Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2009

>ரம்ழான் நோன்பு பிடித்தல் இஸ்லாமிய சமூகத்தினரின் மதக் கடமைகளில் முதன்மையானது.

பகல் முழுவதும் நீர் கூட இருந்தாது ஆற்றப்படும் கடுமையான புனித நோன்பு இது. ஒரு மாதத்திற்கு இடைவிடாது தொடரப்படுவது.

அதே நேரம் ஏனையவர்களைப் போலவே இஸ்லாமியர்களிலும் நீரிழிவு நோயாளர்கள் பலர் இருக்கிறார்கள். நீரிழிவு நோயாளர்களும் இந் நோன்பை மற்றவர்கள் போலவே கடைப்பிடிக்கிறார்கள்.

பாதிப்பு ஏற்படுமா?

இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படுமா அல்லவா என்பதை அறிந்து கொள்வதற்காக மொராக்கோ நாட்டில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. ரம்ழான் 1422 ல் செய்யப்பட்டது. 48 வயது முதல் 60 வயதுவரையான 62 பெண்களும், 58 ஆண்களுமாக 120 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களது நீரிழிவின் நிலையானது உணவுக் கட்டுப்பாட்டினாலும், நீரிழிவு மாத்திரைகளாலும் ஏற்கனவே கட்டுப்பாட்டில் இருந்தது.

அறிவுறுத்தல்கள்

நோன்பு ஆரம்பமாகும் போது அவர்களுக்கு ஆரோக்கிய உணவு முறை பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், மாத்திரைகளும் நோன்பு காலத்தின் உணவு நேரங்களுக்கு ஏற்றபடி நீண்ட நேரம் தொழிற்படும் மாத்திரைகளாக (gliclazide- modified release) மாற்றப்பட்டன.

நலநிலைக் கணிப்பீடு

நோன்பு ஆரம்பமாவதற்கு முன் தினமும், நோன்பின்போது 15ம் மற்றும் 29வது தினங்களிலும், நோன்பு முடிந்த பின் 15 நாளிலும் அவர்களது உடல்நிலை மற்றும், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களது ஆரோக்கிய நிலை பற்றிக் கணிப்பீடு செய்யப்பட்டது.



குருதி சீனியின் அளவு, கொலஸ்டரோல் அளவு, பிரஸர், ஆகியவை அளவிடப்பட்துடன், அவர்களது ஈரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயற்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன.

நோன்பின் ஆரோக்கியமான மாற்றங்கள்

முடிவுகள் பரிசீலிக்கப்பட்ட போது அவர்கள் உட்கொண்ட உணவின் சக்திப் பெறுமானத்தில் அதிக மாற்றம் இருக்கவில்லை. அவர்களது எடை, உடற் திணிவு (Body mass index)>பிரஸர் ஆகியன சற்றுக் குறைந்திருந்தன. இவை நல்ல மாற்றங்களே.

உணவுக்கு முன்னும் பின்னருமான இரத்த சீனியின் அளவு (Fasting and post-prandial glucose) ஆகியன குறைந்திருந்தன. இரத்த இன்சுலின் அளவு சற்று அதிகரித்திருந்தது. ஈரல் செயற்பாட்டிலும் மாற்றங்கள் இருக்கவில்லை. இவையும் நல்லாரோக்கியத்தையே குறிக்கின்றன.

ஏனைய மாற்றங்கள்

ஆயினும் யூரியா, யூரிக் அமிலம், புரத அளவு, (fluctuations in some lipid and hematological parameters, creatinine, urea, uric acid, total protein, bilirubin, and electrolytes) போன்ற சிலவற்றில் சற்று ஏற்றமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தபோதும் அவை எதுவுமே சாதாரண அளவுகளைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ ஏற்கனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், நீரிழிவு மாத்திரைகள் உட்கொள்ளும் முறையில் மாற்றம், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் ரம்ழான் நோன்பு பிடிப்பதில் ஆபத்து எதுவும் இல்லை’ என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முடிவாக

எனவே நீரிழிவு நோயாளர்கள் ரம்ழான் நோன்பின் போது உடற் பயிற்சிகள் செய்வது, உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்வது கைக் கொள்வதுடன், மருந்து உட்கொள்வதில் மருத்துவரின் ஆலோசனையுடன் மாற்றங்களைச் செய்து கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.



Source: Clinical and Experimental Hypertension, Volume 30, Number 5, July 2008 , pp. 339-357(19)

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப வைத்தியர்

Read Full Post »

>
“சரியான வருத்தம் மேனை…

வெளியிலை சொல்லச் சங்கயீனப்பட்டு இவ்வளவு நாளும் இருந்திட்டன்… இனித் தாங்கேலாது”

என்று சொல்லிய அவள் முகத்தைச் சற்று நெருங்கக் கொண்டு வந்தாள்.

“சரியா வெள்ளை படுகுது மேனை, ஒரே வெடுக்கு, சில நேரத்திலை செங்கல் மங்கலாயும் படுகுது”.

மெல்லிய, அடங்கிய குரலில் இரகசியம் சொல்வது போல.

செங்கல் மங்கலாகவும் படுகிறது என்று சொன்னதைக் கேட்டதும் மனது சங்கடப்பட்டது. மாசவிடாய் நின்ற பின் அவ்வாறு படுவது நல்ல அறிகுறி அல்ல. கர்ப்பப்பை கழுத்து புற்று நோய் (Carcinoma of Cervix) என்பதே முதற் சந்தேகக் கொள்ள வேண்டும். பாவம் ஆச்சி! அவ்வாறாக இருக்கக் கூடாது என மனம் வேண்டிக் கொண்டது.

“ஆச்சிக்கு வயசு எத்தினை? பிள்ளையள் எத்தனை? மாசச் சுகயீனம் நிண்டு எவ்வளவு காலம்?”

நோய்க்கான காரணத்தைக் கண்டறியக் கேள்விகளை அடுக்கினேன்.

“வயசு அறுபது அறுபத்தைஞ்சு வரும், ஆறு பொடியள். இளையவனுக்கே வயசு 25 வரும் மனுசனும் போயிட்டார். மாசச் சுகயீனம் நிண்டு 15-20 வருஷம் வரும்”.

ஆறு பிள்ளைகளா!

அதிக மகப் பேறுகளும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாகும்.

“மாசச் சுகயினம் நிண்ட பிறகு செங்கல் மங்கலாகப் படுகிறதோ, ரத்தம் படுகிறதோ அவ்வளவு நல்லதில்லை. சும்மா சின்னச் சுகயீனத்துக்கும் படலாம். ஆனால் கடும் வருத்தங்களுக்கும் படலாம். எண்டபடியால் நான் ஒருக்கால் கர்ப்பப்பையை சோதிச்சுப் பார்க்க வேணும்” என்று விளக்கினேன்.

‘கான்சர் போலை’ என்று சொல்வதைத் தவிர்த்து விளக்கினேன்.

அவள் இந்த வயதிலும் மிகவும் நாணினாள். வேண்டாம் என மறுத்தாள். ஆயினும் பின்பு எனது விளக்கங்களை ஏற்றுக் கொண்டாள்.

மிகுந்த வெட்கத்திற்கும், வெட்கத்துடன் கூடிய எதிர்ப்பிற்கும் மத்தியில் நர்சுடைய உதவியுடன் அவளது உள்ளுறுப்பைப் பார்த்த போது கான்ஸர் நோயிற்கான அறிகுறி தென்படாதது நிம்மதியளித்தது.

என்னவாயிருக்கும்?

பரிசோதிக்க வேண்டும். ஆனால்….

மாதவிடாய் நின்ற பின்னர் பெண்ணுறுப்பின் சுரப்பிகள் சுரப்பது குறைந்து விடுவதால் ஈரலிப்புக் குறைந்து விடும். அத்தகைய நிலையில் இணக்கமான உறவு கூட சிலருக்கு வலி ஏற்படுத்திவிடும். அப்படியான நிலையில் வயதான ஆச்சிக்கு பரிசோதனை வேதனை அளிக்கக் கூடும் என்பதால்தான் மிகுந்த அவதானம் தேவைப்பட்டது.

கையுறை அணிந்த கையினால் வலி ஏற்படாது மிக நிதானமாகவும் மென்மையாகவும் சோதித்தேன்.

யோசித்தபடி பரிசோதித்த போது அந்த நூல் விரல் நுனியில் தட்டுப்பட்டது.

ஓ| லூப் போட்டிருக்கிறாள்.

லூப் என்பது கர்ப்பம் தங்காமல் இருப்பதற்காகப் போடப்படும். பழக்கப்பட்ட, பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறை. ஒரு முறை போட்டுவிட்டால் பல வருடங்களுக்கு கர்ப்பம் தங்கும் எனற் பயம் தேவையில்லை.

(IUCD- Intra Uterine Contraceptive Device) என மருத்துவத்தில் சொல்வோம்.

ஆனால் ஆச்சிக்கு ஏன் லூப்?

நீண்டகாலமாகக் கிடந்தால் இறுகிப் போயிருந்த அதை மிகுந்த பிரயாசையின் பின் எடுத்து அவளுக்குக் காட்டினேன்.

“ஓம் மேனை, கடைசி மேன் பிறக்கையுக்கை பெரியாஸ்பத்திரி டாக்குத்தர் வைச்சு விட்டவர். மறந்து போனன்.”

அடுத்த வாரம் மகிழ்ச்சியுடன் வந்த ஆச்சி “இப்ப எல்லாம் நல்ல சுகம்: ஐயாட்டைச் சொல்லிப் போட்டு போக வந்தனான்” என்றாள்.

பலரையும் மறந்துவிடும் எனக்கு அவள் முகம் இன்னமும் மறக்கவே இல்லை.

எம்.கே.முருகானந்தன்.

சிரித்திரனில் 1986 களில் வெளியானது சிறிய மாற்றங்களுடன்

Read Full Post »

>கற்கை ஆற்றலையும் பாதிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்

“தேச்சுத் தேச்சு இவன்ரை மூக்கு வீங்கிப் போச்சு எப்ப பாத்தாலும் தும்மலும் சளியும் தான்’ எனச் சலித்தார் அம்மா.

சினத்து வீங்கிய முகத்துடன் நின்ற சின்னப் பையனின் மூக்கிலிருந்து வழிந்த சளி அசிங்கமாகத் தோற்றமளித்தது. சோர்வு அவனது முகம் முழுவதையும் விழுங்குவது போல அப்பிக் கிடந்தது. உடலின் சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டவன் போல களைப்புடன் இருந்தான்.

ஆம், ஒவ்வாமை மூக்கால் வடிவது (Allergic rhinitis) என்பது வெறுமனே அரிப்பும், தும்மலும் நிறைந்த மூக்கு மட்டுமல்ல. தானே வழிந்து முடியட்டும் என அலட்சியப்படுத்தக்கூடியதும் அல்ல. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.


எந்த வயதினருக்கும் இப்பிரச்சினை ஏற்படக்கூடும். ஆயினும் குழந்தைகளில் இதன் பாதிப்பு அதிகமாகும். இது விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் குழந்தையின் உடல் நலம் சிறப்பாக இருக்காது.

அதன் கற்கை ஆற்றல், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும். சுலபமாக மூச்சு எடுத்து வெளிவிட முடியாததாலும் அரிப்பு, தும்மல் போன்றவை ஏற்படுவதால் தூக்கத்தையும் கெடுக்கும். தூக்கம் கெட்டால் மறுநாள் உற்சாகமாக செயற்பட முடியாது என்பது வெளிப்படை. இவை காரணமாக பிள்ளை தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியாது. பாடசாலையில் பின்தங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.

மூக்கால் ஒழுகும் பிள்ளை என சக மாணவர்களின் ஏளனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாவதால் குழந்தையின் மனம் சோர்வடைந்து பள்ளி செல்லுவதற்கும் கற்பதற்குமான ஆர்வத்தைக் கெடுத்து விடலாம்.

அதற்கு மேலாக அழற்சியடைந்த மூக்கின் மென்சவ்வுகள் காரணமாக யூதெசியன் ரியூப், காற்றறைகள் ஆகியவையும் அழற்சியடைவதால், காது அடைப்பு, காதுக் குத்து, சைனசைரிஸ் போன்ற நோய்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

ஆஸ்மா ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஒவ்வாமை மூக்கால் வடியும் நோயாளிகளுக்கு அதிகமாகும்.

எனவே பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும் அலட்சியப்படுத்தாது இவர்களது பிரச்சினையை வைத்திய ஆலோசனைக்கு அனுப்புவது நல்லது.

இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

ஒவ்வாமை உள்ள பொருளுடன் தொடர்பு கொள்ளாதிருப்பதே ஒரே வழியாகும். படுக்கைப் பூச்சி, தூசிப் பூச்சி, மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்ற பலவும் காரணமாகலாம். எனவே அவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

தலையணை, படுக்கை, படுக்கை விரிப்பு போன்றவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன், வாரத்திற்கு இரண்டு தடவையாவது வெயிலில் காயப்போட வேண்டும். நுளம்பு வலை, துணியாலான கால்மிதி, திரைச்சீலை போன்றவற்றையும் அவ்வாறே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ரோமம் உள்ள பொம்மைகள், கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அகற்றுங்கள் அல்லது வக்கியூம் கிளீனரால் (Vacuum Cleaner) சுத்தப்படுத்துங்கள்.

பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடிக்கடி குளிக்கவார்த்து சுத்தமாக வைத்திருப்பதுடன், படுக்கை அறைக்குள் நுழைய விடாதீர்கள். பலரும் நினைப்பது போல அவற்றின் ரோமம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. அவற்றின் உதிர்ந்த சருமத்துகள்களும் எச்சில் மற்றும் காய்ந்த சிறுநீருமே ஒவ்வாமையை ஏற்படுத்தி மூக்கால் வடிவதைத் தூண்டுகிறது.

கரப்பொத்தான் பூச்சியை ஒழியுங்கள். தூசி தட்டுவதற்குப் பதிலாக ஈரத்துணியால் சுத்தப்படுத்துங்கள்.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அலர்ஜிக்கு எதிரான (Antihistamine) மாத்திரைகள் உதவும். லொராடடீன், டெஸ்லொராடடீன் போன்ற புதிய பரம்பரை மாத்திரைகள் அதிக தூக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் உபயோகிக்கக் கூடியதாகும்.

இவற்றுடன் மூக்கிற்கான விசிறி மருந்துகளும் (Steroid Nasal Spray) மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாகும்.

இவற்றைத் தனித்தனியாகவோ அன்றி இணைத்தும் உபயோகிக்கலாம். இவற்றை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். இவை பாரிய பக்க விளைவுகள் அற்றவை யாதலால் அவ்வாறு மாதக் கணக்கில் உபயோகிப்பது ஆபத்தற்றது.

இத்தகைய நோயுள்ள பலருக்கும் மூக்கின் உள்ளே இருக்கும் குருத்தெலும்பான Inferior Turbinates வீக்கமடைவது உண்டு. இது கடுமையாக வீக்கமடைந்து சுவாசத்தையும் பாதிப்பதாக இருந்தால் ENT Surgeon யை சந்திக்கவேண்டி நேரலாம்.

எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்.

Read Full Post »

>மனிதர்களுடன் கூடவே பிறப்பது மறதி!

பச்சிளம் பாலகன் முதல், பல்விழுந்த பாட்டாக்கள் வரை எவருமே மறதிக்கு ஆளாகாமல் தப்ப முடிவதில்லை.

