Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2008

>

குழந்தைகளில் கிரந்தி என்று சொல்லப்படும் எக்ஸிமா தோன்றுவது உலகளாவிய ரீதியில் வரவர அதிகரித்துக் கொண்டு போவதாக தரவுகள் கூறுகின்றன. எக்ஸிமா என்பது ஒவ்வாமையால் (Allergy) தோலில் ஏற்படும் அழற்சி நோயாகும். குழந்தைகளின் முகம், அக்குள், கால் இறை போன்ற இடங்கள் சிவந்து அரிப்பெடுத்து தோல் உரிவது போன்றவை இதன் முக்கிய அறிகுறியாகும்.

மாசடைந்து வரும் சூழலும், ஊட்டப்படும் உணவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. பரம்பரை அலகுகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் (GI Foods) உணவுகளும் காரணமாக இருக்கலாம் என பலர் நம்புகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு, எந்த வயதில் குழந்தைகளின் எக்ஸீமா ஆரம்பிக்கிறது, எத்தகைய உணவுகளை பாலகர்களுக்கு அறிமுகப்படுத்துவது காரணமாக இருக்கலாம் என்பதைக் கண்டறிய சுவீடன் நாட்டில் 8176 குடும்பங்களைக் கொண்டு ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
14 சதவிகிதமான குழந்தைகளுக்கு ஆறு மாதமாகும் போதும், 20.9 சதவிகிதமான குழந்தைகளுக்கு ஒரு வயதாகும்போதும் எக்ஸிமா வந்தது கண்டறியப்பட்டது. தாய் அல்லது சகோதரங்கள் எக்ஸிமாவால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது.
எனவே பரம்பரை அம்சம் முக்கியமான காரணம் என இதுவரை காலமும் நம்பப்பட்டதை இவ் ஆய்வும் உறுதிப்படுத்துகிறது எனலாம். எனவே பெற்றோர் சகோதரங்களில் இருந்த எக்ஸிமாவை இவ் ஆய்வு கணக்கில் எடுத்து, அதைத் தவிர்ந்த ஏனைய காரணங்களையும் ஆராய்வுக்கு உட்படுத்தினார்கள்.

அவர்கள் ஆய்வின் படி ஐந்து குழந்தைகளில் ஒன்றிற்கு எக்ஸிமா நோய் ஒரு வயதை அடைய முன்னரே ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு 9 மாதமாகு முன்னரே மீன் கொடுக்க ஆரம்பித்தால் எக்ஸிமா வருவதற்கான வாய்ப்புக் குறைகிறதாம். அதே போல வீட்டில் செல்லப் பிராணியாக ஒரு பறவை வளர்த்தாலும் எக்ஸிமா வருவதற்கான வாய்ப்புக் குறைகிறதாம்.

ஆனால் முட்டை, பசுப் பால் ஆகியவற்றை எப்பொழுது ஆரம்பிக்கிறார்கள் என்பதும், எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்பதும் எக்ஸிமா வருவதற்கான சாத்தியத்தில் மாற்றம் ஏற்படுத்தவில்லையாம். பெற்றோர்கள் புகைப்பதும், வீட்டில் நாய் பூனை வளர்ப்பதும் கூட வாய்ப்பை அதிகரிக்கவில்லையாம். இது முன்னைய பல ஆய்வுகளிலிருந்து மாறுபடுகிறது.

ஆயினும் 9 மாதங்களுக்கு முன் மீன் ஆரம்பிப்பது எக்ஸிமா வருவதைக் குறைக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. குளிர் பிரதேச ஆழ்கடல் மீன்களிலுள்ள ஒமேகா3 (Omega 3) எக்ஸிமாவைத் தடுக்கும் என வேறு சில ஆய்வுகள் கூறியதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ளலாம்.

அமெரிக்க குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் சபை கூட எக்ஸிமா வரக் கூடிய வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மட்டுமே முதல் ஆறு மாதம் வரையாவது கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்துள்ளது. அதேபோல அத்தகைய குழந்தைகளுக்கு பசுப்பால், முட்டை ஆகியவற்றை விரைவில் ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்றே பல மருத்துவ வழிகாட்டல்களும் சொல்லி வந்துள்ளன.

இந் நிலையில் இந்த ஆய்வின் முடிவை கண் மூடித்தனமாகப் பின்பற்றும் படி சிபார்சு செய்ய முடியாது. எக்ஸிமா நோய் ஏற்படுவதற்கு பரம்பரை முக்கிய காரணம் எனத் தெளிவானபோதும், பசுப்பால், முட்டை, கடலுணவு, விதைகள் ஆகியன எந்தளவு காரணமாகலாம் என்பதைத் தெளிவாகக் காட்ட மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது எனலாம்.

அத்துடன் குழந்தைகளுக்கு 9 மாதத்திற்கு முன்னரே மீன் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு உடனடியாக அறிவுறுத்த முடியாதுள்ளது. மேலதிக ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்தும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனமானது.எம்மவர்கள் பலர் ஆறு மாதத்தின் பின் குழந்தைக்கு மீனை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆயினும் இதன் சாதக பாதக பலன்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-தினக்குரல்

ஹாய் நலமா?

31.10.2008

Read Full Post »

>

அண்மையில் நீரிழிவு தொடர்பான மருத்துவர்களுக்கான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.

நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.

கிளைசீமிக் குறியீட்டு அளவில் நோக்கும்போது நாம் உட்கொள்ளும் அரிசிகள் பற்றிக் குறிப்பாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டது. நீங்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உட்கொண்டாலும் அவை ஒரே மாதிரியான மாற்றத்தையே குருதி சீனியின் அளவில் ஏற்படுத்துகின்றன. எனவே எந்த அரிசிச் சோறை உட்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் சாப்படும் சோற்றின் அளவை அதிகரிக்கக் கூடாது, அளவோடு சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமாகும்.

அதே போல “சாதாரண பாண் கூடாது. தவிட்டுப் பாண்தான் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது” என்ற கருத்தும் தவறானது. ஏனெனில் இரண்டினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் ஏறத்தாளச் சமமானதே.

தவிட்டுப் பாண் சாதாரண பாணிலும் பாதகமானது என்ற கருத்தும் கருத்தரங்கில் சிலரால் முன்வைக்கப்படடது. தவிட்டுப் பாண் சுலபமாக செமிபாடு அடைவதற்காக சில நொதியங்களை பாண் தயாரிப்பின் பொது பேக்கரிகளில் சேர்க்கிறார்கள். இதனால் அது எளிதாக சமிபாடு அடைகிறது. ஆனால் அதே நேரத்தில் விரைவாக குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு கிளைசீமிக் இன்டெக்ஸ்சை உயர்த்துகிறது.

எனவே நீரிழிவு நோயாளர்கள் தவிட்டுப் பாணைத் தேடி ஓடுவது தவறானது. அவசியமற்றது.

ஆட்டாமா, குரக்கன் மா, அரிசிமா, ஓடியல் போன்ற எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் நீரிழிவுள்ளவர்கள் உண்ணலாம், எந்த அரிசிச் சோறானாலும் சாப்பிடலாம். ஆயினும் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது.
அத்துடன் எதனுடன் உண்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நார்ப்பொருள் செறிந்துள்ள காய்கறிவகைகளை சேர்த்து உண்டால் குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibres) சேர்த்து உண்பது நல்லது. கடலை, பயறு, பருப்பு, சோயா, போஞ்சி போன்ற அவரை இன உணவுகளில் இது அதிகம் உண்டு. எனவே சொதி, சம்பல், பட்டர், மார்ஜரின் போன்றவற்றுடன் உண்பதைத் தவிர்த்து மேற் கூறியவாறு உண்பது உசிதமானது.

இனிப்பில்லாத கிறக்கர் பிஸ்கட் நல்லது என்பதும் தவறான கருத்தாகும். அதிலுள்ள மாப்பொருள் குருதியில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே செய்யும்.

எனவே நீரிழிவு நோயாளர்கள் “பிரதான உணவு வேளைகளுக்கு இடையில் குறும் உணவாக எதைச் சாப்பிடுவது” எனக் கேட்பார்கள். நியாயமான கேள்வி. சிறிய வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற பழ வகைகளையோ, வெள்ளரி, கரட் போன்ற காய்கறிகளையோ சப்பிச் சாப்பிடலாம். களைப்பும் பசியும் நீங்கும். அதனால் சீனியின் அளவு அதிகரிக்காது.

பழங்களில், வாழைப்பழம் பற்றிப் பேசும் போது “கதலி நல்லது, கப்பல், ஆனைமாலு கூடாது” என்றே பலரும் கூறுவார்கள். இதுவும் மற்றொரு தவறான கருத்தே. கதலி, கப்பல், இரதை, ஆனைமாலு போன்ற எல்லாமே நல்லவைதான். ஏனெனில் இவை யாவற்றினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் 10 லும் குறைவாகவே இருக்கின்றன. எனவே எல்லாமே பாதிப்பற்றவைதான். எந்த வாழைப் பழமானாலும் ஒவ்வொரு உணவுடனும் பாதியளவு சாப்பிடலாம்.
அன்னாசி, மாம்பழம் ஆகியவற்றைக் கூட உண்ணலாம். ஆனால் எவ்வளவு உண்பது என்பதே முக்கியமானது.

“மண்ணுக்கு கீழ் விளையும் எந்தக் கிழங்கு வகைகளையும் நான் தொடுவதே இல்லை” என பல நீரிழிவு நோயாளர்கள் சத்தியம் செய்வார்கள். இதுவும் தவறான கருத்தே. கிழங்கு வகைகள் அனைத்திலும் உள்ளது மாப்பொருள்தான். அரிசி, பாண், நூடில்ஸ் போன்றவற்றிலும் உள்ளது அதே மாப்பொருள்தான். எனவே அளவோடு உண்ணலாம்.

“வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. அது சாப்பிடக் கூடாதுதானே” எனக் கேட்டால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றைய கிழங்குகளிலும் கூடியதல்ல. எனவே நிச்சயம் சாப்பிடலாம். அத்துடன் வத்தாளையில் கரட்டீன் சத்தும் இருப்பதால் மற்றக் கிழங்குகளை விடச் சிறந்தது. மரவள்ளியும் சாப்பிடலாம் ஆனால் அதில் மாப்பொருளைவிட வேறு விட்டமின், கனிமங்கள் இல்லை என்பதால் சிறப்பான உணவாகக் கொள்ள முடியாது. ஆயினும் அளவோடு உண்பதில் தவறில்லை.

இதைப் படித்துவிட்டு குத்தரிசி, ஆட்டாமா, குரக்கன் போன்றவை பிரயோசனமற்ற உணவுகள் எனக் கருதுவது தவறு. அவற்றில் விட்மின், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை சற்று அதிகமாக இருப்பதால் அவை போஷாக்குள்ள உணவு வகைகளே.

