Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2009

>
“அவர்கள் இருவரும் திருமணம் முடித்து அதன் பின் என்றென்றும் மகிழ்ச்சியோடு நீடுழி வாழ்ந்தார்கள்.”

இவ்வாறு நிறைவாக முடிவடையும் சிறுவர் கதைகளை வாசிக்காதவர் எவரும் இருக்க முடியாது.


கதைகளில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்,
காதல் அதன் பின் திருமணம்.
அதைத் தொடரும் மகிழ்ச்சியான வாழ்க்கை.
எத்துணை நிறைவான வாழ்வு!

ஆனால் இவை எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா?. பலரின் வாழ்க்கை திருமணத்தின் பின் கருகிவிடுகிறது.


சட்டரீதியான விவாகரத்து என்பது எமது சமூகத்தில் இன்னும் பரவலாகாத போதும் மணமுறிவுகளுக்குக் குறைவில்லை என்பதும் உண்மையே.


திருமணத்தின் பின்னான வாழ்வு நீடித்து நிலைக்குமா அல்லது முறிந்து போகுமா என்பதற்குக் காரணங்கள் என்ன?

திருமண வாழ்வை நீடிக்க அன்பும் காதலும் மட்டும் போதுமா? இவை பற்றி அறிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 முதல் 2007 வரை 2500 தம்பதிகளைக் கொண்டு செய்த இந்த ஆய்வானது பல காரணங்களை வெளிப்படுத்துகிறது.


ஆண்களின் வயதும் வயது வித்தியாசமும்

ஆண்களின் வயதும், தம்பதிகளுக்கு இடையேயான வயது வித்தியாசமும் ஒரு முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.

25 வயதிற்கு முன்னர் திருமணம் செய்த ஆணின் குடும்ப வாழ்வு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடுகிறதாம்.

மனைவியை விட கணவனுக்கு 9 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இடைவெளியும் திருமண முறிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

குழந்தைகள்

திருமணத்திற்கு முன்பே இதே துணை அல்லது வேறு துணை மூலம் குழந்தைகள் இருந்தால் மணமுறிவிற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.


கணவனை விட அதிகமாகக் குழந்தை வேண்டும் என மனைவி ஆசைப்பட்டாலும் பிரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என இவ் ஆய்வு கூறுகிறது.

தம்பதிகளின் பெற்றோர்

தம்பதிகளின் பெற்றோரின் வாழ்க்கை முறையும் திருமண வாழ்வைப் பாதிக்கிறது.
தம்பதிகளில் எவர் ஒருவரின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப் பெற்றிருந்தாலும் மணமுறிவிற்கு வாய்ப்பு அதிகமாகிறதாம்.

ஏற்கனவே வேறு திருமணம்

முதல் திருமணத்தை விட இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்தவர்களின் மணவாழ்க்கை முறிவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகம் எனச் சொல்கிறது ஆய்வு.

குடும்ப வருமானமும் வசதியும்

பணத்திற்கும் திருமண உறவு நீடிப்பதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. வறுமையில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியாக பலமான நிலையில் இருப்பவர்களை விட அதிகமாகப் பிரிய நேர்கிறதாம்.

அதே போல கணவன் வேலைவாய்ப்பு இன்றி இருந்தாலும் மணமுறிவு அதிகம். ஆனால் மனைவி வேலைவாய்ப்பு இன்றி இருந்தால் அவ்வாறு பிரிவு ஏற்படுவதில்லை என்பது கவனிப்புக்கு உரியதாகும்.

புகைத்தல்

தம்பதிகளில் ஒருவர் புகைப்பராக இருந்தாலும் குடும்பம் பிரிவதற்கான சாத்தியம் அதிகமாம். ஆனால் இருவருமே புகைப்பவராக இருந்தால் அவ்வாறு இல்லை என்கிறது இவ் ஆய்வு.

நீங்கள் புகைப்பவராக இருந்து அதனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறதா?
அவ்வாறாயின் மணமுறிவைத் தடுக்க என்ன செய்யலாம்.

சுகமான வழி மனைவிக்கும் புகைக்கப் பழக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணுகிறீர்களா?

உண்மைதான்!

இருவருமே புகைப்பதனால் பிரிவதற்கான வாய்ப்புக் குறைந்துவிடும்.
அத்துடன் ‘இருவருக்குமே இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் விரைவிலேயே தீர்ந்து இறைவனடி சேர்ந்துவிடலாம்!’.

மதுப் பாவனை

அதீத மதுப் பாவனையும் அத்தகைய நிலையை ஏற்படுத்துமா என்பதையிட்டு ஆய்வு எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவும் மணமுறிவிற்கு காரணமாவதை எமது சூழலில் காணக் கூடியதாக இருக்கிறது.

எமது சூழலுக்கு ஏற்ற ஆய்வு தேவை

இந்த ஆய்வின் முடிவுகள் அவுஸ்திரேலிய சூழலைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளன. எமது சூழலுக்கு இவற்றில் சில பொருத்தம் அற்றவையாகும்.

  1. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை,
  2. மாமியார் மருமகள் பிணக்குகள்,
  3. புலம் பெயர்ந்த வாழ்வு,
  4. கணவன் அல்லது சில வேளைகளில் மனைவி வெளிநாடு சென்றுவிட மற்றவரின் தனிமை வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்,
  5. திருமணத்திற்கு அப்பாலான தகாத உறவுகள்

போன்றவை எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன
என்பதை இங்கு ஆய்வு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.

வறுமையும், பொருளாதாரத்தில் குறைந்த நிலையும் மணமுறிவுகளுக்குக் காரணம் என மேற்கத்தைய ஆய்வு சொல்கிறது.

ஆனால் எமது சூழலில், மிகவும் வறிய சூழலிலும் மிகவும் இனிமையான, அன்னியோன்யமான கணவன் மனைவி உறவைக் காண்பது சகசம். ஆயினும் இங்கு பணம் நிறைந்த, செல்வச் செருக்கு மிக்கவர் மத்தியில் அதிக மணமுறிவுகள் ஏற்படுவதாக எனக்குப் படுகிறது.

