Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2008

>

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?.

மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும்.

இயற்கை மருத்துவம்

அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு உண்டாக்கும் விடயம் இது.

விடயம் இனிப்பானது, மிக இனிப்பான தேன் பற்றியது. தேன் போசாக்குள்ள பதார்த்தம். அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என நம்புகிறோம்.

ஆனால் இவை எல்லாம் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. அதற்கு மேலாக ஏதாவது ஆராய்சிகளால் நிறுவப்பட்ட, விஞ்ஞானபூர்வமான மருத்துவ குணங்கள் தேனுக்கு உள்ளதா?
விஞ்ஞான பூர்வ தகவல்கள்

காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் ஏற்ற சிறப்பான மருந்து இதுவென ஆய்வுகள் கூறுகின்றன.

  • தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது.   
  • ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன. 
  • புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைந்து புதிய ஆராக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன. 
  • புண் குணமாகியதும் விரைவில் ஆராக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன. இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும்.

புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?


தேன் எவ்வாறு குணமாக்குகிறது

புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?



1. தேனில் உள்ள கூடியளவு சீனியின் அதிக செறிவும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.

2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid) உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.

3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.
புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை


சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.

எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் மேல் இடும் தேனின் அளவு உலர்ந்து போகாத அளவிற்கு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.
தேனினால் சுத்தமும் செய்யலாம்


பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் சுத்தம் செய்த பின்பு தேனை இட்டுக் கட்டுவார்கள். மாறாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.
நெருப்புச் சுட்ட புண்கள்


நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்டும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.

வாய்ப் புண்கள்

வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant) என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.


20ம் நூற்றாண்டின ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக வளர்ந்திருக்கும் என்பது திண்ணம்.


பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.
தேனின் சிறப்பு அம்சங்கள் என்ன?
சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.


தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால்; நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.


தேனின் போஷனை
ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது.


மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.

கொழுப்புச்சத்து, கொலஸடரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் ((fructose 38.5%). குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.


பக்கவிளைவுகள்

தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.
ஆதாரமற்ற நம்பிக்கை

“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே” என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைளை ஆதாரமாகக் கொண்டு மருத்தவ விடயங்களில் தீர்மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

அது சரி. சுத்தமான தேன் எங்கே கிடைக்கிறது. எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- இருக்கிறம்

Read Full Post »

>

‘பிரஸரா? உணவில் உப்பைக் குறை.’ ஆம் பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?
உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை (Potassium-K)அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விடயம் மருத்து உலகத்திற்கு நீண்ட காலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை.

அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texasஒரு ஆய்வுசெய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது. இது உணவுப் பொட்hசியத்தின் அளவிற்கு சமாந்திரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.
பிரஸரை அதிகரிப்பவை
பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பொட்டாசியக் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.

பொட்டாசியத்தின் முக்கியத்துவம்

பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension – DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன கூடியளவு இருக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறது. அதே நேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?

பொட்டசியம் அதிகமுள்ள உணவுகள்

நிச்சயமாக இல்லை.

ஆனால் பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற் பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

ஒருவருக்கு தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும் கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனைவிட அதிகம் தேவைப்படும்.
பொட்டாசியம் குறைந்தால்
கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப் பிடிப்பு (Muscle Cramps) ஏற்படலாம். சிலவேளை இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற் பயிற்சியின் பின் ஒரு கப் ஆரன்ஜ் ஜீஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தவிர்க்க முடியும்.

கடுமையான வயிறோட்டம், கட்டுபாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மதுப் பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு, போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்க் கூடும். சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.

மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும், உப்பை சற்றுக் குறைவாகவும் உட்கொள்ளுங்கள். அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல். 18.11.2008.

Read Full Post »

>

“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்று

அல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.

ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.

தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.

எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.

எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.

கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.

எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.

கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.

கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.

இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.

அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா.

கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும் குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும், முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.

எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.
பாலிலும், ஏனைய பாற் பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறது

கல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் டி (Vit D) பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.

சூரிய ஒளியும் விட்டமின் டி யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.

இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.

ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் Dexa Scan பரிசோதனையை இப்பொழுது இலங்கையிலும் செய்துகொள்ள முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

>

நாய்கள்

செத்துக் கிடக்கும்

நடுவீதியில்

வேகமாய்ச் செல்லும்

வெண்ணிற வாகனங்கள்

மோதியடித்திருக்கலாம்

தன்னினத் தனியன்களின்

கோரப்பற்கள்

குத்திக் குதறியிருக்கலாம்

நாற்றம் எடுக்க முன்

தூக்கித் தூரப் புதைக்க
யாரும் மனிதர்கள் வருவார்கள்
வீதியோரச் சிறுவீரர்களின்

கவணிலிருந்த கல்லடிபட்டு

காற்றிற் பறந்த காக்கையொன்று
சேற்றில் வீழ்ந்து செத்துக் கிடக்கும்

காக்கையினம் கூடி கத்திக் கதறும்

தூக்கித் தூரவீச
யாரும் மனிதர்கள் வருவார்கள்.

