நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா? மாதவிலக்கு உங்கள் பணிக்குத் தொல்லையாக இருக்கிறதா?
அத்தோடு இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்ற எண்ணத்தில் உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நற் சேதி.
உங்களைப் போலவே வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் என்பது ஒரு இடைஞ்சல். மாதவிடாய் சம்பந்தப்பட்ட உடல் உள உழைச்சல்களுடன் புன்னகை போர்த்திக் கொண்டு தொழில் செய்வது பெரும் துன்பம். அத்தோடு குழந்தைகள் பெறுவதையும் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இல்லையேல் தொழிலையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதிருக்கிறது.
இத்தகையோருக்கு உதவுவதற்காக புதிய வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் அறிமுகமாயுள்ளன.
தொழில் புரிபவர்களுக்காக மட்டுமல்ல, வேறு காரணங்களுக்காக தமது மாதவிலக்கு குறைவாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும் இது உதவும்.
வேறு மருத்துவ காரணங்களுக்காக மாதவிடாயின் குருதிப்பெருக்கை குறைக்கவும், மாதவிடாய்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் உதவும்.
இந்த புதிய வகை மாத்திரைகளின் விஷேசம் என்ன? இவை மூன்று வகையானவை.
முதலாவது, வழமையான மாத்திரைகள் போல ஒரு மாதத்திற்கானது. இதனால் மாதாமாதம் மாதவிலக்கு வரும். ஆனால் குருதிப்போக்கு இருக்கும் நாட்களின் எண்ணிக்கை குறையும். அதனால் இரத்த இழப்பும் குறையும். இதை எப்படிச் செய்கிறாரகள்? வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரை அட்டைகளில் 21 ஹோர்மோன் மாத்திரைகளும், 7 சத்து மாத்திரைகளும் இருக்கும். ஆனால் இதில் ஹோர்மோன் மாத்திரைகள் 24ஆக அதிகரிக்கப்பட்டு, இரும்புச் சத்து மாத்திரைகள் 4 ஆகக் குறைந்திருக்கும்.
இரண்டாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே மாதவிலக்கு வரும். அதாவது வருடத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே வரும். இதற்குக் காரணம் அதிலுள்ள ஹோர்மோன் மாத்திரைகள் 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்து மாத்திரைகளும் 7 ஆக இருக்கும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்போது குருதிப் போக்கு 7 நாட்கள் வரை இருக்கலாம்.
மூன்றாவது வகை குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும்போது உங்களுக்கு மாதவிலக்கே வராது. ஏனெனில் அதில் வழமையான ஹோர்மோன் மாத்திரைகள் மட்டுமே இருக்கும்.
இம் மூன்று புதிய வகை மாத்திரைகளும் கரு தங்குவதைத் தடுப்பதைப் பொறுத்தவரையில் வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் போலவே நல்ல பலனளிப்பவை.
பக்கவிளைவுகள் இருக்காதா?
பாரிய பக்கவிளைவுகள் கிடையாது. வழமையான குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகிப்பவர்களுக்கு உள்ளது போன்றே சில்லறை பக்கவிளைவுகளே இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு மேல் இவற்றை உபயோகிக்கக் கொடுத்து பரிசோதித்தபோது இது தெரியவந்தது. ஆயினும் ஒரு சிலருக்கு கண்ணில் படுவதுபோல சிறிதளவு இரத்தப்போக்கு (Spotting) இருந்தது. மேலும் நீ;ண்ட காலம் பாவிக்கும்போதுதான் புதிய தகவல்கள் தெரியவரும்.
எங்கே கிடைக்கும் என்கிறீர்களா?
இப்பொழுது அமெரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. மிக விரைவில் இங்கும் கிடைக்கலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்
நன்றி:- வீரகேசரி 28.09.2008