Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2009

>மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்று கேட்டால் உங்கள் விடை எதுவாக இருக்கும். இவர்கள் கதைகளைக் கேளுங்களேன்.

பணத்தையும், நேரத்தையும் வீணாக்க வைக்கும் நோய்

“இது தான் நான் பாவிக்கிற மருந்துகள். மருந்தைப் போடுறதுதான் மிச்சம். ஒரு சுகமும் இல்லை”.

அவள் நீட்டிய மருந்துச் சிட்டையில் பத்து மருந்துகளுக்குக் குறையாமல் இருந்தன. பெரும்பாலானவை விட்டமின் மருந்துகள், மற்றும் கல்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள், வலி நிவாரணிகள்.

எல்லாமே விலை உயர்ந்த மருந்துகள்.

காசையும் காலத்தையும் செலவழித்ததுதான் மிச்சம். நோய் தீர்ந்தபாடாக இல்லை.

தெளிவற்ற பற்பல அறிகுறிகள்

என்ன வருத்தம் எனக் கேட்டபோது மருந்துச் சிட்டையில் உள்ள லிஸ்டை விட நீண்ட பட்டியல் போன்று அறிகுறிகளைச் சொல்லத் தொடங்கினார்.

கை கால் உழைவு, கழுத்து நோ, நாரிப்பிடிப்பு, சோம்பல், அலுப்பு, வேலை செய்ய முடியாத களை என ஆதியும் அந்தமுமில்லாப் பரம் பொருள் போலப் பட்டியல் தொடர்ந்தது.

“ஆறு மாசமா வருத்தம். தொடர்ந்து மருந்துதான். ஆனால் நோய் தீர்ந்த பாடாகக் காணவில்லை” எனக் கூட வந்த கணவன் சலித்துக் கொண்டார்.

“இவவின்ரை வருத்தத்தாலை பிள்ளையளின்ரை படிப்பு குழம்புது. நானும் ஒழுங்காக வேலைக்குப் போக முடியவில்லை”.

நோயாளியை மட்டுமின்றி உறவினரையும் குடும்பத்தினரையும் பாதிக்கும்

இன்னொரு பெண். வழமையாக கலகலத்துப் பேசி உற்சாகமாக உரையாடுபவள், அன்று வந்த பொழுது, “இவருக்கு எந்த நாளும் வருத்தம். கொண்டு திரிஞ்சு திரிஞ்சு எனக்கு வாழ்க்கையே சலிச்சுப் போட்டுது” என்றாள் மிகுந்த சோர்வுடன்.

இவர்களுக்கு எல்லாம் என்ன வருத்தம்?

ஏன் வைத்திய
ம் செய்தும் மாறவில்லை?

மிகப் பரவலாகக் காணப்படும் நோய்

மிகவும் பரவலாகக் காணப்படுகின்ற நோய், ஆனால் நோயை நிர்ணயிப்பதற்கும் (Diagnosis) சரியான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கும் பொதுவாகக் காலதாமதமாகின்றது.

அதே நேரம் நோயாளியையும் உறவினர்களையும் கடுவலாகப் பாதிக்கிற போதும் கவனத்திற்கு ஆளாகாத நோய் இது.

மனச் சோர்வு (Depression)

மனச் சோர்வு (Depression) கறையான் புற்றுப் போல வெளியே தெரியாமல் உள் நின்று அரித்து உடலையையும் மனத்தையும் வெற்றுக் கோதாக்கி விடும் நோய்.

அது மட்டுமல்ல சுற்றி இருக்கும் உறவினர்களையும் சோர்வடையச் செய்து விடும்.

கவனிக்காது விட்டால் தற்கொலைக்கும் இட்டுச் செல்லும் அளவிற்கு ஆபத்தானது.

நல்ல சிகிச்சை முறைகள்

“ஏன் மனச் சோர்வைக் குணப்படுத்த நல்ல மருந்துகள் கிடையாதா?” எனக் கேட்பீர்கள்.

நல்ல மருந்துகள் இருக்கத்தான் செய்கின்றன.

அத்துடன் உளவளத் துணை வழங்கலும் நல்ல பலனைத் தருகிறது.

ஆனால் இதற்கு முதற் படியாக நோயைக் கண்டு பிடிக்க வேண்டுமே!.

ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கக் கூடிய நோய்கள் எனில் பட்டென உடனடியாகவே கண்டுபிடித்து விடுவார்கள் வைத்தியர்கள்.

பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய்

ஆனால் ஆற அமர இருந்து பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய் இது.

நோயாளி சொல்லும் அறிகுறிகளுக்கிடையே சொல்லாமல் மறைந்து நிற்கும் செய்திகளை இனங் காணும் அனுபவம் தேவை.

அவர்கள் பேச்சுக்களிடையே அகப்படும் ‘சிறு முடிச்சுகளை’ச் சிக்கெனப் பிடித்து அவர்கள் ஆழ் மனத்தில் ஒளிந்திருக்கும் சோகங்களை வெளிக் கொணரும் ஆற்றல் தேவை.

இவை முடியாததால் மனச் சோர்வு நோய் பல வைத்தியர்களுக்குப் பிடிபடாமல் போவதுண்டு.

நோய் பிடிபடாமல் ஒளிந்து நிற்பதற்கு வைத்தியர்கள் மட்டும்தான் காரணம் அல்ல.

வெளிப்படையாகச் சொல்லத் தயங்கல்

மிக முக்கிய காரணம் நோயாளிகள்தான். தங்கள் மன உணர்வுகளை வைத்தியர்களிடம் சொல்லாமல் இருப்பதே அடிப்படையாகும்.

வெளிப்படையாகச் சொல்லாமல் விடுவது மட்டுமல்ல கோடி காட்டவும் தயங்குகிறார்கள்.

நேரடியாகக் கேள்வி கேட்டு அறிய முயன்றால் கூட மறைப்பவர்கள் பலர்.

நோய் என்றால் எங்கள் சமூகத்தினருக்கு உடல் நோய் மட்டும்தான் என்பதே எண்ணம்.

மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவற்றிற்கும் சிகிச்சை பெறலாம் என நினைப்பதே இல்லை.

ஊழ்வினைப் பயன், முந்திச் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டிக்கிறார் போன்ற நம்பிக்கைகள் காரணமா?

மனச்சோர்வு என்றால் ‘பித்து’, ‘கேவலமான நோய்’, வெளியே அறிந்தால் வெட்கம்’ போன்ற சமூகம் சார்ந்த தவறான கருத்துக்களும் காரணமாகிறது.

ஆனால் மனச்சோர்வு என்பது சாதாரண வியாதி அல்ல.

மிக அதிகமானவர்களைப் பாதிக்கும் நோய்

உலகளாவிய ரீதியில் 30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கிறது.
நோயாளியை மாத்திரமின்றி முழுக் குடும்பததையுமே பாதிக்கும் ஒரு நோயாகும்.
நோயாளிக்கும் கூட மிகுந்த துன்பத்தையும் இயலாமையையும் தரும் நோயாகும்.

மனிதர்களை மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்றால் பலரும் ஆஸ்த்மா, மூட்டு வாதங்கள், இருதய நோய், அல்லது நீரிழிவு என்று கூறக் கூடும்.

ஆனால் இந்த நான்கு நோய்களையும் விட மோசமாக நோயாளர்களைத் தாக்குவது மனச்சோர்வு தான் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவில் 60 நாடுகளில் எல்லா மதத்தினரையும் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட 245,404 பேரை உள்ளடக்கி உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட பாரிய ஆய்வு கூறுகிறது.

அதனால் வெளிக்காட்டாத அபகீர்த்தி நோய் ”Silent Scandal’ எனப் பலரும் குறிப்படுவதுண்டு.

போதிய சிகிச்சை கிட்டுவதில்லை

30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கின்ற போதும் அவர்களில் 30 சதவிகிதமானவர்கள் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதனால் மிகுதி 60-70 சதவிகிதமானவர்கள் போதிய சிகிச்சை இன்றித் துன்பப்படுகிறார்கள்.

ஆனால் ஆஸ்த்மா நோயினர் 90 சதவிகிதமும், மூட்டு வலி நோயினர் 80 சதவிகிதமும் திருப்பதிகரமான சிகிச்சைளைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு நோயைப் பொறுத்த வரையில் 8 சதவிகிதமானவர்கள் மட்டுமே ஒழுங்கான சிகிச்சை இல்லாதிருக்கிறார்கள.

வைத்திய வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்ட வளர் முக நாடுகளில் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கான சிகிச்சை போதுமானதாக இல்லை.

இலங்கையில் தமிழர்

போரின் பாதிப்பினால் பரவலாக மனோரீதியான நோய்களுக்கு ஆளாகியிருக்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு கையின் விரல்களின் எண்ணிக்கை அளவு கூட மனநோய் வைத்திய நிபுணர்கள் இல்லை என்பது கவலைக்குரியதே.

ஆயினும் அதை ஒரு தடையாக எடுத்துக் கொள்ள முடியாது. வைத்தியப் பட்டம் பெற்ற எல்லா வைத்தியர்களுக்கும் இத்துறையில் சிகிச்யையளிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது அருகில் அமர்ந்தபடி சொன்னாள்.

“இந்தக் காது கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு இப்ப ஒண்டுமெ கேக்குதில்லை…”

“கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு நாள் காதுக்குத்து வந்திது. கைவைத்தியம் செஞ்சன். மாறிப் போச்சு. அதுக்குப் பிறகு தான் இந்த அடைப்பு.”

மருமகள் மகனுக்கு சொல்லும் இரகசியம் காதில் விளவில்லை என்ற கவலையோ என இடக்கு முடக்காக யோசித்தாலும் கடமையில் கண்ணாக இருந்தேன்.

காதினுள் கட்டுக் கட்டி செவிப்பறையை உடைத்ததால் தான் காது கேட்காமல் விட்டு விட்டதோ என்ற எண்ணம் வந்தது.

“காதாலை சீழ் வடியிறதே அம்மா”

“இல்லை ஐயா, வெறும் அடைப்புத்தான்”

நீர் அல்லது சீழ் வடியவில்லை என்பதால் செவிப்பறை தப்பி விட்டது என எண்ணிக் கொண்டேன்.

காதுக்குடுமி இறுகி அடைத்திருக்கக் கூடும்.

காது சோதிக்கும் கருவியின் ஒளியில் காதைப் பார்த்தபோது, எண்ணெய் வடிந்த காதினுள் கறுப்பாக ஏதோ தெரிந்தது.

இது காதுக் குடுமியல்ல, ஏதோ அந்நியப் பொருள்!

“காதுக்கை என்ன விட்டனியள்?”

“பரியாரியார் தந்த எண்ணைதான், விட்டும் சுகமில்லை.”

காதுக்குள்ளை இருக்கும் அப்பொருளை எடுக்க முயற்சித்தேன்.

காதுக்குள் இருக்கும் அந்நியப் பொருளை நோயாளிகளோ, அல்லது உறவினர்களோ எடுக்க முயல்வது ஆபத்தானது. தற்செயலாக செவிப்பறையை புண்படுத்திவிட்டால் நிரந்தரமாகச் செவிப்புலனை இழந்து விடலாம்.

எனவே பயிற்சி பெற்ற டாக்டரே இதைச் செய்வது உசிதமானது. பல சந்தர்ப்பங்களில் நோயாளியை மயக்க வைத்தே இதை எடுக்க நேரிடலாம்.

அந்தப் பொருள் காதினுள் அவ்வளவு ஆழத்தில் இல்லாததாலும், அந்தப் பெண்மணி ஒத்தாசையாக இருந்ததாலும் சுலபமாக எடுக்க முடிந்தது.

எடுத்துப் பார்த்தபோது அது காதுக் குடுமி அல்ல உள்ளி! எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக் கிடந்தது.

