>
தூங்குவது போலும் சாக்காடு என்றான் வள்ளுவன்.
இதன் அர்த்தம் என்ன? தூக்கம் என்பது மரணத்தைப் போன்றது என்பதுதானே. அதாவது உடல் மனம் யாவும் செயலிழந்து மரக்கட்டை போலக் கிடப்பதாகும்.
இது சரியான கருத்துத்தானா?
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் ஞானியான வள்ளுவன் மட்டுமின்றி மிக அண்மைக் காலம் வரையான விஞ்ஞானிகளும் இதையே சரியான கருத்தெனக் கொண்டனர். அதாவது சுமார் 1950 வரை முழு உலகமுமே தூக்கம் என்பது, உயிரினங்கள் செயலற்று அடங்கிக் கிடக்கும் காலம் என்றே எண்ணி வந்துள்ளனர். ஆனால் பல ஆய்வுகளின் பலனாக அது மறுதலிக்கப்படுகிறது.
இப்பொழுது அது தவறான கருத்து என்பதை விஞ்ஞான உலகம் மட்டுமின்றி, சாதாரண மக்கள் கூட அறிந்துள்ளனர். தூக்கத்தின போது கூட எமது மூளையானது முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருப்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அத்துடன் தூக்கமின்மையானது நாளாந்த வாழ்வின் இயக்கத்தை பாதிக்கிறது. தூக்கமானது எமது உடல், மன ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதல்ல.
எமது தூக்கத்தை எவை கட்டுப்படுத்துகின்றன?
நரம்புக் கலங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் இரசாயன நரம்புத்; தூண்டிகள்தாம் (neurotransmitters). இவை நாங்கள் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் நரம்புக் கலங்களைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வௌ;வேறு நேரங்களில் வௌ;வேறு நரம்புத் தொகுதிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
எமது மூளையையும் முண்நாணையும் இணைக்கும் நரம்புத்தண்டானது சிரோடொனின் (serotonin)மற்றும் நோஎவிநெவ்ரின் (norepinephrine) போன்ற இரசாயன நரம்புத்; தூண்டிகளைச் சுரக்கிறது. இவை நாம் முழிப்பாக இருக்கும் போது எமது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன.
இதேபோல நாம் தூங்கும் போது எமது மூளையின் அடிப்பாகத்திலிருக்கும் வேறு நரம்புக் கலங்கள் இயங்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நாம் தூங்கும் போதும் மூளை இயங்குகிறது, ஆனால் பலத்த சத்தம் கேட்டால் விழித்தெழச் செய்கிறது. இருதயம் சீராகத் துடிக்கிறது. சுவாசம் ஒழுங்காக நடக்கிறது. இவ்வாறு நாம் தூங்கும் போதும் உடலும், முளையும் எமது நினைவறியாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.
நாம் நீண்ட நேரம் விழித்திருக்கும் போது தூக்கக் கலக்கம் வருவதற்குக் காரணம் என்ன?
நாம் விழித்திருக்கும் போது எமது குருதியில் அடினோசின் (adenosine) என்ற இராசாயனப் பொருளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விழித்திருக்கும் நேரம் கூடக் கூட குருதியில் அடினோசினின் செறிவு அதிகரித்து எமக்கு தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. பிற்பாடு நாம் தூங்கும் போது இவ் இரசாயனமானது படிப்படியாக சிதைந்து மறைந்து போகிறது.
இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இதன் மூலம் புரிவது என்னவென்றால் நாம் விழித்திருக்கும் போது எமது குருதியில் சேரும் ‘கழிவுப்பொருளா’ன அடினோசின் சிதைந்து அழிய வேண்டும். அதற்குப் போதிய நித்திரை தேவை என்பதுதானே. நாம் தூங்கும் நேரத்திலும் மூளையானது செயற்பட்டே இந்த இரசாயனத்தை அழிக்கிறது. அதனாலேயே மூளை மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.
எவ்வளவு நேர தூக்கம் தேவை?
ஒரு வயதிற்கு உட்பட்ட பாலகர்களுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் தேவையாகும். ஆனால் பதின்ம வயதினருக்கு 9 மணிநேர தூக்கம் தேவை என வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஏ.எல் படிக்கும் உங்கள் பிள்ளை எத்தனை மணிநேரம் தூங்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பாருங்கள். ‘இவன் படியாமல் தூங்குகிறான்’ என நீங்கள் குற்றம்சாட்டுவது உண்டாயின் அது சரிதானா என மறுபரிசீலனை செய்யுங்கள்.
வளர்ந்த மனிதனுக்கு எவ்வளவு நேரத் தூக்கம் தேவை? எட்டு மணிநேரம் என வாய்ப்பாடு போல பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது சரிதானா? அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டு Daniel F. Kripke.MD ஆனு தலைமையிலான குழுவினரால் ஆறு வருடங்கள் செய்யப்பட்ட ஆய்வு மனிதர்களுக்கு 8 மணித்தியால் தூக்கம் தேவையற்றது என உறுதியாகக் கூறுகிறது. தினமும் ஏழு மணி நேரம் தூங்குவதே திருப்தியானது, அதுவே ஆரோக்கியமானது என அதே ஆய்வு மேலும் தெளிவுறுத்துகிறது.
இருந்தபோதும் வளர்ந்தவர்களுக்கு தினசரி 7 முதல் 8 மணி தேவை என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் 5 மணிநேரம் மட்டும் தூங்கிவிட்டு தினமும் உற்சாகமாக உலவும் மனிதர்களும் இருக்கிறார்கள்.. மறுபுறம் 10மணிநேரம் தூங்கினால்தான் திருப்தி அடைபவர்களும் இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிலும் முக்கியமாக கர்ப்ப காலத்தின் முதல் மூன்றுமாத காலத்தில் சாதாரணமானவர்களை விட பல மணிநேர தூக்கம் மேலதிகமாகத் தேவைப்படுகிறது.
வயதாகும்போது மனிதர்களின் தூக்கம் ஆழமற்றதாகவும், குறுகிய காலத்திற்கே நீடிப்பதாகவும், அடிக்கடி வரும் குறும் தூக்கமாகவும் இருக்கும். ஆனால் மொத்தமாகக் கணக்கெடுத்தால் இளமைப் பருவத்தில் பெற்ற தூக்கத்திற்கு ஏறக்குறையச் சமனாகவே இருக்கும். ஆயினும் 65ற்கு மேற்பட்ட பலருக்கும் தூக்கக் குறைபாட்டுப் பிரச்சனைகள் இருபதுண்டு. இது வயதாவதாலும் ஏற்படலாம், அவர்களுக்கு இருக்கும் மூட்டுவலி, ஆஸ்த்மா, இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களால் ஏற்படலாம். அல்லது அதற்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளும் காரணமாகலாம்.
ஒரு நாளுக்கு ஒழி என்றால் ஒழியாய், இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் என ஓளவை வயிறு பற்றிப் பாடினார்.
வயிறானது ஒரு நாளுக்கு உண்ணாமல் இருக்கவும் மாட்டாது. உணவை ஒழித்த ஒரு நாளுக்காக மறுநாள் இரு மடங்கு சாப்பிடவும் மாட்டாது.
ஆனால் தூக்கம் அப்படியல்ல.
தூக்கத்தை முற்கடனாகக் கொடுக்குமோ தெரியாது.
ஆனால் பாக்கியை வசூல் பண்ணத் தயங்காது. ஒரு நாள் உங்களுக்கு தூக்கம் போதாது இருந்தால் மறுநாள் சற்று அதிகம் தூங்கி உங்கள் உடல் அதனை ஈடு செய்யும் ஆற்றல் கொண்டது. ஆனால் கடன் அதிகமானால் கவனஈர்ப்புத் திறன், முடிவு எடுக்கும் திறன், செயற்படும் திறன் போன்ற பல உடற் செயற்பாடுகள் பாதிப்புறும்.
உங்கள் தூக்கம் போதுமானதா என்பதை எவ்வாறு அறிவது?
- பகல் நேரத்தில் நீங்கள் தூங்கி வழிந்தால் நீங்கள் முதல் இரவு கொண்ட தூக்கம் குறைவானது என்றே அர்த்தமாகும்.
- முக்கிய வேலையின் போது தூங்கி வழிந்தால் மட்டுமின்றி, சலிப்படையச் செய்யும் வேலையின் போது தூங்கி வழிந்தால் கூட போதாது என்றே கொள்ள வேண்டும்.
- ஒருவர் படுக்கையில் சாய்ந்த 5 நிமிடங்களுக்குள் வழமையாகத் தூங்கிவிடுகிறார் எனில் அவருக்கு பாரதூரமான தூக்கப் போதாமை இருக்கக் கூடும் அல்லது தூக்கக் குறைபாட்டு நோய்கள் இருக்கக் கூடும் என இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.
கோழித் தூக்கம் என்பதும் இதன் மற்றொரு வெளிப்பாடு ஆகும்.
கோழித் தூக்கம் என்றால் என்ன?
முழித்திருக்கும் வேளைகளில் தன்னை அறியாமல் கண்ணயர்வதைத்தான் நாம் கோழித் தூக்கம் என்கிறோம். ஆங்கிலத்தில் Microsleep என்கிறார்கள்.
அண்மையில் ஒரு ஆய்வு. ஜெர்மனி நாட்டில் உள்ள டுச்செல்டர்ப் பல்கலைக்கழகத்தில் டொக்டர் ஒலாப் லஹ்ல் தலைமையில் செய்யப்பட்டது..
தூக்கம் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது என அவரது ஆய்வின் முடிவு கூறுகிறது.
பள்ளி மாணவர்களிடையே அவர் இந்த ஆய்வினை நடத்தினார். முதலில் மாணவர்களுக்கு சில வார்த்தைகளை மனப்பாடம் செய்யக் கொடுத்தார். அவர்களில் ஒரு பகுதியினரை 5 நிமிடங்கள் தூங்கச் சொன்னார். மற்றவர்களை தூங்காது விழித்திருக்கச் சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து அவர்களின் நினைவாற்றலை அவர் பரிசோதித்த போது, விழித்திருந்த மாணவர்களை விட, தூங்கிய மாணவர்களால் மனப்பாடம் செய்த வார்த்தைகளை எளிதில் நினைவு படுத்தி சொல்ல முடிந்தது.
கற்றவற்றை மனத்தில நிறுத்துவதற்கு தூக்கம் அவசியம் என்பது இதனால் தெரிகிறது அல்லவா? உங்கள் பிள்ளைகள் திறமாகக் கற்க வேண்டுமாயின் போதிய தூக்கம் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
மிட்சிகன் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது குண்டுக் குழந்தைகள் பற்றியது. போதிய அளவு தூக்கம் அற்ற குழந்தைகள் அதீத எடையுள்ளவரகளாக வளரக் கூடும் என்கிறது அவ் ஆய்வு.
உண்மையில் தூக்கம் என்பது ஒரு மர்ம மாளிகையாகும். அதன் வாசல்களைத்; திறந்து அதனுள் மறைந்திருக்கும் இரகசியங்களை விஞ்ஞானிகள் துருவிக் கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் ஆங்காங்கே சில கீற்றுக்கள்தான் தென்படுகின்றனவே ஒழிய தூக்கத்தை இன்னும் ஒருவரும் முழுமையாகப் புரிந்து கொள்ளவே இல்லை. அது வரை போதிய தூக்கம் கொண்டு மூளையைச் சுறுசுறுப்புடன் காப்பாற்றிக் காத்திருப்போம்.
எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- ஜீவநதி (முதலாவது ஆண்டு மலர்- வைகாசி, ஆனி 2008)