Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2009

>படுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழிக்கிறதா?

“இவளால பெருந்தொல்லை! நாளாந்தம் படுக்கையிலை மூத்திரம் பெய்யிறாள். படுக்கை பாயை ஒவ்வொரு நாளும் கழுவி என்ரை நாரி முறிஞ்சு போட்டுது’ என்றாள் அம்மாக்காரி.

இதைக் கேட்டதும் குழந்தையின் முகம் கறுத்தது.

மேசையிலிருந்த பிரஸர் மீற்றரின் பம்மை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த கை தளர்ந்தது.

டென்சனானது போல உடல் இறுகியது.

7 வயது மதிக்கத்தக்க அக் குழந்தையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் எனது மனதை அரித்தன.

மருத்துவர்களுக்கு சாதாரணமாகவும் வீட்டிலுள்ளவர்களுக்கு அரியண்டம் கொடுப்பதாகவும் தென்படக் கூடிய இப்பிரச்சினை குழந்தையின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை இச்சம்பவம் மூலம் உணரக் கூடியதாயிற்று.

தாயினதும் மற்றவர்களின் கண்டிப்புகள், கண்டனங்களாலும் ஏளனப்படுத்தலாலும் இத்தகைய குழந்தைகளின் உள்ளம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதை அவர்கள் உணர்ந்தாலே பிரச்சினையின் தாக்கத்தில் பெரும்பகுதி நீங்கிவிடும் போலத் தோன்றியது.

இது பற்றிய ஆய்வின் முடிவை பிறகு கூறுகிறேன்.


படுக்கையை நனைத்தல் (Bed Wetting) என்பது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். மருத்துவத்தில் இதனை (Nocturnal Enuresis) எனவும் அழைப்பர்.

4 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30 சதவீதமும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதமும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 3 சதவீதமும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு சதவீதமும் இப்பிரச்சினையால் துன்பப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே பாதிக்கப்படுவது அதிகம்.

ஒரே குடும்பத்தில் காணப்படுவது அதிகம்.

குழந்தைகள் முதிர்ச்சியடைவது சற்று காலதாமதமாதல் இது ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, கால ஓட்டத்தில் தானாகவே மறைந்துவிடும். மாறாக சிறுநீரக தொற்றுநோய்களாலும் ஏற்படலாம். அரிதாக கட்டிகள், பிறவியிலே உறுப்புகளில் இருந்த அசாதாரண நிலைகள், நீரிழிவு போன்றவையும் காரணமாவதுண்டு.

பொதுவாக 6 வயதாகும் வரையில் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தானாகவே குணமாகிவிடும்.

அதன் பின் பலவிதமான முயற்சிகள் மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு வருகின்றன. படுக்கைக்குப் போகு முன் குழந்தையை சிறுநீர் கழிக்கச் செய்தல், படுக்கப் போவதற்கு முன்னதான 2 – 3 மணி நேரத்திற்குள் நீராகாரம் அருந்துவதைக் கட்டுப்படுத்தல், சிறுநீர் கழித்த, கழியாத தினங்கள் பற்றிய அட்டவணையைப் பேணுவது, படுக்கையை நனைக்காத நாட்களுக்கு பரிசளித்தல் போன்றவை சில.

“உனது தவறினால் இது நிகழவில்லை. வளர வளர இது சரியாகிவிடும்’ என குழந்தைக்கு அடிக்கடி நம்பிக்கையூட்டுவதையும் பல மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வானது தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி, கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது மட்டுமே போதுமானது என்கிறது. இது பற்றிய விபரம் Journal Watch Pediatrics and Adolescent Medicine May 20, 2009 இதழில் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 4-5 வயதான வாரத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகளில் படுக்கையை நனைக்கும் 570 பிள்ளைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது.

குழந்தைகள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டனர். முன்பு கூறியவாறு தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது, அதேபோல எழுப்பிச் செல்லும் போது குழந்தை உண்மையில் முழித்துவிட்டதா என்பதை அறிய முன்பே சொல்லி வைத்த குறிச்சொல்லை (Password) கேட்பது, படுக்கை நனைத்த, நனைக்காத தினங்கள் பற்றிய அட்டவணையை பேணிப் பரிசளிப்பது ஆகியன அப்பிரிவுகளாகும்.

ஆறு மாதங்களின் பின்பு எதுவுமே கேட்காது சிறுநீர் கழித்த குழந்தைகள் மற்றக் குழந்தைகளை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது அவதானிக்கப்பட்டது.

இந்த ஆய்விலிருந்து கற்றுக்கொள்ளக் கூடியது என்ன?

படுக்கையை நனைப்பதற்காக பிள்ளைகளைத் தண்டிக்காது, நனைக்காதிருப்பதற்காக பரிசளிக்காது, குறிச்சொல்லைக் கேட்டு அவர்களைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்காது இயல்பாக நடத்தினால் விரைவில் குணம் கிடைக்கும் என்பது தானே.

