>அவளுக்குப் பயம் பீடித்திருந்தது.
‘இது கான்சராக இருக்குமோ?’
அண்மையில்தான் அவளது நெருங்கிய உறவினர் ஒருவர் மார்புப் புற்றுநோய் எனக் கண்டிறியப்பட்டு சிகிச்சைகளுக்காக அலைந்து கொண்டிருந்தார்.
ஆனால் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்ல என்பதும் கட்டிகள் இல்லாமலும் புற்றுநோய்கள் வராலாம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
இவளுக்கு வலது மணிக்கட்டை அண்டிய இடத்தில் ஒரு கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. வலிக்காததாலும், வேறு எந்தத் தொல்லை இல்லாததாலும் அலட்சியம் பண்ணிவிட்டாள். இப்பொழுது உறவினருக்கு புற்றுநோய் என்றதும் கிலி பிடித்து ஓடி வந்திருந்தாள்.
எத்தகைய கட்டி
இத்தகைய கட்டிகளை Ganglion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பெரும்பாலும் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவதுண்டு. சிலவேளைகளில் முன்புறத்திலும் வரலாம்.
சிலருக்கு கால்களின் மேற்புறத்திலும் உண்டாவதுண்டு. மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம்.
இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. தோலுக்கு கீழே இருக்கும். தோலுடன் ஒட்டிக் கொண்டிராது வழுகிக் கொண்டிருக்கும். நீர்க்கட்டி (Cyst) போன்றது. அதற்குள்ளே நீரைவிட சற்றுத் தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்.
எப்படி ஏற்படுகிறது?
இத்தகைய திரவம்தான் எமது மூட்டுகளையும், தசைநார்களையும் வரட்சியடையாது வழுவழுப்புடன் வைத்திருந்து சுலபமாக இயங்க வைக்கின்றன. எப்பொழுதாவது அடிபடும் போது மூட்டு அல்லது தசைநாரைச் சுற்றியிருக்கும் இத் திரவம் வெளியேறி ஏதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைப்பட்டு கட்டிபோலச் சேருவதாலேயே இது ஏற்படுகிறது.
கீழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இது வேறு இடங்களுக்குப் புற்றுநோய் போலப் பரவாது.
1-2 செ.மி வரை வளரக் கூடும். புற்றுநோய் போன்ற ஆபத்து எதுவும் ஏற்படாது எனச் சொன்ன போதும் சிலர் அதை அகற்ற வேண்டும் என அடம் பிடிப்பதுண்டு. அது அசிங்கமாக தோன்றுவதே காரணம். பொதுவாக வலிப்பதில்லை. ஆயினும் சில தருணங்களில் நரப்புகளுக்கு அருகில் இருந்தால், அது அழுத்தப்பட்டு சிறிது வலி ஏற்படலாம். சிலருக்கு விறைப்பு ஏற்படுவதும் உண்டு.
சிகிச்சை
பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சிலகாலம் செல்ல எப்படி மறைந்தது என்று தெரியாமலே பலருக்கும் தானாக மறைந்து விடுவதுண்டு.
மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத் திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிகத் தடிப்பான திரவமாதலால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடிவதில்லை.
பொதுவாக அவ்வாறு அகற்றிவிட்டு அதனுள் ஸ்டீரொயிட் ஊசி மருந்தை ஏற்றுவார்கள். உடனடியாக மறைந்தாலும் இச் சிகிச்சைகளுக்குப் பின்னரும் மீண்டும் வளர்வதுண்டு.
பைபிள் சிகிச்சை
ஆனால் அதற்கு மேலாக ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை உண்டு. பேசிக் கொண்டிருக்கும் போதே நோயாளி எதிர்பாராத விதத்தில் மருத்துவர்கள் அருகில் உள்ள தடித்த கனமான புத்தகத்தால் கட்டி மீது ஓங்கி அடிப்பார்களாம். உடனடியாகவே உள்ளே உள்ள கூடு வெடித்து நீர் பரவியதும் கட்டி மறைந்துவிடும்.
அதிர்ச்சி வைத்தியமான போதும் இம்முறையில் ஆபத்து எதுவும் கிடையாது. முன்பு அதற்காக குடும்ப பைபிளைப் பயன்படுத்துவார்களாம். புனிதம் என்பதால் அல்ல. பாரம் கூடியது என்பதால். ஆயினும் வெடித்த மறைந்த கூட்டின் சுவர் சிலவேளைகளில் மீண்டும் வளர்ந்தால் கட்டி மறுபடி தோன்றலாம்.
மேற் கூறியவற்றால் குணமடையாவிட்டால், அல்லது நோயாளிக்கு தொல்லை கொடுத்தால் சிறிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுவதும் உண்டு. சத்திரசிகிச்சையானது மேற் கூறியவற்றை விட நல்ல பலனைக் கொடுக்கும். இருந்தாலும் மீண்டும் வராது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
நோயாளிக்கு வலி, விறைப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் கிடையாது எனில் அவதானித்து வந்தால் போதுமானது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.