பதினாறு பெற்ற குசேலர் வறுமையின் எல்லையிலும் மகிழ்வாக வாழ்ந்ததாகவே கதைகள் கூறுகின்றன.

ஜாதகப் பொருத்தம்

இவை எதுவும் காரணங்கள் அல்ல.

சரியான ஜாதகப் பொருத்தம் பார்க்காததே காரணம் என்று சொல்லும் அதி மேதாவிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி- தினக்குரல்

Read Full Post »

>‘என்ன டொக்டர் நீங்கள் மாஸ்க் போடாமல் கிளினிக்கிலை வருத்தக்காரரைப் பார்க்கிறியள்?

டிவீ, பேப்பர் எதைப் பார்த்தாலும் முகமூடி போட்ட முகங்களைப் பார்த்துப் பயமாக இருக்கு’ என்றார் என்னைச் சந்திக்க வந்த மருத்துவ பிரதிநிதி.

பாடசாலை மாணவர்களிடையே தொற்றத் தொடங்கியதிலிருந்து பன்றிக் காய்ச்சல் பீதி இலங்கையில் அனைவரையும் பீதிக்கு ஆளாக்கியுள்ளது.

‘எப்படி எங்களைப் பாதுகாத்துக் கொள்வது’ என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனத்திலும் எழத் தொடங்கியுள்ளது.

‘பஸ்சில் போகும்போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டுமா’ என்று கேட்டார் தினமும் பஸ்சில் பிரயாணம் செய்யும் ஒருவர்.

உண்மையில் மாஸ்க் அணிவதால் தடிமன் காய்ச்சல், இன்புளுவன்ஸா மற்றும் H1N1 காய்ச்சல் தொற்றுவதைத் தடுக்க முடியுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு மையமானது வீடுகளிலோ சமூக நிகழ்வுகளின் போதோ நோய்த் தடுப்பு முகமூடி அணிய வேண்டும் எனச் சிபார்சு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகமூடிகள் பலவகை

தடுப்பு முகமூடிகளில் பலவகைகள் உண்டு.

சத்திர சிகிச்சைக்கானது,

பற் சிகிச்சைக்கானது,

தனிமைப்படுத்தலுக்கானது,

லேசர் வகை போன்றவை சில. சாதாரண முகமூடிகள் முற்று முழுதாக முகத்தை மூடிப் பாதுகாப்பவை அல்ல.ஆயினும் Respirators என்று அழைக்கப்படுபவை மிக நுண்ணியளவு வைரசையும் தடுக்கக் கூடியவையாகும். (N95 or higher filtering face pieces) இவை முகத்தோடு இறுகப் பற்றிக் கொள்பவை. சரியான முறையில் அணிந்தால் வைரஸ் தொற்றுவதைத் தடுக்கக் கூடியவையாகும்.

ஆனால் இத்தகைள முகமூடிகள் ஊடாகச் சுவாசிப்பது கஸ்டமாகும்.

எனவே நீண்ட நேரம் தொடர்ந்து அணியக் கூடியதல்ல.

அத்துடன் குழந்தைகளும் இதை அணிய முடியாது.

முகத்தில் முடியுள்ளவர்களும் அணிய முடியாதாம்.

புளுக் காச்சல் உள்ளவர்கள் அவதானிக்க வேண்டியவை

புளுக் காய்ச்சல் அறிகுறியுள்ளவர்கள்

(தடிமன், காய்ச்சல், தும்மல், இருமல்,)

சமூக அக்கறையோடு செயற்படுவது அவசியம்.

தங்கள் நோய் மற்றவர்களுக்கு பரவாது தடுப்பது அவர்கள் பொறுப்பாகும். அவர்கள் வீசி எறியக் கூடிய ரிஸ்யூ கையோடு வைத்திருப்பது மிக அவசியமாகும்.

தும்மும்போதும் இருமும் போதும்

அவற்றை உபயோகித்துவிட்டு

உடனடியாகவே

பாதுகாப்பான குப்பை வாளிகளில்

போட்டுவிட வேண்டும்.

குடும்பத்தவர்களோடு ஒரே அறையில் இருக்கும் போது மட்டுமல்லாது

தனியாக இருக்கும் போதும் இவ்வாறு செய்ய வேண்டும்.

தும்மல் இருமல் வந்தால் உடனே மூக்கு, வாயைத் தொட்ட கைகளை சோப் போட்டுச் சுத்தம் செய்யுங்கள்.

அத்தகைய நோயுள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது நோய்த் தடுப்பு முகமூடி அணிவது நல்லது.

அவை கிடைப்பதையும், கிடைத்தாலும் அதனோடு இயங்க முடிகிறதா என்பதையும் பொறுத்தது.

ஆயினும் அவர்கள் அறிகுறிகள் தொடங்கிய நாள் முதல் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது.

வலிவு குறைந்தவர்கள்

ஆயினும் H1N1தொற்றினால் ஆபத்தான விளைவுகள் எற்படக் கூடியவர்கள்

பஸ், மார்க்கட்,

போன்ற எந்தப் பொது இடங்களுக்குப்

போகும் போதும்

நோய்த் தடுப்பு முகமூடி அணிவதன் மூலம்

தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

யாருக்கு இந்நோயினால் ஆபத்துகள் அதிகம்?

கர்ப்பணிப் பெண்கள்,

குழந்தைகள் அதிலும் முக்கியமாக 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள், இருதய நோயாளர்கள்,

HIV தொற்று உள்ளவர்கள்,

நீரிழிவு போன்ற நீண்ட கால நோயுள்ளவர்கள்,

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஆளானவர்கள்

மேலதிக அவதானம் எடுப்பது அவசியம்.உங்களைப் பாதுகாத்துக் கொள்ள

ஆரோக்கியமான மனிதர்களைப் பொறுத்த வரையில், புளு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களிலிருந்து குறைந்தது ஆறு அடி தூரமாவது விலகி இருப்பதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் அவரது சுவாசம், தும்மல். இருமல் ஆகியவற்றால் பரவும் கிருமிகளிலிருந்து நீங்கள் தப்பிவிடலாம்.

அத்துடன் அடிக்கடி கை கழுவுவதும் அவசியமாகும். நோயுற்றவர் இருமும் போது அல்லது தும்மும்போது பரவிய கிருமிகள் மேசை, கதிரை, கதவு கைப்பிடி, போன்றவற்றில் பட்டிருக்கும்.

அவர்கள் மூக்குச் சீறிய கை பட்டாலும் அவ்வாறு நேரும்.

உங்கள் கைகள் அதில் பட்டால்,

அதிலுள்ள கிருமி உங்கள் கைகளுக்குப் பரவும்.

பின் நீங்கள் உங்கள் கண், மூக்கு வாய் போன்றவற்றை

யதேட்சையாகத் தொடும்போது

அதனூடாக உங்களுக்கும் பரவும்.

இதை கை கழுவுவதன் மூலம் தடுக்கலாம்.இந்த வைரஸ் கிருமியானது

உருக்குக் கைபிடி போன்ற கடினமான பொருட்களில் 24 மணிநேரம் வரையும்,

துணி உடைகள் போன்றவற்றில் 12 மணிநேரம் வரையும்

உயிர்வாழக் கூடியவை என்பதால் அடிக்கடி கை கழுவுவதும்,

ஏனைய சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் உங்களைக் காப்பாற்றும்.

முகமூடி அணிவது போலியான பாதுகாப்பு உணர்வு தருவதால் பலரும் மேற் கூறிய சுகாதாரப் பழக்கங்களை அம்போ எனக் கை வி்ட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.முகமூடி அணிவது அவசியமா என்பதையிட்டு CDC (Centres forDisese Control and Prevention) உத்தியோக பூர்வ அறிக்கை படிக்க

இங்கே சொடுக்கவும்

இந் நோய் பற்றி விபரமாகப் படிக்க

இங்கே சொடுக்கவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பெரு நிலப்பரப்பு. அதன் இக்கரையில் ஒரு பெரும்பாதை. அதிலிருந்து கிளைத்தெழுந்த இன்னுமொரு பாதை பசுமையை ஊடறுத்து நேரே செல்கிறது.
பச்சைக் கம்பளத்திற்கு செம்மஞ்சள் போர்டர் இட்டாற் போல பாதைகள் எல்லாமே கிராமப் புறத்திற்கேயுரிய செம் மண் ரோடுகள்.

பாதைகள் சந்திக்கும் முச்சந்தியின் நட்ட நடுவே ஒரு சிறு மரம். மெல்லுடல் கன்னியொருத்தி தன் இளம் பச்சை நிற முந்தானையை காற்றில் சிறகடிக்க விட்டதுபோல் உற்சாகமாக கிளை விரித்து அசைந்தாடுகிறது.

நகரச் சந்தடிகளைக் கனவிலும் காண்டறியாத, சன நடமாட்டம் ஒறுத்துப்போன தொலைதூரக் கிராமம். மெல்லென வீசும் காற்று இசைக்கும் கீதம். அது தவிர்ந்த வேறு எந்த செயற்கைச் சப்தங்களும் காதைக் குடையாத, மனதைக் குழப்பாத பேரமைதி.
தொடர்ந்து படிக்க கிளிக் பண்ணவும்

Read Full Post »

>பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற பெரு நிலப்பரப்பு. அதன் இக்கரையில் ஒரு பெரும்பாதை. அதிலிருந்து கிளைத்தெழுந்த இன்னுமொரு பாதை பசுமையை ஊடறுத்து நேரே செல்கிறது.

பச்சைக் கம்பளத்திற்கு செம்மஞ்சள் போர்டர் இட்டாற் போல பாதைகள் எல்லாமே கிராமப் புறத்திற்கேயுரிய செம் மண் ரோடுகள்.

பாதைகள் சந்திக்கும் முச்சந்தியின் நட்ட நடுவே ஒரு சிறு மரம். மெல்லுடல் கன்னியொருத்தி தன் இளம் பச்சை நிற முந்தானையை காற்றில் சிறகடிக்க விட்டதுபோல் உற்சாகமாக கிளை விரித்து அசைந்தாடுகிறது.

நகரச் சந்தடிகளைக் கனவிலும் காண்டறியாத, சன நடமாட்டம் ஒறுத்துப்போன தொலைதூரக் கிராமம். மெல்லென வீசும் காற்று இசைக்கும் கீதம். அது தவிர்ந்த வேறு எந்த செயற்கைச் சப்தங்களும் காதைக் குடையாத, மனதைக் குழப்பாத பேரமைதி.

திடீரென அந்த அமைதியைக் குலைப்பது போன்றதொரு சிறு இரைச்சல், கேட்டும் கேட்காததுபோல!

காது கொடுத்துக் கேட்கிறோம்.

வாகன இரைச்சலா?

வாகன இரைச்சல் தான் எனத் தெளிவாகும் தருணத்தில் தெருவின் இடப்பக்கமாக ஒரு வாகனம் வருவது தொலைதூரக் காட்சியாக தெரிகிறது. வானா, பஸ்சா, லொரியா? தெளிவாகத் தெரியாதளவிற்கு எடுக்கப்பட்ட தூரக்காட்சி.

வாகனம் முச்சந்தியில் நின்று புறப்படுகிறது.

வாகனத்திலிருந்து இறங்கிய இருவர் பசுமையை ஊடறுத்து நீண்டு செல்லும் பாதையில் நடந்து செல்ல ஆரம்பிக்கின்றனர் ஒருவர் காவிநிற அங்கிக்காரர். மற்றவர் சாதாரண உடை அணிந்தவர். ஒருவர் பின் மற்றவராக நடக்கின்றனர் பேச்சில்லை கதை காரியம் இல்லை. ஒருவரோடு ஒருவர் தொடர்பற்றவர்கள் போல அமைதியாக நடக்கின்றனர்.