ஆம். இது இயல்பான பிரச்சினை. அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை. அவர்கள் முதிர்ச்சியடையப் பிந்துவதால் ஏற்படுகிறது. தானாகவே மாறும். அவர்களைத் தண்டிக்காதீர்கள். ஆதரவோடு நடத்துங்கள். ஆனால், அன்போடு நடத்துவதாக எண்ணி தாழ்வு மனப்பான்மையையும் குற்ற உணர்வையும் தூண்டாதீர்கள்.

ஆனால், இவற்றுக்கு மேலாக Bed – wetting alarm போன்ற உபகரணங்களும் மற்றும் மருந்து வகைகளும் உண்டு. அவற்றின் பயன்பாடும் பலன்களும் மட்டுப்படுத்தப்பட்டதே.

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல் 22.06.2009

Read Full Post »

>

இடதுகைச் பெரு விரலை மறுகையால் பொத்திக் கொண்டு வந்தாள் ரதி என மோகிக்க வைக்கும் அந்த இளம் பெண். வயது பதினெட்டு இருக்கும். ஆனால் அவளுக்கு ஏற்பட்டிருப்பது மோகத்தோடு சற்றும் சம்பந்தப்படாத நோய்.

கைவிரலில் கட்டிபோல ஒரு சிறு தோல் வளர்ச்சி. தட்டுப்பட்டால் சற்று வலிக்கிறதாம். பார்பதற்கு அவளைப் போல அழகானதாக அந்த வீக்கம் இருக்கவில்லை.

சொறிப் பிடித்த நாயின் தோல் போல சொரசொரப்பான தோல்த் தடிப்பாக அது அரை சென்ரிமீட்டர் அளவில் மட்டுமே இருந்தது.

“இது ஏதாவது ஆபத்தான நோயா? புற்றுநோயாக இருக்குமா அல்லது வேறு ஏதாவது கெட்ட நோயா” என்ற கவலை அவளுக்கு. தனது பேரழகைக் குலைக்க வந்த ‘கரும் புள்ளி’ என்ற சீற்றம் வேறு அவளுக்கு.

இதனை வைரஸ் வோர்ட் (Virus Wart) என அழைப்பார்கள். காரணம் இது ஒரு வைரஸ் நோயாகும். மனித பப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) (HPV) என்ற வைரஸ் கிருமியால் எற்படுகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படுவது என்பதால் ஒரு தொற்று நோயும் கூட. நெருக்கமாகப் பிழங்குவதாலும், பொதுவான துவாய் பயன்படுத்துவதாலும் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவலாம்.

இது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். ஆயினும் அந்தப் பெண்ணுக்கு வந்ததுபோல கைகளிலியே அதிகம் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

பெரும்பாலானோரில் முக்கியமாகக் குழந்தைகளில் எந்தவித சிகிச்சையும் இன்றி தானாகவே ஆறு மாத காலத்தினுள் மறைந்துவிடும். சிலருக்கு ஓரிரு வருடங்கள் கூடச் செல்லலாம்.

பயப்படுவதற்கு இந்நோயில் எதுவுமில்லை. தட்டுப்பட்டால் வலிக்கலாம், உரசினால் இரத்தம் கசியலாம், இவற்றைத் தவிர வேறு ஆபத்துக்கள் இல்லை. ஆனால் அசிங்கமாக இருக்கிறதே என மனத்திற்குள் மறுகி தாங்களே கவலைப்படுவதுதான் மிகப் பெரிய துன்பமாகும்.

தானாக மறையாவிட்டால் சாதாரண பூச்சு மருந்துகள் அதனைக் கரைக்க உதவும். உதாரணமாக சலிசிலிக் அமிலக் களிம்பு (Salicylic Ointment) உதவும். பல வாரங்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். குளித்த பின் அல்லது நோயுள்ள இடத்தைக் கழுவி ஈரலிப்பும் மெதுமையும் இருக்கும்போது மருந்தைப் பூசினால் கூடுதலாக உட்புறமாக ஊறி அதிகம் வேலை செய்யும். டுவோபில்ம் (Duofilm) எனும் திரவ மருந்தும் உபயோகிக்கக் கூடியது. ஆயினும் இவற்றை முகம், பாலுறுப்பு போன்ற மென்மையான இடங்களில் உபயோகிக்கக் கூடாது. நீரிழிவு உள்ளவர்களும் அவதானத்துடனேயே உபயோகிக்க வேண்டும். எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றிப் பாவிக்க வேண்டாம்.

வைத்தியர்கள் திரவ நைதரசனால் எரிப்பது, மின்சாரத்தால் (Cautery) எரிப்பது போன்ற சிகிச்சை முறைகளையும் கையாளக் கூடும்.

விறைப்பதற்கு ஊசி மருந்திட்டு வெட்டியும் எடுப்பார்கள். ஆயினும் இச் சிகிச்சைகளின் பின்னரும் அவை சிலவேளைகளில் மீளத் தோன்றக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.

உடலில் ஏற்படுவதுபோலவே சிலருக்கு இத்தகைய நோய் பாதங்களிலும் வரலாம். பாதத்தில் தோன்றுவதை (Planter Wart) என்று சொல்லுவார்கள். இதுவும் பெரும்பாலும் இளவயதினரிடையேதான் தோன்றுகிறது. தோலின் மேற்பகுதியில் ஆரம்பிக்கும் இது நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தால் உட்தோல் வரை பரவி வலியையும் உண்டுபண்ணலாம். காலில் ஏற்படும் இத்தகைய வீக்கத்தின் மத்தியில் சற்றுக் கருமையான பள்ளம் போன்ற புள்ளி காணப்படுவது இதனைச் சுலபமாக இனங்காண வைத்தியர்களுக்கு உதவுகிறது.

உடலில் ஏற்படும் அத்தகைய வோர்ட்சை ஒத்த நோய் பால் உறுப்புகளிலும் ஏற்படுவதுண்டு. ஆண், பெண் ஆகிய இருபாலாரிலும் இது வரலாம். இதனை பாலுறுப்பு வோர்ட்ஸ் (Genital Warts) என்பர். இது ஒரு பாலியல் தொற்று நோய். அதாவது ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற நெறியை மீறுவதால் என்று சொல்லலாம். இன்று பாதுகாப்பற்ற பாலுறவு (Unprotected Sex) என்ற சொற்தொடரை உபயோகிக்கிறார்கள். நோயுள்ள ஒருவருடன் உடலுறவு வைப்பதால் இது தொற்றுகிறது. கருத்தடை ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவு கொண்டால் தொற்ற மாட்டாது.

ஆண் உறுப்பில் சிறுதோற் தடிப்பு அல்லது கட்டிபோலவே இதுவும் இருக்கும். பெண்களின் உறுப்பின் தோல் மடிப்புகளில் இது மறைந்திருக்கக் கூடும் என்பதால் நோயிருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாது. சில பெண்களுக்கு சற்றுக் கசிவும் அரிப்பும் இருக்கக் கூடும்.

அரிப்பு, கசிவு, சல எரிவு போன்ற எந்ந அறிகுறி இருந்தாலும் வைத்திய ஆலோசனை பெறுங்கள். வைத்தியரிடம் சொல்ல வெட்கப்பட்டு காரமான சோப்புகளால் கழுவவோ, கண்ட மருந்துகளைப் பூசவோ வேண்டாம்.

பாலுறுப்பின் சருமம் மிக மிருதுவானது என்பதால் புண்படக் கூடும். வைத்தியரின் ஆலோசனைபடியே சிகிச்சை செய்ய வேண்டும்.

பாலுறுப்பில் ஏற்படும் அரிப்பு, கசிவு, புண் யாவும் பாலியல் நோயால்தான் ஏற்படும் என்றில்லை, நீரிழிவு, அலர்ஜி, தோல் நோய்கள் போன்றவற்றாலும் ஏற்படலாம். எனவே தயக்கத்தை விட்டு வைத்திய ஆலோசனை பெறுவதுதான் உசிதமானது.

மோகத்தால் வந்தாலும் சரி, காலில் வந்தாலும் சரி, கையில் வந்தாலும் சரி இத்தகைய வோரட்ஸ் எல்லாமே மனித பப்பிலோமா வைரசால் தான் ஏற்படுகின்றன. வாய்க்குள்ளும், மலவாயிலிலும் கூட வருவதுண்டு.

ஆயினும் அவை எல்லமே ஒரே வகை வைரஸ் அல்ல. ஐம்பதுக்கு மேற்பட்ட உப இனங்கள் மனித பப்பிலோமா வைரசில் இனங்காணப்பட்டுள்ளன.

இவற்றில் சில உடலின் வெவ்வேறு பாகங்களில் மாறுபாடான விதத்தில் நோய்களை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணுக்கும் தவறான மோகத்தால் வரும் பாலியல் நோய்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Reblog this post [with Zemanta]

Read Full Post »

>டெங்குக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்றெல்லாம் கலங்கிக் கொண்டிருந்த ஒருவருக்கு இப்பொழுது தனக்கு வந்தது பன்றிக் காச்சலாக (Swine Fever) இருக்குமா என்ற அச்சம் ஏற்படவே மருத்துவரிடம் ஓடிச் சென்றார்.

‘இதுவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆனால் பன்றிக் காய்ச்சலாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு’ என்றார் மருத்துவர்.

ஆயினும் இந்தியா உட்பட 70 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கையிலும் பரவக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

கடந்த நூற்றாண்டுகளில் உலகை ஆட்டிப்படைத்த பிளேக், பெரியம்மை போன்று உலகளாவப் பரவக் கூடிய ஆபத்துள்ளதாகப் பயம் எழுந்துள்ளது. இதற்கான தடுப்பு ஊசிகள் எதுவும் தற்போது கிடையாது. தடுப்பு ஊசி தயாரிப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பொழுது பரவும் பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ் கிருமிகளாலேயே ஏற்படுகின்றன. வைரஸ் காய்ச்சல்களில் பலவகை உண்டு.

ஆயினும் அவை பெரும்பாலும் இரண்டு வகைப்படும்.

தடிமன், மூக்கால் வடிவது, தும்மல், இருமல் சுவாசத் தொகுதி நோயாக வெளிப்படுவது ஒரு வகை. சாதாரண தடிமன் காய்ச்சல், இன்புளுவன்சா போன்றவை இந்த வகையானவை. இதனை இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI) எனப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

டெங்கு, சிக்கன் குனியா போன்றவை இரண்டாவது வகை. இதில் சுவாசத் தொகுதி சார்ந்த அறிகுறிகள் பெருமளவு இருக்காது. உடலுழைவு, மூட்டு வலிகள் போன்றவையே மேலோங்கி இருக்கும்.

பன்றிக் காச்சலின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சலுடன், தடிமன், மூக்கு அரிப்பு, மூக்கால் ஓடுதல், தலைப்பாரம், தொண்டை வலி, இவற்றுடன் இருமலும் பின் தொடரும். உடலுழைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

இவை எல்லாம் எனக்கும் இருக்கு என்கிறீர்களா?

இத்தகைய இன்புளுவன்சா வகைக் காய்ச்சல்தான் இப்பொழுது பெருமளவு நோயாளரைப் பீடித்து வருகிறது. இதனால் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்ற பயமும் ஏற்படுகிறது. ஆனால் எல்லா இன்புளுவன்சா வகைக் காய்ச்சலுக்கும் இவை போன்றுதான் அறிகுறிகள் இருக்கும்.

‘ஏனைய இன்புளுவன்சா வகைக் காய்ச்சலிருந்து இதனை வேறுபடுத்தி அறிவது கடினம்’ என அமெரிக்க தொற்று நோய் மைய முகாமையாளரான ரிச்சாட் பெஸர் (Richard Besser) கூறியதை நினைவு கூறலாம்.

அப்படியானால் இரத்தப் பரிசோதனை செய்து கண்டறியலாமா என்று கேட்டால் அதுவும் உடனடியாக முடியாது.

உறுதியான முடிவு கிடைப்பதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். அதற்கான குறிப்பான (Specific) பரிசோதனைகளை பரவலாகச் செய்ய முடியாது. தற்பொழுது இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (MRI) மட்டுமே செய்ய முடியும்.

அப்படியானானால் இது பன்றிக் காய்ச்சல்தான் என்று ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவே முடியாதா?

உறுதியாகக் கண்டு பிடிக்க முடியாது. சந்தேகப்படத்தான் முடியும்.

எவ்வாறு சந்தேகப்படுவது?

1-7 நாட்களுக்குள் பன்றிக் காய்ச்சல் இருந்த ஒருவருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தால் கட்டாயம் சந்தேகப்பட வேண்டும். ஏனெனில் இந் நோய்க்கான நோயரும்பு காலம் (Incubation Period) 1-7 நாட்கள் ஆகும்.

இலங்கையில் இதுவரை ஒருவருக்கும் அந்நோய் வந்ததற்கான ஆதாரம் கிடையாது. ஒருசிலருக்கு இந்நோயாக இருக்குமா எனப் பிரித்து வைத்து பரிசோதித்த போதும் அவர்கள் எவருக்குமே இந்நோய் இருப்பது நிருபணமாகவில்லை. எனவே இங்கு தொற்றுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகும்.

மேற் கூறிய அறிகுறிகள் உள்ள ஒருவர் சென்ற ஒரு வார காலத்திற்குள் இந்நோயுள்ள நாடுகளுக்கு (உதா:- மெக்சிகோ, அமெரிக்கா, கனடா) பிரயாணம் செய்து வந்திருந்தாலும் பன்றிக் காய்ச்சலா எனச் சந்தேகப்பட வேண்டும்.

உதாரணமாக அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய தாய், 3 வயது சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இதுவரை நூறு பேர் வரையளவே மட்டுமே இந்நோயால் மரணித்துள்ளார்கள். டெங்கு நோயால் மட்டுமே இந்தக் குட்டி நாடான இலங்கையில் கடந்த 6 மாதங்களுக்குள் 150க்கு மேற்பட்டவர்கள் மரணித்துள்ளார்கள்.

எனவே இந்நோய் பற்றி ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

காரணம் இருக்கிறது!
இது ஒரு புது வைரஸ். இதனை Influenza A (H1N1) எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இதை ஒத்த ஒரு வைரஸ் காய்ச்சல் 1957க்கு முன்பு தான் உலகில் இருந்தது. எனவே இந்நோய்க்கு எதிரான நோயெதிர்புச் சக்தி வயதான ஒருசிலரைத் தவிர ஏனைய ஒருவருக்கும் உலகில் இப்போது கிடையாது. அதற்கான தடுப்பூசியும் கிடையாது. எனவேதான் இது பரவினால் மிக ஆபத்து என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நோய் அதிகரித்த நிலையில் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம், தலைச் சுற்று, மயக்கம் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தோன்றும். அவை மரணத்திற்கும் இட்டுச் செல்லும். எனவேதான்; இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் கொள்ளை நோயாகப் பரவிக் கோடிக்கணக்கான மக்களை கொன்றுவிடக் கூடிய சாத்தியம் உண்டு.

எனவேதான் அரசுகளும் மருத்துவத் துறை சாரந்தோரும் இது பற்றி மிக விழிப்புடன் இருக்கிறார்கள். இலங்கை அரசும் அவ்வாறே தயார் நிலையில் உள்ளது.

இதனைத் தடுக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?

மற்றவர்களுக்கு வந்த தடிமன் காய்ச்சல் போன்ற நோய்கள் உங்களுக்கு தொற்றாது பாதுகாக்க வேண்டும்.

அதேபோல உங்களுக்கு வந்தால் மற்றவர்களுக்கு பரவ விடக் கூடாது.

இவை முக்கியமாக இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் மூலமே மற்றவர்களுக்கு பரவும். எனவே தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள்.

ரிசூ மிகவும் நல்லது ஏனெனில் அதனை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்ற முடியும்.

அத்துடன் உங்கள் கைகளையும் உடனடியாக சோப் போட்டுக் கழுவுங்கள்.

இல்லையேல் உங்கள் கையில் இருக்கும் கிருமி மேசை, கதிரை, கதவுக்குமிழ், போன்ற பலவற்றிலும் பட்டு பலருக்கும் பரவலாம். அத்துடன் தடிமன் காய்ச்சல் போன்ற நோயுள்ள போது கைலாகு கொடுப்பதையும் முகத்தில் முற்றம் கொடுப்பதையும் தவிருங்கள்.

zanamivir and oseltamir ஆகிய Antivirus மருந்துகள் இந்நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல் ஹாய் நலமா? 16.06.2009

Reblog this post [with Zemanta]

Read Full Post »

>தொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்?

நோய்கள் என்பதுதானே!

தடிமன், காய்ச்சல், டைபொயிட், சயரோகம் எனச் சொல்லி மாளாது. எயிட்ஸ் என்றால் கெடி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும்.

ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான்.

“ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை.”

அது என்ன?

புன்னகை!

நீங்கள் புன்னகைத்தால் முழு உலகமுமே உங்களுடன் இணைந்து புன்னகைக்கும். முழு உலகமும் புன்னகைக்கும் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை என்ற போதும் தொற்றும் என்பது உண்மையே.அறிமுகமானவர்களுக்கு மட்டுமின்றி முற்றிலும் அந்நியமானவர்களுக்கு கூடத் தொற்றும் ஆற்றல் கொண்டதுதான் புன்னகை.

இவ்வாறு சொல்வது வெற்றுக் கற்பனைக் கருத்து அல்ல. ஆய்வு ரீதியாக நிறுவப்பட்டது. மிகப் பிரபலமான பிரமிங்ஹாம் மருத்துவ ஆய்வின் ஒரு பகுதிதான் இது. நம்பிக்கைக்குரிய BMJ மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் புன்னகை மற்றவர்களுக்குத் தொற்றுவது உண்மை. அதை நீங்கள் நிச்சயம் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுறுவதற்கு காரணம் என்ன?

நீங்கள்தான் காரணமா?

உங்கள் செய்கைகளும், எண்ணங்களும், பழக்கங்களும் மட்டும் உங்களை மகிழ்வுறுத்துகிறதா?

இல்லை உங்கள் உறவினரும் நண்பர்களும் காரணமாகலாம்.

அதுமட்டுமல்ல உங்களுக்கு அறிமுகமே இல்லாதவர்களும் காரணமாகலாம் என்கிறார்கள்.

சமூக ஒன்று கூடல்களிலும், பொது நிகழ்வுகளிலும் யாரைச் சுற்றிக் கூட்டம் கூடுகிறது. அவற்றின் மையப் புள்ளியாக இருப்பவர்கள் யார்?

மகிழ்ச்சியானவர்கள்தான்.

அவர்களைச் சுற்றியே மக்கள் மொய்க்கின்றனர். மகிழ்வு அனைவரையும் காந்தம் போல தொற்றிக் இழுக்கிறது. மகிழ்வுடன் இருப்பவர்களுக்கு மகிழ்வோடிருக்கும் ஏனையவர்களின் நட்புகள் நிறையக் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான நண்பர்களும், சகோதர சகோதரிகள் அருகிருப்பதும் மேலும் விரைவாகப் பரவச் செய்யும். நண்பர்களுக்கு மட்டுமின்றி நண்பர்களின் நண்பர்களுக்கும் படு வேகமாகப் பரவக் கூடியது இது.

எனவே தொற்றுநோய்தானே?

மகிழ்ச்சியுள்ள கணவன் அல்லது மனைவி மகிழ்ச்சியைக் கடத்த உதவுவார்தான். ஆயினும் நண்பர்கள் அளவிற்கு துணைவரின் மகிழ்ச்சி வராது என்கிறது ஆய்வு.

ஆனால் எதிர்ப் பாலாரிடையே பரவுவது ஒரே பாலாரைவிடக் குறைவானது. அதாவது நண்பனுக்கு நண்பன், நண்பிக்கு நண்பி மேலாகும்.

சந்தோசமான ஒவ்வொரு நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 9 சதவிகிதத்தால் உயர்த்துகிறார்கள். எனவே ஒவ்வொரு நண்பன் அதிகரிக்கும் போதும் நீங்கள் அந்த நண்பர் குழுமத்தின் மத்தியில் இருப்பதாக உணர்வீர்கள். அதனால் அலையலையாக மகிழ்வைப் பெற வாய்ப்புக் கிட்டும்.

ஒவ்வொரு அழுமூஞ்சி நண்பனும் உங்கள் மகிழ்ச்சியை 7 சதவிகிதத்தால் குறைக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அத்தகைய நண்பர் இருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது என அவ் ஆய்வு பரிந்துரைக்கவில்லை.துன்பம் பொதுவாக தனிமையையே நாடுகிறது. துன்பம் வரும்போது மற்றவர்களுடன் பேசப் பிடிக்காது. மற்றவர்களுடனான நெருக்கத்தைத் தவிர்க்க முனைகிறது. இதனால்தானோ என்னவோ மகிழ்ச்சி தொற்றுவது போல துன்பம் பரவுவது இல்லை.

“துன்பம் சேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா” எனப் பாடியது சோகத்தின் தனிமையில் மற்றெதையும் விட இசை மனத்திற்கு இதமாக இருக்கும் என்பதை ஞாபகம் ஊட்டுகிறது அல்லவா?

மனிதர்களுக்கு மனமகிழ்வைத் தரும் மற்றொரு விடயம் பணம் சேர்வதாகும். அதனால்தானே மனிதர்கள் பணத்தின் பின் பேயாகப் பறக்கிறார்கள்.

ஆனால் அது தரும் மகிழ்ச்சியானது புன்னகைக்கும் நண்பனுடன் ஒப்பிடும்போது அற்பமானது.

ஆனால் இதை உணராதவர்களே அதிகம். பணத்திற்காக நட்புக்களையும் உறவுகளையும் தூக்கி எறிபவர்கள்தான் ஏராளம்.

Bayon: smiling faceகம்போடியாவின் சிற்பத்தை பாருங்கள். இந்தச் சிற்பத்தில் உள்ள அமைதியான முறுவல் எல்லோரையும் கவர்வது அதிசயமல்லவே.

Bayon: smiling face

‘மகிழ்வுடன் இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் அது உளநெருக்கீட்டை அதிகரிக்கச் செய்யும் ஹோர்மோன்கள் சுரப்பதைக் குறைக்கிறது’ என அன்ரூ ஸ்டெப்டோ என்ற உளவியல் பேராசிரியர் கூறுகிறார். அவர் University College London யைச் சேர்ந்தவராவார்.

மகிழ்வுடன் இருப்பதற்குக் கிடைக்கும் போனஸ் இதுவெனலாம்.

மகிழ்வோடு இருங்கள். மகிழ்ச்சியோடு உள்ளவர்களின் நட்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி பரந்து விரிந்து பரவும்.

ஆனால் மற்றவர்களை அழிப்பதிலும், ஒடுக்குவதிலும், அடிமைப்படுத்துவதிலும் மகிழ்வுறுவது தவறென்று சொல்லவும் வேண்டுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

>மருத்துவம் செய்வது என்பது வெறுமனே விஞ்ஞான பூர்வமான தொழில் அல்ல. அதில் கலைநயமும் சேர்ந்திருக்க வேண்டும்
என்பார்கள்.

விபத்தில் மாட்டிய இவருக்கு இவருக்கு மருத்துவம் செய்த டொக்டர் சற்று
அதிகமாகவே கலை உணர்வு கொண்டவர்.
நோயாளி:- " டொக்டர் எனக்கு
மிகவும் கவலையாக இருக்கு. இப்பொழுதும் தினமும்
மாலையில் வேலையால் வீட்டிற்கு வந்ததும் உடல் ஓய்ந்தது
போலக் களைப்பாக இருக்கிறது.

டொக்டர்:- இது மிகச் சாதாரண விடயம்தானே.
கவலைப்படாதீர்கள். இரவு உணவுக்கு முன்னர்
சற்று டிரிங் எடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

நோயாளி:- நன்றி டொக்டர். மிகவும் சந்தோஸம்.
ஆனால் நான் சென்ற முறை உங்களிடம்
வந்தபோது மதுபானத்தை தொடவே கூடாது என்றீர்களே!

டொக்டர்:- ஆம் சென்னேன்தான்.
ஆனால் அது சென்ற வாரம். அதற்குள் மருத்துவ
விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிட்டதே.

மருத்துவம் முன்னேறிவிட்டதா அல்லது
மருத்துவர் சென்ற ஒரு வாரத்தில்
'புதுப் பழக்கத்திற்கு'
அடிமையாகிவிட்டாரா?

...................................

அந்த மூதாட்டிக்கு வயது தொண்ணூறுக்கு
மேலாகிவிட்டது. வங்கியில் நடந்த ஒரு
சீட்டிழுப்பில் பத்து லட்சம் ரூபா பணப்பரிசு
விழுந்தது. இதை எப்படிப பாட்டடிக்கு சொல்வது.
அதிர்ச்சியில் மேலுலகம் பயணமாகிவிடுவாரா
என வீட்டில உள்ளவர்கள் பயந்தனர்.

இந்தச் செய்தியை பக்குவமாக பாட்டிக்கு வெளியிட
ஒரு மருத்துவரை அழைத்தனர்.

"நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
இத்தகைய விடயங்களைக் கையாள்வதில்
எனக்கு பயிற்சி இருக்கிறது. விடயத்தை
என்னிடம் விட்டுவிடுங்கள். பாட்டியின் உடல்நலத்திற்கு
நான் பொறுப்பு. நான் செய்கிறேன்" என்றார் டொக்டர்.

பாட்டியிடம் சென்ற டொக்டர் கதையைப்
படிப்படியாக வளர்த்து இறுதியில் வங்கிப் பரிசளிப்பு
விடயத்திற்கு வந்தார்.

" ஒருவேளை அந்தப் பரிசு. பத்து லட்சம் ரூபா பணப்பரிசு
உங்களுக்கு விழுந்தால் அதை என்ன
செய்வீர்கள்"

"ஏன்? நான் நிச்சயம் அதில் பாதியை உங்களுக்குத் தருவேன்"

ஆள் விழுந்த சத்தம் கேட்ட உறவினர்கள் பக்கத்து
அறையிலிருந்து ஓடி வந்தனர்.

பாட்டி அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்.

டொக்டர் சவமாகக் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டனர்.

மெக்கானிக்குகளுக்கு தமது காரில் இருக்கும்
பிழை தெரியாது என்பார்கள்.

மருத்துவர்களுக்கு ?

.................................................

"தூக்கம் வருகுது இல்லையே டொக்டர்"
என அந்த அரச உயர்அதிகாரி மருத்துவரிடம்
முறையிட்டார்.

"அப்படியா? உங்களுக்கு இரவில் தூக்கம்
வருவதில்லையா?"

" இரவில் நன்றாகத் தூக்கம் வருகிறது.
காலை வேளைகளில் கூட ஆழ்ந்த உறக்கம்
கொள்ள முடிகிறது. ஆனால் மதியத்திற்கு
பின்னர்தான் தூங்குவது சிரமமாக இருக்கிறது"

உதாரணம் காட்டக் கூடிய ஒரு அரச அதிகாரி
இப்டித்தான் ஆபீஸில் அக்கறையோடு
பணியாற்றுகிறார்.Read Full Post »

>உடம்பு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும் இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.

‘உடம்பு பெலயீனமாகக் கிடக்கு. களைப்பாக இருக்கு. பெலத்திற்கு என்ன சாப்பிடலாம்? என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம்?’ எனக் கேட்பார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக் காரணமா?

இத்தகைய களைப்பிற்கு பெரும்பாலும் கடுமையான நோய்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவரது தவறான பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமற்ற உணவுமுறைகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.

தூக்கக் குறைபாடு

முக்கிய பிரச்சனை போதிய தூக்கம் கிடைக்காததாக இருக்கக் கூடும். சிவராத்திரி முழிப்புப் போல இரவிரவாக விழிப்பிருந்தால்தான் மறுநாள் களைப்பு வரும் என்றில்லை. உங்களுக்கு தினமும் தேவைப்படும் தூக்கத்தில் ஒருமணி நேரம் குறைந்தால் கூட மறுநாள் சக்தி இழந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.

உங்கள் தூக்கம் குறைந்ததற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். *உதாரணமாக வேலைப்பழு காரணமாக சரியான நேரத்திற்கு படுக்கைக்க்குப் போக முடியாதிருக்கலாம்.
*படுக்கைக்குப் போனாலும் மனஅழுத்தங்கள் காரணமாக நிம்மதியாகத் தூங்க முடியாது போயிருக்கலாம்.
*வயதாகும்போது பலருக்கு குழப்பமற்ற தூக்கம் வராதிருக்கலாம்.
*அல்லது வேளையோடு எழுந்திருக்க முடியாதிருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கமின்மை மறுநாள் சோர்வைக் கொண்டுவரும்.

சோம்பேறி வாழக்கை முறை

உடலுழைப்பற்ற சோம்போறித்தனமான வாழ்க்கை முறையும் இயலாமையைக் கொண்டு வரும். போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக அவசியமாகும்.

உடற் பயிற்சி செய்வதற்கு நேரமில்லை அல்லது களைப்பாக இருக்கிறது என அதைத் தவிர்ப்பது தவறு. ஏனெனில் பயிற்சி இல்லையேல் உங்கள் உடலாரோக்கியம் கெட்டுவிடும். சிறு வேலை செய்வது கூடக் களைப்பைக் கொண்டுவரும்.

இதைத் தவிர்பதற்கு தினமும் அரை மணிநேரம் ஆயினும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள். வேகமாக நடக்கலாம், நீந்தலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். எதுவானாலும் ஒரேயடியாக 30 நிமிடங்களை ஒதுக்குவது முடியாது எனில் அதனை இரண்டு தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள். உடல் உறுதியானால் களைப்பு வராது.

போஸாக்கான உணவு

போஸாக்கான உணவையும், நீராகாரத்தையும் எடுக்காவிட்டால் உங்கள் நாளாந்த வேலைக்கான எரிபொருளை உங்கள் உடல் கொண்டிருக்காது. காலை உணவு முதற்கொண்டு போஸாக்காக எடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

எண்ணெய், பட்டர், மார்ஜரீன் போன்ற கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். நார்ப்பொருட்கள் விற்றமின், தாதுப்பொருட்கள் அதிகமான உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள். தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா, குரக்கன் போன்றவை நல்லது. பழவகைகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறிய உணவுகள்

இனிப்புச் செறிந்த பழச்சாறுகள், மென்பானங்கள் போன்றவை நல்லதல்ல. பால், உடன் தயாரித்த பழச்சாறு போன்றவை விரும்பத்தக்கவை.

அதிகமாக வயிறு கொள்ளாமல் உண்பதைத் தவிருங்கள். சிறிய உணவுகளாக, அதுவும் கலோரிச் சத்துக் குறைந்த உணவுகளாக உண்ணுங்கள். வேண்டுமானால் 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை அவ்வாறான உணவை எடுக்கலாம்.

மதுபானம்

மதுபானம் உட்கொள்ளும்போது உற்சாகம் அளிப்பதுபோலத் தோன்றினாலும் உண்மையில் நரம்பு மண்டலத்தைச் சோர்வுறச் செய்கிறது. உட்கொண்டு பல மணிநேரத்திற்கு ஒருவரைச் சோர்வுறச் செய்யலாம். அத்துடன் படுக்கைக்குச் செல்லமுன் மதுபானம் எடுத்தால் தூக்கத்தைக் கெடுத்து அடுத்த நாளையும் சோர்வுறச் செய்துவிடலாம்.

நெருக்கீடும் மனப்பதற்றமும்


ஆயினும் இன்றைய காலகட்டத்தில் பலரின் சோர்விற்கும் களைப்பிற்கும் காரணமாக இருப்பது நெருக்கீடு நிறைந்த வாழ்க்கையும், மனப்பதற்றமும்தான். ஓய்விற்கு நேரமின்றி ஒரு பணியிலிருந்து மற்றொரு வேலைக்கு இடைவெளியின்றி ஓடிக்கொண்ருப்பவர்களுக்கு களைப்பு ஏற்படவே செய்யும்.


நேர முகாமைத்துவம்

மனத்தில் நிறைவும் சந்தோசமும் இருந்தால் களைப்பு நெருங்காது.
இதனைத் தவிர்ப்பதற்கு நேர முகாமைத்துவம் முக்கியமானதாகும்.

  • செய்து முடிப்பதற்கு சிரமமான பணிகளை பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
  • முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள். *குழப்பங்கள் ஏற்படாமல் பணிகளை ஒழுங்கு முறையில் செய்து முடிக்க திட்டமிட்டுச் செயலாற்றுங்கள்.
  • பணிகளின் இடைவெளிகளில் சற்று நிதானித்து மூச்சுவிட்டுக் களைப்பாறுங்கள்.
  • தினசரிக் கடமைகளுக்கு மேலாக உங்களை மகிழ்வுறுத்தும் பொழுதுபோக்கில் அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.
  • மதிய உணவின் பின் மீதி வேலைகளைத் தொடங்கு முன் முடியுமானால் குட்டித் தூக்கம் செய்யுங்கள். அல்லது சற்றுக் காலாற உலாவுங்கள்.
  • அவசியமானால் காலையில் 15 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கை விட்டெழுந்து நாளாந்தக் கடமைகளை ஆரம்பியுங்கள்.

வேலைத்தள நெருக்கடி

உங்கள் வேலைத்தளத்திலும் களைப்பு ஏற்படுகிறது எனில் அது உங்கள் தொழில் சார்ந்ததாக இருக்கக் கூடும். நெருக்கடி மிக்க வேலையாக இருக்கலாம் அல்லது தொழிலில் அதிருப்தி அல்லது ஈடுபாடு குறைந்த வேலையாகவும் இருக்கலாம். திறந்த மனத்தோடு சுயமதிப்பீடு செய்து நிவர்த்தி செய்வது அவசியம்.

சகஊழியர்களுடன் நல் உறவை

சகஊழியர்களுடன் நல் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடனான உறவில் ஏதாவது உரசல் அல்லது நெருக்கடி இருந்தால் அதனைத் தீர்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

மேலதிகாரியுடனான உறவு

உங்கள் மேலதிகாரியுடனான உறவைப் பலப்படுத்துங்கள்.

அவர் உங்களிடம் எதனை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து செயற்படுங்கள்.

உங்கள் திறமைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த உங்கள் பலவீனங்களை திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய முயலுங்கள்.

மருந்துகள்

வேறு நோய்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளும் களைப்பிற்குக் காரணமாகலாம். உதாரணமாக தடிமன் தும்மலுக்கு உபயோகிக்கும் பிரிட்டோன், செட்ரிசின் போன்றவை, தூக்க மருந்துகள், பிரஸருக்கு உபயோகிக்கும் பீட்டா புளக்கர் மருந்துகளும் காரணமாகலாம். இருமலுக்கு உபயோகிக்கும் மருந்துகளில் உள்ள கொடேன் போன்ற வேறு பல மருந்துகளையும் சொல்லலாம்.

டொனிக், சத்துமா, விற்றமின்

எனவே களைப்பு என்றவுடன் சத்து மருந்துகள், டொனிக், சத்துமா, விற்றமின் மருந்து ஊசி எனத் தேடி அலையாமல் காரணத்தைக் கண்டு அதனை நீக்க முயலுங்கள்.

உங்களால் முடியாவிட்டால் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப மருத்துவர்.

Read Full Post »