>நோயாளியை விட கூட வந்த தாய் அதிக பதற்றத்தில் இருந்தாள். வேகமாக வந்ததில் அவளுக்குத்தான் மூச்சு இளைத்தது.
“ஒரு கிழமையாக பஞ்சிப்பட்டுக் கொண்டிருந்தான். தலையிடி, சாப்பிடுறான் இல்லை. வயிறும் நோகுது என்றான். இப்ப பார்த்தால் காச்சல் 101 லை அடிக்கிது. தொண்டையும் நோகுதாம். திரும்பிக் காட்டடா தம்பி. கழுத்திலை கட்டி கட்டியா வீக்கம். பாருங்கோ டொக்டர். என்ன வருத்தமோ தெரியவில்லை”
அவளைப் பொறுத்த வரையில் காச்சலும் கட்டிகளும் மிகுந்த அபாயமான அறிகுறிகள்தான். ஏதாவது புற்றுநோயாக இருக்குமோ எனப் பயம்.
பதினைந்தே ஆன சின்ன வயதில் இப்படி ஒரு நோயா மகனுக்கு என்ற தனது ஏக்கத்தை மகனுக்கு முன் வைத்துச் சொல்ல முடியாது வார்த்தைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனுக்கு வந்திருப்பது ஆபத்தான நோயல்ல. சாதாரண ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆங்கிலத்தில் Glandular Fever அல்லது
Infectious Mononucleosis என்பார்கள்.
நெறிக்கட்டிக் காச்சல் அல்லது நிணநீர்க்கட்டிக் காய்ச்சல் என நாம் சொல்லலாம்.
பெரும்பாலான பிள்ளைகளுக்கு மிகச் சிறுவயதிலேயே வந்து தானே மாறிவிடுவதுண்டு.
2-3 வயதிற்கு இடையில் அவ்வாறு வரும்போது வழமையான அறிகுறிகள் இருப்பதில்லை.
வேறு சாதாரண காய்ச்சல் போல வந்து கரைச்சல் கொடுக்காது குணமாகிவிடும். அதனால் கவனத்தில் எடுக்கப்படாது போய்விடும்.
இந் நோய் இருப்பதை உறுதி செய்ய மொனோ ஸ்பொட்
(Mono spot) என்ற இரத்தப் பரிசோதனை உதவும்.
அறிகுறிகள்
குழந்தைப் பருவத்தில் வராதவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பதின்ம வயதில் வருவதுண்டு.
ஆரம்பத்தில் உடலுழைவு, தலையிடி, களைப்பு, பசியின்மை போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கும். சிலருக்கு வயிற்றுநோ இருக்கக் கூடும்.
சுமார் ஓரிரு வாரம் செல்ல தொண்டை நோவுடன் காச்சல் தோன்றும்.
ரொன்சில்கள் சிவந்து வீங்கியிருக்கும்.
அத்துடன் கழுத்துப் பகுதியில் நெறிகள் தோன்றும். அக்குள், அரைப் பகுதிகளிலும் நெறிகள் வருவதுண்டு.
மண்ணீரல், ஈரல் ஆகியவையும் இந்நேரத்தில் வீங்குவதுண்டு. அதுவே வயிற்றுநோவிற்குக் காரணமாகும். அத்தோடு பசியின்மை, ஓங்காளம் போன்றவற்றிற்கும் இவையே காரணமாகும்.
தொண்டை நோவைக் கண்டவுடன் தமக்குத்தாமே சுயவைத்தியம் செய்யும் சிலர் அமொக்சிசிலின் என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்தை வாங்கிப் போடுவதுண்டு. அப்படியானவர்களுக்கு தோல் சிவந்து அரிப்பு எடுப்பது போன்ற பக்கவிளைவு ஏற்படலாம்.
இது ஒரு வைரஸ் நோயாதலால் எந்த நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் உதவாது. உபயோகிக்கவும் கூடாது.
காய்ச்சல் தானே விரைவில் குணமாகிவிடும். ஆயினும் களைப்புத்தன்மை சில வாரங்களுக்கு நீடிக்கக் கூடும்.
ஒரு முறை இக்காச்சல் வந்தால் உடலுக்கு பூரண எதிர்புச் சக்தி கிடைத்துவிடுவதால் மீண்டும் வருவதில்லை.
எப்படித் தொற்றும்
நோயுற்று இருப்பவரின் எச்சிலில் இந்நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள்
Epstein-Barr (EB) virus) நிறைய இருக்கும்.
இதனால் வாயினால் முத்தமிட்டால் உடனடியாகத் தொற்றும்.
நோயுற்றவர் உபயோகித்த கப், கிளாஸ் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிப்பதாலும் தொற்றும்.
நோய் முற்றாகக் குணமாகிய பின்னரும் பலரது உமிழ்நீரில் தொடர்ந்து இருக்கும். அவர்களிலிருந்து நோய் பின்னரும் தொற்றலாம்.
இவர்களை நோய் காவிகள் என்பர்.
அடிக்கடி கை கழுவுவது, மற்றவர்கள் கோப்பை, கிளாஸ், பிளேட் போன்றவற்றை உபயோகிக்காது இருத்தல் போன்ற அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால் இந்நோயை மட்டுமல்ல மேலும் பல நோய்கள் தொற்றாமல் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.
கிருமி தொற்றினாலும் அது நோயாக வெளிப்பட 4-6 வாரங்கள் செல்லலாம். நோயுற்றவரை வாயில் முத்தமிட்டாலும், முன்பு ஒருமுறை நோய் வந்தவருக்கு மீண்டும் வர வாய்ப்பில்லை.
எப்படியாயினும் வேகமாகப் பரவும் தொற்றுநோய் அல்ல. இக்காரணங்களால் நோயுற்றவரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியதில்லை. காய்ச்சல் மாறி உடம்பு திடமானால் பாடசாலைக்குச் செல்லலாம். தொழிலும் செய்யலாம். இதற்கு எதிரான தடுப்பு ஊசி கிடையாது.
மருத்துவம்
காய்ச்சல், உடல் அலுப்பு இருந்தால் பரசிட்டமோல் மருந்து உபயோகிக்கலாம். ஆயினும் ஏற்கனவெ குறிப்பட்டது போல நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது கூடாது.
காச்சலுக்கு அஸ்பிரின் டிஸ்பிரின் உபயோகிக்க வேண்டாம். வைரஸ் காச்சலுக்கு அவற்றை உபயொகித்தால் ரெயிஸ் சின்ரோம் என்ற ஆபத்தான விளைவு ஏற்படலாம்.
போதிய ஓய்வு எடுப்பதுதான் முக்கியமானது. அதற்காக படுக்கையில் கிடக்க வேண்டும் என்றில்லை. களைப்பைக் கொடுக்கும் கடுமையான வேலைகளையும், கடும் உடற் பயிற்சிகளையும் நோயுள்ள போது தவிர்க்க வேண்டும்.
தனது உடல் சொல்வதைக் கேட்டால் போதுமானது. அது போதும் என்று சொன்னால் அதற்கு மேலாக உடலை வருத்த வேண்டாம்.
விரும்பியதை உண்ணலாம். பத்தியம் எதுவும் கிடையாது. ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு காரணமாக உண்ண முடியவில்லை எனில் போசாக்குள்ள பானங்களாக அடிக்கடி அருந்த வேண்டும்.
உப்பு நீரால் அலசிக் கொப்பளித்தால் தொண்டை வலி தீரும்.
‘பயந்தாங்கொள்ளி மனுசி. சின்னக் காய்சலுக்கு டொக்டரட்டை ஓடுது’ என்று ஆரம்பத்தில் குறிப்பட்ட பெண்ணை நக்கலடித்து அலட்சியப்படுத்தினால் தவறு செய்வது நீங்கள்தான்.
ஏனெனில் லிம்போமா, ஹொட்ச்கின்ஸ் போன்ற ஆபத்தான நோய்களின் முதல் அறிகுறிகளும் நிணநீர்க்கட்டி வீக்கம்தான். கசநோய்(TB) சிபிலிஸ் போன்ற தொற்று நோய்களிலும் ஏற்படும். எனவே எத்தகைய நிணநீர்க்கட்டி வீக்கம் (நெறிக்கட்டி) ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல்
மறுமொழியொன்றை இடுங்கள்