ஒளியுருபதி கருவி (Video Camera) அண்மைக் காட்சியாக குறுக பசுமையைக் கொடுக்கும் கரும்புத் தோட்டத்தை பாதை ஊடறுத்துச் செல்வது புரிகிறது. தொடர்ந்து நடக்கிறார்கள் சீரான இடைவெளிவிட்டு ஒருவர்பின் மற்றவராக. மனிதனதும் அவனது நிழலினதும் யாத்திரையா?

மனதை அங்குமிங்கும் அலையவிடாது தன்னுள் மூழ்கடிக்கும் இனிய கவிதையாக அந்தக் காட்சியும் அங்கு இசைக்கும் மௌனத்தின் பேரொலியும் எம்மை புதியதோர் உலகிற்குள் இழுத்துச் செல்கின்றன.

பிரஸன்ன ஜெயக்கொடியின் புதிய திரைப்படமான ‘சங்காரா’ வின் ஆரம்பமே எம்மை இவ்வாறு அசர வைக்கிறது.சவோய் சினிமாவில் 2006 நவம்பர் 3ம் திகதி முதல் 7ம் திகதிவரை நடந்த திரைப்பட விழாவின் கடைசி நாளன்று தற்செயலாகக் காணக்கிடைத்தது. எனக்குக் கிடைத்தது அரிய, அற்புத அனுபவந்தான் அது.

‘சங்காரா’ திரைப்படத்தின் பிரதான பாத்திரம் ஒரு இளம் பௌத்த துறவி பிக்கு ஆவார். ஆனந்த தேர வங்கீசா என்பது அவர் பெயர். களனி பல்கலைக்கழக பட்டதாரி. பௌத்த ஜாதகக் கதைகளை சுவரோவியங்களாகக் கொண்ட ஒரு புராதன விகாரைக்கு ஆனந்த தேரர் வருவதுடன் கதை ஆரம்பமாகிறது.

சற்று மேடான பாறைக் குன்றில் அப் பழைய பௌத்த ஆலயம் அமைந்துள்ளது வாயிலில் கோயில் மணி. அருகிலேயே பிக்குகளின் விடுதி. பாதையிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக 20 – 30 படிகளைக் கொண்ட குறுகலான படிக்கட்டு. எதிர்ப்புறத்தில் கண்பார்வைக்குள் விழக்கூடிய தூரத்தில் கிராமத்தவர் ஒருவரின் வீடு. அழகிய மரம். அருகிலேயே சலசலத்தோடும் சிற்றாறு. மனதிற்கு இதமான ரம்மியமான சூழல்.

வயதான மூத்த பிக்கு ஒருவரே அக் கோயிலுக்கு எல்லாமாக இருக்கிறார். வாயிலில் ஒரு அகண்ட பெரிய நீர்ப்பாத்திரம். துறவி மற்றும் கோயில் தேவைகளுக்காக அப் பாத்திரத்துக்கு நீர் கொண்டு நிரப்புவது அயலில் உள்ள பெண்கள்தான்.

கிராமத்தவர் வேறு, கோயில் வேறல்ல இது அவர்களது கோயில்.

அவர்களது சுகதுக்கங்களில் கோயிலுக்குப் பங்குண்டு.

அதே போல கோயிலின் தேவைகளை பூர்த்திசெய்வதும் அவர்கள்தான.

அதுதான் பணத்திற்கும் நேரத்திற்கும் பின் ஓட்டப்பந்தயம் பிடிக்காத கிராமியத்தின் உயர் பண்பு ஆகும். கால ஓட்டத்தினால் அச் சுவரோவியங்கள் பல உடைந்தும், சிதைந்தும், நிறம் மங்கியும் உருக்குலைந்து வருகின்றன.

அவற்றைச் செப்பனிட்டு, திருத்தி, நிறம் ஊட்டி புனருத்தாரணம் செய்வதே இவ் இளம் பிக்குவின் பணியாகும். அமைதியாக, நிதானமாக ஒரு பிக்குவிற்கு ஏற்ப, தன் சிந்தனை முழுவதையும் ஒருமைப்படுத்தி தனிமையில் பணியைத் தொடங்குகின்றார். சாந்தும், சாந்தகப்பையும், வர்ணக் குழைவுகளும் தூரிகைகளும் தனியொருவனாகப் பணியாற்றும் அவர் கைகளில் கலை நுணுக்கத்துடன் இயங்கி அவ் ஓவியங்களுக்கு புத்துயிர் கொடுக்க ஆரம்பிக்கின்றன.

சுவரொவியத்திலுள்ள பெண்ணொருத்தியின் ஒரு பக்க மார்புப் பகுதி உடைந்து சிதிலமடைந்திருக்கிறது ஆனந்த தேரர் சேதமடைந்துள்ள அப்பெண்ணின் மார்புப் பகுதியில் கைவைத்து திருத்த வேலை செய்துகொண்டிருக்கும் போது சிரிப்புச் சத்தம் பின்புறத்திலிருந்து கலகலக்கின்றது திரும்பிப் பார்க்கிறார் இரு யுவதிகள் பெண் (சிலை) ணின் மார்பில் தேரர் கைவைத்திருப்பது அவர்களுக்கு அடக்கமுடியாத சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது இவர் பார்வை திரும்பவும், யன்னலை விட்டு அகல்கிறார்கள் அவர்களில் ஒருத்தி எதிர்ப்புற வீட்டுக்காரரின் மகள் உபமாலி.

தற்செலாக கீழே விழுந்த அவளது ஹெயர் பின்னை கண்டெடுக்கிறார். அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு எடுக்கும் முயற்சியின் போது அவரது ஆழ்மனத்தில் புதைந்துள்ள அதன் கெட்ட எண்ணெம் கொண்ட கரிய மறுபக்கம் தெரிய வருகிறது.

அமைதியான நிர்மலமான நீரில் கல்விழுந்தது போல சலனம் அலைஅலையாக எழுகிறது. பல சம்பவங்கள் தொடர்கின்றன. மற்றவர்கள் பார்வையிலும் சமூகத்தின் நோக்கிலும் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பது ஒருவர் பற்றிய பூரணமான தரிசனம் என்று கொள்ள முடியாது.

வாழ்க்கை பூராவும் ஒருவனின் மன ஆழத்தில் ஒளிந்து கிடக்கிற ரகசியங்களை தனக்குத்தானே தோண்டியெடுத்துப் பார்ப்பது தான் உள்ளொளி பெருக்குவதாகும். இது மற்றெல்லோரையும் விட துறவிகளுக்குக் கூடுதலாகப் பொருந்தும். இதனை இத்திரைப்படம் உணர்த்துகிறது.

‘மனித மனத்தில் கொழுந்து விட்டெரியும் ஆசையும், உறவுகளால் ஏற்படும் பிணைப்பும், அவனை எல்லையில்லாத துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்ற பௌத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே இப்படத்தின் உட்கருத்து’ என பிரசன்ன ஜெயக்கொடி ஓரு செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

‘மேலும் மனிதனானவன் தனது உடல், உள்ளம், இதயம் ஆகியவற்றுக்கு ஆட்பட்டு இயங்குவதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகளையும், பலாபலன்களையும் இத் திரைப்படத்தில் ஆழமாக ஆய்வு செய்ய முயன்றிருக்கிறேன்’ என்கிறார்.

அவரது கருத்துப்படி கணந்தோரும் மாற்றமுறும் மனிதமனம் பற்றிய சித்தரிப்பே இப்படமாகும்.

இருந்த போதும் இப்படம் தத்துவவிசாரம் செய்து பார்வையாளனைப் பயமுறுத்தவும் இல்லை. ஓட்டமின்றித் தேங்கி நகராது போரடிக்கவும் இல்லை. மாறாக புதுமைப் பித்தனை, ஜெயகாந்தனை, சு.ராவை, ராமகிருஸ்ணனை, ஜெயமோகனைப் படிக்கும் போது கிட்டும் உயர் இலக்கிய அனுபவம் போன்ற நிறையுணர்வை இத் திரைப்படத்தில் பெறுகிறோம்.

ஒரு காட்சி. ஆனந்த தேரர் தன் பணியிடையே யன்னலூடாகப் வெளியே பார்க்கிறார். தூரத்தே தனது வீட்டில் உபமாலி நாயோடு விளையாடிக்கொண்டிருப்பது தெரிகிறது. தற்செயலாக அவள் தடக்கி விழப் பார்க்கிறாள.

தேரர் தன்னையறியாது திடுக்கிட்டெழுந்ததில் அருகில் இருந்த வண்ணக்கலவைகள் கொண்ட தட்டுக்கள் தட்டுப்பட்டு விழுந்து உடைகின்றன.

சத்தங் கேட்டு உள்ளே வந்த பக்தர்கள் என்ன நடந்ததென வினவ, கண்ணுக்குள் வண்ணத் துளி தவறி விழுந்து விட்டதெனக் கூறுகிறார். அவர்களில் ஒருவர் தேரரின் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ‘பயப்படவேண்டியதில்லை முலைப்பால் விட்டால் சரியாகிவிடும்’ என்கிறார்.

அங்கிருந்த தாயொருத்தி தேரருக்கு உதவுவதற்காக முலைப்பால் எடுக்க மறைவிடம் நோக்கிச் செல்கிறாள். மனிதனுள் மறைந்திருக்கும் துர்மனமானது, ஆபத்திற்கு உதவ வந்த அவளைப் பின் தொடர்ந்து அவள் செய்வதைக் கள்ளமாகப் பார்க்க முயல்கிறது.மனித மனம்தான் எத்தனை வித்தியாசமானது. சாதாரண மனிதனாயினும், துறவியாயினும், தனது கேடு கெட்ட எண்ணங்களை மூடி மறைத்து ஆசாரசீல வேடத்தில் தன்னை வெளிப்படுத்தி காப்பாற்ற முயல்கிறது. முலைப்பால் விட்டதும் சற்றுச் சுகமானதுபோல் வெளிக்காட்டிய தேரர் தன்னை ஆசுவாசப் படுத்துகிறார்.

தாயிடமிருந்த கள்ளங்கபடமற்ற குழந்தை கலகலத்துச் சிரிக்கிறது!

இவை யாவும் வசனங்களை கொண்டிராத காட்சிப் பிம்பங்கள். வார்த்தைகளுக்கு அகப்படாத உணர்வுகளை கிளறிச் சிந்திக்க வைக்கும் நெறியாளரின் கலையுணர்வின் வெளிப்பாடுகள்.

தமிழ், ஹிந்திப் படங்களில் எமக்குப் பரிச்சயமான பாட்டு, டான்ஸ், சண்டை எதுவுமில்லை அதீத உணர்வுகளைக் கொட்டிக் கண்ணீர் சிந்தவைக்கும் காட்சிகளோ, கோமாளித்தனமான நகைச்சுவைக் காட்சிகளோ கிடையாது,

உரையாடல்கள் கூட மிகச் செற்பமே 1 ½ மணிநேரம் வரை ஓடும் இத்திரைப்படத்தின் மொத்த உரையாடல்களும் 15 நிமிடத்தைத் தாண்டுமோ என்பது சந்தேகமே. உரையாடல்களில் தங்கியிராமல் ஒழுங்காகவும் திறமையாகவும் ஆழ்ந்த கலையுணர்வுடன் அமைக்கப்பட்ட காட்சிப் படிமங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி ஒலிகளாலும் திரைப்படத்தை நகர்த்துகிறார் நெறியாளர்.

காற்றின் அசைவும், மழைநீரின் தெறிப்பும், ஆற்றுநீரின் சலசலப்பும், உதிர்ந்த இலைகள் நிலத்தில் அராத்தும் சரசரப்பும், கதவு மூடும் சத்தமும், காலடி ஓசையும் கூடப் பேசுகின்றன.

ஒரு காட்சி நடக்கும் போது அங்கு இயல்பாக எழும் சத்தங்கள் கூட பின்னணியில் கவிதையாக வந்து விழுகின்றன.

இசையாகப் பிரமிக்கவைக்கின்றன.

இசையின் மொழியால் திரைப்படத்தை எம்மோடு பேச வைத்த இசையமைப்பாளர் நட்டிகா குருகே பாராட்டுக்குரியவராகிறார். ஆயினும் சில இயல்பான சத்தங்கள் (உதா – காலடி ஓசை) இயற்கையாக எழும் சப்தத்ங்களைவிட கூடிய தொனியில் ஒலிப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இத்திரைப்படத்தின் வெற்றிக்கு கலை இயக்குனர் சுனில் விஜயரட்ணவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.

பழைய பௌத்த கோயில், கம்பீரமான புத்தர் சிலை, அவரைக் குனிந்து தொழும் நிர்வாணப் பொண்ணின் சிலை, சுவரோவியங்கள், பிக்குகள் விடுதி, விகாரையின் கூரை ஓரத்தில் அமைந்திருக்கும் பழைய ஆனால் வேலைப்பாடு நிறைந்த பீடிங் என பழமையும், புனிதமும் நிரம்பிய சூழலுக்குள் எம்மை அழைத்துப் பரவசப்படுத்துகிறார்.

தனது ஒளியுருபதி கருவியை முனைப்படுத்தாமல் இயக்குனரின் உள்ளம் அறிந்து அழுத்தமாகப் படமாக்கியுள்ளார் பாலித பெரேரா. கரும்புத் தோட்டம், சிற்றாறு, பாதைகள் போன்ற வெளிப்புறக் காட்சிகளிலும் சரி, விகாரையின் உட்புறக்காட்சிகளிலும் சரி அவரது திறமை பளிச்சிடுகிறது.

முழுப்படமும் தனமன்விலாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் 35 நாட்களில் படமாக்கப்பட்டதாம.; படப்பிடிப்பிற்குப் பின்னான தொழில்நுட்ப வேலைகள் மட்டுமே இந்தியாவில் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுளது.டைரக்டர் பிரசன்ன ஜெயக்கொடியின் முதல் திரைப்படம் இதுவென்ற போதும் சின்னத்திரையில் ஏற்கனவே அபாரதிறமை காட்டியுள்ளார். ( Sanda Amawakai, Nisala Wila, Iam Diyaman Kada, Hand Wila) ஆகியவை அவரது விருது பெற்ற டெலி டிராமாக்கள் ஆகும். இவற்றை நான் பார்க்கவில்லை. கேள்வி ஞானம்தான்.

புதுமுக இளம் நடிகர் துமின்து டொடென்தனா (Thumindhu Dodantenne) ஆனந்த தேரர் ஆக வருகிறார். ஏனைய முக்கிய பாத்திரங்களில் வரும் சச்சினி அயேன்ரா (Sachini Ayendra Stanley), நிலுபா ஹின்கென்த ஆராச்சி ஆகியோரும் திரைக்குப் புதியவர்களே. ஆயினும் இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.

முதிய துறவியாக K.A. Milton Perera பண்பட்ட நடிப்பைத் தருகிறார்.

கெய்ரோ உலகத் திரைப்பட விழாவில் பங்கு பற்றி இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள சங்காரா பலத்த பாராட்டைப் பெற்றதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. சிறந்த நெறியாள்கைக்கான பரிசையும் தட்டிக் கொண்டதாக ஞாபகம்.

கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு முன் (1978) வெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் Ahasin Polowata என்ற திரைப்படம் இதே திரைப்பட விழாவில் பங்குபற்றி அவ்வாண்டுக்கான சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது ஞாபகம் இருக்கலாம்.

அதற்குப்பின் இப் படத்திற்கே அதன் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமைக்குரிய நெறியாளர் பிரசன்ன ஜெயக்கொடிக்கு வயது 37 மட்டுமே.

ஒரு புத்த பிக்குவின் மனத்தின் மறுபக்கத்தை திரைப்படமாக எடுத்த பிரசன்ன ஜயக்கொடியின் துணிவு பாராட்டுக்குரியது. ஆயினும் பிக்குவின் மறுபக்கத்தை காட்டுவதற்குஅதே நடிகரைப் பயன்படுத்தாது வேறு ஒருவரை பயன்படுத்தியமை கவனிக்க வேண்டிய விடயமாகும். இறுக்கமான பெளத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையுள்ள சமூகத்தில் வெளிப்படையாக பெளத்த துறவியை விமர்சனம் செய்வது சிக்கலாக இருக்கக் கூடும் என எண்ணத் தூண்டுகிறது.

எனது சிங்கள மொழி அறிவு மிகவும் குறுகியது. ஆங்கில உபதலைப்புக்கள் போடப்படவில்லை. எனவே புரிதலிலும், கருத்துக்களிலும் மயக்கங்கள் இருக்கலாம் என்பது உண்மையே ஆயினும் மொழியானது பட ஓட்டத்தை புரிவதிலும் ரசனையுடன் நுகர்வதற்கும் தடையாக இருக்கவில்லை என்பதை உறுதியுடன் கூறுவேன்.

படத்தின் இறுதிக் காட்சி. அமைதியா ஓடும் நீர். அதற்குள் ஒரு மரக்குற்றி. அதன் மேல் ஒரு நீர்த்துளி விழுகிறது. மரக்குத்தி அசையாமல் இருக்கிறது. நீரில் அலையெழுந்து பரந்து பரவி நிதானமாக ஓய்கிறது. மீண்டும் நீர்த்துளி விழுகிறது. மரம் அசையாமல் இருக்க நீரில் மீண்டும் அலையெழுந்து ஓய்கிறது. மீண்டும்……… மீண்டும்….

திரையரங்கில் ஒளிபரவ இருக்கையை விட்டு எழுகிறோம். வீடு திரும்பியும் சிந்தனை ஓயவில்லை. திரையில் பார்த்த காட்சிகளுக்கு அப்ப புதிய புதிய காட்சிகளும் வௌ;வேறு சாத்தியங்களும் எம்முள் உயிர்த்தெழுந்தன. நுகர்வோரின் சிந்தனையை முடக்காமல் சுய சிந்தனைக்கு இடம் அளிப்பதுதான் எந்தவொரு உயர் கலைப்படைப்பின் பண்பாகும் சங்காராவும் அத்தகைய ஒரு கலைப் படைப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி (ஞாயிறு), காலம் (கனடா சஞ்சிகை)


Read Full Post »

>
குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அம்மம்மா, அம்மா, அப்பா, பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகள்.

அனைவருக்கும் வருத்தம் என்றில்லை. அம்மம்மாவிற்குத்தான் வருத்தம்.

வீட்டில் குழந்தைகளை தனியே விட்டுவிட்டு வர முடியாது.

ஓன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும்.
காயங்கள் தேடும்.
பொருட்களை உடைக்கும்.

எனவே அனைத்துப் பிரளிகளும் செய்வதற்காக இங்கு கூட்டி வந்திருந்தார்கள்.
மேலும் படிக்க
கிளிக் பண்ணவும்

Read Full Post »

>

பெண்களே உங்கள் மாண்பை இழிவு படுத்த இடந்தராதீர்கள்

‘எப்ப ஏதாவது நல்ல காரியம் சுப காரியம் நடந்தாலும், வெளியிலை’ என்று சொல்லிக் கொண்டு இவள் ‘நிற்பாள்’ என்ற நக்கல் பேச்சைக் கேட்காத பெண்ணா நீங்கள்?

நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

மாதவிடாய் என்பது வழமையாக நடைபெறும் இயற்கையான செயற்பாடு. ஆனால் பெண்கள் பலருக்கும் இடைஞ்சலாக இருப்பதை மறுக்க முடியாது.

அந்த நேரத்தை சிறுநீர் கழிப்பது போல சிம்பிளாக சாதாரணமாக எடுத்துக் கொண்டு சகசமாக உலவக் கூடிய பெண்கள் ஒரு சிலர்தான்.

மேலும் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »

>பெண்களே உங்கள் மாண்பை இழிவு படுத்த இடந்தராதீர்கள்

‘எப்ப ஏதாவது நல்ல காரியம் சுப காரியம் நடந்தாலும், வெளியிலை’ என்று சொல்லிக் கொண்டு இவள் ‘நிற்பாள்’ என்ற நக்கல் பேச்சைக் கேட்காத பெண்ணா நீங்கள்?

நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

மாதவிடாய் என்பது வழமையாக நடைபெறும் இயற்கையான செயற்பாடு. ஆனால் பெண்கள் பலருக்கும் இடைஞ்சலாக இருப்பதை மறுக்க முடியாது. அந்த நேரத்தை சிறுநீர் கழிப்பது போல சிம்பிளாக சாதாரணமாக எடுத்துக் கொண்டு சகசமாக உலவக் கூடிய பெண்கள் ஒரு சிலர்தான்.

ஆனால் பலருக்கும் சனிட்டரி பாட்ஸ் அணிந்து கொண்டு வழமையான வீட்டு வேலைகள் செய்வதும், பணிக்குச் செல்வதும் பாரிய இடைஞ்சல், அசௌகரியம், மன உளைச்சல். அத்துடன் குருதி இழப்பினால் ஏற்படும் கழைப்பும், ஹோர்மான் மாற்றங்களால் உண்டாகும் உடல், மன உபாதைகளும் தொல்லை கொடுக்கும்.

இதை புரிந்து கொண்டு ஆதரவாக நடப்பது எங்காவது ஓரிரு ஆண்கள்;தான். ஏதோ தூங்குவதும் விழித்தெழுவதும் போன்ற சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறார்கள். அவளுக்கு அது மாதா மாதம் வருகிறதே, அதோடை எவ்வளவு சிரமத்துடன் எல்லா வேலைகளையும் கவனிக்கிறாள் என எண்ணுவதே கிடையாது.

ஆனால் ஏதாவது மத, சமூக, காலாசார சடங்குகள் என வரும்போதுதான் அது ஆண்களின் கண்களைக் குத்தும்.

இதனால் ஏதாவது மங்கள காரியம் அல்லது சமயச் சடங்கு வருகிறதென்றால் முதல் தவிப்பு பெண்களுக்கே.

அடுத்த ‘சுகயீனம்’ எப்ப வரும் என்பதை கணக்கிட்டுப் பார்ப்பதே முதல் வேலையாக இருக்கும்.

காரியத்திற்கு சுகயீனம் இடைஞ்சலான நாள் என்றால் சுபகாரியத்தைப் பிற் போட முடியாது. மாதவிடாயை சுலபமாகப் பிற்போடலாம் என்ற ‘மருத்துவ ரகசியம்’ எல்லோருக்குமே இப்பொழுது அத்துப்படி.


கலியாணம், காதுகுத்து, சாமத்தியச் சடங்கு, வீடு குடிபுகுதல் முதல் எது வந்தாலும் வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் தள்ளிப் போட வேண்டும் என்பார்கள். இது தேவைதானா? சில வேளை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் கூட.

கோயில் பூசை. திருவிழா, காப்புக்கட்டு, சரஸ்வதி பூசை, எந்த விரதம் என்றாலும் கேட்கவே வேண்டாம். தள்ளிப் போட வேண்டியதாக இருக்கிறது.
மகனுக்கு கல்யாணமாம் ஆனால் தங்கச்சிக்காரிக்குத்தான் தள்ளிப் போட வேண்டுமாம்.

இது என்ன நியாயம்.

மணப்பெண்ணுக்கு தள்ளிப் போட வேண்டுமெனில் அது ஒத்துக்கொள்ள வேண்டிய விடயம்தான்.

ஆசையோடு தவமிருந்த புதுமாப்பிளைக்கு கோபம் வரும் என்பதால் மறுப்புச் சொல்ல முடியாது.

ஆனால் தங்கச்சிக்கும் மாமியாருக்கும், தோழிப் பெண்ணுக்கும் தள்ளிப் போடு என்பது சரியா?

‘பேய்க் கதை கதையாதை….’

‘..எங்கடை கலை, கலாசாரம் எல்லாவற்றையும் சீரழிச்சுப் போட்டுத்தான் வேறை வேலை பாப்பியள் போலகிடக்கு. இதோடை எப்படி மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது?’ என்பார் தாத்தா.

சரியான நியாயம் போலத் தோன்றுகிறதா? அப்படியானால் நீங்களும் அவரது சாடிக்கு மூடிதான்.

வேட்டி உடுத்து குடுமியும் வைத்திருந்த தாத்தா இன்று டவுஸர் போட்டு பெல்ட்டும் கட்டியது மட்டுமல்ல, தலைமுடிக்கு டை அடித்து இளவட்டம் போலத் திரிகிறாரே, அதற்கென்ன பெயர். இதுவும் கலாசார சீர்கேடா?

இரண்டுமே காலாசார சீர்கேடல்ல.

காலம் மாறும்போது எமது பழக்கவழக்கங்கள் மாறுகின்றன.
கருத்துக்கள் மாறுகின்றன. கொள்கைகள் மாறுகின்றன. நம்பிக்கைகள் சீர் குலைகின்றன.

அது நியதி.

காலையில் பழங்கஞ்சி குடித்த எமது சமுதாயத்திற்கு இன்று காப்பி, தேநீர் இல்லையென்றால் ‘விடிய மாட்டேன்’ என்கிறதே அதுபோலத்தான்.
‘கலாசார சீர்கேடு விஷயத்தை விடு.’

‘இது சுகாதாரம் சம்பந்தப்பட்டது. இதோடை எப்படி கண்ட இடமும் திரியிறது’ என்பார் மற்றொருவர்.

இரத்தமும் சீழும் வடியிற அழுக்குப் புண்ணுக்கு
மருந்து கட்டிக்கொண்டு
கோயில் குளம், சாமியறை, சமையலறை எல்லாம்
கூச்சமின்றித் திரிவார்கள்.


அதில் சுகாதாரக் கேடு இல்லையென்றால், பெண்களின் இந்த இரத்தத்தில் மட்டும் என்ன சுகாதாரக் கேடு இருக்கப் போகிறது.

அழுக்குப் புண்ணில் கிருமி தொற்றியிருக்கிறது அது சுகாதாரக் கேடு.

ஆனால் பெண்களில் கசிவது புது இரத்தம். கிருமித் தொற்று எதுவும் கிடையாது.

வாயால் எச்சில் வழிகிறது, மூக்கால் சளி ஒழுகுகிறது.

அதைத் துடைத்து விட்டு சகல வேலைகளையும் செய்கிறோம்தானே.

அதை விட மேலானது பெண்களின் இந்த மாதாந்த இரத்தப் போக்கும். அதோடை திரிவதும், அதைத் தள்ளிப் போடுவதும் அவர்களது இஷ்டம்.

ஆணாதிக்க நிலைப்பாடுதான் பெண்களை துடக்கென்றும், விலக்கென்றும் அந் நாட்களில் விலக்கி வைப்பதும், விலகியிருக்க நிர்ப்பந்திப்பதுமாகும்.
அதற்கு பெண்கள் தாங்களாகவே அடிபணிவதா?

ஏற்கனவே சொன்னது போல மாதப்போக்கு என்பது ஒரு சாதாரண நிகழ்வு.
சுவாசப்பையானது காற்றை உள்ளும் வெளியும் சுவாசிப்பது போல,
ஆண்களுக்கு விந்து உற்பத்தியாகி வெளியேறுவது போல,
கண்ணீர் சிந்துவது போல

இதுவும் ஒரு சாதாரண உடலியல் செயற்பாடு.

இதில் வெட்கப்படுவதற்கோ, அசிங்கப்படுவதற்கோ எதுவும் இல்லை.

ஆண்டாளும், உமாதேவியும், கன்னி மேரியும் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

அவர்களுக்கு வந்ததுதான் இன்றைய பெண்களுக்கும் வருகிறது.

“அவர்கள் புனிதமானவர்கள், தெய்வீகப் பிறவிகள். அவர்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள்” என்று யாராவது சொன்னால், அவர்களைப் பெண்கள் என்றே சொல்லமுடியாது என்பேன்.

எனவே மாதவிலக்கு நாட்களிலும் ஏனைய நாட்களில் உண்பதுபோல, உடுப்பதுபோல, தொழில் புரிவதுபோல செயற்படலாம். கோயிலுக்கும் போகலாம். திருமணத்திற்கும் போகலாம். விரதமும் பிடிக்கலாம்.


ஆசார பூச்சாண்டிகள் காட்டி பெண்களைப் பயமுறுத்தாதீர்கள்.

சுகாதார விதிகளைக் கூறித் தனிமைப்படுத்தாதீர்கள், பண்பாட்டுப் பெருமைகளைக் கூறி அவர்களை முடக்கி வைக்க முயலாதீர்கள்.

தள்ளிப் போடுவதிலும் தவறெதுவும் இல்லை.

அதிலும் முக்கியமாக கடுமையான வலி, உதிரப் பெருக்கு அல்லது அவளது வேலைக்கு இடைஞ்சலாக இருந்தால் மட்டும்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால் மிக அவசிய தேவைக்காக ஒரு சில நாட்கள் தள்ளிப் போடுவதில் பாதிப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

மாறாக, கோயில், விரதம், நல்லநாள்,
ஆசாரம், சுகாதாரம்
போன்றவற்றிற்கெல்லாம் தள்ளிப்போடுவது
பெண்கள் தங்களைத் தாமே,
தமது பெண்மையை,
தமது மாண்பை
இழிவு படுத்தும் செயல் என்றே நான் சொல்வேன்.

“சரி, நீ தள்ளிப் போடாவிட்டால் கிட. நாங்கள் நிகழ்ச்சிக்கான திகதியைத் தள்ளிப் போடுறம” என்றால் ஏற்றுக் கொள்ளலாமா?

உங்களுக்காக விட்டுக் கொடுப்பதுபோலக் காட்டிக் கொண்டே உங்கள் பெண்மையை அவமதிக்கும் கபட நாடகம் இது.

மசிந்து கொடுக்காதீர்கள்.

ஆனால், தள்ளிப் போடுதல் தவறில்லை.

அது உங்களுக்காக மட்டுமே,
அதுவும் உங்கள் உடற் தேவைகளுக்காக
மட்டுமே இருந்தால்!

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

« Newer Posts - Older Posts »