தாலியைச் செய்ய மறந்து விட்டு, மணவறை ஏறிய மணவாளன் பற்றியும்,

புது மனைவியை மறந்து போய் விட்டுவிட்டுத் தன்னந்தனியே, இன்பக் கனவுகளுடன், தேன் நிலவைக் கொண்டாடச் சென்ற புதுமாப் பிள்ளை பற்றியும்,

சவரக்கத்தியை மறந்து விட்டு ஷஷேவ்| எடுக்கச் சென்ற சவரத் தொழிலாளி பற்றியும்,

பூவையும் கற்பூரத்தையும், மறந்து விட்டுப் பூசை செய்யக் கோயிலு க்குப் போன ஐயர் பற்றியும்,

பாஸ் போட்டையும், விஸாவையும் வீட்டில் பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டு, வெளிநாடு பறப்பதற்காக விமானநிலையம் சென்ற நவயுக மறதி நாயகர்கள் பற்றியும்,


பல நகைச்சுவைக் கதைகளையும், சிரிப்புத் துணுக்குகளையும் அடிக்கடி படித்து ரசிக்கிறோம்.

இவை எல்லாமே கற்பனைச் சம்பவங்கள் என்று லேசாக ஒதுக்கி விட முடியாது. நாளாந்த வாழ்க்கையில் இப்படியான பல சுவையான மறதிச் சம்பவங்களையும், ‘மறதி மகாலிங்கங்களையும்’,
‘அறணை மறதிக்காரர்களையும்’
அடிக்கடி சந்திக்கவே செய்கிறோம்.

விஞ்ஞானிகளும் மறதிக்குப் பெயர் போனவர்கள். அவர்கள் பலரது நடவடிக்கைகளும், செயல்களும் பல சந்தர்ப்பங்களில் கிறுக்குத்தனமாக அமைவதுண்டு.

பிரபல விஞ்ஞானி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்த கொண்டிருந்த போது, ரிக்கற் பரிசோதகர் வந்து, அவரிடம் ரிக்கற்றைக் கேட்டார். சேட்பொக்கற், களிசான் பொக்கற், பர்ஸ், கைப்பை எல்லாம் தேடினார். காணவில்லை!
இதற்கிடையில் அந்த விஞ்ஞானியை அடையாளம் கண்டுவிட்ட ரிக்கற் பரிசோதகர்,

“பரவாயில்லை ஐயா, தேடி மினக்கெட வேண்டாம், எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கோ. வேறு ரிக்கற் தருவதற்கு ஒழுங்கு செய்கிறேன்” என்றார்.

அதைக் காதில் விழுத்தாமல் தொடர்ந்தும் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.

“எங்கு போக வேண்டும் என்பதை மறந்து விட்டேன். ரிக்கற்றைப் பார்த்துத்தான் அதை நான் அறிந்து கொள்ள வேண்டும்” என்பது அவர் கவலை.

இந்த மறதிகள் பல காரணங்களால் ஏற்படலாம்.

சிறு குழந்தைகளுக்கும், சில பெரியவர்களுக்கும் கவலையீனத்தினா லோ, அசட்டையினாலோ, அல்லது விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அக்கறையின்மையாலோ மறதி ஏற்படுகிறது.

சிலர் விஷயங்களைக் கவனத்திற்கு எடுத்தாலும் வேலைப்பளுவால் பலவற்றை மறந்து விடுவார்கள்.

சுயநல காரணங்களுக்காகச் சில விஷயங்களை ஷமறப்பவர்கள்| சிலர், மறந்து விட்டதாகப் பாவனை பண்ணுவர்கள் இவர்களிற் பலர்!

கடன் வாங்கிய பணத்தைச் ‘சுலபமாக’ மறந்து விட்டு, கடன் கொடுத்தவர் விசாரித்தால், “நான் சரியான மறதிக்காரன்”

என்று அசட்டுச் சிரிப்புடன் தலையைச் சொறிவார்கள்.

வேறு சில காரியக்காரரான மறதிக்காரர்கள், அரிய புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு, அவற்றைத் திருப்பிக் கொடுப்பதை ‘வசதியாக’ மறந்துவிட்டு, சொந்த நூலகத்தையே உண்டாக்கி விடுவார்கள்.

வயதானவர்களின் மறதி வித்தியாசமானது.

காலையில் அவர்களுடன் சாப்பிட்ட சாப்பாடு பற்றியோ, அல்லது அவர்களது பேரப்பிள்ளையின் பெயர் என்ன என்றோ விசாரித்தால் ‘திரு திருவென’ முழிப்பார்கள்!

ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சிறு விஷயங்களைப் பற்றிக்கூட திகதி, கிழமை, நேரம் போன்ற விபரங்களுடன் விஸ்தாரமாக உற்சாகத்துடன் விளக்குவார்கள்.

தலையில் அடிபட்டவர்களுக்குச் சில வேளைகளில் ஒரு புதுமையான மறதி ஏற்படுவதுண்டு. அடிபட்ட அந்தச் சம்பவம் பற்றியும், அதற்குமுன் நடந்த சம்பவம் பற்றியும் மாத்திரம் எதுவும் நினைவில்லாமல் ‘பேய் அடித்தவன்’ போல விழிப்பார்கள்.

‘டாக்டரின் டயறி| பகுதிக்கு இம்முறை எழுதுவதற்கான குறிப்புக்கள் எழுதி வைத்திருந்த டயறியை மறதியில் எங்கோ தவற விட்டுவிட்டதால், மறதியைப் பற்றித் ‘திடீர் ஞானோதயம்’ வந்தது.

எனவே வைத்தியத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சில மறதிச் சம்பவங்கள் பற்றி – மறக்காமல் இருப்பவற்றை எழுதி உங்களைக் கொஞ்சம் அறுக்கலாம் என்றிருக்கின்றேன்.

மறதி 1

ஆறுவயது மதிக்கத்தக்க சிறுவனைக் கூட்டிக் கொண்டு, அந்த இளம் தம்பதிகள் எனது அறைக்குள் நுழைந்ததும், குப்பென ஓர் துர்நாற் றம் அறையெங்கும் பரவியது. மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்சார விசிறியை, விசையாகச் சுழல விட்டுவிட்டு அவர்களை விசாரித்தேன்.

சென்ற மூன்று மாதகாலமாக அவர்களின் பிள்ளையின் மூக்கிலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சளி வடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் அந்த வெளி மாகாணப் பிரதான நகரின் பிரபல டாக்டரிடம் காட்டித் தொடர்ந்து வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பக்ரிம், அம்பிசிலின், எரிதிரோமைசீன், கெப்போரெக்ஸ், என்று எல்லாக் காரமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் பாவித்து விட்டார்கள். ஆனால் ஒரு வித பிரயோசனமுமில்லை! மணம் அடங்க வில்லை!

மருந்து கொடுத்துப் பெற்றோர்களும், மருந்து குடித்து பிள்ளையும் அலுத்துக் களைத்து விட்டார்கள்.

தொடர்ந்து வைத்தியம் செய்த டாக்டரும் களைத்துப் போய் “பிள்ளையைக் கொழும்புக்குக் கொண்டுபோய் ENT ஸ்பெசலிஸ்டிடம் காட்ட வேணும்” என்று சொல்லிக் கடிதமும் கொடுத்து விட்டார்.

கொழும்புக்குப் போய் நின்று வைத்தியம் செய்விப்பதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஊர் வந்திருந்த அவர்கள் கடைசி முயற்சியாக என்னிடமும் வந்திருந்தார்கள்.

இவ்வளவு மருந்து கொடுத்தும் மாறவில்லை என்பதால் ஏதோ ஒரு முக்கிய விசயம் கவனிக்கப்படாமல் தப்ப விடப்பட்டு விட்டது என மனதுக்குப்பட்டது.

ஓடிக்கொண்டிருந்த துர்நாற்றச் சளியைப் பஞ்சினால் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு, கூரிய ஒளியின் உதவியுடன் மூக்கை ஆராய்ந்தேன். இடது மூக்குத் துவாரத்தின் ஆழத்தில் ஏதோ இருப்பதுபோலத் தோன்றியது.

பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு சிறு மருத்துவ உபகரணங்களுடன் அதை எடுக்க முயன்ற போது, துள்ளி வெளியே விழுந்து சளியால் மூடப்பட்ட பொருளொன்று!

எடுத்துத் துடைத்துப் பார்த்தபொழுது – அது ஒரு ரப்பர்த்துண்டு – இரேசர்!!

எப்பொழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும், சஞ்சலத்திற்கும், பணச் செலவிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதியாகக் கிடந்தது.

Read Full Post »

>“வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.
‘திக்’ கென்ற மோதல் –
திடுக்கிட்டுப் போனோமே!”

என்ற முருகையனின் கவிதை வரிகளுடன் முற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலிக் கூட்டத்தை ஆரம்பித்தார் தேவகெளரி. இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கூட்டம் 58,தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. சென்ற ஞாயிறு ஆகஸ்ட் 2 ம் திகதி 4.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது.

திருமதி முருகையன், அவரது மகன், மகள், மருமக்கள் மற்றும் பேரக் குழந்தைகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டது மனத்தைத் தொடும் சம்பவமாக இருந்தது. அவர்களுடன் பேசவும், முருகையன் இழப்பினால் ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் கிடைத்தது மனதிற்கு ஆறுதல் அளித்தது.


தலைமை வகித்துப் பேசிய தேவகெளரி அவரின் ஆடம்பரமற்ற மிக எளிமையான போக்கை சிலாகித்துக் கூறினார். யாழ் பல்கலைக் கழகத்தில் உயர்நிர்வாகப் பதவியை வகித்த காலத்தில் கூட தனது வழமையான குடையுடன் நடந்து செல்லும் தன்மையை நினைவு படுத்தினார்.

சமூகத்தை நையாண்டி செய்து இயல்பான பேச்சு மொழியில் அவரைப் போல கவிதை ஆக்கியவர்கள் வேறெவரும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் எமக்குத் தந்துள்ள சுமையை அவர் கவிதையில் கொண்டு வந்தது நல்ல உதாரணம்.

மரபுக் கவிதைகளையே ஆரம்பத்தில் எழுதிய முருகையன் பின்னர் புதுக் கவிதையிலும் தனது வீச்சை அற்புதமாக வெளிப்படுத்தினார். கவிதை, பாநாடகம் போன்ற படைப்புலகி்ற்கு அப்பால் மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பையும் தேவகெளரி விதந்து பேசினார்.

அடுத்துப் பேசிய ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் மூத்த ஒருவரான நீர்வை பொன்னையன் முருகையனை பல்துறை ஆளுமை கொண்டவர் எனக் குறிப்பிட்டார். கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்புத் துறைகளில் முருகையன் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி பேசும் போது மொழிபெயர்ப்பு நுட்பங்கள் என்றதொரு அருமையான நூல் எழுதியதையும் குறிப்பட்டார்.


முருகையன் படைப்புகளில் மனிதநேயம், மனித முன்னேற்றம், போர்க்குணம் ஆகியன எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர் தனிமனிதர் அல்ல கூட்டு இயக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர். அவ்வாறே முற்போக்கு அணியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தீவிரமாக இயங்கியதையும் குறிப்பட்டார். அவரது கவிதைகள் வாள்வெட்டுப் போல கூர்மையானவை என்றார். சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தீவிர குரல் அவரது கவிதைகளில் ஒலித்ததாகவும் சொன்னார்.

மும்மொழி ஆற்றல் பெற்றவராகவும் குறிப்பட்டார். விஞ்ஞானப்பட்டதாரியான அதே நேரம் கலைப்பட்டதாரியும் கூட என வியந்து பேற்றினார். அதனால் அவரது கவிதைகளில் விஞ்ஞானத்தின் கூர்மையும், கலையழகும் சேர்ந்திருந்தது என்றார்.

முன்னொரு தடவை முருகையனின் கவிதைகளை பேராசிரியர் நுஃமான் இதே மேடையில் ஆய்வு செய்ததும் பின்னர் அக்கட்டுரை ‘முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள்’ என்ற நூலில் இடம் பெற்றதையும் குறிப்பிட்டார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொடர் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இது குமரன் புத்தக இல்லத்தால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் முருகையன், சில்லையூர் செல்வராசன், பசுபதி, இக்பால், சுபத்திரன் மற்றும் நுஃமானின் கவிதைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்குகின்றன.

முருகையனின் கவிதைகளை ஆய்வு செய்தது போதுமானது அல்ல. அவரது படைப்புகள் அனைத்ததையும் தொகுப்பதும், அவரது படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்வதும் எமக்கு முன் உள்ள பணி என்றார் நீர்வை பொன்னையன்.

விரிவுரையாளரும் முக்கிய விமர்சகர் மற்றும் ஆய்வறிஞரான த.இரவீந்திரன் நீண்டதொரு சிறந்த உரையை ஆற்றினார்.

நினைவஞ்சலிக் கூட்டமான இதில் தனது உரை முருகையனின் பங்களிப்பின் ஆளுமை பற்றியதே அன்றி படைப்புகள் பற்றிய ஆய்வு அல்ல என ஆரம்பித்தார். எழுபதுகளில் ‘கவிஞர்களின் கவிஞர்’என அறியப்பட்வர்.அக்கால மாணவனான தனக்கு கவிதை அறிமுகமாகிய போது பேசுவதுபோலும் கவிதை எழுத முடியும் என்பதை அவரது கவிதைகளில் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினேன் என்று குறிப்பிட்டார்.

முருகையன் பேச்சோசையை கவிதையில் பயன்படுத்திய போது இலக்கியத்தில் பயன்படு்தாத சொற்களை இப்பொழுது கவிதையில் பயன்படுத்துகிறார்களே என்ற சர்ச்சை எழுந்தது. அப்பொழுது ஒருவர் முருகையனிடம் சில பேச்சுவழக்குச் சொற்களைக் கூறி இவை “முன்பு இலக்கியத்தில் பயன்படுத்தாச் சொற்கள் இப்பொழுது பயன்படுத்துகிறார்களே?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இல்லை பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார் முருகையன்

“யார் பயன்படுத்தியது” என அவர் கேட்டார்.

“நான்” எனப் பெருமையோடு கூறினார்.

இது தற்புகழ்ச்சி அல்ல.

எந்த ஒரு படைப்பாளிக்கும் தனது படைப்பு பற்றிய உயர் மதிப்பு இருக்க வேண்டும்.

அது அவரிடம் இருந்தது. தனது படைப்பை தானே ரசிப்பது கூட ஒருவிதத்தில் ஆளுமைதான் என்றார் ரவீந்திரன்.

“முருகையன் தனது இறுதிக்காலத்தில் பல விடயங்களை மறந்திருந்தார், ஆயினும் தனது இலக்கியப் பங்களிப்பை மறக்கவில்லை. அவை பற்றிப் பேசும்போது அவர் முகம் மலர்ந்தது. பலவற்றை ஞாபகப்படுத்திச் சொன்னார். அத்துடன் சமத்துவ சமூகம், சமூக ஒற்றுமை, மேம்பாடு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை அவர் இறுதிவரை மறக்கவில்லை. சுயமதிப்பீட்டையும் இழக்கவில்லை” என்று கூறிய ரவீந்திரன் தான் அவர் நோயுற்ற காலத்தில் சென்று சந்தித்தபோது நடந்த சம்பவங்கள் கூடாக அவற்றைத் தெளிவுபபடுத்தினார்.

சுமார் 6 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.

ஈழத்து கவிதை இலக்கியத்திற்கு புது வீச்சும் புதுப் பார்வையும் கொடுத்த ஒரு அற்புதமான கவிஞனின் நினைவுகள் மனத்தை அழுத்த மண்டபத்திலிருந்து வெளியேறினோம்.

Read Full Post »

>காலையில் பாண், இரவில் கடையில் வாங்கிய கொத்து அல்லது நூடில்ஸ். பல வீடுகளில் தினமும் இவ்வாறு கடை உணவுதான்.

சமைப்பதற்கும் நேரம் இல்லை.

மதியம் ஒரு நேரத்திற்கு மட்டும் சோறு, அதுவும் சமைப்பதற்கு இலகுவான அதிக காஸ் செலவாகாத நன்கு ‘பொலிஸ்’ பண்ணிய சம்பா அரிசி. அல்லது அதிலும் சுலபமான நூடில்ஸ்.

இவ்வாறுதான் காலம் கழிகிறது

இன்றைய வாழ்வு நெருக்கடிகளுக்கு உள்ளாகிவிட்டது. நீண்ட வேலை நேரங்கள், கணவனும் மனைவியும் உழைக்கப் போக வேண்டிய நிர்ப்பந்தம், பிள்ளைகளின் படிப்பு ரியூசன் என நேரத்துடன் போராட வேண்டிய வாழ்க்கை. மிகுதியுள்ள சொற்ப நேரம் தொலைக்காட்சியில் முடங்கிவிடுகிறது. எனவே சமையலிலும் சாப்பாட்டிலும்தான் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.

இதனால் எமது பாரம்பரிய உணவுகளான குத்தரிச் சோறு, தவிட்டுமா இடியப்பம், அரசிக் கஞ்சி, ஒடியல் பிட்டு, குரக்கன் ரொட்டி, களி போன்ற பலவும் சிலருக்கு மறந்தே போய்விட்டன.
இடியாப்பம் நன்றி :-www.roshani.co.uk/…/recipes-vegetables/

குடும்பமாகக் கூடியியிருந்து சாப்பிடும் வழக்கம் அருகிக் கொண்டே போகிறது. உணவு வேளையின் கலந்துரையாடலும், பகிர்ந்து உண்ணும் ஆனந்தமும் நழுவி ஓடிவிட்டன.

உடல் உழைப்பு என்றால் என்னவென்று கேட்கும் காலமாயிற்று. உடற் பயிற்சிக்கும் நேரம் கிடையாது.

பாரம்பரிய உணவுகளின் நன்மை என்ன?

அவற்றின் முழுமைத் தன்மையிலிருந்து கிட்டுகிறது.
அதாவது அவை அதிகம் சுத்திகரிக்கப்படாதவை.
அவற்றில் மாப்பொருள், விட்டமின், புரதம், கொழுப்பு, கனிமம் யாவும் உள்ளன. எதுவுமே அதிகமல்லாமல் தேவையான அளவில் மட்டும் உண்டு.
நார்ப்பொருள் மட்டுமே அதிகம் உண்டு.
உணவில் நார்ப்பொருள் என்பது முருங்கைக்காய், வாழைக்காய் தோல் போன்றவற்றிலிருக்கும், நாம் வெட்டி நீக்கும் நார் அல்ல.
மாறாக சப்பித் துப்பும் நாருமல்ல.
உணவோடு உணவாகச் சேர்ந்திருப்பவை.

அரிசியின் தவிடு நல்ல உதாரணம்.

இது குத்தரிசியில் மாத்திரமல்ல, சம்பா அரிசியிலும் இருக்கவே செய்கிறது. ஆயினும் நன்றாகத் தீட்டப்பட்டால் அவை மாட்டுத் தீவனமான தவிடாக அகன்று விடும்.
நன்றாகத் தீட்டப்படாத சம்பா அரியிலும் சற்று மஞ்சளடித்து போல இருப்பதும் தவிடு தான்.
மாறாக நன்கு தீட்டப்பட்ட குத்தரிசியில் குறைவாகவே இருக்கும். அரிசியில்

மாத்திரமின்றி பழங்களிலும், காய்கறிகளிலும் கூட நார்ப்பொருள் உண்டு.

நார்ப் பொருள் என்பது என்ன?

நார்ப் பொருள் என்பதை எமது உணவில் உள்ள சக்கை எனலாம். அதாவது எமது உடலால் ஜீரணிக்க முடியாதவையும், உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட முடியாதவையும் ஆகும். உணவில் உள்ள மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியன உணவுக் கால்வாயில் சமிபாடடைந்து உறிஞ்சப்பட்டு உடல் வளர்ச்சிக்கும், செயற்பாட்டிற்குமான போஷணைப் பொருட்களைக் கொடுக்கின்றன.

ஆனால் நார்ப் பொருள் சக்கையாக மலத்துடன் வெளியேறுகிறது.

அப்படியாயின் அது ஏன் எமக்குத் தேவை?

உணவில் உள்ள நார்ப்பொருள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.

  1. கரையும் நார்ப்பொருள் (soluble fiber).
  1. கரையாத நார்ப்பொருள் (insoluble fiber).

  • கரையாத நார்ப்பொருளானது, உணவு உணவுக்கால்வாய் ஊடாக இலகுவாகப் பயணம் செய்வதற்கும் மலம் நன்றாக வெளியேறுவதற்கும் உதவுகின்றது.
  • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், மலம் ஒழுங்காகக் கழியாதவர்களுக்கும் இது உதவும்.
  • அத்துடன் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்யும்.

தீட்டாத அரிசி, கோதுமை, வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் உண்டு.

கரையும் நார்ப்பொருளானது நீரில் கரைந்து ஜெல் போன்ற ஒரு பொருளாக மாறுகிறது. இது குருதியில் கொலஸ்டரோல், சீனி ஆகியன அதிகரிப்பதைத் தடுக்கவல்லது. அவரை இன உணவுகள், கரட், புளிப்புத்தன்மை உள்ள பழங்கள். ஆப்பிள், ஓட்ஸ், பார்லி, psyllium போன்றவற்றில் தாராளமாகக் கிடைக்கும்.

நார்ப் பொருட்கள் மலச்சிக்கலை நீக்குகிறது என்றோம்.
இதனை அது இரண்டு வழிகளில் செய்கிறது.

  1. நார்ப்பொருள் செமிபாடடையாதது என்பதால் மலத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
  2. இரண்டாவதாக மலம் இறுகாமல், மெதுமையாக இருப்பதற்கு உதவுகிறது. இதனால் முக்கி வேதனைப்பட வேண்டிய தேவை இன்றி மலம் தானாகவே சுலபமாக நழுவி வெளியேறும்.

‘இது செமிபாடடையாது என்றும், சளிக்கு கூடாது’ என்று வயதானவர்களும், ஆஸ்த்மா போன்ற சளி நோயுள்ளவர்களும் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அத்துடன் பத்தியம் பார்த்து பல்வேறு மரக்கறிகளையும் சாப்பிடாது ஒதுக்குகிறார்கள்.

வேறு சிலர் சோயா, கடலை, பயறு, உழுந்து, பயிற்றை, போஞ்சி, அவரை போன்ற சத்துணவுகள் பலவற்றையும் ‘வாய்வுச் சாப்பாடு, சமிப்பதில்லை’ என ஒதுக்கிவிடுகிறார்கள்.

இவை தவறான கருத்துக்கள். இவற்றைக் குளிர் என்றும், செமிபாடடையாது எனவும் ஒதுக்குவது பிழையானது. பழங்கள், காய்கறிகள் போன்றவை சளியைத் தூண்டாது.

அத்துடன் செமிபாடு அடையாது என அவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள் உண்மையில் மெதுவாகச் செமிபாடு அடைவதால் நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற தீவிர நோய்கள் அதிகரிக்காமல் பாதுகாக்கின்றன.

அதிகமாகச் சப்பிச் சாப்பிட வேண்டியவை நார்ப்பொருளுள்ள உணவுகள்.

  • அதனால் உண்பதற்கு சற்று அதிக நேரம் எடுக்கும்.
  • அவசரப்படாது ஆறுதலாக நன்கு மென்று உண்பது உடலுக்கு நல்லது.
  • நேரம் எடுப்பதால் தேவையற்ற வீண் பசியை தணிந்துவிடும்.
  • தேவைக்கு அதிகமாக உண்ண வேண்டியிருக்காது.
  • அத்தகைய உணவுகள் வயிறை நிரப்புவதால் நீண்ட நேரத்திற்கு மீண்டும் பசியெடுக்காது.
  • நார்ப் பெர்ருள் உணவுகளில் கலோரிச் சக்தியும் குறைவு.
  • எனவே எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது எனலாம்.

மாறாக இன்று நாம் உண்பவை என்ன?

பாண், பேஹர் பணிஸ், பிஷா, நூடில்ஸ், கொத்து என சுலப உணவுகள்.

போதாக்குறைக்கு இடையே கொறிக்க ரோல்ஸ், கட்லற், பற்றிஸ் மிக்சர், பகோடா, வடை, ஐஸ்கிறீம் போன்றவை.

இவற்றில் மாப் பொருளும் எண்ணெய் மாஜரீன், அஜினமோட்டோ போன்றவையும் தானே உள்ளன.

வெற்றுக் கலோரிக் குண்டுகள்!

நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை.

உதாரணத்திற்கு நூடில்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஏறத்தாள 70சதவிகிதம் மாப்பொருளும், 17 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. அதிலுள்ள உப்பு 1500 மிகி முதல் 3000 மிகி வரையாகும்.

இது அமெரிக்க அரசு அங்கீகரித்த அளவை விட 60 சதவிகிதம் அதிகமாகும்.
உப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள இறுக்கமான காதலை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

இத்தகைய வெற்று கலோரிக் குண்டுகள் என்ன செய்யும்?

உடலை ஊதச் செய்யும். நீரிழிவு, பிரஸர், கொலஸ்டரோல் போன்றவற்றை வா வாவென அழைக்கும்.

மூளையிலும், இருதயத்திலும் இரத்தக் குழாய்களை வெடிக்கச் செய்து
மரணத்தை முற் கூட்டியே வரவேற்கும்.

உங்கள் தேர்வு எது?

பாரம்பரிய உணவா? நவ நாகரீக உணவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப வைத்தியர்

Read Full Post »