Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2008


அந்தப் பையனுக்கு அடுத்த வாரம் திருமணமாக இருந்தது.

ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா? அதனால்தான் சொல்ல வெட்கப்படுகிறானா? நேரிடையாகவே கேட்டேன்.

‘நான் சின்ன வயசிலை கெட்ட பழக்கம் பழகியிட்டன. இப்ப கைவிட்டிட்டன். அதான் அது அது …’ எனத் திணறினான்.

‘அது என்ன கெட்ட பழக்கம்?’

‘நான் என்ரை கையாலேயே …’ மீண்டும் திக்கினான்.

‘சுய இன்பமா?’ வினவினேன்.. தான் நினைத்ததை நான் சொல்லிவிட்டேன் என்பதில் அவன் முகம் மலர்ந்தது.

இவனைப்போல சுயஇன்பம் செய்ததையிட்டு குற்ற உணர்வூடன் வருபவர்கள் பலர். இரவில் தானாகவே ஸ்கல்தமாவதால் தனது ஆண்மை பாதிப்படையுமா என பயந்து வரும் இளைஞர்கள் தொகையும் அதிகம்.

உண்மையில் இவை எவையுமே பிற்காலத்தில் பாலியல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் கெட்ட செயல்களல்ல. ஆபத்தான நோய்களுமல்ல. தன்னைத்தானே நொந்து கழிவிரக்கம் கொள்ள வேண்டிய ஈனச் செயல்களுமல்ல.

பதின்ம வயதுகளில் பையன்களின் ஆண் உறுப்பு வளர்ச்சியடைகிறது. விந்து உற்பத்தியும் தொடங்குகிறது. அது வெளியேற வேண்டும்தானே? பானை நிறைந்தால் நீர் வெளியே சிந்தும். இதுபோல உற்பத்தியாவது ஏதாவது வழியில் வெளியேறவே செய்யும்.

எனவே தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். அவ்வாறு வெளியேறும்போது ஒரு வகை இன்பத்தையும் உணர்கிறான். சற்று ஆராய்ச்சி மனமுள்ள பையன் தனது கையால் அதை வெளியேற்றிப் பார்க்கிறான். அதில் மேலும் ஆனந்தமடைகிறான்.

இதேபோல பெண்பிள்ளைகளும் தமது உறுப்புகளின் வளர்ச்சியை அவதானிக்கிறார்கள் தொட்டுப் பார்க்கிறார்கள். உறுப்பின் மொட்டை வருடுவதால் சுயஇன்பம் பெறுவதுண்டு.

இவை இயற்கையானவை, ஆபத்தற்றவை. எதிர்பாலத்தில் கணவன் மனைவி இடையேயான உடலுறவைப் பாதிக்கப் போவதில்லை.

மாறாக ஓரினப் பாலுறவு சர்ச்சைக்குரியது.

பலரும் தமது பதின்ம வயதுகளில் இதையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள். இதுவும் இயல்பானதுதான்.

ஆனால் ஆபத்தற்றது என்று சொல்ல முடியாது.

காரணம் ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ அங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அதாவது ஹேர்பீஸ், கொனரியா, சிபிலிஸ் முதல் எயிட்ஸ்வரை எதுவுமே தொற்றக் கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே.

ஆயினும் எனக்கும் தொற்றியிருக்குமோ என மனத்துக்குள் மறுகி துன்பப்பட்டுக் கொண்டிருக்காது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும். இவற்றில் பலவற்றிற்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கின்றன. வைத்தியரிடம் எதையும் சொல்ல தயங்கவோ, வெட்கப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை. அவர்கள் இரகசியம் காப்பவர்கள்.

வெளிப்டையாகப் பேசி ஆலோசனை பெறாது மனத்துக்குள் அடக்கி வைப்பதால்தான் பலர் திருமணத்தின் பின் குற்ற உணர்வுக்கு ஆளாகி பீதி, பதகளிப்பு, மனச்சோர்வு, உடலுறவில் சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆளாகி தமது திருமண வாழ்வின் மகிழ்ச்சியையே தொலைத்து விடுகிறார்கள்.

பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத எமது சமூகச் சூழலில் திருமணத்திற்கு முன்னான ஆற்றுப்படுத்தல் (Premarital Councilling) செய்வது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

திருமணமாக இருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் இது அவசியம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து ஆற்றுப்படுத்துவதற்கு எமது சமுதாயம் தயாராகாத நிலையில் தனித்தனியாகவும் செய்யலாம்.

பாலியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே இது அவசியம் என்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.

வைத்தியர்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மத நிறுவனங்கள் மேலும் பொருத்தமாக இருக்கலாம். மதகுருமார்களுக்கு அதில் சிறு பயிற்சி அளித்தால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>
காய்ச்சல் சளி என வந்தவரைச் சோதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவரது மார்பிலும், முன்னங்கைகளிலுமுள்ள தோலில் தென்பட்ட தேமல் போன்ற நிற மாற்றங்கள் எனது கவனத்தை ஈர்த்தன.

‘இவை எவ்வளவு நாளாக இருக்கு’ எனக் கேட்டேன்.

‘கன நாளாக் கிடக்கு. அவ்வளவு பெருக்கவும் இல்லை. சொறிவு வலி எண்டு ஒரு பிரச்சனையும் இல்லை. சும்மா கிடந்திட்டுப் போகட்டும் எண்டு விட்டிட்டன்’ என்றார்.

உண்மையில் அவர் நினைப்பது போல அது அசட்டை பண்ணக் கூடியதல்ல!

சொறிவு, வலி எதுவும் இல்லாதிருப்பதுதான் பிரச்சனை. அவ்வாறான தொந்தரவுகள் இல்லாதிருப்பதால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதும் உண்மையே. ஆனால் பரிசோதனையில் அவ்விடத்தில் தோலின் உணர்திறன் சற்றுக் குறைந்திருந்தது.

முக்கியமாக தொடுகை, வெப்பம், வலி போன்றவற்றை உணரும் திறன் குறைந்திருந்தது. தேமல் போன்ற அந்தத் தோற்பகுதி வழமையான தோல் நோய்களைப் போல வெள்ளையாகவோ, கருப்பாகவோ, செந்நிறமாகவோ இருக்கவில்லை. சற்று வெளிர்மையான தாமிர வண்ணத்தில் இருந்தமை கூர்ந்த அவதானிப்பில் தெரிந்தது.

இது தொழுநோயின் அறிகுறி.

திடீரெனத் தோன்றுவதும் வேகமாகப் பரவுவதும், படையாகத் தோல் உரிவதும், விரைவாக மறைவதுமான தோல்நோய்கள் தொழுநோயாக இருக்க முடியாது. ஒரு சிலருக்கு தோல் நோய் போலன்றி, கை கால்களில் நீண்ட காலம் விறைப்புத்தன்மை தொடர்ந்து நிலைப்பதும் தொழுநோயாக இருக்கக் கூடும்.


தொழுநோய் என்பதை மருத்துவத்தில் Leprosy என்பார்கள். தொழுநோய் என்றதும் ரத்தக்கண்ணீரில் எம்.ஆர் ராதாவும், கப்பலோட்டிய தமிழன் சுப்பிரமணிய சிவாவும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். விரல்கள் அழுகி விழுவது போன்ற ஒரு அருவருப்பான நோயாகத்தான் பலருக்கும் இது அறிமுகமாயிருக்கிறது.

ஆனால் இது மிகவும் தவறான கருத்தாகும். பலரும் நம்புவது போல தொழுநோய் காரணமாக அவ்வாறு கை, கால் விரல்கள் அழுகி விழுந்துவிடுவதில்லை. அத்தோடு நோயாளின் தோலிலுள்ள தேமல் போன்ற தோலின் பகுதியிலிருந்து ஒருவரிலிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதில்லை.

மாறாக நோயுள்ளவர் தும்மும்போதும் இருமும் போதும் பறக்கும் நுண்சளித் துகள்கள் மூலமே பரவூகின்றன. கெட்ட சகவாசத்தாலோ, விபசாரிகள் தொடர்பினாலோ வருவதில்லை. எனவே வெட்கப்பட வேண்டிய அவமானகரமான நோயுமல்ல.

தொழுநோய் என்பது வேகமாகத் தொற்றும் நோயல்ல. காரணம் 90சதவிகிதத்திற்கு மேலான மக்களுக்கு இதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே இருக்கிறது. தொற்றினாலும் மிக மெதுவாகவே வெளிப்படும். நோய் தொற்றி வெளித்தெரிவதற்கு மூன்று வருடங்கள் வரை கூடச் செல்லலாம். ஆண் பெண் குழந்தை முதியவர் என வயது வேறுபாடோ, பால் வேறுபாடோ இன்றி எவரையும் பாதிக்கக் கூடியது இது. நோயாளியின் சருமத்தையும் நரம்புகளையும்தான் இந்நோய் பிரதானமாகப் பாதிக்கும்.


இன்று தொழுநோய் என்பது மாற்ற முடியாத அணுஅணுவாகச் சாகடிக்கும் நோயுமல்ல. இப்பொழுது இந் நோயைக் குணமாக்கக் கூடிய நல்ல மருந்துகள் கிடைக்கின்றன. Multi Drug Treatment (MDT) எனப்படும் இம்மருந்துகள் இலவசமாக அரச மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. இவற்றை அங்கு தரப்படும் சரியான ஒழுங்கு முறையில் ஆறு மாதங்கள் தொடர்ந்து உபயோகிக்க பூரண சுகம் கிடைக்கும்.

இந்த மருந்துகள் ஆபத்தற்றவை. கர்ப்ப காலத்திலும், தாய்ப்பாலூட்டும் காலத்திலும் கூட உட்கொள்ளக் கூடிய அளவிற்குப் பாதுகாப்பானவை.

ஒருவரது தொழுநோய் ஆரம்பத்தில் தொற்றும் தன்மையானதாக இருந்தாலும் கூட இம்மருந்தை உபயோகிக்க ஆரம்பித்தவுடன் தொற்றும் வீரியத்தை இழந்துவிடும். எனவேதான் இன்று அந்நோயுள்ளவர்களைத் தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை செய்வதில்லை. சொந்த வீட்டிலேயே மற்றவர்களுடன் கூட இருந்தே சிகிச்சை தொடரப்படுகிறது.


பிள்ளைகள் பாடசாலை செல்லலாம். பெரியவர்கள் தங்கள் தொழிலைத் தொடரலாம். திருமணம் செய்யவும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவும் முடியும். மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழலாம். சமூகத்திற்கோ, குடும்ப அங்கத்தவர்களுக்கோ அவர்களால் எந்தவித ஆபத்தோ பாதிப்போ கிடையாது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும், தொடர்ந்து செய்து முடிப்பதும்தான் முக்கியமானதாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »