>ஒரு நெசவுத் தொழிலாளியின் அவல வாழ்க்கை
காஞ்சிவரம்
அந்தப் படத்தின் டிவீடி பிரதியைப் பெறுவதற்கு நான் பட்ட கஸ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு வீதிக்கு வீதி தமிழ்த் திரைப்பட வீடியோக்கள் விற்பனைக்கு கிடைக்கும். வீடியோ கடைகளில் மட்டுமல்ல, வீதியோரமாக பேவ்மென்ட்டிலும் பரப்பி வைத்து விற்பார்கள். பல இடங்களில் விசாரித்தும் இல்லை என்று விட்டார்கள். சிலர் அப்படி ஒரு படம் வந்ததா என ஆச்சரியப்பட்டார்கள்.
ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சாதாரண விற்பனைச் சிப்பந்தி ‘இல்லை’ என்ற போது முதலாளி குறிக்கிட்டு ‘கொப்பி முடிந்துவிட்டது. வீட்டில் கம்பியூட்டரில் இருக்கிறது கொப்பி பண்ணித் தாறன். நாளைக்கு வாங்கோ’ என்றார். மறுநாள் அல்ல நாலு நாட்கள் அலைச்சலின் பின் கொப்பி கிடைத்தது. நல்லவேளையாக அது நல்ல பிரதி. கமராப் பிரதி அல்ல. அந்தக் கடைக்காரருக்கு எனது மனமார்ந்த நன்றி.
கில்லி, பில்லா, சுள்ளி படங்கள் என்றால் என்றும் எப்பொழுதும் கிடைக்கும். இது போன்ற காவியப் படங்கள் என்றால் தேடினாலும் கிடைக்காது.
வாழ்க எமது சினிமா ரசனை!
காஞ்சிவரம் அண்மையில் பார்த்த அற்புதப் படம் இது எனலாம். அறுபது வருடங்களுக்கு முன்னான ஒரு நெசவாளியின் வாழ்க்கைத் தரிசனம் அலங்காரப் பூச்சுகளின்றி ஆனால் கலை மெருகோடு கிடைக்கிறது. காந்தி இறந்த மூன்றாம் நாள் பஸ்சில் அழைத்துச் செல்லப்படும் ஒரு கைதியின் நினைவுகளாக படம் மேலும் பின்னோக்கி நகர்கிறது.
வேங்கடம் என்ற ஒரு பட்டுத் துணி நெசவாளியாக பிரகாஸ்ராஜ். மிகவும் திறமை வாய்ந்த நெசவாளி. வெள்ளைக்காரத்துரை முதல், அவருக்கு தொழில் கொடுக்கும் அதிகாரி வரை அனைவராலும் மிகத் திறமையான நெசவாளி எனப் பாராட்டப் பெற்றவர்.
அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. குழந்தைக்கு பெயர் சூட்டு வைபவத்தின் போது பிறந்த குழந்தையின் காதில் தகப்பன்; பேசி ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். மனைவி, உற்றார் உறவினர் ஊரவர் முன்னிலையில் அவர் தெளிவாக ஒரு வாக்குறுதி கொடுக்கிறார்.
அவர் கொடுக்கும் வாக்குறுதி அனைவரையும் அசர வைத்துவிடுகிறது. இது ஒரு பட்டு நெசவாளியால் நிறைவேற்றக் கூடியதா? இது தகுதிக்கு மீறியதல்லவா? எப்படி நிறைவேற்றப் போகிறான் என்ற ஆச்சரியம் எல்லோருக்கும்.
மனைவியோ முடியாததற்கு வாக்குக் கொடுத்து மரியாதை கெடப் போகிறாரே எனக் கவலையில் மூழ்குகிறாள்.
அப்படி என்ன பெரிய வாக்கை அவன் கொடுத்துவிட்டான்? வேறொன்றுமில்லை! தனது மகள் வளர்ந்து கல்யாணமாகும் போது அவளுக்கு பட்டுச்சேலை கொடுப்பேன் என்கிறான். மகளுக்கு ஒரு பட்டுச்சேலை திருமணத்தின் போது கொடுப்பது அப்படி என்ன முடியாத காரியமா என யோசிக்கிறீர்களா. அதுவும் பட்டுப் புடவை நெய்யும் தொழிலாளிக்கு.
ஆம். அந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் அத்தனை மோசமாக இருந்தது. அன்றும் அப்படி இருந்தது இன்றும் அவர்கள் நிலையில் மாற்றம் இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். நாள் முழுக்க பட்டு நூலோடும் தறியோடும் உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்.
வாழ்நாள் முழுவதும் பட்டுத் துணியோடு வேலை செய்தாலும் உடுக்கக் கிடைப்பதோ சாதாரண துணிதான். வீட்டில் வைத்து பட்டுத் துணியை நெய்யக் கொடுத்தால் அதில் திருட்டுச் செய்து விடுவார்கள் என்பதால் கோவிலில் வைத்துத்தான் தொழில் செய்ய வேண்டும். வேலையால் வீடு திரும்பும்போது பட்டு நூலைக் களவாக எடுத்துச் செல்கிறார்களா என்று சோதித்துத்தான் வெளியே விடுவார்கள். பற்றாக்குறை, ஏழ்மை, அவமதிப்பு, இவைதான் அவர்கள் அறிந்தது.
இந்தச் சூழ்நிலையில் பிரகாஸ்ராஜ் தனது மகளுக்கு பட்டுச் சேலை கொடுப்பதற்காகப் பட்ட வேதனைகளைத்தான் திரைப்படம் பேசுகிறது. அவனால் தனது வாக்குறதியை நிறைவேற்ற முடிந்ததா?
இந்த நேரத்தில் அவர்களது கிராமத்திற்கு ஒரு எழுத்தாளர் வருகிறார். அவர் மூலம் அவர்களுக்கு பல புதிய விடயங்கள் தெரியவருகின்றன.
தொழிலாளர்களது உரிமை என்றால் என்ன? அதைப் பெறுவதற்கு போராட்டம், பணிப் புறக்கணிப்பு போன்ற வழிமுறைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் அந்த எழுத்தாளர் ஒரு கம்யூனிஸட் கட்சிக்காரர். தலைமறைவாக இருக்கிறார் என்பது பின்னால் தெரிகிறது.
ஆயினும் இது இடதுசாரி அரசியல் சார்ந்த படமோ அல்லது வெற்று இலட்சியங்களைப் போதிக்கும் படமோ அல்ல. காந்தி இறந்த மூன்றாம் நாள் இந்தக் கதை முடிவுறுவதால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலக் கதை என்பது வெளிப்படை.
அக்காலத்தில் கம்யூனிசக் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. அரசின் இடுங்குப் பிடி அவர்களை துரத்துகிறது. கோரமாக ஒடுக்குகிறது. அதனால் அவர்கள் தலைமறைவாகவே இயங்குகிறார்கள். உலகப் போரில் ரஷ்யாவும் நேசநாடு என்பதால் தடை நீக்கப்படவே வெளிப்படையாக இயங்க முடிகிறது. இப்பொழுது அவர்களின் கொடியை வெளிப்படையாகப் பறக்க விட முடியும். படம் நகர்கையில் இந்த வரலாற்றை கதையோடு கதையாக உணர்கிறோம்.
அதேபோல மற்றொரு சரித்திரக் காட்சி! முதல் முதலாக மாடு இல்லாமல் ஓடி வரும் வண்டியைக் காண ஊர்ச்சனங்கள் வீதியோரம் கூடியிருப்பதும் அந்த வண்டி எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அவர்கள் பேசி கொள்வதும் சுவார்ஸமான காட்சியாகும். ஆனால் மோட்டார் வண்டியைப் பார்க்க ஓடும் கூட்டத்தில் அவரது மனைவி விழுந்து மிதியுண்டு நோயுறுவது அவலத்தின் ஆரம்பம்.
படத்தின் பிரதான பாத்திரம் பிரகாஸ்ராஜ். ஆனால் வழமையான கதாநாயகன் அல்ல. ஓடிவிளையாடும் காதல் பாட்டோ, பலரை அடித்து விழுத்தும் ஸ்டன்ட் காட்சிகளோ அவருக்குக் கிடையாது. அதிகாரியிடமும், ஏனையவர்களிடமும் அடி வாங்குகிறார். அவமானப் படுகிறார். பொய் சொல்லுகிறார். திருடுகிறார். கம்யூனிச இயக்கத்தில் ஈடுபட்டு கூட்டம் கூட்டுகிறார். அரிவாளும், சுட்டியலும் கொண்ட செங்கொடி தூக்குகிறார், நெசவுத் தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கிறார்.
தொழிலாளர்கள் உறுதியாக நின்ற போதும் தனது மகளுக்கு எப்படியாவது பட்டுச்சேலை நெய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக பொய்காரணம் காட்டி வேலைக்குப் போகிறார். சகதொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார். அங்கு மகளுக்கு சேலை நெய்வதற்காக பட்டு நூல் திருடி வாய்க்குள் அமுக்கிக்கொண்டு வெளியே கொண்டு வருகிறார். அகப்படுகிறார். ஏனைய தொழிலாளிகளின் முன்னும் ஊரவர்கள் முன்னும் அவமானப்படுகிறார். கைதாகிறார். சிறைப்படுகிறார்.
ஆம் வறுமையின் காரணமாகவும், சுயநலத்திற்காகவும் புனிதமான கொள்கைகளைக் கைவிட்டு விடுகிறார். வேங்கடம் முதலான அந்த மக்கள் இலட்சிய புருசர்கள் அல்லர். நிஜமான மனிதர்கள். நிதமும் வாயையும் வயிற்றையும் நிரப்ப அல்லாடுகிறார்கள்.
அழிவைவிட வாழ்வு உன்னதமானது. அதனால்தான் தமது வாழ்வின் இக்கட்டுகளிலிருந்து மீள திருடவும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். அதேநேரம் அவர்கள் கெட்ட மனிதர்களும் அல்ல. அவற்றைச் செய்தும் வறுமையும், இயலாமையும், கையறு நிலையும் அவர்களைத் துரத்துகிறது.
மனைவியை இழக்கிறார். சிறைக்குப் போன தருணத்தில் மகள் கிணற்றில் விழுந்து உயிருள்ள பிணம் போலாகிறாள். அவளைப் பாரக்க வேங்கடம் சிறையிலிருந்து லீவில் வருவதிலேயே படம் ஆரம்பித்தது. எழ முடியாது நினைவின்றிக் கிடக்கும் மகளைப் பாரமரிக்க எவருமில்லை. அவளைப் பெண்ணெடுக்க இருந்த தங்கை குடும்பமும் கைவிரித்து விடுகிறது. தானும் மீளச் சிறை சென்றுவிடும்போது அவளுக்கு ஏற்படம் போகும் அவலத்தை நினைத்து தானே தன் மகளுக்கு உணவோடு நஞ்சைக் கலந்து ஊட்டிக் கொல்கிறார்.
ஒவ்வொரு காட்சியும் ஒடுக்கப்பட்ட வறுமையில் வாடும் அந்த மக்களின் துன்ப துயரங்களையே பேசுகிறது. சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் கிடையாது. காதல் பாட்டும் இல்லை. வேகமான கதைத் திரும்பம் ஆடம்பரக் காட்சிகள் என்று எதுவுமே கிடையாது. ஆயினும் எந்த ஒரு இடத்திலும்; சலிப்பு ஏற்படாத விதத்தில் கதையையும், காட்சி அமைப்புகளையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஸன். இவர் இங்கு அதிகம் அறியப்படாதவர். மலையாளத் திரைப்படத் துறை சார்ந்தவர்.
துயரம் ஒவ்வொரு பிரேமிலும் நிறைந்து வழிகிறது. அதற்குள் எம்மையும் நனைத்து ஊறித் தெக்க வைத்துவிடுகிறார். ஆழ்துயரத்தை வெளிப்படுத்துவது போல காட்சிகள் மிக மங்கலான வர்ணப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளன. கண்களைப் படபடக்க வைக்கும் கலர்கலரான காட்சிகளுக்குப் பதில் கருமையும் மண்ணின் நிறமும் கலந்தது போன்ற பின்னணிக் கலர் திரைப்படம் முழுக்க விரவி நிற்கிறது. படம் சொல்ல விரும்பும் செய்திக்கு ஏற்றதாக பார்வையாளர் மனத்தைச் சோகத்துடன் ஒன்றிவிட உதவியாக உள்ளது. மிக நேர்தியான ஒளிப்பதிவு செய்த திரு திரைப்படத்தின் காட்சிபடுத்தலை உச்சத்திற்கு இட்டுச் செல்கிறார்.
ஆயினும் இறுதிக் காட்சியில் பிணமாகக் கிடக்கும் மகளை பட்டுத் துணியால் மூட முயலும்போது, பின்னணிக் காட்சிகள் கருமை சார்ந்திருக்கும்போது அந்தப் பட்டுப் புடவை மட்டும் வர்ணக் கலரில் பளிச்சிடுவது எரிச்சல் ஊட்டுகிறது. மையக் கருவை முனைப்புடன் காட்டுவதற்கான மிகைப்படு;தலாக உறுத்தியது.
நடிப்பைப் பொறுத்தவரையில் பிரகாஸ்ராஜ் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இத்தகைய ஒரு பாத்திரத்தில் அதுவும் மிக வித்தியாசமான படத்தில் நடிக்க அவர் எடுத்துக் கொண்ட ரிஸ்க் மிகப் பெரியது. அண்மையில் வெளி வந்த அபியும் நானும் போன்ற பல படங்கள் அவரது ஆதரவில் வந்ததைப் பார்க்கும்போது நல்ல திரைப்படத்தில் அவருக்கு உள்ள ஆர்வம் புலப்படுகிறது.
ஆயினும் சில காட்சிகளில், மகள் இறந்து கிடக்கும் போது பாதி மட்டுமே நெய்த பட்டுத் துணியால் அவள் உடலைப் போர்த்தி மூட முயலும்போதும், தன் சுயநலதிற்கான வேலை நிறுத்தத்தை இடை நிறுத்தி வேலைக்கு போவோம் என சக தொழிலாளர்களை கூட்டம் போட்டு மழுப்பலாகப் பேசும் போதும் சற்று மிகை நடிப்பாகத் தெரிகிறது.
மனைவியாக நடித்த ஸ்ரெயா ரெட்டி நன்றாகவே செய்துள்ளார். அவரைத் தமிழ் திரையுலகம் இதுவரை நன்கு பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன்.
ஆனால் வேங்கடத்தின் மகளாக வரும் புது நடிகையின் பேசும் கண்களும், இயல்பான நடிப்பும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதைப் புலப்படுத்துகிறது.
இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக எம்மை அந்தக் காலத்தில் சூழலுக்குள் ஆழ்த்துவதற்கான முழு முயற்சியை எடுத்திருப்பதைச் சொல்லலாம். அக்காலத்திற்கு ஏற்ற உடைவகைள், பஸ், விளக்கு, பொலிஸ்காரர் என கவனம் எடுக்கப்பட்டுள்ளது.
இவரை கூட்டி வரும் பொலீஸ்காரனின் தொப்பியில் உள்ள அரச இலட்சனை கழன்று விடுவதும், அது தொப்பியில் இலட்சனை இல்லாமல் நீதிபதி முன் ஆஜராகப் பயந்து அதனைத் தொப்பியில் தைப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளும், அது பயனளிக்காமல் ஒட்டிக் கொண்டு சென்று, உசாரகக் சலூட் அடிக்கும்போது இலட்சனை கழன்று விழுவதும் மட்டுமே படம் பார்க்கும்போது எமது முகத்தசைகளை சற்று ரிலக்ஸ் பண்ண வைத்து புன்னகைக்க வைக்கும் காட்சியாகும்.
அந்தக் கால ‘தேவதாஸ்’ போல இன்றைக்கு முற்று முழுதாக சோகத்தை விதைத்து, விருட்சமாக மலைக்க வைக்கும் வண்ணம் எழுந்து நிற்கிறது. கலையார்வமுள்ள திரைப்பிரியர்கள் தப்ப விடக் கூடாத திரைப்படம் இது.
நன்றி:- வீரகேசரி 19.04.2009
எம்.கே.முருகானந்தன்.