Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2009

>
“டொக்டர் ஆபத்தான கேஸ், உடனை பார்க்கோணும்”

நம்பர் ஒழுங்கில் நின்றவர்களை விலக்கிக்கொண்டு விரைந்து முன்னுக்கு வந்த அவர் வாசலில் நின்று இரைந்து குரல் கொடுத்தார்.

நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நான் அவரது அவசர குரலால் கவனம் திரும்பி “என்ன வருத்தம்?… சரி, சரி… கொண்டு வந்து கட்டில்லை கிடத்துங்கோ” என்றேன்.

சுறு சுறுப்பான காலை நேரம். நோயாளர்கள் நிறையப்பேர் தங்களது நம்பர் எப்பொழுது கூப்பிடப்படும் என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையேதான் இந்த அவசரக்கோரிக்கை!

“உள்ளை கொண்டரட்டாம். டொக்டர் சொல்லுறார். இரண்டு பேர் கை குடுங்கோ, தூக்கிக் கொண்டு போய் கிடத்துவம்”

கட்டிலில் கிடத்தப்பட்ட அவரை மேலோட்டமாகப் பார்த்தேன்.

வயது எழுபத்தைந்திற்கு மேல் இருக்கும்.
காய்ந்த வேப்பமரப் பட்டைபோல் வரண்டு சுருங்கிச் சருகான தோல்,
முனை வெட்டப்பட்ட முட்டைக்கோதுக்குள் அடங்கிவிட்டது போல் இடுங்கிய கண்கள்,
பொக்கை வாய். ஆனாலும் இளமைக் காலத்து உடல் உழைப்பால் திரண்ட தசைநார்கள் இன்னமும் எடுப்பாகத் தெரிந்தன.

“அப்பு என்ன செய்யுது? சொல்லுங்கோ” என்றபடி நோயாளியின் முகத்தை மெதுவாகத் தட்டிப்பார்த்தேன்.

மறுமொழியில்லை கேட்ட கேள்வியை விளங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.

கண் புருவங்களிடையே விரலால் ஊன்றி அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை!
மயக்கத்தில் கிடந்தார்.!!

“டொக்டர்! ஆளுக்கு என்ன வருத்தம்? கடுவலே? இசகு பிசகாக ஏதென் செய்து போடுமே?” என்ற கவலையுடன் கேள்விகளை அடுக்கினார், நோயாளியைக் கொண்டு வந்தவர்.

“அந்தரப்படாதையுங்கோ சோதிச்சுப் பார்த்துத்தானே சொல்லவேணும்”

நோயாளியின் அருகில் நெருங்கி, அவரது வாயைத் திறந்து பார்த்தேன். புளித்த கள்ளின் மணம் குப்பென நாசியைத் துளைத்து வயிற்றைப் புரட்ட வைத்தது.

“நல்லாக் குடிக்கிறவரே”

“ஓம் டொக்டர், மனிசியும் இல்லை, பிள்ளைகுட்டிகளும் இல்லை: சொத்துப்பத்தும் தாராளமாகக் கிடக்கு, பின்னை என்ன தாராளமாகப் பாவிப்பார்…ஆளுக்கு நிலமை எப்படியிருக்கு டொக்டர்?|

“இண்டைக்கு இவருக்கு என்ன நடந்தது?” – நான்

“காலயிலைதான் பொழுது விடிஞ்சு எட்டு மணியாகியும் அங்கினை ஒரு சிலமனையும் காணவில்லை எண்டு எட்டிப்பார்த்தன். கட்டிலிலை கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தன். எழும்பயில்லை. கிட்டப் போய் எழுப்பிப் பார்த்தும் எழும்ப யில்லை. மூச்சிருப்பது தெரிஞ்சிது…”

அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே, நான் நோயாளியின் நாடித்துடிப்பு, பிரஷர், கண், மற்றும் முக்கிய குணம் குறிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.

“… இனசனமில்லாத தனியாள். தானே சமைத்துத் தானே சாப்பிடுவார். வருத்தம் துன்பமெண்டாலும் பார்க்கிறதுக்கு நாதியில்லாத மனுஷன். பரிதாபத்தைப் பார்த்துப்போட்டு நான்தான் தூக்கிக் கொண்டு வந்தனான்…”

“கிழவனுக்கு எப்படி? ஏதேன் ஆபத்தே? வடிவாய் பார்த்துச் சொல்லுங்கோ”

மீண்டும் மிகுந்த கரிசனையுடனும் இனம் புரியாத ஆர்வத்துடனும் கேட்டார்.

அயல் வீட்டுக்காரனுக்கு இன்னொருவன் உதவுவது ஒன்றும் புதினமில்லைத்தான். ஆனாலும் நோயாளியின் உடல்நிலை பற்றித் திரும்பத்திரும்ப இவ்வளவு கரிசனையுடனும், கவலையுடனும், ஒரு வித ஆர்வத்துடனும் விசாரிக்கும் இம்மனிதனின் இயல்பு என் மனத்தை நெருடியது.

“பயப்பிடாதையுங்கோ, கொஞ்சம் கூடுதலாகக் குடிச்சிட்டார். சரியாகச் சாப்பிடயில்லைப்போலை. அதால அவற்றை உடம்பில சீனிச்சத்து குறைஞ்சு, ஆளை மயக்கிப் போட்டுது. அல்கஹோலிக் ஹைப்போகிளை சீமியா என்று சொல்லிறது…

“ஒரு ஊசி அடிக்க எழும்பிடுவார்”

“50cc of 50 % Dextrose” என நேர்சுக்கு ஊசி பற்றி அறிவுறுத்தல் கூறிவிட்டு, கதிரையில் அமர்ந்தேன்.

“டொக்டர் மறைக்கிறார் போலை, உள்ளதைச் சொல்லுங்கோ, உயிருக்கு ஏதும் ஆபத்தே?…நாங்கள் பயப்படமாட்டம்….மறைக்காமல் சொல்லுங்கோ”

இதென்ன எவ்வளவு சொல்லியும் கேளாமல் உயிருக்கு ஆபத்தோ என்று அரியண்டப்படுத்துகிறார் என எரிச்சல் வந்தது.

“அப்படி ஒன்றுமில்லை. இன்ஜெக்ஷன் போட எழும்பி விடுவார். ஆனால் இனி இப்பிடிக் குடிக்க விடக் கூடாது” என எரிச்சலை மறைத்துக் கொண்டு சொன்னேன்.

“இன்ஜெக்ஷன் ரெடி” நேர்ஸ்

நேர்ஸ் தந்த ஊசியை, நோயாளியின் இரத்த நாளத்தில் நேரடியாக ஏற்றி, மருந்தை உட்செலுத்தத் தொடங்கினேன்.

திரும்பவும் அருகே வந்தார்.

“டொக்டர் கோவிக்கக் கூடாது. மனுசன் பெரிய சொத்துக்காரன். இனசனம் கிடையாது பேசாமல் செத்துப்போனாரெண்டால் சொத்தெல்லாம் பாழாகிப் போகும்….”

“… அதுதான் உயிருக்கு ஆபத்தெண்டால் ஒரு பெருவிரல் அடையாளத்தை எண்டாலும் எடுத்துப் போட்டனெண்டால் பயமில்லை. பிரச்சனையில்லாமல் சொத்து பத்துகளை எல்லாம் என்ரை பேருக்கு மாத்திப் போடலாம்” எனத் தொடர்ந்தார்

நான் பதில் சொல்லவில்லை.

ஊசி ஏற்றி முடிந்தது.

கட்டிலில் கிடந்த கிழவன், அசதியுடன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.

…………………………………………………..

சிரித்திரன் இதழில் 1985 அளவில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பின்னர் ஒரு டொக்டரின் டயறி நூலின் இரண்டாவது கட்டுரையாக வெளியானது

Read Full Post »

>

நெருக்கடிகள் மிக்க சூழலில் முதல் பலி மனிதத்துவமே.

கலாசார மேன்மைகளைக் கேள்விகுள்ளாக்கும் திரைப்படம்

குருட்டுமை Blindness!– /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”;} h3 {mso-margin-top-alt:auto; margin-right:0in; mso-margin-bottom-alt:auto; margin-left:0in; mso-pagination:widow-orphan; mso-outline-level:3; font-size:13.5pt; font-family:”Times New Roman”;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.25in 1.0in 1.25in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} –>



அமெரிக்காவின் மிகவும் பரபரப்பு மிக்க வீதி ஒன்றில் திடீரென வாகன நெரிச்சல். ஒன்றுக்குள் மற்றொன்றாக நெரிபடுகின்றன. ஹோர்ன் சத்தங்கள் அலறுகின்றன. காரணம் என்னவென்றால் வாகனம் ஓட்டி வந்த ஒருவருக்கு திடீரென பார்வை மங்கிக் குருடாகிப் போவதுதான். இதேபோல விமானங்கள் தாறுமாறாகத் தரை இறக்கப்படுகின்றன. இதுவரை அறியப்படாத புதிய தொற்றுநோய் காரணமாகவே அவர்களது பார்வை போயிற்று.

நோயாளியின் கண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவரின் பார்வை அன்று இரவே பறிபோகிறது. மிக வேகமாகத் தொற்றும் இந்த நோயால் பலர் பார்வையற்றுப் போகிறார்கள். இவ்வாறு குருடாகும் போது பார்வை இருண்டு போகவில்லை. எல்லாமே பால் போல வெள்ளையாக, வெளிச்சமாக இருக்கும் ஆனால் உருவங்கள் பொருட்கள் எதுவும் தெரியாது.White Blindness என்கிறார்கள்.

பன்றிக் காய்ச்சலை விட மிக மோசமாக மக்களைப் பீதிக்கு உள்ளாக்குகிறது. யாருக்கு எப்பொழுது தொற்றுமோ என்ற அச்சத்தில் அந்த நகரமே பீதியில் உறைகிறது.

பார்வை இழந்தவர்களை முகமூடி அணிந்த சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஏற்றி ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு மருத்துவ மனையில் கொண்டு போய் அள்ளிப் போடுகின்றனர்.



அங்கு அவர்களைக் கவனிக்க மருத்துவர்கள் கிடையாது. பாராமரிக்க ஊழியர்கள் இல்லை. கூட்டித் துப்பரவு செய்ய எவரும் இல்லை. பார்வையற்றவர்களுக்கு எதுவுமே முடியவில்லை. தடுமாறுகிறார்கள். தடக்கி விழுகிறார்கள். காயப்படுகிறார்கள். உதவுவதற்கு எவருமில்லை. ஏதாவது தேவையெனக் கேட்கப் போனால் வாசலைத் தாண்ட முன்னரே எட்டத்தில் நிற்கும் காவலர்களால் கேள்வியின்றிச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

கண் மருத்துவரின் மனைவி தனது கணவனுக்கு உதவுவதற்காக தானும் பார்வை இழந்தவள் போல இரகசியமாக வந்துவிடுகிறாள்.

நல்ல காலம் அவளது பார்வை பறிபோகவில்லை. அவள் மட்டுமே அவர்களுக்கான ஒரே உதவி. இவர்கள் பிறவிக் குருடர்கள் அல்ல. இற்றை நாள்வரை பார்வையுள்ள உலகிற்கு பரிச்சயமானவர்களுக்கு திடீரென எல்லாமே சூன்னியமாகிவிடுகிறது.

உணவு சமைப்பதற்கு யாருமில்லை. உணவு பெட்டிகளில் கொண்டு வந்து வெளியே போடப்படும். அதுவும் போதுமானதாக இல்லை. முறையிட யாருமில்லை. பசி, தாகம், இயலாமை, வெறுப்பு. குளிப்பதற்கு போதிய நீரில்லை. எதிர்காலம் பற்றிய பயம், சட்டம் ஒழுங்கு இல்லாமை. அதனால் எல்லாம் தான் தோன்றித் தனமாக நடைபெறுகிறது.

வல்லவர்கள் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள். பசி கோர தாண்டமாடுவதால் உடலைக் கொடுத்தால்தான் உணவு என சில வல்ல மிருகங்கள் அடாத்துகின்றன. ஒரு பெண் இரக்கமற்றவர்களுக்குப் பலியாகிறாள். மனிதம் மரணித்துவிட கோபமும், ஆக்ரோசமும், பொறாமையும், தகாத ஆசைகளும் கோலோச்சுகின்றன. அதற்குள் சிலருக்கு எல்லை மீறிய காமமும் கிளர்ந்தெழுகிறது.

அவர்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்திற்குரியதாகிறது. வேலையாட்கள் இல்லாததாலும், இவர்களுக்கு பார்வை தெரியாததாலும் அழுக்கும் அசுத்தமும் சூழ்ந்து கொள்கிறது. அழுக்கான உடைகளும், கழிவுப் பொருட்களும் மருத்துமனை விடுதியெங்கும் குவிந்து கிடக்கின்றன.

மலமும், சிறுநீரும் கூட ஆங்காங்கே கிடக்கின்றன. அதில் வழுக்கி விழுந்து தங்களையும் தமது உடைகளையும் சிலர் அசுத்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

சிலர் அணிந்திருந்த தமது உடைகளையும் களைந்து விட்டு அம்மணமாகத் திரிகிறார்கள்.

அந்த அம்மணத்தின் அலங்கோலத்தை மற்றவர்களால் காணமுடியாதிருக்கிறது. பார்த்திருக்கும் எம் மனம்தான் கூசுகிறது.

ஆம் பார்வையாளர்களின் பாலுணர்வைக் கிளர்ந்தெழச் செய்வதற்காகவே திரைப்படங்களில் நிர்வாணக் காட்சிகளைச் சேர்க்கிறார்கள். ஆனால் இங்கு அதே நிர்வாணம் மனத்தில் கவலையை, பரிதாபத்தை, ஏன் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றது.

நிர்வாணத்தினூடாக மனத்தில் வலியை எழச் செய்யும் நெறியாளரும், கமராமென்னும் பாராட்டுக்குரியவர்கள். Cesar Charlone லின் படப்பிடிப்பு திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். நகரத்தின் சிதைவை அவர் மிக அற்பதமாகவம், நுணுக்கமாகவும் மனத்தைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார்.

நெருக்கடிகள் மிக்க சூழலில், சமூக மற்றும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், தன்னிச்சையாக காட்டு மிருகங்கள் போல வாழும் கட்டற்ற வாழ்வின் அவலம் இத்திரைப்படம் போல வோறெங்கும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

போர்த்துக்கலைச் சேர்ந்த Jose Saramago வின் நோபல் பரிசு பெற்ற நாவலின் (1995) திரைப்பட வடிவம் இது. Fernando Meirelles நெறியாள்கை செய்து திரைப்படமாக ஆக்கியுள்ளார். அவர் City of God என்ற தனது முதற் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மெக்சிகோ சேரி வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



Blindness என்ற இத்திரைப்படத்தில் Julianne Moore, Mark Ruffalo, Danny Glover, Gael Garcia Bernal ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 120 நிமிடங்கள் வரை சுவார்ஸமாக ஓடுகிறது.

ஒரு அதிகற்பனைக் கதை என்பது உண்மைதான். ஆயினும் இது எதைச் சொல்ல வருகிறது?

ஆழ்ந்த சமூகக் கருத்து ஒன்றைக் குறியீடாகச் சொல்கிறது எனலாம். அந்த மனிதர்களின் குருட்டுத்தன்மையூடாக சமூகத்தின் குருட்டுத் தன்மையையே சுட்டிக் காட்ட முன் வருகிறது எனத் தோன்றுகிறது. உண்மையில் கண்பார்வையிழந்தவர்கள் அடைபட்டிருக்கும் மருத்துவமனையை ஒரு சமூகத்திற்கு ஒப்பிடலாம்.

சட்டம் ஒழுங்கு குலைந்த நிலையில் அவர்களிடையே நிகழும் சம்பவங்களைப் பார்க்கும் போது, நாம் போற்றும் எமது காலசார உன்னதங்கள் எவ்வளவு போலித்தனமானவை என்பதை உணர முடிகிறது.

உணவுக்காகவும், செக்ஸ்க்காகவும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். கொல்லவும் தயங்கவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்ந்தால் மிருகங்களுக்கும் மனிதர்களான எங்களுக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் கிடையாது.

ஆம் சிந்திக்கத் தூண்டும் இத் திரைப்படம் பல கேள்விகளையும் எழுப்புகிறது.

மிக மோசமான உயிருக்கு ஆபத்தான, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனம் நிறைந்த இடர்மிகு சூழலில் மனிதத்துவம் தப்பித்திருக்க முடியுமா?

சுரண்டலும் அடக்குமுறையும் கொடூரமும் தாண்டவமாடும் சூழலில் மரியாதையையும், வினயத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

அங்கு அன்பும் காதலும் நற்பண்புகளும் தாக்குப் பிடிக்க முடியுமா?

இவை போன்றவற்றிக்கு இப்படம் விடையைத் தேட முயற்சிப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இதை வெளிப்படுத்துவதற்காக மிகவும் அருவருப்பான காட்சிகளுடாகவும் எங்களை அழைத்துச் செல்கிறார் நெறியாளர். நரகத்தின் ஊடாக சொர்க்கம் நோக்கிய பயணம் எனலாம்.

இறுதியில் என்ன நடக்கிறது? உணவு அடியோடு இல்லை. எந்தவித உதவிகளும் கிட்டவில்லை. இந்த நிலையில் அங்கு திடீரென நெருப்புப் பற்றிக் கொள்கிறது. சிலர் அதற்குள் அகப்பட்டுவிட மற்றவர்கள் உயிரைப் பயணம் வைத்து வெளியேற முயல்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்!

வழமையாக தலைக்குறி தென்பட்டவுடன் துப்பாக்கியால் சுடும் காவலருள் ஒருவனைக் கூடக் காணவில்லை. ‘we are free..’ என ஆனந்தத்தில் கத்திக்கொண்டு வெளியேறுகிறார்கள்.

வெளியேறினாலும் நிம்மதி கிட்டவில்லை.

மேலும் துன்பங்கள் காத்திருக்கின்றன.

நகரில் யாரையும் காணமுடியவில்லை.

உதவிக்கு அழைக்க யாரும் தென்படவில்லை.

மனித நடமாட்டம் இன்றி நகரம் வெளிச்சோறிக் கிடக்கிறது.



வாகனங்கள் ஆங்காங்கே கைவிடப்பட்டுள்ளன.

குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

உணவு பெற முடியவில்லை.

ஓரிடத்தில் இறந்து கிடக்கும் மனிதன் ஒருவனைக் நாய்கள் குதறியெடுத்துத் தின்று பசியைத் தணிக்கின்றன.

நகரத்தின் வெறுமை எம்மையும் அப்பிக் கொள்கிறது.

Blindness என்பது மிகுந்த கருத்தாழம் கொண்ட தலைப்பு என எண்ணத் தோன்றுகிறது. இங்கு பார்வை இழந்தவர்கள் அல்லது குருடர்கள் என்று தலைப்பிடப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். குருட்டுத்தன்மை அல்லது குருட்டிமை என்றே சொல்கிறது.



Blindness என்ற இத்திரைப்படம் குருட்டுமையை கண்பார்வை இழந்தவர்களின் செயற்பாடுகள் மூலமாகவும், மற்றொரு புறத்தில் பார்வையிழந்தவர்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது கண்ணை மூடிக்கொண்ட சமூகத்தின் பொறுப்பற்ற தன்மை ஊடாகவும் உணர்த்த முயல்கிறது.

நாம் எங்களது பிரச்சனைகளை மட்டுமே ‘பார்க்கிறோம்’. எங்கள் தேவைகளை மட்டுமே முனைப்புடன் நோக்குகிறோம். மற்றவர்கள் துன்பங்களைப் பார்ப்பதில்லை அல்லது தயக்கத்துடன் அல்லது அரைமனத்துடன் மட்டுமே பார்க்கிறோம். இதுவே குருட்டுமை எனலாம்.

ஆம் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் எல்லோரும், அவர்களின் அரசு உட்பட தமது நலன்களையே எண்ணிக் கொண்டன. தமது தேவைகளையே பூர்த்தி செய்தன. தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தன. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக கைவிடப்பட்ட, பார்வையிழந்த மக்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை.

அவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது தேவை பற்றியோ கவனம் செலுத்தவில்லை. தமது நலனிற்காக அவர்களைப் பலியிட்டன. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடக் கவலைப்படவில்லை. அவர்கள் எப்பாடு பட்டாலும் படட்டும் நாம் சுகமாக வாழவேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்ந்தன.

ஜனநாயகம், மக்கள் நலன், என்றெல்லாம் தலைவர்களும் அரசுகளும் கூச்சல் போடுவதும் தம்பட்டம் அடிப்பதும் போலித்தனம்தானா? அரசுகள் இவ்வாறுதானா நடந்து கொள்ளும்.

ஆனால் திரைப்படம் இத்துடன் முடிந்து விடவில்லை. கிளைமக்ஸ் இனித்தான் வருகிறது. ஓரளவு முன்பே யூகித்ததுதான். அதையும் கூறி உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது அல்லவா?

உண்மையில் இது ஒரு சுவாரஸ்மான மனத்தை அலைக்கழிக்கும் திரைப்படம். பல அடிப்படை விடயங்கள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. ஆனால் சந்தோஸமாக நேரத்தைக் கழிக்கக் கூடிய பொழுதுபோக்குப் படம் அல்ல என்பதும் உண்மையே.

இத் திரைப்படம் பற்றி முதலில் எமது பதிவுலக நண்பர் ஒருவரின் கட்டுரை மூலமே அறிந்தேன். அவருக்கு கருத்துரையும் இட்டிருந்தேன். ஆயினும் அவர் யார் என்பது இப்பொழுது ஞாபகம் வரவில்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி வாரவெளியீடு

26.07.2009

Read Full Post »

>அது ஒரு அமைதியான வெள்ளிக்கிழமை மாலை நேரம். பொதுவாகவே டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் குறைந்த ஆரவாரமில்லாத நாள்.

அப்பொழுது ஆச்சி ஒருத்தி, பரபரப்புடன் எனது அறைக்குள் நுழைந்தாள்.

“இப்படி இருங்கோ இருங்கோ ஆச்சி”

நான் சொல்ல – அவளோ! இருப்பதற்கு கூட அவகாசம் இல்லாததுபோல்

“செவ்வாய்க்கிழமை ஐயாட்டை இந்தப்பிள்ளைக்கு மருந்து எடுத்தனான், கொஞ்சம் கூட சுகமில்லை. அடிக்கொருதரம் வயித்தை முறுக்கிக் கொண்டு வயித்தாலை போகுது. இரத்தமும் சீதமாகவும் போகுது, பச்சை பச்சையாகவும் போகுது. ரா முழுக்க நாங்களும் கண்மூடவில்லை. பிள்ளையும் தூங்கயில்லை, பச்சைத்தண்ணி கூட குடியாதாம், துவண்டு போச்சுது|”
பொரிந்து தள்ளினாள்.

எனக்கு வியப்பாக இருந்தது! இவ்வருடம் தொற்று நோயாகப் பரவி வரும் இந்த வயிற்றுளைவு நோயைக் கொண்டு வரும் கிருமியையும் அதனைக் குணமாக்கும் மருந்தும் விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, நோயாளிகளுக்கும் வைத்தியம் செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளது.

எனவே இக்குழந்தைக்கும் நோய் குணமாகாதது எனக்கு வியப்பாக இருந்தது.

எனது வைத்தியம் எங்கே பிழைத்தது? ஏன் பிழைத்தது?என யோசித்தேன்.

குழந்தையை மீண்டும் பரிசோதித்து, நோயை திரும்பவும் நிச்சயப்படுத்திக் கொண்டேன்.

பிள்ளையின் பொதுவான உடல் நிலையும் ஆபத்தான நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

“அண்டைக்கு தந்த மருந்திலை ஏதும் மிச்சம் கிடக்கோ? காட்டுங்கோ பாப்பம்” என்று கேட்டேன்.

“இஞ்சார் அப்படியே கிடக்கு” என்று சொல்லி பையுக்குள் கிடந்தவற்றை எடுத்து மேசை அள்ளிப் போட்டாள்.

மருந்துகளைப் பார்த்தபொழுது சரியான மருந்துகள்தான் கொடுக்கப் பட்டிருந்தது நிச்சயமாயிற்று.

அப்பொழுதுதான் அந்த விசயம் பட்டென என் மனதுக்குப் பிடிபட்டது.

மருந்துகள் பிள்ளைக்கு ஒழுங்காக கொடுக்கப்படவில்லை. ஒரு நேர மருந்து மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மிகுதி மருந்துகள் அப்படியே கிடந்தன.

ஆச்சிமேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது.

“மருந்துகளை ஒழுங்காக் கொடுத்தாலல்லோ நோய் மாறும், ஒரு நேர மருந்து தானே குடுத்திருக்கிறியள் மிச்சமெல்லாம் அப்படியே கிடக்குது. பின்னை எப்படி பிள்ளைக்கு சுகமாகும்” கோபமாகக் கேட்டேன்.

ஆச்சி அமைதியாகச் சொன்னாள். “வழக்கமாக இப்படித்தானே, ஐயாட்டை மருந்தெடுத்து கொண்டுபோய், ஒரு நேரம் குடுத்தாலே சுகமாகிப் போகும் ஐயாடை கைராசி அப்படி.

..இந்தமுறையும் அப்படித்தான் ஒரு நேர மருந்து பருக்கினனான் ஆனால் சுகமாகவில்லை.”

எனக்கு கோபமும், சிரிப்பும் கலந்து வந்தது. எனது தலையை எங்காவது கொண்டு போய் முட்டி உடைக்கலாம் போலிருந்தது.

************************
சிரித்திரன் இதழில் 1985 அளவில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பின்னர் ஒரு டொக்டரின் டயறி நூலின் முதற் கட்டுரையாக வெளியானது

Read Full Post »

>‘சரியான நாரி வலி (கீழ் முதுகு வலி). திரும்பிப் பார்க்க, சரிஞ்சு படுக்க ஒண்டுமே முடியுதில்லை’ என்று வேதனையுடன் சொன்னவர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

அவருடைய பிரச்சனையை விபரமாகக் கேட்டு அறிந்ததிலும், முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்ததிலும் அவரது வலிக்கு அடிப்படைக் காரணம் கடுமையான நோய் அல்ல எனத் தெளிவாகத் தெரிந்தது. வெறும் தசைப் பிடிப்புத்தான்.



எனவே சில இலகுவான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, மருந்துகளும் எழுதிக் கொடுத்தேன்.

இருந்தபோதும் அவர் கதிரையிலிருந்து எழவில்லை. முகத்தைப் பார்த்தால் அதில் திருப்தியைக் காணவில்லை.

‘வேறையும் ஏதாவது பிரச்சனையும் இருக்கோ’ எனக் கேட்டேன்.

பரிசோதனைப் பயிற்சி படங்கள் நன்றி:- www.netterimages.com/image/1705.htm

‘இல்லை ….’ என்றவர், தயக்கத்துடன் ‘..ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் நல்லதுதானே’ எனக் கேள்வியாக தனது விருப்பை மறைமுகமாகத் தெரிவித்தார்.



நாரிப்பிடிப்பிற்கு (Low Backache)பல காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்படிப்பு (Muscular Pain), எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி(Arthritis), முள்ளத்தண்டு இடைத்தட்டம் விலகல் (Prolapsed Disc), அதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி (Sciatica) மோசமாகி கால்களுக்கு பரவுதல் எனப் பல.

நோயின் அறிகுறிகளை தெளிவாகக் கேட்டு அறிவதாலும், உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதாலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதற்கு ஏற்பவே சிகிச்சைகளையும் வழங்குவார்கள். இது போதுமானது.

தேவை ஏற்பட்டால் மட்டுமே இரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகளையும், எக்ஸ் ரேயையும் நாடுவார்கள்.

இப்பொழுது மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. சாதாரண எக்ஸ் ரே, சிடி ஸ்கான் (CT) , எம்ஆர்.ஐ (MRI)போன்ற பரிசோதனைகள் இலகுவாகச் கிடைக்கின்றன.

இப் பரிசோதனைகள் பற்றி நோயாளர்களும் நிறையவே அறிந்துள்ளார்கள். பண வசதி இருந்தால் உடனடியாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது. அதனால் நோயளர்களதும் உறவினர்களதும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இவற்றைச் செய்துவிட்டால் உடனடியாக நோயைத்தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம், விரைவில் குணமாக்கி விடும் என நம்புகிறார்கள். எனவே இவற்றைச் செய்யும்படி மருத்துவர்களையும் நெருக்குகிறார்கள்.



ஒரு ஒரு ஆய்வின் முடிவு இதனைத் உறுதியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, எக்ஸ் ரே பரிசோதனையால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிந்த போதும் 80 சதவிகிதமான நோயாளிகள் அதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்பியதாக தெரிய வந்தது.

இதன் மூலம் நோயாளிகளின் விருப்பத்திற்கும் மருத்துவ ரீதியான உண்மைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது.

மருத்துவர் கடுமையான நோய் இருக்கிறது என உணர்ந்து அதைக் கண்டுபிடிக்க, அல்லது உறுதிப்படுத்த மேற்கூறிய பரிசோதனைகள் தேவை எனக் கருதினால் ஒழிய இப் பரிசோதனைகளால் நோயாளர்களால் எதிர்பார்க்கப்படும் பலன் கிட்டப் போவதில்லை. இதனை 1800 நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு 6 ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல மருத்துவ சஞ்சிகையான The Lancet அண்மையில் (February 7, 2009) ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் நோயாளர்களின் தேர்வுகளினதும் விருப்பங்களினதும் அடிப்படையில் தேவையற்ற பல எக்ஸ் ரே பரிசேதனைகள் செய்யப்படுவதை மறுக்க முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேசியரீதியான மருத்துவச் செலவில் வீண்விரயத்தை குறைக்க முடியும்.

நோயாளிகளைப் பொறுத்தவரையில் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அவசியமற்ற ரேடியம் கதர்வீச்சிற்கு ஆளாவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தான பின்வளைவுகளைத் தடுப்பதற்காக அவியமற்ற எக்ஸ் ரேகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அது. இது மிக முக்கியமானதல்லவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-

ஹாய் நலமா? தினக்குரல்

Reblog this post [with Zemanta]

Read Full Post »

>மூத்த முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் புதிய தொகுப்புத்தான் “நிமிர்வு”. அதன் வெளீயீட்டு விழா பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட எனது முன்னுரை இதுதான்.

முன்னுரை

‘நிமிர்வு’ இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு.

‘மேடும் பள்ளமும்’ முதல் ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்’ வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஓரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகளில் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தெர்குப்புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.

உங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.

ஆம்! காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்ளைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படுவது. எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.

நீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவை யாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு ஐயர், புதுமைப்பித்தன், மௌனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள் மயப்பட்ட ஏனைய ஒரு இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கதைப் புரிந்து கொண்ட படைப்பாளி தன்னையும் இற்றைப்படுத்தி, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையை, தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.

நீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளைக் அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற் சிக்கனமும், பொருள் அடர்த்தியும், சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்தத் தொகுதியிலும் அவர் ஒரு வித்தியாசமான புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கக்படவோ, பகுதிகளாக வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள், அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங் கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும், மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, மீட்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.

ஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப் போன்ற மென்மையான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும், சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.

மனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். ‘மீறல்’ காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப் பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.

முற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனை உள்ளடக்கத் தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயுதப் போராட்டத்தின் மறு பக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.

தமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.

‘நிமிர்வு’ என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலாச்சிய காலக் கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட்டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவையே எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகிறது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.

‘வீழ்ச்சி’ தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. அரசுசார் நிறுவனங்களின் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.

நீர்வையின் கதைகளின் உள்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸமாக இருக்கக் கூடும்.

சிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.

சிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது அதனுடைய மையக் கருத்து. நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்லது அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் வாசிக்கும் போது அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் தன்னுள் அதனை எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற்கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.

சிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறோனோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.

உண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வடையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.

அந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.

‘வெறி’ என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால்தான் நீர்வை பொன்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.

குடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதையின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்க முடியும். ஆண்மைக் குறைபாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

சிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில் ‘உடைப்பு’ சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும் சுரண்ட வேண்டும் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.

ஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. ‘பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்.’ என ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமின்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.

சிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மௌனம் ஆகும். தௌ்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு அல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மௌனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.

‘கர்வம்’ சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி ‘எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது’ எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளி எம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.

எந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். ‘ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்’ என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா?

இன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்வேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப்பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் பீடிகையாக ஆரம்பிப்பார்கள். ‘அவன் பித்தனா? இல்லை. அவன் சித்தனா?’ என்ற பீடிகையுடன் இந் நூலின் முதற் கதையான ‘நிமிர்வு’ ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.
‘துரோகி! ஏமாத்திப் போட்டியேடி? பொன்னம்மா பாட்டி கோபாவேசமாயக் கத்துகிறாள்’ என ‘மாயை’ என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்குகிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டதின் மறுபக்கம், குடும்ப கௌரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்திரமான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டுவிட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள்; நுழைய வைக்க முடிகிறது.

இதே சிறந்த படைப்பாக்க முறையை ‘புதிர்’ கதையிலும் காண முடிகிறது. ‘என்ரை அவரை இன்னும் காணேல்லையே’ என ஆரம்பிக்கும் போதே கணைவனைக் காணது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.

இவ்வாறு படைப்பை மையத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் சொல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லுதல் மற்றொரு முறையாகும்.

நீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஓட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.

பாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஓவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப் பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வெண் மாதவனும் மறக்க முடியாதவர்கள்.

ஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. ‘கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது’ என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.

மாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத் முடியும் என்பதற்கு ‘மீட்பு’ கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பின்னர் ‘எமது ஒன்றித் தலைவன் அணிஷ் றாய் சௌத்ரி’ என்கிறார் நீர்வை. எமது புருவம் உயரக்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல ‘ கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்வளையும் ஹீகிளி நதி’ எனும் போது ஆச்சிரியத்தில் மிதக்கும் எமக்கு ‘வங்க … சரம்பூர் கல்லூரி’ எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.

சிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைத்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு மட்டுமே சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன. இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோ, சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூட்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.

நீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.

தனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்பாக்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.

அறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல் இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.
27.11.2008

Read Full Post »

>நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பான ‘நிமிர்வு’ கொழும்பு தர்மாராம வீதியில் உள்ள WERC மண்டபத்தில் மே 10ம் திகதி 2009ல் நடைபெற்றது.

செல்வி திருச்சந்திரன் தலைமை ஏற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார்.

நூல் பற்றிய முன்னீட்டை எம்.கே.முருகானந்தன் வழங்கினார்.

இது ஒரு வி்த்தியாசமான வெளியீட்டு விழா. இங்கு மாலைகள் போடப்படவில்லை. பொன்னாடைகள் போர்த்ப்படவில்லை. நூல்கள் விற்பனைக்கு விடப்படவில்லை. பிரமுகர் ஒருவருக்கு முதற் பிரதி வழங்கப்படவில்லை. விசேட பிரதிகள் வழங்கப்படவில்லை

ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு (சுமார் 30 பேருக்கு) இரண்டு வாரங்களுக்கு முன்னரே நூல் பிரதி வழங்கப்பட்டு அவர்கள் முழுமையாக அவற்றைப் படித்து தமது மனப் பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அவர்கள் தமது கருத்துக்களை அக் கூட்டத்தில் வெளிப்படையாக, சுருக்கமாக சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் வெளிப்படுத்த அவகாசம் கொடுக்கப்பட்டது.

செல்வி திருச்சநதிரன், தெளிவத்தை ஜேசப், பேராசிரியர் சபா ஜெயராஜா, மதுசூதனன், கே.விஜயன்,ந ரவீந்திரன், மு.பொன்னம்பலம், மகப் பேற்று மருத்துவர் நஜீமுடீன், நாடக் கலைஞர் முத்துலிங்கம், இந்து கல்லூர் உபஅதிபர் இராஜரட்ணம் உட்பட பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

மிக வித்தியாசமான இக் கூட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முன்னோடி முயற்சியாகும். முகத்திற்கு முன் பாராட்டி முதுகுப் பக்கமாகத் தூற்றும் வழமைமைக்கு மாறாக இது நடை பெற்றது. நூல் பற்றிய ஆய்வே முதன்மை பெற்றது.

கூட்டத்தில் கருத்துத் தெரிவித் த பலரும் நீர்வை பென்னையன் தொடர்ந்து 5 தசதப்தங்களாக இலக்கியப் பங்களிப்பு செய்வதுடன் சிறுகதை எழுதுவது பற்றிப் பாராட்டினர்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் கருத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கலையழமை கவனத்தில் எடுக்காத நிலையில் இவர் ஆரம்ப காலம் முதல் கலைநேர்த்தியை கவனத்தில் கொண்டது பற்றி பாராட்டுத் தெரிவித்தனர்.

கட்சி சார்ந்த கதைகளை எழுதிய போதும் அதிலும் கலைநயம் இணைந்திருந்ததைக் குறிப்பிடனர்.
புதிய வடிவங்களைத் தேடும் போக்கும் இவரிடம் ஆதி முதல் இருந்ததமை சுட்டிக் காட்டப்பட்டது.

இத்தொகுப்பில் உள்ள நான்கு சிறுகதைகள் மிக வித்தியாசமான வடிவில், நடையில் எழுதப்பட்டதைப் பலரும் பாராட்டினர்.

நான் அவரது நூலுக்கு எழுதிய முன்னுரை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மிக நல்ல முன்னுரை எனப் பலரும் பாராட்டிய போதும், முன்னுரை இந்தளவு விரிவாக இருக்கக் கூடாது. இது வாசகனுக்கும் நூலுக்கும் இடையே நந்தியாக இடையூறு செய்கிறது என வேறு சிலர் கருத்துத் தெரிவித்தனர்.இது முன்னுரையாக இன்றி விமர்சனமாக இருக்கிறது என்றனர் இன்னும் சிலர். சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை இம் முன்னுரை எடுத்துக் காட்டுவதாகவும் சொன்னார்கள்.

நான் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை இன்னொரு பதிவாக வெளியிட உள்ளேன். அப்பொழுது நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

இக் கூட்டம் பற்றிய விரிவான செய்திகளை வீரகேசரி. தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளும் ஞானம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளும் விரிவாக வெளியிட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.

தனிநபர் புகழ்ச்சியையும் நூல் விற்பனையையும் மட்டுமே நோக்கமாக கொண்டு புத்தக வெளியீடுகள் நடைபெறும் சூழலில் பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் இத்தகைய கூட்டங்கள் வரவேற்கப்பட்வேண்டியன என்றே சொல்லத் தோன்றுகிறது. இது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை வளர்க்கும்

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>உங்கள் குழந்தை அழுகிறது.
வீறிட்டுக் கத்துகிறது!
ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல்லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரியவில்லை.

எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன.

ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.

இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் கண்ணீர் துயரளிக்கிறது.

ஏதாவது செய்ய வேண்டும் என மனம் துருதுருக்கிறது. உங்களால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டீர்களே என மூளை அறிவுறுத்துகிறது.

இன்னமும் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. எதையாவது தப்பவிட்டுவிட்டேனா என்ற குற்ற உணர்வு மேலெழுகிறது.

பதற்றப்படாதீர்கள்.

சற்று நிதானமாக யோசியுங்கள்.

அடிப்படை விடயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

*குழந்தைக்கு பசி எடுத்திருக்கக் கூடும்.
*அல்லது பாலுடன் புகுந்த காற்று ஏப்பமாக வெளியேறாது வயிற்றில் மந்தமாக இருக்கக் கூடும்.
*நப்பி நனைந்து அசௌகர்யமாக உணரக் கூடும்.
*சற்று அசதியாக இருந்து தூக்கத்தை நாடுவதாகவும் இருக்கலாம்.
*நீண்ட நேரம் படுத்திருந்ததால் அலுத்த குழந்தை மாறுதலுக்காக உங்கள் மடியை அல்லது தள்ளு வண்டியை நாடுவதாக இருக்கலாம்.

*இவை எதுவுமின்றி உங்கள் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நாடுவதாக உங்கள் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும் இருக்கலாம்.

ஏனெனில் அழுகை அதன் மொழி. இப்பொழுது அது மட்டுமே தொடர்பாடல் ஊடகமாகிறது. அதன் மூலம் உங்களுக்கு தனது விருப்பத்தை உணர்த்த முயல்கிறது.

மேற் கூறிய எதுவுமே இல்லாவிட்டால், உடல் ரீதியான பிரச்சனை ஏதும் இருக்கறதா எனப் பாருங்கள். குழந்தைக்கு சற்றுக் காய்ச்சல், வயிற்றோட்டம், சளி, இருமல் போன்ற ஏதாவது சிறு வருத்தங்கள் இருப்பதாலும் அழக் கூடும் அல்லவா?

அவை யாவுமே சரியாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை உங்களை ஆட்கொள்ளும். எதைச் செய்தாவது உங்கள் செல்லத்தின் கண்ணீரை நிறுத்த வேண்டும் என்ற ஆவேசம் எழும்

முக்கியமானது உங்களை நீங்களே நிதானப்படுத்த வேண்டியதுதான்.

*நிதானமாக ஆழ மூச்சு எடுங்கள்.
*ஒன்று இரண்டு எனப் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள்.
*’ஒன்றுமில்லை கண்ணா’ என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை குழந்தைக்கு சொல்லுங்கள்.
*மீண்டும் மீண்டும் தடவிக்கொண்டே சொல்லுங்கள்.

*என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே, அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் ஆற்றல் எனக்கில்லையே எனக் குற்ற உணர்வற்கு ஆட்படுவதைத் தவிருங்கள்.

சில தருணங்களில் காரணம் ஏதும் இன்றிக் கூட குழந்தைகள் அழுவதுண்டு என்பதை மனதில் புரிந்து கொண்டால் மனம் ஆறும்.

அந்தச் சூழலிலிருந்து உங்கள் மனத்தை பிரித்து எடுங்கள்.

மென்மையான இசை பின்னணியில் ஒலித்தால் உங்கள் மனத்தில் உள்ள நிராசை விலகி நம்பிக்கை பிறக்கும். குழந்தையும் இசையில் இணங்கக் கூடும்.

கணவர், அம்மா, அப்பா, சகோதரம், பாட்டி போன்ற ஒருவரின் பாதுகாப்பில் உங்கள் குழந்தையை சற்று நேரம் விட்டுவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

எந்த உதவியும் கிட்டாவிட்டால் குழந்தையை பிராமில் அல்லது தொட்டிலில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றொரு அறைக்குச் சென்று சற்று ஆறுதல் எடுங்கள். குழந்தை சற்று அழுவதை கவனத்தில் எடுக்காது உங்கள் மனத்தை நிதானப்படுத்துங்கள்.


இவை எதுவும் சரிவராவிட்டால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அல்லது தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டு முற்றத்தில் உலாவுங்கள். வெளியே காற்றாற உலாவப் போவதும் உதவக் கூடும்.


ஷொப்பிங் கொம்பிளக்ஸ் அருகில் இருந்தால் குழந்தையுடன் ஒரு நடை போய் வாருங்கள். புதிய சூழல் உங்கள் இருவருக்குமே புத்துணர்ச்சி அளிக்கும்.

சிறுகுழந்தை உள்ளவர்களுக்கு போதிய தூக்கமின்மை பெரும் பிரச்சனையாகும். குறைந்த தூக்கம் உடலையும் மனத்தையும் அலுப்படையச் செய்துவிடும். குழந்தை அழுவது போன்ற சாதாரண பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் செய்துவிடலாம். எனவே போதிய தூக்கம் உங்களுக்கு முக்கியம்.


குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வு எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யக் கூடாதது ஒன்று உண்டு!

குழந்தையை அமைதிப்படுத்துவதாக அல்லது அதற்கு விளையாட்டுக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஆட்டவோ, உலுப்பவோ, தூக்கிப் போடவோ முயல வேண்டாம்.

குழந்தைகளின் கழுத்துத் தசைகள் பெலவீனமானவை. தமது தலையை தாம் தூக்கி நிறுத்தவே சிரமப்படுபவை. கடுமையாக தூக்கிப் போட்டு ஆட்டினால் கழுத்து எலும்புகள் விலகலாம். அதனால் வலிப்பு, பார்வையிழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே குழந்தையை மெதுமையாக பூப்போலக் கையாளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>எமது பாடசாலை அபிவிருத்தியில் மற்றுமொரு பங்களிப்பு.

பாடசாலையின் பழைய மாணவியும் சுகாதார திணைக்களத்தில் பெருந்தோட்டப் பகுதிப் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி உமா சிவபாதசுந்தரம் அவர்களின் நிதியுதவியில் நடைபெற்றுள்ளது.

எமது பாடசாலையின் பாலர் பிரிவினது வளாகம் சுற்று மதில் இன்றி வெறுமனே கதியால் நடப்பட்டு முட்கம்பி வேலியினால் அடைக்கப் பட்டிருந்தது.

இது காலத்திற்கு ஏற்றது அல்ல. தற்போதையை பாடசாலைகள் எல்லாம் வர்ணம் பூசப்பட்ட மதில்களுடன், அதில் பொதுஅறிவையும் அழகுணர்ச்சியையும் வளர்க்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டு கவர்ச்சியாக இருக்கும்போது எமது மாணவர்கள் முட்கம்பி வேலிக்குள் இருப்பது பொருத்தமன்று.

பதிவின் ஆரம்பத்திலுள்ளது புதிய தோற்றம்.

கீழேயிருப்பது முன்பிருந்து பழைய முள்வேலி.

அதனால் அது பாதுகாப்பு அற்றதாக இருந்ததுடன் பிள்ளைகளுக்கு தவறுதலாகக் காயம் ஏற்படுத்தவும் கூடும் என அஞ்சப்பட்டது.
அத்துடன் பாடசாலைக்கு அழகு சேர்ப்பதாகவும் இருக்கவில்லை.

அழகான மனதிற்கு இதமான சுற்றுச் சூழல் கற்கைச் செயற்பாட்டை ஊக்குவிக்கவும் செய்யும்.

அதனால் பாடசாலையின் முகப்பு எல்லையை சுற்றுமதில் கொண்டு அடைப்பது அவசியம் எனப்பட்டது. அது நல்லதாயினும் அந்த மதிலானது குறுகிய பரப்பளவில் இருக்கும் கட்டடத்திற்கான வெளிச்சத்தை தடைசெய்யும் என அஞ்சப்பட்டது.

எனவே அதிபர் அதனை பாதுகாப்பாக அடைப்பதற்கு புதிய திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

அதன் பிரகாரம் அத்திவாரம் இட்டு தூண்கள் நாட்டி இடைவெளிகளை இரும்பு வலையினால் அடைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதற்கான நிதியுதவியை டாக்டர் செல்வி உமா சிவபாதசுந்தரம் தந்து உதவினார்கள்.

ரூபா அறுபதினாயிரம் செலவு கொண்டு தனது பெற்றோர்களான ஆ.சிவபாதசுந்தரம் தம்பதிகளின் நினைவாக அந்த இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இது பாடசாலையின் மற்றொரு தோற்றம். புதிதாக அமைக்கப்பட்ட இரும்பு வலை அடைப்புடன் அழகாகத் தோற்றம் அளிக்கிறது.

அவரின் தன்னலம் கருதாத பணிக்கு எமது பழை மாணவர் ஒன்றியம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது

Read Full Post »

>கவிதைக்கு என்று ஒரு இதழ் இப்பொழுது கிழக்கு இலங்கையிலிருந்த வெளி வருகிறது. எத்தனையோ இலக்கிய இதழ்கள் மலர்ந்து, மணம் வீச ஆரம்பிக்க முன்னரே கருகிவிடுகிற சூழலில் கவிதைக்கு என்றொரு இதழ் தொடங்கி நடந்த தனித் துணிவு வேண்டும்.

துணிவோடு களத்தில் இறங்கியுள்ளார் திரு.எஸ்.ஆர்.தனபாலசிங்கம் திருகோணமலையிலிருந்து. கடந்த இரு வருடங்களில் 11 இதழ்கள். நிச்சயம் ஈழத்து இலக்கியச் சூழலில் இது ஒரு சாதனைதான்.

‘நீங்களும் எழுதலாம்’ இதுதான் இதழின் பெயர். இது இருமாத கவிதை இதழ். பங்குனி சித்திரை இதழ் எனது கையில் உள்ளது. 40 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. மிக வித்தியாசமான சைஸ் 3.05 x 8.25 அங்குல அளவு.

இந்த இதழை 27 கவிஞர்களின் புத்தம் புதிய படைப்புகள் அலங்கரிக்கின்றன. பெரும்பாலானவர்கள் புதிய இளைய கவிஞர்கள்.

உண்மையில் புதிய தலைமுறையினரை கவிதைப் படைப்பாக்க முயற்சியில் ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த இதழ் வெளிவருகிறது. ஆயினும் மூத்த கவிஞர்களான ஜின்னா ஷரிபுத்தீன், வஸீம் அக்ரம், ஷெல்லதாசன் போன்ற பலரின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

“பேரளவில் நீ தமிழன்
நான் முஸ்லீம்
பேசுமொழி பண்பாடு
கலாசார ஒற்றுமையால்
நான்வேறு நீவேறா
நமக்கள்ளே ஏன் பிறவு!”

“ஒன்றாக உண்டு
ஒன்றாகத் தமிழ் கற்று
ஒன்றாகச் சேர்ந்து
ஓடிவிளை யாடி..”

என்று தொடரும் ஜின்னா ஷரிபுத்தீன் கவிதை மனத்தைத் தொடுகிறது. தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை, காலத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

“மாயைகளை விழுங்கியபடி
காற்றும் நட்சத்திரமும்
வானமும் காதலில் நனைந்தன”
என வார்த்தைகளைச் செதுக்குகிறார் வஸீம் அக்ரம்.

நெடுந்தீவு முகிலனின் ‘ஆத்துமாவின் ராகம்’ வயிற்றுப் பசியைத் தணிப்பதற்கான விலை போகும் பெண்ணின் துயரை பாடுகிறது.

சோ.பத்மநாதன் மற்றும் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரின் மொழிபெயர்புக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் ஆங்கில மூலக் கவிதைகளையும் இணைத்துள்ளது மிகவும் ஆரோக்கியமான விடயம்.

உயிர் எழுத்து இதழில் வெளிவந்த க.சி.அகமுடைநம்பியின் பாரதியின் குழப்பங்கள் முரண்பாடுகள் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் IBC வானொலியில் ‘நீங்களும் எழுதலாம்’ இதழ் பற்றி ஒலிபரப்பான கட்டுரையும்
இடம் பெற்றுள்ளன.

நூல் அறிமுகம், வாசகர் கடிதம் ஆகியனவும் இடம் பெறுகின்றன.

கவிதைகளை மட்டுமின்றி
“ஆக்கபூர்வமான விமர்சனங்கள்,
கவிதை சம்பந்தமான குறிப்புகள்,
கட்டுரைகள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன” என்கிறார் இதழ் ஆசிரியர்.

உங்கள் கைவண்ணத்துயும் காட்லாமே!

வாசிப்பதற்கு இதமான சஞ்சிகை.

படைப்புகளை அனுப்பிப் பங்களிப்பதோடு இலக்கிய ஆர்வலர்கள் கட்டாயம் ஆதரவு தர வேண்டியது அவசியம்.

வருட சந்தா ரூபா 200 மட்டுமே.
வெளிநாடு US $ 10 மட்டுமே.

தொடர்புகளுக்கு

‘நீங்களும் எழுதலாம்’
103/1, திருமால் வீதி
திருகோணமலை.
தொலைபேசி :- 0778812912
email :- neenkal@yahoo.com


Read Full Post »