Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2010

>‘உன் கை நகம் கவிதையா……’ என சுந்தர ராமசாமி ‘பசுவய்யா’ என்ற புனை பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

உங்கள் கை நகங்கள் கவிதையா இல்லை கதறி ஓட வைக்கும் அலங்கோலமா?

சற்றுப் படித்துப்பாருங்கள். நகங்களின் அழகு எல்லோருக்கும் அவசியம். எனினும் பெண்களுக்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

‘இரா இராவாக இவளுக்கு நித்திரையில்லை. விரல் நுனி வீங்கிக் கொதிக்குது’ என்றாள் அம்மா. வேதனையில் முகம் சுளித்துக் கொண்டிருந்த மகள் ஒரு பள்ளி மாணவி. பெருவிரலின் நகத்திற்குப் பக்கமாக தோல் சிவந்து வீங்கியிருந்தது. விசாரித்துப் பார்த்ததில் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவள் எனத் தெரிந்தது.

இதற்கு மாறாக பல தாய்மார்களின் விரல் நகங்களும் தடித்து சொர சொரப்பாகி அசிங்கமாகத் தோன்றுவதுண்டு. அத்துடன் அவற்றில் இடையிடையே சீழ் பிடித்து வலிக்கவும் செய்வதுண்டு.

இவை இரண்டுமே நகச்சுற்றுகள்தான். ஆயினும் பல வேறுபாடுகள் உண்டு. பள்ளி மாணவியில் தோன்றியது திடீரென ஏற்பட்ட நோய். அதனை Acute paronychia என்பார்கள். இது விரைவில் மாறிவிடும். மீண்டும் வராது நீங்கள் காப்பாற்றினால் நகத்தின் அழகைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மாறாக அம்மாவில் ஏற்பட்டது நாட்பட்ட நகச்சுற்று (Chronic paronychia) எனப்படும். குணப்படுத்துவதற்கு சற்றுக் கடினமானது.

திடீரெனத் தோன்றும் நகச்சுற்றுநகத்தைச் சுற்றியுள்ள மென்மையான தோலில் கிருமி தொற்றுவதாலேயே ஏற்படுகிறது. திடீரென அவ்விடத்தில் உள்ள தோல் சிவத்து வீங்கி வலியை ஏற்படுத்தும். சிலவேளைகளில் மஞ்சளாக சீழ் அதற்குள் தோன்றலாம்.

கடிப்பதால் மட்டும் நகச்சுற்று வருவதில்லை. நகம் கத்தரிக்கும் போது ஆழமாக வெட்டுவது, மாறாக நகத்தை நீளமாக வளரக்கும் போது காயம் ஏற்படுவது, கை சூப்புவது, சமையல் வேலை, தோட்ட வேலை போன்ற வேலைகளின் போது நகக் கண்ணில் காயம் ஏற்படுவதால் ஏற்படுகிறது. காயம் பட்ட இடத்தில் பக்டிரியா, பங்கசு கிருமிகள் தொற்றுவதாலேயே சீழ் பிடித்து வலியை ஏற்படுத்துகிறது.

நகச்சுற்று ஏற்பட்டால் நீங்கள் செய்யக் கூடியது என்ன? கொதியுள்ள நகத்தை சுடுநீரில் தினமும் 2 -3 தடவைகள் ஆழத்தி சில நிமிடங்கள் வைத்திருக்க வலி தணியும். ஆயினும் வலி தணியவில்லை எனில் மருத்துவரைக் காண வேண்டும்.

அவர் அதற்குரிய நுண்ணுயிர் கொல்லி மருந்து தருவார்.மிக அதிகமாக இருந்தால் அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி மருந்து போட்டு. சீழை அகற்றவும் கூடும்.நாட்பட்ட நகச்சுற்று
(Chronic paronychia)

இது சிறிது சிறிதாக தோன்றி, நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வகையாகும். ஒரு விரலின் நகத்தைச் சுற்றி மட்டுமின்றிப் பல நகங்களுக்கும் பரவக் கூடும். ஆயினும் திடீரேன ஏற்படும் நகச்சுற்று போல கடுமையான வேதனையை ஏற்படுத்துவதில்லை என்பதால் பலரும் அலட்சியம் செய்துவிடுவதுண்டு.

இடையிடையே சீழ் பிடித்து ஆறிவிடும்.

அவ்வாறு நீண்ட காலம் நீடிப்பதால் நகமானது கீழுள்ள நகப்படுக்கையில் பிரிந்து விடுவதும் உண்டு. அத்துடன் நகத்தின் மேற்பகுதியில் தடிப்புகள் தோன்றி அது தன் இயல்பான வழுவழுப்பான அழகிய தோற்றத்தை இழந்துவிடும்.நகத்தின் நிறமும் மஞ்சள் அல்லது சாம்பல் பூத்ததாக மாறிவிடும். அவ்வாறு ஏற்பட்டால் நகம் மீண்டும் வளர்ந்து தனது இயல்பான தோற்றத்தை மீண்டும் பெற ஒரு வருடம் கூட ஆகலாம்.

பொதுவாக அடிக்கடி கையை நனைக்க வேண்டிய தேவையுள்ள பண்ணைத் தொழிலாளர்கள், மீனவர்கள், சமையல் வேலை செய்பவர்களில் இத்தகைய நாட்பட்ட நகச்சுற்று அதிகம் ஏற்படுகிறது.

