Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2009

>அகதிகள் பிரச்சனை இப்பொழுது இலங்கையில் மிகத் தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கம் உலகளாவிய ரீதியில் உணரப்படுகிறுது. அது பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இக்கட்டுரை 2005ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட தெணியானின் குறுநாவல் தொகுப்பு பற்றிய கட்டுரையாகும். அது பேசுவதும் அகதிகள் பற்றியே. 2005ல் வெளியான இக்கட்டுரையை இப்பொழுது எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.

அகதிகள், இடம் பெயர்தல் போன்ற சொற்களின் அர்த்தத்தைத் தெரியாத ஈழத்துத் தமிழர்கள் எவருமே இருக்க முடியாது. அரசியல், மதம், மொழி போன்ற காரணங்களால் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையே அகதிகள் என்று அகராதிகள் பொருள் கூறும்.

அகராதிகள் அவ்வாறு கூறியபோதும் எமது நிதர்சன வாழ்வில் அது உணர்த்தும் பொருள் பரந்தது. உணர்வு பூர்வமானது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக் கூடியது.

உயிரைக் காக்க, உடுத்த உடுப்போடு வீட்டைவிட்டு ஓடிச் சென்று மரநிழல்களிலும், கோயில், பாடசாலை அல்லது அறிந்தவர் வீடுகளிலும் தலை சாய்க்க இடந் தேடி அலைந்த துயரத்தை தமது வாழ்வில் குறைந்தது ஒருமுறையாவது அனுபவிக்காத வட கிழக்கு வாழ் மக்கள் இருக்க முடியாது.

அகதிகள் என்ற சொல் அவர்களுக்கு கொடுக்கும் அர்த்தம் துன்ப துயரத்தில் தோய்ந்தது. புதிய புதிய அர்த்தங்களுக்கான சாத்தியப்பாடுகளைத் திறந்து விடுவது. அது மாத்திரமின்றி அவர்களது இருப்பையும் தன்மானத்தையும் கேள்விக் குறியாக்குவது. வார்த்தைகளில் புரியவைத்துவிட முடியாத அதன் கனத்த, பரந்த பரிமாணத்தை ஒவ்வொருவரும் தாம் வாழ்வில் பெற்ற அனுபவங்களின் பின்னணியில்தான் காண முடியும். உணர்வுகளின் கூட்டுறவில்தான் புரிய முடியும்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாலான, முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு பரிமாணம் அகதிகள் என்ற சொல்லுக்கு இருக்கலாம் என்பதை தெணியானின் ‘பரம்பரை அகதிகள்’ என்ற குறுநாவல் எமக்கு உணர்த்துகிறது. அகதி வாழ்வின் அவலத்தை நிதர்சனமாக அனுபவித்த எம் போன்றவர்களுக்குக் கூட அந்த அர்த்தம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்தாலும் “குடியிருப்பதற்கு ஒரு குளி நிலந்தானும் சொந்தமாக இல்லாத’ தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த பரிதாபமான வாழ்வு இக் குறுநாவலில் சொல்லப்படுகிறது. கந்தசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் தங்கள் குடியிருப்பு நிலம் தமக்குச் சொந்தமாக இல்லாததால் உயர்சாதி நில உடைமையாளர்களால் பல முறை குடியெழுப்பப்பட்டு, இடம்பெயரச் செய்து, அகதிகளாக அலைக்கழிக்கபட்ட கண்ணீர்க் கதைதான் பரம்பரை அகதிகள்.

அவர்கள் அந்நிய இராணுவத்தால் விரட்டியடிக்கப்படவில்லை, வேற்று மொழி பேசும் சொந்த தேசத்து இராணுவத்தால் துரத்தியடிக்கப்படவில்லை. தமது சொந்தச் சகோதரர்களால் அகதியாக்கப்படுகிறார்கள். ஒரே மொழியான தமிழ் மொழி பேசுபவர்களால், ஒரே பிரதேசமான வடமராட்சியைத் சார்ந்தவர்களால், ஒரே மதத்தை கடைப்பிடிப்பவர்களால் இந்தக் கொடூரம் இழைக்கப்படுகிறது. அவர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள். அடக்கப்படுகிறார்கள். அடிமைகள் போல் நடாத்தப்படுகிறார்கள், அகதிகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். இது எமது சமூகத்தின் சாபக்கேடு.

வடமராட்சியின் புலோலி பகுதியைச் சார்ந்த அவன், தான் குடியிருந்த ஒவ்வொரு நிலத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தும்பளை, கரணவாய், கெருடாவில் என குடியிருக்க நிலம் தேடி அலைகிறான். உடலுரமும் முரட்டுத்தனமும் கொண்ட அவன் நாலெழுத்துப் படித்தவன் கூட. தனது சமூகத்திற்கு எதிரான உயர்சாதிமான்களின் கொடுமைகளால் குமுறி வெடித்து வேசம் கொள்பவன். ஆனால் தனி ஒருவனான அவனால் என்ன செய்ய முடியும்? கொடுரம் நிறைந்த, ஆள் அணி கொண்ட சாதி வெறியர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. பணியவும் முடியவில்லை. இருக்க இடம் தேடி அலையத்தான் முடிந்தது.

இக் கதையில் சொல்லப்படுவது ஏதோ ஒரு உதிரிச் சம்பவம் அல்ல. காலங்காலமாக எமது யாழ் மண்ணில் கட்டவிழ்த்து விடப்படுகிற சாதீய ஒடுக்குமுறையின் கொடூர முகம். அதிலும் அதன் ஒரு சிறு அத்தியாயம் தான் இது. ஆனால் இன்றுதான் பதிவாகிறது.

தனது முந்தைய நாவலான ‘கானலில் மான்’ க்கு இவ்வருடத்தைய சாகித்திய பரிசைத் தட்டிக் கொண்ட தெணியானின் புதிய நு¡ல் “சிதைவுகள்’. இந் நு¡லில் இரு குறுநாவல்கள் அடங்குகின்றன. முதல் குறுநாவல் நாம் ஏற்கனவே பேசிய பரம்பரை அகதிகள். இந் நு¡லில் அடங்கும் அடுத்த குறுநாவல் சிதைவுகள். “பரம்பரை அகதிகள்’ ஈழநாடு ஞ்¡யிறு மலரில் 1985 ல் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இரண்டாவது குறுநாவலான “சிதைவுகள்’ தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களாவும் இணைந்து நடாத்திய ஈழத்துக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. பு¢ன் 1998ல் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்து வாசகர்களின் அமோக தரவைப் பெற்றது.

இந்த இரண்டு குறுநாவல்களையும் இணைத்து மீரா பதிப்பகத்தினர் ஒரு நு¡லாக வெளியிட்டுள்ளனர். இரண்டாவது குறுநாவலான சிதைவுகள் போர்க் காலமான 1991ல் களம் கொள்கிறது. அரசின் திடீர் அறிவித்தல் காரணமாக இரவோடு இரவாக தமது சொந்த மண்ணை விட்டு வடமராட்சி மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து தென்மராட்சி, வலிகாமம் நோக்கிச் சென்று பட்ட துன்பங்கள் துயரங்களைச் சொல்கிறது. அகதியாகும் பிரச்சனை பற்றி மட்டுமின்றி போர்ச் சூழலின் அவலங்களையும் அதனால் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் யாழ், கொழும்பு, வெளிநாடு எனப் பிரிந்து சிதைவதையும், அக் குடும்பம் எதிர் கொள்ளும் அகால மரணங்களையும் மிக அற்புதமாகச் சித்தரிக்கிறது.

இக் கதை அற்புதமாக அமைந்ததற்குக் காரணம் என்ன? இது தெணியானின் அடி மனத்திலிருந்து பீறிடும் சத்தியமான பதிவாக இருப்பதுதான். தானும் தன் உறவினரும் சுற்றத்தாரும் நண்பர்களும் நேரிடையாக அனுபவித்த நிஐமான துன்பங்களின் மறுவார்ப்பு இது. மிகவும் உணர்வு பூர்வமாகச் சொல்கிறார். அவர் சொல்வது வாசகர்களான ஒவ்வொரு தமிழனதும் சொந்த அனுபவமாக இருக்கிறது. எங்கள் அனுபவம் அவரது அனுபவத்துடன் கலவியுறும்போது அற்புதமான உணர்வலைகளை எம்மில் கிளர வைக்கிறது.

இதில் வரும் பாத்திரங்கள் யார்? அப்பா, அம்மா, மூத்தவன், மூத்தவள் நடுவிலான், சின்னவள் இப்படித்தான். எல்லாமே பெயரற்ற பாத்திரங்கள். இவர்கள் யாவரும் எவரோ அல்லர். எம்மவர்கள், எமது குடும்பத்தினர் என்ற உணர்வே ஏற்படுகிறது. இதனால் இது எமது கதை போல உணர்கிறோம். இதனால் நாவலோடு உணர்வு பூர்வமாக ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங்களுக்கு பெயர் கொடுக்காத உத்தியைப் பயன் படுத்திய தெணியான் வெற்றி பெறுகிறார்.

இன்று முதுமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அரசுகள் அக்கறை எடுக்கின்றன. மருத்துவத்தில் Geriatrics ஒரு அலகாக முக்கியத்துவம் பெறுகிறது. தெணியானும் தனது பங்காக இந்நாவலில் முதுமைக்கு இலக்கிய அந்தஸ்து கொடுக்கிறார். இந்த நாவலின் பிரதான பாத்திரம். அப்பா. இளைப்பாறிய அதிபர். முதியவர். அப் பாத்திரம் ஊடாக முதியவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், செயற்பாடுகள் யாவற்றையும் நுணுக்கமாக அவதானித்து பதிவு செய்துள்ளமை மருத்துவனான எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியது.

உறவுகளின் நெருக்கமும், நேர அவகாசம் நிறைந்ததுமான கிராமச் சமுதாயத்தில் கூட வெளிவிறாந்தையில் இரு கதிரைகள் போட்டமர்ந்து பேசுவதற்கு யாராவது வருவார்களா காத்திருக்கிறார் அப்பா. அவரூடாக முதுமையின் தனிமையுணவு நாடு, பிரதேசம் மற்றும் கலாசார எல்லைகளைத் தாண்டியது என்பதை உணர்கிறோம். மிக அற்புதமாக சித்தரித்துள்ளார்.