தினந்தோறும் என் தூரவழிப் பயணத்தில்
தேகத்துக் களைதீர்க்கும்
தேனீர்கடைத் தொழிலாளி,
ஊரடங்குச் சட்ட நேரத்திலும்
ஓடிவந்தெனக்கு உதவி செய்யும்
உள்ளுர் வாகனச்சாரதி,
என்னிடம் பயின்ற மாணவன்,
திருமணம் செய்துவைத்த அந்தணர்,

இன்னும் யார் யாரோ..
வீதியோரம் வீழ்ந்து கிடப்பர்:
உதிரமோடி உறைந்திருக்கும்
உடல் நாற்றம் எடுக்கும்
நாய்கள் வரும்
காக்கைள் வரும்
நானோ…
வேறெந்த மனிதரோ
அருகிற் செல்லவும்
முடியவில்லை.

ஏனெனில்
அவை மனிதப்பிணங்கள்
அகாலப்பிணங்கள்.

இது இராஜகிருபன் எழுதிய கவிதை.

தலைப்பு:அகாலப்பிணங்கள்.


விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.
அடங்கி, ஒடுங்கி, பயத்தினுள் உறைந்து
தினம் தினம் செத்து வாழும்
நாதியற்ற மனிதர்களின் நிலை கூற..

ஜீவநதி செப்டம்பர் – ஒக்டோபர் 2008 இதழிலில் இக்கவிதை வெளியாகி இருக்கிறது.

யாழ்மண்ணிலிருந்து வெளியாகும் இலக்கிய ஏடு.
இது 8வது இதழ்.
மாணவர்களான சின்னராஜா விமலன், கலாமணி பரணீதரன் இதழ் ஆசிரியர்கள்

மற்றொரு கவிதை. ரவீந்திரநாத் தாகூர் எழுதியது. (கீதாஞ்சலி – 11)

தேவனை அவனில் காண்பாய்

கதவினைப் பூட்டி உள்ளே
கருமிருட் டதனில் நின்று
சுதந்திர மாக யாரைத்
துதிக்pறாய்? ஜபமா? மாலை
அதனையும் உருட்டு றாயே!
ஆடலும் பாடல் தானும்
அதற்குமேல் மந்திர தந்த்ர
அலுவலும் பார்க்கின் றாயே

ஐயனே அந்த வித்தை
அனைத்தையும் விட்டாலென்ன?
செய்யுமுன் வித்தை யாலே
தெய்வமும் தெரிவ துண்டோ?
பொய்யெனில் கண்ணை யிந்தப்
பொழுதிலே திறந்து பார்நீ
மெய்யென உணரு வாய்உன்
முன்பிலோ கடவுள் இல்லை


மேலும் தொடர்கிறது கவிதை. உழைப்பவனில் இறைவனைக் காண் என்று சொல்கிறது.

பூசை, புனஸ்காரம், ஜபம் எனக்
காலத்தை நேரத்தையும் வீணடிக்காது
உழைப்பவர், துன்பப்படுவோர், ஏழைகளில்
இறைவனைக் காண வேண்டும்
என்ற கருத்தை
எத்தனை பேர் சொல்லிவிட்டார்கள்.

இன்னமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதே.

என்று மடியும் இத்தகைய போலிவேடங்கள்.

சந்திரகாந்தா முருகானந்தனின் ‘குடை’, த.கலாமணியின் ‘புலவி’, சி.;சிவாகரின் ‘மெல்லப் புரியும்’, கயிலையின் ‘ஒரு தாயின் சுயகதை’ ஆகிய சிறுகதைகளும்

பேராசிரியர் மௌகுருவுடனான நேர்காணலும்,

கட்டுரைகள், கவிதைகள், பத்தி எழுத்து என 56 பக்கங்களைக் கொண்ட இதழ் மிகவும் கனதியாக உள்ளது.

‘செங்கோடன்’ எழுதிய பரஞ்சோதி முனிவர் பேசும் சைவத்துள் சாதியம்’ மிக முக்கியமான ஒரு கட்டுரை. இந்து சமயம், சைவசமயம் என்ற போர்வையில் அந்தக் காலம் முதல் சாதியம் வளர்க்கப்பட்தை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

வாங்கி வாசித்து பாதுகாக்க வேண்டிய இதழ்.

தொடர்புகளுக்கு:-jeevanathy@yahoo.com

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »