Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2009

>இப்பொழுது மருத்துவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாகத் சிகிச்சை அளிப்பதில்லையாம்.

காரணத்தையும் கண்டறிந்து முழுமையான பூரண சிகிச்சை அளிக்கிறார்களாம்
சற்றும் பயப்பட வேண்டாம். டாக்டருக்கும் ஏதோ சந்தேகம். துணிவாக இருங்கள். அனுபவமுள்ளவர் தான்.

இப்பொழுது செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் அமோக வெற்றியளிக்கின்றன.
சில வேளைகளில் எதிர்பார்ப்பிற்கும் மேலதிகமாகவும்

பெண்ணியம் மானிடப் பெண்களுக்கு மட்டுமா? கோழிகளும் பேசினால்….
முட்டைகளும் கூட என வாசிக்கவும். முட்டைகளும் கூடு அல்ல
இது ஜோக் அல்ல. நிஜம்

Read Full Post »

>மெல்லக் கற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் ஆரம்பம்

வருடாந்த நிதித் தேவை:- ரூபா 40,000.00 (ரூபா நாற்பதினாயிரம்)

நிதி உதவு:- கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ்; உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக.

கற்றல் செயற்பாடானது மாணவர்களிடையே ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் மாறுபாடாக இருக்கும். விரைவில் கிரகிக்கும் மாணவர்கள் இருப்பர். எதிர்மறையாக மிக ஆறுதலாகவே கிரகிப்பவர்களும் இருப்பர். கற்றதை விரைவில் மறந்து விடுபவர்களும், மீள மீள நினைத்து நினைவாற்றலை அதிகரிப்பவர்களும் இருப்பர்.

இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் சேர்ந்தே கற்க வேண்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு தரத்தினரும் சேர்ந்திருபதால் கற்பித்தல் செயற்பாடானது சிரமமானதாகும். ஏனெனில் சாதாரணமாகக் கற்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேகத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களால் கிரகிக்க முடியாததாக இருக்கும்.

கற்றலில் சற்று பின்தங்கி நிற்கும் மாணவர்களை மெல்லக் கற்கும் மாணவர்கள் என அழைப்பார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்கு உதவுவது மிகப் பெரிய சேவையாகும். எமது பாடசாலையில் உள்ள அத்தகையவர்களுக்கு வழமையான பாடங்களுக்கு மேலதிகமாக விசேடமாகக் கற்பித்தல் அவசியம் எனக் கருதி எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அதற்கென ஒரு திட்டத்தையும் முன் வைத்தார்.

அத் திட்டத்தை நாம் எமது பழைய மாணவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற வருடம் திரு.ராசநாயகம் சுவாமிநாதன் இதற்கென ரூபா 5000.00 கொடுத்து ஆரம்பித்து வைத்தார்; ஆயினும் நிதிப் பற்றாக் குறையால் அதனைத் தொடர முடியவில்லை.

இப்பொழுது இதற்கான நிதியை வருடா வருடம் தருவதற்கு கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ் முன்வந்துள்ளது. அதன் உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக வழங்குகிறார்கள்.

விசேட வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு தினமும் 2-3 மணிநேரம் விசேடமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. இதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படுகிறது. இந்த நிதியை அவர்கள் மனமுவந்து அளிக்கிறார்கள்.

அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Read Full Post »

>

நான் பிறந்து வளர்ந்த ஊர் வியாபாரிமூலை ஆகும். அந்தக் கிராமம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் மரத்தடி.கொம் இல் விஜயாலயன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பல தகவல்கள் அடங்கிய அக்கட்டுரையை நன்றியறிதலுடன் இங்கு மீளப் பதிவிடுகிறேன்.

வியாபாரிமூலை (சில தசாப்தங்களுக்கு முன்) விஜயாலயன்

இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.

கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.

சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் ‘அதாவது’ என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

http://www.maraththadi.com/article.asp?id=317

Read Full Post »

>

அந்தக் குழந்தையின் மரணம் பெற்றோர்க ளுக்கும் உறவினர்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆறாத் துயரையும் ஏற்படுத்தியது. அதற்கு மேலாக அது ஏன் இறந்தது என்பது விளக்க முடியாத புதிராகவும் அமைந்தது.

குழந்தைக்கு ஐந்து மாதமளவில் இருக்கும். மிகுந்த செல்லக் குழந்தை. அந்தக் குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பெரும் பொக்கிஷம். வயதுக்கு மீறிய துடிதுடிப்பும் உற்சாகமும் கொண்டது. எல்லோருடனும் தயக்கமின்றி சேர்ந்து சிரித்து மகிழும் பண்பு கொண்டதால் அனைவரது பிரியத்திற்கும் ஆளானது. வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரமின்றி அந்தத் தெருவில், அக்கம் பக்கம் இருந்த அனைவருக்குமே அதனோடு ஒட்டுதல்.

அன்றும் வழமைபோல உடம்பு திருப்பியது, பால் குடித்தது, விளையாடியது, சிரித்தது, குளித்தது. எதுவுமே மாற்றமில்லை. சிறிய தடிமன் காய்ச்சல் கூட இல்லை. தாயாருக்கு அருகிலேயே இரவு படுத்துத் தூங்கியது. அதிகாலை 5 மணியளவில் தாய் கண்விழித்த போதும் அதேபோலப் படுத்திருந்தது. தாய் தொட்டு அணைக்க முற்பட்டபோது குழந்தை சில்லிட்டுக் கிடந்தது தெரியவந்தது. பேச்சு மூச்சில்லை. டொக்டர் பார்த்தபோது இறந்துவிட்டதாக அறிவித்தார்.

தொட்டில் மரணம் என்றால் என்ன?

நோயெதுவுமின்றி நலமாக இருந்த குழந்தை திடீரெனக் காரணமெதுவுமின்றி இறந்து கிடப்பது எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். ஆயினும் மருத்துவ ரீதியில் இது ஒரு புதினமான விடயமல்ல. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் இவ்வாறு பல குழந்தைகள் இறக்கின்றன. தொட்டில் இறப்பென (Cot Death) இதனைக் கூறுவர்.

மருத்துவதில் Sudden infant death syndrome என்பர். இத்தகைய மரணங்கள் பொதுவாக குழந்தையின் முதல் மாதத்திலேயே மிக அதிகமாக இடம்பெறுகிறது. 2ஆம், 3ஆம் மாதங்களிலும் ஓரளவு உண்டு. ஆயினும் 6 மாதங்களுக்குப் பிறகு மிகக் குறைவே.

ஏன் ஏற்படுகிறது

இது ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆயினும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணங்கள் சேரந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

தூக்கத்தையும், விழித்தெழுதலையும் கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாயிருக்கலாம். உதாரணமாக தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தின் மேல் (அதாவது மூக்கு வாய் இரண்டும் மூடும்படியாக) துணி விழுந்தால், அதனால் ஏற்படக் கூடிய சுவாசத்தடையை சமாளிக்கு முகமாக திணறி விழித்தெழுதலை மூளையால் ஏற்படுத்த முடியாதது காரணமாகலாம் என்கிறார்கள்.

ஆயினும் தொட்டில் மரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த தூக்கத்தில்தான் நடக்கும் என்றில்லை. தாயின் மடியிலோ அல்லது பிறாமிலோ (Pram)குட்டித் தூக்கம் செய்யும்போது கூட நிகழலாம்.

யாருக்கு ஏற்படலாம்

வசதி குறைந்த குடும்பங்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

ஆசியச் சமூகத்தில் குறைவு என்று சொல்லப்படுகிறது.

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிலும், முக்கியமாக 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளிடையே கூடுதலாக ஏற்படலாம்.

பிறக்கும்போது வழமையை விட எடை குறைந்த பிள்ளைகளிலும் அதிகம்.

இரட்டைக் குழந்தைகளிடையேயும் அதிகம் காணப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்கனவே வேறு குழந்தைகள் அவ்வாறு இறந்திருந்தாலும் சாத்தியம் அதிகம்.

அதிலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இறப்பது அதிகமாம்.

வருடாந்தம் ஒரு வயதிற்குள், 300 குழந்தைகள் இவ்வாறு இறப்பதாக மருத்துவப் பதிவுகள் கூறுகின்றன. இது இலங்கைக்கானது அல்ல, இங்கிலாந்து நாட்டின் முடிவு.

எந் நேரத்தில், காலத்தில்?

இவ்வாறு இறப்பது பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாகும்.

அதிலும் முக்கியமாக நடுநிசிக்கும் காலை 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே நடக்கிறது. இவ்வாறு இறப்பதற்கான காரணத்தை பத்தில் ஒரு பிள்ளைக்கே கண்டறிய முடிகிறதாம்.

பெற்றோரின் மனப் பாதிப்பு

மிக முக்கியமான பிரச்சினை பெற்றோர்களுக்கு ஏற்படக் கூடிய மனப்பாதிப்பு ஆகும். இது தாங்கள் விட்ட தவறினால் அல்லது கவனிப்பின்மையால் ஏற்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மன ஆறுதலுக்காக மருத்துவருடன் தொட்டில் மரணம் பற்றிப் பேசி விரிவாக அறிந்து கொள்வது நல்லது.

புதினம் பிடுங்குபவர்களைத் தவிர்த்து ஆதரவோடும், புரிந்துணர்வோடும் நடப்பவர்களுடன் பேசி மனம் ஆறுவது புத்திசாலித்தனமானது.

தடுக்கும் வழிகள்

* குழந்தை இருக்கும் அறையில் புகைப்பது தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பமாயிருக்கும் போது தாய் ஒருபோதும் புகைக்கக் கூடாது.

* குழந்தையை எப்பொழுதும் முதுகு கீழிருக்குமாறே படுக்க விட வேண்டும். ஒரு போதும் குப்புற படுக்க அனுமதிக்கக் கூடாது.

* போர்வையால் போர்த்தக் கூடாது. படுக்கையில் வேறு துணிகள் இருக்கக் கூடாது.

* இறுக்கமான தட்டையான மெத்தைகளையே உபயோகிக்க வேண்டும். தொட்டிலுக்குள் நீக்கல் இடைவெளி ஏதும் இன்றி முழுமையாக தொட்டிலை நிரப்பும்படியான மெத்தைகளே நல்லது. மெத்தையின் வெளிப்புறம் தண்ணீர் தேங்காததாக (waterproof ) இருக்கவேண்டும். தடித்த ஒற்றைத் துணியால் மடிப்புகள் விழாமலும், நழுவாதபடியும் மூடியிருக்க வேண்டும்.

* படுக்கையறை கடும் குளிராகவோ, கடும் வெக்கையாகவோ இருக்கக் கூடாது.

* பெற்றோர் படுக்கும் அறையிலேயே குழந்தையின் தொட்டில், கொட் இருப்பது நல்லது.

* புகைக்கும், மது அருந்தும் அல்லது மருந்துகள் உபயோகிக்கும் பெற்றோர் தமது கட்டிலிலேயே ஒருபோதும் குழந்தையைக் கூட வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

* அதேபோல கடும் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு தூங்க வேண்டாம்.

* சோபா, செற்றி, கதிரை போன்றவற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு தூங்கவே கூடாது.

* குழந்தைக்கு சிறு வருத்தம் என்றாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

* பல குழந்தைகள் உள்ள வீடாயின் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையின் பராமரிப்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

சூப்பி கொடுப்பது

சில ஆய்வுகள் சூப்பி கொடுப்பதால் தொட்டில் மரணம் ஏற்படக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கலாம் என்கின்றன. முக்கியமாக தூக்கம், குட்டித் தூக்கம் ஆகியவற்றின் போது சூப்பி கொடுப்பது இதனைத் தடுக்க உதவலாம்.

ஆயினும் இதனைக் கொடுப்பதால் தாய்ப்பால் ஊட்டலுக்கு தடங்கல் ஏற்படலாம் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். தாயப்பால் ஊட்டுபவரகள் பாலூட்டல் செயற்பாடானது சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் வரை அதனை ஆரம்பிக்கக் கூடாது. முக்கியமாக முதல் மாதம் சூப்பியைக் கொடுக்காது விட்டால் குழுந்தை தாய்ப்பாலை நன்கு குடிக்கக் கற்றுக் கொண்டுவிடும். அதன் பின் தேவையானால் கொடுக்கலாம்.

மின்காற்றாடி

குழந்தை தூங்கும் அறையில் மின்காற்றாடி(Fan) போடுவதால் தொட்டில் மரணத்தைத் தடுக்கலாம் என அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஏற்கனவே இப்பிரச்சனையால் இறந்த 185 பிள்ளைகளின் தாய்மாரை செவ்வி கண்ட ஆய்வு இது. குறைந்தளவு எண்ணிக்கையினரை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு என்பதால் இதன் முடிவு சர்ச்சைக்குரியது.

இது பற்றி மேலும் வாசிக்க :- http://www.healthjockey.com/2008/10/07 யைச் சொடுக்குங்கள்.

நினைவுப் பொருட்கள்

குழந்தையின் போட்டோ, அது உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை ஞாபகார்த்தமாக வைத்திருக்கலாம்.

பாலூட்டும் தாயாயின் மேலும் பால் சுரப்பதைத் தவிர்பதற்காக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

– டொக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »

>
அமுதூட்டும் நாள் முதலா
ஆனந்தி ஆனந்தியென
அன்பு உறைக்க விழித்ததும்,
ஆண்டுகள் பலவாக
ஆதரித்த குடிமனையின்
சுவாசக் காற்றானதும்,
தேனில் விழுந்த எறும்பாக
விட்டகலா நேசமும்
மறக்கவொண்ணாது.

அன்பில் தோய்த்து
பட்ச(ண)த்தில் திணறடித்த
உங்கள் நினைவுகள்
உடற்கிளையெங்கும் துளிராகும்.
வாடா மலராய் மலர்ந்திருக்கும்.
காலமெல்லாம் மணம் பரப்பும்
தாளம் பூவாய்
என்றிருந்தேன்.

காலநதியின் ஓட்டத்தில்
நினைவழிவு உங்களுக்குமானதோ
மாதமொரு முறை
தீனொதுக்கும் பௌர்ணமியில்
இரண்டாம் பிறையானீர்.

இனி
நதியுலரும் காலமதில்
வருடமொரு முறை
பூனூலிட்டு சம்மணம் கட்டி
தேவமொழியின்
வேதப் போதை அருட்டுணர்வில்
திதி, பெயர், பாட்டி பீட்டி பெயர்களுடன்
நின் முகமும் தோன்றி மறைவதுடன்
என்கடமை அழிந்திடுமோ?
அன்றிப் பூனூல் சடங்கும்
புறமுதுகிட்டு ஓடிடுமோ?

உற்றார், உறவு, சுற்றம்
நட்பு, தொழில்,
முகம் முன் போற்றும்
புகழ் தேடும் வாழ்வென
நிதம் தொடரும் நெருக்கீட்டில்
நின்னை நினைக்க நேரமெது!
கேட்காமலே மன்னிப்பாய்
அம்மா.

—— அழகு சந்தோஷ் ——

Read Full Post »

>எமது பாடசாலை பல அபிவிருத்திகளைக் காண வேண்டிய நிலையில் உள்ளதை அறிவீர்கள். அண்மைக் காலமாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்கள் உதவியுடன் பாடசாலையின் அபிவிருத்திக்கு தற்போதைய அதிபர்.மு.கனகலிங்கம் புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். பழைய மாணவர் ஒன்றியத்தினரான எங்களது ஒத்துழைப்பு அவருக்கு நிறையவே உண்டு.

பாடசாலைக்கு ஒரு டெலிபோன் இணைப்பு இல்லாதது மிகப் பெரிய குறையாக இருந்தது. ஒவ்வொரு சிறிய தேவைகளுக்கும் நேரடியாகச் செல்வது அல்லது கடிதத் தொடர்பு கொள்வது எவ்வளவு கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்நிலையில் எமது பாடசாலையின் பழைய மாணவரும், எமது ஒன்றியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான திரு.ஆறுமுகநாதன் சிவநாதன் (Siva Tours & Travels) மறைந்த தனது தாயார் நினைவாக பாடசாலைக்கு தொலைபேசி இணைப்பை வழங்குவதற்கான நிதியை வழங்கியுள்ளார். சிறிலங்கா தொலைபேசி இணைப்பிற்காகவும், அதற்கான ஒரு வருட வாடகைப் பணமாகவும் ரூபா 20000.00 (இருபதினாயிரம்) வழங்கியுள்ளார்.

பாடசாலையின் நாளந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு டெலிபோன் இணைப்பு மிக்க உதவியாக இருக்கும் என்பதோடு பழைய மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் மிக்க உதவியாக இருக்கும்.

இத்தகைய உதவியை பாடசாலைக்கு வழங்கிய திரு.ஆறுமுகநாதன் சிவநாதன் அவர்களுக்கு எமது ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாடசாலையின் டெலிபோன் நம்பர்:- 0212264872

Read Full Post »

>

Thanks:- http://s50.photobucket.com/albums/f336/willmcclain/?action=view&current=glass-a-day.jpg

அந்தக் குடும்ப மருத்துவர் தனது வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்தபோது, பாதையில் மூன்று பையன்கள் கைநிறைய நாணயங்களை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.” என ஆவலோடு வினவினார்.

“எங்களிடையே ஒரு போட்டி. எவன் மிகப் பெரிய பொய்யைச் சொல்கிறானோ அவனுக்கே இந்தப் பணம் அவ்வளவும்” என்றான் ஒரு பையன்.

“மாணவனாக இருந்தபோது நான் பொய்யே பேசுவதில்லை” உதாரணம் சொல்லக் கூடிய நல்ல மாணவனாக தான் முன்பு இருந்ததாக பெருமையடித்துக் கொண்டார் மருத்துவர்.

“சரி ….. நீங்கள் வென்றுவிட்டீர்கள்” என்று சொல்லியபடி பணத்தை அவரிடம் கொடுத்தான் அந்தப் பையன்.

…………………….

“உடம்பு கை கால் எல்லாம் உழையுது. அலுப்பாக இருக்கு” என்றார் நோயாளி.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், வாயிற்குள் தேர்மாமீட்டரையும் வைத்துப் பார்த்துவிட்டு “உங்களுக்கு காச்சல் 101லை அடிக்கிது” என்றார்.

“சீ எனக்குக் காச்சல் கிடையாது. இப்பத்தான் வெய்யிலுக்காலை வந்தனான்” என்றார்.

“வாயை ஆவென்று திறந்து கொண்டு வெய்யிலில் நடந்து வந்தீர்களா” என்றார் மருத்துவர்.

…………………….

அடங்காத, வாய்த்துடுக்குள்ள மகளை மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தாள் தாய்.

பாடசாலைக்கு இப்பதான் போகத் தொடங்கியிருக்கிறாளாம். படிப்பில் அக்கறை இல்லை. புத்தி சொல்லும்படி மருத்துவரைக் கேட்டிருந்தாள்.

“பிள்ளை கெட்டிக்காரியல்லோ? நல்லாப் படிப்பாளாம். படிச்சு டொக்டரா வந்து எனக்கு நீங்கள்தான் மருந்து தரவேணும்” என்றார் டொக்டர்.

“நான் படிச்சு டொக்டரா வாறதுக்கு முந்தி நீங்கள் செத்துப் போவீங்களே!” மருத்துவரின் நரைத்த தலைமுடியைப் பார்த்தபடி சொன்னாள் சின்னப் பெண்.

…………………….

இரண்டு பெண் மருத்துவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

‘எப்படியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்’

‘உண்மையைச் சொல்லப்போனால் எனது மகன் கட்டியிருப்பது ஒரு சக்கட்டைச் சோம்பேறிப் பெண்ணை… அவள் காலையில் எழுந்திருக்கப் 11மணியாகும். வேலைவெட்டி கிடையாது நாள் முழுக்கக் கடைத்தெருவெங்கும் சுத்தி அவனது பணத்தை செலவழிப்பாள்…’

‘…அது மட்டுமல்ல, அவன் மாலையில் வேலையால் களைத்து வீடு திரும்பும்போது நல்ல உணவு செய்து கொடுப்பாளா? கிடையாது. பகட்டான ஹொட்டேலுக்கு தன்னை அழைத்துப் போக வைப்பாள்’

‘என்ன வெட்கக் கேடு! சரி விடு. உனது மகள் எப்படி இருக்கிறாள்’

‘அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி. அவள் மணந்திருப்பது ஒரு குணமான பையனை. அவள் காலையில் எழுந்திருக்கு முன்னரே காலை உணவைத் தயாரித்துவிடுவான். படுக்கையிலேயே காப்பி கொடுத்துவிடுவான். அவள் விரும்பியவற்றை வாங்கப் போதிய பணம் கொடுத்துவிடுவான். இரவில் நவநாகரீகமான ஹொட்டேல்களுக்கு சாப்பாட்டிற்கு கூட்டிச் செல்வான்.’

…………………….

ஜெர்ரி ஒரு காரிலுள்ள எஜ்ஜின் வால்வுகளைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, சேவைத்தள மனேஜருக்காகக் காத்துக் கொண்டிருந்த பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் சாமுவல் கெஸ்சரை இனங் கண்டான்.

வாய்த்துடுக்குள்ள ஜெர்ரி “ஹாய் கெஸ்சர், சற்று இப்படி வாங்களேன்” எனச் சத்தமிட்டு அழைத்தான். சற்று ஆச்சரியமடைந்த போதும் பிரபல சர்ஜன், ஜெர்ரி காரில் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.

ஜெர்ரி எல்லோருக்கும் கேட்டுக்கும்படியாக “டொக்டர். எனது வேலையயைப் பாரும். நானும் வால்வுகளைக் கழற்றுகிறேன். அவற்றை திருத்துகிறேன். புதிய பாகங்களையும் பொருத்துகிறேன். முடிந்ததும் கார் பூனைக் குட்டிபோல சத்தமிடாமல் அனுங்காமல் நகர்கிறது. ஏறத்தாள இதே போன்ற வேலையைத்தான் செய்யும் உங்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு பெரிய சம்பளம்” என விவாதத்திற்கு இழுப்பது போலச் சத்தமிட்டுப் பேசினான்.

மிகவும் சங்கடப்படார் டொக்டர் கெஸ்சர்.

“எஜ்ஜின் ஓடிக் கொண்டிருக்கும் போது உனது வேலையைச் செய் பார்ப்போம்” என்றார் மெல்லிய குரலில்.

…………………….

“ஆம் இதற்கு முன் நீர் ஒரு மனநல மருத்துவருடன் வேலை பார்த்ததாக அறிகிறேன். ஏன் அதனை விட்டு விலகி இங்கு வந்தீர்?” என வேலை கேட்டு வந்த இளம் பெண்ணை நேர்முக விசாரணையின் போது கேட்டார் குடும்ப மருத்துவர்.

” என்னால் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை…”

“….வேலைக்கு நேரங்கடந்து சென்றால் எதிர்ப்புணர்பு கொண்டவள் என்கிறார்கள். நேரத்திற்கு முன்பே சென்றால் மனப்பதற்றம் என்கிறார்கள். சரியான நேரத்திற்கு சென்றாலும் விடாப்பிடியாளன் என்கிறார்கள். சைக்கியாரிஸ்டை சமாளிக்க முடியவில்லை” என்றாள்.

…………………….

ஒரு குறுக்கு விசாரணை
சட்டத்தரணி:- டொக்டர். பிரேத பரிசோதனையை ஆரம்பிக்கும் முன்னர் நாடித்துடிப்பைப் பார்த்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- பிரசரை அளந்து பார்த்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- சுவாசம் இருக்கிறதா எனப் பாரத்தீர்களா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- எனவே நீங்கள் பிரேத பரிசோதனையை ஆரம்பித்தபோது நோயாளி உயிருடன் இருந்திருப்பது சாத்தியமல்லவா?
சாட்சி:- இல்லை
சட்டத்தரணி:- எப்படி நீங்கள் நிச்சயமாகச் சொல்ல முடியும்?
சாட்சி:- ஏனெனில் அவரது மூளை எனது மேசையில் இருந்த சாடிக்குள் இருந்தது.
சட்டத்தரணி:- அப்படியா? இருந்தபோதும் நோயாளி அப்பொழுதும் உயிருடன் இருந்திருக்கலாம் அல்லவா?
சாட்சி:- ஆம். உயிருடன் இருந்திருப்பது சாத்தியம்தான்… சட்டத் தொழிலும் செய்து கொண்டிருந்தால்..

…………………….

இவற்றில் சில நான் அனுபவித்தவை. பல மருத்துவ நண்பர்களால் ஈ மெயில் செய்யப்பட்டவை.

படித்துவிட்டீர்களா?

சிரிப்பு வராவிடால் நான் பொறுப்பில்லை.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>‘சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வர முடியுதில்லை. முழங்கையிலை ஒரே வலி’ என்றாள் வேதனையுடன் ஒரு பெண்மணி.

‘பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது’. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவதுண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத்தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதியில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின்; வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கிலத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந்நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களிலும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்தகைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படுவதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கைவிரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை சரியான முறையில் இயங்குவதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோதித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. ‘படம் எடுக்க வேண்டுமா’ என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.

பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகிவிடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

விரல்களை விரிக்கும் பயிற்சி

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இறுகப் பிடிக்கும் பயிற்சி

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை கீழ்நோக்கி இழுக்கும் பயிற்சி

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

மணிக்கட்டுப் பயிற்சி

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

முழங்கை பயிற்சி

படத்தில் காட்டியபடி ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.

முன்கையை முறுக்கும் பயிற்சி

படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

ஊசி மருந்து

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

ஆதாரம்:- American Academy of Family Physicians

Read Full Post »