எக்ஸிமா, சொறியாசிச் போன்ற நோய் உள்ளவர்களிலும் இவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.அதேபோல நீரிழிவு நோயுள்ளவர்களிலும் தோன்றுவதற்கு வாய்ப்பு அதிகம்.

இதற்கான சிகிச்சை இலகுவானதல்ல. நோயுள்ளவர்கள் தங்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருள்களில் கைகள் தொடர்புறாது காப்பது அவசியம். நீண்ட நேரம் கைகள் நீரில் ஊறுவதைத் தவிர்க்க வேண்டும். நகம் வெட்டும்போது அருகில் உள்ள சருமத்திற்கு சற்றும் காயம் ஏற்படாதவாறு கவனமாக வெட்ட வேண்டும். விரல் சூப்புவதைத் தவிர்க்க வேண்டும். பொருத்தமான கையுறைகளை உபயோகிக்க வேண்டும்.

அவதானிக்க வேண்டியவை

அடிக்கடி நகச்சுற்று வருபவர்கள் அவதானிக்க வேண்டியவை

1. நகத்தையும் நகத்தைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனமாகப் பேண வேண்டும்.

2. நகம் மற்றும் விரல் நுனிகளில் காயங்கள் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் நகம் மிக ஆறுதலாக வளருகிறது. காயம் ஏற்பட்டால் குணமடைய மாதக் கணக்கில் நேரம் எடுக்கும்.

3. நகம் கடிப்பது அறவே கூடாது. நகக்கண்களையும் சுத்தமாக வைத்திருப்து அவசியம்

4. கைகளை இயலுமானவரை ஈரப்பிடிப்பின்றி வெதுவெதுப்பாக வைத்திருங்கள்.

5. மண், சாணி, போன்ற எந்த அழுக்கான வேலை செய்தாலும், வேலை முடிந்ததும் சோப்பிட்டுக் கழுவுங்கள். கழுவும்போது நகக்கண்களுக்குள் சோப் தன்மை நீங்கும் வண்ணம் செம்மையாகக் கழுவ வேண்டும். பின் மென்மையான துவாயால் ஈரலிப்பை அகற்றுங்கள்.

6. உங்கள் சருமம் இயற்கையாகவே வரட்சியானது எனில் அவற்றில் நுண் வெடிப்புகள் ஏற்பட்டு கிருமி தொற்றக் கூடும். அத்தகையவர்கள் அவற்றை வரட்சியின்றி வைத்திருக்க மொயிஸ்டரைசிங் கிறீம்
(Moisturising Cream) உபயோகிப்பது அவசியம். அல்லது லோசன் (Lotion) உபயோகிக்க வேண்டும்.

7. ஸ்பிரிட், டெட்டோல் போன்றவற்றை உபயோகித்து சுத்தப்படுத்துவது கூடாது.

இவற்றிக்கு குணம் அடையாவிட்டால் மருத்துவ ஆலேசனை பெறுவது அவசியம் எனச் சொல்ல வேண்டுமா?

சிங்கார நகம் வேண்டுமா, சீழ் பித்த நகம் வேண்டுமா? உங்கள் அக்கறையிலும், பராமரிப்பிலும்தான் பெருமளவு தங்கியுள்ளது.டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>மேலைப் புலோலி சைப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் (கொழும்பு ) வருடாந்தப் பொதுக் கூட்டம் சென்ற பொங்கல் தினத்தன்று (14.01.2010) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றமையானது நிகழ்ச்சி நிகரில் உள்ளவற்றை நிறைவேற்றும் வெறும் உத்தியோகபூர்வ நிகழ்வாக மட்டும் இருக்கவில்லை.

இன்று எங்கெங்கோ வாழ்ந்தாலும் எப்பணி ஆற்றினாலும் நாம் ஒன்று கூடி எமது பழைய நினைவுகளை மீட்டு, உறவுகளைப் புதிப்பித்து மகிழ்வுறும் நாளாகவும் அமைந்தது.

சில காட்சிகள் தொடர்கின்றன.

பார்த்து மகிழுங்கள், அடுத்த வருட நிகழ்வில் நீங்களும் கலந்து மகிழுங்கள்.

நிகழ்வுக்கான சிற்றுண்டிகளையும் குளிர் பானங்களையும் திரு ராஜ் சுப்பிரமணியம் அவர்கள் பொறுப்புணர்வுடன் கொண்டு வந்து சேர்த்தார்.

நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு சிற்றுண்டிகளும் குளிர் பானங்களும் வழங்குவதற்கு மன்ற அங்கத்தவர்களும், உறவினர்களும் உதவினர்.

கனகசுந்தரம் சிவசுந்தரம், சிதம்பரநாதன் சிவாகர், உலகநாதபிள்ளை வரதராசன், திருமதி யோகேஸ்வரி சண்முகசுந்தரம், திருமதி மணிமாதேவி முருகானந்தன் ஆகியோர் பணி பாராட்டுக்குரியது.

திரு.க.சிவசுந்தரம் அவர்களும், செல்வன் சிதம்பரநாதன் சிவாகர் அவர்களும் சிற்றுண்டி தட்டுகளை ஆயத்தம் செய்கின்றனர்.

சிற்றுண்டி தட்டுகளுடன் திரு.க.சிவசுந்தரம் மேடை அருகில்.

திருமதி மணிமாதேவி முருகானந்தன் பெண்களுக்கு முன் சிற்றுண்டித் தட்டுடன்…

ஒன்றிய அங்கத்தவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடுவதிலும், நட்புக்களையும் உறவுகளையும் புதுப்பிப்பதிலும் மகிழ்ந்தனர்.

திரு கனகசுந்தரம் சண்முகசுந்தரம் திருமதி வள்ளி பிரபாகரிடம் ஏதோ விளக்கம் பெறுகிறார். திருமதி கெங்காதேவி வரவுப் பதிவேட்டில் எழுத அருகிருந்து திருமதி நீலாம்பிகை கோபாலசிங்கம் அவதானிக்கிறார்.

வர்ணகுலசிஙம் ஆசிரியரும் ரட்ணவடிவேல் அவர்களும் கைலாகு கொடுத்து நலம் விசாரிக்கின்றனர்.

வனிதா, ரகுநாதன், ராஜ் சுப்பிரமணியம் உரையாட அருகிருந்து ஆறுமுகநாதன் அவதானிக்கிறார்.

சச்சிதானந்தன், ரட்ணசிங்கம், முருகானந்தன், சற்குணராசா ஆகியோர் ஏதோ விவாதிக்க பார்த்துக்கொண்டிருப்பவர் சற்குணராசாவின் மகள் சரண்யா.

சிறிநாதனும் வாசுதேவனும் சிரித்து மகிழ பின்னணியில் பாஸ்கரனும், சிவநாதனும்.

பாலதாசன், கஸ்தூரி, உமா ஒருபுறமாகவும், ராஜேஸ்வரியும் முருகவேளும் மற்றொரு புறமாகவும் உரையாடலில்.

முந்தைய போட்டோவில் உள்ளவர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.

சிறிநாதன், செல்வமோகன், பாஸ்கரன் மற்றும் சிவநாதன் பள்ளிக்கால அனுபவங்களை நினைந்து மகிழ்கிறார்களா?

நிகழ்வின் பின் எடுக்கப்பட்ட சில குறூப் போட்டோக்கள்.

மறக்க முடியாத நாளின் சில இனிய கணங்கள், நினைவுகள்…

நினைவுகளைப் பகிர்வதற்கு கூடியிருப்பதைத் தவிர வேறென்ன வழி…

ஒன்றியத்திற்கு தனியாக ஒரு பெண்கள் பிரிவு தேவைப்படுமா எதிர்காலத்தில்???

கண்டி, கொழும்பு, காலி, பருத்திதுறை என நாற்திசையும் எமது மேலைப் புலோலி சைப்பிரகாச வித்தியாலயத்திற்காக இணைந்த அற்புதமான நாள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள்.

நாம் கூடிச் செயற்பட்டால் எமது பாடசாலை இன்றைய மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும்.

பாடசாலையின் புகழ் உலகெங்கும் ஓங்கும்.

Read Full Post »

>சூரியகாந்தியாக இல்லை
வாக்களித்தவர் வதனம்.
பூரண கிரகண
மதிமுகம்போல்
மம்மலாக …
மலர்ச்சியின் சுவடழிந்து,
தடம் புரியாத பாதையில்
கையறு நிலையாக…


‘நல்லதை நினைத்து
ஏமாறுவது எம்மினம்;
நானும் அதிலொரு துளி.
ஏன்தான் எங்களுக்கு
என்றும் இவ்வாறு
மீண்டும் மீண்டும் …
இம்முறையும் எனது வாக்கு
அப்படியாகத்தான் போய்விடுமோ.’

வாக்களித்து,
வெளியே வந்த நண்பனை
‘யாருக்கு வோட் போட்டாய்’
எனக் கேட்ட போது
நிலைய வாசலில்
கிடைத்த பதில்.

எட்ட முடியா இலக்குகளா
இலக்கு மங்கிய பயணங்களா
எட்ட முயல்கையில்
விலகி ஏய்க்கும் இலக்குகளா
நிஜ வாழ்வின் பரிமாணங்கள்
புரியாது வெற்று வானில்
மணல் கோட்டை கட்டும்
யதார்த்தமற்ற இலட்சியங்களா?

ஏன் இந்தக் கவலை?
எப்பொழுதும் ஏமாறுவதேன்
ஏமாற்றம் இவருக்கு மட்டுமா?
முழுச் சமூகத்திற்குமா?

குண்டு மழை பொழிகையில்
ஈர்க்கு இடைவெளியிடை
வழுகி மறைந்து
உயிர் பிழைத்த
எம்மவருக்கு
வாக்கு மழையிடை
நீந்திப் பிழைத்து
கரை சேர்வது பெரும்பாடா?


இவன் வென்றால் என்ன
அவன் வென்றால் என்ன
கையோங்குபவன் கையிணைந்து
பிழைக்கும் ரகசியம்
தெரிந்திருந்தால்
கலக்கம் ஏதுமில்லை
காலத்தை வென்றுவிடலாம்
காலனையும் தள்ளிவிடலாம்.


கையுடைந்து காலிழந்து
வீடிழந்து பொருளிழந்து
உறவுகளையும் தொலைத்துவிட்டு
மிஞ்சியிருக்கும்
உறவுகளையாவது நிமிர்த்திவிடலாம்.

அழகு சந்தோஸ்

Read Full Post »

>எதிலும் நல்லதை நினைத்தால் மரணமும் எட்டி ஓடும்

‘எப்பொழுதும் நல்லதை எண்ணுங்கள்,

நல்லதைப் பேசுங்கள்,

நல்லதையே செய்யுங்கள்.

வாழ்வில் அவநம்பிக்கை கொள்ளாதீகள்.

எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.

மறை எண்ணங்கள் வேண்டாமே.

நல்லதை நினைத்தால்,

வாழ்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டால்

வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

நீடித்த வாழ்வு கிட்டும்.’

இவ்வாறு சொல்லாத அறிஞர் அல்லது ஞானிகள் இருக்க முடியாது.

ஆனால் எவர் எதைச் சொன்னாலும், எத்தனை தடவைகள் இத்தகைய நல்ல வார்த்தைகளைக் கேட்டாலும் எமது குரங்கு மனம் அடங்குவதில்லை. மறை எண்ணம் கொண்டு கவலையுறவே செய்யும்.

ஆனால் விஞ்ஞான ரீதியாகச் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இது வெற்று நம்பிக்கையல்ல, நிரூபிக்கப்படக் கூடிய உண்மையும் கூட என்ற நம்பிக்கையைத் தருகிறது.

பெண்களில் செய்யப்பட்ட இந்த ஆய்வானது அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்ற நம்பிக்கை உணர்வு கொண்ட பெண்களுக்கு (Optimistic women) மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும், வேறு காரணங்களால் மரணம் வருவதற்குமான வாய்ப்பும் குறைவு என்கிறது.மாறாக நடப்பவை எதிலும் நம்பிக்கையற்று, மற்றவர்களில் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் (pessimistic women) பெண்களுக்கு மரணம் விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இருந்தபோதும் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பில் மாற்றம் இருக்கவில்லை என மேலும் சொல்கிறது அந்த ஆய்வு.மாதவிடாய் முற்றாக நின்றுவிட்ட 50 வயது முதல் 79 வயதுவரையான 97,253 பெண்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த முடிவுகள் எட்டப்பட்டன.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நம்பிக்கையுணர்வுள்ள பெண்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 9 சதவிகிதத்தாலும், ஏனைய காரணங்களால் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதத்தாலும் குறைந்திருந்தது.

ஆனால் நம்பிக்கை வரட்சி கொண்ட பெண்களில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 16 சதவிகிதத்தால் அதிகரித்திருந்தது.

நம்பிக்கை உணர்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பில் இனத்திற்கும் (Race) பங்கு உண்டாம். நம்பிக்கையுணர்வுள்ள ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் அடுத்த 8 வருடங்களில் மரணிப்பதற்கான வாய்ப்பு 33 சதவிகிதம் குறைவாக இருந்ததாம். ஆனால் அதே கால இடைவெளியில் வெள்ளையினப் பெண்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு 13 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருந்ததது.

பொதுவாக நம்பிக்கை உணர்வு கொண்டவர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, மனச் சோர்வு அறிகுறிகள் போன்றவை குறைவாகவே இருப்பதுண்டு.

அத்துடன் புகைத்தல், மற்றும் உடலுழைப்பின்றி சோம்பேறி வாழ்க்கை வாழ்தல் ஆகியவையும் அதிகம் காணப்படுவதில்லை.

இவற்றைக் கணக்கில் எடுத்த போதும், நம்பிக்கை உணர்வுள்ளவர்களிடையே மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம் அடைதல் ஆகியன குறைவாகவே இருந்தததாக ஆய்வு செய்தவர்கள் தெளிவுபடுத்தினர்.

இது பெண்களுக்கான ஆய்வுதானே என்று எண்ண வேண்டாம்.

சில வருடங்களுக்கு முன் ஆண்களில் டச் மருத்துவர்களால் செய்யப்பட்ட ஆய்வும் இதே முடிவையே கொண்டிருந்தன என்பது குறிபிடத்தக்கது.

எனவே எல்லோருக்கும் பொருந்தும்.

ஓப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது

வயதில் குறைந்தவர்கள்,

கல்வியறிவு அதிகமுள்ளவர்கள்,

பொருளாதார ரீதியாக வசதியுள்ளவர்கள்,

சமய நிகழ்வுகளில் வாரம் ஒரு முறையாவது கலந்து கொள்பவர்களிடையே நம்பிக்கை உணர்வு அதிகம் இருந்ததையும் இந்த ஆய்வில் கண்டறிந்தார்கள்.எனவே எமது வாழ்நாளை அதிகரிப்பதற்கு வாழ்விலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை உணர்வை வளர்ப்பது அவசியமாகிறது.

நீண்ட நாள் வாழ்வதற்காக மட்டுமின்றி மகிழ்ச்சியுள்ள பயனுறு வாழ்வாக அமைவதற்கும் அதே நம்பிக்கை உணர்வுதானே காரணமாகிறது.

அழு மூஞ்சியை கழுவித் துடைத்து எறிந்து விட்டு நம்பிக்கையோடு புன்னகைக்கும் வதனமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அது சரி. கீழே உள்ளவரின் நம்பிக்கையும் நேர் எண்ணத்தில் (Positive Thinking) அடங்குகிறது அல்லவா?

இவர்களை எந்த இடத்தில் சேர்த்துக் கொள்வது?தகவல்:- Journal of the American Heart Association யின் ‘Circulation’ என்ற மருத்துவ சஞ்சிகையின் August 10, 2009 இதழ்.நன்றி:- ஹாய் நலமா?, தினக்குரல் 17.12.2009

Read Full Post »

>
ஒரு நண்பர் கூறிய கதை ஞாபகத்திற்கு வருகிறது.

சுய வைத்தியம் செய்வதில் பெருமை கொள்ளும், அதைப்பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் விஞ்ஞானப்பட்டதாரி அவர்.

அவரது பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு.

‘சைனசயிட்டில்’ வருத்தமாக இருக்கலாம் என்றெண்ணி பல வீரியமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் கடுமையான வலி நிவாரணிகளையும் கொடுத்துப் பார்த்தார்.

எதுவித சுகமுமில்லை. தலையிடி அடிக்கடி வரத்தொடங்கியது.

பயந்து போன அவர், நரம்புத்துறை வைத்திய நிபுணரிடம் சென்றிருக்கிறார்.

கண்ட கண்ட மருந்துகளைப் பாவிப்பதற்காக அவரைக் கடிந்த வைத்திய நிபுணர், தலையிடிக்கான காரணம் கண்பார்வைக் கோளாறுதான் என்று கூறி கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைத்தார்.

கண் வைத்திய நிபுணர் சிபார்சு செய்து மூக்குக்கண்ணாடியை அணியத் தொடங்கியதும், எந்த வித மருந்துகளுமின்றியே அவரின் பிள்ளையின் தலையிடி மறைந்து விட்டது!

நோயை மாற்றாது நோயாளியை மாய்க்கும் சுயவைத்தியம் அல்ல பிள்ளைக்குத் தகப்பன் செய்த மோட்டு வைத்தியம்.


வைத்திய அறிவை, கேள்வி ஞானத்தால் பெற்று விட முடியாது!

கடுமையான ஐந்து வருடப் படிப்பும், பயிற்சியும் பின் ஒரு வருட காலம் ஓய்வேயற்ற தீவிர ‘ஹவுஸ் ஒபீசர்’ நேரடி ஆஸ்பத்திரிப் பயிற்சியும் பெற்றுங்கூட,
இன்றைய டாக்டர்களால் படுவேகமாக முன்னேறி வரும் நவீன மருத்துவத் துறையைப் பூரணமாக அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதிருக்கிறது.

ஆராய்ச்சிகளின் பலனாகத் தினசரி புதுப்புது மருந்துகள் பாவனைக்கு வருகின்றன.
அதே ஆராய்ச்சிகளின் பயனாக பல மருந்துகள் பாவனைக்கு ஏற்றதல்ல என அடிக்கடி ஒதுக்கப்படுகின்றன.
புதுப்புது சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நமது நேரடி அனுபவங்களாலும்,
மருத்துவக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலும்,
மருத்துவர் சஞ்சிகைகளைத் தொடர்ந்து படித்துவருவதினாலும்
தமது மருத்துவ அறிவைக்
கறள்கட்டி விடாமல்,
பட்டை தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்
இன்றைய டாக்டர்கள்.

எனவே எந்தவித வைத்தியமும் கற்காது கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு சுய வைத்தியம் செய்ய முற்படுவது முறையற்றது மாத்திரமன்றி
உயிருக்கே ஆபத்தாக முடியலாம்|.

வைத்தியம் என்பது நோயைச் சரியாகக் கணிப்பது மாத்திரமல்ல.

நோய்க்கான மருந்தென்ன?
அதை எந்த அளவில் பாவிக்க வேண்டும்?
எவ்வளவு காலம் பாவிக்க வேண்டும்.
அந்த மருந்துகளால் எதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?
அப்படி ஏற்படுமாயின் அதை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்வது எப்படி?

இது போன்ற விடயங்களை சுயவைத்தியம் செய்ய முனையும் சாதாரண மனிதர்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

பாமர மக்கள் பொதுவாக இப்படியான சுயவைத்தியப் பரிசோதனைகளில் ஈடுபடுவதில்லை.
காய்ச்சல் வந்தால் ‘பனடோல்’ குளிசை பாவிக்கக் கூடப் பயன்படுபவர்கள் அவர்கள்.

மருந்து பாவிப்பதற்கு மாத்திரமன்றி சாப்பிடுவது, குளிப்பது, முழுகுவது எல்லாமே டாக்டரின் புத்திமதிப்படியே செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

சிலவேளைகளில் முகம் கழுவுவது சுடுதண்ணீரிலா என்று கேட்பதற்கு நாலு ஐந்து மைல் பிரயாணம் செய்து டாக்டரிடம் வரும் வெகுளித்தனமான பாமர மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அசாதாரண துணிச்சலுடன் மூடத் தனமாகச் சுய வைத்தியத்தில் ஈடுபடுவது பொதுவாக ஓரளவு படித்தவர்களே.

மருத்துவர்கள்
மருந்துக் கடைக்காரர்,
ஆசிரியர்கள்,
ஆஸ்பத்திரி ஊழியர்கள்,
டாக்டர்களின் உறவினர் ஆகியோரும் சுயவைத்தியத்திற்குப் பெயர் போனவர்கள்.

சுயவைத்தியம் என்பது சாதாரண மக்களுக்குத் தான் ஆபத்தானது என்பதில்லை.


டாக்டர்களும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

ஒதுக்குப் புறமான காட்டுப் பிரதேசத்தில் தனியே வேலை செய்து வந்த டாக்டர் ஒருவருக்கு திடீரென ஓருநாள் சலப்பையில் கல் அடைசல் (Renal Colic) என்று சொல்லப்படும் ‘ரீனல் கொலிக்’ வயிறுவலி வந்து விட்டது.

வலியால் மிகவும் கஷ்டப்பட்ட அவர், வேறு எந்த டாக்டரையும் கலந்தாலோசிக்க முடியாத சூழ்நிலையில் தனக்குத்தானே ‘பெத்திடீன்’ என்ற ஊசி மருந்தை ஏற்றும்படியாயிற்று.

சுகம் வந்தது.


இதன் பின் அவருக்கு அடிக்கடி அந்த நோய் ஏற்படத் தொடங்கியது. அடிக்கடி தனக்குத் தானே ஊசி ஏற்றிக் கொண்டார்.

உண்மையில் அடிக்கடி வலி ஏற்பட்டதா, அல்லது வலி ஏற்பட்டதாகப் பாவனை செய்தாரா தெரியாது.

ஏனெனில் ‘பெத்திடீன்’ என்ற அந்த மருந்து சிறந்த வலி நிவாரணி மாத்திரமன்றி ஓரளவு போதையையும் கொடுக்கக் கூடியது.

ஆஸ்பத்திரியில் இருந்த ‘பெத்திடீன்’ ஊசிக்குப்பிகள் மாயமாக மறையத் தொடங்கின. அவரால் கணக்குக் காட்ட முடியவில்லை!

பிறகு ஆஸ்பத்திரியில் பணமும் காரணமின்றிக் கரையத் தொடங்கியது. ஊசி மருந்து வெளியே வாங்குவதற்காக!

விசாரணையின் பின் வேலையை இழந்தார்.

போதை ஊசிக்கு அடிமையான அவரால் இன்றும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

தன்னை அறியாத புது டாக்டர்களைக் கண்டு விட்டால் ஏதாவது சாக்குப் போக்குக் கூறி ஒரு ‘பெத்திடீன்’ ஊசி ஏற்றுவித்துக் கொள்வார்.

தன்னைப் பற்றி அறிந்த டாக்டர்களைக் கண்டால் ஏதாவது பொய்சாட்டுக் சொல்லிச் சிறிது பணம் கறந்து கொண்டு ஊசி மருந்து வாங்குவதற்காக மருந்துக் கடைக்கு ஓடுவார்.


அவரை அறிந்த டாக்டர்களும் மற்றவர்களும் அவரின் தலையைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு இழி நிலைக்கு வந்து விட்டார்.

மக்கள் மத்தியில் பெருமையுடனும், புகழுடனும் வாழவேண்டிய டாக்டர் இன்று பிச்சைக்காரனைப் போல் போதை ஊசிக்காக இரந்து திரிய வேண்டி வந்ததற்கு காரணம் இந்தச் சுயவைத்தியம் தானே!

தனக்குத்தானே மருந்து போடுவது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வேண்டாத ஆலோசனை சொல்லி அவர்களையும் தவறான மருந்து சாப்பிட வைப்பதும் இதில் அடங்கும் அல்லவா?


சுய வைத்தியம் ஜீவநாசினி.

சிரித்திரன் சஞ்சிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

Read Full Post »

>மேலைப் புலோலி சைப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் (கொழும்பு ) வருடாந்தப் பொதுக் கூட்டம் சென்ற பொங்கல் தினத்தன்று (14.01.2010) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.


மேலைப்புலோலி சமூகத்தைச் சேர்ந்த பலரும் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர்.


கண்டி பிரதேச இணைப்புக் குழுவின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.வாசுதேவன், செயலாளர் திரு.க.பாலதாசன், பொருளாளர் சி.வசந்தன் மற்றும் க.செல்வமோகன், க.பாஸ்கரன் போன்ற பலரும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவிலிருந்து திரு.க.முருகவேள், திருமதி ஞானாம்பிகை முருகவேள்(உமா), அவர்களது மகள் கஸ்தூரி முருகவேள்ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக இருந்தது.

பல பெண் அங்கத்தவர்களும் தமது வருகையால் கூட்டத்திற்குச் சிறப்பு ஊட்டினர்.


கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார்.

திரு.உலகநாதபிள்ளை வரதராஜன் கூட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று வரவேற்புரையைவழங்கினார்.


வரவேற்புரையை அடுத்து டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமையுரை ஆற்றினார்.


சென்ற வருட(2009) வருடாந்தப் பொதுக் கூட்டம்அறிக்கையை செயலாளர் திரு.சுப்பரமணியம் சற்குணராசா சமர்ப்பித்தார்.


அது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து ஒன்றியத்தின் 2009 வருடத்திற்கான செயலறிக்கையை மீண்டும் செயலாளர் திரு.சுப்பரமணியம் சற்குணராசா சமர்ப்பித்தார்.

சென்ற ஆண்டிற்கான நிதியறிக்கையை உதவிப் பொருளாளர் திருமதி.வள்ளி பிரபாகர் சமர்ப்பித்தார்.


இதைத் தொடர்ந்த கலையுரையாடலில்


திரு.க.கலாகரன்


டொக்டர் வதனி


திரு.க.பிரபாகரன்


திருமதி.வரதலக்சுமி ரகுநாதன்


திரு.க.ஈஸ்வரபாதம்


திரு.ராஜ் சுப்பிரமணியம்


போன்ற பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

புதிய நிர்வாகக் குழுத் தெரிவை அடுத்து, புதிய தலைவராகத் தெரியப்பட்ட டொக்டர்.M.K.இரகுநாதன் ஏற்புரையை வழங்கினார்.

இறுதியில், மீண்டும் செயலாளராகத் தெரியப்பட்ட திரு.சு.சற்குணராசா நன்றியுரையை வழங்கினார்.


குறுப் போட்டோவில் பலர் காணப்படுகிறார்கள்.

Read Full Post »

>எமது பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொழும்பு வாழ் பழைய மாணவர்களுடன், கண்டி சேர்ந்த பலரும் கலந்து கொண்டமை மிகவும் ஆரோக்கியமான விடயமாக இருந்தது.

புதிய செயற்குழு அங்கத்தவர் தெரிவு நடைபெற்றது.

தலைவர்:- Dr.M.K.இரகுநாதன் (பொது மருத்துவ நிபுணர்- கரகப்பிட்டிய போதனா வைத்தியசாலை.)
செயலாளர்:- திரு.சு.சற்குணராசா(Asst Director of Education)
பொருளாளர்:- திரு.இ.இரவீந்திரன்(Asst Director Rupavahini- Tamil Section)

கூட்டம் பற்றிய விபரமான பதிவு புகைப்படங்களுடன் சில தினங்களில் பதிவு ஏற்றப்படும்.

Read Full Post »

>’நாளைக்குப் பொங்கல்
யாழ்ப்பாணத்தில் என்றால்
புக்கை சமைப்போம்’
போன வரியம்
சொன்னஅந்த மூதாட்டி
“இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தாள்
இன்று காலை
அங்கிருந்து.

காலம்தான்
எவ்வாறு மாறிவிட்டது
எங்கெல்லாம் ஓடிவிட்டது
ஒருவருட இடைவெளியில்
யாரெல்லாம்
எங்கெங்கோ.

“என்ரை மண்ணை
என்ரை வீட்டை
எனது சீவிய காலத்தில்
காணக் கிடைக்குமோ”
என்று ஏங்கிய பலர்
இன்று தங்கள் வீட்டில்
மகிழ்ந்திருக்க,

வீடிருந்தபோதும்
வீட்டில் குடியிருக்க ஆளில்லாது
குடும்பமாய்
மறைந்தும் மடிந்தும் போனவர்
இன்னும் ஏராளம்.

“யாழ்ப்பாணத்தில் நல்ல மழை
வயல் எல்லாம் நல்லா விளைச்சிருக்கு
மரக்கறிகள் நல்ல மலிவு
சாமான்கள் எல்லாம்
கொழும்பு விலையை விடக்
குறைஞ்ச விலையிலை
தாராளமாகக் கிடைக்கிது”
என்பர் பலபேர்.

“எல்லாம் இருந்தென்ன
வாங்குவதற்கு
காசு இங்கே கொட்டியா கிடக்கு.
வெளிநாட்டுக் காசு
கிடைக்காத எங்கள் பாடு
என்றைக்கும்
போராட்டம்தான்.”

கூலிவேலை செய்பவர்களும்
கடைகளில் பணி புரிபவர்களும்
சின்னஞ்சிறு தொழில்
முயற்சிகளில்
இருப்பவர்களும்
எழுப்பும் குரல்கள்
யாருக்கும் கேட்பதில்லை.

“மீன் நல்லாப் பிடிபடுகுது
விலையும் மலிவு
தெற்குக்கு தினமும்
லொறி லொறியா ஏற்றி
அனுப்புகிறோம்”
பவுண் சங்கில் பளபளக்க
வாயெல்லாம் பல்லாக
மொழிகிறார் சம்மட்டியார்.

“மீன் நல்லாப் பிடிபட்டாலும்
கூலியை உயர்த்தியா
தருகிறார்கள்.
சொந்தமாய் போட்
வாங்க வழியுமில்லை.
வாயும் வயிற்றுக்குமான
எங்கள் போராட்டத்திற்கு
என்றாவது விடிவு கிடைக்குமா”
மீன்பிடித் தொழிலாளியின்
ஏக்கம்
கடலலையோடு
கரைந்து மறைகிறது.

நாம் மகிழ்ந்து
மற்றவர்களும்
மகிழ்திருக்கும் காலம்
தானே கனிவதில்லை.

எல்லோர்க்கும்
எல்லாமும்
எப்போதும்
கிடைக்கின்ற
காலம் கனியட்டும்.

அதற்காக
பதிவிடுவோம்.
குரல் எழுப்புவோம்.
ஓயாது உழைப்போம்.
கிட்டும் வரை போராடுவோம்.

தைத்திருநாளின்
பொங்கலும் அன்றைக்குத்தான்
இனிக்கும்.
எங்களுக்கும் எல்லோருக்கும்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2010


மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் வரும் தைப்பொங்கல் தினத்தன்று (14.01.2010) மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

தலைமையுரை, செயலாளரின் ஆண்டறிக்கை, பொருளாளர் அறிக்கை, ஆகியவற்றைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவும் இடம்பெறும்.

பெற்றோர், பழைய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட மேலைப் புலோலி சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் கூட்டத்தில் பங்கு பற்றி பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

எம்.கே.முருகானந்தன் எஸ்.சற்குணராசா
தலைவர் செயலாளர்

Read Full Post »

>
தொலைக்காட்சியில் விவாத அரங்கு நடந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதில் ஒருவர் கூறிய கருத்தைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது.

அவர் கூறியதன் சாராம்சம் இதுதான். ‘தடுப்பு ஊசிகள், மருந்துகள் போடக் கூடாது. அவை ஆபத்தானவை. போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிள்ளை நோய்க்கு ஆளாகியிருக்கிறது’.

எத்தகைய அபத்தமான. மூடத்தனமான தவறாக வழிநடத்தும் கருத்து அது!

தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லி அடங்க முடியாதது.

