Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2009

>எமது பாடசாலையின் தோற்றம் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் உறைந்திருக்கும் பிம்பம் எது?
வெளிச் சுவர் வர்ணப் பூச்சின்றி காணப்படும் தோற்றம் இது. ஆயினும் உட்பகுதிக்கு வர்ணப் பூச்சு தெரிகிறது.

தொலைவில் வேப்பமர நிழலில், புதிய இரு வாசல் காதவு நீல நிறத்தில் மங்கலாகத் தெரிகிறது.


பாடசாலை மண்டபம் மட்டுமின்றி வெளிச் சுற்று மதிலும் வர்ணப் பூச்சுடன் அழகாககத் தென்படும் அண்மைய தோற்றம் இது. பாடசாலை சுற்று வட்ட இளைஞர்கள் சிரமதானம் மூலம் வர்ணம் அடித்து பாடசாலைக்கு புதுத் தோற்றம் கொடுத்துள்ளனர்.

அதேபோல பாடசாலை மண்டபமும் வண்ணப் பூச்சுடன் புதுப் பொலிவுடன் தென்படுகிறது.

மண்டபத்தைச் சுற்றி அழகிய பூச்செடிகள் நாட்டப்பட்டு ள்ளன. பாடசாலை அழகாகத் தோற்றமளிக்கிறது. இது மாணவர்களின் கல்விக்கு ஏற்ற குளிர்மையான தோற்றத்தையும் சூழலையும் கொடுத்துள்ளதைக் காணலாம்.

இது ஒரு வகுப்பறைத் தோற்றம். பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி உதவியால் புதிதாகச் செய்யப்பட்ட கதிரை மேசைகள் வகுப்பறைகளை அலங்கரிக்கி்னறன. மாணவர்கள் வசதியாக உட்கார்ந்து படிக்கக் கூடிய வாய்ப்பு இப்பொழுது கிட்டியுள்ளது.

இது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய இரட்டைக் கதவு கொண்ட வாசல். சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களையும் இப்பொழுது பாடசாலை வளவிற்குள் ஓட்டிச் செல்ல முடியும். திருமதி பரமேஸ்வரி கதிரவேற்பிள்ளை ஞாபகமாக டொக்டர் எம்.கே.முருகானந்தன் நிதியுதவியில் அமைக்கப்பட்டது.

இது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாடசாலைப் பெயர் வளைவு. முன்பிருந்த சிறிய வாசலுக்குப் பதிலாக அதற்கு மேற்குப் புறமாக வேப்ப மரங்கள் நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரடடை வாசல் கதவிற்கு மேலாக இந்த பாடசாலைப் பெயர் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவைச் செய்வதற்கான செலவை திரு க.மோகனதாஸ் தனது பெற்றோர்களான திரு.திருமதி கனகசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக அமைத்துக் கொடுத்துள்ளார்.

இது ஆரம்ப்ப் பாடசாலையின் தோற்றம். அங்கிருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய மண்டபங்கள் பல வருடங்களுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதனைச் சூழ சுற்றுமதில் இல்லாதது பெருங்குறையாக உள்ளது

Read Full Post »

>

யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம்- பருத்தித்துறை

பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு – 2009

நிர்வாகக் குழு 2009

காப்பாளர் :- திரு நாகலிங்கம் இரத்தினசபாபதி

தலைவர் – டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

உப தலைவர்கள் –

டொக்டர். கேதீஸ்வரநாதன்,

டொக்டர். மகாலிங்கம்,

டொக்டர். திருமதி வனிதா சண்முகதாஸ்,

திரு.மு.சோமசுந்தரம்

திரு.க.சண்முகசுந்தரம்,

திரு.ஆ.சி.வாசுதேவன்

செயலாளர் – திரு.சு.சற்குணராஜா

பொருளாளர் – திரு.இரா.இரவீந்திரன்

இணைச் செயலாளர் – திரு.சு.ஜீவகுமார்

உப பொருளாளர் – திருமதி வள்ளி பிரபாகர்

செயற்குழு அங்கத்தவர்கள் –

1. திரு. க.பிரபாகரன்

2. திரு. செ.இரத்தினசிங்கம்

3. திரு. உ.வரதராஜன்

4. திரு. க.சிதம்பரநாதன்

5. திரு. க.சிவசுந்தரம்

6. திரு. இ.இராதாகுமார்

7. திரு. ஆ.கஜேந்திரன்

8. திரு. அ.சிறிநாதன்

9. திரு. ஆ.க.நடராஜா

10. திரு. ஆ.க.இரத்தினவடிவேல்

11. டொக்டர்.ச.மதன்

ஆலோசகர் குழு –

1. திரு.க.கலாகரன்

2. திரு. இராஜ் சுப்பிரமணியம்

3. திரு. து.இராஜசேகரன்

4. தி;ரு. ப.நாகநாதன்

5. திரு. சி.வர்ணகுலசிங்கம்

6. திரு. க.சிறீஸ்கந்தராஜா

7. திருமதி. ராஜேஸ்வரி பரமேஸ்வரன்

8. திரு.ஆ.சிவநாதன்

9. திரு. க.சச்சிதானந்தம்

10. திரு. க.ஸ்ரீவேல்நாதன்

11. திரு. செ.உலகநாதபிள்ளை

கணக்காய்வாளர் – திரு.சி.தயாலிங்கம்.

Read Full Post »

>திருமதி கோகிலா மகேந்திரன் தினக்குரல் பத்திரிகையில் எழுதிய இக் கட்டுரையை பயன் கருதி இணையத்தில் பதிவிடுகிறேன்

குழந்தைகளா ? அவர்கள் புதிதாய் மலர்ந்த புஷ்பங்கள், சிறுவர்களா? அவர்கள் தான் சமூகத்தின் எதிர்கால முத்துக்கள் ஆயிற்றே! இளைஞர்களா? அவர்கள்தான் ஒரு நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். மத்திய வயதினரா? இளையோரையும் முதியோரையும் தாங்கி வழி நடத்தும் தலைவர்கள் அவர்கள்.

முதியவர்களா? அவர்களால் இனி என்ன பயன் ?

மேலே சொல்லப்பட்டது போன்ற ஒரு சிந்தனை ஓட்டம் உலகமயமாதலோடு சேர்ந்து உலகெங்கும் வேகமாகப் பரவி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் முதியோருக்கான பல சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிற அதே சமயம் பிள்ளைகள் அவர்களோடு சேர்ந்து வாழும் மனப்பாங்கு மிக வேகமாகச் சரிந்து வருவதனால் அவர்கள் தனித்து விடப்பட்ட உணர்வைப் பெறுவதும் மனச்சோர்வுக்கு உட்படுவதும் மிகப் பரவலாக காணப்படும் ஒரு நிலையாக இருக்கிறது.

எமது நாட்டில் 60 வயதுடைய ஒருவர் தனது வேலையில் இருந்து ஓய்வுபெறும் வயது. முதுமையின் ஆரம்பம் எனக் கருதப்படலாம். சில உளவியலாளர்கள் முதுமையை இளமுதுமை என்றும் முதிர்முதுமை என்றும் இரண்டாகப் பிரித்து நோக்குகின்றனர்.

75 வயதுக்கு உட்பட்டவர்களை இள முதுமையில் இருப்பவர்கள் எனக் கருதலாம். வேலையில் இருந்து ஓய்வுபெற்றவுடன் அதிக அளவு ஓய்வு நேரம் இருக்கும். மனமும் அறிக்கைத் தொழிற்பாடுகளைத் திறம்படச் செய்யக்கூடிய நிலையில் இருக்கும். ஏதாவது ஒரு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகமாக இருந்தாலும் அது அவர்களின் தொழிற்பாடுகளை நிறுத்தி விடுவதில்லை. வயது ஏற ஏறத் தொழிற்படு தன்மை குறைந்து வரலாம்.

ஆயினும் எண்பது வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பகுதியினர் தொடர்ந்து தொழிற்பட்டுக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதுமையும் கலாசாரப் பண்புகளும்

ஒருவரது முதுமை அநுபவத்தில் அவர் வாழும் சமூகக் கலாசாரம் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகிறது. முதுமை என்ற எண்ணக் கருவை உள்வாங்கும் தன்மை முதுமையில் தமது பாத்திரம் பற்றிய உணர்வு,

முதியவர்களின் கடமைகளும் பொறுப்புகளும், தம்மைப்பற்றிய சுயகவனம், ஆதரவு வலைப்பின்னல் போன்ற பல விடயங்களிலும் கலாசாரத்தின் செல்வாக்கு முக்கியமாகின்றது. ஜப்பானில் 75% ஆன முதியவர்கள் தமது பிள்ளைகளுடனேயே வாழ்கின்றனர். ஜப்பானிய கலாசாரத்தில் வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பது பிள்ளைகளின் முக்கிய கடமை. அவர்களைத் தவிக்கவிடுவது குடும்பத்திற்கு பெரிய அவமானம். குடும்பத்தினரிடையே உடைகள் பங்கிடப்படும் போது மிகச் சிறந்த உடைகள் முதியவர்களுக்கு வழங்கப்படுதல், மிக மதிப்பான வார்த்தைகளால் அவர்கள் அழைக்கப்படுதல், ஆழ்ந்த வணக்கத்துக்குரியவர்களாக அவர்கள் கருதப்படுதல், குடும்பம் ஒன்றாக நீராடும் சந்தர்ப்பங்களில் முதலில் நீராடுபவர்களாக முதியவர் இருத்தல் போன்ற பழக்க வழக்கங்கள் ஜப்பானில் இன்னும் பேணப்படுகின்றன. குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் எல்லாம் முதியவர்களின் ஆலோசனை பெறப்படும். எமது நாடு உள்ளிட்ட கீழைத்தேய நாடுகள் பலவற்றிலும் இந்தப் போக்கு இருந்தாயினும் இப்போது மெல்ல மாறி வருகிறது.

அமெரிக்கா போன்ற விருத்தியடைந்த மேலைத்தேய நாடுகள் இன்று முற்று முழுவதாக இளைஞர் மையநாடுகளாக மாறிவிட்டன. ஆகவே அங்கு முதுமை என்பது அழகு, வேகம், வலிமை, வருமானம், மதிப்பு எல்லாமே மெல்ல மெல்ல அற்றுப் போகும் காலம் என்றே பார்க்கப்படுகிறது. இந்த மனப்பாங்கு காரணமாக அமெரிக்காவில் முதியவர்களின் தற்கொலை நூற்றுவீதம் மிக அதிகமாக இருக்கிறது. முதுமையில் வரும் உடற்தொழிலியல் மாற்றங்கள் காரணமாகவும் மனம் தாழ்ந்து போகலாமாயினும் கலாசாரம் செலுத்தும் செல்வாக்கு மிகப் பிரதானமானது. என்றே கருதப்படுகிறது.

எமது நாட்டின் அனர்த்தங்கள் மிக ஏராளமான மக்களைப் புலம்பெயர வைத்துள்ளது. புலம்பெயர்ந்து செல்பவர்கள் பெரும்பாலும் பெரும்பாலும் இளைஞர்கள். மேலைத்தேய வாழ்வு அவர்களின் மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. இங்கு தனித்துவிடப்படும் முதியோருக்குப் பணம் அனுப்புவது மட்டும் போதுமானது என்றே அவர்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முதியவர்கள் புலம்பெயர்வதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்வது கடினமாக இருக்கிறது. இத்தகைய பின்னணியில் எமது நாட்டின் முதியவர்கள் பலரும் கூட மனதளவில் தனித்துவிடப்படும் மனச்சோர்வுக்கு உள்ளாகும் சூழல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

முதுமையின் சவால்கள்

முதுமையில் பார்த்தல், கேட்டல், சுவைத்தல் போன்ற புலன் சார் தொழிற்பாடுகளில் குறை ஏற்படலாம். இதனால் புலன்கள் சிறப்பாகத் தொழிற்படுகிறவர்களுடனான தொடர்பாடல் திறன் குறையலாம். இது அவர்களின் சுய கணிப்பை பாதிப்பதால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்க முயற்சி செய்யலாம்.

ஆயினும் பல முதியவர்கள் ஒரு புலன் உணர்வில் குறை ஏற்படுகிறபோது ஏனைய புலன்களில் அதிகம் தங்கி இருந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல் இயக்கம் தொடர்பான வேகம் முதுமையில் குறையத்தான் செய்யும். அதே நேரம் புலன் இயக்கக் குறைபாடுகளும் தசை இயக்க வேகத்தைக் குறைக்கலாம். உதாரணமாக கண்பார்வை குறையும் போது நடக்கும் வேகம் குறைவது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் பல முதியவர்கள் பொருத்தமான உடற் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் இயக்கம் சார் குறைபாடுகளைப் பெருமளவு குறைத்துக்கொள்கின்றனர்.

முதியவர்களில் பெரும்பான்மையினருடைய நுண்மதி ஈவு குறையாதிருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். சிலரிடத்தில் இது தொடர்ந்து அதிகரித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. முதுமையில் நுண்மதி ஈவு குறைந்து வருமாயின் அது உடல் நலக் குறைவு, இயங்காதிருத்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டதாகவே அமையும் சிறந்த கல்வி அறிவைப் பெற்ற ஒருவர் தொடர்ந்து வருவாய் ஈட்டக்கூடியவராயும் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் அவரது நுண்மதி குறையும் வாய்ப்பு மிக அரிது.

இத்தகைய முதியவர்கள் தமது மனதுக்கான பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தனது மூளையை ஒருவர் தொடர்ந்து பாவித்து வருகின்றபோது அவரது அறிவாற்றல் செயற்பாடுகள் குறைந்துபோவது அபூர்வம். இதற்கு மறுதலையாக முதியவர் ஒருவரின் அறிக்கைசார் தொழிற்பாடுகளில் திடீர் வீழ்ச்சி அவதானிக்கப்படுமாயின் அவர் ஒரு பாரிய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவு அது என்றே கொள்ளலாம்.

ஆயினும் அறிக்கைத் தொழிற்பாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் வேகம் குறையும் தன்மை முதுமையில் மிகச் சாதாரணமாக அவதானிக்கப்படலாம். இது நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற சில மாற்றங்களோடு சம்பந்தப்பட்டது.
பல இயக்கங்களின் இணைவும் இசைவாக்கமும் தேவைப்படுகின்ற தொழிற்பாடுகளில் வினைத்திறன் குறைவு எதிர்பார்க்கப்படலாம். உதாரணமாக ஒரு சிக்கலான புதிரை விடுவிப்பது கடினமாகலாம். அதே போல ஏறத்தாழ ஒரே நேரத்தில் பல விடயங்களைக் கையாளுவதிலும் கஷ்டங்கள் இருக்கலாம்.

முதுமை வரும்போது நீண்டகால ஞாபகத்தில் பாதிப்பு ஏற்படத்தான் செய்கிறது. இந்தப் பாதிப்பிற்கும் கல்வித் தகைமைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. புதிய விடயங்களைக் கற்று ஞாபகம் வைத்துக்கொள்வதிலும் ஒப்பீட்டளவில் குறை காணப்படவே செய்யும். முன்பு தெரிந்து வைத்திருந்த விடயங்களை மூளையில் இருந்து மீட்டெடுப்பதும் பல சமயங்களில் கடினமாக இருக்கலாம். சில விடயங்கள் முற்றாகவே மறக்கப்பட்டுப் போகலாம். ஒரு காலத்தில் நன்றாகத் தெரிந்த பெயர்களும் முகங்களும் கூட எழுபது வயதில் மறக்கப்பட்டுப் போவதை மிகச் சாதாரணமாக அவதானிக்க முடியும்.

குறுங்கால ஞாபகத்திலும் பாதிப்புகள் இருக்கும். ஒரு சினிமாப் படத்தில் இறுதிக் காட்சியில் கதாநாயகி அணிந்திருந்த உடையின் நிறம் என்னவென்பது பெரும்பாலும் படம் முடிந்த கையோடு இவர்களுக்கு மறந்து போய்விடும்.

முதுமையின் வரப்பிரசாதங்கள்

ஒருவர் பெற்றிருந்த மொழி அறிவும், கணித அறிவும் முதுமையிலும் குறைந்து போவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே முதியவர்கள் பலர் எழுதும் நூல்கள் மிகச் சிறப்பாகவே அமைவதைப் பார்க்கலாம்.

அதேபோல ஒருவரின் வாழ்நாளில் இயல்பாகப் பெற்றுக்கொள்ளும் திறன்கள் முதுமையில் குறைந்து போவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சமையல் செய்யக்கூடிய அம்மா, முதுமையிலும் ருசியாகச் சமைப்பார். அழகாக ஓவியம் செய்யக்கூடியவரின் திறன் முதுமையில் சரிந்து போவதில்லை.

புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வது முதுமையிலும் சாத்தியமானதாகவே இருக்கிறது. எண்பது வயதிலும் புதிய பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவோரை இன்று முன்னரை விட அதிகமாகவே காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, அவர்களுக்கு மிக ஆர்வமான ஒரு துறையில் கற்கிறபோது கற்றலில் அவர்கள் சங்கடப்படுவதில்லை.

ஆக்கத்திறனுடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை முதுமை காரணமாக எவ்வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. இதனால், குடும்பப் பிரச்சினைகள், நிறுவனப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் முதியவர்கள் மிகக் கணிசமான பங்களிப்பை நல்கக்கூடியவர்கள். ஆலோசனை வழங்கும் தொழில்களில் அவர்கள் உன்னதம் பெறுவதற்கு இந்த விளக்கம் போதுமானது.

ஒருவருடைய கற்பனைத் திறனும், கலையாக்கத் திறனும் முதுமையில் குறைவதில்லை. அதனால் தான் கலைஞர்கள் முதுமையிலும் போற்றப்படத்தக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

செய்யத்தக்கவை எவை?

முதியவர்கள் ஒரு சமூகத்தின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை.

முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.

முதியவர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வாழ்வு முறைச் சட்டத்திற்குள் தம்மை அடைத்துக் கொள்வதால் அவர்களுக்கு எல்லா நாளும் ஒரேநாள் போலத் தோன்றலாம். வெளியே நின்று பார்ப்பவர்களுக்கும் அங்கே வளர்ச்சி எதுவும் நடைபெறாத ஒரு தோற்றமே தெரியும். ஆனால், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளரத்தக்க ஒரு இடத்தில் தான் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்ற விழிப்புணர்வு அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுவதில்லை.

தங்களுடைய நீண்டகால அனுபவத்தின் ஊடாக ஒரு முதிர்ச்சியும் நிறைவும் கொண்ட ஆளுமையை அவர்கள் பெற்றிருப்பர். இந்த ஆளுமையோடும் அவர்களிடமுள்ள ஆற்றல்களோடும் அவர்கள் தொடர்ந்து பயனுள்ள பணிகளைச் செய்து கொண்டிருப்பதைச் சமூகம் உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு சும்மா இருப்பதற்கு அவர்கள் விடப்படக்கூடாது. பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்வது கூட ஒரு பயனுள்ள, மிகப் பயனுள்ள பணி என்பதை நாம் மறந்துவிடலாகாது.

நியண்டத்தால் மனிதன் காலத்தில் மனிதனது சராசரி வாழ்வுக் காலம் 33 வருடங்களாக இருந்தது. விஞ்ஞான, கல்வி, மருத்துவ வளர்ச்சியுடன் இன்று சராசரியாக 75 வருடங்களுக்கு மனிதன் வாழ்கிறான்.

சில சமூகங்களில் குறிப்பாக இந்த வாழ்வுக் காலம் அதிகமாக இருக்கிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் மன நெருக்கீடுகள் குறைவான கிராமிய வாழ்வு முறையும். மொத்தக் கலோரி அளவும் விலங்குக் கொழுப்பும் குறைந்த உணவுப்பழக்கமும், மாசடையாத சூழலும், வயது முதிர்ந்தோருக்கு மரியாதை கொடுக்கும் கலாசாரம் அங்கு இருப்பதை வரையறை செய்துள்ளன. ஆகவே, எமது நாட்டிலும் அத்தகைய ஒரு சூழலில் முதியோரை வாழச் செய்தல் நன்று.

மறுதலையாக, புகைத்தல், மது பாவனைப் பழக்கம், போதைப் பொருள் பாவனைப் பழக்கம், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளல், அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொள்ளல் அல்லது மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றித் தாமாக மருந்துகளைப் பெற்றுக் குடித்தல், பதற்றம் நிறைந்த சூழலில் வாழ்தல் போன்றன முதியோருக்குக் கேடு விளைவிக்கும். அவர்களின் வாழ்வுக் காலத்தைக் குறைக்கும் என்ற விழிப்புணர்வு சமூகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சலிப்பைப் போக்க உதவும் சிறந்த மருந்தாகும். அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை.

எதிர்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்வுக் காலம் இன்னும் அதிகரிக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. உடலின் ஒவ்வொரு கலத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்து அதனைச் சிறப்புற செயற்பட வைக்கும் வளர்ச்சி ஓமோனை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் இளமையூட்டப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இப்போதே அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஓமோன் வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு உள்ளது. ரெக்சாஸ் நகரில் உள்ள நல மையத்தின் பேராசிரியர் ஜான் விக் (Jan Vig) என்பவர் முதுமையைத் தடுப்பது என்பது வெறும் கற்பனை நிலையில் இருந்து இப்போது யதார்த்த நிலைக்கு வந்துவிட்டது என்று கூறுகிறார். ஆகவே, எதிர்காலத்தில் ஒரு நாட்டின் மொத்தச் சனத்தொகையில் முதியவர்கள் கணிசமான நூற்று வீதத்தைப் பிடிக்கப் போகிறார்கள். அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்வது நாட்டின் மொத்த நலனுக்கு மிக அவசியம் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது.

கோகிலா மகேந்திரன்

நன்றி:- தினக்குரல் 22.1.2009, 23.01.2009

Read Full Post »

>

‘காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?’ இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.


உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது.

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.

காதுக்குடுமி (Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால் (Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாற்றமுறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம்.

காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம்.

சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர். வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதை அகற்றவது எப்படி?பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?

இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.

காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட (Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும்.

அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

ஜீவநதி

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)

வருடாந்த பொதுக் கூட்டம். 14.01.2009.

தலைமையுரை 2009

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும், மாலை வணக்கங்களும்.

2007ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட எமது ஒன்றியத்தின் 2வது வருடாந்தக் கூட்டம் இதுவாகும்.

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் என்ற எமது பாடசாலை மிகுந்த பாரம்பரியம் மிக்கது. இது நாவலர் பெருமானின் நல்லாசியுடன் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டது. ‘திரு.மா.கணபதிப்பிள்ளையும் குமாரர்களும் தருமமாயுபகரித்த ‘கொள்வiளை’ என்னும் காணிப்பங்கில் எமது கிராமம் கல்வி, அறிவு, ஒழுக்கம்,சமயாசாரம் ஆதியவற்றில் சிறப்புற வேண்டும் என்ற நோக்கத்தோடு’, ‘வியாபாரிமுலை, வண்ணாந்துறை(திருநாவல் நகர்), சாளம்மை ஆகிய முன்று பகுதியனரது ஆதரவோடு ஆரம்பித்து நடத்தப்பட்டது’ என இப்பாடசாலையின் மனேச்சர் ஆன திரு.ஆ.சி.நாகலிங்கம் பிள்ளை 23.5.1954 ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறுகிறார்.

1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. 1892ல் அரச நன்கொடை பெறும் பாடசலை ஆகியது.

1893ல் Nலைப்புலோலி சைவ பாலிகா பாடசாலை ஆரம்பிக்பட்டு 1905ல் அரச நன்கொடை பெறும் பாடசாலை ஆகியது.

1958 அரசாங்கம் பாடசாலைகளை கையேற்றபோது இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே அதிபரின் கீழ் இயங்கி வருகிறது.

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன்(திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.

ஆயினும் பின்பு அண்மையில் உள்ள பாடசாலைகளின் துரித அபிவிருத்தி காரணமாக இப் பாடசாலையின் வளர்ச்சி சற்றுத் தளர்ந்து கவனக் குவிப்பும் குறைந்திருந்தது. இருந்தபோதும்; அண்மையில் அதிபர் மு.கனகலிங்கம் அதிபராக வந்த பின்னர் பெற்றோர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று மீண்டும் பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறார்.

இத்தருணத்தில்தான் நாமும் கொழும்பில் மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு) ஆரம்பித்து, உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ முன் வந்துள்ளோம். பல பணிகளை ஏற்கனவே செய்து முடித்துள்ளோம்.

ஓன்றியத்தின் உதவியால் ஆற்றப்பட்ட பணிகள் வருடாவருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு ரூபா 2000 வரையான பணப்பரிசிலும் ‘இளஞானச் சுடர்’ விருதும் எமது நிதி உதவியில் கொடுக்கப்படுகிறது. 2006 ல் 14 மாணவர்களுக்கும், 2007ல் 12 மாணவர்களுக்கும், 2008ல் 6 மாணவர்களுக்கும் அவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

 இதேபோல வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு உதவுமுகமாக நினைவுப் பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான 11 நினைவுப் பரிசில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக நிரந்தர வைப்புப் பணமாக ஒவ்வொருவரம் 15,000 முதல் 100,000 நிதியை அன்பர்கள் தந்து உதவியுள்ளார்கள். அவற்றின் வட்டிப் பணத்திலேயே வருடாவருடம் பரிசில் வழங்கப்படுகிறது. இது பற்றிய பூரண பட்டியலை பொருளாரின் அறிக்கையில் காணலாம்.

 நினைவுப் பரிசில் யாரது நினைவாக வழங்கப்படுகிறதோ அவரது பெயர், புகைப்படம், நினைவுப் பரிசில் நிதியின் அளவு, கொடுத்தவர் பெயர் விபரம் அடங்கிய விபரப் பலகை எமது ஒன்றியத்தால் பிளாஸ்டிக்கில் செய்து வழங்கப்பட்டது.

 பாடசாலைக்கான பெரிய இரண்டு கதவுள்ள வாசல் 2007ல் எமது ஒன்றிய அங்கத்தவரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதற்கு மேல் அமைந்துள்ள பாடசாலையின் பெயர் வளவை திரு.க.மோகனதாஸ் 2008ல் அமைத்துக் கொடுத்துளாளர்.

 எமது முயற்சி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடாக தலா ஒவ்வொரு இலட்சம் நிதி பெறப்பட்டு வகுப்பறைத் தளபாடங்கள் செய்து கொடுக்கப்பட்டன.

பாடசாலையில் நடந்துள்ள ஏனைய பணிகள்

 UNCEF உதவியுடன் பிரதான மண்டபத்தை மூடி அடைக்கப்பட்டுள்ளது.

 ஊஞ்சல், சறுக்கீஸ் போன்ற விளையாட்டிற்கான வசதிகள் தனி ஒருவரால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 பாடசாலை சுவர்கள், மதில்கள் யாவும் ஊரார் உதவியுடன் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

 லண்டன் பழைய மாணவர்கள் கணனித் தொகுதியை 2006 கொள்வனவு செய்து கொடுத்தனர்

 பிரதான மண்டபத்தின் மேடையின் திரைச் சீலைகள், இணைப்பு வேலைகள், ஆகியன முன்னாள் அதிபர்.சிவபாதசுந்தரம் நினைவாக அவரது குடும்பத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.

 முன்னாள் ஆசிரியை செல்வி.வேலுப்பிள்ளை பெரிய அலங்கார குத்து விளக்கை அன்பளித்துள்ளார்.

EMACE என்ற நிறுவனம் சிறுவர் நூல்நிலையக் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறாக பாடசாலை அபிவிருத்தியானது பலராலும் பல மட்டங்களிலும் ஆர்வமாக முன்னெடுக்கப் படுகிறது.

ஆற்ற வேண்டிய பணிகள்

 நூலகத்திற்கான தளபாடங்களைப் பெற்றுக் கொடுத்தல். இதற்கு கனடாவில் வதியும் பரம்சோதி குடும்பத்தினருடன் திரு.ராஜ் சுப்பிரமணியம் தொடர்பு கொண்டுள்ளார். விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.

 நூலகத்திற்கான நூல்களைப் பெறுவதற்கான முயற்சில் உறுப்பினர்களது ஆதரவை ஏற்கனவே கோரியுள்ளோம்.

 மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு சைக்கிள் பார்க் அமைக்க வேண்டியுள்ளது.

 மாணவர்கள் பெறும் நீரின் சுத்தத்தை பேணுமுகமாக அவற்றை மூடி அடைக்க வேண்டியுள்ளது.

 சிறிய பாடசாலையைச் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.

 மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்காக விசேட வகுப்புகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படும் எனத் தெரிகிறது. இதனைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

 சிறுநீர் கழிப்பகம் ஓன்றை பெரிய பாடசாலையில் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

 இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டியுள்ளது.

இவற்றை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் பழைய மாணவர்கள் போன்றவர்களை அணுகியுள்ளோம். முயற்சி செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர். திருவாளர்கள் சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், பிரபாகரன், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், திருமதி வள்ளி போன்றவர்கள் தவறாது செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.

திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்னிறயத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. உண்மையில் அவர்களில் ஒருவரே இந்த ஒன்றியத்தின் அடுத்த வருடத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றவேண்டும் என விரும்புகிறேன். அதனை சபை கவனத்தில் கொள்ளும் என நம்புகிறேன்.

பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.

இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது. வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.

நன்றி.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>யாழ் பருத்தித்துறை மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் (கொழும்பு) வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்றைய தினம் (ஜனவரி 14ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று )மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்றது.

வித்தியாலயத்தின் பழைய மாணவ மாணவிகள் என சுமார் 50பேர் மேற்படி கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நிரல்

  1. இறை வணக்கம்
  2. தலைமையுரை
  3. செயலாளர் அறிக்கை
  4. பொருளாளர் அறிக்கை
  5. 2008ம் ஆண்டு பாடசலை பரிசளிப்பு விழாவின் போது அதிபர ஆற்றிய உரை வாசிப்பு
  6. 2009ம் ஆண்டிற்கான செயற் குழு உறுப்பினர் தெரிவு
  7. சபையோர் குறிப்புரை

சிற்றுண்டி, மென்பான விருந்துடன் கூட்டம் நிறைவுற்றது

Read Full Post »

>இன்று ஒரு அம்மா
சோர்ந்த கண்கள்
வாடிய வதனம்
ஆண்டுகள் 75 யை
அநாசியமாகக் கடந்துவிட்டாள்.

‘சளி இருமல்
அம்மாவைத் தொல்லைப்படுத்துகிறது’
மகளின் அக்கறை.
‘யாழ்ப்பாணத்திலை
எனக்கு இருமலே வாறதில்லை’
அம்மாவின் ஏக்கக் குரல்
இடைமறித்தது.

மற்றொருவருக்கு
Fan காற்று ஒத்து வருகுதில்லை.
மருந்தடித்த
பப்பாளிப்பழமும்
ஐஸ் மீனும்
புரொயிலர் சிக்கனும்
சம்பா அரிசிச் சோறும்
தின்று
வயிறு மந்தமானவர்
இன்னும் பலபேர்.

கிடுகு வேலி
பரந்த முற்றத்தில் உதிர்ந்த இலைகள்
வேப்பமரத்தின் சுகமான காற்று
பனை ஓலையின் சரசரப்பு
நொங்குக்குத் தாவும்
அணில் பிள்ளைகள்
இனிப் பார்க்கக் கிடைக்குமா
ஏங்கும் நெஞ்சம்!

வாடையின் கூதலும்
புழதி கிழப்பும்
சோளகத்தின் வீச்சும்
வீட்டுக் கிணற்று நீரின்
சுவையும் இழந்தனர் இவர்கள்.
மனநோயில் எத்தனைபேர்!
மனமே இல்லாதொழிந்தவர்
இன்னும் எத்தனை பேர்?

‘ஏன் இங்கே இருக்கறீர்கள்?
ஏ 9 பாதை திறந்து விட்டதே.
உங்கள் வீட்டிற்குப் போங்கள்’
எக்காளக் குரல்
அறைந்தொலிக்கிறது.

அந்நியப் படை
சமாதான ஒப்பந்தம்.
பேச்சு வார்ததை.
புனர் வாழ்வு
இப்பொழுது விடுவிப்பு
எத்தனை எத்தனை பசப்பு வார்த்தைகள்.
கேட்டு அனுபவித்து
அலுக்காதவர் இலர்.

சுந்தரத் துவீதத்திற்கு
சுதந்திரம் அலை வீசியபோது
செந்தமிழர் தொகை
35 இலட்சமாம்.
அறுபது வருடங்கள் ஓடிய
பின்னும்
இன்றும் அதே 35 இலட்சமாம்.

புணர மறந்தனரா
புணர்ந்தும் மலடானாரா
மண்ணுக்கு உரமானாரா
புறுமுதுகிட்டு ஓடினரா
மண்மிசை வீழ்ந்தாரா?

கனத்த சப்பாத்துக்களில்
மிதியுண்ட வேதனையின்
முனக்கதில் அனுங்கும் மண்.

கண்டங்கள் ஐந்திலும்
அந்நிய தேசமெங்கும்
ஓலிக்கிறது
செந்தமிழ் ஓசை
தாய் மண்ணில் மட்டும்
அந்நிய ஓசை

பிறந்த மண்ணின் ஏக்கம்
அந்த மூதாட்டிக்கு மட்டும்தானா?

‘நாளைக்குப் பொங்கல்
யாழ்ப்பாணத்தில் என்றால்
புக்கை சமைப்போம்’
என்றாள் அந்த முதாட்டி
கோலமடித்த முற்றத்தில்
கல்லடுப்பில்
பொங்கல் பானை.
ஏக்கத்தில் என்னையும்
முழ்கடித்தவாறே.

…. அழகு சந்தோஸ் ….

Read Full Post »

Older Posts »