Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2008

>

துளிர்த்து எழுதலின் சுகம்
சொல்லித் தெரிவதில்லை.
பனியில் நனைந்து
பசுமையில் குளிர்ந்து
பசளையின் செறிநிலத்தில்
முளைவிடுதலில்
ஆச்சரியம் ஏதுமில்லை.
துளிர்த்து எழுதலின் சுகம்
அங்கு இருக்கவே செய்கிறது.
உயிரூட்டும்
மழைத்துளியில்
தரிசு நிலத்திலும்
உயிர் பிறக்கவே
செய்யும்.
ஆண்டவன்
இட்ட பிச்சை அது!
தகிக்கும் சூரிய
வெம்மையில்
தீய்ந்து
வரண்ட மண்ணில்
துலா ஓடிப் பாய்ந்த
சிலதுளி நீரிலும்
விதைகள் முளைக்கவே
செய்யும்
மனித உழைப்பின்
மகிமை அது!
ஹிரோசிமாவின்
நச்சுக் குண்டுகள்
எரித்தழித்த
மண்ணிலும் கூட
உயிரின் ஓலம்
கேட்டதில்லையா?
ஓலங்கள் அடங்கி
இன்று
ஆனந்த கீதங்களும்
பிறந்தனவே!
நம்பிக்கையும்
உறுதியும்,உழைப்பும்
திடசங்கற்பமும்
இருந்தால்
மனித நிண
வெட்கை
அனலாய் வீசும்
சுடுகாட்டிலும்
துளிர் முளைக்கும்.
துளிர்த்து எழுதலின் சுகம்
நிஜமாய் அங்கிருக்கும்.
சுயமான சுகம்
வெற்றியின் சுகம்
அது! வேகத்தின் சுகம்
வீரத்தின் சுகம்
சுட்டெரிக்கும்
அழிவிலிருந்து
மீண்டெழும் சுகம்
சொல்லித் தெரிவதில்லை.
சொல்லிப் புரியப்போவதும்
இல்லை.

– அழகு சந்தோஷ்-

Read Full Post »

>

கல்சியம் மாத்திரைகள் எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்? என மேலதிக கல்சியம் எடுப்பது பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் எழுதியிருந்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியானபோது பலர் மேலும் ஒரு சில சந்தேகங்களை எழுப்பினர். அதில் முக்கியமானது ஆண்களுக்கும் கல்சியம் தேவையா என்பதாகும்.
ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் ஏற்படுவது உண்மையே. வயதான காலத்தில் இடுப்பு எலும்பு முறிவடைவது (Hip Fracture) ஒரு முக்கிய பிரச்சினையாகும். இடுப்பு எலும்பு முறிவுகளை எடுத்தால் அவற்றில் கால் பங்கு (1/4) ஆண்களிலேயே ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.
அதற்கும் மேலாக முப்பது சதவிகிதமான (30%) வயதான ஆண்களில் வெளிப்படையாகத் தெரியாத மென்வெடிப்புகள் ( Fragility Fractures) ஏற்படுவதாகவும் தெரிகிறது. எனவே, ஆண்களுக்கும் ஒஸ்டியோபொரோசிஸ் என்பது ஒரு பிரச்சினையே என்பது தெளிவாகிறது.
இவ்வாறாக இருந்தபோதும் ஒஸ்டியோபொரோசிஸ் சம்பந்தமான ஆய்வுகள் ஆண்களில் அதிகம் செய்யப்பட்டதில்லை. பெண்களிலேயே பெரும்பாலும் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த “பாரபட்சத்தை’ நிவர்த்திக்குமுகமாக நியூஸிலாந்தில் ஆண்களில் ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. 24 மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வின்போது மேலதிக கல்சியம் கொடுக்கப்பட்ட ஆண்களின் எலும்புத் திணிவு குறியஈடு (BMI) அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டது. எனவே, ஆண்களுக்கும் மேலதிக கல்சியம் உதவும் என்பது தெளிவாகிறது.
எவ்வளவு கல்சியம் தேவை. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தினமும் 1200 மி.கி. கல்சியம் தேவைப்படுகிறது. அத்துடன், தினமும் 400 முதல் 600 மி.கி. வரையான விற்றமின் “டி’யும் தேவைப்படுகிறது.
அதில் ஓரளவு கல்சியத்தை பால், மற்றும் தயிர், யோக்கட், சீஸ் போன்ற பாற் பொருட்களிலிருந்தும் தினமும் பெற முடியும். ஒரு கப் பால் அல்லது 8 அவுன்ஸ் கொழுப்பு நீக்கிய யோக்கட் உண்பதன் மூலம் எமது தினசரி கல்சியத் தேவையின் அரைவாசி அளவைப் பெற முடியும்.
மிகுதியை கல்சியம் மாத்திரைகளாகக் கொடுக்கலாம். எனவே, வயதான ஆண்களுக்கு தினமும் 600 மி.கி. போதுமானதா அல்லது 600 மி.கி. இரண்டு தடவைகள் கொடுக்க வேண்டுமா என்பது பற்றி அறிய மேலும் ஆய்வுகள் உதவக்கூடும்.
ஆயினும், எலும்பின் உறுதிக்கு இவை மட்டும் போதாது. போதிய உடற்பயிற்சி செய்தால் தான் எலும்புகளும் அதனைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் பெறும். எனவே, ஓடுவது, வேகமான நடை, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற பயிற்சிகளும் அவசியம். இதன்மூலம் வயதான ஆண்களும் தமது எலும்புகளின் உறுதியைப் பேணி விழுகைகளையும் எலும்பு முறிவுகளையும் தடுக்க முடியும்.

-டொக்டர் எம்.கே. முருகானந்தன்-
தினக்குரல் 29.12.2008

Read Full Post »

>

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
முகத்தில் வாட்டம்!
சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது.
எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப் பூச்சிகள் சுருண்டு திரண்டு கிடப்பது போல கருநீலத்தில் வீக்கங்கள் படர்ந்திருந்தன.
பார்க்க அருவருப்பாக இருந்தது. விளையாடப் போன நான் போன போக்கிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டேன்.
அப்பொழுது அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த சில காலத்தின் பின் அவரது கால்களில் வீக்கம் காணமல் மறைந்து விட்டிருந்தது.
இன்னொருவர் பற்றிய நினைவும் வருகிறது. நல்ல உயரமான, வாட்டசாட்டமான நடுத்தர வயது மனிதர். அவரது முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களிலும் சிறு பாம்புகள் சுருண்டு கிடந்து நெளிவது போல நாளங்கள் வீங்கிக் கிடக்கும்.

கணுக்காலடியில் பெரிய புண். நீண்ட நாட்களாக மாறாது கிடந்தது.
அது என்ன என வருத்தம் அவரது மகனிடம் கேட்டேன். ஏதோ நரம்பு வீக்கமாம். அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை.
இப்பொழுது அவர் காலமாகிவிட்டார். ஆனால் பிற்பாடு அவரது மகனுக்கும் அதே வருத்தம் வந்தபோது நானே வைத்திய ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இன்று சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அவர்களை மீள நினைந்து பார்க்கும்போது அவை நாளப் புடைப்புக்கள் அதாவது Varicose Veins என்பது தெரிகிறது. வரிக்கோஸ் வெயின்ஸ் என்பது திரண்டு சுருண்ட நாள வீக்கங்கள் ஆகும்.
நாளங்கள் எனப்படுபவை இரத்தக் குழாய்கள். இருதயத்திலிருந்து ஒட்சி ஏற்றப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட) குருதியை உடல் உறுப்புகளுக்கு எடுத்து வருபவை நாடிகள் (Artery) எனப்படும். உடல் உறுப்புகளால் உபயோகிக்கப்பட்ட குருதியை மீண்டும் இருதயத்திற்கு எடுத்துச் செல்பவை நாளங்கள் (Veins) எனப்படும்.
இது எத்தகைய நோய்
இவை பொதுவாக முழங்காலுக்குக் கீழே பிற்புறமாக கெண்டைப் பகுதியில் ஏற்படும். தொடையின் உட்புறமாகவும் தோன்றலாம். தோலின் கீழாக தடித்து சுருண்டு வீங்கி, நீல நிறத்தில் அல்லது கரு நீல நிறத்தில் தோன்றும் இவை நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக இயங்காததாலேயே ஏற்படுகின்றன. நாளங்களில் உள்ள வால்வுகள் ஒரு வழிப் பாதை போலச் செயற்படுகின்றன.
அதாவது கீழிருந்து மேலாக இருதயத்தை நோக்கி இரத்தத்தைப் பாய அனுமதிக்கின்றன. ஆனால் மேலிருந்து கீழ் வர அனுமதிக்கமாட்டா. ஆயினும் இந்த வால்வுகள் சரியானபடி இயங்க முடியாதபோது இரத்தம் வழமைபோலப் பாய முடியாமல், நாளங்களில் தேங்கி வீக்கமடையும். இப்படித்தான் நாளப் புடைப்புக்கள் தோன்றுகின்றன.
சாதாரணமாக நாளப் புடைப்புக்கள் எந்தவித துன்பத்தையும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோன்றும் என்ற உணர்வுதான் பெரும்பாலும் சிகிச்சையை நாட வைக்கும்.
ஆயினும் சற்று அதிகமானால் கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சற்று வலிக்கவும் செய்யலாம்.
கெண்டைக் காலில் தசைப் பிடிப்பும் ஏற்படுவதுண்டு.
நீண்ட காலம் தொடர்ந்தால் கால்களின் கீழ்ப் பகுதிகளில் வீக்கமடைந்த நாளங்களைச் சுற்றி தோல் கருமையடைந்து அரிப்பும் ஏற்படக் கூடும்.
கால் வீக்கமும் ஏற்படக் கூடும்.
மாறாத புண்களும் தோன்றலாம். இந்த நாளப் புடைப்புகளில் காயப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பித்தால் உங்களால் நிறுத்துவது கஸ்டம்.
நாளப் புடைப்பு நோய் யாருக்கு வரும்?
நாளப் புடைப்பு நோய் யாருக்கு வேண்டுமானால் வரலாம்.
ஆனால் பொதுவாக 30 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களையே பெரிதும் பாதிப்பதைக் காண்கிறோம்.
பரம்பரையில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஒருவருக்கு இந் நோய் இருக்குமாயின் அவர்களது நெருங்கிய உறவினர்களில் இருப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்கு அதிகமாகும். கட்டுரையின் ஆரம்பத்தில் தகப்பனுக்கும் மகனுக்கும் இந்நோய் வந்ததை ஞாபகப்படுததலாம்.
அதே போல ஆண்களை விட பெண்களுக்கு வருவதற்கான சாத்தியமும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
அதிலும் முக்கியமாக கர்ப்பணியாக இருக்கும்போது அதிகம் தோன்றுவதுண்டு. இதற்குக் காரணம் வயிற்றில் வளரும் கருவானது தாயின் தொடைகளினூடாக வயிற்றுக்கள் வரும் நாளங்களை அழுத்துவதால் இரத்த ஓட்டம் பாதிப்புற்று நாளப் புடைப்பை ஏற்படுத்துவதேயாகும்.
கர்ப்ப காலத்திலும், பெண் பிள்ளைகள் வயசிற்கு வரும் காலங்களிலும், மாதவிடாய் முற்றாக நிற்கும் காலங்களிலும் பெண்களது உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் பின்பு அவர்களுக்கு நாளப் புடைப்பு உண்டாவதற்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.
நீங்கள் அதீத எடையுடையவராக இருந்தால் உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பானது நாளங்களை அழுத்தி நாளப் புடைப்பு நோயை ஏற்படுத்தலாம். கொலஸ்டரோல், பிரஸர், நீரிழிவு போன்ற நோய்களுக்கும் அதீத எடைக்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே அறிவீர்கள். எனவே உடற் பயிற்சிகளாலும், நல்ல உணவுப் பழக்கங்களாலும் எடையை சரியான அளவில் பேணுங்கள்.
நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதும், உட்கார்ந்திருப்பதும் கூட நாளப் புடைப்பை ஏற்படுத்தலாம்.
முக்கியமாக காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு, அல்லது மடித்துக் கொண்டு உட்காரும்போது நாளங்கள் கடுமையாக உழைத்தே இரத்தத்தை மேலே செலுத்த வேண்டியிருக்கும். இதனால் அவை நாளடைவில் பலவீனப்பட்டு நாளப் புடைப்பு உண்டாகலாம்.
வைத்தியர்கள் கண்ணால் பார்தவுடனேயே இது என்ன நோய் என்பது தெரிந்துவிடும் என்பதால் பெரும்பாலும் மேலதிக பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. ஆயினும் சில தருணங்களில் டொப்ளர் ஸ்கான் (Doppler UltraSound)போன்ற பரிசோதனைகள் செய்ய நேரலாம்.
நீங்கள் செய்யக் கூடியது என்ன?
இதனைத் தணிக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?
நீண்ட நேரம் ஒரேயடியாக நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நிற்க நேர்ந்தால் சற்று உட்கார்ந்தோ அல்லது கால்களைச் சற்று மடித்து நீட்டிப் பயிற்சி செய்து நாள இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துங்கள்.
நாளப் புடைப்பு உள்ளவர்கள் கால்களைத் கீழே தொங்க விட்டபடி உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. சிறிய ஸ்டூல் போன்ற ஏதாவது ஒன்றில் கால்களை உயர்த்தி நீட்டி வைத்திருங்கள்.
தூங்கும்போது ஒரு தலையணை மேல் கால்களை உயர்த்தி வைத்தபடி தூங்குங்கள். உங்கள் இருதயம் இருக்கும் நிலையை விட உயரமாக உங்கள் கால்கள் இருந்தால் காலிலுள்ள இரத்தம் சுலபமாக மேலேறும். அதனால் வீக்கமும் வேதனையும் குறையும்.
சுலபமான உடற் பயிற்சிகள் உங்கள் தசைகளின் இழுவைச் சக்தியை அதிகரிக்கும். இது நாளங்களின் ஊடான இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி நாளப் புடைப்பைக் குறைக்க உதவும்.அத்துடன் உங்கள் உடலிலுள்ள மேலதிக எடையைக் குறையுங்கள். நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துவதுடன், நாளங்களின் மேல் அதீத எடையினால் உண்டாகும் அழுத்தத்தையும் குறைக்கும்.
நாளப் புடைப்பினால் ஏற்படும் வேதனையையும் வீக்கத்தையும் குறைக்க அவற்றைச் சுற்றி பண்டேஜ் அணிவது உதவியாக இருக்கும். இதற்கென தயாரிக்கப்பட்ட விசேடமான பண்டேஜ்கள் மருந்தகங்களில் கிடைக்கும். முழங்காலுக்கு கீழ் மட்டும் அணியக் கூடியதும், தொடைவரை முழக் கால்களையும் மூடக் கூடியதாக அணியக் கூடியதும் போன்று பல வகைகளில் கிடைக்கும்.
வைத்தியரின் ஆலோசனையுடன் உங்களுக்கு ஏற்றதை உபயோகிக்க வேண்டும்.
இவற்றை பொதுவாக காலையில் படுக்கையிலிருந்து எழுந்து நடமாட முன்னரே அணிய வேண்டும். நடமாடும் நேரம் முழவதும் அணிந்திருந்து இரவு படுக்கைக்குக் போகும் போதே கழற்ற வேண்டும்.
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வயிறு, அரைப்பகுதி, தொடை ஆகியவற்றைச் சுற்றி இறுக்கமான ஆடைகளை அணிந்தால் நாளப்புடைப்பு மோசமாகக் கூடும்.
சிகிச்சை முறைகள்
பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.
நோயின் தன்மைக்கும், நோயாளியின் தேவைகளுக்கும் ஏற்ப இவை மாறுபடும்.
மிக இலகுவானது ஊசி மூலம் நோயுற்ற நாளங்களை மூடச் செய்வதாகும். நோயாளி நிற்க வைத்து நாளத்தினுள் ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். மருந்து அவ்விடத்தில் உள்ள நோயுற்ற நாளங்களை கட்டிபடச் செய்து அடைத்து மூடும்.
மூடச் செய்வது என்று சொன்னவுடன் பயந்து விடாதீர்கள். புடைத்த நாளங்களை மூடச் செய்வதால் இரத்தச் சுற்றோற்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. அருகில் உள்ள சிறு நாளங்கள் ஊடாக அது திசை திருப்பப்பட்டு இடையூறின்றித் தொடரும். ஊசி போட்ட பின் இறுக்கமான பன்டேஸ் போட்டுவிடுவார்கள்.
இச் சிகிச்சை பொதுவாக சிறிய நாளப் புடைப்புகளுக்கும், மிகச் சிறிய சிலந்திவகைப் அடைப்புகளுக்கும் (Spider Veins) பொருந்தும்.
பல வகையான சத்திர சிகிச்சைகள் நாளப்புடைப்பு நோயைக் குணப்படுத்தச் செய்யப்படுகின்றன.
லேசர் (Laser) சிகிச்சையானது சிறிய நாளப்புடைப்புகளை ஒளிச் சக்தி மூலம் கரையச் செய்யும்.
அகநோக்கிக் குழாய் (Endoscopy) மூலம் செய்யப்படும் சத்திர சிகிச்சையின் போது சிறிய துவாரம் ஊடாக செலுத்தப்படும் குழாயுடன் இணைந்த கமரா மூலம் நோயுற்ற வால்வுகளை நேரடியாகப் பார்த்து, அதனுடன் இணைந்த நுண்ணிய உபகரணம் மூலம் நோயுற்ற வால்வுகளை மூடச் செய்வதாகும்.
வேறும் பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன.
சிகிச்சையின் பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீரும். நாளாந்த நடவடிக்கைகளில் நீங்கள் வழமை போல ஈடுபடலாம். ஆயினும் தொடர்ந்தும் சில நாட்களுக்கு பன்டேஸ் அணிய நேரலாம். கால் வீக்கம், தசைப்பிடிப்பு, தோல் அரிப்பு, தோல் கருமை படர்தல் போன்ற இறிகுறிகள் ஏற்கனவே இருந்திருந்தால் அவை குணமாக சற்றுக் கூடிய காலம் எடுக்கும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>


‘உறங்காத மனமொன்று உண்டு’ எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.
சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கிவிடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.
மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.
ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
சந்திரவதனாவும் அத்தகையவர்தான். ‘எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத பொழுதுகளை எனது எழுத்துகளாற்றான் தேற்றியிருக்கிறேன்.’ என அவரே தனது முன்னுரையில் சொல்கிறார். துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் அதன் சுமையைக் குறைக்கிறார். மகிழ்ச்சியான கணங்களை பிட்டுத் தருகிறார்.
சந்திரவதனாவின் படைப்புலகம் எளிமையானது, அதன் நிகழ்வுகள் வாழ்வோடு ஒன்றியது. நாளந்தம் தம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவரின் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கற்பனை மெருகூட்டாது, அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.
பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, நாகொல்லாகம், வவுனியா, மொஸ்கோ, ஜேர்மன், லண்டன், கனடா எனப் பயணப்பட்டுத் தேடப்பட்டு அவரது ஆழ்மனத்தில் உறைந்திருந்து மீட்கப்பட்ட புதையல்கள்தான் ‘மனஓசை’ என்ற சிறுகதைத் தொகுப்பு.
அங்கெல்லாம் சந்திக்கும் மக்களது, முக்கியமாக தமிழர் வாழ்வினைப் பதிவு செய்கிறது. ஆய்வாளனாக, சமூகவியலாளனாக, விஞ்ஞானியாக மனிதவாழ்வை சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கி பிய்த்துப் பார்க்கும் பார்வை அல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் பார்வை இது. அவளின் உள்ளுர் வாழ்வின் நினைவுகளையும், அதன் எதிர்மறையான புலம்பெயர் வாழ்வின் கோலங்களையும் தெளித்துச் செல்கிறது.
ஆத்தியடி வீட்டில் இருக்கும் பிச்சிப் பூவின் மணத்தில் கிறங்கும் அதே மனம் ஜேர்மனியின் பனியில் உறைந்த மரங்களிலும் லயிக்கிறது.
‘காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் இருந்த காசல் நட்ஸ் மரம்’;. பின்னர் ‘இலைகள் மஞ்சளாகி … இலைகளே இல்லாமல் மொட்டையாகி,’ பின் ‘பனியால் மூடப்பட்டு ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து பரந்து அழகாக….’ என்கிறர் ஓரிடத்தில்.
ஆம் அவருக்கு வாழ்வை ரசிக்கத் தெரிகிறது. மனசு பூரித்து போதையாக நிறைந்து வழிகிற நேரங்களில் மட்டுமின்றி மனசுக்குள் சோகம் சுமையாக அழுத்தி துயர் சொரியக் கரையும் கணங்களிலும் கூட இயற்கையின் மேலான வாஞ்சையை, மனித உறவுகள் மீதான அக்கறையையும் பரிவையும் அவரில் காண முடிகிறது. இந்த வாலாயம் அனைவருக்கும் கை கூடுவது அல்ல.
யாழ்ப்பாணச் சமூகம் எவ்வளவு தூரம் தாங்க முடியாத சுமைகளையும் சுமந்த போதும் அவ்வளவு தூரம் அதிலிருந்து மீண்டு வாழவும் செய்கிறது.
தந்தையை இழந்தவர் எத்தனை பேர்?
தாயை, சகோதரங்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை என எவர் ஒருவரையாவது இழக்காதவர் அம் மண்ணில் இருக்கிறார்களா?.
அங்கங்களை இழத்தல், வீட்டை இழத்தல், தொழில் இழத்தல் என மற்றொரு பக்கம்.
அதற்கு மேலாக தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்போது? தாய் மண்ணலிருந்து பிரிந்தேனும் புதுவாழ்வு பெற விழைகிறது.
அதற்காக அச் சமூகம் கொடுத்த, கொடுக்கிற விலை என்ன? ‘சொல்லிச் சென்றவள்’ சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு கூடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும்.
காதல் கல்யாணமே இன்றைய யதார்த்தம்.
உலகம் அதற்கு மேலும் சென்று விட்டது.
கல்யாணமின்றி சேர்ந்து வாழ்வதும், திருமணமாகாமலே குழந்தைகள் பெறுவதும், விரும்பங்கள் மாறினால் கட்டியவனை அல்லது கட்டியவளை பிரிந்து செல்வதும், ஒற்றைப் பெற்றாருடன் குழந்தைகள் வாழ்வதும் இன்று மேலைத் தேச வாழ்வுக்கு அன்னியமான செயற்பாடுகள் அல்ல.
இவ்வாறு இருக்கையில் ‘புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கோ வாழும் ஒருவனுக்கு மனைவியாவதற்கு தயாராவதும், ….. கண்ணாலே காணதவனை நம்பி வெளிநாட்டுக்கு ஏறிப் போக அங்கு அவன் சட்டப்படி கலியாணம் செய்யாது அல்லாட வைப்பதும், திருப்பி அனுப்ப முனைய அவள் நிரக்கதியாவதும் இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறார்.
‘பாதை எங்கே’, ‘விழிப்பு’, ‘வேசங்கள்’, போன்றவை அத்தகைய படைப்புகள்.
‘புலம் பெயர் வாழ்வின் பெண்கள் சார்ந்த அவலங்களை இவ்வளவு ஆழமாகப் பதிவு யாரும் பதிவு செய்யவில்லை’ என்ற கருத்துப்பட இராஜன் முருகவேள் கூறியிருப்பதுடன் நானும் ஓம் படுகிறேன்.
அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வின் இன்னொரு பக்கமாக, ‘தீரக்கதரிசனம்’ கதையில் வரும் ஒரு வயதான பாட்டாவின் வாழ்வில் மூழ்கும்போது எம் மனமும் கனடாவின் பனிபோல உறைந்து விடுகிறது.
‘தாங்கள் காலமை வேலைக்குப் போற பொழுது தகப்பனை வெளியிலை விட்டு கதவைப் பூட்டிப் போட்டு போயிடுவினம்’ மத்தியானம் சாப்பிடுறது, ரொயிலட்றுக்கு போறது எல்லாம் அவர்கள் வந்தாப் போலைதானாம்.
வீதியோரக் கல்லில் பனியில் உறைந்து, பசியில் துவண்டு, பேசுவதற்கும் ஆள் இன்றி ஒரு பிச்சைக்காரனைப் போல பரிதாபமாக அமர்ந்திருந்த யாரோ ஒரு பாட்டாவைப் பற்றிய தகவல் இது.
‘அப்ப அவர் ஏன் இங்கை இருக்கிறார். நாட்டுக்குப் போகலாம்தானே’ கதாசிரியர், கூட வந்த பிள்ளையிடம் கேட்கிறார்.
‘அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகிதில்லோ’.
‘சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பதாக’ கதாசிரியர் கூறுகிறார்.
‘வீட்டு காவல் நாய்கள் போல இருக்கிறம்’ என அவுஸ்திரேலியா சென்ற ஒரு முதியவர் என்னிடம் முன்னொரு போது கூறியபோது மனம் வருந்தினேன்.
இவை யாவும் வெறும் கொடுமை அல்ல. பணத்தின் முன், சொகுசு வாழ்க்கைக்கு முன் மனித உணர்வுகளே இவர்களுக்கு மரணித்துவிட்டதன் வெளிப்பாடு.
நெஞ்சை உலுக்கும் நிலை இது.
பெண்ணியம் அவரது படைப்புகளில் கருத்துநிலை வாதமாகத் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. முக்கியமாக ஜேர்மனி நாட்டில் சில தமிழ்ப் பெண்கள் படும் அவலங்களை மிகவும் யாதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.
‘தாலியை நிதானமாகக் கழற்றி வைக்கும்’ ‘விலங்குடைப்போம்’ கதையின் சங்கவி,
‘என்னோடை ஒரு நாள் கோப்பி குடிக்க வருவியோ’ என்ற கேள்வியோடு அதற்கு மேலானா சம்மதத்தைத் தேடும் ஆபிரிக்காரனை உறுதியோடு மறுக்கும் ‘பயணம்’ கதையின் கோகிலா ஆகியோர் சற்றுத் துணிச்சல்காரர்கள்.
ஆனால் அதே நேரம் ‘என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?’, ‘ஏன்தான் பெண்ணாய்’ போன்ற கதைகளில் வரும் பெண்கள் சாந்தமானவர்கள்.
குடும்ப வாழ்வில் தாம் தினசரி அடக்கப்பட்போதும் அதிலிருந்து வெளி வராமல் பொறுத்துக் கொள்ளும் பேதைகள். தங்களை மட்டும் யோசிக்காது குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைத்துப் அடங்கிப் போகும் அப்பாவிகள்.
உண்மையில் இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதுதான்.
கதைகளைப் படித்துவிட்டு உங்கள் வீட்டையும் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.
‘டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து …’ என ஆரம்பிக்கும் இந் நூலின் தலைப்புக் கதையான பொட்டு கிளாஸ் சாதீயம் பற்றியது. தாழ்த்ப்பட்ட சாதியினர் மீதான உயர்சாதிப் பெண்ணின் பரிவை எடுத்துச் சொல்கிறது.
சந்திரவதனா செல்வகுமாரன், மற்றும் அவரது சகோதரி சந்திரா ரவீந்திரன் ஆகியோரை 80களின் ஆரம்பத்திலிருந்து அறிந்திருக்கிறேன். இவரது உலகின் ஒரு பகுதி எனது உலகமும் கூட.
அவரது வீடு எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியிலிருந்து எனது சொந்த ஊரான வியாபாரிமூலைக்கு போகும் பாதையில் இருக்கிறது.
அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எனக்கும் பழக்கமானவர்களே.
ஏனைய பல பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே.
பல நிகழ்வுகளும் எனக்கும் அன்னியமானவை அல்ல.
இதனால் இவரது இந்த நூலைப் படிக்கும்போது அக் காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீள அசைபோடும் வாய்ப்பு கிட்டியது.
ஆத்தியடி பிள்ளையார் கோவில், நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில்.இவ்வாறு எவ்வளவோ!
நினைக்கும்போது எவ்வாறு எமது வாழ்வு சிதைந்து விட்டது. வாலறுந்த பட்டமாக, வேரறுந்த மரமாக அல்லாடுகிறோம் என்பது மனத்தை உறுத்துகிறது.
அவரது ‘மன ஓசை’ என்னையும் அல்லற்படுத்துகிறது.
யாழ் மண்ணோடு உறவு கொண்ட அனைவரையும் அவ்வாறே அல்லற்படுத்தும் என்பது நிச்சயம்.
சந்திரவதனா செல்வகுமாரன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமானவர். பல இணைய இதழ்களில் அவரது பல படைப்புகள் வெளியாகின்றன. தனக்கென பல வலைப்பதிவுகளையும் வைத்திருக்கிறார்.
மேலும் பிரகாசமான படைப்புலகம் அவர் பேனாவிலிருந்து ஊற்றெடுக்கக் காத்திருக்கிறது எனலாம்.
முப்பது கதைகளை அடக்கி 195 பக்கங்கள் நீளும் இத் தொகுப்பை குமரன் பிரின்ரேர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.
இலங்கை விலை ரூபா 300.00
தொடர்புகளுக்கு:- Chandra1200@gmail.com
எம்.கே.முருகானந்தன்
நன்றி:- தினக்குரல்- 14.12.2008

Read Full Post »

>

ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
காரணம் என்ன?
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
மருத்துவ ஆலோசனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.
குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
சிகிச்சை
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.
உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.
மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.
ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.
இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
அவையாவன
1.Sildenafil
2.Vardenafil
3.Tadalafil
இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.
சில்டெனபில்
உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
வார்டெனபில்
இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
ரடலபில்
இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.
பக்க விளைவுகள்
இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.
ஏனைய சிகிச்சைகள்
டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்
நன்றி:- வீரகேசரி 07.12.2008

Read Full Post »

>

‘எனக்கு தமிழ் அகராதி பார்க்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. எனக்குப் பொருள் தெரியாத தமிழ் சொல் எதுவும் அகராதிகளில் இருப்பதாகத் தெரியவில்லை’ எனப் பெருமை அடித்துக் கொண்டவர் ஒரு இலக்கிய நண்பர்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் புதிய பதிப்பு வந்துள்ள தகவலை அவரிடம் சொன்னபோது அவரது எதிர்வினை இதுவாக இருந்தது. உண்மைதான். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல. தமிழ் அறிஞரும் கூட. பழம் தமிழில் மாத்திரமல்ல நவீன தமிழ் இலக்கியத்துடனும் பரிச்சயம் கொண்டவர்.
இருந்தபோதும் அவரது கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. காரணங்கள் இரண்டு.
முதலாவது காரணம் இன்றைய தமிழ்ச் சூழலில் அதுவும் உலகளாவிய ரீதியல் மூலை முடுக்கெங்கும் தமிழ் பேசப்படுகையில், எங்கெங்கோ இருந்தெல்லாம் வட்டார மொழிகளில் நூல்களும், இணையத்தில் பதிவுகளும் தினமும் வெளி வந்து கொண்டிருக்கையில், நவீன விஞ்ஞானத் தகவல்கள் புதிது புதிதாக பிரசுரமாகையில், அறிவியல் சுயமொழியில் கற்பிக்கப்பபடுகையில் இன்றைய தமிழ் சொற்கள் யாவற்றையும் எந்த ஒரு தனிமனிதரும் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம். அண்மையில் இலங்கைப் பெண்மணி ஒருத்தி தனது வலைப் பதிவுச் சமையல் குறிப்பில் ரம்பை இலை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டு அன்பர் ஒருவர் ‘அது என்ன சினிமா நடிகையின் பெயரா?’ என பகிடியாகக் கேட்டிருந்தார். உண்மையில் அவருக்கு அச்சொல்லுக்குரிய பொருள் தெரிந்திருக்கவில்லை என்பது வெளிப்படை. தமிழ் நாட்டில் இதன் பெயர் பாண்டா இலையாம். என எழுதியதும் புரிந்து கொண்டார்.
சரி பகிடி என்ற சொல் இலங்கைக்கு அப்பால் எத்தனை தமிழர்களுக்கு புரியும். இதேபோல எங்களுக்குப் புரியாத தமிழ்நாட்டின் பல்வேறு வட்டாரச் சொற்களின் பொருளை அறியவும் உதவுகிறது என்பது வெளிப்படை.
இரண்டாவது காரணம் வெங்கட் சாமிநாதன் இந் நூல் பற்றி தனது விமர்சனத்தில் கூறுவது. அக்கருத்துடன் நானும் முழுமையாக ஒத்துப் போகிறேன்.
அவர் சொல்கிறார் ‘சாதாரணமாக, ஒரு அகராதியை நாம் கையிலெடுப்பது, தேவை எழும்போது, ஒரு சொல்லின் பொருள் அறிய. ஆனால் என் அளவில் தற்காலத் தமிழ் அகராதியின் இரு பதிப்புகளும் விரிக்கும் பக்கங்களில் ஆழ்வது ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. மொழியின் சொற்களின் பயணத்தை மக்களின் பண்பாட்டு வெளிப்பாடாகவும் பாரக்க முடிகிறது. ஓவ்வொரு சொல்லும் எங்கெங்கோ நம்மை இட்டுச் செல்கிறது’
உண்மைதான் இது வெறும் அகராதி அல்ல. சொல்லின் பொருளை மட்டும் கொடுப்பதுடன் அதன் பணி நிறைவடைந்து விடவில்லை. பெயர்ச் சொல்லாக, வினைச்சொல்லாக, துணைவினையாக, சொல்லின் பொருள் என்ன? அதன் இலக்கண வகை என்ன எனவும் பதிவு செய்கிறது. அத்துடன் நின்று விடாது பொருத்தமான ஒரு வாக்கியம் மூலம் அதன் பொருளை உணர்த்துவதும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பன்முகம் கொண்ட மனித வாழ்வின் வாழ்வியல் கோலங்கள் ஆங்காங்கே தரிசனமாகிறது. இலக்கியப் படைப்பிற்குள் மூழ்குவது போன்ற மகிழ்வுடன் நடைபோட முடிகிறது இதுவும் காரணமாகிறது.
அத்தோடு இலங்கையர்கள் என்ற முறையில் நாம் மகிழ்வதற்கான இன்னொரு சமாசாரமும் இவ் அகராதியில் உள்ளது. இலங்கைப் பொதுத் தமிழில் வழங்கும் 1700 சொற்கள் இதில் அடங்கியுள்ளன. 21,000 சொற்களை அடக்கும் இந்நூலில் இலங்கைத் தமிழுக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஒதுக்கியிருப்பது நிச்சயம் பெருமை அடையக் கூடியதே.
இதற்குக் காரணமான திரு.து.குலசிங்கத்தின் பங்களிப்பு பற்றி க்ரியா ராமகிருஸ்ணன் இவ்வாறு கூறுகிறார்.
‘…பருத்தித்துறையைச் சேர்ந்த இ.து.குலசிங்கம் பெரும் அதிஷ்டம் போல் எங்களுக்குக் கிடைத்தார். க்ரியாக்கும் குலசிங்கத்திற்கும் சுமார் 30 ஆண்டுகள் உறவு உண்டு. சொந்த அலுவலை முன்னிட்டு சென்னைக்கு வந்திருந்த அவர் எங்கள் தேவையைப் புரிந்து கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் சுமார் இரண்டு மாதங்கள் கிட்டத்தட்ட தினமும் காலையிலிருந்து மாலைவரை எங்களுடன் இருந்து இலங்கைத் தமிழுக்குள் எங்களை அழைத்துச் சென்றார். அவருடைய ஈடுபாடும் அரப்பணிப்பும் இந்த 2ம் பதிப்புக்குக் கிடைத்த பெரும்பேறு.
புத்தகங்களுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்கும் குலசிங்கம் நாங்கள் தொகுத்து வைத்திருந்ததற்கு அப்பால், மொழியில் அவருக்கு இருக்கும் இயல்பான பிடிப்பின் காரணமாக, எங்களுக்குத் தரவுகளும் சொற்களும் நிறையக் கிடைப்பதற்கு உதவி செய்தார். இந்தப் பதிப்பில் இலங்கைத் தமிழ் பிரகாசமாக ஒளிர்கிறது என்றால் அதற்குக் குலசிங்கம்தான் காரணம்.’
அவர் கூற்று மிகையானதல்ல. நவீன தமிழ் இலக்கியத்துடன் குலசிங்கத்திற்கு உள்ள ஈடுபாடு பலருக்கும் தெரியும். தேடித்தேடி நூல் வாங்குவதும், வாசித்து ரசிப்பதும், மற்றவர்களை வாசிக்கத் தூண்டுவதும் அவரோடு பிறந்த இயல்புகள்.
ராமகிருஸ்ணன் மேலும் கூறுகிறார். ‘அவருடைய தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு வேலை செய்யும்போது எழுந்த மொழியியல் சார்ந்த சந்தேகங்களுக்கு எங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து உதவியிருப்பவர் ஞ.ஜெயசீலன். சென்னையில் ஆராச்சி மாணவராக வந்திருக்கும் ஜெயசீலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் கற்பிக்கிறார்.
‘நிச்சயம் நாம் பெருமைப்படலாம். சென்ற நூற்றாண்டில் தமிழ் அகராதித் தொகுப்பில் இலங்கையர்கள் பலரும் பங்காற்றிய பின்னணியில் இன்று இவர்கள் க்ரியாவிற்கு கொடுத்த ஒத்துழைப்பு பெறுமதிமிக்கதே.
தமிழ் அகராதியின் வரலாறு சிங்கார வேலு முதலியாரின் ‘அபிதான சிந்தாமணி’ என 1910 ல் ஆரம்பிக்கிறது. 1936ல் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட Tamil Lexican வெளிவந்ததாக வெங்கட் சாமிநாதன் குறிப்பிடுகிறார்.
இலங்கையைப் பொறுத்த வரையில் ‘யாழ்ப்பாண அகராதி’ 1842 ல் சந்திரசேகர பண்டிதரால் தொகுக்கப்பட்டது. தம்பசிட்டியைச் சேர்ந்த சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையால் தொகுக்கப்பட்ட ‘தமிழ் பேரகராதி’ 1899ல் வெளியாகி, மீண்டும் 1911ல் விரிவுபடுத்தி வெளியிடப்பட்டது. கு. கதிரவேற்பிள்ளையால் தொகுக்கப்ட்ட ‘தமிழ்ச் சொல் அகராதி’ 1910ல் வெளியாகி, மீண்டும் 1912, 1923 ல் மீள் பதிப்புகளைக் கண்டது. இவை தவிர ‘தமிழ் ஆங்கில அகராதி- கையடக்கப் பிரதி’ (Tamil English Dictionary- Pocket Edition) 1900லும், 1909ல் ’20ம் நூற்றாண்டு தமிழ் அகராதி;யும் வெளிவந்ததாகத் தெரிகிறது.
க்ரியாவின் இலங்கைத் தமிழ் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகிறது.
ஒரு உதாரணம்:
அங்கப்பிரதட்டை பெ, (இலங்) அங்கப்பிரதட்சிணம்:going round the sanctum of a temple by rolling along the passage around (in fulfilment of a vow) முருகன் கோயிலில் அப்பா அங்கப்பிரதட்டை செய்தார்.
‘பெ’ என்பது பெயர்சொல்லையும், ‘இலங்’ என்பது இலங்கைச் சொல் என்பதையும் குறிக்கும். ‘முருகன் .. .’ என ஆரம்பிக்கும் வசனம், எடுத்துக் காட்டும் வாக்கியமாகும். இத்தகைய வாக்கியங்கள் மூலம் இலங்கைச் சொற்களின் கருத்தை மாத்திரமின்றி, அது எவ்வாறு இங்கு பயன்படுத்தப்படுகிறது என்ற பண்பாட்டு அம்சத்தையும் குலசிங்கம் எடுத்துக் காட்டுகிறார்.
மற்றொரு உதாரணம்:
தொதல் பெ. (இலங்) அரிசி மாவோடு தேங்காய்ப்பால், சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைக் கலந்து கிண்டித் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.
இச்சொல்லுக்கு அவர் தரும் எடுத்துக் காட்டும் வாக்கியம்- வருடப் பிறப்புக்கு நாங்கள் தொதல் கிண்டினோம். ஃ என் பிறந்த நாளுக்கு அம்மா தொதல் கிண்டித் தந்தாள்.
இவை பயன்படும் வாக்கியங்கள் மாத்திரமல்ல, வாழ்வை நயந்து நோக்கவும் வைக்கின்றன.
பேராசிரியர்கள் அண்ணாமலை, தாமோதரன் தலைமையில் க்ரியா எஸ்.இராமகிருஸ்ணனை ஆசிரியராகக் கொண்டு பெரியதொரு அறிஞர் குழவின் ஆதரவுடன் பல ஆண்டு முயற்சியின் பலனாகவே இந்த 2ம் பதிப்பு வெளிவந்துள்ளது. 1985ல் ஆரம்பித்த பணி 1992ல் முதல் பதிப்பாகப் பிறந்தது. மிகுந்த வரவேற்பு பெற்ற அகராதி அது. மொழியி;ன் வளர்ச்சியையும் காலத்தின தேவையையும் கருத்தில் கொணடு இரண்டாம் பதிப்பு பற்றிய சிந்தனை மலர்ந்தது.
மீண்டும் நீண்ட ஒன்பது ஆண்டு கால ஓயாத பணியாக 1999ல் ஆரம்பித்ததன் பலன், 2008ல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது. இதற்கு அவர்கள் பட்ட கஸ்டங்கள். எடுத்த முயற்சிகள், சுமைகள் யாவற்றையும் முன்னுரையைப் படிக்கும்போது உணர முடிகிறது. அதற்கான பலன் தமிழ் மக்களுக்கு பரிசாகக் கிடைத்துள்ளது. எம்மவர்களின் பங்களிப்பு அதிலுள்ளமை இரட்டிப்பு மகிழ்வைத் தருகிறது.
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களிடையே இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ‘சிங்கப்பூர் அரசு குறிப்பிடத்தக்க வகையில் க்ரியா அகராதியை பரவலாக்குவதற்கு உதவியிருக்கிறது. சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்காக தனியே ஓர் பதிப்பை வடிவமைக்கச் சொல்லி மாணவர்களிடையே அகராதியின் பயன்பாட்டை விரிவுபடுத்தி இருக்கிறது’ என ஆசிரியர் கூற்றிலிருந்து அறிகிறோம். இங்கும் பள்ளி மாணவர்களிடையே அதற்குப் பெரு வரவேற்பு இருப்பதை அறிவோம்.
அகராதி என்ற மொழிக்கருவி என்றைக்கும் முடிந்த முற்றான நிலையை அடைவதில்லை. ஏனென்றால் மொழி தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் சமூக, அரசியல், விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை மொழியின் பயன்பாட்டில் நெகிழ்ச்சியையும் பரவலாக்கலையும் செய்துள்ளன. இணையம், மின்னஞ்சல் போன்றவற்றில் பல்லாயிரம் சொற்கள் வந்துள்ளன. சில பழைய சொற்களுக்கு புதிய பொருள்கள் சேர்ந்துள்ளன. எனவே காலத்திற்குக் காலம் புதிய பதிப்புகள் தேவையே.
1956ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் உரைநடையில் எழுதப்பட்டவையே இவ் அகராதிக்கான தரவுமூலங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
செய்தித்தாள்கள், வாரமாத இதழ்கள், இணையம், வானொலி, தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள், சிறுகதை, நாவல் முதலிய படைப்பிலக்கியங்கள், வேளான்மை, அறிவியல் போன்ற துறை நூல்களும், கல்லூரி பள்ளிகளுக்கான பாட நூல்களும் பிற உரைநடை நூல்களும் சொல் தொகுப்புக்கு வரவு மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. துண்டறிக்கைகள். அழைப்பிதழ்கள் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டனவாம். பல இலட்சம் சொற்கள் உள்வாங்கப்பட்டன. எத்தகைய அசுர முயற்சி.
75 இலட்சம் சொல்வங்கியிலிருந்து பெற்ற தகவல்களை பிரித்துப், பகுத்து பயன்மிகுந்த அகராதியாக வெளிக்கொணர்வதற்கு கணனியும், அதற்கான மென்பொருளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உணர்கிறோம். கணனி இன்று அகராதி சாத்தியம் இல்லையென்றே கூறலாம்.
இது ஒரு தமிழ் அகராதி என்றாலும் தமிழை இரண்டாவது மொழியாகப் பயில்வோருக்கும் உதவும்பொருட்டு ஆங்கிலத்திலும் பொருள் தரப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
‘தற்காலத் தமிழில் சொற்கள் பற்றி தேவையான செய்திகளை இந்த அகராதி தர முயல்கிறது. இந்தச் செய்திகள் தமிழை துல்லியமாக பயன்படுத்த உதவும்’ எனத் தொகுப்பாளர்கள் கருதுவதை பாவனையாளர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.
தொடர்புகளுக்கு
:-Cre-A,
H-18 Flat No.3,
South Avenue,
Thiruvanmiyur,
Chennai-41
India.
இந்திய விலை ரூபா 495.
எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »