Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2010

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் – பருத்தித்துறை                      பழைய மாணவர் ஒன்றிய பொதுக்கூட்டம் 
 
2010 – 01 – 14ல்  தெரிவு செய்யப்பட்ட செய்குழு விபரம்
 
புதிய செயற்குழு

தலைவர்:- Dr.M.K.ரகுநாதன்

செயலாளர்:- திரு.சு சற்குணராஜா

பொருளாளர்:-  திரு.இரா.இரவீந்திரன்

சிரேஷ்ட உபதலைவர்:-  டாக்டர். M.K.முருகானந்தன்

உபதலைவர்கள்:-
திரு.மு.சோமசுந்தரம்,
திரு.ஆ.சிவநாதன்,
திரு.ஆ.சி.வாசுதேவன்,
டாக்டர் திருமதி S.வனிதா
டாக்டர் க.கேதீஸ்வரநாதன்

இணைச் செயலாளர்:- S.Kபிரபாகரன்

உபபொருளாளர்:- திருமதி வள்ளி பிரபாகர்

செயற்குழு உறுப்பினர்கள்:- 

  1. திருசு.இரத்தினசிங்கம், 
  2. திரு.உ.வரதராஜன், 
  3. திருமதி யோகேஸ்வரி சண்முகசுந்தரம், 
  4. திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீலிங்கம், 
  5. திரு.க.சிதம்பரநாதன், 
  6. திரு க.சிவசுந்தரம், 
  7. திரு. ஆ.சிறீநாதன், 
  8. திரு.சு ஜீவகுமார், 
  9. திரு.ஆ.நடராஜா, 
  10. திரு.க.இரத்தினவடிவேல், 
  11. திரு.சண்முகசுந்தரம்

  ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:-

  1. திரு.து.ராஜசேகரன், 
  2. திரு.க.கலாகரன், 
  3. திரு.க.சச்திதானந்தம், 
  4. திரு உலகநாதபிள்ளை, 
  5. திருமதி நீலாம்பிகை கோபாலசிங்கம், 
  6. திரு.சிவர்ணகுலசிங்கம், 
  7. திரு.நா. இராமச்சந்திரன்
  8. திருமதி.ராஜேஸ்வரி பரமேஸ்வரன், 
  9. திரு.க.ஸ்ரீஸ்கந்தா ராஜா, 
  10. திருமதி.கெ.இராமச்சந்திரன்.

அவுஸ்திரேலியாவிற்கான இணைப்பாளர்:- திரு.கமுருகவேள்

கணக்காய்வாளர்:- திரு சி.தயாலிங்கம்

Read Full Post »

>

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்(கொழும்பு)
வருடாந்த பொதுக் கூட்டம். 14.01.2010.
தலைமையுரை 2010

மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட எமது பாடசாலைச் சமூகத்தைச் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்,
மாலை வணக்கங்களும்.

மீண்டும் ஒரு வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 14.01.2007 ல் ஆரப்பிக்கபட்ட எமது ஒன்றியம் 3 வயதைக் கடந்து முழு வீச்சுடன் நடைபோடும் பருவத்தில் இருக்கிறது.

பழைய மாணவர் ஒன்றியம் என்ற இக் குழந்தை பிறந்த நாள் முதல் அதன் செயற்பாடுகளில் பங்கு பற்றி எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவியும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாம் கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. நாட்டு நிலை மிகவும் மோசமாக இருந்த நேரத்தில் எமது ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர்கள் என்றாலே சந்தேகிகப்பட வேண்டிய பிராணிகள் என்று நினைக்கப்பட்ட நேரம் அது.

நாம் கூடுவதும், கலந்துரையாடுவதும், நிதி சேர்ப்பதும், வங்கிகள் ஊடாக பாடசாலைக் கணக்கிற்கு அனுப்புவதும் உயிரச்சம் விளைவிக்கக் கூடிய விடயங்களாக இருந்தன.

ஆயினும் அவற்றையும் தாண்டி எமது பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்கள் ஒவ்வொருவரதும் பாடசாலை மீதான பற்றுதலும், தன்னலங்கருதாத செயற்பாடுகளும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு நிறையவே உதவியுள்ளன.

பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும், அதற்கு எமது ஒன்றியம் உங்கள் உதவிகள் ஊடாக எவ்வாறு கைகொடுத்தது என்பது பற்றியும் செயலாளர் தனது அறிக்கையில் விரிவாகக் கூறுவார்.

சென்ற ஆண்டின் முக்கிய பெறு ஆக எமது கண்டி விஜயமும் அங்கு ஒரு இணைப்புக் குழு அமைக்கப்பட்தையும் சொல்லலாம்.

இது பற்றிய விபரங்கள் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் மேலும் விபரிக்கவில்லை.

பல பணிகள் செய்து முடிக்கப்பட்ட போதும் இன்றைய பாடசாலை மாணவர்களின் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப இன்னும் பல விடயங்களைச் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது.

மனதுக்கு இனிய ரம்யமான சூழலும்,
கற்றைக்குத் தேவையான கட்டட, தளபாட, நூலக, விளையாட்டு மைதான வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
உள்ளவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஆற்ற வேண்டிய பணிகள்

புதிய கட்டிடம்

பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் மிக அவசியத் தேவையாக இருக்கிறது. முன்பு ராஜ் சுப்பிரமணியம் கல்வித் திணக்களத்தில் இருந்து போது ஒதுக்கிய நிதியில் ஆரம்பிக்கபட்ட இரட்டை மாடிக் கட்டடம் நாட்டு நிலைகளால் பூர்த்தி செய்யப்படவில்லை. அந்த அத்திவாரத்தின் மீது இப்பொழுது புதிய கட்டடம் கட்ட முடியபா அளவிற்கு பழுதாகி உள்ளது. அதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டியுள்ளது.

போர் முடிவுற்றதை அடுத்து வன்னிப்  பகுதியிலிருந்து பெருமளவு மாணவர்கள் வந்துள்ளார்கள். இதனால் 230 அளவில் இருந்த மாணவர் தொகை திடீரென 359ஆக அதிகரித்துவிட்டது. இடவசதி போதாது. விளையாட்டு மைதானத்தின் மேடையில் ஒரு வகுப்பை வைக்க வேண்டிய நிலை.

தளபாடங்கள்

மாணவர் தொகை அதிகரித்ததால் தளபாடங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடம் இல்லாமல் தளபாடங்களைப் போட இடமில்லை. எனவே புதிய இரட்டை மாடிக் கட்டடம் பெறுவதே முதல் தேவையாக உள்ளது. இது தனியார் செய்யக் கூடியது அல்ல. சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள அணுகியுள்ளோம். ஆயினும் இன்னமும் எதுவும் கை கூடவில்லை.

நூல்கள்

நூலகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. தளபாடங்கள் பரம்சோதி அருளானந்தம் மற்றும் சுந்தரலிங்கம் நிதியுதவியில் கிடைத்துள்ளது. நூலகத்திற்கு 30106 கதிரைகள், வாசிப்பு மேசை 1, ஒவிஸ் டேபிள் 1

நூலகத்திற்கு நூல்கள் சென்ற வருடம் சேர்த்து அனுப்பினோம். இன்னமும் தேவை. 5ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஏற்ற புதிய நூல்களைச் சேகரிப்பதில் அங்கத்தவர்கள் ஒத்துழைப்புத் தேவை

சிறுவர்களுக்கான சுவர் சித்திரங்கள்

பாடசாலையின் சுற்றுமதில் சுவரின் உட்பக்கங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளிச் சுவர்களிலும் சித்திரங்கள் வரையப்பட வேண்டும். இது மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கும், கற்றலுக்கு உதவும் விதமாகவும், பாடசாலையை அழுகுறுத்தவும் அவசியமானது.

ஒரு இடைவெளியை சிமெந்து பூசி சித்திரம் வரைய சுமார் பதினையாயிரம் (15,000) தேவைப்படும். பங்களித்தவர் விபரங்கள் அனுசரணை என்ற சிறுதலைப்பில் ஒவ்வொரு சித்திரத்திலும் எழுதப்படும். மறைந்தோர் ஞாபகமாகவும் செய்யலாம். 2-3 வருடங்களில் டச் அப் செய்ய வேண்டியிருக்கும்

சிறிய பாடசாலையின் முகரி முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியுள்ளது.
தளபாட பராமரிப்பும், வர்ணம் பூசுதலும்
பாடசாலை தளபாடங்களை பேணிப் பாதுகாப்பதற்கு பராமரிப்பு அவசியம். 2-3 வருடங்களுக்கு ஒரு முறை அவற்றைத் திருத்தி வர்ணம் பூச சுமார் ஐப்பதினாயிரம் தேவைப்படும்

சிறிய பாடசாலை சுற்று மதில்

சிறிய பாடசாலையின் முற்பகுதி அழகிற்காகவும் பாதுகாப்பிறகாகவும் இரும்புவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஏனைய மூன்று பக்கங்களையும் சுற்றி மதில் அமைக்க வேண்டியுள்ளது.

நெற் வசதி

கம்பியூட்டர் அறை செய்யப்பட்டுள்ளது. மேசை, கதிரை, கண்ணாடி அலுமாரி, தளபாடங்கள் அரச உதவியில் கிடைத்துள்ளன. விரைவில் கம்பியூட்டர்கள் கிடைக்கும். தொடரந்து நெற் வசதி செய்யப்பட வேண்டும்.

நிறுவனர் சிலை

பெரும்பாலன பாடசாலைகளின் முன்னறலில் அதனை ஸ்தாபித்த நிறுவனரின் சிலை வைக்கப்பட்டு தினமும் அதற்கு பூ மரியாதை செய்யும் வழக்கம் இருக்கிறது.

எமது பாடசாலை 1884 முதல் திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை பராபரிப்பில் நடாந்து வந்தது. பின்னர் திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை பொறுப்பேற்றார். ஸ்தாபகர் சிலையை அவர்களது வழித்தோன்றலகள் செய்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

பழைய மாணவர் பற்றிய தகவல் திரட்டி

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர்களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி;.சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன் (திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த்தெடுத்தது எமது பாடசாலையே.

ஆயினும் கல்வியாலும், தொழிலாலும், சமூகப்பணிகளாலும் பெருமை பெற்ற எமது பழைய மாணவர்கள் பற்றிய விபரங்கள் எமது பாடசாலையில் இல்லை. அத்தகைய ஒரு தகவல் திரட்டியைத் தயாரித்துப் பேணுவது மிகவும் அவசியம். அதற்கான ஒரு மாதிரிப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்றி

கடந்த மூன்று வருடங்களாக எமது பணிகள் தொடர்கின்றன. இப் பணிகளின் போது என்னுடன் ஒத்துழைத்த செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

முக்கியமாக செயலாளர் திரு சற்குணராசா, பொருளாளர் இரவீந்திரன் ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.

பொருளாளர் இரவீந்திரன் இன்று கலந்துகொள்ள முடியாத சூழலில் சென்ற வருட கணக்கறிக்கையைத் தயாரிப்பதுடன் அதனை இன்று சமர்பிக்கவும் இருக்கும் வள்ளி பிரபாகர் அவர்களுக்கு எனது விசேட நன்றிகள்.

திருவாளர்கள் சற்குணராசா, ரவீந்திரன், சோமசுந்தரம், ஜீவகுமார், சண்முகசுந்தரம், இரத்தினசிங்கம், வரதராசன், சிதம்பரநாதன், சிவசுந்தரம், இராஜ் சுப்பிரமணியம், போன்றவர்கள் செயற்குழக் கூட்டங்களுக்கு வந்து தங்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதில் இராஜ் சுப்பிரமணியம், சற்குணராசா, சண்முகசுந்தரம் ஆகியோர் 100 சதவிகிதம் பிரச்ன்னமாயிருந்தனர்.

திரு.இராஜ் சுப்பிரமணியம், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் மிகமிக முக்கியமானவை. அவர்கள் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கும் பாடசாலையின் வளர்ச்சியிலும் காட்டும் அக்கறை அதி விசேடமானவை. ஓன்றியத்தின் தலைவர் என்ற ரீதியல் நான் செயற்படுவதை விட ஆழமாகச் சிந்தித்து, வேகமாக செயற்படுபவர்கள் அவர்களே. அவர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.

எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அளப்பரிய பணியை செய்துவருகிறார். அவரின் தன்னலம் கருதாத, வேகமும் சமோசிதமும் கூடிய செயற்பாடுகள் காரணமாக எமது பாடசாலை கடந்த 4 ஆண்டுகளில் முன்னணி நிலைக்கு வந்திருக்கிறது. வடமராட்சிப் பிரதேசத்தின் முன்னணி ஆரம்பப் பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் பௌதீக வளத்திலும், அழகிய சுத்தமான சுற்றாலைப் பேணுவதிலும் அது முன்னணியில் இருக்க வைத்த பெருமை அவரையே சேரும்.

பழகுவதற்கு இனியவரான அவர், பட்ட மேற்படிப்புடன், யாழ் பல்கலைக்கழகத்தின் வருகைநிலை விரிவுரையாளராகவும் விளங்கும் கல்வித் தகமையும் உடையவராவார். எமது பாடசாலை அதிபராக பணியாற்றக் கிடைத்தது எமக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். அதனை நாமும் ஓரளவு பயன்படுத்தி பாடசாலை வளரச்சிக்கு உதவ முடிந்தது என்பதில் எமது ஒன்றிமும் பெருமை கொள்ளலாம். இப்பொழுது அவருக்கு தரம் 2 அதிபர் நிலைப் பதவி உயர்வு கிட்டியுள்ளது. அவருக்கு எனது சார்பிலும் உங்கள் எல்லோர் சாரப்பிலும் வாழ்த்துக் கூறுகிறேன்.

எமது ஒன்றியத்தின் வரவு செலவு கணக்கு உங்களுக்கு சற்று நேரத்தில் கிடைக்கும். அதனை அவதானதாகப் பார்த்தால் உங்களுக்கு சில விடயங்கள் புரியக் கூடும். முதலாவது எமது அங்கத்தவர்கள் அளித்த பெரும்பாலான நிதி உதவிகள் எம்மால் நேரடியாகக் கையாளப்படவில்லை. பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதிக்கு, நிதி உதவி வழங்கியர்களால் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவை எமது கணக்கறிக்கையில் இடம்பெறவில்லை.

அடுத்த முக்கிய விடயம் சங்கத்தின் வழமையான நடைமுறைச் செயற்பாடுகளுக்கு சங்கத்தின் எந்த நிதியும் பெறப்படவில்லை.
கடித, டெலிபோன் செலவுகள், அறிக்கை அச்சடிப்பு செலவு, கண்டி விஜயத்திற்கான பிரயாணச் செலவுகள், ஆண்டு விழாச் சிற்றுண்டிச் செலவு எதுவுமே சங்க நிதியிலிருந்து பெறப்படவில்லை.

சேர்க்கப்பட்ட ஒவ்வொரு சதமும் பாடசாலை வளர்ச்சிக்கே சென்று அடைந்தது. அதற்கு ஒத்துழைத்த சங்க செயற்குழு அனைவருக்கும் எனது நன்றிகள்.

செயற்குழு என்று சொன்ன பொதும் பெரும்பாலான உதவிகள் திரு ராஜ் சுப்பிரமணியத்தின் உதவிகளே. அறிக்கைகளைப் போட்டோ பிரதி எடுத்து தபாலில் அனுப்புவதற்குமான செலவுகளையும், கண்டி பிரயாண வாகன வசதியும், இன்றைய சிற்றுண்டிகளுக்கான செலவுகளின் பெரும் பகுதியும் அவரது உதவிகளே.

கணக்கறிக்கையை தயாரித்தது மட்டுமின்றி போட்டோ பிரதிகள் எடுத்ததும் வள்ளி பிரபாகரின் உதவியாகும்.

எதிர்காலத்தில் இளைய தலை முறையினரின் ஈடுபாடும் பங்களிப்பும் மிக முக்கியம்.

பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அறிக்கைகளைச் சமர்பிப்தற்கும், உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வழமையான நடவடிக்கையாக இருக்கிறது.

இதற்கு மேலாக இதனை பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமக்கிடையே உறவுகளை புதுப்பித்து, பழைய நினைவுகளை மீள்நினைத்து மகிழவும் கொண்டாவும் வேண்டிய நிகழ்வாகவும் மாற்ற வேண்டிய பணி உள்ளது.

வெறும் வருடாந்தப் பணியாக இருக்கும் இதனை ஒன்று கூடலாகவும், தேநீர் அல்லது இராப் போசனத்துடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வாக்கும் பணியில் உங்கள் அனைவரது ஒத்தழைப்பையும் வேண்டுகிறேன்.
நன்றி.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>நோயாளியை விட கூட வந்த தாய் அதிக பதற்றத்தில் இருந்தாள். வேகமாக வந்ததில் அவளுக்குத்தான் மூச்சு இளைத்தது.

“ஒரு கிழமையாக பஞ்சிப்பட்டுக் கொண்டிருந்தான். தலையிடி,         சாப்பிடுறான் இல்லை.                                                                                                      வயிறும் நோகுது என்றான்.                                                                                                  இப்ப பார்த்தால் காச்சல் 101 லை அடிக்கிது.                                             தொண்டையும் நோகுதாம்.                                                                                         திரும்பிக் காட்டடா தம்பி. கழுத்திலை கட்டி கட்டியா வீக்கம்.                 பாருங்கோ டொக்டர். என்ன வருத்தமோ தெரியவில்லை”

அவளைப் பொறுத்த வரையில் காச்சலும் கட்டிகளும் மிகுந்த அபாயமான அறிகுறிகள்தான். ஏதாவது புற்றுநோயாக இருக்குமோ எனப் பயம்.

பதினைந்தே ஆன சின்ன வயதில் இப்படி ஒரு நோயா மகனுக்கு என்ற தனது ஏக்கத்தை மகனுக்கு முன் வைத்துச் சொல்ல முடியாது வார்த்தைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.

நெறிக்கட்டிக் காச்சல்

ஆனால் அவனுக்கு வந்திருப்பது ஆபத்தான நோயல்ல. சாதாரண ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆங்கிலத்தில் Glandular Fever அல்லது

Infectious Mononucleosis என்பார்கள்.                              

நெறிக்கட்டிக் காச்சல் அல்லது நிணநீர்க்கட்டிக் காய்ச்சல் என நாம் சொல்லலாம்.

பெரும்பாலான பிள்ளைகளுக்கு மிகச் சிறுவயதிலேயே வந்து தானே மாறிவிடுவதுண்டு.                                                                                                                       

2-3 வயதிற்கு இடையில் அவ்வாறு வரும்போது வழமையான அறிகுறிகள் இருப்பதில்லை. 

வேறு சாதாரண காய்ச்சல் போல வந்து கரைச்சல் கொடுக்காது குணமாகிவிடும்.                                                                                                               அதனால் கவனத்தில் எடுக்கப்படாது போய்விடும்.                                                      

இந் நோய் இருப்பதை உறுதி செய்ய மொனோ ஸ்பொட்

(Mono spot) என்ற இரத்தப் பரிசோதனை உதவும்.

அறிகுறிகள்

குழந்தைப் பருவத்தில் வராதவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பதின்ம வயதில் வருவதுண்டு.

ஆரம்பத்தில் உடலுழைவு, தலையிடி, களைப்பு, பசியின்மை போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கும். சிலருக்கு வயிற்றுநோ இருக்கக் கூடும்.

சுமார் ஓரிரு வாரம் செல்ல தொண்டை நோவுடன் காச்சல் தோன்றும். 

ரொன்சில்கள் சிவந்து வீங்கியிருக்கும்.                                                                

அத்துடன் கழுத்துப் பகுதியில் நெறிகள் தோன்றும். அக்குள், அரைப் பகுதிகளிலும் நெறிகள் வருவதுண்டு.

மண்ணீரல், ஈரல் ஆகியவையும் இந்நேரத்தில் வீங்குவதுண்டு.                   அதுவே வயிற்றுநோவிற்குக் காரணமாகும்.                                                     அத்தோடு பசியின்மை, ஓங்காளம் போன்றவற்றிற்கும் இவையே காரணமாகும்.

தொண்டை நோவைக் கண்டவுடன் தமக்குத்தாமே சுயவைத்தியம் செய்யும் சிலர் அமொக்சிசிலின் என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்தை வாங்கிப் போடுவதுண்டு. அப்படியானவர்களுக்கு தோல் சிவந்து அரிப்பு எடுப்பது போன்ற பக்கவிளைவு ஏற்படலாம்.

இது ஒரு வைரஸ் நோயாதலால் எந்த நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் உதவாது.                                                                                                              உபயோகிக்கவும் கூடாது.                                                                                                

காய்ச்சல் தானே விரைவில் குணமாகிவிடும். ஆயினும் களைப்புத்தன்மை சில வாரங்களுக்கு நீடிக்கக் கூடும்.                                                                                                     
ஒரு முறை இக்காச்சல் வந்தால் உடலுக்கு பூரண எதிர்புச் சக்தி கிடைத்துவிடுவதால் மீண்டும் வருவதில்லை.

எப்படித் தொற்றும்

நோயுற்று இருப்பவரின் எச்சிலில் இந்நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள்

Epstein-Barr (EB) virus) நிறைய இருக்கும்.
 

இதனால் வாயினால் முத்தமிட்டால் உடனடியாகத் தொற்றும்.
 

நோயுற்றவர் உபயோகித்த கப், கிளாஸ் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிப்பதாலும் தொற்றும்.

நோய் முற்றாகக் குணமாகிய பின்னரும் பலரது உமிழ்நீரில் தொடர்ந்து இருக்கும். அவர்களிலிருந்து நோய் பின்னரும் தொற்றலாம்.                   

இவர்களை நோய் காவிகள் என்பர்.

அடிக்கடி கை கழுவுவது, மற்றவர்கள் கோப்பை, கிளாஸ், பிளேட் போன்றவற்றை உபயோகிக்காது இருத்தல் போன்ற அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால் இந்நோயை மட்டுமல்ல மேலும் பல நோய்கள் தொற்றாமல் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.

கிருமி தொற்றினாலும் அது நோயாக வெளிப்பட 4-6 வாரங்கள் செல்லலாம். நோயுற்றவரை வாயில் முத்தமிட்டாலும், முன்பு ஒருமுறை நோய் வந்தவருக்கு மீண்டும் வர வாய்ப்பில்லை.

எப்படியாயினும் வேகமாகப் பரவும் தொற்றுநோய் அல்ல. இக்காரணங்களால் நோயுற்றவரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியதில்லை. காய்ச்சல் மாறி உடம்பு திடமானால் பாடசாலைக்குச் செல்லலாம். தொழிலும் செய்யலாம். இதற்கு எதிரான தடுப்பு ஊசி கிடையாது.

மருத்துவம்

காய்ச்சல், உடல் அலுப்பு இருந்தால் பரசிட்டமோல் மருந்து உபயோகிக்கலாம். ஆயினும் ஏற்கனவெ குறிப்பட்டது போல நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது கூடாது.                                                                                            

காச்சலுக்கு அஸ்பிரின் டிஸ்பிரின் உபயோகிக்க வேண்டாம். வைரஸ் காச்சலுக்கு அவற்றை உபயொகித்தால் ரெயிஸ் சின்ரோம் என்ற ஆபத்தான விளைவு ஏற்படலாம்.

போதிய ஓய்வு எடுப்பதுதான் முக்கியமானது.                                                   அதற்காக படுக்கையில் கிடக்க வேண்டும் என்றில்லை.                          களைப்பைக் கொடுக்கும் கடுமையான வேலைகளையும், கடும் உடற் பயிற்சிகளையும் நோயுள்ள போது தவிர்க்க வேண்டும். 

தனது உடல் சொல்வதைக் கேட்டால் போதுமானது. அது போதும் என்று சொன்னால் அதற்கு மேலாக உடலை வருத்த வேண்டாம்.

விரும்பியதை உண்ணலாம். பத்தியம் எதுவும் கிடையாது. ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு காரணமாக உண்ண முடியவில்லை எனில் போசாக்குள்ள பானங்களாக அடிக்கடி அருந்த வேண்டும்.

உப்பு நீரால் அலசிக் கொப்பளித்தால் தொண்டை வலி தீரும்.

‘பயந்தாங்கொள்ளி மனுசி. சின்னக் காய்சலுக்கு டொக்டரட்டை ஓடுது’ என்று ஆரம்பத்தில் குறிப்பட்ட பெண்ணை நக்கலடித்து அலட்சியப்படுத்தினால் தவறு செய்வது நீங்கள்தான்.

ஏனெனில் லிம்போமா, ஹொட்ச்கின்ஸ் போன்ற ஆபத்தான நோய்களின் முதல் அறிகுறிகளும் நிணநீர்க்கட்டி வீக்கம்தான். கசநோய்(TB) சிபிலிஸ் போன்ற தொற்று நோய்களிலும் ஏற்படும். எனவே எத்தகைய நிணநீர்க்கட்டி வீக்கம் (நெறிக்கட்டி) ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
 
எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

>வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம்

வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பின் நூல் ஆய்வு அரங்கம் சென்ற ஞாயிறு 14.02.2010 நடைபெற்றது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்ட இந் நூல் அவர்களது ஆதரவில் 58, தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எம்.கே.முருகானந்தன் தலைமை தாங்கினார். வழமையான கூட்டங்கள் போலன்றி மண்டம் நிறைந்து வழிந்து வெளியேயும் சிலர் நிற்க வேண்டியளவிற்கு பார்வையாளர்கள் முழு அளவில் பங்கு பற்றிய மிகச் சிறப்பான கூட்டமாக இருந்தது.

எம்.கே.முருகானந்தன் தலைமையுரை ஆற்றினார். தலைமையுரை மற்றொரு பதிவாக இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆய்வுரைகள் இடம் பெற்றன. எழுத்தாளரும் தகவம் அமைப்பின் முக்கிய உறுப்பினருமான வசந்தி தயாபரன் முதலாவது உரையை வழங்கினார்.

வசந்தி தயாபரன் தனது உரையில்:-

‘ஆன்மாவின் கருவிலிருந்து வருவது கவிதை. நல்ல கவிதை எழுதுவதற்கு மொழி வசப்பட வேண்டும்.

அந்த வகையில் சிறப்பான மொழிநடை ரிம்ஸா மொஹம்மத் அவர்களுக்க இயல்பாகக் கிடைத்திருகிறது.

அவரது படைப்புகளை திரும்பத் திரும்ப வாசிக்கத் தேவையில்லை.
ஒரு முறை வாசித்தால் போதுமானது.
வாசகனைப் பயமுறுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் கிடையாது.

கவிதை உருவாக்கத்தில் அவருக்கு தனித்துவமான பாணி உள்ளது.
புதுக்கவிதை என்றால் படிமங்களையும் குறியீடுகளையும் அள்ளி வீசப்படுகிறது.
புதுக்கவிதைக்கு அதுதான் அடையாளம் என்று சிலர் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவர் அவற்றை கிள்ளித் தெளித்திருக்கிறாரே ஒழிய அள்ளித் திணிக்கவில்லை.
எதுகை மோனை தானே வந்து சேர்ந்திருக்கிறது அவருக்கு.
இதற்கு துணை செய்வது நீரோட்டம் போன்ற நடையாகும்.

உணர்வுகளைப் பேசுகிறார். தாய்பாசம் பற்றி எழுதியுள்ளார்.

ஆனால் காதல்தான் இவரது படைப்புகளில் பல்வேறு வடிவங்களில் பரிமாணங்களில் புதைந்து கிடக்கின்றன.
வயது காரணமாக இருக்கலாம்.
படிப்படியாக மலரும் பூப்போல காதலின் பரிமாணங்கள் இவரது கவிதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.

குறை எனில் ஒன்று சொல்வேன்.
சமூகம் பற்றிய பார்வை சொற்பமாகவே வந்திருக்கிறது. அகன்ற பார்வை வேண்டும்.

இவரது கவிதைகளில் பெண் என்ற நிலைப்பாடு இருக்கிறது.
அதை இஸ்லாமியப் பார்வை என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை.
ஒட்டு மொத்தப் பெண் பார்வை என்பேன்.
தனிய இருக்கும் பெண்ணை விடுப்புப் பார்க்கும் தன்மை எமது சமூகத்தில் உள்ளது.
அவள் வாழ்வுக்காகப் போராடும்போது சமூகம் வேடிக்கை பார்த்திருக்கும் வாயிருந்தால் சமூகம் எதையும் பேசும். அதற்கு எதிரான குரல் ரிம்ஸாவிடமிருந்து எழுகிறது’

அடுத்து பிரபல கவிஞரும் விமர்சகருமான கவிஞர் இக்பால் ஆய்வுரை வழங்கினார்.

இவரே வெலிகம ரிம்சா முஹம்மத் எழுதிய தென்றிலின் வேகம் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவிஞர் இக்பால் தனது உரையில்:-

இயல் இசை நாடகம் என முத்தமிழ் என்பார்கள்.
ஆனால் கவிதை இவை எல்லாவற்றிகள்ளும் அடங்கும்.
இந்த நூல் சிறியதாக இருந்தாலும் இவை யாவற்றையும் உள்ளடக்குகிறது. நடை நன்றாக இருக்கிது.
சுய அனுபவத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது.

கருத்து செம்மையாக இல்லாவிடில் படைப்பு காலத்தைக் கடந்து நிற்கமுடியாது.

கவிதையானது காதையும் கண்ணையும் நம்பி வெளிவரும் இலக்கிய வடிவமாகும்.

ஆனால் புதுக்கவிதைகள் கண்ணை மட்டும் நம்பி வெளிவருகின்றன.

இவருக்கு வாசகனின் கண் காது இரண்டையும் கவரும் புலமை இருக்கிறது.

இந்நூலில் 63 தனிக் கவிதைகள் உள்ளன.
64வது, கவித் துளிகள் என்ற தலைப்பில் சில படைப்புகள் உள்ளன.
இவை விடுகதை அல்லது நொடி போல உள்ளன.

பெரும்பாலான படைப்புகள் தன் உணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. கவிதைகளின் உள்ளடக்கங்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது காவியம் போல இருக்கிறது.

இவரது படைப்புகள் உணர்ச்சி வெளிப்பாட்டுடன் நின்று விடாமல் கற்பனைத் திறனும் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.

மனித மனக் கிளர்வுகளே பெரும்பாலும் பாடுபொருளாக இருக்கின்றன. சமூகம் பற்றிய கவிதைகள் குறைவு.
வயது காரணமாக இருக்கலாம்.

எதிர்காலப் படைப்புகளில் சமூக உணர்வு கூடுதலாக விழம் என எதிர்பார்க்கலாம்.

ஆய்வுரைகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களாக வந்திருந்த சிலர் தமது கருத்துக்களை முன் வைத்தனர். மேமன்கவி.
டொமினிக் ஜீவா,
அஹ் அசுமத் போன்றோர் தமது கருத்துக்களைச் சருக்கமாகச் செல்லி நூலாசிரியருக்கு வாழ்த்தும் கூறினர்.

நூலசிரியரன் ஏற்புரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

தேநீர் விருந்தின் போது மூத்த மற்றும் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகி கருத்துப் பரிமாறல்களிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

நல்ல ஒரு நிகழ்வில் பங்குகொண்ட உணர்வுடன் வீடு திரும்ப முடிந்தது.

நூலின் பெயர்: தென்றலின் வேகம் ( கவிதை )
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=

நூல் விநியோக உரிமை:-

பூபாலசிங்கம் புத்தக சாலை
Poobalasingam Book Depot
202,Sea Street
Colombo 11.

Read Full Post »

>எம்.கே.முருகானந்தன் தலைமையுரை

அனைவருக்கும் அன்பு வணக்கம்

இன்று ஒரு நூல் வெளியீட்டிற்காக கூடியுள்ளோம்.

இது ரிம்ஸா முகம்மத் அவர்களுடைய முதல் நூல். இது ஒரு கவிதைத் தொகுப்பு.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை பல இலக்கியச் செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியக் கருத்தரங்குகள், ஆய்வரங்கங்கள், நூல் விமர்சன அரங்கங்கள், நூல் வெளியீடுகள் போன்ற பலவும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

சிறுகதைத் தொகுப்புகள் 4 வெளிவந்தள்ளன, முற்போக்கு கவிதை மற்றும் சிறுகதை பற்றிய ஆய்வுகள் நூலாகப்பட்டுள்ளன. ‘பின்னவீனத்தை விளங்கிக் கொள்ளல்’ என்ற பேரா.சபா ஜெயராசாவின் இலக்கிய செல்நெறி சார்ந்த கட்டுரை நூலானதும் முக்கியமானது

எமது கல்வி முறைமைகள் தொடர்பாக, பேரா.சபா ஜெயராசாவின் ‘கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்’, தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும்’ மற்றும் பேரா.சந்திரசேகரனின் ‘இலங்கையில் உயர்கல்வி’, தை.தனராஸ் ‘ஒடுக்கப்பட்டோர் கல்வி- மலையக் கல்வி பற்றிய ஆய்வு’ ஆகியவை பெறுமதி வாய்ந்த நூல்களாகும்.

இதேபோல சூழலியல் பற்றி பேரா. ஆன்ரனி நோபேட் எழுதிய ‘சேது சமுத்திரம் கப்பற் கால்வாய்- அமைவிடம் பற்றும் பௌதீகச் சூழல் பற்றிய ஆய்வு’ காலத்தின் தேவை கருதிய முக்கிய வெளியீடுகளாகும்.

தொடர்ந்து ‘பண்பாட்டு உலகமயமாதலும் தாக்கங்களும் புத்துயிர்ப்பும்’, ‘மார்க்சிய உளவியலும் அழகியலும்’, ‘காலவெள்ளம்’, ‘பூகோளம் வெப்பமடைதல்’ ஆகிய நூல்களையும் வெளியிட உள்ளது.

இன்று வெளியாகும் ரிம்ஸா முகம்மத் அவர்களது ‘தென்றலின் வேகம்’ ஒரு கவிதைத் தொகுப்பாகும். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். இளம் எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களது நூல்களை வெளியிடும் முயற்சியின் முதற் பெறுபேறும் இதுவாகும்.

தொடர்ந்தும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை சிறப்பான நூல்களையும் கருத்தரங்குகளையும் முன்னெடுக்கும் என நம்புகிறேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

நூலாசிரியர் பற்றி

‘தென்றலின் வேகம்’ ரிம்ஸா முகம்மத் அவர்களின் முதலாவது இலக்கிய நூலாகும். ஏற்கனவே கணக்கியல் பற்றி மூன்று நூல்களை மாணவ சமுதாயத்தை முன்நிறுத்தி வெளியிட்டிருக்கிறார்.

இது ரிம்ஸா முகம்மத் முதல் கவிதை நூல் ஆன போதும் இவர் இலக்கிய உலகிற்குப் புதியவர் அல்ல. 1996, 97களிலிருந்தே கவிதைகள் படைத்து வருகிறார். ஆயினும் 2004ம் ஆண்டை ஒரு திருப்புமுனையாகக் கொள்கிறார்.
இவரது வேகமான இலக்கியப் பயணம் அதன் பின்னர்தான் ஆரம்பித்தது. தினகரன் வீரகேசரி போன்ற இலங்கைப் பத்திரிகைகள் முதல் தமிழகச் சஞ்சிகையான ‘இனிய நந்தவனம்’ ஆகியவற்றில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இணையத்தையும் இவர் தனது இலக்கியத் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தத் தவறவில்லை. ஊடறு, வார்ப்பு ஆகிய இணைய இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதற்கு மேலாக தனக்கு என ஒரு இணையத் தளத்தையும் வைத்திருக்கிறார். ‘ரிம்ஸா முகம்மத் கவிதைகள்’ என்ற இணையத் தளம். அதற்கு இவர் கொடுத்திருக்கும் முகப்பு வாசகம் ‘முட்களுக்கு மத்தியில்தான் ரோஜாக்களின் ராஜாங்கம் நடப்பது’ என்பதாகும்.

ஆம் மனதுக்கிய இனிய எந்த நல்ல விடயம் நடப்பதாயினும் அது பல சவால்களையும் தடைகளையும் தாண்டியாக வேண்டும் என்பது பொது நியதியாகிவிட்ட காலம் இது. தனது சொந்த வாழ்க்கையிலும் இலக்கியப் பயணத்திலும் பல பிரச்சனைகளை நூலாசிரியர் எதிர்கொண்டுள்ளார்.

‘அழுகுண்ணிச் சிந்தனைகளையும்
அடுத்துக் கெடுக்கும்
அடாவடித்தனங்களையும்
அங்கிக்குள் மறைத்து..’

என்று தனது கவிதையில் குமுறுவதிலிருந்து இதை உணர முடிகிறது.

திக்குவல்லை அருகில் உள்ள வெலிகம என்ற கிராமத்தைப் பிற்பிடமாகக் கொண்ட ரிம்ஸா முகம்மத் இப்பொழுது கல்கிசவில் வாழ்வது தனது வாழ்வைக் கொண்டு நகர்த்துவதற்கான தொழில் தேவைகளுக்காக.

‘சொந்த மண்ணின் பேறான
சுக வளத்தை இழந்து
வெந்த உள்ளத்தோடும்
வேக்காட்டுப் பெருமூச்சோடும்
வாழும் இவர்கள்’

என்று ஒரு கவிதையில் பாடுவது வெறும் கற்பனைச் சொற்களல்ல. வாழ்க்கை அனுபவங்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இன்றைய நூல் கவிதை பற்றியது. எனவே கவிதை பற்றி மேலும் ஆழமாகச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.

இலங்கையில் தமிழ்க்கவிதை

இலங்கைக் கவிதைத் துறைக்கு நீண்ட வரலாறு உண்டு. அதில் இப்பொழுது தென்றலின் வேகம் கவிதை நூலும் இணைந்து கொள்கிறது. இந்த நூல் இரண்டு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கும் கவிதைத் தொகுதி. அதிலும் முக்கியமாக ஒரு இஸ்லாமியப் பெண்ணின் பாடுகளைச் சொல்லும் தொகுதியாகவும் உள்ளது.

இலங்கை இலக்கியப் பரப்பில் பெண்களின் கவிதைகள் நூலாக வரத்தொடங்கியது ‘சொல்லாத சேதிகளுடன்’ என நினைக்கிறேன். இது 1986 ல் வெளிவந்தது. சுமார் இரண்டரை தசாப்பதமாக பெண்களின் குரல் எமது இலக்கியப் பரப்பில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிவரமணி, ஒளவை, ஆழியாள், சுல்பிகா, மைதிலி, பெண்ணியா, நளாயினி, லுணகல ஹஸீனா புஹாரி, பாலரஞ்சனி சர்மா, கோசல்யா, அனார் என நீளும் பட்டியலில் இப்பொழுது வெலிகம ரிம்ஸா முகம்மதின் நூலும் இணைகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்

கவிதை எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே ஒலித்து வந்திருக்கிறது.
இதனால் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான 80 களில் கவிதையானது எமது முக்கிய இலக்கிய வடிவமாக மாறத் தொடங்கியது. வெளிப்படையாகப் பேச முடியாத குரல்கள் கவிதைகளாக வெளிப்பட ஆரம்பித்தன. எமது கவிதை தீர்க்கமாகவும் தீவிரமாகவும் ஒலித்து, தமிழக இலக்கிய உலகின் கவனத்தையும் ஈரத்தது அதன் பின்னர்தான்.

வீட்டுச் சூழலில் மாத்திரமின்றி சமூக, தேசிய ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் கவிதையில் எப்பொழும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒளவை, ஆண்டாள் என முற்காலத்தில் ஒலித்த குரல்கள் இப்பொழுது வேகமாகவும் வீரியமாகவும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

ஒரு கவிஞனாக, பெண்ணாக, இஸ்லாமியப் பெண்ணாக அவர் எவ்வாறு தனது உலகைப் பார்க்கிறார் என்பதை நூலை ஆராய இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் நான் சில பொதுவான விடயங்களை மட்டும் சொல்லிச் செல்ல நினைக்கிறேன்.


கவிதை என்றால் என்ன?


சிறந்த சொற்களை சிறப்பான ஒழுங்கமைவில் தருவது கவிதை என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அது மாத்திரம் கவிதையாகிவிடாது. தான் அனுபவித்த, மனதுக்கு நெருக்கமான விடயத்தை உள்ளத்தைத் தொடும் சொற்களில் சொல்லி அது படிப்பவனின் உள்ளத்தையும் கிளற வேண்டும். தனக்கும் நெருக்கமானதாக அதனை வாசகன் உணர வேண்டும். அதுவே நல்ல கவிதையாகும்.

சொல்லப்படுவது பெரிய விடயமாக இருக்க வேண்டும், ஆழமான கருத்துக்களை உள்ளடக்க வேண்டும் என்றில்லை. பெரிய படிமங்களும் கூடத் தேவையென்றில்லை. எளிமையான சொற்களில் தனது கவிதைகளைத் தந்த பாரதியின் சொற்களோடு ஒப்பிடுகையில் இன்றைய பல கவிஞர்களின் படைப்புகள் வெறுமையான வார்த்தை அலங்காரங்களாக இருக்கின்றன.

வெலிகம ரிம்ஸா முகம்மத் ஆழமான விடயங்களைத் தேடி ஓடவில்லை. அவரது கவிதைகள் பெண்ணியம் பற்றிப் பேசவில்லை. முற்போக்குக் கருத்துகளை அள்ளி வீசவில்லை. இனப் பிரச்சனை பற்றிக் கோடிகாட்டவும் இல்லை. தனது சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைளை உரத்துச் சாடவும் இல்லை. ஆனால் தனது உணர்வுகளை மட்டுமே பேசுகிறார். அதை உண்மையாகப் பேசுகிறார். ஆயினும் படைப்புகளுக்கு சமூக உணர்வு இருப்பது அவசியம். எதிர்காலத்தில் இதில் கூடிய அக்கறை செலுத்துவார் என நம்பலாம்.

தாய் பற்றிய உணர்வுகள்

அவரது கவிதைகள் ஊடாகப் பயணிக்கையில் தாய் பற்றிய உணர்வுகள் அற்புதமாக விழுந்திருப்பதை உணரமுடிகிறது. இவரது நூலின் தலைக் கவிதையான ‘ஆராதனை’ தாய் பற்றியதே

‘உன் பிரிவுத் துயர் தாளாமல்
ஓயாது புலமபும் எனக்கு..
ஓத்தடம் தர
உனை அன்றி
யார் வருவார் துணைக்கு’ என்று ஏங்குகிறார்.

‘ஓர் ஆத்மா அழுகிறது’ என்பதும் தாய் பற்றிய ஒரு நல்ல கவிதையாக எனக்குப்பட்டது.

‘தலையணை’ என்ற கவிதைத் துளியில்

‘சோகத்தில் சுகமளித்து
சயணிக்கச் செய்யும்
சிறந்த தாய்மடி’ என்கிறார்.

சுமார் 5 வருடங்களுக்கு முன் தாயை இழந்த துயர்

‘தாயின் பிரிவு
எனை வெளியேற்றியது
வீட்டை விட்டு!’

‘காத்திருக்கும் காற்று’ என்ற கவிதையில் வெளிப்படுகிறது.

தாய் பற்றிய இவரது உணர்வுகள் இவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு மனிதனுக்குமே நெருக்கமான உணர்வுதான் தாய்ப்பாசம் என்பது. இதனால் அவரது அனுபவங்கள் எங்களது அனுபவங்களாகவும் மாறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எமது உள்ளத்தை ஊடுருவின்றன. வாசகனது மனத்தில் உள்ளுறைந்து மறைந்து போன உணர்வுகளைத் தொட்டுப் பேசாத எதுவுமே நல்ல கவிதை ஆகமுடியாது.

இவற்றைக் கருத்தில் கொண்டுதான் வெலிகம ரிம்ஸா முகம்மத் கவிதைகள் ‘உணர்ச்சி பூர்வமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ளவை’ என கவிஞர் இக்பால் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் என எண்ணுகிறேன்.

இந்நூலில் உள்ள பெரும்பாலன கவிதைகள் நட்பு, பாசம், காதல், தாய்ப்பாசம் போன்ற உணர்வுகளைப் பேசுகின்றன. நாம் வாழ்வில் நிதம் நிதம் சந்திக்க நேரும் உணர்வுகளை அவர் அழகான கவிதைகளாக வடித்திருக்கிறார்.

இத்தகைய உணர்வுகளை வாசகனிடம் எழுப்ப அவருக்கு கடுமையான சொற்கள் தேவைப்படவில்லை. சாதாரண சொற்களே போதுமாயிருந்தன என்பதை நீங்களும் உணர்வீர்கள். கவிஞர் முருகையன் பேச்சு வழக்கிலேயே பல அற்புதமான கவிதைகளைத் தந்ததை நாம் மறக்க முடியாது.

உண்மையான கவிதைகளுக்கு ஓசை நயம், சந்தம், உருவகம், உவமானம், யாப்பு, வடிவம், படிமம் எதுவுமே தேவையில்லை. உணர்வுகளை வார்த்தைகளில் வசப்படுத்தவும், அதனை வாசகனுக்கு எளிதாகக் கடத்தவும் முடிந்தால் அது கவிஞனின் வெற்றி எனலாம்.

நம்பிக்கை ஊட்ட வேண்டும்

கவிதை மட்டுமல்ல வேறு எந்த இலக்கிய வடிவமாக இருந்தாலும் அது நம்பிக்கை வரட்சியாக இருப்பது நல்லதல்ல. படைப்பாளிக்கு சமூக நோக்கு இருக்க வேண்டும். நம்பிக்கை ஊட்டி வாசகனை எதிர்காலத்தின் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கச் செய்ய வேண்டும். அவையே நல்ல படைப்புகள். மனித சமுதாயத்தின் வளர்சியிலும் வெற்றியிலும் அக்கறை கொள்ளாத படைப்புகளுக்கு எத்தகைய சமூகப் பெறுமாமும் கிடையாது.

‘வசந்த வாழ்க்கை – என்
வாழ்வு தேடி
நிச்சயம் வரும் ஒரு நாள்..’ என நம்பிக்கை கொள்கிறார்.
அதனூடாக வாசகனுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.

‘புயலாடும் பெண்மை’ என்ற கவிதையில் பெண்ணியத்தின் கீற்றுக்களைக் காண்கிறோம்.

கவிதை, கவிதை மொழி என்றெல்லாம் இன்று பலரும் பேசுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன என்று சொல்வது இலகுவானதல்ல. ஆனால் நல்ல படைப்பான ஒரு கவிதையின் அர்த்த தளங்கள் குறுகிய பார்வையுடையனவாக இருக்கக் கூடாது. அது வாசகனின் அனுபவத்துடன் இணைந்து பரந்து விரிந்தும், எல்லை கடந்தும் பயணிக்க வேண்டும்.

முடியும் வேளையில் பேசத் தொடங்குதல்

எந்தவொரு நல்ல படைப்பினதும் மற்றொரு அடையாளம் அதன் முடிவில் தானிருக்கிறது. படைப்பு முடியும் வேளையில் அது வாசகனுடன் பேசத் தொடங்கினால் அதைவிட நல்ல படைப்பு இருக்க முடியாது. படைப்பாளி தனது முடிவை வாசகனிடம் திணிக்காது அவனது மனத்தைப் பேச வைக்க வேண்டும். அவனது தூக்கத்தைக் கெடுத்து அவனைச் சிந்திக்க வைக்க வேண்டும். கனவிலும் விடாது தொடர்ந்து பேசவைப்பதாக இருக்க வேண்டும்.

வெலிகம ரிம்ஸா முகம்மதின் படைப்புகளில் ‘கவிதை முடியும் இடத்தில் தான் தொடங்கும் பண்பு’ உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்ல முயற்சியாக இருக்கும் என நம்புகிறேன்.

இறுதியாக ஒரு வார்த்தை. நான் கவிஞனல்ல. கவிதை எனக்கு பிரதான நாட்டமுள்ள இலக்கிய வடிவமுமல்ல. மாணவப் பருவத்திலும் அண்மையிலுமாக சில மட்டுமே எழுத முயன்றுள்ளேன். அத்தகைய என்னை இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்க அழைத்த  இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை அன்புக்கு நன்றி.

இந்நிலையில் இவ்வளவு நேரமும் பேசிய என்னைப் பாரத்து நூலாசிரியர்,

‘எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்.
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என
என்னைக் கேட்காமலேனும் இரு. ‘

என்று பசுவய்யா தனது கவிதையில் பாடியது போலக் கேட்காமல் இருந்தால் சரி.

நன்றி.

எம்.கே.முருகானந்தன்
14.02.2010.

நூலின் பெயர்: தென்றலின் வேகம் ( கவிதை )
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
விலை: 150/=

நூல் விநியோக உரிமை:-

பூபாலசிங்கம் புத்தக சாலை
Poobalasingam Book Depot
202,Sea Street
Colombo 11.

புகைப்படங்கள் நன்றி மன்னார் அழுதன் : –
http://www.facebook.com/amujo?v=photos#!/album.php?aid=146731&id=555502667

Read Full Post »

>வெள்ளவத்தைக்குப் புதிதாக வந்த நாட்கள்.

ஒருநாள் மாலை காலி வீதியால் வந்து முடக்கில் திரும்புகிறேன்.

பேவ் மென்டால் இறங்கி வீதியில் வைத்த கால் தன்னையறியாமல் தயங்கிப் பின்வாங்குகிறது.


திட்டு திட்டாக இரத்தம்.

ஒரு கணம் பயந்து திடுக்கிட்டு விட்டேன்.

ஒரு கணம்தான்.

சாதாரண மனிதனின் பயம் அடங்க, வைத்திய மூளையும் கைகளும் துருதுருக்கின்றன.

இரத்தத்திற்குக் காரணமானவர் யார்?

எப்படிச் சிந்தியது?
முதலுதவி தேவைப்படுமா?
போன்ற கேள்விகள் சிந்தனையில் எழக் கண்கள் அலைபாய்கின்றன.

திடீரென இன்னும் சில இரத்தத் துளிகள் பீச்சியடித்துக் கொண்டு சற்றுத் தள்ளி விழுகின்றன.

ஆச்சரியம் அடங்குவதற்கிடையில் ஓரமாக நின்ற ஓட்டோவின் சாரதி வெளியே தலையை நீட்டி

“மாத்தயா டாக்ஸி ஓனத?” என்கிறார்.

சொதப்பிக் கொண்டிருந்த அவரின் கடைவாயிலிருந்து ‘இரத்தம்’ வழிகிறது. வாயெல்லாம் கூட ‘இரத்தம்’.

இலங்காபுரியின் இன ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து, வெளிப் படுத்துகிற ஒரே சாதனமாக இன்னும் திகழ்வது வெற்றிலை போடுதல்தான்.

சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என எல்லோரையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.

இன ஒற்றுமைக்காகக் கலப்புத் திருமணங்களை ஒரு காலத்தில் வற்புறுத்தியவர்களின் காதில் இது விழுந்துவிட்டால் நாடு முழுவதும் ‘இரத்தக்கறை’ தான் சிந்தப் போகிறது.

துப்புவதில்தான் எத்தனை வகைகள்.

அதிலும் வீதியில் துப்புவது என்பது அதி விசேடமான கலையாகும்.

அதனைத்தான் எத்தனைவகை களாக நாங்கள் பயிற்சிக்கின்றோம்.

கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதை காறியெடுத்து நுனி நாக்கிற்குக் கொண்டுவந்து ஆரவாரமாகத் துப்புவது ஒரு வகை.

துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொரு வகை.

அசிங்கத்தைப் பார்த்தும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டும் முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேட ரகம்.

ரஜனியின் சிகரட் ஸ்டைல் போல ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக்குள்ளால் நசுக் கிடாமல் துப்புவது மன்மத ரகம்.

பட்டப்படிப்பிற்கான ஒரு அலகாக எமது பல்கலைக்கழகத்தில் வைக்க ஏற்றது துப்பல்கலை என்று துணிந்து சொல்லலாம்.

பட்ட மேற்படிப்பிற்கான ஆய்விற்காக
‘தமிழர் வாழ்வில் துப்பல் சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான ஆய்வின் முதற் படி’
எனப் பேராசிரியர் ஒருவரின் வழிகாட்டலில்
இளம் பட்டதாரி பதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.

நான் வழமையாகப் பிரயாணம் செய்யும் ஓட்டோவின் சாரதி துப்பும் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.

வாகனம் நேர் பாதையில் ஓடும்போது
முதுகை வளைத்து
வாகனத்தின் இடது பக்கமாகத்
தலையை வெளியே நீட்டி,
வாயைக் குவித்து,
தான் துப்புவது காற்றில் சிதறி
பின்னே இருப்பவருக்குத் தெறித்துவிடாமல்
துப்பும் அழகே அழகு.

குனிந்து துப்பினாலும் வாகனம் கயிறு கட்டியது போல் நேர் பாதையில் சென்றுகொண்டே இருக்கும்.

இந்த அழகைக் கண்டுதான் அவரது மனைவி அவரைக் காதலித்தது, கலியாணம் செய்தது, பிள்ளை பெத்தது எல்லாம்.

எமது தேசம் புண்ணிய தேசம்.

அதனால் இந்தப் புண்ணிய பூமியில் நாங்கள் அகலக்கால் வைத்து அலட்சியமாக நடக்க முடியாது.

அச்சம், மடம், நாணம் நிறைந்த பெண்கள் போல நிலம் பார்த்துத்தான் நடக்க வேண்டியுள்ளது.

இன்று பெண்கள் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாக நடக்க என் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் குனிந்த தலையும் நிலம் பார்த்த பார்வையும் தலைவிதியாகிவிட்டது.

‘டொக்டருக்குக் கழுத்து உழுக்கிப் போட்டுது போல’.

‘நிமிர்ந்து பார்த்தால் வீதியில் வைத்தே இலவச கொன்சல்டேசன் கேட்டுவிடுவார்களோ என்ற கஞ்சத்தனம்’

‘அவருக்கு முகங்களிலை நாட்டம் இல்லை எதிரே வருகிற பெட்டைகளின் தொடைகளில்தான் நோட்டம்’

‘வயது போட்டுதில்லெ அக்கம் பக்கத்திலை நடக்கிற ஒன்றும் அந்தாளின்ரை மூளையிலை விழுகிறதில்லை’

இப்படி எத்தனை கொடுக்குக் கேள்விகளும் விமர்சனங்களும் என்ரை காதில் பட்டும் படாமலும் வீசப்படுகின்றன.

ஆனால் என்ரை கவலை எனக்கு! வீதிகளெங்கும் துப்பல்கள் விதைத்திருக்க நிலம் பார்க்காமல் கால் வைக்க முடியுதே?

ஏன் சப்பாத்துப் போடுறதில்லையோ என நீங்கள் அடிக்கிற நக்கலும் காதில் விழுகிறது.

சப்பாத்தைக் கழுவிப்போட்டே வீட்டுக்குள்ளையும் டிஸ்பென்சரிக்குள்ளையும் கால் வைக்க முடியும்.

ஊரிலை உள்ளவன்ரை எச்சில் எல்லாம்,
துவண்டு திரிகிற பிள்ளைகளின்ரை கையிலை பட்டும்,
மற்றவர்களை முட்டியும்
கண்ட கண்ட நோயெல்லாம் தொற்றி விடுமே என்ற
மருத்துவனின் ஆதங்கம் எனக்கு.

ஒருநாள் வைத்தியசாலைக்குப் பொடிநடையில் போய்க் கொண்டிருக்கிறேன். உயர்ந்து நிற்கும் ஹோட்டலுக்கு முன்னே கட்டெறும்பு போல நகர்ந்து கொண்டிருக்கும் எனது தலைiயில் ‘டொச்’ என எதுவோ விழுகிறது.

மழைத்துளியாக இருக்குமா என நிமிர்ந்து பார்த்தேன்.

மொட்டைமாடியில் நின்ற தலையொன்று பக்கென உள்ளிழுத்தது.
வீதியில் உமிழும் அவருக்கு அன்று
எனது தலை கிடைத்த சந்தோஷத்தை அடக்க முடிய வில்லை.
என்ன செய்வது?

நல்லவேளை மொட்டைத்தலை என்பதால் தப்பித்தேன்.

பிரச்சனையின்றி தலையை
ஈரத் துணியால் ‘மொப்’ பண்ணிவிட்டு
வேலையைத் தொடரலாம்.

தலை நிறைய முடியெனில் வீடு திரும்பி முழுகிவிட்டல்லவா வேலைக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கும்.

‘வீதியெங்கும் துப்பல் செய்யும்’ எம் பாரம்பரியம் வாழ்க!

எம்.கே.முருகானந்தன்.

மல்லிகை சஞ்சிகையிலும் பின் மல்லிகை வெளியீடான ‘டொக்டரின் டயறியிலிருந்து’ நூலிலும் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Read Full Post »

>பதற்றத்தோடு எனது அறைக்குள் நுழைந்தார்கள்.

அவள் முகத்தில் ஆழ்ந்த சோகம்.

அவன் முகத்திலும் இனம் புரியாத உணரச்சிப் பெருகளிப்பு. சஞ்சலமா, பதற்றமா, என்ன செய்வதென்று தெரியாத திகைப்பா?

இருவருக்குமே பேச முடியவில்லை. ஊமைகள் அல்ல.

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் கூடவில்லை.

எங்கே ஆரம்பிப்பது?
எப்படிச் சொல்வது.
டொக்டர் என்ன நினைப்பாரோ, ஏசுவாரோ?

அவர்கள் காதலர்கள்.
திருமணம் செய்ய இருக்கிறார்கள்.
ஆனால் உடனடியாக அல்ல.
தமது கல்வியை முடித்த பின்னர்.

ஆனால் திடீரென எதிர்பாராத சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. பெற்றோர்களுக்குச் சொல்ல முடியாது. நண்பர்களுடனும் ஆலோசனை பெற முடியாது.

அவர்கள் கேடு கெட்டவர்கள் அல்ல.
மிகவும் கண்ணியமான காதல்.
ஆனாலும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு தனிமையான நேரத்தில் அது எதிர்பாராத விதமாக நடந்து விட்டது.

அவளுக்கு வழமையாக வர வேண்டிய பீரியட் பிந்தி விடவில்லை.

அந்தளவுக்கு அவர்கள் காலம் தாழ்த்தவில்லை.

சம்பவம் நடந்த மறு நாள் காலையே என்னிடம் வந்துவிட்டார்கள்.

என்ன சொல்ல வருகிறேன் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல சற்றுப் பொது அறிவுள்ளவர்களுக்கும் புரிந்திருக்கும்.

ஆம்! அவசர கருத்தடை பற்றியே சொல்கிறேன்.

அவசர கருத்தடை என்றால் என்ன?

கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகிக்காத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கான முறையாகும்.

இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரக் கருத்தடை


அதில் இரண்டு வகைகள் உண்டு.

1. அவசர கருத்தடை மாத்திரைகள் ஆகும். மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான்.

இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன

progesterone இருக்கிறது. 

இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது

POSTINOR-2 என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். 
மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும். 

ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும்.

2. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது. 
உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம்

(copper IUD) ஆகும்

இக் கட்டுரையில் நாம் அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றியே பேசுகிறோம்.
எவ்வாறு செயற்படுகிறது

மூன்று வழிகளில் இது நடைபெறலாம். 

  • சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம். 
  • அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும். 
  • அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம்.

எவ்வாறு உபயோகிப்பது

எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். 
ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது. 
இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். 
ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது.

ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும். 

அவ்வாறெனில் முதல் மாத்திரையை மீண்டும் எடுப்பது அவசியம்.

அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே. வழமையான கருத்தடை முறை அல்ல. 
இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும். 

வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு.

யாருக்கு உதவும்

எதிர்பாராத உடல் உறவு கொண்டால் என ஏற்கனவே சொன்னோம். எத்தகைய தருணங்களில் கை கொடுக்கும்.

  1. வேறு கருத்தடை முறைகள் எதனையும் உபயோகிக்காதிருந்தால்
  2.  நீங்கள் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோராலும் ஏனையோராலும் பல பெண்கள் இவ்வாறான வன் புணர்வுகளுக்கு ஆளாகியிருப்பது தெரிந்ததே. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவும். அது சுலபமாகப் கிடைகக் கூடிய வசதியும் இருந்திருந்தால் பல பெண்களின் சோகக் கண்ணீரை துடைத்திருக்கலாம்.
  3. வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால்
  4. ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து உள்ளே சென்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் 
  5. நீங்கள் கருத்தடை மாத்திரை பாவிப்பவராயின் மூன்று தினங்கள் அடுத்தடுத்து அதை எடுக்க மறந்திருந்தால். 
  6. கருத்தடை ஊசி போடுபவராயின் அதனை சரியான திகதியில் போடத் தவறியிருந்தால். 
  7. நீங்கள் பயன்படுத்தும் எந்தக் கருத்தடை முறையாயினும் அது தவறியிருக்கும் என எண்ணினால்

மேலும் தகவல்கள் பெற இங்கே கிளிக் பண்ணுங்கள்
 
மற்றொரு கதை

இன்னொரு பெண் தனக்கு அடிக்கடி தீட்டு வருவதாக சொல்லி அதை நிறுத்தும்படி கேட்டு மருத்துவத்திற்கு வந்திருந்தாள். 

அதற்கான காரணம் புரியவில்லை. பலகேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை. 

கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா என்று வினவிய போது அவசர கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள்.
 
‘எத்தனை நாளுக்கு ஒரு முறை உபயோகிக்க நேரிடும் என நாகரீகமாகக் கேட்கப்பட்டது.
 
‘வாரத்திற்கு இரண்டு மூன்று தடைவவைகள் பாவிப்பேன் என்றாள்.’
 
அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும்?
 

எமது நாட்டில் அவ்வாறே. 

அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் ஒவ்வொரு ஜனதிபதிகளினதும் அரசாட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவதால் நாடு படும் பாடு உங்களுக்கு ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

நன்றி்- இருக்கிறம்

0.0.0.0.0.0.0

Read Full Post »

சென்ற வருடம் எழுதி மல்லிகை சஞசிகையில் வெளிவந்த இக்கட்டுரை எங்கோ கிடப்பில் கிடந்தது. அதை வலைப் பதிவு செய்வது என் திருப்திக்காக.

வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த ‘மிருகம்’

காமம், காமம், காமம் இதனைத் தவிர வேறு எதிலும் அக்கறையற்ற ஒருவன்.

ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படியாக வாழ்ந்தவன் அவன். அத்தகைய ஒருவனின் கதையை அண்மையில் திரைப்படமாகப் பார்க்கக் கிடைத்தது. கண்ணில் காணும் பெண்களையெல்லாம் அந்த இடத்திலேயே கிடத்தி ருசித்துவிட்டு வீசி எறிந்து போகும் குரூர குணம் படைத்தவன்.

விபசாரிகள் முதல், இளம் பெண்கள், மற்றவன் பெண்டாட்டி, பிச்சைக்காரி வரை எங்கு கவர்ச்சி கண்டாலும் குறி வைப்பான். அத்தோடு கோபமும் முரட்டுத்தனமும் கைகோத்துவர நியாய அநியாயங்களை மதிக்காதவன். சொந்தப் பெண்டாட்டியோடும் வெறியோடு கூடிய காமந்தான். காதலோடு கூடிய கூடல் அவன் அறியாதது.

காமமும், வெறியும் இணைந்த பாலியல்; பற்றிய திரைப்படம் பற்றி ஏன் எழுத வருகிறேன் என எண்ணத் தோன்றுகிறதா? அதிலும் அதிகம் விமர்சகர்கள் கண்ணில் படாத திரைப்படம் பற்றி ஏன் எழுதுகிறேன்.

காரணத்தோடுதான். கிளுகிளுப்புகளையும் ஆபாசங்களையும் அள்ளிக் கொட்டி பணப்பையை நிரப்பும் நோக்கோடு எடுக்கப்பட்ட அர்த்தமற்ற படம் இல்லை. மாறாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வருகிறது. அதிலும் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அக்கறை கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்பதுதான் காரணம்.

காதல் புனிதமானது என்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காதல்கள் காமத்திற்கான ஆசாரப் பூச்சுக்கள் மட்டுமே. ஆனால் காமம் புனிதமானது என்றோ, எதிர்மாறாக கேவலமானது என்றோ சொல்ல முடியாது.

எல்லா உயிரினங்களுக்குமே இயற்றையான உணர்வு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மற்றட்ட காமம், எல்லை மீறிய காமம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இவை அவர் இருவர் உணர்வு சார்ந்தவை இல்லையா? காமம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் நின்றாலும் சரி அந்த எல்லையை மீறியாலும் சரி அது இயற்கையான உணர்வு, விஞ்ஞான பூர்வமான செயல்.

இருந்தபோதும் முறை தவறிய காமம் எமது சமூக, நாகரீக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பார்ககும்போது பாதுகாப்பற்ற காமம் மட்டுமே தப்பானது. அதனால் பல ஆபத்துக்கள் காத்திருக்கும். இதைத்தான் இப்படம் சொல்ல முனைகிறது.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி கிடையர்து. காமம் அதிலும் சமூகக் கட்டுகளை மீறிய காமம் மட்டுமின்றி வன்புணர்ச்சி, பாதுகாப்பற்ற புணர்ச்சி இவை எல்லாவற்றையும் தனது வாடிக்கையாகக் கொண்டவன். அதனையே தனது ஆண்மைக்கு அழகு என்று கொள்பவன்.

பொலிகாளையை பசுவிற்கு விடும் தொழில் அய்யனாருக்கு. பொலிகாளை போலவே தானும் பெண்களின் வேட்கையைத் தணிவிப்பவன் என்ற திமிர் வேறு. இதனால் விலைமாதோடு கூடினால் கூட அவளுக்கு பணம் கொடுக்க மறுத்து, தான் கொடுத்த சுகத்திற்காக அவள்தான் தனக்கு கூலி தரவேண்டும் என அடாவடித்தனம் பண்ணுகிறான். வெளி உறவுக்கு முன்னர் ஆணுறை (கொண்டோம்) அணிய மறுக்கிறான். தன் வைரம் பாய்ந்த உடம்பை நோய், நொடி அணுகாது என வீரம் பேசுகிறான்.

கிராமத்துச் சண்டியனான இவனுக்கு அழகும் துடுக்குத்தனமும் நிறைந்த அழகம்மா மீது ஆசை வருகிறது. பணிய மறுக்கும் அவளைத் திருமணம் செய்து வழிக்குக் கொண்டு வர முயல்கிறான்.,

புகைப்படம் நன்றி:- http://www.thiraipadam.com/images/movies/2007/Mirugam1.jpeg

முதலிரவில் அவள் மறுக, மனைவியையே வன்புணர்ச்சி செய்கிறான். அழகுவாக பத்மப்ரியா வருகிறார். அனாசயமாக பனை மரத்தில் விறுக்கென ஏறும் போதும், நுங்கு சீவும்போதும், சீண்டுபவனை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டும் போதும், தோழிகளோடு ஆட்டம் போடும்போதும் பாத்திரமாகவே மாறுகிறார். அதுபோலவே பின்னர் புருஷனுக்காகக் கண்ணீர் வடிக்கும் போதும், கோட்டுவரை சென்று போராடும் போதும், பிணத்தை தான் ஒருத்தியாக தோளில் சுமக்கும் போதும் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார். தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிந்து கொல்ல முயலும் கணவனான அய்யனாரை, ஆவேசம் கொப்பளிக்க ஓங்கி உதைக்கும் காட்சியில் சுடருகிறார்.

அய்யனாராக வரும் ஆதி ஒரு புதுமுகம். கருங்கல் போல திடமான மேனி, பனைபோல திடமான நீட்டி நிமிர்ந்த நெடும் தோற்றம். நிமிர்ந்த நடை. ஆவேசமும், வன்மமும், குரூரமும் தெறிக்கும் கண்கள். கதைக்கேற்ற தேர்வு.

பிற்பாதியில் நோயால் துவண்டு வாடும்போதும், தன் செய்கைகளுக்காக வருந்தும் போதும் நன்கு தேறுகிறார்.

உபகதையான தண்ணீர் பிரச்சனை படத்தோடு நன்கு பொருந்துகிறது. ஊருக்கு குடிப்பதற்கு உகந்த தண்ணீர் இல்லாதபோது கிணறு வெட்ட ஊர் முடிவெடுக்கிறது. இவனது நிலத்தில்தான் நல்ல தண்ணீர் இருக்கிறது என அறிந்து கிணறு கிண்ட அனுமதி கேட்கும்போது அலட்சியமாக விட்டெறிந்து பேசி மறுக்கிறான்.

ஆனால் பின் நோயுற்று மனம் திருந்திய நிலையில் தண்ணீர் பஞ்சத்தை போக்கத் தன் நிலத்தில் இடம் தருகிறான். ஆயினும் நோயுற்றவன் நிலத்துத் தண்ணீரை குடித்தால் தங்களுக்கும் நோய் வருமோ என ஊர் மக்கள் தயங்குகிறார்கள். அந்த தண்ணீரை ஊரார் குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க மகனைக் கேட்கும் காட்சியில் அற்புதமாக நடித்துக் கலங்க வைக்கிறார்.

உணவு போட்டுக் கொடுக்கும் போது கூட மகனிடம் அடியும் உதையும் வாங்கும் அம்மாவாக வருபவர், பேர் தெரியாத போதும் மனத்தில் நிற்கிறார்.

அய்யனார் ஒரு பிரச்சனையில் அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தபோதும் திருந்தவில்லை. மாறாக கஞ்சா, ஓரினப் பாலுறவு ஆகியனவும் பழக்கமாகின்றன. ஊசியால் போதை மருந்து ஏற்றுவதும் தொடர்கிறது. இறுதியில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு ஆளாகி உடல் மெலிந்து, காய்ந்து கருகிச் சருகாகி சிறிது சிறிதாக உதிர்கிறான்.

இப் பகுதி மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இயக்குனர், ஒப்பனையாளர், படப்பிடிப்பாளர் அனைவரும் அர்ப்பணிப்போடு செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் படத்தின் பிரதான அம்சமே இதுதான்.

அந்த மிருகத்தின் அழிவு முழுப்படத்தின் மூன்றில் ஒரு பகுதிவரையே ஓடுகிறது என்ற போதும் செய்திப் படம் போல சலிக்க வைக்கவில்லை. கதையோடும் காட்சிகளோடும் எம்மைப் பிணைத்து வைப்பதில் இயக்குனர் சாமி வெற்றி பெறுகிறார். பாராட்டுக்குரியவர்.

புகைப்படம் நன்றி http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Mirugam01.jpg

இவரது முதல் திரைப்படம் உயிர் என்பதையும் சொல்லி வைக்கலாம்.

இதற்கு மாறாக முன் பகுதி முழுவதும் குரூரமும், வன்மமுமே நிறைந்திருந்தன. மிருகமாக வாழ்ந்த ஒரு பாத்திரத்தின் அழிவைச் சொல்வதற்கு அதன் பின்புலமான அடாவடித்தனங்களை பதிவு செய்வது அவசியமானதுதான். அதன் மூலமே அப்பாத்திரத்தின் குணாம்சத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். ஆயினும் பலதருணங்களில் நிறையவே முகம் சுளிக்கச் செய்கிறது. பல காட்சிகள் குடும்பத்தோடு இருந்து பார்க்க அசூசையளிக்கக் கூடியவை. ஆயினும் அந்தக் குரூரமான மிருகத்தின் செய்கைகளும், அதன் விளைவான அழிவும் மனத்தில் பதிந்து விடுவதை மறுக்க முடியாதுள்ளது.

இது விடயமாக இயக்குனர் சாமி ஒரு நேர்காணலில் கூறிய கருத்தைப் பதிவு செய்வதும் அவசியம் என நினைக்கிறேன். ‘நான் எடுத்துக் கொண்ட கதைக்கு – சொல்ல வந்த விஷயத்துக்கு தேவையான அளவில்தான் காட்சிகளை வைத்திருக்கிறேன். நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கும் காட்சிகளையே வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சினிமாவுக்கான நேர்மையுடன் நூறு சதவிகிதம் சரியாகவே நடந்து கொண்டு கதையைக் கையாண்டு இருக்கிறேன்.’ என்கிறார். மேலும் ‘இது குடும்பத்தினருடன் பார்க்க எடுக்கப்பட்டது அல்ல என்றே வைத்துக் கொள்ளுங்களேன். வயது வந்த இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை எச்சரிக்கை செய்யவே இப்படம்.’ எனவும் தெளிவுபடுத்துகிறார்.

எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீருக்கு பின்னர் பிரதான பாத்திரத்தின் அழிவை மிகச் சிறப்பாகச் சித்தரித்த திரைப்படம் இது என மதன் தன் பார்வையில் சொல்லியது உண்மையாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. ரத்தக்கண்ணீர்; நான் சிறுவயதில் பார்க்காத படம். பின்னர் பார்த்த சில காட்சிகள் அதை ஏற்க வைக்கின்றன. இதைப் படத்தின் சிறப்பு என்று கொள்ளலாம்.

மறுபுறத்தில் இப்படத்தின் கதையின் சில பகுதிகளும், வார்ப்பும் பல தருணங்களில் அண்மையில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை அப்பட்டமாக ஞாபகப்படுத்துவது முக்கிய குறையாகப் படுகிறது. ‘குத்த வெச்ச குமரிப் பொண்ணு …’ பாடல் அச்சொட்டாக பருத்திவீரன் காட்சி போலவே இருக்கிறது

பம்புசெட் பம்புசெட் எனப் பட்டப் பெயர் சூட்டப்படும் அழகுவிற்கு அந்தப் பட்டம் ஏன் வந்ததென்பதை இறுதிவரை ஆவலைத் தூண்டிச் செல்கிறார் நெறியாளர். இறுதியில் அதை அறியும் போது இவ்வளவுதானா என எண்ண வைத்தாலும் மென்சிரிப்போடு ரசிக்கவும் முடிகிறது.

இன்று உலகளாவிய ரீதியிலும், முக்கியமாக இந்திய உபகண்டப் பகுதியிலும் ஆபத்தான மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்து சமூகரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் எயிட்ஸ். இது பற்றிய திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். நோய் பற்றிய பல செய்திகளைத் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தாலும் அதையும் ஓரளவு கலாபூர்வமாக, சலிக்க வைக்காமல் பார்க்க வைத்ததற்கு சபாஸ் கொடுத்தே ஆக வேண்டும். நோய் தொற்றுவது எப்படி, அது தொற்றாமல் இருக்க ஆணுறை அணிதல் போன்ற பல விடயங்கள் செய்தியாக உறுத்தாமல் கதையோடு நகர்கினறன.

மிக முக்கிய விடயமாகச் சொல்லப்படும் செய்தி எயிட்ஸ் நோயாளியை எப்படி சமூகமும் வீடும் எதிர் கொள்ள வேண்டியது என்பது பற்றியதாகும்.

இதையே இத்திரைப்படம் தெளிவாகச் சொல்ல முனைகிறது என்பேன். ஒருவருடன் நெருங்கிப் பழகுவதாலோ,
தொட்டுப் பேசுவதாலோ அது தொற்றுவதில்லை.
உடலுறவால் மட்டுமே தொற்றும் நோய் இது.

நோயாளியை ஒதுக்கி வைக்கக் கூடாது.
வீட்டில் வைத்தே பராமரிக்க வேண்டும் என்பதை நோயாளியின் டொக்டர், அவனது மனைவி போன்ற பாத்திரங்கள் ஊடாகக் காட்சிப்படுத்துகிறது.

கிராம மக்கள் அவனை ஒதுக்கி வைப்பதையும் அவனது வீட்டை நெருப்பு வைத்து அழிப்பதையும் தவறு என்று சுட்டுகிறது,
அவனது வீட்டு குழாயில் நீர் எடுப்பதால் நோய் தொற்றாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இறந்து மடியும் அவனது உடலைத் தூக்கிச் செல்லக் கூட ஊர் மக்கள் தயங்குவதை அவளது ஆவேச வார்த்தைகள் ஊடாக கண்டிக்கிறது. இறுதியில் அவள் ஒருத்தியாகவே அவனது உடலைச் சுமந்து செல்வதும் பதிவாகிறது. மொத்தத்தில் நோய் பற்றிய வீண் பீதிகளை நீக்க முயல்கிறது.

இவை எல்லாம் எயிட்ஸ் பற்றிய தெரிந்த தகவல்கள் தானே எனச் சலிக்கிறீர்களா.

உண்மைதான் படித்த உங்களுக்கும் எனக்கும் தெரிந்த பழைய தகவல்கள்தான்.

ஆனால் இவை கூடத் தெரியாத மெத்தப் படித்த மனிதர்களை இன்றும் கூட காணக் கிடைக்கிறது என்பது நேரிடையாக அறிந்த உண்மை. இந்நிலையில் காட்சிப் புலனூடாக விழிப்புணர்பு ஏற்பட முயற்சித்தது கூடிய பலனளிக்கும் என நம்பலாம். முக்கியமாக பாமர மக்களுக்கும் எட்டும் ஊடகம் அல்லவா திரைப்படம்.

ஒளிப்பதிவு ராம்நாத் ஷெட்டி. அவரது கமராவின் கண்கள் எமது கண்களை நயக்க வைக்கின்றது. ஆயினும் நோயாளியின் உடலில் நோய் பரவுகிறது என்பதைப் காட்சிப்படுததும்; கம்பியூட்டர் தொழில் நுட்பம் சோபிக்கவில்லை. சற்றே அபத்தம் போலவும் தோன்றியது. கலைநயத்துடன மெருகூட்டியிருக்கலாம்.

இசை சபேஷ்-முரளி. பாடல்கள் மனத்துள்ளும் இசைந்து மகிழ்விக்கின்றன. பின்னணி இசையும் நன்றாக உள்ளன. பாடல் வரிகள் நா. முத்துக்குமார். அவை வெற்று வரிகள் அல்ல. கருவோடு இணைந்தவை.

இந்தப் படம் பற்றிய எனது அக்கறைக்கு இன்னுமொரு காரணம், இது தமிழ் நாட்டின் முதல் எயிட்ஸ் நோயாளி பற்றிய படமாகும். திருவாரூர் மாவட்டம் களப்பால் அருகிலுள்ள குலமாணிக்கம் என்கிற ஊரில் வாழ்ந்த உண்மைப் பாத்திரம் அது என்பது போலவே,

இன்னொரு வகையில் தமிழ் கூறும் உலகில் மற்றொரு எயிட்ஸ் தொடர்பில் முதல் நபர் நானாவேன்.
அதாவது தமிழில் முதலாவது எயிட்ஸ் பற்றிய நூலை எழுதியவன் என்றவகையில். இலங்கையில் இரண்டு பதிப்புகளைக் கண்ட எனது ‘எயிட்ஸ்’ நூல் தமிழகத்தில் என்.சீ.பீ.எச். வெளியீடாக மூன்று பதிப்புகளாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி மல்லிகை

Read Full Post »

>நான் மாணவனாக இருந்த காலத்தில் எமது பாடசாலையில் கற்பித்த சபாதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது.

கல்வியிலும், ஒழுக்கத்திலும் சமயப்பற்றிலும் மாணவர்களை நெறிப்படுத்திய அற்புதமான ஆசிரியர் ஆவார்.

அவர் எழுதிய கட்டுரை ஒன்றை நண்பர் க.சண்முகசுந்தரம் பழைய பாடசாலை வெளியீடுகளில் இருந்து எடுத்துத் தந்து உதவினார். புகைப்படமும் அவர் உதவியே. மிக்க நன்றி.

மேலைப்புலோலிச்
சைவப்பிரகாச வித்தியாசாலையின் வரலாறும் வளர்ச்சியும்

வ.சபாபதிப்பிள்ளை – இளைப்பாறிய ஆசிரியர் –

ஆறுமுகநாவலர் அவர்களின் ஆசீர்வாதத்துடன் எங்கள் வித்தியாசாலை 1875-ம் ஆ ஆவணிமீ (5-9-1875)ல் ஆரம்பமானது. நூவலர் பெருமானின் மாணக்க முறையிலுள்ள சிவசுப்பிரமணிய தேசிகரும், மகன் கணபதிக்குருக்களும் காலஞ்சென்ற மனேஜரின் பிதா ஆ.ஆறுமுகம், மாமன் வெ.சரவணமுத்து மைத்துனர் சு.சபாபதிப்பிளை என்பவர்களும் சேர்ந்து வா. கணபதிப்பிள்ளைக்குச் சொந்தமான கொள்வளையென்னுங் காணியில் ஒரு பரப்பு நிலம் உதவச்செய்து அயலவர் உதவியுடன் அதில் கட்டடம் அமைத்து வித்தியாசாலையை ஆரம்பித்தனர். பின்னரும் நிலம் தேவைப்பட்டபோது வெ.சரவணமுத்து அவர்களே உதவினர். பாடசாலைக்குத் தெற்கேயுள்ள காணியில் சொரியலாக இருந்த 11/2 பரப்பு நிலமும் 1961-ல் பாடசாலைக்காணியுள் சோர்க்கப்பட்டது.
1884-ல் வித்தியாசாலை தளர்சசியடைய அப்போது ஆ.ஆ.சிதம்பரப்பி;ளை அவர்கள் தமது குடும்பத்தார் சேர்த்து உதவிய ஒரு சிறு நிதிஉதவியுடன் பாடசாலைப் பொறுப்பை ஏற்று நடத்தினர். 1892 ஆடிமாசத்தில் முதற் பரீஷை நடந்தது. எத்தனையோ கஷ்டங்கள் எதிர்ப்புகளுடன் அரசினர் நன்கொடையும் கிடைத்தது. இவரின் மகன் ஆ.சி.நாகலிங்கபிள்ளை அவர்கள் மனேஜருக்குரிய கடமைகளை தந்தையார் இருக்கும்போதே ஆரம்பித்து அவருக்குப் பின்னும் தவறாது திறம்பட நடத்திவந்தனர். இவர் தமது காலத்தில் வித்தியா பகுதியாரே அறிந்து வியக்கும்படியாக 7 மணிப் பாடசாலையை தமது கட்டுப்பாடான நிர்வாகத்தால் சிலவருஷங்கள் நடத்தினர். ஆரம்பகாலம் தொடக்கம் 1926ம் ஆண்டு வலையில் நவராத்திரிக்கு முதற்கிழமையில் இலக்கண இலக்கிய சமயபாடங்களில் தேர்ச்சிகாணுமாறு தமிழ் வித்துவான்கூடி பரீஷை நடத்தினர். ஆரம்பகாலத்தில் நாவலர்பெருமானே இப்பரீஷைக்கு ஒருமுறை சமூகமளித்துள்ளார். முத்துக்குமார சாமிக்குருக்கள், வேல்மயில்வாகனபண்டிதர், சிவசம்புப்புலவர், சு.சிவபாதசுந்தரம் முதலிய பெரியோர்கள் சமூகமளித்து பரீஷை நடத்தினர். அக்காலத்தில் மாணவர் பெற்றாரின் நன்மைக்காக இடையிடையே நாவலர்பெருமான், சுவாமி விபுலானந்தர், சதாவதானம் நா.க. கதிரவேற்பி;ள்ளை அவர்கள், மு.ளு. அருள்நந்தி, உதவி வித்தியாகர்த்தர் சிவப்பிரகாச பண்டிதர் போன்ற பெரியோர்கள் பிரசங்கம் செய்தனர். சதாவதானம் நா. கதிரவேற்பி;ள்ளை அவர்கள் இவ்வித்தியாசாலையில் மாணவனாகவும் சிலகாலம் ஆசிரியராகவும் இருந்தனர்.
1894-ல் ஆரம்பித்த சிவஞானப்பிரகாச சபையாரே அன்று தொடக்கம் பரிசளிப்பு விழாவை நடத்திவருகின்றனர்.
1924-ம் ஆ தொடக்கம் நடந்த ஸ்கொலஷிப் பரீட்சையில் ஆ.வ.துரைச்சாமிப்பிளை முதலிய பலர் சித்தி பெற்றனர்.
1875-ம்ஆ தலைமையாசிரியராக இருந்த சிவ.சு.கணபதிக்குருக்களுக்குப்பின் முறையே திரு.சு.வெற்றிவேலு, வ.ஆள்வாப்பிளை, க.சுப்பிரமணியம், சி.கணபதிப்பிள்ளை, க.ஆறுமுகம், வ.வீரகத்தி, க.வல்லிபுரம், என்பவர்கள் தலைமையாசிரியர்களாக இருந்தார்கள். இப்போது எங்கள் அன்புக்குரிய திரு.மா.சுப்பிரமணியம் அவர்கள் 1934-ம் ஆ தொடக்கம் தலைமையாசிரியராய் இருந்து நடத்தி வருகிறார்கள். இவர் எந்நேரத்திலும் வித்தியாசாலையின் வளர்ச்சியில் கண்ணுங் கருத்தும் உடையவராய், எல்லோருடனும் அன்பாகவும், மரியாதையாகவும் நடப்பதால் எல்லோருடைய அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராகின்றார். இவருடைய காலத்தில் அதாவது 1935-ல் அறுபதாம் ஆண்டு விழாவும், 1955-ம் எண்பதாம் ஆண்டு விழாவும் நடை பெற்றன.
1955-ம் ஆ தைமாசத்தில் ஆரம்பித்த கட்டிடம் இறைவான் திருவருளை முன்னிட்டு மனேஜர் அவர்கள் ஆரம்பித்த நிர்வாகத் திறமையாலும், திரு.வே.தா.சி.சிவகுருநாதன் அவர்கள் பலவகையான கஷ்டங்களுடன் சேர்த்த சைவவித்தியாதர்மநிதியின் பணஉதவியினாலும், வித்தியாபிமானிகளின் பண உதவியினாலும் நிறைவேறி ஆனிச் சோதியிலன்று பிரவேசமும் செய்யப்பட்டது.
பெற்றர் அசிரியசங்க நிருவாசகபையாரின் முயற்சியினாலும் பண உதவியினாலும், ஆய்வுகூடமும், நிருவாகசபையாரின் முயற்சியினாலும், அரசாங்க பண உதவியினாலும், புதுக்கட்டிடமும் நிறைவேறியுள்ளன. இதற்ககென உழைத்த இச் சபையின் இரு தலைவர்களுக்கும் எங்கள் எல்லோருடைய நன்றியும் பாராட்டுதலும் எக்காலமும் உடையன.

வ.சபாபதிப்பிள்ளை.

Read Full Post »

>

அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது!

தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன.

இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல.

பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம்.

அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு.

எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள்.

ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும்.

அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம்.

ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி.

அடுத்த முறை வரும்போதுதான் மீண்டும் இப்பிரச்சனை பற்றி சிந்திப்பார் போலும்.

வயது நாற்பது ஏற்கனவே நீரிழிவும் பிரஸரும் வந்து விட்டன.

அதீத எடை என்பது உலகளாவிய ரீதியில் சவாலான ஆரோக்கியப் பிரச்சனையாக உருவாகிவருகிறது. அதீத எடையை எப்படிக் கண்டறிவது?

கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள்.

அதீத எடை என்பது உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ கண்ணால் பார்த்துச் சொல்லும் கருத்து அல்ல.

உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு எடை இருக்கிறதா என்பதைக் விஞ்ஞான ரீதியில் கணிக்கிறார்கள்.

அவ்வாறு கணிப்பதை உடற்திணிவு (Body Mass Index) என்பதாகக் குறிக்கிறார்கள். இது எடையை கிலோகிராமில் அளந்து அதனை, மீட்டறில் எடையின் வர்க்கத்தால் பிரிக்க வருவதாகும் (BMI=Kg/m2).

உடற்திணிவு
30க்க மேலிருந்தால் அது (body-mass index >30 kg/m2) அதீத எடை எனச் சொல்லப்படுகிறது.
25 முதல் 30ற்குள் இருந்தால் அதிக எடை (Over Weight) எனலாம்.

ஆயினும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்
ஆரோக்கியமான எடை என்பது
உடற்திணிவில் 23ற்குள் இருக்க வேண்டும்.

அதீத எடையே பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

அத்துடன் இருதய நோய்கள், நீரிழிவு, எலும்புத் தேய்வு நோய் போன்றவற்றுடன் நேரடியாகவும் தொடர்புள்ளதாக இருக்கிறது.

இப்பொழுது ஒரு ஆய்வு அதீத எடைக்கும் புற்று நோய்க்கும் தொடர்புள்ளது என்கிறது. இது ஏதோ ஒரு சிலரில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல. ஐம்பதிற்கும் அறுபத்து நான்கு வயதிற்கும் இடைப்பட்ட 1.2 மில்லியன் பெண்களில் 5 முதல் 7 வருடங்களுக்குச் செய்யப்பட்டது.

அதீத எடையுள்ளவர்கள் ஏனையவர்களைவிட 10 முதல் 17 சதவிகிதம் சிலவகைப் புற்றுநோய்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பை, சிறுநீரகம், சதையம், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடையேயான மார்புப் புற்று நோய்,
மாதவிடாய் நிற்காத பெண்களிடையேயான மலக்குடல் புற்றுநோய், களப்புற்று நோய்,
லியூக்கிமியா எனப்படும் குருதிப் புற்றுநோய்,
மல்ரிப்பிள் மையலோமா,
நொன் ஹொட்ஸகின் லிம்போமா

ஆகியன அவ்வாறு எடையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட புற்று நோய்களாகும்.

கலவரமடையாதீர்கள்.

இதன் அர்த்தம் என்ன?

எடை அதிகரித்தால் புற்றுநோய் கட்டாயம் வரும் என்பதா?

அப்படியல்ல!

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதிலும் முக்கியமாக முன்பு சொல்லப்பட்ட புற்றுநோய்கள் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்பதாகும்.

இது பெண்களில் செய்யப்பட்டது.

ஆண்களிலும் 25 வயதிற்கு மேற்பட்ட இள வயதுள்ளவர்களிலும் செய்யப்பட்ட இன்னுமொரு ஆய்வும் அதீத எடைக்கும் சிலவகைப் புற்றுநோய்களுக்கும் இடையே தொடர்புள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே எடையை அவதானியுங்கள்.

பிற்காலத்தில் வரக் கூடிய புற்றுநோய்க்காக மட்டுமல்ல மிகவிரைவில் வந்து உங்கள் வாழ்வின் எல்லையைக் குறுக்கப்போகிற நீரிழிவு, பிரஸர், மாரடைப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காகவுமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Journal Watch General Medicine December 6, 2007

நன்றி:- தினக்குரல்

Read Full Post »

Older Posts »