உள்ளிக்கு இத்தனை பயன்களா? வியந்தேன்!

“என்னம்மா, காதுக்குள்ளை உள்ளி. சாப்பிட எடுத்ததை மறந்து காதுக்குள்ளை வச்சிட்டியளோ?


“ஐயையோ…” நாணினாள்.

“.. காதுக்குத்துக்கு எண்டு உள்ளி சுட்டு வச்சனான் எடுக்க மறந்து போனேன்|”என்றாள்.

“நல்ல காலம் இப்பெண்டாலும் எடுத்தது, இல்லையெண்டால் காது அவிஞ்சு அழுகியிருக்கும்” என அழுத்தமாகச் சொன்னேன்.

காதுக்குள்ளை முளைத்து வளர்ந்திருக்கும் என்று சொல்லியிருக்கலாமோ?

காது பொரியல் சட்டியல்ல எண்ணெயும் உள்ளியும் விடுவதற்கு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?


இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.


கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>ஹாட்லிக் கல்லூரியின் ஆசிரியரான திரு பா.இரகுவரனின் 50ஆண்டு பிறந்த தினம் நேற்று முன்தினமாகும் (11.09.2009) . இணைய நண்பர்கள் சார்பில் அவருக்கு பிந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கல்விப் பணியும் கலைப் பணியும் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

களுத்துறையில் கற்பித்துக் கொண்டிருந்த அவர் Training College ல் இருந்த காலம் முதல் எனக்கு அறிமுகம். 1985 ல் இருக்கும் என நம்புகிறேன். அறிமுகப் படுத்தி வைத்தவர் மற்றொரு நண்பரான து.குலசிங்கம். அவர்தான் உதயன் புத்தக நிலைய அதிபர். டவுனில் புத்தக நிலையம் நடாத்தி வந்தவர் அது பாதுகாப்பு வலையமாக மாறிய பின்னர் எனது டிஸ்பென்சரியின் ஒரு பக்கத்தில் புத்தக நிலையத்தை தொடர்ந்து நடாத்தியது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இரகுவரன் ஒரு பயிற்றப்ட்ட விஞ்ஞான ஆசிரியர். ஆயினும் கலைத்துறையில் இருந்த ஈடுபாடுபாடு காரணமாக நாடகமும் அரங்கியலையும் பிரதான பாடங்களாக எடுத்து வெளிவாரியாக கலைத்துறை பட்டதாரி ஆனார். திரு.பாலசிங்கம் காலத்தில் ஹாட்லிக் கல்லூரிக்கு வந்தார்.

ஹாட்லியிலும் முக்கியமாக வடமராட்சி பிரதேசம் எங்கும் சிறுவர் நாடகத் துறையில் பேசப்படத்தக்க ஒருவராக விளங்குகிறார். ஹாட்லியில் மாத்திரமின்றி தும்பளை கலட்டி ஞானசம்பந்தர் கலா மன்றத்திலும் இவரது நாடகங்கள் வருடா வருடம் ஆண்டு விழாவின் போது நடை பெறுவது வழக்கம்.

பிரபலமான ஒரு நாடகம் தப்பி வந்த தாடி ஆடு. இது பல தடவைகள் மேடையேறியது.

இவரது இலக்கிய ஆர்வம் அபரிமிதமானது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருக்கும் போதே அதன் மாணவர் மன்றத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஏதாவது பயனுள்ள, நிலைத்து நிற்கக் கூடிய வேலையாகச் செய்ய வேண்டும் என்று யோசித்த போது அது ‘போதை’ யில் முடிந்தது.

வழமையாக மாணவர் சங்கங்கள் சஞ்சிகைகளை வருடாந்தம் வெளியிடுவார்கள். அதற்குப் பதிலாக போதை என்று ஒரு நூலை இவரது முயற்சியினால் தயாரித்து வெளியிட்டார்கள். அதில் நான் பாலியல் நோய்கள் பற்றியும், டொக்டர்.பொன்.சுகுமார் போதைப் பொருட்கள் பற்றியும் எழுதியிருந்தோம். புகைத்தல் பற்றியும், மது பாவனை பற்றியும் கட்டுரைகள் இடம் பெற்றன.

அவற்றை யார் எழுதினார்கள் என்பது உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை. அறிவியல் உலகில் மிகவும் வரவேற்புப் பெற்ற நூல் அது.

காலச்சுவடு கண்ணன் அதனை மறு பிரசுரம் செய்ய விருப்பம் கொண்டு குலசிங்கத்தைக் கேட்டிருந்தார். பலர் சம்பந்தப்பட்ட நூல். எல்லோரிடமும் அனுமதி பெறுவது அக் காலகட்டத்தில் சிரமமாக இருந்ததால் அந்த மறு பதிப்பு திட்டம் நிறைவேறவில்லை.

மற்றொரு பிரமாண்டமான பணியும் இரகுவரனால் நிறைவேற்றப்பட்டது. ‘செட்டி வர்த்தகன்’ என்ற கூத்து அவரால் மீள் அரங்கேற்றப்பட்டது. இது ஒரு வாழைக் குத்திக் கூத்தாகும். இது வாழைக் குத்திகளில் விளக்கேத்தி இரவிரவாக ஆடுவதாகும். நீண்ட காலமாக வழக்கொழிந்து கிடந்த இந்தக் கூத்தை அவர் மீள அறிமுகப்படுத்தியமை பெரு வரவேற்பைப் பெற்றது.

குழந்தை சண்முகலிங்கம், கலாநிதி ஞானகுமாரன், பேராசிரியர் சிவத்தம்பி அடங்கலான யாழ் பல்கலைக் கழக சமூகத்தைச் சேர்ந்த பலரும் இதனைப் பார்வையிடுவதைப் தனி பஸ் பிடித்து பார்க்க வந்தமை மறக்க முடியாததாகும். வடமராட்சியில் நாம் நடத்தி வந்த அறிவோர் கூடல் நிகழ்வுகளின் அங்கமாக இது அமைந்தது.

இக் கூத்தின் படங்களும் வீடியோ பிரதியும் கைவசம் இருந்தன. குலசிங்கம் இந்தியா சென்ற போது இவற்றைப் பார்த்த கன்னட சாஹித்திய அக்கடமி தலைவரும், மத்திய சாஹித்திய அக்கடமி குழு அங்கத்தவருமான ஒருவர் இவற்றை இந்தியாவில் கொண்டுவந்து போடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கான செலவையும் அவர்களே பொறுப்பேற்பதாகக் கூறப்பட்டது. ஆயினும் அதுவும் நாட்டு நிலைமையால் சாத்தியப்படாது போனமை துரதிஸ்டமே.

இவரது நாடன நூல் பற்றிய எனது கட்டுரையைப் பார்க்க கீழுள்ள தளத்திற்கு செல்லவும்.

http://suvaithacinema.blogspot.com/2007/12/blog-post_23.html

இரகுவரனின் தாயார் அண்மையில் காலமாகிவிட்டார். அன்னையின் நினைவாக அவர் மிகவும் வித்தியாசமான, பிரயோசமான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிராமணவீதி கமலாம்பாள் சரித்திரம் என்பதே அது. இதில் பிராமணவீதியின் பல சரித்திரத் தகவல்கள் உள்ளன. இலங்கையின் 1800 களில் ஸ்தாபிக்கப்பட்ட கலாநிதி யந்திரசாலை அச்சகம் பற்றிய அரிய தகவல்களும் அடங்குகிறது. அதன் முகப்புவாசல் தோற்றம் பின் அட்டையை அலங்கரிக்கிறது.

2001ம் ஆண்டில் தும்பளைக் கிராமம் பற்றிய ஆவணமான ‘ஊரும் வாழ்வும்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்

இப்பொழுது பருத்தித்துறையின் சமூக வரலாறு பற்றிய ஒரு நூல் எழுதுவதற்காக கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதியோர்களின் அனுபவ அறிவுகளை சேகரித்து வருகிறார்.

சில நல்ல சிறுகதைகளை எழுதிய போதும் இப்பொழுது நாடகமும் கள ஆய்வுகளுமே இவரது விருப்புக்குரிய விடயங்களாக இருக்கின்றன.

இவரது மனைவி ரஞ்சிதா ஒரு ஆசிரியை. கணவனை தனது பணிகளில் முழுமையாக ஈடுபட விடுதற்காக வீட்டுப் பணிகள் அனைத்தையும் தனது தலையில் சுமப்பவர். மூத்த மகளும் இளைய மகனும் ஆக இரு பிள்ளைகள்.

இவரது மனைவியின் தாய் தந்தையரும் அண்மையில் காலமாகிவிட்டனர். இதனால் 50வது பிறந்ததினம் கொண்டாடப்படவில்லை. பதிலாக அவர் தான் கடமைப்பட்ட நண்பர்கள் உறவினர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்ததாக நண்பர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது.

இவர் எனது நெருங்கிய நண்பர் என்று சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து கலைப்பணி ஆற்ற வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

படம் பாருங்கள்.
பார்த்து சிரிப்பு வந்தால் சிரிக்கலாம் வாங்க!
முடியாவிட்டால்
திட்டிவிட்டுப் போங்கள்.
ஓவியங்கள் இணையத்தில் கிடைத்தவை.

இவர் அதற்கு எதிர்மாறான மருத்துவர்.
எந்த ஓசையும் அவரை உசுப்ப முடியாது.
தனது நோயைச்
சொல்லிச் சொல்லி வாயுளைந்த
நோயாளியால்
வேறு என்ன செய்ய முடியும்?
அதுதான்
ஸ்டெதஸ்கோப்பிற்கு மாற்றுப் பணி
கொடுத்துள்ளார்.

சுட்டிப் பையனும் மட்டி மருத்துவனும்

50 வருடங்களுக்கு முன்னர்
பட்டப்படிப்பிற்காக
புத்கங்களைத் திறந்ததற்கு பின்னர்

படிப்பே அறியாவர்
இந்த மருத்துவர்.

பையன்
குட்டியானாலும் சுட்டி
இன்றரநெட், வெப் என உலகளந்தவன்
அதனால்தான் அவனுக்கு
இந்தச் சந்தேகம்.
Waiter with a different menu

இவ்வாறு கேட்பது மருத்துவர் அல்ல
மருத்துவருக்கு மேலாக
மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட
ஹோட்டல் பணியாளி.
கெளரவ டாக்டர் பட்டம்
இவருக்கல்லவோ பொருத்தமானது

பேசாதவனையும் பேச வைக்கும்
மந்திரக் கோல்காரன்

எதுக்கெடுத்தாலும் கத்தியா?
சின்னவங்க உணர்வுகளையும்
சற்றுப்
புரிந்து கொள்ளுங்களேன்.

சொன்னதைச் செய்யும் சுப்பன்
அல்ல
காரியக்காரன்.
இந்த நோயாளி!

சொல்லிறாங்கய்யா
சொல்லிறாங்கய்யா

சிரிப்பே வருகுதில்லை என்று
சொல்லிறாங்கய்யா
.

இந்தப் படத்திற்கு
நீங்களாவது ஏதாவது சொல்லுங்கய்யா
சிரிக்கத்தக்கதாய்

Read Full Post »

>பெண்களின் குரல் பலதருணங்களில் மௌனமாகவே ஒலிக்கிறது. ஆணாதிக்கத்தால் அமுக்கப்படுகிறது.

பெண்களின் ஆதங்கத்தைப் பலரும் புரிந்து கொள்கிறார்கள் இல்லை. புரிந்து கொள்ளப் பிரியப்படுவதுமில்லை.

குடும்பம், சமூகம், அரசியல், தேசியம் ஏன் மதங்களில் கூட பெண்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துகிறார்கள். நையாண்டி பண்ணுகிறார்கள். மதிப்பு அளிக்கப்படுவதில்லை.

ஆனால் என்றும் இவ்வாறு இருந்துவிட முடியாது. கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அவர்கள் குரல் இப்பொழுது பல இடங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

அடங்கிக் கையேந்தும் குரல்களாக அல்ல, உரிமைக்காகக் ஓங்கி ஒலிக்கும் குரல்களாக. தமது ஆளுமைகளை உறுதிப்படுத்தும் வார்த்தைகளாக.. நிவேதினியும் அத்தகைய ஒரு குரல்தான்.



பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் சஞ்சிகையான நிவேதினி இதழ் 12 படிக்கக் கிடைத்தது. அந் நிறுவனத்தினால் 2007ம் அண்டு கார்த்திகை மாதம் 30ம் திகதியும், மார்கழி 1ம் திகதியும் நடாத்தப்பட்ட கருத்துரைகளின் தொகுப்பாக இந்த இதழ் மலர்ந்துள்ளது.

‘தேசியம், மதம், அரசியல் வாழ்வியல் போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் பெண் நிலைவாதம்’ என்பதே அந்த கருத்தரங்கின் தொனிப்பொருளாக இருந்தது.

நவீன இலக்கியத்தில் பெண்களின் குரல் எவ்வாறு ஒலிக்கிறது என்பதை கட்டுரை, கவிதை, நாடகம், நாவல் எனத் தனித்தனியாகவும், வேறுசிலர் பொதுப்படையாகவும் இந்நூலில் பார்க்க முயல்வதை காணமுடிகிறது.

போர் ஓய்ந்துவிட்ட சூழலில் இன்று போருக்கு எதிரான குரல்களும், அது பற்றிய வெளிப்படையான விமர்சனங்களும் தமிழ்பேசும் மக்களிடம் இருந்தும் சற்றுத் துணிவுடன் எழுவதைக் காண முடிகிறது.

ஆனால் போர் ஒன்றே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைக்கும், அதன் ஊடாகவே தங்களுக்கு எதிரான அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு முடிவு காண முடியும் என்று நம்பப்பட்ட சூழலிலும், போருக்கு எதிரான குரல்கள் பெண்களின் கவிதைகளிலிருந்து எழுந்ததை சித்ரலேகா மௌகுரு தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார்.



போரினால் விளையும் அர்த்தமற்ற அகால மரணங்கள் போரைக் கொண்டு நடத்துவோருக்கு வெறும் எண்ணிக்கைகள் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் அவை ஈடுகட்ட முடியாத துயரங்களாகும். அவ்வகையில் மரணத்தின் வலி பெண்கள் பலரின் கவிதைகளில் பேசப்பட்டன. போர் பற்றிய அவர்களது மன உணர்வுகளும், விசாரணையும், விமர்சனங்களும் கவிதையில் எடுத்தாளப்படுவதை கட்டுரையாளர் குறித்துக் காட்டுகிறார்.

சாதாரண பெண்கள் மட்டுமின்றி களப்போராளிகளாக இருக்கும் பெண்களின் கவிதைகளில் கூட மரணம் தரும் வலி மிக வலுவாக வெளிப்படுவதை ஒரு தற்கொலைப் போராளியின் கவிதையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.

சாதாரண மரணவலியை விட வெளியே சொல்ல முடியாத மரணத்தின் வலி கடுமையானது மட்டுமின்றி அபாக்கியமானதும் கூட.

‘குருசேஷத்திரத்தில் கர்ணன் விழ

ஐயோ மகனே என்று குந்தி

ஓடிச்சென்று அணைத்தாளே

ஐயோ ராசா நான் பாவி

என் பிள்ளை என்று சொல்ல

முடியாத பாவியானேன்…’ (சன்மார்க்கா 1986)

சந்தேக நபர்கள் மட்டுமின்றி உறவுகளும் குறிவைக்கப்படுகையில், தன் மகன் எனக் கூறி கட்டியழுது துயர் ஆற்ற முடியாத நிலையை இக்கவிதை எடுத்துக் கூற,

‘யுத்தங்களை நிறுத்துங்கள்

ஒரு தாயாகவும் பெண்ணாகவம்

இனியும் பொறுக்க முடியவில்லை என்னால்..’

என மல்லிகாவும் (1993)

‘இன்னுமா தாய்நிலம் புதல்வர்களைக் கேட்கிறது’

என ஒளவை (2000) ஓங்கிக் குரல் எழுப்புவதையும், மற்றொரு இடத்தில் மண்ணுக்கான போர் என்ற கருத்தாக்கத்தையே அவர் நிராகரிப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வாறு பேசும் ‘போரையும் அரசியல் வன்முறையையும் எதிர்க்கும் பெண் கவிதைக்குரல்’ என்ற சித்திரலேகா மௌனகுருவின் கட்டுரை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

‘பெண்நிலைவாதமும் தேசியவாதமும் : ஈழத்துப் பெண் போராளிகளது எழுத்துக்களின் அடிப்படையில் சில புரிதல்கள்’ என்பது செ.யோகராசாவின் ஆய்வுக் கட்டுரையாகும்.



இவர் தனது ஆய்வை கவிதைகளுடன் மட்டுப்படுத்தாது சிறுகதை, நாடகம், நாவல் ஆகியவற்றிற்கும் விஸ்தரிப்பதால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இவர் தனது ஆய்வின் அவதானிப்பில் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்

1. தமிழ்ப் பெண்களுள் பலர் தமிழின உணர்வு அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் – குறிப்பிட்ட இயக்கத்தில் இணைந்துள்ளனர்

2. எனினும் ஒருசாரார் சமூக பெண்நிலை பற்றிய பிரக்ஞை காரணமாகவம் சேர முற்படுகின்றனர்.

3. எவ்வாறாயினும் தாம் பெண்(போராளி) என்ற உணர்வுடன் காணப்படுகின்றனர். இதனால் தமது முக்கியத்துவத்தையும் செயற்பாடுகளையும் மனஉணர்வுகளையும் வெளிப்படுத்த முற்படுகின்றளர்.

4. இன விடுதலையுடன் – தமிழீழம் கிடைப்பதுடன் – பெண்களது பிரச்சனைகள் தீருமென்று திடமாக நம்புகின்றனர்.

சுமார் 17 பக்கங்கள் வரை நீளும் கட்டுரை இது. விஸ்தாரம் மட்டுமின்றி ஆழமும், திறனாய்வளர்களுக்கே உரிய பகுப்பு முறையும் கொண்ட சீரிய கட்டுரை எனலாம்.

இனவிடுதலையுடன் பெண்விடுதலையும் கிட்டுமென அவர்கள் கண்ட கனவுகள் கருகிப் போன இன்றைய நிலையில் அவர்களது உணர்வுகளைப் படிக்கும்போது சற்று மனசு கனக்கவே செய்கிறது.

உதாரணத்திற்கு ஒரு கவிதை

‘… இறுகிய உணர்வுகள்

வரிப்புலிக்குள் புகுந்ததனால்

விடுதலையின் சிறகசைப்பு

நாணமும் பாவமும்

தாகமும் காமமும்

காடேறிகளிடம் காட்டிவிட்டோம்.’

‘காலக்கனவு: ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்’ என்பது பொன்னி அரசு எழுதிய ஒரு சுவையான கட்டுரை. பெண்ணியம் சார்ந்த ஆறு பெண்கள் காலக்கனவு நாடக தயாரிப்பு மற்றும் ஒத்திகைக்காக ஒரு அறையில் சனி – ஞாயிறுகளில் சந்தித்தபோது பெற்ற அனுபவங்களைப் பேசுகிறது.

தேவதாசி வழக்கம், அதற்கான எதிர்ப்பு, உடலுறவுக்காகப் பணி புரியும் பெண்கள், சுயமரியாதைத் திருமணங்கள், தன்னினச் சேர்க்கை, போன்ற பல விடயங்கள் பற்றி அக் குழுவினர்களிடையே எழுந்த கருத்தாடல்கள் சுவையானவை, தெளிவை நோக்கிய பயணங்களாக விரிகின்றன.

‘ஒருவருக்கொருவர் சொல்லுவதைக் கூர்ந்து கேட்பதும், அங்கீகரிப்பதும் மதிப்புடன் வாதிடுவதும் முக்கிய முறையாக இருந்தது.’ என்கிறார்.

இருந்தபோதும் பெண்ணிய நோக்கத்திற்கான தேடுதலே அடிப்படையாக இருந்தததைக் காணக் கூடியதாக இருந்தது.

‘பான்ட் மாட்டிய, கிராப் வெட்டிய நீ தமிழ் பெண் அல்ல… தமிழ் சமூகத்தில் இப்படி இருப்பதில்லை.’ எனக் கலாசார பண்பாட்டு முகமூடி அணிந்து பெண்களின் மீது ‘கலாசார வன்முறையை’ ஏவுபவர்களை எதிர்கொள்வதும், அவர்கள் சவால்களை முறியடிப்பதும் அவர்களது கூடல் நிகழ்வுகளில் அலசப்பட்டிருக்கிறதை அறிகிறோம்.

ஓன்று கூடல் மற்றும் நாடகப் பயிற்சி நிகழ்வுகள் ஊடாக பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை அலசும் வித்தியாசமான, நுகர்வுக்கு இனிய கட்டுரை இது எனலாம்.

இமையத்தின் ‘செடல்’ ஒரு மிக அற்புதமான நாவல். மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்தாலும் இன்றும் மனத்தில் நேற்றுப் படித்தது போல நிற்கிறது.

பொட்டுக் கட்டும் வழக்கம் பற்றியும், பாரம்பரிய கூத்தாடி நாடக மரபு, சாதீயம் பற்றியும் மிக ஆழமாகவும் விஸ்தாரமாகவும் பேசும் நாவல் இது. ஒரு களஆய்வுக் கட்டுரையில் காணப்படக் கூடிய பரந்து பட்ட தகவல்களை கொடுத்திருந்தபோதும் மிகவும் அற்புதமாகச் சொல்லப்பட்ட நாவல் என்று மட்டுமே இதை எண்ணியிருந்தேன்.

ஆனால் தாழ்த்ப்பட்ட பெண்கள் எதிர் கொள்ளும் ஆணாதிக்கத்தை மிக அழகாக அலசுகிறார் கட்டுரையாளரான ச.ஆனந்தி. ‘பெண்நிலைவாத தலித் பார்வையில் சாதிய ஆணாதிக்கமும் அடையாள அரசியலும்: இமையத்தின் செடல்நாவல் பற்றிய ஒரு வாசிப்பு.’

ஒரு தாழ்தப்பட்ட சாதிப் பெண்ணானவள் அதிகாரம் படைத்த உயர்சாதியினரின் ஆணாதிக்கத்தால் துயருறுவது மட்டுமின்றி, உயர்சாதிப் பெண்களின் கடுமையான அதிகாரப் போக்கையும் எதிர் கொள்ள நேர்கிறது. அதே நேரம் சாதீயம் தாழ்த்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் பொது எதிரியான போதும், பெண்ணானவள் அதற்கு மேலாக தமது சாதிக்குள்ளேயே இறுகி நிற்கும் ஆணாதிக்கத்திற்கும் முகம் கொடுக்க நேர்க்கிறது.

ஆயினும் கல்வியறிவு அற்றவர்களான அவர்கள் பழைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் எதிர்க்கேள்வி இன்றி ஏற்றுக் கொள்வதால் தாங்கள் தங்கள் சாதீயக் கலாசாரத்திற்குள் ஒருவர் மீது ஒருவர் வன்முறையை பிரயோகிப்பதையும் ஆனந்தி சுட்டிக் காட்டத் தவறவில்லை.

செறிவான தலித்தியப் படைப்புகள் அதிகம் வெளிவருகின்ற இன்றைய சூழலிலும் தலித் பெண்ணியப் பார்வை படைப்பாக்கம் பெறுவது அரிதாகவே உள்ளது. சமூக அக்கறையும் தேடுதலும் கொண்ட வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் செடல்.

அதைத் தொடர்ந்து ஆனந்தியின் கட்டுரையையும் படித்தால் முழுமையான தெளிவும் அனுபவமும் கிட்டும்.



பரபரப்பான சர்ச்சைகளில் பேசப்படும் குட்டி ரேவதியின் கட்டுரை ‘தமிழ் உடலரசியலில் மூன்றாம் பரிமாணம்’ என்பதாகும். அவர் பேசும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய ஒரு பதிவையும் எனது ‘மறந்து போகாத சில’ வலைப்பதிவிலும் சேர்த்திருந்தேன்.

கட்டுரையாகப் படிக்கவும் சுவையாக இருக்கிறது. சில உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்களை பெண்கள் தமது படைப்புகளில் எழுதும் போது எழுந்த நியாயமற்ற விமர்சனங்களை அவர் காரமாகக் கடிந்தார்.

‘உடல் தினவெடுத்து கவிதை எழுதவதாக’ ஒரு படைப்பாளியும்,

மற்றொருவர் ‘பெண்ணுடல் ஒரு புதிர், அதை எழுத்தில் வெளிப்படுத்துவது பெண்மைக்கு இழுக்கு’ என்றார்.

‘தமிழின் ஒரே சொல் ஆணால் பயன்படுத்தும் போது அவனது அதிகாரப் பிரயோகமாகவும், பெண் அதே சொல்லைப் பயன்படுத்த இயலாதபடி சமூக இறுக்கமாகவும் வெளிப்படுகிறது. ஆக ஆணின் பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்கும் சொல்லை நமது பயன்பாட்டு மொழிக்குள் கொண்டுவர வேண்டியிருக்கிறது. மேலும் அந்தச் சொல்லுக்கு வேறு சமூக பண்பாட்டு அர்த்தங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது’

உடலரசியலின் முதல் பரிமாணமாக பெண் தன் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் சுதந்திரத்தையும், இரண்டாவது பரிமாணமாக இன்றை பெண்எழுத்தின் வழியாக போலி பிம்பங்கள் தகர்க்கப்படுவதையும், மூன்றாவதாக ‘தற்கால அரசியலுக்கு முரணான தத்துவத்தையும் இயக்கத்தையும் முன்னெடுத்து வருவதைத் தலித் பெண் படைப்பாளிகள் தமது உடலரசியல் வழியாக எதிர்ப்பதாகவும்’ கூறுகிறார்.

அனுசூயா சேனாதிராஜா வின் கட்டுரை ‘பெண்கள் அனுபவிக்கும் அனர்தங்களை எதிர்கொள்ளல்’ என்பதாகும். இது ஒரு துறை சார்ந்த ஆழமான கட்டுரையாகும். ஆனர்த்தங்கள் எவ்வாறானவை, அதனால் ஏற்படும் நலிவுறும் விளைவுகள், பெண்கள் எவ்வாறு அதிகமாகப் பாதிக்கபடுகிறார்கள், அவற்றை நிவர்த்திக்க செய்ய வேண்டியவை போன்றவற்றைப் பேசுகிறது.

‘ஏனைய மருத்துவர்கள் பேசத் தயங்கும் விடயங்களையும் இவர் வெளிப்படையாக தனது பதிவுகளில் எழுதுகிறார்’ என ஒருவர் எனது hainallama.blogspot.com பற்றி எழுதியிருந்தார்.

இது பாராட்டா கிண்டலா புரியவில்லை.

குட்டி ரேவதி கூறியது போல பெண்கள் எழுதும் போது மாத்திரமின்றி, ஆண்கள் அதுவும் மருத்துவர்கள் சில விடயங்களைப் பற்றிப் பேசும்போதே பலரது புருவங்கள் மேலெழுகின்றன. ஏனெனில் போலியான கலாசார மூடிகள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன.

அப்படியான ஒரு விடயத்தை செல்வி திருச்சந்திரன் தனது ‘பண்பாட்டிற்கு மறுபக்கங்கள் உண்டு’ என்ற கட்டுரையில் மிகவும் அழகாகக் கையாள்கிறர்.



தனது சிறுவயதில் கண்ட ஒரு சம்பவத்தைச் சொல்லி மிகவும் ஆர்வமூட்டும் வகையில் ஆரம்பிக்கும் இக்கட்டுரை தன்னினச் சேர்க்கை பற்றிப் பேசுகிறது. சரித்திரச் சம்பவங்கள், சிறுகதை. திரைப்படம போன்ற பல உதாரணங்கள் ஊடாக அவரது கருத்து ஆணித்தரமாக வெளிப்படுகிறது.

இறுதியில் ‘இப்படியான ஒரு பூர்வீக வரலாறும் இருக்கும் விடயத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது.அறிவு பூர்வமாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்கிறார். பெண்ணியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இதுவாகும்.

படைப்புலம் ஊடாகக் பெண்ணியப் பார்வையை காணுகின்ற அனுபவத்தை இந்த நூல் தருவதால் குடும்பத்திலும் சமூகத்திலும் தனது வகிபாகத்தை மீள்மதிப்பீடு செய்ய ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய நூலாகிறது.

செல்வி திருச்சந்திரனை பிரதம ஆசிரியராகவும், தேவகௌரி சுரேந்திரன், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம் ஆகியோரை ஆசிரியர் குழுவாகவும் கொண்டு நிவேதினி வெளிவருகின்றமை குறிப்படத்தக்கது.

விலை :- ரூபா 250.00

தொடர்புகளுக்கு:-

Women’s Education and research centre

58,Dharmarama Riad

Wellawatta

Colombo 06.

Sri Lanka

கட்டுரையாளர்:-

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>அவள் ஒரு குட்டிப் பெண். வயது பத்திருக்கும். வெயிலில் காய்ந்த வற்றல் போல வாடி வதங்கிக் கிடந்தாள். மூக்கு நுனியில் வழிந்த சளி

துடைத்திருந்தபோதும் காய்ந்து, அலங்காரத்திற்காக பூசிய திருநீறு போல பட்டும் படாமலும் தோற்றம் காட்டியது.

நெற்றி அனல் பொலக் கொதித்தது. பாகைமானியை வைத்த போது 103 வந்ததும் பீப் பிப் சத்தம். அதற்கு மேல் எண்கள் நகராது கண்சிமிட்டின.

‘ரா முழுக்க சரியான காய்ச்சல். முனங்கிக் கொண்டு கிடந்தாள். எங்களுக்கும் நித்திரையில்லை. வயிற்றைப் பிரட்டுது என்று சாப்பிடறாளும் இல்லை.’ என்றாள் அம்மா.

‘ஓம் இப்படியான காய்ச்சல் கடுமையாகத்தான் அடிக்கும். ஆனால் டெங்கு போல பயமில்லை…’ என்று நான் சொல்லவும்,

‘இதுகள் சொல்லுக் கேக்குதுகிளே! கண்டதையும் தின்னுறதும், குடிக்கிறதும்தான் வேலை. அதாலை சுத்திக் சுத்திக் காய்ச்சல். பெரிய தொல்லை’

‘என்ன சாப்பிட்டுக் காய்ச்சல் வந்தது? ‘ என்று கேட்கும்போது நக்கல் அடிக்கும் தொனி வெளிப்படாது இருக்கும்படி கவனம் எடுத்தேன்.

‘வேறை என்ன ரம்புட்டான்தான். கொஞ்ச நஞ்சமே பத்து பதினைஞ்சு என்டு திண்டு தள்ளிறாள்.’

ஓ! ரம்புட்டான் காய்ச்சல்.

இவள் மாத்திரல்ல, இந்த பத்து பதினைந்து நாட்களுக்குள் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய காய்ச்சலுக்காகக் கொண்டு வந்துள்ளனர்.

இது ஜீலை மாதம். ரம்புட்டான சீசன். ரோட் ஓரமெல்லாம் தற்காலிக கடைகள். கடைகளில் மதாளித்த சிவத்த கம்பளிப் பூச்சிகள் போல குவிந்து கிடக்கும்.

பிள்ளைகள் என்ன பெரியவர்களே ரம்புட்டான் அமுக்குவதில் பின்நிற்பதில்லை. இவர்களில் பலர் காய்ச்சலுடன் வருகிறார்கள்.

நுளம்பு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல் வருகிறது, எலிகளின் எச்சங்களால் பரவுகிறது எலிக்காய்ச்சல், நோயுள்ளவர் தும்முவதாலும் இருமுவதாலும் தொற்றுகிறது பன்றிக் காய்ச்சல்.

இது போல ரம்புட்டான் காய்ச்சல் என்றொரு புதுக் காய்ச்சலா?

அது வருவது ரம்புட்டான் சாப்பிடுவதாலா? அது எவ்வாறு தொற்றுகிறது என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?

காய்ச்சல் நோய் என்பது பெரும்பாலும் கிருமிகள் தொற்றுவதாலேயே வருகிறது. ரம்புட்டான் சாப்பிடுவதால் எவ்வித காய்ச்சலும் வருவதில்லை. ஆனால் இது பரவலாகக் கிடைக்கும் காலங்களான ஜீன், ஜீலை மாதங்களில் பெரும்பாலும் தென்னிலங்கையில் மழை பெய்வதுண்டு. அதனால் டெங்கு, எலி முதல் சாதாரண தடிமன் காய்ச்சல் வரையான பல வித காய்ச்சல்கள் பரவுகின்றன.

வைத்தியசாலைகளில் காய்ச்சல் நோயாளிகள் நுளம்புகள் போல மொய்க்க நேர்கிறது. ரம்புட்டான் சாப்பிட்ட நேரத்தில் காய்ச்சல் வருவது என்பது தற்செயலாகத்தான் நடக்கிறது.

மேலே குறிப்பிட்டதை விளக்கி ‘காய்ச்சல் வந்த உங்கள் பிள்ளைக்கு இன்றைக்கும் விருப்பமானால் ரம்புட்டான் சாப்பிடக் கொடுங்கள். எதுவும் நடக்காது’ என்றேன்.

காய்ச்சலில் வாடிக்கிடந்த குழந்தையின் முகம் இதனைக் கேட்டதும் பிரகாசமானது.

தாயார் முகம் தொய்ந்தது.

‘ரம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழுவிய பின்னரும் கூட ரப்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.

கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள்.’

இதற்குக் காரணம் பழத்தின் தோல் பல விதமான அழுக்குகளால் மாசடைந்திருக்க வாய்ப்புண்டு.

பழங்களை பிடுங்கி நிலத்தில் போட்டிருப்பார்கள். நிலத்தில் நாய் பூனை போன்ற பிராணிகளின் மலம், குருவிகளின் எச்சம், மனிதர்களின் கழிவுகள் போன்ற பலவற்றிலிருந்த கிருமிகள் பழத்தின் தோலை மாசுபடுத்தியிருக்கும்.

அதே போல பழங்களைக் கொண்டுவரப் பயன்படத்திய சாக்கினாலும், வீதியில் பரப்பி வைத்திருக்கும் போது சூழலாலும் மாசடைந்திருக்கும். எனவே சுத்தமாகக் கழுவுவது முக்கியமானதாகும்.


இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

ஒரு வேளை அந்தப் பிள்ளை அல்லது வேறெந்தப் பிள்ளையாயினும் ரம்புட்டான் பழங்களை கழுவாது வாயினால் கடித்துத் தோலை அகற்றி உண்டிருந்தால் தோலிலுள்ள அசுத்தங்களால் வயிற்றோட்டம், சத்தி, செங்கண்மாரி, குடற் பூச்சிகள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »