விடுதலை அவாக்கொண்ட இந்தக் குரலிலுள்ள ஆழ்ந்த துயரம் உங்களுக்குக் கேட்கிறதா? உற்றுக் கேட்டுப் பாருங்கள்.
‘தெளிவுடன் படுத்திருந்தபோதும் விடுதலை தேவைப்பட்டது. விறைப்பு, அது தரும் வருத்தம், சுகத்தின் நழுவல் யாவும் உலுப்பியது. எழுந்து பாய்ந்தோட முடியவில்லை. அது இயலுமாயின் ஒன்றுமில்லை. வானகத்தில் கிளம்பிப் பார்க்க ஓடுகளும் கைமரங்களும் தடுத்தன.’
கால்கள் உணர்வின்றி மரத்துப்போய்க் கிடக்க, எழுந்து நடமாடவும் முடியாதபடியான நலக்கேட்டின் உடல் வேதனையும் மன வேதனையும் பாராங்கற்களாய் அழுத்த, விடுதலை வேண்டும் என ஓலமிடும் அவலக் குரல் அது. மரணத்தைத் தவிர வேறென்ன விடுதலை இந்த உயிருக்குச் சாத்தியமாகும்?
இந்த வாக்கியங்கள் எத்தகைய உணர்வலை உங்களிடையே எழுப்பினவோ தெரியாது. ஆனால் ‘இத்தகைய நிலை வந்தால் ..’ என்ற கற்பனை மூளை கலங்களுக்குள் உறையவே, விரிந்த கடலின் கரும் ஆழத்துக்குள் மூழ்கடிக்கும் துயராய் எனது ஆன்மாவை அமுக்கிக் கொண்டது. ஆயினும் தொடர்ந்து வாசிக்கும்போது, அது நம்பிக்கை வரட்சி எனும் கொள்ளை நோய்க் கிருமியாக ஊடுருவிப் பரவாது, வாழ்வின் மீதான பற்றுதலையும் வளப்படுதுவதாகவே உணர்ந்தேன்.
த.ஆனந்தமயில் என்ற அதிகம் அறியப்படாத, அகவுணர்வு உந்த உள்மன யாத்திரை செய்யும் எழுத்துச் சிற்பியின் ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற புதிய நூல் வெளியாகியுள்ளது. இந்த நூலிலுள்ள ‘கலை தந்தபோது’ என்ற கதையைப் படித்தபோது எழுந்த உணர்வுகளே மேற்சொன்னவை.
62 பக்கங்களுக்குள் 12 சிறுகதைகளை அடக்கிய குறு நூல் இது.
ஆயினும் ஈழத்து இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பேராற்றல் மிக்கது.
இதற்குக் காரணம் இந்தச் சிறுகதைகள் சொல்லப்பட்டுள்ள விதம்தான். எமது தேசத்தின் பெரும்பாலான சிறுகதைகள் போல இவை வெறுமனே கதையைச் சொல்லிச் செல்லும் சிறுகதைகள் அல்ல. அடுக்கடுக்கான சம்பவங்களையும் திடீர்த் திருப்பங்களையும் கொண்ட கதைகளும் அல்ல. அதற்கு மாறாக வரட்சியான வசனங்களையும் தத்துவ விளக்கங்களையும் கொண்ட ஓட்டம் அற்ற பொதுசன ரசனைக்கு அப்பாற்பட்ட ‘உயர் இலக்கியப் படைப்பும்’ அல்ல.
இவற்றிற்கு மாறாக அந்த நூலில் அடங்கும் படைப்புகள் அனைத்துமே சுய அனுபவத்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம் காட்டும் கண்ணாடிபோல எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. இவற்றால் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்தபோதும் தகவல் களஞ்சியம் போன்ற அனுபவக் குறிப்புகளாகக் கணிக்கக் கூடிய கதைகளும் அல்ல. ஆழ்ந்த ரசனையும், கூர்ந்த அவதானிப்பும், மானிட நேயமும் கொண்ட ஒரு சாதாரண குடிமகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித்தரிப்பு என்றே சொல்ல வேண்டும்.
நூலின் முதலாவது சிறுகதையாக அமைவது ‘ஒற்றைக்கால் கோழி’. எள்ளலும் அங்கதமும் விரவிக் கிடக்க, வடமராட்சியின் வழக்கு மொழியின் இனிமை ஆங்காங்கே தெறித்து விழ, கவித்துவமான வரிகள் மனசோடு பேச நான் மிகவும் இரசித்துப் படித்த கதைகளில் இதுவும் ஒன்றானது. கதையின் உள்ளடக்கம் ஏதோ புதினமானது அல்ல.
கதையின் பிரதான பாத்திரங்கள் கோழியும் அவரும்தான். அவர் ஒரு எழுத்தாளர், அதுவும் வேலையிழந்த பிறகு ஒருவித ஆத்திரசுபாவம் எழும் ஒருவர். ‘அற்புதமான கதைக் கருவைச் சுமந்து கொண்டு வந்தவருக்கு’ தான் உட்கார்ந்திருந்து எழுதும் கதிரையில் கோழி படுத்திருப்பதைக் கண்டு ‘… கரு உருப்படாமல் சிதைய எல்லாம் அவருக்கு குழப்பமாகிவிட்டது’. ஆத்திரம் மேலிட அவரிட்ட கத்தலில் மனைவி கோழியை ஒரு மரத்தில் ‘தளர்ச்சி மடங்கால்’ கட்டிப்போட்டாள். கட்டிப் போட்ட கால் புண்ணாகி சீழ்பிடிக்க, நோய்க் கோழியாகி தின்னவும் முடியாமல் ‘மீனை எதிர்நோக்கி நிற்கும் கொக்காய், கண்களைச் செருகி ஒரு இறப்பை எதிர்நோக்கி நின்றது’ என மிக நயமாகப் பதிவு செய்கிறார்.
நாளடைவில் கோழியில் மாற்றம் தென்பட்டது. ஓற்றைக் காலால் கெந்தி நடக்க ஆரம்பிக்கிறது, சாப்பிடுகிறது. பிறகு புண்பட்ட கால் அழுகி விழுந்தது தெரிகிறது. உச்சகட்டமாக பக்கத்து வீட்டு சேவல் இதை மிதிக்கவும் செய்கிறது.முடமாகிப் போனாலும் வாழ்வு அஸ்தமித்து விடுவதில்லை. திடமிருந்தால் அதிலிருந்து மீளவும், வாழவும் முடியும் என்பதை குறியீடாகச் சொல்லும் கதை. ஆயினும் கதையம்சத்தை விட நடைமுறை வாழ்வின் தரிசனமாகவே ஒலிக்கிறது. வேலையின்மை, போதிய வருமானம் கிடைக்காமை, அதனால் ஏற்படும் மன உழைச்சல், கணவன் மனைவியிடையேயான கருத்து வேறுபாடு, அதை அனுசரித்து நடத்தல் என நிச வாழ்வின் பிரதிபலிப்பாக உள்ளது.
‘கோழியை சிறகில் பிடிக்க, அது பக்கத்து வீடுகளில் இன்று தம்பி வீட்டில் இறைச்சிக் கறிதான் என்று பிரஸ்தாபிக்க…’
‘காவிப் பற்களை எப்படியும் இன்று வெள்ளையாக்கி விடவேண்டும் என்ற முனைப்புடன் பழைய தகரம், வளரும் தென்னம்பிள்ளை, பயன்பாட்டை முடித்துக் கொண்ட பானை சட்டி, தறித்த உணாமர வேர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு…’
‘ஆத்திரம் கொப்பளிக்க – மனைவி மூன்றாம் வீட்டில் நிற்பதாக நினைத்து- பலத்து அவளை அழைத்தார்.’
இவ்வாறு கதை முழுவதும் உள்ளத்துள் உவந்து சிரிக்க வைக்கும் அங்கதமும், உள்ளத்தைச் சிலிர்க்க வைக்கும் செழுமையான நடையும் நிரம்பிக் கிடக்கின்றன. மல்லிகையில் ஐப்பசி 1981ல் இது வெளியாகியுள்ளமை குறிப்படத்தக்கது.
இரண்டாவதாக, ‘தை மாசியில் சமுத்திரம் சாந்தமாகிக் குளம் போலக் கிடந்தது’ என கள அறிமுகத்துடன் ஆரம்பிக்கும் கதையானது ‘முருகைக் கற்பூக்கள்’ ஆகும். கடலரசின் பாதாள அந்தப்புரத்தில் ரகசியமாகப் புதைந்து கிடக்கும் வனப்பை கலையழகோடு பதிவு செய்யும் தனித்துவமான படைப்பாகும். ‘எவ்வளவு அழகான குகைகள், சோடனைகள், அவற்றை அலங்கரித்து வைத்திருக்கும் கடல்தாய் எவ்வளவு அற்புதமானவள். மஞ்சள் குருத்துப் பச்சையாய், ஊதாவாய் முருகைக் கற்பூக்கள் மலர்ந்திருநதன. கற்பார்கள் பவளம் போல தோன்றன. வர்ணம் தீட்டிய மீன்கள் வகைவகையாக நீந்தித் திரிந்தன. சூரியக்கதிர்கள் நீரினூடாக…’ என கடலின் அழகை நேர்நின்று எம்மைப் பார்க்க வைப்பதுபோலச் சித்தரிப்பதுடன், கடல் சார் தொழிலின் நுட்பங்களை அனுபவத் தேர்ச்சியுடன் தருகின்ற படைப்பு இது.
கடற்தொழில் முன்னைய காலங்களில் சிறப்பாக நடந்தபோது ‘ கடற்கரை சந்தோஷத்தில் பூரித்தது. கிளித்தட்டுகள் விளையாடினர்….. கரகம் எடுத்தனர். கூத்தும் நாடகமும் போட்டனர். பந்து விளையாடினர்..’ என அவர்கள் வாழ்வின் இனிய பக்கத்தை சொற்சித்திரமாக வரைகிறார்.
ஆம்! அது ஒரு ரம்மியமான காலம். ஆனால் இன்று?
‘ வெறுமை கனக்கிறது. கரையெங்கும் சிதைந்த வீடுகளும் உடைந்த கலங்களுமே கிடக்கின்றன… மீன்கண்ணி பாடவில்லை…. எங்கும் அகதிமை தெரிகிறது. சிறுகட்டுமரங்களே மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முனைக்கு உட்புறமாகவே தொழில் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போகிறார்கள்’ என்றெல்லாம் விபரித்துக் கொண்டு போகையில் வாழ்ந்த நாட்களின் செழிப்பும், வளமிழந்த நாட்களின் துன்பமும் கடலின் அலைகள் போல எம்மையும் துயரத்தில் நனைத்துப் பரவுகின்றன.
‘நிலத்தின் மீனாய் கடற்கரை ஊர்மனைக்குள் துடிக்கிறது. இளமையின் முருகைக் கற்பூக்கள் அழுகின்றன.’ எனக் கவிதை வரிகளாக அக் கதையை நிறைவு செய்கிறார்.
‘காக்காச்சி கரிமகளே’ மற்றொரு வித்தியாசமான படைப்பு. வாழ்வின் ஆறாத் துயரம் செறிந்த காட்சிகளைக் கூட உணர்ச்சி வசப்படுத்தி கண்ணீருக்குள் ஆழ்த்தும் சின்னத்திரை நாடகங்கள் போலன்றி, சிலேடையும் எள்ளலும் கூடி வர சிந்திக்க வைக்கும் கலைப்படைப்பாக ஆக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணமாகும். கடலோரக் குடிசையில் பிறந்த பெண்ணை ‘இராஜகுமாரி’யாகவும், அவள் வாழ்ந்த வீட்டை ‘சுவாத்திய வசதிக்கான மண்வீடாகவும்’;, அவளது தொழிலை ‘பொன்னிற சுளகுடனும் பெட்டியுடனும் வெள்ளி மீன் வர்த்தக’மாகவும், ‘பிரயாணத்திற்கான வாகனமாக தனது திருப்பாதங்களையும்’ என உருவகித்துக் கூறுவன நயந்து ரசிக்கத்தக்கன. கதையின் ஊடே போரின் கொடுரமும், இடப்பெயர்வின் அவலமும், இழப்புகளின் துயரமும் மென்குரலில் பேசி, பின்னாலுள்ள அரசியலையும் நாசூக்காகப் சுட்டியே நகர்கின்றன.
சிகரங்கள், லவுஸ்பீக்கர், மேளச்சமா, சகடை, சின்னமேளம், மெல்லிசை, வாணவேடிக்கை என ஒரு காலத்தில் கிராமத்தின் முக்கிய ஒன்றுகூடல் நிகழ்வாயிருந்த ஊர்த்திருவிழா பற்றியது ‘திருவிழா’ என்ற சிறுகதை. ஒரு பெண்ணின் பார்வையாக மிகவும் அலாதியாகச் சொல்லப்படுகிறது. நிகழ்வுகளை சுருக்கமாகவும் செறிவாகவும் சொற்களால் விதைத்து செல்வதுடன் ‘எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்ற முற்போக்குக் கருத்தை நோக்கி நகர்தியிருப்பது கவனத்திற்குரியது.
எனக்கு அறவே புரியாத படைப்பு ‘கொலுமீட்பு’. மீண்டும் வாசித்துப் பார்த்த போதும் தெளியவில்லை. ஏதாவது வசனங்கள் தவறுதலாக இடம் மாறிப் போடப்பட்டிருக்கலாம் என என்னை நானே திருப்திப்படுத்திக் கொண்டேன். ஆயினும் இந்த நூலின் வடிவமைப்பையும், அச்சுப்படிகள் திருத்துவதையும் யேசராசா ஏற்றிருந்தார் என்பதை ஆனந்தமயிலின் மகன் நித்திலவர்ணனின் பதிப்புரையில் கண்டதால் தவறுக்கு இடமில்லை என்பது தெளிவு. ஏனெனில் யேசுராசா ஒரு போதும் அரைகுறை வேலை செய்பவரல்ல என்பது எனக்கு தெளிவாகத் தெரியும். எனவே இதைப் புரிந்து கொள்வதற்கான பக்குவம், பொறுமை அல்லது தேர்ச்சி எனக்கில்லை என்றே முடிவுற்றேன்.
சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் படைப்புத் தரம் கால ஓட்டத்துடன் மாறுபடுவது தெரியும். பெரும்பாலானவர்களின் ஆரம்பகாலப் படைப்புகள் மிகச் சாதாரண தரத்திலேயே இருப்பதுண்டு. தமது படைப்புகளும் பத்திரிகை சஞ்சிகைகளில் வரவேண்டும் என்ற ஆவலில் எழுத ஆரம்பிப்பர்கள் இவர்கள். அதாவது தமக்கான அடையாளத்தைத் தேடுபவர்களாக இருப்பர். அனுபவமும் காலநகர்ச்சியும் இவர்களது பிற்காலப் படைப்புகளின் தரத்தை உயர்த்தும். மாறாக ஆரம்பத்தில் சில நல்ல கதைகளைப் படைத்தாலும், இலக்கிய உலகின் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து தமது படைப்புகளின் தரத்தைப் பேண முடியாது பின்தங்குபவகைளும் ஒதுங்கிக் கொள்பவர்களும் அடுத்த பிரிவினர்.
ஆழ்ந்த இலக்கிய உணர்வும் தேடலும் கொண்டவர்களாக படைப்புலகுள் நுளைபவர்கள் மூன்றாவது பிரிவினர். இவர்களது படைப்புகள் கால ஓட்டத்துடன் நீர்த்துப் போவதில்லை. மாறாக பட்டை தீட்டிய வைரம்போல இறுதிவரை ஜொலித்துக் கொண்டே இருப்பார்கள்.
இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளில் நான்கு எழுபதுகளில் எழுதப்பட்டவையாக இருக்க, மூன்று எண்பதுகளிலும், ஏனைய ஐந்தும் தொண்ணூறுகளில் படைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பின் கடைசிக் கதையாக அமையும் ‘விளக்கீடு’ தான் காலத்தால் முந்தியதாக இருக்கிறது. அதாவது 1971ல் எழுதப்பட்ட படைப்பு. கணவனை இழந்த பின்பு பள்ளி செல்லும் தனது பிள்ளையை வளர்ப்பதற்காக சந்தையில் மீன் விற்கும் இளம் பெண் பற்றியது. ஊராரின் வசை மொழிகளைத் தாங்க முடியாது வீட்டைவிட்டு வெளியேறி மகனுடன் பிற ஊர் செல்ல விழைகிறாள். விளக்கீட்டன்று தனது ஓலைக்குடிலை நெருப்புடன் சங்கமமாக்கி அவர்கள் வசைமொழிகளையும் அதனுள் நீறாக்கி புது வாழ்வு தேடிப் புறப்படுகிறாள்.
இது அவரின் ஆரம்பகாலக் கதையாக இருந்துபோதும், அதீத கற்பனைகளற்று நாளாந்த வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற சம்பவச் சித்தரிப்புகளோ, மிகையான சொல்லாடலோ அற்ற சிக்கனமான சொற்சித்திரமாக அமைகிறது.
அன்று முதல் இன்றுவரை அவர் தனது படைப்புகளை கலாபூர்வமாக வெளிப்படுத்துவதில் அக்கறை கொண்டிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் கால ஓட்டத்தில் அவரது எழுத்துநடை மெருகேறியிருப்பதை நூல் முழுவதும் அவதானிக்க முடிகிறது.
கருவைப் பொறுத்தவரையில் அவரது ஆரம்ப காலப்படைப்புகளில் முற்போக்கு கருத்துகள் முனைப்புக் கொண்டிருந்தபோதும் பின்பு அரசியல், சூழல் மாற்றங்கள் காரணமாக இனப்பிரச்சனையால் மக்கள் எதிர்நோக்கும் துன்ப துயரங்களும் சவால்களும் முனைப்புப் பெற்றமை காலத்தின் நியதி எனலாம்.
‘அப்போதெல்லாம் சமதர்மம் நோக்கிய சமூக விடுதலையே அவர் சிந்தனையெல்லாம் குடிகொண்டிருந்தது. அவர் படைப்புகளும் அந்த அடித்தளத்திலேயே வேர்கொண்டவையாயினும் – கடல் சார்ந்த கிராமிய வழக்காறுகள் சார்ந்த, நம்பிக்கைகள் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் அவற்றை கலா பூர்வமாக பரிணமிக்கச் செய்தன’ என குப்பிழான் ஐ. சண்முகம் இந்நூலின் பின் அட்டைக் குறிப்பில் குறிப்பிடுகிறார். 1970லிருந்து நண்பனாயிருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர் ஒருவரின் கூற்று இதுவென்பது கவனிக்கத்தக்கது.
கடல் சார்ந்த கிராமியத்தின் சுயமான குரல், வறுமையின் துயரும், குடும்பப் பாரங்களின் சுமைகளும் அழுத்தும் அரச ஊழியனின் இயலாமைக் குரல், இயல்பான வாழ்விழந்து அந்நியத் துப்பாக்களின் கீழ் சுதந்திரமிழந்த போதும் வாய் மூடி மௌனிக்காது வார்த்தைகளின் கோலங்களுக்குள் மறைந்து நின்று அடக்குமுறையின் கொடூரங்களை அம்பலப்படுத்த முயலும் எதிர்ப்புக் குரல், சமதர்ம கோட்பாட்டில் உறுதியாயிருந்த குரல் எனப் பலவாறு ஆனந்தமயிலின் படைப்புகள் பற்றித் தொகுத்துக் கூறலாம்.
இருந்தபோதும் ஈழத்து புனைகதை விமர்சகர்கள் மற்றும் இலக்கிய ஆய்வாளர்களின் பட்டியல்களில் இதுவரை இவரது பெயர் இடம் பெறாமல் போனமை துரதிஸ்டம் என்றே சொல்ல வேண்டும். சம்பவங்களின் தொகுப்பு என்பதற்கு அப்பால் ஆழ்ந்த அவதானிப்புகளுடன், அகமன யாத்திரை செய்து, புனை மொழியின் செழுமையுடன் தனது சிறுகதைகளின் தரத்தை உன்னதங்களுக்கு உயர்த்தியிருக்கிறார் ஆனந்தமயில் என்பதை உறுதியோடு சொல்ல முடியும்.
அண்மையில் அ.யேசுராசா இவரது படைப்புமொழி அண்மையில் கூறியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பணனுள்ளதாக இருக்கும். “…. குறிப்பாக அவரது படைப்பு மொழி. நல்ல கதைகளை இங்கு எழுதியுள்ள எழுத்தாளர் பலரிடம் இவ்வாறு மொழி இன்பம் கிடைப்பதில்லை. லூசுன் எழுதிய ‘பைத்தியக்காரனின் நாட்குறிப்பு’ சிறுகதையும் ‘ஒரு எழுதுவினைஞனின் டயறியும்’ கதைப்பின்னலில் ஒன்றாகவே உள்ளன. எனினும் வெவ்வேறு அனுபவங்கள். எவ்வாறாயினும் ஆனந்தமயில்ன் கதையே கூடுதலாக ஈர்க்கிறது”
இப்படைப்புகள் வீரகேசரி, தினக்குரல் போன்ற செய்திப் பத்திரிகைகளின் ஞாயிறு வெளியீடுகளிலும், மல்லிகை, சமர், அலை போன்ற தரமான சிற்றேடுகளிலும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
அட்டைப்படம் இருவண்ணத்தில் மட்டும் அமைந்துள்ளதால் இன்றைய நவீன பல்வண்ண நூல்களுக்கு இருக்கும் கவர்ச்சி கிடையாது. ஆனால் குப்பிளான் இன்னொரு இடத்தில் குறிப்பிடுவது போன்ற ‘ஆனந்தமயிலின் சோகம் தோய்ந்த குரலை’ ரமணியின் அட்டைப்பட ஓவியம் கலாபூர்வமாக வெளிப்படுத்துகிறது. ஆம் செம்மையான கலைப்படைப்பிற்கு கவர்ச்சியும் வெளிப்பகட்டும் அல்லாத ஓவியம் ஏற்றதென்றே கருதத் தோன்றுகிறது.
ஆயினும் இங்கு நான் எழுதியவை எல்லாம் என் மனம் சார்ந்த வெறு வார்த்தைகளே. சுருக்கமாகவும் செறிவாகவும் ஆனந்தமயில் எழுதிய படைப்புகள் பற்றிய நயவுரை அல்ல. நூலுக்கான முன்னுரையில் முருகையன் கூறுவதுபோல ‘ ஆனந்தமயில் போன்ற நவீன கலைஞனொருவனின் சிறுகதையைச் சரியாகக் கிரகித்து நயப்பதற்கு அதனை முழுமையாக வாசிப்பதைவிட வேறு குறுக்கு வழி ஒன்றும் இல்லை.’
நீங்களும் வாசித்துப் பார்த்தால்தான் அதன் நயம் புரியும்.
தொடர்புகளுக்கு:-
ஆனந்தமயில் நித்திலவர்ணன்ஊர்மனை(கொத்தன்தறை)போலிகண்டி கிழக்குவல்வெட்டித்துறைவிலை ரூபா 150.00