் குறிப்பாக ஒருவர் தனது மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதனைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரது உணர்வுகளை அடக்கி விடவே நாம் பொதுவாக முயல்வதுண்டு.
ஆராச்சியாளர்களை மிகவும் ஈர்த்துள்ள விடயமாக இருக்கும் ஒத்துணர்வு டொக்டர் எம்.கே.எம் இடம் இயல்பாக அமைந்து விட்ட ஒரு பண்பாக இருக்கிறது. நோயாளியின் தனிப்பட்ட உலகினுள் புகுந்து அதனைத் தனக்குப் பழக்கமான இடமாக்கிக் கொள்ளும் ஒத்துணர்வே அவரை நோக்கி இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளது.
உடனிருத்தல் திறன்
நோயாளியோடு உடனிருப்பது கடினமான விடயம். பெரும்பாலும் அவர்களது உடல் நோய் காரணமாகப் பல்வேறு மறை உணர்வுகளோடு வந்திருப்பர். அது மனிதர் என்ற வகையில் மருத்துவரையும் தொற்றிக்கொள்ளக் கூடும். அதனால்தான் பலர் களைப்படைந்து, சக்தி தீய்ந்து எல்லோரிடமும் கோபித்துக் கொள்வதுண்டு. தற்கொலை நூற்றுவீதம் கூட மருத்துவத் தொழில் செய்பவர்களில் ஒப்பீட்டளவில் அதிகம்.
“பல நோயாளிகளுடன் இருந்து அவர்கள் சொல்லும் மறை உணர்வு நிறைந்த கதைகளை எல்லாம் கேட்கிறபோது உங்களுக்கு சக்தி தீய்தல் உணர்வு ஏற்படுவதில்லையா?” என்று எம்.கே.எம் மிடம் கேட்டபோது, “எனக்கு நோயாளிகளை அட்டெண்ட் (Attend) பண்ணுவதில் ஒரு மகிழ்வு இருக்கிறது. சில வேளை காலையில் வைத்தியசாலைக்கு வரும்போது ஒரு சிறிய தலையிடி இருந்தாலும், நோயாளிகளைப் பார்க்கத் தொடங்க அது போய்விடும்” என்கிறார். பாருங்கள்! ஒருவர் தனது தொழிலில் இருந்து எப்படி மகிழ்வைப் பெற்றுக் கொள்கிறார் என்று. தான் செய்யும் தொழிலில் இருந்து சம்பளத்தை மட்டும் பெறுபவர்கள் போன்ற பரிதாபத்திற்குரியவர்கள் யாரும் இருக்க முடியாது.
மனம் திறந்து பேசும் திறன்.
We talked with open heart and tongue
Affectinate and true
என்பது Words Worth இன் ஒரு கவிதை வரி. நானோ அல்லது எனது குடும்ப அங்கத்தினர் யாருமோ நோயாளி என்ற நிலையில் டொக்டர் எம்.கே.எம் அவர்களைச் சந்தித்துத் திரும்பும்போது மேலே சொன்ன வரி எனக்கு நினைவு வருவதுண்டு. நோயாளி என்ற நிலையில் வருபவரோடு கூட மனம் திறந்து உண்மையாகப் பேசும், உண்மையாக நடந்து கொள்ளும் மருத்துவர்கள் குறைவு. அந்த ஒரு சிலரில் எம்.கே.எம் முக்கியமானவர். வைத்தியம் கூட வியாபாரமாகிவிட்ட இன்றைய நவீன உலகில் இவர் ஒர வைரம். இவர் ஒரு முத்து.
ஆக எம்.கே.எம் அவர்கள் ஒரு நல்ல எழுத்தாளராக இருப்பதால் சிறந்த விமர்சகராக இருக்கிறார். சிறந்த விமர்சகராக இருப்பதால் நல்ல வைத்தியராக இருக்கிறார். நல்ல வைத்தியராக இருப்பதால் உன்னத எழுத்தாளராக இருக்கிறார். மொத்தத்தில் உன்னத ஆளுமை வாய்க்கப் பெற்ற ஒரு மனித மாணிக்கமாக விளங்குகிறார்.
மணிவிழாக் காணும் எம்.கே.எம் அவர்கள் இன்னும் பல நூல்களை எழுத வேண்டும். இன்னும் பல லட்சம் மனிதர்களுக்கு வைத்திய உதவி செய்து அவர்களின் வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதோடு தானும் நீடு வாழ்ந்து நூற்றாண்டு விழாப் பொலிவு காண வேண்டும்.
-கோகிலா மகேந்திரன்
நன்றி:- தினக்குரல்- 27.03.2008
Read Full Post »