போலியோ எத்தகைய ஆபத்தான நோய் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரியாதிருக்கலாம். ஏனெனில் இன்று இலங்கையில் போலியோ காணவும் கிடைக்காத நோய். நான் மருத்துவத் தொழிலை ஆரம்பித்த காலத்தில் எத்தனை குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் வழங்காது போனதைப் பார்த்திருக்கிறேன்.


உலகளாவிய ரீதியில் போலியோ நோயை ஒழிக்கும் சொட்டு மருந்து கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1988 களிலிருந்து இன்றுவரை குறைந்தது ஐந்து மில்லியன் பேர் அங்கச் செயலிழப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா, ஆப்கனிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகள் தவிர பல நாடுகளிலிருந்து இந்நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து போலியோ நோய் பரவும் கூடும் என்பதாலேயே தொடர்ந்தும் இலங்கையில் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.

தடுப்பு மருந்து கொடுத்தல் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதால் மிகவிரைவில் உலகிலிருந்தே போலியோ ஒழிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இன்று (10.01.2010) இந்தியா எங்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் தினமாகும். இலட்சக் கணக்கான பிள்ளைகள் எதிர்காலத்தில் ஊனமின்றி சுகதேகிகளாக வாழ வகிக்க இது உதவும். இத்தகைய திட்டங்கள் எதிர்கால மனித சமுதாயத்தையே ஆரோக்கியமான திசையில் பயணிக்க வழிவகுக்கும் என நம்பலாம். அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும்.

மற்றொரு உதாரணம் பெரியம்மை ஆகும். நோயுற்றவர்களில் குறைந்தது நாலுபேருக்கு ஒருவரை கொன்றொழித்த மிக ஆபத்தான நோயாகும் அது. ஆனால் உலகிலிருந்தே முற்றாக ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களாகப் போகிறது. காரணம் தடுப்பூசிதான்.


சின்னமுத்து நோயினால் குழந்தைகள் மிகுந்த துன்பமுறுவதையும் மரணிப்தையும் நாங்கள் இப்பொழுது காண்பதேயில்லை. உலகளாவிய ரீதியில் சின்னமுத்து நோயினால் குழந்தைகள் இறப்பது 40 சதவிகிதத்தினால் குறைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இலங்கையில் குழந்தைகளுக்கு பல தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதை அறிவீர்கள்.


கசம், ஏற்பு, தொண்டைக்கரப்பன், குக்கல், போலியோ, சின்னமுத்து, ஜேர்மன் சின்னமுத்து, கூகைக்கட்டு(Munmps), ஹெப்பரைரிஸ் பீ ஆகியவற்றிற்கான தடுப்பு மருந்துகள் இலவசமாக அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது.


கொப்பளிப்பான், ஜப்பானிய மூளைக்காச்சல், ஹீமோபிலஸ் மூளைக்காச்சல், றொட்ரோ வைரஸ்(பாலகர்களின் வயிற்றோட்ட நோய்), றேபீஸ் (நீர் வெறுப்புநோய்)போன்றவையும் கிடைக்கின்றன.

மக்கள் நோயுற்ற பின் சிகிச்சை செய்வதைவிட நோயுறுவதைத் தடுப்பது மேல் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.


தடுப்பு மருந்துகள் காரணமாக அந் நோய்களுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உடலில் பெருகுகிறது. இதனால் நோயுறுவதால் ஏற்படும் உபாதைகள், அங்கச் செயலிழப்பு, மரணங்கள் தடுக்கப்படுகிறது. இது மிகப் பெரிய நன்மை அல்லவா?

இவற்றை உணராது தடுப்பு மருந்துகள் வேணுமா வேண்டாமா என விவாதம் நடத்திக் கொண்டிருப்பது எவ்வளவு தவறானது? இது பலரையும் தவறான வழியில் இட்டுச் செல்லக் கூடும்.

இருந்தபோதும் இவை முற்றிலும் பாதுகாப்பானவைதானா என சிலர் கேள்வி எழுப்பக் கூடும்.
நிச்சயமாக இல்லை.

எந்தத் தடுப்பு மருந்தும் நூற்றுக்கு நூறு பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. அவை முழுமையான பலன் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே குறுகிய கால இடைவெளியில் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவைகள் மேலதிகமாக (Booster doses) கொடுக்கப்படுகின்றன.


பக்கவிளைவுகள் இருக்காதா என்பது மற்றொரு கேள்வியாக இருக்கும். பக்கவிளைவுகள் இருக்காது.
இருந்தாலும் பெரும்பாலும் பாரதூரமானவையாக இருக்காது.
ஊசி போட்ட இடத்தில் வலி, மெல்லிய காச்சல், பசியின்மை போன்ற பக்கவிளைவுகளே ஏற்படுவதுண்டு.

நோயின் பாராதூரமான தன்மையோடு ஒப்பிடுகையில் இவை கவனத்தில் எடுக்க வேண்டியவை அல்ல.

கடுமையான பக்கவிளைவுகள் மிகமிக அரிதாகவே ஏற்படுவதுண்டு.

உதாரணமாக ஒரு இலட்சம் பேருக்கு சின்னமுத்து தடுப்பூசி போட்டால் அதில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

ஒரு மில்லியன் பேருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் அதில் இருவருக்கு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே வீண் விவாதங்களில் ஈடுபட்டு எம்மையும், குழந்தைகளையும் நோயின் வாய்க்குள் இட்டுச் செல்ல அனுமதிக்காது தடுப்பு மருந்துகளை உரிய வேளைகளில் ஒழுங்காகப் போட வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

Older Posts »