ஈழத் தமிழ்ச் சமுதாயத்தின் மிகத் துன்பமான, இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தின் அற்புதமான பதிவாக சிதைவுகள் குறுநாவல் அமைகிறது.. செய்தித் தணிக்கைகளாலும், இனவாத ஊடகங்களினாலும் வெளி உலகுக்கு மறைக்கப்பட்டு, இன்று சமாதானக் கேளிக்கையால் மறக்கப்படும் ஒரு சமூகத்தின் இருண்ட சோகமான காலகட்டம் தெணியானின் எழுத்தில் காவியமாக உயர்ந்து எழுகிறது.

ஆனால் கடைசி இரு அத்தியாயங்களும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடி கதையை நிறைவு செய்ய முனைகின்றனவே அன்றி அனுபவப் பகிர்வாக அமையவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த இரண்டு குறுநாவல்களும் சிறப்பாக இருந்தபோதும் வெவ்வெறு விதத்தில் தனிச் சிறப்புப் பெறுகின்றன. யாராலும் பேசப்படாத ஒரு விடயத்தைப் பேசி, அகதி என்ற சொல்லுக்கே புது அர்த்தம் தேடும் ‘பரம்பரை அகதிகள்’ தனது கதையின் கருவால் உயர்ந்து நிற்கிறது. மறுபுறம் சிதைவுகளானது தமிழ் மக்களது இன்றைய எரியும் பிரச்சனையைப் பேசினாலும் தெணியானின் சித்தரிப்பு நேர்த்தியால் தரமுயர்ந்த இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது.

தெணியான் தனது அறுபது வயதிலும் வளர்ந்து வருகிறார். பல மூத்த எழுத்தாளர்கள் எழுதுவதையே கைவிட்டு ஓய்ந்த நிலையிலும், இன்னும் சிலர் தொடர்ந்து எழுதினாலும் அவர்களது எழுத்தாற்றல் நீர்த்துப் போய் சுவை கெட்டுப் புளித்துப்போன நிலையிலும் இவரோ தனது கலாரீதியான தேடலை விரிவாக்குகிறார். தனது கற்பனைத் திறனை சமூகம் சார்ந்த வெளியில் பறக்கவிடுகிறார். தனது சொல்லும் திறனை தினம் தினம் புதுப்பித்து மெருகேற்றி வருகிறார்.

இந்த இரு குறுநாவல்களையும் ஒன்று சேர்த்துப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. ஒரு பதினைந்து கால வித்தியாசத்தில் தெணியான் தனது படைப்பாற்றலை உன்னதங்களை நோக்கி எப்படி வளர்த்து வந்துள்ளார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. அவதானிப்பின் கூர்மை, சித்தரிப்பின் செழுமை, மொழியாற்றல் யாவும் கைகோர்த்து வர இந்நாவலை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்.

ஒரு எழுத்தாளனின் சிறப்பு என்பது, தான் பெற்ற அனுபவங்களையும், தான் அவதானித்ததும் கேட்டறிந்ததுமான மற்றவர்களது அனுபவங்களையும் எழுத்து வழியாக வாசகர்களுக்கு கைமாற்றுச் செய்யும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது. மொழி வழியாக தனது அனுபங்களை எளிதாக வாசகனுக்குக் கைமாற்றுச் செய்யக் கூடிய எழுத்தாளனே உச்ச நிலை எழுத்தாளனாகப் பரிணமிக்க முடியும். தெணியானும் இதையே எட்ட முயல்கிறார். பல இடங்களில் அவரது வார்த்தைகள் கருத்து ஊடாடலுக்கான வெற்று வார்த்தைகளாக அல்லாது கவிதைகளாக உள்ளத்தோடு பேசுகின்றன. நுண்ணுணர்வைப் பகிர்ந்து கொள்கின்றன. சித்திரங்களாக எமது எண்ணங்களைத் தோகை விரித்து ஆடச் செய்கின்றன. சில உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

‘மரமும் கொடுகும் மார்கழி மாதத்துக் கடும் குளிர்-‘

‘அடிப்பதற்கு கை நீட்ட வேண்டுமா? ஓவ்வொரு அசைவிலும் இன்னொருவர் இதயத்தில் ஓங்கி அடிக்கலாம்.’

‘திசைகள் எங்கும் மரணம் சூழ்ந்து நிற்கிறது. மரணத்தை மறித்துத் தப்பி ஓடுவது…’.
இவைபோல் இன்னும் எவ்வளவோ!

இதே போல வடமராட்சி மண்ணின் வாசனையை ‘உணவை ஒறுத்து நடப்பது’, ‘பத்தாள்மைக்காரர்’ போன்ற பல பாரம்பரியச் சொற்களை பொருத்தமறிந்து கையாள்வதன் மூலம் செய்நேர்த்தியுடன் பதிவு செய்கிறார்.

தெணியான் ஒரு நல்ல சிறுகதையாசிரியர். அதே நேரம் இலங்கையின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவரும் கூட. நாவல் என்பது சிறுகதையுடைய நீட்சியாகவோ, நீண்ட கதையாகவோ இருக்கக் கூடாது என்பதை நன்கு புரிந்து கொண்டவர். இதனால்தான் அந்த இரு துறைகளிலும் அவரால் வெற்றி பெற முடிந்தது. இருந்தபோதும் ‘தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே’ என பேராசிரியர் சிவத்தம்பி ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதுவும் இன்னொரு வகையில் உண்மைதான். ஏனெனில் அவர் தனது படைப்புகளை நாவல் என்ற பிரமாண்ட வடிவத்தின் விஸ்வரூப தரிசனத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரமாண்டம் என்பதை படைப்பின் கன அளவைக் கொண்டோ, பக்கங்களின் நீட்சியைக் கொண்டோ, பாத்திரங்களின் எண்ணிக்கையை வைத்தோ மதிப்பிடவில்லை. மாறாக அதன் உள்ளடக்கத்தையும் கலைப் பெறுமானத்தையும் வைத்துச் சொல்கிறேன்.

தெணியானின் “சிதைவுகள்’ 60 பக்கங்களைக் கூடத் தாண்டாத சிறிய படைப்பு. ஆனால் இந்தக் குறுகிய பக்க அளவுக்குள் வாழ்வின் விசாலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்க முனைகிறார். முக்கிய பாத்திரங்கள் மாத்திரமின்றி பக்கத்து வீட்டுக் கடைக்காரத் தம்பி, அம்மாவை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்ல உதவிய வண்டில்காரன், தானும் இடம் பெயர்ந்திருந்த போதும் ஆபத்துக்கு உதவிய வைத்தியர் போன்ற உதிரிப் பாத்திரங்களும் கூட உயிர்த் துடிப்போடு படைக்கப் பட்டிருந்தனர். இதனால் வெறும் கதை சொல்வது என்ற வழமையான பரிமாணத்தைக் கடந்து ஒரு சமூகத்தின் சிதைவை ஆழமாகவும், அகலமாகவும், இந்நாவலில் தா¢சிக்க முடிகிறது.

“நாவல் என்பது வளர்ந்து விரிந்து செல்லும் பவ்வேறு கேள்விகளின் பொ¢ய வடிவம் அல்லது artistic discussion of values(or) philosophic version of life. வரலாற்றையோ நுண்ணுணர்வுகளையோ கணக்கில் எடுக்காமல் வெறும் வாழ்க்கையை சொல்வது நாவலாகி விடுவதில்லை. ….. நாவலென்பது இன்னமும் விரிந்து விரிந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையே தன்னுள் அடக்கிவிடும் துடிப்போடு பொங்கி வரக்கூடியது.’ என ஜெயமோகன் அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இன்று இலங்கையில் இத்தகைய ஒரு நாவலைப் படைக்கக் கூடிய ஆற்றல் உள்ள ஓரு சிலரில் தெணியான் முக்கியமானவர் என எண்ணத் தோன்றுகிறது.

அட்டைப் படம் ரமணி. ஒரு மனித உருவம் கூட இல்லாது. ஒரு சமூகத்தின் சிதைவையும், அகதியாகும் அவலத்தையும் அற்புதமாகப் படைத்துள்ளார். வழமையான ரமணியின் அட்டைப்படம் அல்ல. மிகவும் வித்தியாசமானது. எமது கற்பனைத் தேரை பாய்ந்தோட விட்டு, புதிய புதிய பரிமாணங்களைக் கிளறியெடுத்து ரசிக்கக் கூடியது. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இருள் சேர்ந்த வர்ணச் சேர்க்கையால் அகதி வாழ்வின் சோகம் எமது மனத்தை அப்பிக் கொள்கிறது.

இந்த இரு குறுநாவல்களையும் தேர்ந்தெடுத்து நு¡லாக்கிய மீரா பதிப்பகத்தின் இரத்தினவேலோன் பாராட்டுக்குரியவர். இது அவர்களது 38வது வெளியீடு. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நு¡ல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயலும் அவர்களது முதல் நாவல் இதுதான். இருள் சூழ்ந்த ஈழத்து வெளியீட்டுத் துறையில் நம்பிக்கையூட்டும் பதிப்பகம். ஆதரவளிப்பது எம் கடமை.

நூலாசிரியர்:-
தெணியான் (கந்தையா நடேசன்),
கலையருவி, கரணவாய் வடக்கு,
வல்வெட்டித்துறை.

வெளியீடு:-
ஆ.இரத்தினவேலோன்,
வெளியீடு: இரத்தினவேலோன், மீரா பதிப்பகம்,
291/6-5/3A,Edward Avenue Colombo 05.
Telephone 94 11 2582539

இலங்கை விலை:-
ரூபா 250/=

கட்டுரையாளர்:-
எம்.கே.முருகானந்தன்.
kathirmuruga@gmail.com

Read Full Post »

>அன்றுதான் ஆரம்பித்த காய்ச்சல் 103- 104 எனக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது. பத்து வயது மதிக்கத்தக்க அந்தப் பையனின் கண்கள் சற்று சிவந்திருந்தன. கடுமையான உடல் உழைவினால் அமைதியாக இருக்க முடியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தொண்டை நோவும் இருந்தது. ஆயினும் தடிமன், மூக்கடைப்பு இருமல் போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லை. இத்தகைய காய்ச்சல் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது.

‘இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ’ என கூட்டி வந்த தாய் கேட்டாள். எந்த வைத்தியனாலும் நூறு சதவிகிதம் நிச்சமாகச் சொல்ல முடியாது. காரணம் ஏனைய வைரஸ் காய்ச்சல்கள் போலவே இதுவும் ஆரம்பத்தில் இருக்கும். இது டெங்குதான் என உறுதியாகச் சொல்லக் கூடிய அறிகுறிகள் ஏதும் முதல் மூன்று நாட்களிலும் இருக்காது.

‘இரத்தம் சோதித்துப் பார்ப்பமோ’ என்று தாய் கேட்டாள். முதல் நாளிலிலேயே இரத்தம் சோதித்துப் பார்ப்பதிலும் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை.

டெங்கு என்பதை நிச்சயமாகக் காட்டும் Dengue antibody டெஸ்ட் செய்வதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். பெரும்பாலும் அதற்கிடையில் காய்ச்சல் குணமாகிவிடும்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும்.

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.

ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.டெங்கு காய்ச்சல் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. சிகப்பாக காட்டிய பகுதியில் கடுமையான பரிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது எயிடிஸ் எஜிப்பாய் (Aedes aegypti) என்ற வகை நுளம்பினால் பரவுகிறது. நோயாளியின் இரத்தம் குடித்து வயிறு பருத்திருக்கும் நுளம்பனைப் படத்தில் காணுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>நாரிப்பிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வைத்தியரிடம் செல்ல வேண்டிய தருணங்கள் போன்ற விடயங்களை முன்னொரு தடவை பார்த்தோம்.

இனி அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.

தரையிலிருந்து ஏதாவது பொருளை எடுக்க வேண்டுமாயின் அதனைக் குனிந்து எடுக்க வேண்டாம். பாரமான பொருட்களை என்றல்ல, பாரமற்ற பென்சில் போன்ற சிறிய பொருட்களாக இருந்தாலும் கூட முதலாவது படத்தில் காட்டியவாறு முதுகை வளைத்துக் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.

மாறாக இரண்டாவது படத்தில் காட்டியவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்து, பாதங்கள் தரையில் பொறுத்திருக்குமாறு நின்ற பின், முதுகு வளையாதவாறு, முழங்கால்களை மடித்து உட்கார்ந்து எடுங்கள்.

அவ்வாறு எடுக்கும்போது அல்லது தூக்கும்போது முதுகை வளைக்காது இருப்பதுடன் பொருளை நெஞ்சுக்கு அருகே வைத்துத் தூக்குங்கள். இவ்வாறு தூக்கும்போது முதுகை பக்கவாட்டிற்கு ஆட்டி அசைந்து திருப்பாமல் இருப்பதும் முக்கியமாகும்.

ஒரு பாரமான பொருளை, உதாரணத்திற்கு அலுமாரியை நகர்த்த வேண்டிய அவசியம் நேர்ந்தால் அதனை கைகளால் இழுப்பதைத் தவிர்த்து முதுகுப் புறத்தால் தள்ளி நகர்த்த முயற்சியுங்கள்.

இருப்பதுவும் …

உட்காரும்போது உயரம் குறைந்த கதிரைகளில் உட்காருவதைத் தவிருங்கள். சாப்பாட்டு மேசைக் கதிரைகள் போன்றவை பொதுவாக சரியான உயரம் கொண்டவையாகும். உட்காரும்போது உங்கள் முதுகு எவ்வாறு இருக்க வேண்டும். ‘வளைந்து உட்காராதே முதுகை செங்குத்தாக நிமிர்த்தியபடி உட்காரு’ என்றே பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை ஆலோசனை கூறுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது அபர்டீனிலுள்ள வூட்என்ட் வைத்தியசாலையில் (Woodend Hospital in Aberdeen) எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வு அதனை மறுதலிக்கிறது. மேசையை நோக்கி முன்பக்கமாக வளைந்து உட்கார்வதானது முள்ளந்தண்டின் கீழ்ப்புறத்தில் தேய்மானத்தை ஏற்படுத்தும். ஆனால் நடுவில் உள்ள படத்தைப்போல நிமிர்ந்து உட்காருவது முள்ளெலும்புகளில் கூடிய அழுத்தத்தை கொடுத்து அவற்றின் நேர் ஒழுங்கையே குறைத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

மாறாக மூன்றாவது படத்தில் காட்டியவாறு இடைப்பட்ட நிலையில் உட்காருவதே முள்ளெலும்புகளுக்கு குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனித உடலானது நீண்டநேரம் நிமிர்ந்து உட்காருவதற்காக அமைக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை அதையே செய்ய வைக்கிறது. எனவே நாம் நீண்ட நேரம் உட்காருவதால் முள்ளெலும்புகளுகான பதிப்பை குறைக்க வேண்டுமாயின், சற்று சாய்ந்த நிலையில் அதாவது 135 பாகை பின்புறம் சாய்ந்து உட்காருவதே சிறந்தது.

வேலை செய்யும்போதோ அல்லது பிரயாணம் பண்ணும்போதோ நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்வது முதுகெலும்பிற்கு அதீத அழுத்தத்தைக் கொடுக்கும். அந்நேரங்களில் மணித்தியாலயத்திற்கு ஒரு முறையாவது சற்று எழுந்து நின்று தசைகளை நீட்டி நிமிர்த்தி அவற்றிற்கு ஓய்வு கொடுங்கள்.

அதேபோல கார் ஓட்டும்போது உங்கள் ஓட்டுனர் ஆசனத்தின் முதுகு சாய்க்கும் பகுதியானது பதினைந்து பாகையளவு பிற்புறம் சாய்ந்திருக்கும் படி ஒழுங்கு படுத்த வேண்டும். கைகள் தளர்வாக இருப்பதுடன் ஸ்டியரிங்கை இறுகப் பற்றுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் டிரைவிங் சீட்டை சற்று முன்னுக்கு நகர்தினால் இது சாத்தியமாகும்.

முதுகை முற்புறம் வளைந்து, ஸ்டியரிங்கை நோக்கிக கூனிக் கொண்டிருப்பது போல அமர்ந்து கார் ஓட்டுவதைத் தவிருங்கள்.


மேசையருகே உட்கார்ந்து எழுதும்போது முதுகை முன்பக்கமாக வளைந்து சரிந்திருப்பது கூடாது. கதிரையை மேசைக்கு அருகில் நகர்த்தி வைத்தால் முதுகு வளையாது. உட்காருவது பற்றிக் கூறியதற்கு இணங்க நிமிர்ந்திருந்து அல்லது சற்று பின்புறம் சாய்ந்திருந்து எழுதுங்கள்.

பொதுவாக குதி உயர்ந்த காலணிகளை அணிவதைத் தவிருங்கள். ஒரு அங்குலத்திற்கு குறைவான உயரமுள்ள குதிப்பகுதியுள்ள காலணிகள் நாரிப்பிடிப்பைத் தடுப்பதற்கு நல்லதென கூறுகிறார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதும், எடையை அதிகரிக்காது பேணுவதும் நாரி வலி ஏற்படாது தடுப்பதில் பங்களிக்கும்.

நீங்கள் மரக்கறி வெட்டும்போது, தேங்காய் துருவும்போது அல்லது உடைகளை அழுத்தும்போது (Ironing) ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க நேரிடும். இது முள்ளதண்டிற்கு கூடிய வேலைப்பளுவைக் கொடுக்கும். இதைத் தடுப்பதற்கு ஒரு காலை அரை அடியுள்ள பலகையில் உயர்த்தி வையுங்கள். ஒரே காலை தொடர்ந்து உயர்த்தி வைக்க வேண்டாம். 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி உயர்த்தி வைக்கவும். இதனால் முள்ளதண்டிற்கான கூடிய வேலைப்பளு குறையும்.

சாதாரண நேரங்களில் நிற்கும் போது உங்கள் உடலானது நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது காது, தோள் மூட்டு, இடுப்பு மூட்டு ஆகியன ஒரு நேர்கோட்டில் அமைய வேண்டும். தொந்தியை முற்புறம் தொங்கவிட்டு, முதுகை வளைக்காது வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால் முதுகும் நிமிர்ந்து சரியான தோற்றத்தில் நிற்க உதவும்.

படுப்பதுவும் …

நாம் தினமும் தொடர்ந்து ஒரே இடத்தில், ஒரே நிலையில் தொடர்ந்திருப்பது தூங்கும் போதுதான். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் படுக்கையில் செலவழிக்கிறோம். எனவே அந்தளவு நேரமும் எமது முள்ளந்தண்டானது அழுத்தம் இன்றி தளர்ச்சியாக இருப்பது அவசியம். அதாவது பகல் வேளையில் நிமிர்ந்து நிற்கும்போது எவ்வாறு முள்ளந்தண்டின் இயல்பான வளைவுகள் பேணப்படுகின்றனவோ அவ்வாறே படுக்கையிலும் பேணப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் படுக்கையும் தலையணையும் அமைய வேண்டும்.

சரியான படுக்கையானது வெறும் தரையோ, வெறும் பலகையோ அல்ல. அதே போல தளர்ச்சியான ஸ்பிரிங் உள்ள கட்டில்களோ சாக்குக் கட்டில்கள் போன்றவையும் அல்ல. எமது உடலின் இயற்கையான வளைவுகளை பேணத்தக்களவு மிருதுவான படுக்கையே ஏற்றது. உதாரணமாக பலகை மேல் சற்று இறுக்கமான மெத்தை போட்ட படுக்கை பொருத்தமாக இருக்கும்

தலையானது உங்கள் தலைக்கும் படுக்கைக்கும் இடையிலான இடத்தை சரியான அளவில் நிரப்புதற்கு ஏற்ற பருமனுடையதாக இருக்க வேண்டும். முதற் படத்தில் முள்ளந் தண்டானது இடுப்பு முதல் தலை வரை ஒரே நேராக இருக்கின்றன. மெத்தையும் தலையணையும் அதற்கேற்ற பருமனும் அடர்த்தியும் கொண்டிருக்கின்றன. இரண்டாவது படத்திலுள்ள கட்டில் மிகவும் தளர்ச்சியானதாக இருப்பதால் உங்கள் உடற்பாரத்தால் முள்ளந்தண்டு வளைந்து கோணும்படி செய்துவிடுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல

மூன்றாவது படத்தில் உள்ளது போன்ற கடுமையான சற்றும் இசைந்து கொடுக்காத தரை அல்லது பலகை வாங்கு போன்ற படுக்கை ஏற்றதல்ல என்பது புரிந்திருக்கும். காரணம் இதுவும் உங்கள் முள்ளந்தண்டின் இயல்பான வளைவுகளை பேணுவதில்லை.

ஒரு பக்கம் சரிந்து, முழங்கால்களை சற்று மடித்துப் படுப்பதுதான் தூங்குவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிலையாகும். முழங்கால்களுக்கு இடையே ஒரு சிறிய தலையணையை வைப்பது மேலும் சொகுசாக அமையும். குப்புற முகம் புதைத்து வயிற்றில் அழுத்துமாறு ஒருபோதும் படுக்க வேண்டாம். மாறாக நிமிர்ந்து படுப்பதாயின் முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணை வையுங்கள். இவ்வாறு தூங்கும்போது அடிநாரிக்கு கீழே ஒரு சிறிய தலையணை வைப்பதும் நல்லது.

பயிற்சிப்பதுவும் …

முள்ளத் தண்டை அண்டியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதனால் வலி குறைவதுடன் மீண்டும் மீண்டும் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இரண்டு முழங்கால்களையும் குத்தென மடித்துப் படுங்கள். இப்பொழுது உங்கள் இடது முழங்காலை மெதுவாக நெஞ்சைத் தொடுவது போல உயர்த்துங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் நாரியின் அடிப்புறம் அடியிலுள்ள கட்டிலோடு அல்லது தரையோடு நன்கு அழுத்துப்பட வேண்டும். இவ்வாறு 5 செகண்ட் செய்த பின்னர் கால்களைப் பழைய நிலைக்கு கொண்டு சென்று தளரவிடுங்கள். இனி வலது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யுங்கள். மாறி மாறி ஒவ்வொரு காலுக்கும் பத்துத் தடவை மீளச் செய்யுங்கள்.

மேற் கூறியது முதுகுப்புற தசைகளுக்கான பயிற்சி. இதைத் தவிர நீந்துவது, விரைவு நடை போன்ற ஏனைய பயிற்சிகளையும் செய்து வாருங்கள். இவை நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெற மட்டுமின்றி, உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தையும் பேண உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

Read Full Post »

>இரத்தத்தைக் கண்டு துளியும் அஞ்சாத சத்திரசிகிச்சை நிபுணர் மிக அவசரமாக சத்திரசிகிச்சை அறைக்குள் நுழைகிறார்.

“தலை உடைந்து விட்டதா? ஒரு சில தையல் போட்டால் சரி”

Sorry சொல்லக் கூட அவருக்கு பழக்கமில்லை.

மிக நுணுக்கமாகவும் அவதானமாகவும் நோயாளிகளின் அறிகுறிகளைக் கேட்கும் பரிவுள்ள டாக்டர் இவர்.

நோயாளிக்கு வலிக்கக் கூடும் என்பதைக் கூட முதலிலேயே கூறி நோயாளியை எச்சரிக்கும் கருணை மிகுந்த வைத்தியர் இவர்.

சற்று வேகமாக ஊசியைக் குத்திவிட்டாரோ?

தனது டயக்னோசிலில் எந்த சந்தேகமும் இல்லாத மிகத் திறமை வாய்ந்த இந்த மருத்துவ நிபுணரிடம் வீணாக சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்பாதீர்கள்.

சற்றுக் கண்பார்வை குறைவுதான் ஆனாலும் மிகத் திறமான டாக்டர். நோயாளியின் கழுத்துப்பட்டியிலேயே நாடித் துடிப்பைத் தேடுகிறார்.

டொக்டரின் எச்சரிக்கைக்குள்ளும் சுவை தேடும் உல்லாசப் பிரிய நோயாளி இவர்.

நம்பிக்கையூட்டும் அவசரசிகிச்சைப் பிரிவு இது.

கில்லாடி டாக்டரும் அதிகில்லாடி நோயாளியும்.

இது டாக்டர் அல்ல. நோயாளிக்கு உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கும் Phsiotherapist. அசையக் கூட முடியாத நோயாளியை எவ்வளவு நாகரீகமாக விசாரிக்கிறார். பார்த்தீர்களா?

Read Full Post »

>‘அம்மா நீங்கள் நாளந்தம் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்’ என்றேன்.

‘இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?’

அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும் சரியானது அல்ல.

அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும் நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஏனெனில் பயிற்சி என்பது மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். அது மூட்டுகளைப் பலமுடையதாக ஆக்கும், அவற்றின் மடங்கி நிமிரும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்.

ஆனால் மூட்டுகள் சிவந்து, வீங்கி வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே உங்கள் வலியை மேலும் அதிகரிப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் இவற்றோடு நீங்கள் பந்தயத்தில் ஓடப் போவதோ, விளையாட்டு வீரர்கள் போல பயிற்சி செய்யப் போவதோ இல்லையே. சிறிய சிறிய பயிற்சிகளே போதுமானது.

அவை வலியைத் தணிக்கவும், மூட்டுகளை இலகுவாக இயக்குவதற்கும் நிச்சயம் உதவும். மூட்டு வலிகள் ஒருவரைப் பாதித்து நடக்கவோ, இயங்கவோ முடியாது தடுத்து, படுக்கையில் கிடத்த முனையும் போது, பயிற்சிகள் மட்டுமே ஒருவரை இயங்க வைக்கும்.

உடற் பயிற்சிகள் ஏன் அவசியம்

பயிற்சிகள் ஒருவரது மூட்டுகளைப் பாதிக்காத அதே நேரம், பொதுவான உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் செயலாற்றல் திறனையும் அதிகரிக்கும். மூட்டு நோய்களுக்கான மருத்துவத்தைத் தொடர்வதுடன் பயிற்சிகளைச் செய்வதன மூலம் நீங்கள் கீழ்காணும் நன்மைகளையும் பெறுவீர்கள்.

1. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தும்.

2. எலும்புகளின் உறுதி கெடாமல் பாதுகாக்கும்.

3. நாளாந்த வேலைகளுக்கான பலத்தையும் சக்தியையும் கொடுக்கும்


4. இரவில் உடல் உழைவற்ற நிம்மிதியான தூக்கம் கிடைக்க உதவும்.


5. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.


6. உங்கள் உடல் நலம் பற்றிய நம்பிக்கையூட்டும் உணர்வை வளர்க்க உதவும்.

பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்

உங்களது மூட்டு வருத்தம் எத்தகையது, அதற்கான சிகிச்சை என்ன, அதற்கு எத்தகைய பயிற்சிகள் சிறந்தவை என்பதை உங்கள் மருத்துரின் ஆலோசனையுடனே ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Physiotherapist) ஆலோசனையுடன் தொடங்கலாம். உங்களது மூட்டுவலி எத்தகையது, அது எந்தெந்த மூட்டுகளைப் பாதித்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அதிக பலனைக் கொடுக்கும் அதே நேரம் வலியை அதிகரிக்காத பயிற்ச்சி எது என்பதைத் தீர்மானிப்பார்.

பயிற்சி வகைகள்

மூட்டுகளின் செயற்பாட்டு எல்லைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி

ஓவ்வொரு மூட்டிற்கும் அதன் செயற்பாட்டிற்கான பரப்பு (Range) இருக்கிறது. மூட்டு நோய்கள் ஏற்படும்போது அது பொதுவாக குறைந்துவிடும். உதாரணத்திற்கு வழமையாக உங்கள் கைகளை நேராக தலைக்கு மேல் உயர்த்த முடியும். ஆனால் இறுகிய தோள் மூட்டு (Frozen Shoulder) போன்ற நோய்களின் போது அவ்வாறு முழுமையாக உயர்த்த முடியாதிருக்கும்.

இந் நிலையில் உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைத்து அழுத்தியவாறு, படிப்படியாக உயர்த்திக் கொண்டு செல்லுங்கள். இதனை தினமும் பயிற்சியாகச் செய்து வரலாம். இதே போல உங்கள் கைகளை முன்பக்கம், பக்கவாடு, பிற்பக்கம் என திருப்பி உயர்த்தலாம்.

மணிக்கட்டு வலிக்கு படத்தில் காட்டியபடி செய்யலாம்.

இதே போல நோயுள்ள எல்லா மூட்டுகளினதும் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்க பயிற்சிகள் செய்வது அவசியம்.

தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகள் நோயுற்ற மூட்டைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் அவற்றிக்கு பாதுகாப்பளிக்கும். ஒவ்வொரு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் இவ்வாறு செய்யலாம். உதாரணமாக உங்கள் முழங்காலுக்கு பலம் கொடுக்க வேண்டுமாயின் அதன் கீழ் ஒரு டவலை சுருட்டி வைத்து அதனை முழங்காலால் அழுத்துங்கள். 5 செகண்ட் ரிலக்ஸ் பண்ணிவிட்டு மீண்டும் செய்யுங்கள் இவ்வாறு தினமும் 50 தடவைகள் ஒவ்வொரு முழங்காலுக்கும் செய்யவேண்டும். வலி கடுமையாக இருந்தால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துச் செய்யுங்கள்.

மற்றொரு பயிற்சி. கதிரை அல்லது கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களது குதிக்கால் நிலத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, இடது காலை நீட்டுங்கள். நிமிர்ந்து உட்காரந்திருந்த நீங்கள் இப்பொழுது சற்று முற்புறமாகக் குனியுங்கள். ஆதன்போது உங்கள் காலின் பின்பறம் இறுகுவதை உணரலாம். 20-30 செகண்டுகள் அவ்வாறு இறுகப் பிடித்தபின் சற்று ஆறிய, வலது காலுக்கும் அவ்வாறு செய்யுங்கள்.

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்

மேலே கூறியவை குறிப்பிட்ட மூட்டுகளுக்கான பயிற்சிகள். ஆயினும் உங்கள் முழு உடலும் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியமாகும். இதற்கு தினசரி பயிற்சிகள் செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகள் உங்கள் இருதயத்தை திடமாக்கும், சுவாசத்தை இலகுவாக்கும், எடையைப் பேண உதவும். உடலுக்கு மேலதிக சக்தியைக் கொடுக்கும்.விரைவு நடை, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அத்தகையவையாகும். 20முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

வாரத்தில் 3-4 நாட்களுக்காவது செய்வது அவசியமாகும். ஒரே தடவையில் செய்ய முடியவில்லை எனில், 2 அல்லது 3 தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள்.மூட்டு வலிக்கு உதவக்கூடிய ஏனைய முயற்சிகள்

மூட்டு வலிகள் இருந்தால் அவற்றின் வலியைத் தணிக்கவும், செயற்பாட்டு எல்லைகளை அதிகரிக்கவும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். நீங்கள் செய்ய வேண்டிய ஏனைய முயற்சிகள் இதோ.

ஏனைய முயற்சிகள்

இவற்றைத் தவிர உங்கள் உடலுக்கு அசைவியகத்தை கொடுக்கக் கூடிய எந்த வேலையையும் செய்யத் தயங்காதீர்கள். அது சிறிய பணியாக இருந்தால் கூட நிச்சயம் உதவும். யோகா போன்ற பயிற்சிகள் கூட நல்லதுதான். சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்.

ஏனைய உதவிக் குறிப்புகள்

பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது படிப்படியாக ஆரம்பியுங்கள். அதிலும் முக்கியமாக சிலகாலம் பயிற்சிகள் இல்லாதிருந்துவிட்டு ஆரம்பிக்கும் போது திடீரென முழு வீச்சில் செய்யக் கூடாது. திடீரென கடுமையாகச் செய்தால் வலி குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கக் கூடும். எனவே Slow and Steady யாகச் செய்யுங்கள்.

பயிற்சிக்கு முன்னர் நீங்கள் பயிற்சி கொடுக்க இருக்கும் மூட்டுகளுக்கு சற்று வெப்பம் கொடுப்பது நல்லது. சுடுநீரில் நனைத்த துணியால் ஒத்தணம் கொடுங்கள், அல்லது Hot water bag னால் சூடு காட்டுங்கள்

அல்லது Infra Red Light பிடியுங்கள். அவ்வாறு 15-20 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். சூடு மூட்டுகளையும் தசைகளையும் சற்றுத் தளரச் செய்து நீங்கள் பயிற்சியை ஆரம்பிக்க முன்னரே வலியைச் சற்றுத் தணிக்கும்.

வெப்பமான நீரில் குளிப்பதும் உதவக் கூடும். மிதமான வெப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய கடும் சூடாக இருக்கக் கூடாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தினமும் பயிற்சிகளை ஆரம்பிக்கும்போது உங்கள் மூட்டுகளை மெதுவாக அசைத்து, அவற்றிற்கான எளிய சுலபமான இதமான பயிற்சிகளை முதலில் செய்யுங்கள்.

இவ்வாறு 10 நிமிடங்கள் செய்த பின் தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

அதன்பின்தான் வேகநடை, நீச்சல் போன்ற கடுமையான பயிற்சிகளுக்குப் போக வேண்டும்.

பயிற்சிகளைச் செய்யும்போது வலி எடுத்தால் சற்று ஓய்வு கொடுங்கள்.

சுருக்கென தாக்கும் கடும் வலி எடுத்தால் பயிற்சியை நிறுத்தி அடுத்த நாளுக்கு ஒத்தி வையுங்கள். பயிற்சியின் போது மூட்டுக்கள் சிவந்து வீங்கினாலும் அவ்வாறே நிறுத்துங்கள்.

பயிற்சியின் போது வீங்கி வலித்த மூட்டுகளுக்கு பயிற்சி முடிந்தபின் ஐஸ் வைப்பது உதவும். 10-15 நிமிடங்களுக்கு வையுங்கள்.

பயிற்சிகளின் போது உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்கள் மூட்டுகளால் தாங்க முடியாத கடும் பயிற்சிகளை அதற்குக் கொடுக்காதீர்கள். ஆரம்பத்தில் சொன்னதுபோல படிப்படியாக பயிற்சியை அதிகரியுங்கள், அதன் வேகத்தையும், செய்யும் நேரத்தையும்.

சற்றுக் காலம் நீங்கள் இயங்காதிருந்தால், அல்லது பயிற்சிகளை நிறுத்தியிருந்தால், மீண்டும் ஆரம்பிக்கும் போது மூட்டுகளில் சற்று வலி எடுக்கலாம்.

ஆயினும் அவ்வலி ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் நீடித்தால் பயிற்சி சற்று அதிகமாகிவிட்டதாகக் கொள்ளலாம். எதற்கும் உங்கள் மருத்துவருடன் அவ்வலி இயல்பானதுதானா அல்லது நோயின் காரணமாகவா எனக் கலந்தாலோசிக்கலாம்.

எதற்கும் பயிற்சிகளை முற்றாக நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

Read Full Post »

>பழம் சோற்றின் சுவையே அலாதியானது அதனை சுவைத்துப் பார்த்தவர்களுக்குத் தான் அதனது மாறுபட்ட அலாதியான கலப்புச் சுவையும், அடக்கமான வாசனையும், ஜில் எனக் கிடக்கும் குளிர்மையும் எவ்வளவு வித்தியாசமானது என்பது புரியும். அத்தோடு அது உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்றும் சொல்கிறார்கள்.

அத்தகைய ஒரு உணர்வைத்தான் மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் முதற் சிறுகதைக் தொகுதியாக “மேடும் பள்ளமும்” என்ற நு¡லைப் படித்தபோது ஏற்பட்டது.

சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன் இது முதல் முறையாக வெளிவந்திருந்தது. இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.மேடும் பள்ளமும் என்ற இத்தொகுதியில் மொத்தம் 15 சிறுகதைகள் அடங்குகின்றன. 1959முதல் 1961 வரையான 2 1/2 வருட காலத்திற்குள் இந்தப் பதினைந்து கதைகளையும் எழுதியுள்ளார். இந்த நு¡ல் வெளியான 1961 ண்டில் இவரது வயது 30 ஆகும் என்பதை இந்நு¡லைப் படிக்கும்போது நாம் நினைவில் கொண்டே அதனை விமர்சன ரீதியாக அணுக வேண்டும்.

இந்த நு¡லை இன்று புதிதாகப் படிக்கும் ஒரு வாசகனுக்கு எத்தகைய உணர்வலைகள் ஏற்படுகின்றன?

சுமார் 45 வருடங்களுக்கு முன்னான இலங்கைத் தமிழ் மக்களின் அதிலும் முக்கியமாக வடபுல யாழ்ப்பாண மக்களின் மண்ணேடு இசைந்த கிராமப்புறத்து வாழ்க்கை நிலையையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும், உயிர்ப்போடு காணமுடிந்தது. அவர்களது நம்பிக்கைகளையும் ஏக்கங்களையும் எந்தவித விமர்சனக் கடிவாளங்களும் இன்றிப் நிதர்ஸனமாகப் பார்க்க முடிந்தது. முகமூடி போர்த்தியிராத அவர்களது வாழ்வின் சந்தோஷங்களும், சோகங்களும் கலந்த கணங்களைத் தர்சிக்க முடிகிறது. சாதியால் ஒடுக்கபட்டும், பொருளாதாரத்தால் அடக்கப்பட்டும் அடிப்படை வசதிகள் இன்றியும் வாழ்ந்த மக்களின் துன்பங்களும், துயரங்களும், அங்கு காட்சியாக விரிந்தன. ஒரு வேளை உணவிற்கும், ஒரு துண்டு துணிக்குமாக அவர்கள் குருதி வரளக் கடும் உழைப்புச் செய்ய வேண்டியிருந்தது. அவர்களின் உழைப்பின் அறுவடையான அற்பசொற்பங்களையும் சுரண்டித் தமது வாழ்வை மேலும் வளமாக்க உயர்மட்ட வர்க்கத்தினர் ஓயாது அடாவடித்தனங்களையும், அடக்குமுறைகளையும் ஏவிக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் நீர்வை பொன்னையன் தனது சிறுகதைகளில் கலைத்துவத்தோடு பதிவு செய்திருப்பதை இத்தொகுதியில் காணமுடிந்தது. ஆனால் அவற்றில் எவ்வித பிரச்சார வாடையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதத்தில் செங்கொடிகளையும் செவ்வானத்தையும் குறியீடுகளாக்கி, தமது படைப்புகளை அதீத பிரச்சாரத் துப்பாக்கிகளாக்கிய தனது சமகால முற்போக்கு எழுத்தாளர்கிளிடையே இவர் வித்தியாசமாக சிந்தித்து பதிவு செய்திருப்பது பின்நோக்கிப் பார்க்கும் போது புலனாகிறது. அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர உறுப்பினராக அவர் இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே இவ்வாறு பதிவு செய்திருப்பது கவனத்தில் எடுக்கத்தக்கது.

பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைக் தொகுதியில் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான் வர்க்க முரண்பாடு பற்றி நேரிடையாகப் பேசுகின்றன. ஊர்வலம் என்ற முதலாவது சிறுகதையும், அதை அடுத்துவரும் “மேடும் பள்ளமும்’ என்ற கதையுமே அவை. ஆயினும் அவரது அனைத்துப் படைப்புகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பமும் துயரமுமே அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வர்க்க முரண்பாடு பற்றி நேரிடையாகப் பேசுகின்ற படைப்புகளில் முதலாவது கதையான “ஊர்வலம்” முதலாளி, தொழிலாளி வர்க்க மோதல் பற்றிப் பேசுகின்றது. மா அரைத்துக் கொடுக்கும் சுப்பையா என்ற தொழிலாளியின் கதை அது. அந்த மில் ஸ்தாபிக்கப்பட்டபோது முதலில் சேர்ந்தவன் தான் சுப்பையா. மில் வளர்ந்தது. தொழிலாளர் பெருகினர்.ஆயினும் சுப்பையாவின் சம்பளம் உயரவில்லை. அவனது குடும்பத்தினரின் வயிறும் நிரம்பவில்லை. அவனது குடும்பம் வறுமையில் வாடியது. ஊருக்கெல்லாம் அரைத்துக் கொடுத்த மாவை அவனால் தனது குடும்பத்திற்கு பெற்றுக் கொடுக்க இயலவில்லை.
சுப்பையாவின் நிலையை, நீர்வை அநுதாபம் தோய்ந்த கிண்டலுடன் இவ்வாறு அழகாகக் சித்தரிக்கிறார்.

“ஆனால் சுப்பையா மாவை நன்றாகச் சுவைத்தான் நாவினால் அல்ல. அவனுடைய மூக்கு நன்றாக மாவைச் சுவை பார்த்துக் கொண்டே வந்தது. மாவும், து¡சியும் கலந்த காற்றையே சதா உட்கொண்டு வந்ததால் அவனுடைய வயிறு நிரம்பாவிட்டாலும், சுவாசப்பை மாவினால் நிறைந்து கொண்டு வந்தது.

இறுதியில் நடந்தது என்ன?

சுப்பையா சயரோகம் வந்து இறக்கிறான். அவனுடைய மரணச் சடங்கில் கலந்து கொள்ள சகஊழியர்களுக்கு லீவு வழங்க முதலாளி மறுத்து விடுகிறார். சவ ஊர்வலம் ஒரு சிலருடன் மட்டுமே வருகிறது. அது மில்லை அண்மித்ததும் தொழிலாளர்கள் எந்த அனுமதியும் பெறாமல், யாருடைய து¡ண்டுதலும் இன்றித் தாமாகவே வேலையை நிறுத்திவிட்டு தமது சகஊழியனின் மரணஊர்வலத்தில் கலக்கிறார்கள்.

இத்தகைய படைப்பில் கூட பிரச்சார தொனி தலைது¡க்காது தொழிலாளர் எழுச்சியைச் சித்தரிப்பதற்கு நீர்வை மிகுந்த கவனம் எடுத்துள்ளார். அத்துடன் அவரது செட்டான செறிவான வார்த்தைப் பிரயோகமும் கை கொடுக்கிறது.
வர்க்க முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட அடுத்த கதை “மேடும் பள்ளமும்” ஆகும். காணியற்ற விவசாயிகளை காணிச் சொந்தக்காரர்கள் வஞ்சித்துச் சுரண்டுவதை இக்கதை பேசுகிறது. ஏழை விவசாயிகளின் உழைப்பை மாத்திரமின்றி அவர்களின் பெண்களிலும் அப் பெரிய மனிதர்கள் எப்படிக் கை வைக்கிறார்கள் என்பதை அதிர்ச்சியோடு பார்க்கிறோம். ஒரு பிரபுவின் வட்டாரத்தில் திருமணம் நடந்தால் மணப்பெண் தனது முதல் இரவை அந்தப் பிரபுவடன் கழிக்க வேண்டுமாம் என நீர்வை விபரித்த காட்சி எனக்குப் புதியதாக இருந்தது. கந்தசாரக் கலாச்சாரம் ஓங்கியதாகக் கூறப்படும் எமது மண்ணிலும் இத்தகைய கொடுமைகள் நடந்ததா என மனம் குறுகுறுத்தது. இயல்பான கிராமச் சூழலில், வரட்சியான பிரச்சாரமாக அமையாது கலையழகுடன் அவரால் இவற்றைச் சொல்ல முடிந்திருக்கிறது.

குத்தகைப் பணத்தை முழுமையாகக் கொடுத்து முடிக்காததால் அவனது பயிரை அறுவடை செய்ய முதலாளி தனது ஏவலாட்களை அனுப்பிறார். ஏழை விவசாயிகள் ஒன்று திரண்டு தடுக்க வருகிறார்கள். குடிசை எரிப்பு, அடிதடி, கொலை, போன்ற அச்சுறுத்தல் நிலவிய அன்றைய காலகட்டத்தில் முதலாளியை எதிர்த்தும் போட அவர்களால் முடியுமா? எதிர்த்துப் போராடினால் என்ன நடக்கும் என்பது போன்ற சந்தேகங்கள் எமக்கு எழுவது உண்மைதான். எனினும் ஏழைகளின் அவ்வாறான எழுச்சி மட்டுமே அவர்களது எதிர்காலத்தைச் சுபிட்சமாக்கும் என்ற நம்பிக்கையோடும், ஏற்றத்தாழ்வுள்ள இந்தச் சமூக அமைப்பு மாற வேண்டும் என்ற வேட்கையோடும் நீர்வை இக்கதையைச் சொல்கிறார்.

இக்காலத்தில் நிலவிய கிராமிய வாழ்க்கை முறையில் ஏழைகளும், சாதியின் பெயரால் அடக்கப்பட்டவர்களும் படும் அவலங்களையும் சத்திய உணர்வுடன் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.

மேற் கூறிய ஊர்வலம் என்ற சிறுகதை, அதை அடுத்துவரும் “மேடும் பள்ளமும்’ என்ற கதை இரண்டிலும் அடக்கி ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளிகள், “நீதி செய்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள்வதாக கதைகள் முடிகிறது.

இத்தகைய கருவை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் கூட பிரச்சார வாடை தலைது¡க்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன?

கல்கத்தாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்பிய நீர்வை நேர் வழியில் வேலை தேடி அது கிடைக்காது விரக்தியுற்று, தனது ஊரில் தோட்டத் தொழில் ஈடுபட்டதுடன். முழு நேரக் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியனாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் அவற்றில் பிரச்சாரத்தொனி இல்லாதிருப்பதற்குக் காரணம் மற்றவர் துயர் கண்டு பொறுக்க முடியாத அவரது இளகிய மனமும், மென்மையான சுபாவமும், ஆழ்ந்த கலை உணர்வும், கலை இரசனையும்தான். உலக இலக்கியங்களுடான பரிச்சியம் அக்காலத்திலேயே அவருக்குக் கிட்டியதும் இன்னுமொரு காரணம் எனத் துணிந்து கூறலாம்.

இத்தொகுப்பிலுள்ள இன்னுமொரு சிறப்பம்சமாக குறிப்பிடக்கூடியது அவர் சிறுகதைகளை எடுத்துச் சொல்லிய விதங்களாகும். பெரும்பாலான கதைகள் யதார்த்த ரீதியாகச் சொல்லப்பட்டிருந்த போதும், அவர் பல்வேறு விதமான மாறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தி ஏனைய கதைகளைச் சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வித்தியாசமாகவும் புதுமையாகவும் படைக்க வேண்டும் வேட்கை அவரிடம் இளவயதிலேயே இருந்தமையைக் காணக் கூடியதாக இருக்கிறது.

முக்கியமாகச் சொல்லக்கூடியது நனவோடை உத்தியாகும். நனவோடை என்றால் என்ன?

க்ரியாவின் அகராதி “குறிப்பிட்ட நேரத்தில் மனதில் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், தொடர்ச்சியாக எழுதுதல்” என நனவோடைக்கு கருத்துச் சொல்கிறது. “தவிப்பு” “மின்னல்” போன்ற கதைகளில் இவ் உத்தியை அழகாகக் கையாண்டு, எமது உள்ளத்தில் சில உணர்வுகளைப் பற்ற வைத்து விடுகிறார்.
தவிப்பு என்ற சிறுகதை குழந்தைக்காக ஏங்கும் ஒரு மலட்டுப் பெண் பற்றியது.

“சிறுகதை என்பது கதை சொல்வது அல்ல, சிறுகதையில் எந்த ஒரு கதையும் இருக்க வேண்டியது அவசியமுல்ல. ஒரு கண நேரத்தில் எழும் உணர்வுகளே ஒரு சிறந்த கதையாகிவிடும்” என இப்பொழுது சொல்கிறார்கள். நீர்வை அன்றே எழுதிய தவிப்பு என்ற சிறுகதையை அவ்வாறே எழுதியுள்ளார். தவிப்பில் எந்த ஒரு கதையும் கிடையாது. குழந்தைக்காக ஏங்கும், குழந்தைகளை கனவுகளிலும் கற்பனைகளிலும் கண்டு மகிழ்வுறும் பெண்ணின் உணர்வை நனவோடை உத்தியில் அற்புதமாக சொல்கிறார். மறந்து விட முடியாத கதை.

“அம்மா” பாசத்தின் வடிவமான இந்த ஒரு சொல்தான் அக்கதையின் ஆரம்பம்.

“அவளது உள்ளத்திலே உணர்ச்சியைக் கிளறிவிட்டது குரல். அவளது உடலிலுள்ள நரம்புகள் தசைக்கோளம் எலும்பு எல்லாம் உருகிப் பாலாகச் சுரந்து முட்டிமோதிப் பெருகுவதான உணர்வு. மதர்த்த மார்புக் கூடுகள் தினவெடுத்து வலித்தன.”. இவ்வாறு குழந்தைக்காக ஏங்கும் அவளது உணர்வுகளை தன் வலிய எழுத்தாண்மையால் எம்மில் கோலமிடச் செய்கிறார்.

“வானவில்’ இலும் கதையில்லாத இன்னுமொரு சிறுகதையாகும். இது காதல் உணர்வு பற்றியது. நிஐமும் கற்பனையும் கலந்தது போன்றதொரு மயக்கநடையில், அதே நேரம் காதலின் மென்மையும் குறும்பும் கலந்துவர உயிர்ப்போடு சொல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் தம்மையுமும் அப்பாத்திரங்களில் இனங்கண்டு, இணைத்து ஆழ்ந்து நயக்கக்கூடியது. இதிலும் நனவோடை உத்தியை அற்புதமாக்க கையாள்கிறார்.

இயலாத கணவனுக்கு இரண்டாந்தாரமாக மனைவியாக்கப்பட்ட அழகிய இளம் பெண்ணின் உணர்வுகளை பாசமின்றி, அனுதாபத்துடன் சொல்வது “மின்னல்” என்ற சிறுகதை. ஆறு பெண்களுக்கு மூத்தவளாகப் பிறந்தவள் அவள். வறுமையும் வயிற்றுப் பசியும் அவளுடன் கூடப்பிறந்தவை.

“நல்ல சிவப்பி. புதருக்கு மத்தியில் தாவிப் படரும் கொடியைப்போல வளர்ந்தாள். யெளவனத்திள பூரண களை அளுடைய வேப்பிலைக் கண்களிலும் இதழ்களிலும் பொங்கித் தவித்துக் கொண்டிருந்தது.”

பெண்களின் கண்களுக்கு எவற்றையெல்லாமோ உவமை கூறியுள்ளார்கள். ஆனால் வேப்பிலையோடு பொருத்திப் பார்த்தது புதுமையாகவும் நயமமிக்கதாகவும் இருக்கிறது. அழகான கிராமியச் சூழலுடன் அந்நியப்படாத வர்ணனை.

எழிலின் நிறைவும் கொல்லும் வறுமையின் கோரமும் அவளை இரண்டாம் தாரமாக்கியது. கணவன் பணவலிமை கொண்டவன். ஆனால் போதைத் தடாடத்தில் நீந்தி ஆண்மைச் சக்தியை இழந்தவன்.

பணம் மட்டுமா வாழ்வு?

அவளின் உணர்வுகளுக்கு வடிகால் தேவைதானே!

“தொட்டுப் பார்க்க முடியாத மானசீகமாக உணரக் கூடிய ஒன்றிற்குத் தங்கம் அடிமையாகிவிட்டாள்.”

நயமான சொற்களில் பாச வாடையின்றி, பெண்ணின் உணர்வு பற்றிய இத் தீவிர கருத்தை அன்றே அவரால் முன்மொழிய முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அவள் வாழ்வில் இன்னொருவன் குறுக்கிடுகிறான். பட்டை தீட்டாத வெறுங்கல்லாகக் கிடந்த அவளது உணர்வுகள் மெருகூட்டப்படுகின்றன. “தனது வாழ்க்கையில் அறிந்திராத, ஒருபோதும் அனுபவித்திராத புதிய உலகிற்குச் சென்று ஜீவாமிதர்தத்தை பருகிக் கொண்டிருக்கிறாளா?’

இக்கதையின் முடிவில் நீர்வை சற்று சறுக்கிவிடுகிறாரா? சொல்ல முடியவில்லை.

ஆனால் அதுதானே யதார்த்தம். பணத்தால் அடிமை கொள்ளப்பட்ட அப் பெண்ணின் வேட்கை எமது சமூகக் கட்டமைப்பின் இறுக்கமான பண்பாட்டு வேலிகளுக்குள் அடங்கி விடுகிறது. அடங்கி ஏக்கப் பெரு மூச்சு விடுகிறாளா என்றால் அதுவும் இல்லை. தனக்குள் தானே அமைதி காண்கிறாள். கணவனின் பாதத்தைத் தொட்டு வணங்குகிறாள். யாரும் நிர்ப்பந்திக்வில்லை. தானாக மனமுவந்து வணங்குகிறாள்.

எமது பண்பாட்டு வேலிகளுக்குள் பெண்களுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல சுதந்திரச் சிந்தனைகள் கூடத் துளிர் விடாதபடி மழுங்கடிக்கப் பட்டுள்ளனவே என்பது சொல்லாமல் சொல்லப்பட ஏக்கம் எம்மைப் பற்றிக்கொள்கிறது.

பின்னோக்கிய பார்வை உத்தியில் ஒரு பைத்தியகாரப் பெண்ணின் வாழ்வைச் “”சிருஷ்டி” யில் படைத்திருக்கிறார். வயிற்றை நிரப்புவதற்காக உடலை வித்த பெண்ணின் நிலையைக் கண்டிக்காது, ஏளனம் செய்யாது, அவள் அதற்குள் தள்ளப்பட்டதை அநுதாபத்துடன் நோக்கும் கதை. படைத்தவனையே கேள்விக்குள்ளாக்கும் கதை. பெண்விடுதலையில் இவருக்கு உள்ள அக்கறையை இக்கதையில் மட்டுமின்றி இன்னும் பல்வேறு பல கதைகளிலும் காண்கிறோம். எமது தமிழ்ச் சமூகத்தால் அன்றைய காலப்பகுதியில் ஜீரணக்க முடியாத, பெண் உரிமை பற்றிய முன்னோடிக் கருத்துக்கள் அவரில் அன்றே தீர் க்கமாக வேரோடியிருப்பதை இப்படைப்புகள் ஊடாகக் காண்கிறோம்.

சிருஸ்டி ஒரு குறுங்கதை அல்லது இன்றைய வழக்கில் மினிக்கதை எனலாம். இந்த வகையில் காசி னந்தனின் மாத்திரக் கதைகள், சிரித்திரன் சுந்தா¢ன் கதைத்தேன் ஆகியவற்றுக்கு முன்னோடியாக இக் கதையைக் கொள்ளலாம்.
இன்னுமொரு நனவோடைக் கதையான “”நிறைவு” குக் குக் குறு என்று கூவும் ஒரு குருவியின் இனிய கதை. இக் குரலைத் தினமும் கேட்கும் இயற்கையை இரசிக்கும் ஒரு படைப்பாளியின் அருட்டுணர்வினால் எழுதப்பட்டது. மிகவும் வித்தியாசமான கதை. ழ்ந்து படிக்க வேண்டியது. ஆயினும் கதையின் இறுதிப் பகுதி கலை கலைக்காகவா கலை மனிதனுக்காகவா என்ற சர்ச்சைக்கு விடை தேடுவது போல அமைந்து விடுகிறது. இது அக்காலகட்டத்தின் Hot Topic ஆக இருந்தபோதும் இன்று சுவார்ஸமான அம்சமாகத் தெரியவில்லை.

இவ்வாறு பல்வேறு உத்திகளில் அவர் தனது சிறுகதைகளைச் கூறியிருப்பதற்கு அவரிடமிருந்த திருப்தியுறாத கலை வேட்கை¨யும், பரந்த வாசிப்பும், பட்டறிவுமே காரணமாக இருக்கவேண்டும். கல்கத்தாவில் கல்வி கற்ற காலத்தில் பல்வேறு மொழிப் படைப்புகளையும், ஆர்வத்துடன் அவர் படித்திருக்க கூடிய சூழல் கிட்டியிருக்கும் என எண்ணுகிறேன். அதன் காரணமாகவே அந்த இளவயதிலேயே அவரால் பல்வேறு பரீட்சார்த்த வடிவங்களை சிறப்புடன் கையாள முடித்திருக்கிறது.

“அசை”, “பனஞ்சோலை”, “வானவில்” ஆகியவை காதல் உணர்வலைகளை வெளிப்படுத்தும் கதைகள். அன்று முப்பது வயது இளைஞனாக இருந்த அவரிடம் இயல்பாக எழுந்திருக்கக் கூடிய உணர்வுகள் காரணமாக இக்கதைகளை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். இம்மூன்று சிறுகதைகளையும் நான் கூறிய ஒழுங்கு முறையில் வாசித்தால் ஒரு அற்புதமாக காதற் குறுநாவலை வாசித்த நிறைவு ஏற்படுகிறது.

பனஞ்சோலை துடிப்புமிக்க காதலையும் முறிந்த காதலின் சோகத்தையும் ஒரு இனிய கவிதைபோல் சொல்கின்றது. மண்விளையாடத் தொடங்கிய காலம் முதல் அரும்பிய உறவு பனஞ்சோலைகளுக்கிடையே காதலாக மலர்ந்து மணம் வீசுகிறது.

அவளுடைய காதல் எத்தகையது?
“வெள்ளி நிலவின் குளமை, கண்சிமிட்டும் நட்சத்திரங்களின் ஒளிக்கதிர்கள், வானவில்லின் வர்ணஜாலம், பனித்துளிகள் பட்டு மலர்ந்த றோஜா இதழின் மெதுமை, எல்லாம் அவளுடைய காதலிலே குழைந்து அரும்பி இன்பத்தைக் கொடுத்தன” என நீர்வை ஈர்ப்போடு வர்ணிக்கிறார்.

இதற்கிடையில் அவன் 4 வருடப் படிப்பிற்காக வெளிநாடு செல்ல நேர்கிறது. அதற்கு முதல் நாள் இரவு நிலவொளியில் பனங்கூடலில் அவர்கள் சந்தித்துப் பேசுவது ஒரு அற்புதமான ஓவியம்.

இடையில் அனர்த்தம் அவளுக்கு. இன்னொருவனுடன் திருமணமாகிறது. 4 நாட்கள் கடக்கின்றன.

“நான்கு நாட்கள். அப்பப்பா! அது நான்கு யுகங்கள். நரகவேதனை”
இவ்வளவுதான் அவர் சொல்லியது. நான்கு வசனங்கள். ஒன்று முதல் மூன்று சொற்களை மட்டும் கொண்ட மிகச் சுருக்கமான வசனங்கள் இதற்குள்ளேயே அப் பெண்ணின் துயரத்தை, ஏக்கத்தை, வேதனையை, கையறு நிலையை வெளிப்படுத்தும் மொழிவளம் அவரில் செறிந்து கிடக்கிறது. அவரது படைப்புகளில் பல வசனங்கள் இரண்டு அல்லது மூன்று சொற்களையே கொண்டிருந்தாலும் பொருள் பொதிந்தவையாகவும் எமது சிந்தனையைத் து¡ண்டுபவையாகவும் அமைந்து விடுவதுண்டு.

நீர்வை பொன்னையனின் அன்பு விசாலமானது. மனிதர்களைக் கடந்து மரம், செடி, கொடி, மிருகம் என எல்லையற்றுப் பரவுவது. இதனால்தான் வாழை மரங்கள், புகையிலைச் செடிகள், மாமரங்கள், பனஞ்சோலை என இயற்கையோடு அவரது நேசம் விரிவதை அவரது படைப்புகளில் காணக் கூடியதாக இருக்கிறது.

“பாசம்” என்ற கதையில் சின்னையாவிற்கும் அவன் வளர்க்கும் ஆடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் அற்புதமாகச் சித்தரிக்கப்படுகின்றது. குடும்ப உறவுக்குள் வருவதைவிட நெருக்கமான பிணைப்பு அவனுக்கும் அந்த வாய்பேசாத உயிர்களுக்கும் இடையே அரும்புகிறது. வளர்கிறது. இறுதியில் அவன் கீழே வீழ்ந்து கண்கள் பிதுங்கி மேலே மேலே போய் மண்டை ஓட்டுக்குள் சொருகும்போது கூட “கறுப்பி’ என்றே அவன் உதடுகள் பிரியாமல் முனங்குகின்றன. அந்த ஆடுகளும் கூட “ம்மேய்! ம்மேய்! என்ற ஓலத்தில் குழைந்தன. நெருங்கிய பாசத்தின் பரிமளிப்பு அது.

“சம்பத்து’ சிறுகதையில் மரவெள்ளிச் செடிகள் இவ்வாறு அவரது மனத்தைக் கெளவி இழுக்கின்றன. “முழுகிவிட்டு வரும் பருவப் பெண்ணின் கூந்தலில் இருந்து நீர் சொட்டுவது போல் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்ற மரவெள்ளி இலைகளிலிருந்து மழைத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன.”
புகையிலைச் செடிகளை இவ்வாறு வர்ணிக்கிறார். “கருமுகில்களாக அடர்ந்து வளர்ந்த புகையிலைக் கன்றுகள்., முறுகித் தடித்து வாளிப்பான ஒருவள் படுக்கக் கூடிய நீண்ட பெரிய இலைகள். கடல் அலைகள் போல காற்று வீசும் போது அசைந்து கொடுகின்றன.”

தோட்டங்களோடும் மரங்களோடும் நித்தம் உறவாடும் சூழலோடு இசைந்த மென்மனம் கொண்ட ஒரு கலைஞனால் தான் இவ்வாறு சித்தரிக்க முடியும்.
பட்டப் படிப்போடு நாடு திரும்பியும், தேடிய வழியில் வேலை கிடைக்காதால் தோட்டத் தொழிலில் ஈடுபட்ட அவருக்கு அத்தகைய உணர்வுகள் தோன்றியதில் வியப்பில்லை. இதனாற் போலும் வேலை கிடைக்காத இளைஞனின் ஏக்கம் “அசை’ என்ற கதையில் உணர்வின் கனவாக மலர்கிறது. அந்தக் கதையில் ஒரு காட்சி. அவனுக்கு வேலை கிடைத்துப் பயணம் புறப்படும் நேரம். கிராமத்து மக்களின் மன உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் முளிவியளம் போன்ற சடங்கு சம்பிரதாயங்களையும் மிக அழகாகக் காட்டுகிறார்.

அப்பா கோயிலுகுப் போட்டு வருகிறார். கையில் வெள்ளித் தாம்பாளம். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூசைக்கட்டு எல்லாம் அதற்குள். திருநீறு பூசுவது தொடர்கிறது. அம்மா முன் செல்ல இவன் பின் தொடர்கிறான். வாசலில் முழுவியளமாகப் பசு மாடு. அந்த மக்களின் நம்பிக்கைகளை அப்படியே அழகாகப் பதிவு செய்கிறார். முற்போக்குக்காரரான இவர் தனது கடவுள் மறுப்புக் கொள்கைகளை வலிந்து பிரச்சாரப்படுத்த முயலவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு வேளை சோற்றுக்காக ஏங்கித் தவிக்கும், சாதியால் ஒடுக்கப்பட்ட சிறுவனின் சோகக் கதை “”சோறு” ஆக வெளிப்படுகிறது.
“புரிய வில்லை’ என்ற கதை மிக அற்புதமானது. இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையாகச் சொல்லலாம். பாடசாலை செல்லும் இரு குழந்தைகளுக்கிடையேயான நட்பு மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஊடல், கூடல், அவளுக்காக அவன் ஆசிரியரிடம் அடிவாங்குவது, மாந்தோப்பு விளையாட்டு, எச்சில் மாங்காயைப் பகிர்ந்து உண்ணல் என அற்புதமாக விரிகிறது. ஆனால் கதையின் இறுதியில் சொல்லப்படும் ஒரு சிறுசம்பவம் எம் உள்ளத்தை ரணமாக்கி குருதி சித்த வைக்கிறது.

“அவள் வழியிலுள்ள கடைக்குள் சென்று தண்ணீர் குடித்துவிட்டு அவனுக்கும் கொண்டு வருகிறாள். அவன் புத்தகங்களைக் கீழே வைத்தான். தாமாகவே அவனது இரு கைகளும் வாயண்டை கோலிப் பிடிக்கின்றன. அவள் தண்ணீரை ஊற்றுகிறாள். அவன் கையில் ஏந்திக் குடிக்கிறான்.’

இந்த காட்சியை வாசித்ததும் எனது இருதயம் ஒரு கணம் துடிக்க மறந்து உறைந்து போயிற்று. இது அவர்கள் வழமையாகச் செய்வது. ஏன் செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்று அறியாது செய்கிறார்கள். வஞ்சகம் இல்லாத அந்தப் பிஞ்சுகள் சமூகம் வழிகாட்டியதையே செய்கிறார்கள். சாதி என்றால் என்னவென்று பு¡¢யாத அந்த வயதிலேயே அதன் தாக்கம் அவர்களை அறியாமலே அவர்களுக்குள் சமூகத்தால் புகுத்தப்படுகின்ற கொடுமை இங்கு நிகழ்கிறது. என்.கே.ரகுநாதனின் “நிலவிலே பேசுவோம்’ என்று கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது இக்கதை.

நீர்வையின் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த முக்கிய அம்சங்களில் ஒன்று வாசகனைச் சலிக்க வைக்காத கதை ஓட்டமும் நடையின் வேகமும்தான். அவரது எந்தக் கதையை எடுத்தாலும் இறுதிவரை ஒரே மூச்சில் படிக்க முடிகிறது. கதையை சுவார்ஸமாகவும் அலுப்புத் தட்டாமலும் சொல்லும் பாணி அவருக்கு ஆரம்ப காலம் முதல் கை வந்துள்ளது. இதனை இவரது முதற் தொகுதியான மேடும் பள்ளமும் முதல் இறுதியாக வெளியான வேட்கை தொகுதி வரை தொடர்ச்சியாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

எந்த ஒரு படைப்பும் வாசகனை வாசிக்கத் து¡ண்டுவதற்கு கதையின் ஆரம்ப வசனங்கள் வலிமையுடையவனாக இருப்பது அவசியம். இதனை இத்தொகுதில் மாத்திரமின்றி “ண்மைய படைப்புகளிலும் காணலாம். களைகட்டும் வசனங்களுடன் கதையை ரம்பித்து வாசகனை தன்னோடு கூட்டுச் சேர்க்கும் உத்தியை பல கதைகளில் இலாகவமாக கையாண்டுள்ளார்.

“எனக்கு வேலை கிடைத்துவிட்து. நான் அப்படி உரத்துச் சத்தமிட்டிருகக் கூடாது” இது அசை கதையின் அசத்தலான ஆரம்பம்.

“இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஏன் பேசப்போகிறார்கள்.” இப்படி கேள்விக் குறியோடு ரம்பிதது வாசகன் ஆர்வத்தைத் து¡ண்டுகிறார் புரியவில்லை சிறுகதையில்.

“அவள் செத்து விட்டாள்” இது சிருஷ்டியின் ஆரம்பம்.

“அம்மா” என்ற ஒற்றைச் சொல்லுடன் ஆரம்பிக்கிறது தவிப்பு”

குறியீடுகளை இடமறிந்து தெளிவான நோக்கோடு பயன்படுத்துவது படைப்பாளியின் ஆற்றலில் தங்கியுள்ளது. குறியீடுகள் கவிதைகளில் மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. சிறுகதைகளிலும் அவற்றை கலைநயத்தோடும் அறிவு பூர்வமாகவும் பயன்படுத்துவது படைப்பாளியின் ஆற்றலில் தங்கியுள்ளது.

குறியீடுகளின் சரியான பிரயோகம் படைப்பாளி தான் சொல்ல வருபவற்றை மறைமுகமாக வாசகனுக்கு உணர்த்துவதுடன், அப்படைப்புக்கு இலக்கியச் செழுமையையும் கொடுக்கின்றன.

குறியீடுகளை தனது பல சிறுகதைகளில் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். இவற்றில் சில அவரது படைப்புகளின் உயிர்நாதமாகவும் திகழ்கின்றன. பனஞ்சோலையின் ஒற்றைப் பனைமரம் குறிப்பிடத்தக்கது

மீரா பதிப்பகத்தின் வெளியீடாக மேடும் பள்ளமும் இரண்டாவது பதிப்பு வெளி வந்திருக்கிறது. முதற் பதிப்பு மக்கள் பிரசுரலாயத்தினரால் 1960இல் வெளியிடப்பட்டிருந்தது.

மொத்தத்தில் சொல்லப்போனால் இத்தொகுப்பு பழஞ்சோறாக இருந்தபோதும் புளித்துச் சுவைகெடாது, நவரசச் சுவையுடன் இன்றும் வாசகனை கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்டது.


நு¡லாசிரியர்: நீர்வை பொன்னையன்,
முகவரி: 18/6B, Collingwood Place, Wellawatte, Colombo 06.
தொலைபேசி: 94 11 2584317

வெளியீடு: இரத்தினவேலோன், மீரா பதிப்பகம்,
291/6-5/3A,Edward Avenue Colombo 05. Telephone 94 11 2582539
இலங்கை விலை ரூபா 200/=

எம்.கே.முருகானந்தன்.
kathirmuruga@gmail.com

Read Full Post »