ஆயினும் நீரிழிவு நோயாளர்கள் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நிர்ப்பந்திப்பது தவறானது. அதற்கான எந்த வித விஞ்ஞானபூர்வமான ஆதாரமும் இல்லை. மாப்பொருள் உணவின் அளவும், எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி 26.10.2008

Read Full Post »

என்னையும் சினிமா தொடர் சுற்றில் இழுத்துவிட்ட வந்தியத் தேவனுக்கு நன்றி. முக்கியமாகப் பல பழைய நினைவுகளைக் கிளற வைத்ததற்காக. எவ்வளவைக் கடந்து வந்திருக்கிறோம் என நினைக்கப் பிரமிப்பாக இருக்கிறது.

எனது அனுபவங்களை வாசித்து நேரத்தை வீணடிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நேரத்திற்குள் தனி ஒருவனாக பத்துப் பேரை நாயகன் அடிக்கும் காட்சியை, 50-60 ‘கன்னிகள்’ சுற்றி நின்று ஆட காதலனும் காதலியும் கூடும் காட்சியை, அல்லது நாயகியின் உடலில் எத்தனை சென்ரிமீட்டர் துணி இருக்கிறது எனக் கணித்து விசில் அடித்து மகிழ்ந்திருக்கலாம்.

நான் ஏ.எல் படித்த காலம் தான் சினிமா என் மனத்தை முற்றாக ஆக்கிரமித்திருந்த காலம் எனலாம். பட்டப்படிப்பை முடிக்கும் வரை இன்னும் கொஞ்சம் தொடர்ந்தது. அனுபவிக்கவும், பின் நினைத்து மகிழவும் கூடியது இளமைக்காலம் அல்லவா?. கட்டற்ற சுதந்திரகாலம் அதுதானே! ‘கட்டிவிட்ட பின்’ சுதந்திரம் எல்லாம் மனைவியின் கைக்கு மாறிவிடுகிறதே. (ஆனால் என் மனைவி இதற்கு எதிர்மாறாக தன் சுதந்திரம் பறிபோய்விட்டதாக முணுமுணுக்கிறாள்.)

சுதந்திரம் பறிபோனதற்குக் காரணம் திருமணம் மட்டுமல்ல காரணம். மிக முக்கிய காரணம் எனது தொழில். பகல், இரவு, ஞாயிறு, போயா, விடுமுறை என்று சாட்டுச் சொல்ல முடியாத தொழில். அதுவும் அரச பணியை விட்டு தனியாகத் தொழில் பார்க்க ஆரம்பித்த பின்னர் எனக்கென்றோ குடும்பத்திற்கென்றோ தனியாக நேரம் ஒதுக்க முடியாது போனது. இரவு 8 மணி வரை பணி தொடர்கிறது. அந்தக் காலம்போல சினிமா பார்க்க முடிவதில்லை.
மிக அரிதாகவே திரைஅரங்கில் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் வீட்டில் டிவீடி யில்தான். அதுவும் சிலவே.

பட்டப் படிப்பின் பின்னர் பதுளையில் மருத்துவப் பயிற்சிக்கு சென்ற காலம் நினைவு வருகிறது. மாணவனாக இருந்தபோது பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்கள்தான். மிக அரிதாக ஆங்கில ஹிந்திப் படங்கள். ஆயினும் பதுளை சென்ற பிறகு சக டொக்டர்களான சுலைமான், ஜெயரட்ன போன்றோரின் நட்பில் பல ஆங்கில, சிங்கள சினிமாவும் பார்க்கும் வாய்புக் கிட்டியது. ‘துகுலு மலக்’ போன்றவை அப்பொழுது பார்த்தவைதான். ஆங்கில நாவல்களை விரும்பி வாசிக்க ஆரம்பித்ததும் அப்பொழுதுதான். வாய்ப்புக்கள் வரும்போது எமது ரசனைகளும் மாற்றமுறும் என்பதற்கு இவை உதாரணங்கள்.

பயிற்சி மருத்துவர்கள் என்பதால் பகல் மற்றும் இரவு முதல் காட்சிக்குச் செல்வது முடியாது. இரவு 2வது காட்சிக்குத்தான் செல்லக் கிடைக்கும். ஆயினும் நிம்மதியாகப் பார்க்க முடியாது. திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது இடையில் (Dr… wantedurgently at Hospital) என சிலைட் போடுவார்கள். உடனடியாக படத்தை இடையில் விட்டுவிட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளியைப் பார்க்க ஓட வேண்டும்.

80 களில் பருத்தித்துறையில் தனியார் வைத்தியசாலை ஆரம்பித்த பின்னரும் இதே கதைதான். ஆனால் இங்கு சிலைட் போடமாட்டார்கள். மொபைலும் கிடையாத காலம். மனேஜரே இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி வந்து காதுக்குள் குசுகுசுப்பார். இடையில் விட்டுவிட்டு போக வேண்டியதுதான்.

நல்ல ஞாபகம், Shark பார்க்கப் போனது. சென்றல் தியேட்டர். மகனுக்கு 3-4 வயதிருக்கும். படம் பார்க்கப் போவதென்றால் அவனுக்கு ஒரே சந்தோஸம். குட்டித் தூக்கம் போட்டுவிட்டு 9 மணியளவில் எழுந்து காத்துக் கொண்டிருப்பான். ஆழ்கடலில் மீன்கள் சாகசம் செய்யும் படம். மனிதர்களை வேட்டையாடும். இடையில் விட்டுப் போவதென்றால் அவனுக்கு எப்படி இருக்கும். அழஅழத் தூக்கிச் செல்ல வேண்டியதாயிற்று.

பின்னர் யாழ்நிலை மோசமாகியது. இரவில் படம் பாரக்கச் செல்வது கனவாகவே இருந்துவிட்டது. ஓடைக்கரைத் தோசையும், ரஞ்சன் கபே ரீயும் ஞாபகம் வருகிறதா? திரை மறந்தது. வீடியோ கஸட், சீடி வந்தது. டிவிடியும் இணைந்தது. தியேட்டருக்கு போவதே தேவயற்றது போலாகிவட்டது. ஆனால் இருட்டில் பிரமாண்ட திரையில் ஸ்டிரியோ சவண்ட் நாலா பாக்கமும் சூழ்ந்து ரீங்காரிக்கப் பார்பதற்கு இவை எதுவுமே இணையாக மாட்டாது என்ற ஏக்கம் துளைத்துக் கொண்டே இருக்கிறது.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள். நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணரந்தீர்கள்.

வயது யாருக்கு ஞாபகம் இருக்கிறது?

நான் சிறுவனாக கொழும்பில் இருந்த காலம். நிச்சயம் 56க்கு முன்பு. முதல் அடியோடு மஹரகம வை விட்டு வெளியேறினோமே. அதற்கு முன்பு.

படம் கள்வனின் காதலி. சிவாஜி நடித்தது என்பது தெரியும். அதில் அவரது பாத்திரப் பெயர் முத்தையா என்பது மட்டுமே ஞாபகம்.

காரணம் நான் பிறப்பதற்கு முன்னரே மறைந்து போன எனது அப்பப்பாவின் பெயர் அது. “உனக்கு முத்தையா என்று பேரனது பெயரை வைக்க வேண்டும் எண்டு ஐயம்மா நாண்டு கொண்டு நிண்டவ. நான்தான் அது பழைய காலப் பெயர் வேண்டாம் எண்டு சொன்னனான்” என அடிக்கடி சொல்லக் கேட்டதால் மறக்கவே முடிவதில்லை.

‘மங்கையர் திலகம்’ இப்படி ஏதேதோ அப்பா அம்மாவுடன் பார்த்திருந்த போதும் ஏதும் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. சம்பூர்ண ராமாயணம், லவகுச, டென் கொமான்மண்ட்ஸ் போன்றவை எமது ஊர் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம், பின்பு ஹாட்லிக் கல்லூரயில் இருந்தபோது பாடசலையிலிருந்து சென்று பார்த்தவை.

கடைசியாக அரங்கில் இருந்து பார்த்த தமிழ் சினிமா?

ரொக்ஸி அரங்கில் நானும் மனைவியுமாகப் பார்த்த வெயில். வரண்ட மண்ணின் வாசனை தகிக்க அந்த மண்ணின் மணம் கமழ எடுக்கப்பட்ட படம். பிள்ளைப் பருவத்தில் பெற்றாரின் தவறான பார்வையால் வீட்டை விட்டுப் பிரிந்து தனது காலிலேயே நிற்க முனைந்து அதில் வெற்றியும் பெற்று, மனைவியை இழந்து மீண்டும் பெற்றோர் வீட்டில் இணையும் போது ஏற்படும் மனோவியல் சிக்கல்கள்.

நல்ல படம். ஆயினும் படத்தின் இறுதியில் வரும் வன்முறைகள் வேண்டும் என்றே இணைக்கப்பட்டது போல எரிச்சல் ஊட்டியது. இருந்த போதும் ஆட்டம், பாட்டம், சண்டை என எமது வாழ்வை பிரதிபலக்காத தமிழ் சினிமாவையே கண்டு சலித்த எங்களுக்கு வாழ்வோடு இணையும் படங்களும் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

கடைசியாக அரங்கிலன்றி பார்த்த பார்த்த தமிழ் சினிமா எது எங்கே என்ன உணர்ந்தீர்கள்?

உளியின் ஓசை. கலைஞரின் பூம்புகார் போன்ற சினிமாக்களை முன்பு பார்த்து ரசித்த எனக்கு மிகுந்த ஏமாற்றம். திரைக்கதையில் நல்லதோர் சஸ்பன்ஸ் இருந்தபோதும் மிக மோசமாக எடுக்கப்பட்டிருந்தது.

தஞ்சைக் கோயில், சிற்ப கூடம், சிலைகள், சிலை வடிக்கும் கற்கள் எவையுமே இயற்கையாக இல்லை. பொலிஸ் பண்ணிய சீமேந்துக் கலவைகளாக, அட்டைப் பெட்டிகளாக உயிரற்று காட்சியளித்தன. மோசமான செட்டுக்கள். படத்தின் கலர் கூட சரித்திரப் படங்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை.

சரத்பாபுவின் நடிப்பு பல இடங்களில் சிவாஜியை நினைவு படுத்தியமை ஏமாற்றத்தை அளித்தது. வினித்தின் நடன ஆற்றல் வெளிக் கொணரப்படவில்லை. மேக்கப்பும் சகிக்கவில்லை.

இப்பொழுது சரோஜா, ராமன் தேடிய சீதை வாங்கி வைத்திருக்கிறேன். எல்லோரும் விமர்சனம் எழுதிக் களைத்தவை. இனித்தான் பார்க்க வேண்டும்.

மிகவும் தாக்கிய படம்?

சேரனின் ‘எந்தையும் தாயும்’ என்னை மிகவும் பாதித்தது. ஒரு பிள்ளை என்ற முறையிலும் ஒரு தகப்பன் என்ற முறையிலும் என் உணர்வுகளோடு கலந்து அற்புத உணர்வைத் தந்தது.

அண்மையில் பார்த்தவற்றில் ‘வாட்டர்’, ‘ஐய்வர்யா ஒரு அழகி’. இரண்டும் பிற மொழிப்படங்கள். இரண்டுமே விதவைகள் பற்றியது. அவர்களது பிரச்சனைகளை மாத்திரமின்றி மனச் சலனங்களையும் புரிந்துணர்வோடு அணுகுவது. ஐய்வர்யா ஒரு அழகி என தமிழில் மோசமான பெயரில் டப் செய்யப்பட்டிருந்தாலும் மிக நல்ல படம். தாகூரின் கதை. வங்கப்படமாக இருக்கலாம்.

2006ல் மீண்டும் போர் ஆரம்பித்த நேரம் பருத்தித்துறையில் தனியாக மாட்டுப்பட்டிருந்த நேரம் அருகில் உள்ள வீடியோ கடையில் கிடைத்தது. மீண்டும் பார்க்க விரும்பியும் கொப்பி அகப்படவில்லை. வாட்டர் நீங்கள் எல்லோரும் ரசித்ததாகவே இருக்கும்.

‘சங்காரா’ சிங்களப் படம். இது பற்றி நான் எழுதிய கட்டுரை காலம் சஞ்சிகையில் வந்துள்ளது. Black ஹிந்திப் படம்.

தமிழ் சினிமா பற்றி வாசிப்துண்டா?

தமிழ் சினிமா பற்றி ஓரளவு வாசிப்பேன். விமர்சனங்கள், அலசல்கள், வரப் போகும் படங்கள் பற்றிய குறிப்புகள் எனப் பலவும். ஈழத்தில் சினிமா பற்றிய புரிதலை எங்களுக்கு ஏற்படுத்திய கே.எஸ்.சிவகுமாரன், யேசுராசா, சசி கிருஸ்ணமூர்த்தி முதல் இன்றைய யமுனா ராஜேந்திரன், சாரு நிவேதிகா, மாரி மகேந்திரன் வரை நேரம் கிடைக்கும்போது படிப்பதுண்டு. கிசு கிசுக்கள் பெரிசாகக் கவர்வதில்லை.

தமிழ் தவிர வேறு இந்திய உலக சினிமா பார்ப்பதுண்டர்?

தேர்ந்தெடுத்த ஹிந்தி, ஆங்கில, ஜப்பானிய, ஈரானிய சினிமா பார்ப்பதுண்டு

தமிழ் சினிமாவுடன் நேரடித் தொடர்பு உண்டா?

கிடையாது.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

திரைப்படத்துறையை கற்கை நெறியாகக் கற்ற பரம்பரையினரின் பங்களிப்பு மேலோங்கி வருவது நல்ல அறிகுறி. ஆயினும் இரண்டு எதிர்த் திசைகளில் அது பயணிப்பதாகவே தெரிகிறது. நட்சத்தர நடிகர், டான்ஸ், சண்டை, காதல் காட்சி. பாட்டு நகைச்சுவை ஆகியவற்றை எந்த விகிதத்தில் மிக்ஸ் பண்ணி வெற்றி பெறுவது என Formula வைவிட்டு விலகாத பக்கம் ஒன்று. இது வருவாயை மட்டும் கணக்கில் எடுக்கும் கோஷ்டி.

நல்ல திரைக்கதை, பொருத்தமான பிரேம்களினூடாக சினிமாவை நகர்த்தல் இன்னொரு பக்கம். உன்னாலே உன்னாலே, வல்லமை தாராயோ, மொழி, ஒன்பது ருபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சுப்பிரமணியபுரம், மிருகம், பருத்திவீரன் என நம்பிக்கை தரும் இன்னொரு திசை. இவற்றில் சிலவாவது வருவாயிலும் கைவிடாதது நம்பிக்கை தருகிறது.

அடுத்த ஓரு ஆண்டு தமிழில் சினிமா கிடையாது. மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என நினைக்கிறீர்கள்?

பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

மிஞ்சியவர்கள் பயனுள்ள வழிகளில் ஓய்வு நேரத்தைக் கழிப்பார்கள்.

குண்டானவர்கள் மெலிவார்கள்.

உழைப்பு அதிகமாகும். நாடு முன்னேறும்.

இணையம் இன்றேல் நான் நோவேன்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>சைவம், சைவ உணவு.
இது யாழ்ப்பாணத் தமிழ்.

மரக்கறி அல்லது காய்கறி உணவு மட்டும் சாப்பிடுவதைக் குறிக்கும்.
அதாவது மாமிச உணவு தவிர்த்தலை.

நானும் சைவந்தான் எனப் பலரும் சொல்வதைக் கேட்கலாம்.
ஆனால் அடிக்கடி மாமிசமும் வெட்டுவார்கள்.

இது என்ன வேஷம்!
பார்பனிய மோகத்தின் மற்றொரு முகமா?
அல்லது முகமூடியா?

இன்றைய அறிவியலில் வெஜி உணவின் நன்மைகள் பேசப்படுவதால், தானும் கடைப்பிடிப்பதாகப் போர்த்திக் கொள்ளும்
ஆரோக்கியக் கவசமா?

தொடர்வது ஆழியாள் கவிதை.
நீங்களும் ரசிக்கக் கூடும்.
உயிர்மை ஜீன் 2008 இதழில் வெளியானது.

2 சைவரும் 1 சைவக்காரியும்

நீங்க சைவமா?
ம் ..ம்.. ஷைவப்பழம் நான்.

நீங்க?
சைவம் சைவம் சுத்த சைவம்
சிக்கன் மட்டும் சாப்பிடுவேன்

நீங்க எப்படி?
ஓமோம் நானும்
மீன் தலை சாப்பிடும்.
ஆட்டுக்குடல், மாட்டிறைச்சி சாப்பிடும்
செம்மறிக் கொழுப்பில் வதக்கின நத்தை சாப்பிடும்
சைவக்காரி.

Read Full Post »

>
துப்பாக்கி விசையை கையில் ஏந்தி வந்தவர் பாதுகாப்பு வீரரோ, காவல் துறையினரோ அல்ல! சட்டவிரோதமாக ஆயுதம் பாவிப்பவர் கூட அல்ல! ஐம்பது வயதைக் கடந்த பெண்மணி. அத்துடன் நீரிழிவு நோயாளியும் கூட.

அவரது கையிலிருந்தது உண்மையான துப்பாக்கியல்ல!
அதன் சுட்டழிக்கும் விசையுமல்ல! பொம்மைத் துப்பாக்கி கூட அல்ல.
அவரது விரலே துப்பாக்கி விசையாகியிருந்தது!

ஆம் அதுபோல வளைந்திருந்தது. இருந்தபோதும் அது எந்நேரமும் வளைந்திருப்பது இல்லை. ஏதாவது தேவைக்காக கையைப் பொத்திய பின் விரித்தால் ஏனைய விரல்கள் சுலபமாக விரிந்துவிடும். ஆனால் இந்த ஒரு விரல் மட்டும் சற்று இடக்குப் பண்ணும். சில தருணங்களில் சட்டென நேராக நிமிராது. நிமிர்கையில் கிளிக் என்ற சப்தத்துடன் நூலறுந்த பட்டம் போல பட்டென விடுபடும்.

துப்பாக்கி விசையும் அப்படித்தானே. சற்று வளைந்திருக்கும். இறுகியிருப்பது போல இருக்கும். சற்று அழுத்தினால் கிளிக் என விடுபட்டுவிடும். அதனால்தான் இந்த நோயை துப்பாக்கி விசை விரல் Trigger Finger என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். தமிழில் இதற்கென ஏதாவது விஞ்ஞானப் பெயர் இருந்தால் எனக்கும் கூறுங்கள். விரல் இறுகம் என இப்போதைக்கு அழைப்போமா? மருத்துவத்தில் இதனை stenosing tenosynovitis என்பர்.

இறுகிய விரல் எவ்வாறு ஏற்படுகிறது?

எமது விரல்களின் அசைவுகளை, அதன் எலும்புகளோடு இணைக்கப்பட்டுள்ள சிறு தசைநார்களே (Tendons) இயக்குகின்றன. தசைகளையும் எலும்புகளையும் இணைக்கும் இவை குறுகலான குகைப்பாதை போன்றினூடாக சென்றே விரல் எலும்புகளிலுள்ள கப்பி போன்ற அமைப்பில் இணைந்து கொள்கின்றன. இத் தசைநார்களைச் சுற்றிப் போர்த்தியிருக்கும் மெல்லிய திரைபோன்ற (Tenosynovium) ரினோசைனோவியம் இல் அழற்சி ஏற்பட்டால் அக்குகைப் பாதை ஊடாக மேலும் கீழும் அசைவதற்கான பாதை மேலும் குறுகி, அசைவது கஷ்டமாகிவிடும். திடீரென தற்காலிகமாக இறுகி நின்றுவிடவும் கூடும்.

விடுபடும்போதே கிளிக் என்ற சப்தமும் வலியும் ஏற்படுகிறது. விடுபடும் நேரத்தில் விரல் மொளி விலகிவிட்டது போன்ற உணர்வு கூட ஏற்படுவதுண்டு.

ஆரம்ப கட்டங்களில் விரல் இறுகியது போன்றிருந்தாலும் விரல்களை நீட்டுவதில் சிரமம் இருக்காது. கிளிக் என்ற சப்தத்துடன் உடனடியாகவே விரிந்துவிடும். ஆயினும் காலம் செல்ல செல்ல, மடங்கிய விரல் உடனடியாக விரியாது சற்றுத் தயங்கி நின்றே விரியும். இறுதியில் மடங்கிய விரலை நீட்டி விரிக்க முடியாத நிலையும் ஏற்படும்.

இது ஏன் நிகழ்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நீரிழிவு நோயாளர்களில் அதிகம் ஏற்படுகிறது. அவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதுண்டு. இரு கைகளிலும் ஒரேயடியாக வந்து மிகுதுன்புறுத்தவும் கூடும். அதே போல தைரோயிட் சுரப்பி நோய், ரூமட்டொயிட் வாதம் உள்ளவர்களிலும் இறுகிய விரல் அதிகம் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆண்களைவிட பெண்களை அதிகமாகத் தாக்குகிறது. இளவயதினரை அதிகம் பீடிப்பதில்லை. 40 வயதிற்கு மேற்பட்டவர்களே பெரும்பாலும் பாதிப்பிற்கு ஆளாகுகிறார்கள்.

கைகளால் ஆயுதங்களை நீண்ட நேரம் இறுகப்பற்றி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் அதிர்வை எழுப்புகிற உபகரணங்களை உபயோகிக்கையில் கூடுதலாக ஏற்படுகிறது. துடுப்பாட்ட மட்டை போன்ற விளையாட்டு உபகரணங்களை இறுகப் பற்ற வேண்டிய கிரிக்கற், பட்மின்டன், டெனிஸ் போன்ற விளையாட்டு வீரர்களிலும் ஏற்படலாம். அதேபோல் வாத்தியக் கலைஞர்களிலும் ஏற்படுவதுண்டு.

பாவனை அதிகம் உள்ள கையில் ஏற்படுவது அதிகம். அதாவது வலது கை பாவனையாளர்களுக்கு வலது கையிலும், இடது கை பாவனையாளர்களுக்கு இடது கையிலும் ஏற்படும். எந்த விரலும் பாதிக்கப்படக் கூடும் ஆயினும் பெருவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகியனவே பெரும்பாலும் இறுகுகின்றன.

அடிபடுவது, காயப்படுவது, கண்டுவது போன்ற எந்த முன் நிகழ்வுகளும் இறுகிய விரல் ஏற்படுவதற்குரிய காரணங்கள் அல்ல. விரலில் இறுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் வலி அல்லது மென்மையான வீக்கம் ஏற்படக் கூடும். ஆயினும் விரல் இறுக்கம் ஏற்பட்ட பின்னரே உங்கள் அல்லது நோயாளியின் கவனத்தை ஈர்க்கும். இது எந்த நேரத்திலும் ஏற்படக் கூடுமாயினும் நீண்ட நேரம் விரல்கள் ஓய்வில் இருந்தபின் அசைக்க நேரும்போது இறுகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஆதலால்தான் காலையில் படுக்கை விட்டு எழும்போது பலரையும் துன்பப்படுத்துகிறது.

இந்நோயை இனங்காண உங்கள் வைத்தியருக்கு எக்ஸ்ரே, இரத்தப்பரிசோதனை எதுவுமே தேவைப்படாது. நீங்கள் சொல்லும் அறிகுறிகளுடன் விரலைப் பரிசோதித்துப் பார்த்தே நோயைச் சுலபமாக நிர்ணயித்துவிட முடியும்.

ஆரம்ப கட்டங்களில் கைவிரல்களுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமே இறுக்கத்தைத் தவிர்க்கப் போதுமானது. ஆயுதங்களை, விளையாட்டு உபகரணங்களை, வாத்தியங்களை தொடர்ந்து இறுகப்பற்றி உபயோகிப்போர் அவ்வாறு வேலை செய்வதை ஓரிரு மாதங்களுக்கு நிறுத்த இந்நோய் தானாகவே மறைந்துவிடும். காலை எழுந்தவுடன் கைகளை சற்று நேரம் சுடுதண்ணீரினுள் ஆழ்த்தி வைப்பது வலியைத் தணிக்கும். தேவை ஏற்படின் மதியம் இரவுகளிலும் மீளச் செய்யலாம்.

மென்மையான பயிற்சிகளை விரல்களால் செய்வதும் வலியைத் தணிக்கவும், விரல் இறுக்கததை குறைக்கவும் உதவும். விரல்களை விரிப்பது ஒடுக்குவது, மடக்குவது நீட்டுவது போன்ற பயிற்சிகளை விரல்களுக்கு கொடுங்கள். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் 15 தடவைகள் செய்யுங்கள். இதனை இரவில் படுக்கும்போது செய்தால் காலை எழுந்திருக்கும் போது விரல்களில் ஏற்படும் வலியும், விறைப்புத்தன்மையும் குறைவாக இருக்கும்.

நோயின் தாக்கத்திற்கு ஏற்ப கைவிரல்களை நீட்டியபடி வைத்து, மடியவிடாது பன்டேஸ் போடுவதை (Splint) சில வேளை வைத்தியர் சிபார்சு செய்யக் கூடும். இரண்டு பொப்சிகல் குச்சிகளை உங்கள் விரலின் வெளிப்புறமும், உட்புறமும் ஒவ்வொன்றாக வைத்து பன்டேஸ் செய்தால் விரல் மடியாது நிற்கும். இவ்வாறு செய்வதன் மூலம் நோயுற்ற விரலுக்கு ஆறுதல் கொடுக்கலாம். இரவு படுக்கும் போது எமது கைவிரல்கள் இயல்பாக மடிந்தே இருக்கின்றன. மேற் கூறியவாறு பன்டேஸ் போடுவதன் மூலம் விரல்கள் மடிவதைத் தடுத்து அவற்றிற்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் காலையில் எழுந்திருக்கும்போது விரல்களில் வலியிருக்காது.

இத்தகைய நடைமுறைச் சிகிச்சைகள் மூலம் பிரச்சனை தீரவில்லையெனில் என்ன செய்வது?

வலியைத் தணித்து அழற்சியை குறைக்கும் மாத்திரகைகளை உபயோகிக்கலாம். உதாரணமாக இபூபுறூவன், டைகுளோபெனிக் சோடியம் போன்ற மாத்திரைகள் உதவக் கூடும். எந்த மருந்தை எவ்வளவு காலம் உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் வைத்தியர்தான் தீர்மானிக்க வேண்டும்.

வலியும் வீக்கமும் உள்ள இடத்தில் ஸ்டிரெயிட் வகை ஊசி மருந்து போடுவது நல்ல பலனைக் கொடுக்கும். ஆரம்ப நிலையில் கிடைக்கும் பலன் போல மீண்டும் போடும்போது கிடைக்காது. அத்துடன் நீரிழிவு, ரூமட்டொயிட் ஆர்திரைடிஸ் போன்ற நோயுள்ளவர்களுக்கு இவ் ஊசி மருந்து சற்றுக் குறைந்தளவு சுகமே கொடுக்கும்.

இவை எதற்கும் குணமடையாவிட்மால் சத்திரசிகிச்சை செய்து குணமாக்கலாம். ஆனால் இதற்கான தேவை பெரும்பாலோனோருக்கு ஏற்படுவதில்லை.

மேற் கூறிய பெண்மணிக்கு விரல்களுக்கான பயிற்சிகளுடன் ஊசியும் போட வேண்டியதாயிற்று. ஆனால் அடுத்த முறை வரும்போது துப்பாக்கி விசையை ஏந்தி வரவில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

நன்றி:- ஞாயிறு வீரகேசரி- 12.10.2008

Read Full Post »

>

“கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு.” என்ற கருத்துப்பட மதிப்பிக்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

“இதற்கு மருத்துவ ஆய்வு ஏன்? அனுபவ ரீதியாக நாங்கள் எத்தனை தடவைகள் உணர்ந்திருக்கிறோம்.” என நீங்கள் சொன்னால் அதனோடு ஒத்துப் போகவும் நான் தயாராகவே உள்ளேன்.

மேற் கூறிய கருத்தரங்கிற்குப் பின்னர் தடிமன், உடல் அலுப்பாக இருந்தபோது பரசிட்டமோல் போடுவதற்குப் பதிலாக மல்லிக் குடிநீர் குடித்துப் பார்த்தேன். பல மணிநேரங்களுக்குச் சுகமாக இருந்ததை அனுபவத்தில் காண முடிந்தது. சிறு வயதில் அம்மா அவித்துத் தந்த குடிநீரை பல தடவைகள் குடித்திருந்தபோதும் அதன் பலன்கள் பற்றி இப்பொழுது தெளிவாகச் சொல்வதற்கு முடியவில்லை.

இருந்போதும் இன்றும் தடிமன் காய்ச்சலுக்காக மருந்துவரிடம் செல்லும் பலர் அதற்கு முன்னர் மல்லி சேர்ந்த குடிநீர் உபயோகித்ததாகச் சொல்வதுண்டு. இதன் அர்த்தம் என்ன? பலருக்கும் முதல் உதவியாக, கை மருந்தாக அது உதவுகிறது என்பதே. அதற்கு குணமடையாவிட்டால் நவீன மருத்துத் துறை சார்ந்தவர்களை நாடுகிறார்கள்.

இணையத்தில் தேடியபோது தடிமன் காய்ச்சல், மூட்டு வலிகள், உணவு செமிபாடின்மை, பசியின்மை, ஒவ்வாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க கொத்தமல்லி உதவும் எனப் பலரும் எழுதியிருந்தார்கள். இவை பெரும்பாலும் அனுபவக் குறிப்புகள். சில வீட்டு வைத்திய முறைகள். ஆயினும் இவை எதுவுமே விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்தது.வாசனைத் ஊட்டிகள் (Spices) பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து பார்த்தால் கொத்தமல்லி பற்றிய பதிவு மிகவும் தொன்மையானது எனத் தெரியவரும். பைபிளில் இது பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உண்டு. நாம் அவற்றின் விதைகளையும், தளிர்களையும் சமையலில் பயன்படுத்துகிறோம்.

முன்னைய காலங்களில் பல்லி மிட்டாய்களின் உள்ளே சீரகம், மல்லி ஆகியவற்றை வைத்திருந்தமை சிலருக்கு ஞாபகத்தில் வரலாம். ஆயினும் கொத்தமல்லி என்பது விதை அல்ல. உண்மையில் அது காய்ந்த பழம் என்பதையும் குறிப்பட வேண்டும். தாய்லாந்தில் அதன் தளிரும், வேரும் சேரந்த பேஸ்ட் (Paste) உணவுத் தயாரிப்பில் முக்கியமானதாம்.

கொத்தமல்லி மிகவும் பாதுகாப்பான உணவு என்று நம்பப்பட்ட போதும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது மருத்துவ ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது. 50 and 56 kDa, 11 kDa ஆகிய ஒவ்வாமையை ஏற்படுத்தும் (Allergns ) பொருட்கள் அதிலுள்ளனவாம். கொத்தமல்லி மாத்திரமின்றி அதைப்போன்ற அபியேசியே (Apiaceae) இனத்தைச் சார்ந்த வேறு பல கறிச்சரக்கு மூலிகைகளுக்கும் (Coriander, Caraway, Fennel and Celery) இவ்வாறு ஒவ்வாமை ஏற்படலாம் என அறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியதும் கொத்தமல்லி அலர்ஜிப் பண்டம் அதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடாதீர்கள். உணவு அலர்ஜி என்பது குறைவாகவே மக்களைப் பீடிக்கிறது. அவ்வாறான உணவு அலர்ஜிகளிலும் கறிச்சரக்கானது வெறும் 20சதவிகிதம் மட்டுமே. கறிச்சரக்கில் சேர்க்கப்படும் பல்வேறு பொருட்களில் மல்லியும் ஒன்றுதான். எனவே மல்லியை அலர்ஜி என ஒதுக்க வேண்டியதில்லை.

ஆயினும் உணவு அலர்ஜி உள்ளவர்கள் தமது ஒவ்வாமைக்கான காரணங்களாக நண்டு, இறால், கணவாய், அன்னாசி, தக்காளி எனப் பட்டியல் இடும்போது கறிச்சரக்குக்காக இருக்குமா என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

மேலும் வாசிக்க:-

சின்னு ரேஸ்டி:- http://sinnutasty.blogspot.com/2008_09_01_archive.html

விக்கிபீடியா:- http://en.wikipedia.org/wiki/Coriander

Answers.com :- http://www.answers.com/topic/coriander

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>

“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.

“ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.

விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.

107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடாவருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன?

நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம்.

விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி. ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.

அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல் 02.10.2008

Read Full Post »