Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2010

>

எனது நண்பன் வரதராஜன் ஒரு இணைப்பை அனுப்பியிருந்தார். அதில் அவர் எழுதியிருந்தது இவ்வளவுதான்.

“கண்டங்கள் தாண்டி நாம் வந்தாலும் என்றுமே எம்மை இணைத்துக்கொண்டிருக்கும் இவர்கள்!!”

அது ஒரு YouTube இணைப்பு.

இசையில், மெல்லிசையில் சங்கீதத்தில், ஆர்வமுள்ளவர்களுக்கு  அற்புதமான அனுபவத்தைத் தரக் கூடியது.

ஒரு இசை அல்பம். தபலாவும் வயலினும் இணைந்து ஒலிக்கிறது. ஷாகீர் ஹீசைனும் குன்னக்குடி வைத்தியநாதனும் இணைந்து இசைக்கிறார்கள்.


மேலைத்தேய, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசைகளின் சங்கமம்

அதைக் கேட்க முன்னர் கீழே பதிவின் இறுதியில் உள்ள RAGGA வை mute பண்ணுங்கள். இல்லையேல் பாரதியின் நிற்பதுவே நடப்பதுவே குறுக்கிடும்.

Read Full Post »

>அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.

இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.

அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.

அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.

அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.

மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.

பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.

நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.

பல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.

இதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.

உள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.

இவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.

ஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.

வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.

பற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.

ஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.

பற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.

நீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு நோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.

மூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

மூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.

சிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.

மூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.

உணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது ‘கீட்டோன்’ என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.

இவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.

  • ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும். 
  • ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.
  • பற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும். 
  • அத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.
  • சிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. இது பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

இவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.

வாய்நாற்றத்தை நீக்க நீங்கள் அவதானிக்க வேண்டிய விடயங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- தினக்குரல்

Read Full Post »

>புதிதாக மணமானவன். மாலை சூட்டி மாதம் ஒன்று கூட ஆகவில்லை…
அதற்கிடையில் இந்தச் சிக்கல்.

என்னுடன் தனிமையில் அந்தரங்க விஷயங்களைப் பற்றிக் கதைக்கவெனத் தயங்கியபடி வந்தான்.

ஏமாற்றம் தரும் உறவு!
புது வாழ்க்கை ஒட்டாமலே பிரிந்து விடக்கூடிய நிலை!!
தனிமையில், மங்கிய ஒளியில்,
அவளை அணுகியவுடனேயே அவன் சோர்ந்து விடுகிறான்…
அவனால் முடியவில்லை…

இயலாமை… ஏமாற்றம்… சலிப்பு…

அவள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறாள்.

ஏமாற்றம்: ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்.

ஒரு நாளா?… இரண்டு நாளா?… மாதம் ஒன்று கழியப் போகிறது.

இனியும் முடியாது. அவள் பொறுமை இழந்து விட்டாள்.

உறவை முறித்து ஒரேயடியாகப் பிரித்து விடலாமா என்ற தனது எண்ணத்தை அவனுக்குக் கோடி காட்டி விட்டாள்.

“அப்படி நேர்ந்தால் அந்த அவமானத்துடன் உயிர் வாழ முடியுமா? என்ற ஏக்கம் அவனுக்கு. என்னிடம் ஓடி வந்தான்.

பொறுமையுடன், பூரணமாக அவனைப் பரிசோதித்தேன்.
அவனது உறுப்புகளில் எந்தக் குறையும் இல்லை.

நீரிழிவு, பிரஸர், மற்றும் ஆண்மைக் குறைபாட்டைக் கொண்டு வரக் கூடிய நோய்கள் எதுவும் இருக்கவில்லை.

ஏதோ மனோவியல் சிக்கலாகத் தான் இருக்க வேண்டும்.

நிதானமாகப், புரிந்துணர்வுடன் கூடிய அணுகுமுறை தேவைப்பட்டது.
அவனுடன் நீண்ட நேரம் உரையாடினேன்.
அவனது கடந்த கால வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.

மூன்று வருடங்களாக, மத்திய கிழக்கு நாடொன்றில் பெரும் முதலாளி ஒருவனின் தனிப்பட்ட டிரைவராக கடமையாற்றினான்.
கைநிறையச் சம்பளம்.
வயிறு நிறையச் சாப்பாடு,
நிம்மதியான வாழ்க்கை.
அப்பொழுதுதான் அந்த பங்காளாவில் கடமையாற்றிய ஒரு வேற்றினப் பணிப்பெண்ணின் நட்புக் கிடைத்தது.

நட்பு நெருங்கியது. மேலும் இறுகியது.
படுக்கையறை வரை சென்று விட்டது.

அப்பொழுது அவனுக்கு எல்லாமே நிறைவாக முடிந்தது! எந்த இயலாமையும் இருக்கவில்லை!

எனக்குத் துரும்பு கிடைத்து விட்டது! அதை வைத்துக் கொண்டு, அவனது ஆழ்மனத்தை நெருங்கி விசாரித்த போது, அந்த உறவு அவனது மனத்தை மிக ஆழமாகப் பாதித்து விட்டமை புரிந்தது.

தான் ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டதாகத் தன் மனதுக்குள்ளேயே மறுகினான். அது கேவலமாகப்பட்டது.

பழையவளை மறக்க முடியவில்லை.

அதே நேரத்தில் புதியவளுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் நினைத்துக் கவலை கொண்டான்.

இதனால் இவளை நெருங்கும் போதெல்லாம், குற்ற உணர்விற்கு ஆளாகி மனந்தத்தளித்து இயலாமைக்கு ஆட்பட்டான்.

அவன் முன்பு செய்தது பிழையென்ற போதும், அந்தக் குடும்பம் விவாகரத்து வரை சென்று பிரித்து விடாமல் இருப்பதற்கு, என்னால் ஆகக்கூடியதைச் செய்ய வேண்டும்.

அவனுக்கும் பல விஷயங்களைப் புரிய வைத்தேன்.
பல சம்பவங்களை உதாரணம் காட்டினேன்.

குற்ற உணர்வை இழக்க வைத்து, நம்பிக்கையை அவன் மனதில் வளர வைத்தேன். சில மருந்துகளும் உதவின.

அண்மையில் கை நிறைய சொக்களேற்றுடன்
முகம் நிறைந்த சிரிப்புமாக வந்தான்.

தவறுகள் செய்யாத மனிதர்கள் கிடையாது.

ஆனால் அதையே மீள மீள நினைத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தால்  வாழ்வு நரகமாகிவிடும்.

தனது வாழ்வு மட்டும் இன்றிக் கூட வாழ்பவர்களின் வாழ்வும் கருகிவிடும்.

அதிலிருந்து விடுபட வேண்டும்.

வாழ்வைச் சொர்கமாக்கிக் கொள்ள வேண்டும்

நாம் சிரித்தால் சுற்ற உள்ள மனிதர்களும் மகிழ்வார்கள். நாம் அழுதால் எமது உறவுகளும் நட்புக்களும் கவலை கொள்ளும்.

எனவே மீண்டும் மீண்டும் தவறு செய்யாது புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அவளைப் போன்ற வேறு சில பெண்கள் வாய்விட்டுப் பேச முடியாது தம் வாழ் நாள் முழுவதும் உள்ளத்திற்குள் அழுந்திக் கொண்டிருப்பது எமது சமூகத்தின் சாபக் கேடாகும்.

ஆனால் புரிந்துணர்வோடு நடந்து மருத்துவ உதவிக்கு வருவது இப்பொழுது அதிகரித்துள்ளதும் உண்மையே.

ஆண்மைக் குறைபாடு பற்றிய எனது மருத்துவக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

 கலாசார சீரழிவுகள் என்ற தலைப்பில் முன்பு மல்லிகையில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. சில மாற்றங்களுடன்.

Read Full Post »

>

மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் கொழும்பு
பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு

 
2009ம் ஆண்டிற்கான செயலாளர் அறிக்கை

மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் 2009ம் ஆண்டிற்கான செயலாளர் அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பாடசாலை வளர்ச்சியில் அக்கறை கொண்ட பழைய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள். அத்துடன் இப்பாடசாலை மண்டபத்தை எமக்குத் தந்துதவிய பாடசாலை அதிபருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.

எமது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கான பல அபிவிருத்திப் பணிகள் நடப்பு ஆண்டில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எமது ஒன்றிய அங்கத்தவர்களாகிய உங்களது ஒத்தழைப்பாலும், பொருள் உதவியாலும் இவற்றை நிறைவேற்ற முடிந்துள்ளது. பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்த வரை இது மிகவும் திருப்தியான ஆண்டாகக் கருதலாம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மற்றும் செய்து முடிக்கப்பட்டுள்ள சில பணிகள் பற்றிய தகவல்களை தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முற்புற பெரிய கதவு

    வடக்குப்புறமாக பெரியவாசற்கதவு டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்களினால் தனது தாயாரான கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரி ஞாபகமாக வழங்கப்பட்ட ரூபா 25000 நிதியினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலுள்ள பாடசாலைப் பெயர் வளைவு திரு.கனகசாபதி மோகன் அவர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டெலிபோன் இணைப்பு

    எமது பாடசாலைக்கு இவ்வருட ஆரம்பம்வரை தொலைபேசி வசதி இல்லாதிருந்தது. இதனால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் பெற்றோர்கள் அனைவருமே தொடர்புகளுக்கு காலவிரயம் செய்ய வேண்டியிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு திரு.ஆ.சிவநாதன் தனது தாயாரான திருமதி. இந்திரா ஆறுமுகநாதன் நினைவாக பாடசாலைக்கு தொலைபேசி இணைப்பையும் அதற்கான ஒரு வருடக் கட்டணத்தையும் (ரூபா 20,000) வழங்கியுள்ளார்.

சைக்கிள் தரிப்பிடம்

    எமது பாடசாலை ஒரு உள்ளுர் சிறிய ஆரம்பப்பாடசாலையாக இருந்தபோதும் அதற்கும் ஒரு சைக்கிள் தரிப்பிடம் (பார்க்) அவசியமாக இருந்தது. பாடசாலைக்கு சைக்கிளில் வரும் சில மாணவர்களுக்காக மட்டுமன்றி ஆசிரியர்களது சைக்கிள்கள் மற்றும் வேறு தேவைகளுக்காக வரும் அதிகாரிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போன்றோரது வாகனங்களை விடுவதற்கும் இது அவசியம் என உணரப்பட்டது.

இப்பொழுது 40 அடி நீளமான வசதியான சைக்கிள் தரிப்பிடம் பாடசாலையின் பெரிய கதவிற்கு மேற்குப் புறமாக மதிலை அண்டிய நிலப்பரப்பில் கட்டி முடிக்கப்பட்டு பாவனையில் உள்ளது. இதற்காக நிதியை டென்மார்க்கில் வாழும் இரத்தினசபாபதி கிருஷ்ணராஜா அவர்களும் அவரது நண்பர்களுமாக இணைந்து சேர்த்துக் கொடுத்துள்ளார்கள்.  இதற்காக ரூபா 128,000 செலவிடப்பட்டுள்ளது.

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான விஷேட வகுப்புகள்

மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான விஷேட வகுப்புகள் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த 8 மாணவர்கள் இவ்வருடம் இவ் வகுப்புக்கள் மூலம் முன்னேற்றமடைந்து வழைமையான வகுப்புக்களுக்கு மீளச் சேர்க்கப்பட்டுள்ளமை இத்திட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாகும்.

அண்மையில் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த பல மாணவர்கள் எமது பாடசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் கல்வியியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அவர்கள் இப்போது விசேட வகுப்புக்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர். பிரபல வர்த்தகர்களான அமரர்.சி. திருச்செல்வம் மற்றும் அமரர் சி.சிவகுலசிங்கம் ஆகியோர் ஞாபகார்த்தமாக இத்திட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கான நிதியுதவிகளை திரு தி.செல்வமோகன் மற்றும் திரு சி.வசந்தன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இரண்டாம் கட்ட நிதியான ரூபா 20000 ம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மொத்தமாக 40,000 வழங்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

 இவ்வருடம் எமது பாடசாலையில் இருந்து 8 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் முன்னணியில் உள்ள மாணவர்கள் 165, 164, 162 என மிக நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இம்முறை யாழ் மாவட்ட வெட்டுப்புள்ளி 140 புள்ளிகளாகும். 130-140 க்கும் இடைப்பட்ட புள்ளிகளை மேலும்8 மாணவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 100 க்கும் மேற்பட்ட புள்ளிகளை மேலும் 8 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் எமது பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களது வெற்றிக்குக் காரணமாயிருந்த ஆசிரியர்களுக்கும் அதிபர்க்கும் எமது நன்றிகள். ஏனைய மாணவர்களும் நல்ல பெறுபேறினைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

புலமைப்பரீட்சையில் சித்தியெய்திய 8 பேரில் 7 பேர் புலமைப்பரிசில் உதவி நிதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க்கு ‘இளஞானச் சுடர்’ விருதும் பணப்பரிசும்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாந்தம் ‘இளஞானச் சுடர்’ விருதும் பணப்பரிசும் அளித்து ஊக்குவித்து வருகிறது.

2009ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 8 மாணவர்களுக்கும் தலா ரூபா 1000 பணப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நிதியுதவியை  வழங்கியோர் விபரம் பின்வருமாறு

திரு.மு.சோமசுந்தரம் 1500
திரு.க.சிதம்பரநாதன் 1500
திரு.இராஜ் சுப்ரமணியம் 1500
டொக்டர்.எம்.கே,முருகானந்தன் 1500                                               

2008ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தலா ரூபா 2000 பணப் பரிசாக வழங்கப்பட்டது. தனது தந்தையாரான திரு.நாகப்பர் நினைவாக திரு. நாகப்பர் சண்முகதாஸ் அவர்களால் இதற்கான நிதியுதவி ரூபா 20,000 வழங்கப்பட்டது.

2007ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பணப் பரிசு நிதியுதவிக்காவும் பரிசளிப்பு விழாவிற்காகவும் கொழும்பு ஆங்கத்தவர்கள் ரூபா 17,500ம் கண்டி மாத்தளை அங்கத்தவர்கள் ரூபா 15,000;ம் வழங்கியிருந்தனர். அவர்கள் விபரம் 2007ம் ஆண்டுக் கணக்கறிக்கையில் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாடசாலை நூலகத்துக்கான தளபாடங்கள்

பாடசாலை நூலகத்துக்கான ஒரு புதிய கட்டடம் பாடசாலையின் தெற்குப் பகுதியில் திறந்த அரங்கத்திற்கு மேற்குப்புறமாக அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதற்கான நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழங்கியிருந்தது. ஆயினும் தளபாடங்கள் இன்மையால் அது முழுமையாகச் செயற்படாதிருந்தது.

இப்பொழுது தளபாடங்களுக்கான நிதியை பிரபல வர்த்தகர் அமரர் திரு. நா.ம.பரஞ்சோதி அவர்களின் நினைவாக அவரது அருமைப்பிள்ளைகளும் மருமக்களும் தாமகவே முன்வந்து உதவியுள்ளனர். இந்த முயற்சியில்  ஈடுபட்டுழைத்த அமரரின் மகன் பரம்சோதி அருளானந்தம் (லண்டன்) மற்றும் மருமகன் இராசலிங்கம் சுந்தரலிங்கம் (இளைப்பாறிய தபாலதிபர். கனடா) ஆகியோர்; பாராட்டிற்குரியவராவர். அவர்கள் அளித்த ரூபா 150000 நிதியைக் கொண்டு மேசைகள், கதிரைகள், புத்தக அலுமாரி போன்ற தளபாடங்கள் பெறப்பட்டுள்ளன.

நூலகத்துக்கான நூல்கள்

சென்ற 2009 ஆண்டுப் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போது எமது ஒன்றிய பழைய மாணவர்களால் நூல்நிலையத்திற்கென கொழும்பில் சேர்க்கப்பட்ட நூல்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாடசாலைக் கணனி வசதிகள்

கல்வியமைச்சின் அனுசரனையுடன் கணனிக்கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இப்பாடசாலை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் கணனித் தேர்ச்சியார்வம் அதற்கான நேர்நிலையை ஏற்படுத்தியுள்ளமை காரணங்களாக அமைந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் ரூபா 18,000 பெறுமதியான கணனியை எமது ஒன்றிய அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவி அளித்தோர் விபரம் பின்வருமாறு

திருஆ.சிறிநாதன் ரூபா 5000
திருமு.சோமசுந்தரம் ரூபா 5000
திரு க. சண்முகசுந்தரம் ரூபா 2000
டொக்டர்.சு.அருள்குமார் ரூபா 3000

பரிசளிப்பு நூல்கள்

பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு வழாவில் பரிசு பெறும் பிள்ளைகளுக்காக பல நல்ல நூல்களைப் பெறவேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு கண்டி பிரபல வர்த்தகர் அமரர் வே.க. கந்தையா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர் ஸ்தாபித்த வர்;த்தக நிறுவனமான எஸ்.கே கொம்பனி சார்பில் அவரது பிள்ளைகளான கந்தையா இராமச்சந்திரன், கந்தையா சிறீஸ்கந்தராஜா ஆகியோர் ரூபா 5000 வழங்கியிருந்தனர். இத்தொகையில் பல நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. அமரர் வே.க.கந்தையா எமது பாடசாலையின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அயராது முன்னின்று உழைத்தவர் என்பது யாவரும் அறிந்ததே. அன்னாரின் சேவைகளை நினைவுகூரும் வகையில் இது நடைபெறுகிறது.

நினைவுப்பரிசில்கள்

வருடாந்த நினைவுப்பரிசுகள்

 பல பழைய மாணவர்கள் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமது நினைவுக்கூகுரியவர்கள் ஞாபகமாக வருடாந்தம் நினைவுப்பரிசில்களை வழங்குவதற்கான நிதியை கொடுத்துள்ளார்கள். பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அவற்றை வங்கியில் வைப்புப் பணமாக இட்டு அதன் வட்டிப் பணத்தில் பரிசில்களை வழங்கவுள்ளது.
 1. சகலதுறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்க்கான         பரிசு அமரர் செல்லாச்சி இராசரத்தினம் நினைவாக வழங்கியவர் திரு இராஜ்சுப்ரமணியம் ரூபா 15000
 2. புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு அமரர் முன்னாள் அதிபர் ந. சிவபாதசுந்தரம் நினைவாக வழங்கியவர் திரு பொ.கேதீஸ்வரன் ரூபா 15000
 3. ஆங்கில மொழித்திறனுக்கான பரிசு அமரர் கா.மு. காசிவிஸ்வநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி தேவாம்பிகை காசிவிஸ்வநாதன் ரூபா 15000
 4. திருக்குறள் மனனத்தில் சிறந்து விளங்குபவர்க்கான பரிசில் அமரர் முன்னாள் அதிபர மூத்தபிள்ளை பொன்னையா நினைவாக வழங்கியவர் திருமதி வேல்நந்தகுமார் ரூபா 15000
 5. வரவொழுங்கிற்கான பரிசு அமரர் பரமேஸ்வரி கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் கதிரவேற்பிள்ளை மகேஸ்வரன் ரூபா 15000
 6. பொது அறிவில் சிறந்து விளங்குபவர்க்கான பரிசு அமரர் டொக்டர் த. பரமகுருநாதன் நினைவாக வழங்கியவர் திருமதி பரமகுருநாதன் தங்கம்மா ரூபா 15000
 7. சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசு அமரர் டொக்டர் க. திருநாவுக்கரசு நினைவாக வழங்கியவர் திருமதி கௌரிமனோகரி மகேஸ்வரன் ரூபா 15000
 8. ஆக்கத்திறனுக்கான பரிசு அமரர் சுவாமிநாதன் மனோன்மணி நினைவாக வழங்கியவர் திரு சுவாமிநாதன் சிவபாலன் ரூபா 20000
 9. பண்பு விருத்திக்கான பரிசு அமரர் வ.துரைசாமிப்பிள்ளை நினைவாக வழங்கியவர் திருமதி.ராஜேஸ்வரி பரமேஸ்வரன், திரு து. இராஜசேகரம் ரூபா 20000
 10. சிறந்த நூலகப் பயன்பாட்டிற்கான பரிசு அமரர் திரு திருமதி சிதம்பரம் நினைவாக வழங்கியவர் திரு சிதம்பரம் வர்ணகுலசிங்கம் ரூபா 15000
 11. புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவருக்கான பரிசு திரு. திருமதி கனகசபாபதி நினைவாக வழங்கியவர் டொக்டர் எம்.கே.இரகுநாதன் ரூபா 100,000
 12. வரவொழுங்கும் வினைத்திறனுமுள்ள ஆசிரியருக்கான பரிசு அமரர் திருமதி சின்னத்தங்கம் சுப்பி;ரமணியம்; நினைவாக வழங்கியவர் திரு  சுப்பிரமணியம் குணராஜா ரூபா 15000
 13. கல்வி ஊக்குவிப்பு நிதியை அமரர் பரமகுரு கதிரவேற்பிள்ளை நினைவாக வழங்கியவர் திரு  க. கதிரமலை ரூபா20000

நினைவுப் பரிசுகளுக்கான நிதி உதவிகளைச் செய்த அனைவருக்கும் பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

பரிசளிப்பு விழா 2009

சென்ற நவம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் விழாவின் போது மேற்படி பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்முறை பரிசளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவரும், ஒன்றியத்தின் சிரேஷ்ட அங்கத்தவருமான திரு.ராஜ் சுப்பிமணியம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. திருமதி உருத்திரேஸ்வரி ராஜ் சுப்பிமணியம் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்தார்.

எமது பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களுக்கு, எமது பாடசாலையில் கல்வி கற்று மதிப்பிற்குரிய நல்ல நிலையில் இருக்கும் பழைய மாணவர்களையே அழைப்பதென்ற சம்பிரதாயத்தை உருவாக்க எமது அதிபர் விரும்புகிறார். இந்த வகையில் 2008ம் ஆண்டிற்கான பிரதம விருந்தினராக யாழ்தொழில்நுட்பவியல் நிறுவனப் பணிப்பாளரான திரு.கதிரவேல் கதிரமலை அவர்களும், 2007ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ் பல்கலைக் கழகம் திருமதி கலாநிதி இ.ஜெயலக்ஷ்மி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்;.

பாலர் வளாக முற்புற இரும்பு வேலி

எமது பாடசாலையின் அபிவிருத்தியில் மற்றுமொரு விடயமாக பாலர் வளாகத்தின் முற்புறத்தில் புதிய இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பழைய மாணவியும், சுகாதார திணைக்கள பெருந்தோட்டப் பகுதிப் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி உமா சிவபாதசுந்தரம் அவர்கள் தனது பெற்றோர்களான ஆ.சிவபாதசுந்தரம் தம்பதிகளின் நினைவாக ரூபா 60000 நிதியுதவியில் அந்த இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

2009 வருட புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் அதிக புள்ளிபெற்ற மாணவனின் தந்தையான ந.நாகேந்திரராஜா அவர்களால் ரூபா 20000 பெறுமதியான ஒலிபெருக்கி அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இம்மாணவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் 17000 பரிசுபெற்றது குறிப்பிடத்தக்கது.

கண்டி இணைப்புக் குழு

சென்ற ஆண்டின் மிக முக்கிய பணியாக கண்டி மாநகருக்குச் சென்ற நாம் அங்குள்ள எமது பாடசலைச் சமூகத்தைச் சார்ந்தவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பைக் கூறலாம். அங்குள்ள இந்து வாலிபர் சங்கக் கட்டிடத்தில் நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, எமது பாடசாலை பழைய மாணவர் ஒன்றியத்திற்கான இணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர் : திரு.சி.வாசுதேவன்
செயலாளர்: திரு.க. பாலதாசன்
பொருளாளர்: திரு.சி. வசந்தன்
இணைப்பாளர்: திரு.கு.திலீபன்
ஆகியோருடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக மேலும் 13பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பாடசாலையை இந்நிலைக்குயர்த்தி தன்னலமற்ற சேவைசெய்துவரும் அதிபர் திரு கனகலிங்கம் அவர்களுக்கு தற்போது அதிபர் சேவை 2 ஐஐ கிடைத்துள்ளது. அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இனிவரும் நிர்வாகக் குழுவும் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி மேலும் பல செயற்பாடுகளை மேற்கொள்ளும் எனக்கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி

       தலைவர்                                                                     செயலாளர்
டாக்டர் மு.க.முருகானந்தன்                                   சு.சற்குணராஜா

Read Full Post »

« Newer Posts