Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2010

>

‘களைக்குது களைக்குது என்று காலையிலிருந்து வருத்தம் பாடிக் கொண்டிருக்கிறா. என்னெண்டு ஒருக்கால் பாருங்கோ…’ என்றார் உள்ளே நுழைந்தவர்;.

தொடர்ந்து ‘இண்டைக்கு கடைச் சாப்பாடுதான் போல கிடக்கு’ என்றும் சலித்துக் கொண்டார்.

வந்தவர் கதிரையில் உட்காரும் மட்டும் நோயாளியின் தலை கண்ணில் படவேயில்லை.
மெதுவாக அடியெடுத்து பின்தொடர்ந்து வந்த பெண்மணியின் முகமெங்கும் ஆயாசம் பரவிக் கிடந்தது.
சற்று இளைப்பதும் தெரிந்தது.
நோயுற்றதால் களைப்படைந்திருந்தாள்.

நோயில் துன்பப்படும் மனைவியை அக்கறையோடு கைபிடித்துக் கூட்டி வராது, அவளால் சமைத்துப் போட முடியாத அடுத்த நேரச் சாப்பாடு பற்றி மட்டுமே கவலைப்படும் இத்தகைய மனிதர்களைப் பற்றிச் சொல்வது என்ன?

அவளுக்கு நெஞ்சை அடைக்கவில்லை. நடு நெஞ்சில் வலிக்கவும் இல்லை. வலி இடது தோளுக்கோ கையுக்கோ  வலி பரவவில்லை. வியர்த்து ஒழுகவில்லை.

நான் விபரமாகக் கேட்டபோதுதான்
காலையிலிருந்து முதுகுப்புறமாக சற்று வலிக்கிறதாகச் சொன்னாள்.

பரிசோதித்தபோது,
இருதயம் சற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.
பிரஷர் சற்றுக் குறைந்திருந்தது.
ஈ.சி.ஜி யில் சிறிய மாற்றமே இருந்தது.
ஆனால் கார்டியக் ரோபனின் இரத்தப் பரிசோதனை
மாரடைப்புத்தான் என்பதை உறுதிப்படுத்தியது.

மாரடைப்பைக் கையாளக் கூடிய வசதியுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக அனுப்பி வைத்ததால் அவருக்கு எதிர்காலத்தில் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.

ஒரு வேளை அவள் மரணித்திருந்தால்?

பின்னர்தான் அவளின் அருமை புலப்பட்டிருக்கும்.

‘அவள் இருக்கு மட்டும் எனக்கு என்ன குறை’
என நினைந்து ஒழுகுவது மட்டுமே மிஞ்சியிருக்கும்.

மாரடைப்பினால் பாதிப்பு பெண்களுக்கு அதிகம்

கடுமையான மாரடைப்பினால் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்கள் அங்கேயே இறப்பதற்கான சாத்தியம்
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்
என இரு வருடங்களுக்கு முன்னர்
Circulation Dec 08, 2008
சஞ்சிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை கூறியது.

காரணங்கள் எவை?

பெண்கள் அதிகமாக மரணமடைவது ஏன் என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பிரதான காரணம் நோய் வந்தாலும் பெண்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வருவதில்லை.
ஆண்களைவிட அதிக காலதாமதமாகிறது எனக் கண்டறியப்பட்டது.
இது ஏன்?

பெண்களில் மாரடைப்பின் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை

பெண்கள் தங்கள் நோய் அறிகுறிகளுக்கான காரணம் மாரடைப்புத்தான் என உடனடியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் பெண்கள் பலருக்கும் வரும் மாரடைப்பு நோயின் வலி கடுமையாகவும் மருத்துவப் புத்தகங்களில் வருவது போல (typical) வியர்வையுடன் கூடிய கடுமையான நடுநெஞ்சு வலியாக இருப்பதில்லை.

தலை அம்மல்
முதுகு உளைவாகவோ,
களைப்பாகவோ,
நெஞ்செரிப்புப் போலவோ
வெளிப்படுவதுண்டு.

இதனால் பெரும்பாலும் வாய்வுத் தொல்லை என்றோ, சமிபாடின்மை என்றோ அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

அமெரிக்காவின் தேசிய உடல்நலத்திற்கான திணைக்களம் (NIH) செய்த ஆய்வு ஒன்றின் பிரகாரம்,

95% சதவிகிதமான பெண்களில் வழமைக்கு மாறான கடுமையான களைப்பு, மூச்செடுப்பதில் சிரமம், தூக்கக் குழம்பம் ஆகியனவே முக்கிய அறிகுறிகளாக இருந்தனவாம்.
30% சதவிகிதத்திற்கு குறைவானவர்களுக்கே நெஞ்சு வலி இருந்ததாம்.
45% சதவிகிதமானவர்களுக்கு நெஞ்சு வலியே இருக்கவில்லையாம்.

இதனால்தான் நோயாளிகள் கவனிப்பை ஈர்ப்பதில்லை.

மேலதிக தகவல்களுக்கு:-கிளிக் பண்ணுங்கள்

தாமதித்த மருத்துவ உதவி

பெண்கள் அதிகமாக மரணமடைவதுதற்கு இரண்டாவது முக்கிய காரணம் மருத்துவர்கள் எனலாம். பெரும்பாலான மருத்துவர்களும் நெஞ்சுவலி இருந்தால்தான் மாரடைப்பு பற்றிச் சிந்திக்கிறார்கள். இதனால் பெண்கள் பிரத்தியேகமற்ற சாதாரண அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக துரித செயற்பாட்டில் இறங்கத் தவறிவிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கூறிய ஆய்வின் பிரகாரம்,
உடனடியாக அஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,
ஒன்றரை மணிநேரத்திற்குள் சத்திர சிகிச்சைக்கு எடுக்கப்படுவது 14 சதவிகிதமும்,

சேதமடைந்த இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டததை மீளவைக்கும் சிகிச்சைகள் (Reperfusion therapy) 25சதவிகிதமும்
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவாகவே கொடுக்கப்பட்டதாம்.

ஆண் முதன்மைச் சமுதாயம்

போதாக்குறைக்கு ஆண்களை முதன்மைப்படுத்தும் எமது சமுதாய வழக்கில் ஆண்களுக்கு வருத்தம் வந்தால் அள்ளிப் பிடித்துக் கொண்டு ஓடுவதுபோல, பெண்களது நோய்களுக்கு அக்கறைபடுவது குறைவு எனலாம்.

மாரடைப்பு நோயுடன் மருத்துவ மனைக்கு வரும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் மரணமடைவதற்கு இவையே காரணம் எனலாம்.

பெண்களே நீங்கள் செய்யக் கூடியது என்ன?

பிழை எங்கிருந்தாலும், மற்றவர்கள் மீது குறையைப் போடுவதற்கு முதல் உங்களில் நீங்கள் அக்கறை எடுங்கள்.

நீரிழிவு, அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பது போன்றவையே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.
உங்களுக்கு அவை இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் கண்டறியுங்கள்.

அவை இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் போன்ற முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பியுங்கள்.

பெண்களுக்கு மாரடைப்பு நெஞ்சுவலியுடன் மட்டும் வருவதில்லை என்ற தெளிவுடன் இருந்து, அதற்கான ஏனைய அறிகுறிகளையும் அறிந்து வைத்திருங்கள்.

உங்களுக்கு திடீரென ஏற்பட்ட ஏதாவது நோயின் அறிகுறி மாரடைப்பாயிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால்
உடனடியாக இரண்டு அஸ்பிரின் மாத்திரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

விரைந்து செயற்பட்டால் மாரடைப்பிலிருந்து மாத்திரமல்ல ஏனைய பல நோய்களிலிருந்தும் தப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின்  மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>சத்திரசிகிச்சை நிபுணர்கள் சிலர் கலந்துரையாடல் அது.

எத்தகைய நோயாளிகள் சத்திரசிகிச்சை செய்வதற்கு இலகுவானவர்கள் என்பது பற்றி தம்மிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

‘எனக்கு எக்கவுண்டன்ட் நோயாளிகளை சத்திரசிகிச்சை செய்யப் பிடிக்கும். சத்திரசிகிச்சை மேசையில் அவர்களை வெட்டித் திறக்கும் போது அவர்களது உள்ளுறுப்புகள் யாவும் எண்ணிக்கை இடப்பட்டு ஒழுங்காக இருக்கும்’ என்றார் முதல் நிபுணர்.

‘ஆனால் நீங்கள் எலக்ரீசியனை சத்திரசிகிச்சை செய்யவில்லைப் போலிருக்கிறது. நம்பர் ஏன்? அவர்களது உறுப்புகள் யாவும் வெவ்வேறு நிறங்களால் இலகுவாகப் பிரித்தறியும் வகையில் இருக்கும்’ என்றார் இரண்டாமவர்.

மூன்றாவது சத்திரசிகிச்சை நிபுணருக்கு பொறுக்க முடியவில்லை.

‘நீங்கள் என்ன மடைத்தனமாகக் கதைகிறீர்கள். நூலகர்களுக்கு இணை கிடைக்கவே கிடையாது. ஒவ்வொரு உறுப்பும் எழுத்து ஒழுங்கில் (Alphabetical Order) தெளிவாக இருக்கும்.’

‘கட்டடப் பணியாளர்கள்தான் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள். சத்திரசிகிச்சை முடியும்போது சில உறுப்புகள் மிஞ்சிக் கிடந்தால் அதை தவறாக எடுக்க மாட்டார்கள். புரிந்து கொள்வார்கள்.

உறுப்புகள்  வெடித்தாலும் பிஞ்சாலும் அஞ்சமாட்டார்கள். பிளாஸ்டர் பண்ணி மூடி மறைத்து விடலாம்.

முன்னர் சொன்னதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டாலும் விளங்கிக் கொள்வார்கள்.’ என்றார் மற்றவர்.

ஐந்தாமவர் தனது கருத்தை வெளிப்படுத்தியவுடன் மற்றவர்கள் எல்லாம் வாயடங்க வேண்டியதாயிற்று.

‘அரசியல்வாதிகளைப் போல சத்திரசிகிச்சைக்கு இலகுவானவர்கள் ஒருவருமே இருக்க முடியாது…

… சத்திரசிகிச்சை கட்டிலில் கிடத்தி அவர்களைத் திறந்தால்
அங்கு உணவுக் குழாய் இருக்காது.
விதைகள் கிடையாது.
இருதயம் இருக்கவே இருக்காது.
முள்ளந்தண்டின் சுவடே காணப்படாது.
மண்டை ஓட்டைத் திறந்தால் அங்கு மூளை இருந்த அறிகுறியே இருக்காது.

இரண்டே இரண்டு உறுப்புகள் மட்டும் ஓயாது இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஒன்று வாய்.
மற்றது குதம்.

சத்திரசிகிச்சையின் போது ஏதாவது தவறிழைத்தாலும் பயமில்லை.
ஏனெனில் அவர்களது வாயும் குதமும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடு செய்யக் கூடியவையாகும்.’

இது சத்திரசிகிச்சை நிபுணர்களின் தேர்வு.

தேர்தல் விரைந்து வருகிறது.

தேர்தல் எத்தனை வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் தேர்தலில் தேர்ந்தெடுக்க உங்களுக்குத் தேர்வு இல்லை.

எல்லா வேட்பாளர்களுமே ஒரே ரகம்தான்.

கடைசி சத்திரசிகிச்சை நிபுணருக்கு கிடைத்த மாதிரி.

(இணையத்தில் படித்ததற்கு சற்று கைச்சரக்கு சேர்த்தது)

ஞானம் சஞ்சிகையில் ஏப்ரல் மாத இதழில் நான் எழுதியதின் மறுபிரசுரம்.

 0.0.0.0.0.0.0
இவர்களைத் தவிர  வேறு விதமான சத்திரசிகிச்சை நிபுணர்களும் இருக்கிறார்கள். 
இவர் சற்று தீவிரமான சத்திர சிகிச்சை நிபுணர். நோயின் சிறு சுவடும் இருக்கக் கூடாது என்ற ஆர்வத்தில் வெட்டி அகற்றுவார். 

அந்த நோயாளிக்கு நோய் சற்று முற்றிவிட்டது என்ற தீர்மானம் அவருக்கு. 

எனவே நோயின் கூறுகள் உள்ள அனைத்தையும் மிகுந்த அக்கறையோடு வெட்டி அகற்றினார்.


முடிவில் அவர் கட்டிலைப் பார்த்த போது நோயாளி இருந்த சுவடே இல்லையாம்!. 
0.0.0.0.0.0 
மற்றவர் இன்னும் தீவிரமானவர். ஆபரேசன் தியேட்டருக்குள் வந்த உடனேயே கடமை உணர்வுடன் கத்தியைத் தூக்கி வெட்டத் தொடங்கிவிட்டார்.
கூட இருந்த உதவி டொக்டருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
நீங்களே பாருங்கள்.
0.0.0.0.0.0 
இவர் கடமை உணர்வு மிக்கவர். ஒவ்வொரு நோயையும் மிகவும் நுணுக்கமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி ஆராய்ந்து பார்த்தே முடிவுக்கு வருவார்.
நோயை மிக தீவிரமாக ஆராய்ந்து தவறுக்கு சற்றேனும் இடமளிக்காத வண்ணம் Diagnose பண்ண வேண்டுமாம்.

இவர் நோயை நிர்ணயிப்பதற்கு முன்னர் நோயாளி பரலோகம் போய்விடுவரே என நீங்கள் சந்தேகப்பட்டால் அதுவம் நியாயம்தான்.
0.0.0.0.0.0

Read Full Post »

>

மணிவிழாக் கண்ட முருகானந்தன் மணிவிழாக் காணும் முருகானந்தனுக்கு வாழ்த்து

எம்.கே.முருகானந்தன்

காலம் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது. ஓளியை விட வேகமாகச் செல்லக் கூடியது மனம் என்கிறார்கள்.
ஆயினும் அந்த மனத்தின் வேகத்தைக் கூட காலம் வேகமாக கடந்துவிடுகிறது.

நேற்றுப் போலிருக்கிறது முருகானந்தனும் முருகானந்தனும் கல்கிஸ்சவிலிருந்து புஞ்சிபொரளையருகில் இருந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரே இரட்டைத் தட்டு பஸ்சில் 1970 களின் முற்கூறில் பயணம் செய்தமை.

அந்நேரத்தில் நாம் பயணித்தது வெவ்வேறு பாடநெறிகளுக்காகத்தான். ஆயினும் 80களில் என்று நினைக்கிறேன். நான் பருத்தித்துறையில் தனியார் மருத்துமனை நடாத்திக் கொண்ட காலத்தில் அவர் உதவி மருத்துவப் பயிற்சி முடித்து மருத்துவராகிவிட்டார்.

ஒரே பெயரில் இரு மருத்துவர்கள்.

பருத்தித்துறையில் நோயாளிகளுக்கு முருகானந்தன் என்றால் அது நான் மட்டுமே.

அவ்வாறே அக்கராயனிலும் வன்னேரிக் குளத்திலும் நோயாளிகளுக்கு முருகானந்தன் என்றால் அவர் மட்டுமே.

இருவருமே மருத்துவத்திற்கு அப்பால் இலக்கிய உலகிலும் பயணிப்பவர்கள்.

ஆழ்ந்த மொழிப்பற்றும், தனித் தமிழில் ஆர்வம் கொண்டவருமான அவர் ச.முருகானந்தனாகப் பயணித்தார்.

பள்ளி மாணவப் பருவம் முதலே காரணம் தெரியாமலே இரட்டை இனிசலில் ஆர்வம் கொண்ட நான் தொடர்ந்தும் எம்.கே.முருகானந்தனாகப் பயணிக்கிறேன்.

சிலநேரங்களில் வன்னேரிஐயா, பிரகலத ஆனந்தன் போன்ற பெயர்களில் அவர் மாறுவேடத்தில் இலக்கிய உலகில் உலா வருவார்.

முறுவன், அழகு சந்தோஸ், எம்.கே.எம், மருதடியான் என நான் ஒழிந்து கொள்வேன்.

அந்த அதே ச.மு வும் எம்.கே.எம் மும் இன்றும் நண்பர்கள். என்றுமே நண்பர்கள்தான்.

1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி தைத்திருநாளன்று பிறந்த ச.மு க்கு இது மணிவிழா ஆண்டாகும்.

ஆழ்ந்த சமூக நேசிப்பாளி

 ‘ச.முருகானந்தன் என்ற படைப்பாளி பற்றிப் பேசும் போது அவருடைய சமூக நேசிப்பின் தன்மை பற்றியும் பேச வேண்டிய தேவை ஏற்படுகிறது. போர் சூழ்ந்திருந்த வன்னிப் பிரதேசத்தில் அதுவும் பின்தங்கிய ஒரு காட்டுக் கிராமத்தில் மருத்துவராக கால் நூற்றாண்டு காலம் பணிபுரிவதென்பது சாதாரண விடயமல்ல.’
என இவரது சமூக அக்கறையை விதந்து சொல்கிறார் தாமரைச்செல்வி மல்லிகைக் கட்டுரை ஒன்றில்.

வன்னிப் பிரதேச மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அற்புதமாகக் கையாண்ட, அப் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ்ந்த அற்புத எழுத்தாளரான தாமரைச்செல்வி அவ்வாறு சொல்வதிலிருந்து ச.மு எத்துணை அர்ப்பணிப்போடு மருத்துவப் பணியாற்றியிருக்கிறார் என்பது புரிகிறது.

‘மூச்சுவிட நேரமில்லாத மருத்துவப் பணியின் மத்தியிலும் தனது எழுத்துப் பணியை ஒரு தவம் போல மேற்கொள்பவர்’ என்று கூறும் தாமரைச்செல்வி, ‘அவருடைய எழுத்துப் பணியை விட அவர் செய்துவரும் மருத்துவப் பணி உயர்வானது என்பேன்’ என உயிரபாயம் உள்ள சூழலிலும் அவர் வன்னியில் ஆற்றிய மகத்தான பணியை, பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

செ.கதிர்காமநாதன் பிறந்த மண்ணில் பிறந்த ச.மு இயல்பாகவே சிறுகதைத் துறையில் மூழ்கினார். இன்று ஈழத்தின் முக்கியமாகச் சிறுகதை எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

இலங்கையில் அவர் சிறுகதை எழுதாத பத்திரிகை சஞ்சிகை எதுவுமே இருக்காது. அசுர சிறுகதைப் படைப்பாளி. சுமார் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் தொடாத கருவும் இருக்காது. அனுபவித்தது, அனுபவிக்காதது, கேள்விப்பட்டது யாவுமே காலத்தின் தேவை கருதியும், சமூக அக்கறை காரணமாகவும் இலக்கியப் படைப்புகளாக வாசகர்களை சென்றடைகின்றன. அவர்களுக்கு ஏதாவது சொல்ல முயல்கின்றன. இவ்வாறு அதிகம் எழுதினாலும் ஒவ்வொரு படைப்பும் காத்திரமான சமூகப் பிரச்ஞை உள்ள நல்ல படைப்புகளாகும்.

இவரது பெரும்பாலான படைப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் வேட்டை, இந்த மண், அப்பாவும் நானும் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தன.

நூல்கள்

ஆறு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன.
•    மீன்குஞ்சுகள்
•    தரைமீன்கள்
•    இது எங்கள் தேசம்
•    இனி வானம் வசப்படும்
•    ஒரு மணமகளைத் தெடி
•    நாம் பிறந்த மண்
ஆகியனவாகும்.

பிரதானமாக சிறுகதை எழுத்தாளரான போதும் இவரை ஒரு பல்துறை எழுத்தாளராகவே கொள்ள வேண்டும்.
•    சிறுகதை
•    கவிதை
•    குறுநாவல்
•    மருத்துவம்
•    விமர்சனம்
•    அறிவியல் கட்டுரைகள்
என இவரது எழுத்துப் பரப்பு விரிந்தது.

சுமார் 150 கவிதைகள், கட்டுரைகள் 100, குறுநாவல்கள் 10 என எழுதிக் குவித்துள்ளார்.
மேற் கூறிய 6 சிறுகதைத்தொகுப்புகள் உட்பட ஏலவே 12 நூல்களை வெளியிட்டுள்ளார். குறுநாவல் தொகுதிகள் 2, கவிதை 2, மருத்துவம் 1, அறிவியல் 1 என்பனவாகும். ‘நீ நடந்த பாதையிலே’, ‘துளித்தெழும் புதுச்செடிகள்’ கவிதைத் தொகுதிகள். ‘அது ஒரு அழகிய நிலாக்காலம்’, நெருப்பாற’ ஆகியன குறுநாவல் தொகுதிகளாகும்.

பரிசுகளின் மன்னன்

மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த சிறுகதைத் தொகுதியான ‘தரைமீன்கள்’ க்கு சாகித்தியப் பரிசு வாங்கியது முதல் விருதுகள் போட்டிப் பரிசுகள் இவரைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை சுமார் 33க்கு பரிசுகள் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

அவற்றிற்கு மகுடம் சேர்ப்பது போன்றது ‘சென்னை இலக்கிய சிந்தனை விருது’ ஆகும். இவரது முதல் சிறுகதைத்தொகுப்பான ‘மீன்குஞ்சுகள்’ தான் அந்தப் பெருமைக்குரிய பரிசைப் பெற்றது. அதேபோல எமது நாட்டின் பெருமைக்குரிய தகவம் பரிசினையும் தனது சிறுகதைக்குப் பெற்றிருக்கிறார்.

மீரா பதிப்பக வெளியீடான ‘எயிட்ஸ் இல்லாத உலகம்’ என்ற இவரது மருத்துவ நூல் வடமாகாண விருது பெற்றது. சுடர், ஜீவநதி, மல்லிகை, ஞானம் போன்ற பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் நடாத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அமரர் கனக செந்திநாதன் ஞபகார்த்தப் போட்டியில் இவரது குறுநாவல் ஒன்றும் பரிசைத் தட்டிக் கொண்டது.

முதலில் குறிப்பிட்ட 33 பரிசுகளில் 30 சிறுகதைகளுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய 3ம் கவிதைகளுக்காகும்.

‘உங்களுக்குக் கிடைத்த பரிசுகளில் பெரும்பாலானவை உங்கள் சிறுகதைகளுக்காகவே இருக்கிறன. அதுதான் உங்களுக்கு மிகவும் லாகவமான படைப்புத்துறை போல் இருக்கிறது. வாசகர்களும், சஞ்சிகை ஆசிரியர்களும் போட்டி நடுவர்களும் கூட அதைத்தான் உங்கள் முக்கிய படைப்புத்துறையாகக் கொள்கிறார்கள் எனத் தெரிகிறது. மற்றவர்கள் கருத்துக்கு மேலாக நீங்கள் உங்களது சிறுகதைகளில் எவற்றை உங்களது சிறந்த படைப்புகளாகக் கொள்கிறீர்கள்’ எனக் கேட்டேன்.

‘ஒவ்வொரு படைப்பையும் என்னளவில் ரசித்தே எழுதுகிறேன். ஆனாலும் கூட ‘அலியன் யானை’, ‘இந்த மண்’, ‘நான் சாகமாட்டேன்’, ‘அன்னை’, ‘வேட்டை’, ‘தாத்தா சுட்ட மண், ‘சுடலை ஞானம்’ ஆகியன எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகள்’ என்றார்.

முதலடியும் தடமும்

சென்ற தைப்பொங்கல் தித்தன்று 60வது வயதை எட்டி மணிவிழா ஆண்டில் நிற்கும் நண்பர் ச.மு 1976ல் அதாவது தனது 26வது வயதில் ‘கண்களின் வார்த்தைகள் தெரியாதோ’ என்ற சிறுகதையுடன் தினகரன் ஊடாக எழுத்துலகில் கால்வைக்கிறார்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தனது மானசிக இலக்கியக் குருவாகக் கொள்ளும் இவர் இலங்கையில் உள்ள எல்லாப் பத்திரிகளும் சஞ்சிகைகளும் தனது படைப்புகளுக்கு வரவேற்பு அளித்துள்ளதை மனநிறைவுடன் நினைவு கூறுகிறார். அதற்கு மேலான தீபம், கணையாழி, தாமரை, எரிமலை, செம்மலர் உட்பட பல இந்திய சஞ்சிகைகளிலும் தனது படைப்புகள் வெளிவந்ததை மகிழ்வோடு நினைவு கூர்கிறார்.

மல்லிகைக்கும் இவருக்கும் நிறையத் தொடர்புண்டு. அதனால்தான் இவரது முதல் தொகுதியான மீன்குஞ்சுகள் மல்லிகைப் பந்தல் வெளியீடாகப் பிரசுரமாயிற்று. மீண்டும் 2003ல் தரைமீன்கள் மல்லிகைப் பந்தல் ஊடாக வந்தது.

கருப்பொருள்

இவரது படைப்புகள் பெரும்பாலும் எமது நாளாந்த வாழ்வின் அனுபவங்களைப் பேசுகின்றன. சம்பவக் கோர்வைகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கும். உணர்வுகளின் பிசைவுகள் ஊடாக வாழ்வை தரிசிப்பதற்கு மேலாக அர்த்த புஸ்டியான நிகழ்வுகள் மனித வாழ்வின் மாறுபட்ட கோணங்களை எம் முன் நிறுத்தும்.

தனது எழுத்துலகின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் வர்க்க முரண்பாடுகள், சாதீயம், சீதனம், பெண்ணியம் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருளாகக் கொண்டிருந்தார்.

இருந்தபோதும் இனப் பிரச்சனை தீவிரம் அடைந்து போர் முனைப்புப் பெற்ற போது போர்க்காலச் சிறுகதைகள் பலவற்றை மிகவும் யதாரத்த பூர்வமாகப் படைத்துள்ளார்.

போரினால் மிகவும் பாதிப்படைந்த மக்களிடையே வன்னிப் பகுதியில் மருத்துவராக நீண்டகாலம் உணர்வுபூர்வமாகப் பணியாற்றியதால் இவருக்குக் கிட்டிய களநிலை அனுபவங்கள் இவரது படைப்புகளுக்கு உண்மைத் தன்மையைக் கொடுத்துள்ளன.

களங்கள்

வன்னி பிரதேச மக்களது வாழ்வின் ஊறுகள் இவற்றின் படைப்புகள் பலவற்றின் அடிநாதமா அமைகின்றன. அதே போல தான் பிறந்த வடமராட்சி பிரதேசத்தின் மண்வாசனை பிற பல படைப்புகளில் அற்புதமாக விழுந்துள்ளன. சிறு வயதில் தான் விளையாடித் திரிந்த கரணவாய் கிழக்குப் பிரதேசம், நீந்தி விளையாடிய உச்சிலா கோயில் குளம் ஆகியன ‘இந்த மண்’ சிறுகதையில் அழகிய சித்திரமாக வார்க்கப்பட்டுள்ளன. அவை எம்மையும் எமது இளமைக்காலத்தில் மூழ்க்க வைக்கும் வல்லமை கொண்டவை.

அதேபோல மலையகத்தில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. அவரது முதல் சிறுகதை இவர் கம்பளை வைத்தியசாலையில் பணியாற்றிய போது எழுதியுள்ளார். அதன் பின்னரும் அவ்வப்போது மலையகப் பிரச்சனைகள் பற்றி இடையிடையே படைப்புகளைச் செய்துள்ளார். மறுபடியும் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் குறுகிய காலம் மலையக கொட்டகலையில் பணியாற்றிய போது அந்த மக்களின் பிரச்சனைகளை கூர்ந்து அவதானித்துள்ளார். அனுபவபூர்வமாக உணர்ந்தவற்றை படைப்பாக்கம் செய்துள்ளார்.

இப்பொழுது மலையக பெருந்தோட்ட மக்களின்  வாழ்வைச் சித்தரிக்கும் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியாகியுள்ளது. மலையகத்தைச் சாராத ஞானசேகரன், மறைந்த நண்பர் புலோலியூர் சதாசிவம் ஆகியோரைத் தொடர்ந்து அப்பிரதேச வாழ்வை இலக்கியமாக்கியவர்களில் இவரும் முக்கியமானவராகிறார்.


சினிமா

இவருக்கு சினிமாவும் மிகவும் ஆர்வமுள்ள மற்றொரு துறையாகும். முக்கியமாக தமிழ் சினிமாவின் வரலாறு தெரிந்தவர். பல விடயங்களை நுணுக்கமாக நினைவில் வைத்திருப்பவர். அவற்றின் இன்றைய போக்குகளும் புரிந்தவர். நான் மிகக் குறைவாகவே அதுவும் தேர்ந்தெடுத்த சில படங்களையே பார்ப்பவன். இதனால் இவர் எழுதும் சினிமா விமர்சனங்களை நான் ஆர்வத்தோடு படிப்பதுண்டு.

மணிவிழாக் காணும் நண்பர் முருகானந்தனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சிறந்த மருத்துவப் பணியுடனும் இலக்கியப் பங்களிப்புடனும் நிடூழி வாழ வாழ்த்துகிறேன்.

இவரது மனைவி சந்திரகாந்தா முருகானந்தனும் இப்பொழுது படைப்புலகில் அதிகம் பேசப்படுகிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வீரகேசரி வார வெளியீட்டிலும், பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் வெளியான எனது கட்டுரையின் மீள்பதிவு.

Read Full Post »

>பொங்கல் எமது பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது. தைப்பொங்கல் போலவே பலருக்கும் சித்திரை வருடப்பிறப்பும் மற்றொரு பொங்கலாகும்.
  
பொங்கல் 

அதற்கு மேலே புதூர் நாகதம்பிரான் பொங்கல், நாச்சிமார் பொங்கல், பண்டித்தலைச்சி அம்மன் பொங்கல், வற்றாப்பளை அம்மன் பொங்கல், மந்திகை கண்ணகி அம்மன் பொங்கல் என ஊருக்கு ஊர் வருடா வருடம் வேறு பல பொங்கல்களுக்கும் குறைவில்லை.

சிங்களவர்களுக்கு திருநாள் என்றால் கிரிபத் என்பது போல எங்களுக்குப் பொங்கல் எனலாம்.

சர்க்கரைப் பொங்கல், கற்கண்டுப் பொங்கல், வெண்பொங்கல் எனப் பலவகைப்படும்.

பொங்கலில் என்ன சேர்த்து இருக்கிறார்கள்?

பச்சை அரிசியுடன் பசுப்பால் அல்லது தேங்காய்ப் பால், இவற்றுடன் வறுத்த பயறு, ஏலக்காய், நெய் ஆகியனவும் சேர்த்துக் கொள்வார்கள்.

கஜீ – முந்திரிப் பரும்பு (Cashew Nut)

அவற்றிற்கு மேல் முக்கியமான பொருள் ஒன்று சேர்ப்பார்கள். அதுதான் கஜூ எனப்படும் முந்திரிப் பருப்பு. சிலர் முந்திரிப் பருப்புக்குப் பதிலாக மணிலாப் பருப்பு சேர்ப்பார்கள்.

கஜூ என்பது ஒரு விதை.

விதைகள் எமது உணவின் ஒரு ஆரோக்கியமான அம்சமாகும். அவை எமது இருதயத்திற்கு நன்மை பயப்பவையாகும். எந்த விதை என்றிலை எல்லா விதைகளுமே போசாக்குப் பொருட்களை அடர்த்தியாகக் கொண்டுள்ளன.

நீங்கள் ஒரு இருதய நோயாளியாயின் வேறு நொறுக்குத் தீனிகள் தின்பதை விட விதைகளை உண்பது நன்மை பயக்கும்.

விதைகளின் நல்ல பயன்கள்

விதைகள் எவ்வாறு இருதய நோயாளர்களுக்கு நன்மை செய்கின்றன?

கெட்ட கொலஸ்டரோலைக் குறைக்கும்

எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலில் LDL என்றொரு கூறு உண்டு. இதனை கெட்ட கொலஸ்டரோல் என்பர். ஏனெனில் இது குருதிக் குழாய்களில் படிந்து குருதிச் சுற்றோட்டத்தை குறையச் செய்யும். அதனால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன.

தமது உணவின் ஒரு கூறாக விதைகளை தினமும் உண்பவர்களுக்கு LDL கொலஸ்டரோல் அளவு குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்களை விதைகள் குறைக்கின்றன எனலாம்.

குருதி உறைதலைக் குறைக்கும்

அதேபோல குருதி உறைதலைக் குறைக்கும் ஆற்றலும் விதைகளுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இருதயத்தின் குருதிக் குழாய்களில் இரத்தம் உறைவதால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் குருதிக் குழாய்களில் இரத்தம் உறைவதால் பக்கவாதம்

.ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(Stroke) ஏற்படுவதை நாம் அறிவோம். 
 
எனவே உயிராபத்தை ஏற்படுத்தும் இந்நோய்களை விதைகள் குறைப்பதாகக் கொள்ளலாம்

குருதிக் குழாய்களின் உட்சுவரில் உள்ள கல அமைப்பை .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(endothelium) என்போம். இந்த என்டோதிலியம் ஆரோக்கியமாக இருந்தாலும் மேற்கூறிய மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். விதைகளில் உள்ள போசாக்குப் பொருட்கள் .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(endothelium function) அதை நல்நிலையில் பேணுவதாகவும் தெரிகிறது.

விதைகளில் உள்ள எந்தப் பொருட்கள் காரணமாகின்றன?

விதைகளில் உள்ள பல் விற்றமின்களும், நல்ல கொழுப்புகளும் நார்ப் பொருள் போன்ற பலவும் ஆரோக்கியத்திற்கு நல்லன.

நிரம்பாத கொழுப்பு அமிலங்கள்

விதைகளில் நல்ல கொழுப்பு அமிலங்கள் .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(Monounsaturated and polyunsaturated fats) அதிகளவு இருக்கின்றன. இவையே குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோலைக் குறைப்பதாக நம்பப்படுகிறது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

ஒமேகா கொழுப்பு அமிலம் .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(Omega-3 fatty acids) என்பது எமது இருதயத்திற்கு நல்லது. 

மாரடைப்பு வருவதைக் குறைப்பதுடன், 
இருதயத்தின் துடிப்பு லயத்தைப் .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(Heart rhythms) பேணுவதற்கும் மிகவும் உதவுகிறது. 
 
இது பொதுவாக ஆழ்கடல் மீன்களில் இருக்கும். தாவர வகைகளில் குறைவு. ஆயினும் விதைகளில் இருப்பதால், மீன் சாப்பிடாதவர்களுக்கு உதவும்.

நார்ப் பொருள்

விதைகளில் நார்ப் பொருள் குறிப்படத்தக்க அளவில் உண்டு. நார்ப் பொருட்களானது எமது வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் தேவையற்ற மேலதிக உணவு உண்பதைத் தவிர்க்க உதவுகிறது. அத்துடன் கொலஸ்டரோல் நீரிழிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

விற்றமின் ஈ .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}

(Vitamin E)

பலரும் இப்பொழுது விற்றமின் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இது இரத்தக் குழாய்கள் தடிப்படைந்து மாரடைப்பு வருவதைத் தடுக்கும் என நம்பப்பட்டதே காரணம். ஆயினும் இயற்கையாக உணவுகளிலிருந்து கிடைக்கும் விற்றமின் ஈ மட்டுமே இவ்வாறு உதவுகிறது. செயற்கையாக மாத்திரைகளால் கிடைப்பவற்றிலிருந்து அல்ல. விதைகளில் விற்றமின் ஈ கிடைக்கிறது.

ஸ்டெரோல்
விதைகளில் ஸ்டெரோல் .ExternalClass p.ecxMsoNormal, .ExternalClass li.ecxMsoNormal, .ExternalClass div.ecxMsoNormal{margin-bottom:.0001pt;font-size:12.0pt;font-family:’Times New Roman’,’serif’;}.ExternalClass .ecxMsoChpDefault{font-size:10.0pt;}@page Section1{size:8.5in 11.0in;}.ExternalClass div.ecxSection1{page:Section1;}(Plant sterols) என்ற பொருள் கிடைக்கிறது. இது ஏனைய பல தாவர உணவுகளிலும் கிடைக்கிறது. இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவை இதுவும் குறைக்க உதவுகிறது.

எவ்வாறு உண்பது?

விதைகளை வறுத்துச் சாப்பிடலாம். ஆனால் எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவது கூடாது.

விதைகளில் அதிக அளவு கொழுப்பு இருக்கிறது. உண்மையில் 80% அளவுக்கு இருக்கிறது. இது பெரும்பாலும் நல்ல கொழுப்பு என்ற போதும், கொழுப்பு காரணமான அதிக கலோரி இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே விதைகள் நல்லவையான போதும் அளவோடு உண்பது அவசியம். இறைச்சி, பால், பட்டர், முட்டை போன்றவற்றிலிருந்து பெறும் கொழுப்பிற்கு மாற்றீடாக அதை விதைகளிலிருந்து பெற்றால் நல்லது என்பேன்.

ஒரு சிறங்கை அளவு(சுமார் 45கிராம்) பாதாம் பருப்பு, கச்சான், பிட்சா பருப்பு, பைன்நட், வோல்நட், பீகன்ஸ், போன்ற விதைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக் குறையும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அதிகாரசபை (FDA) கூறுகிறது. 

 
ஆயினும் இது ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் ஓரு அங்கமாக இருக்க வேண்டும். ஏனைய பால் மற்றும் இறைச்சி வகை கொழுப்புகளைக் கட்டுப்படுத்தாது வெறுமனை விதைகளைச் சாப்பிடுவதால் பயனேதும் இல்லை.

எந்த விதை நல்ல விதை

விதைகளில் எந்த விதை நல்லது என்று கேட்டால் எல்லாமே நல்லதுதான்.

கச்சான் என்பது உண்மையில் விதையில்லை. அது பயறு, பயிற்றை போல ஒரு அவரை இன உணவுதான். ஆயினும் ஒப்பீட்டு ரீதியில் பாரக்கும் போது அதுவும் ஆரோக்கியமானதே.

ஆயினும் தேங்காய் Coconut என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட போதும் அது பழமே அன்றி விதையல்ல.

அதில் இருதயத்திற்கு ஆரோக்கியமான நன்மைகள் எதுவும் இல்லை. எனவே தேங்காய், தேங்காயப் பால், தேங்காயெண்ணெய் போன்றவற்றை குறைவாகவே உபயோகிப்பது நல்லது என பெரும்பாலும் நம்பப்படுகிறது.

ஆனால் விஞ்ஞான ரீதியாக இதனை மறுதலிப்பவர்களும் உளர்.

சரி மீண்டும் பொங்கலுக்கு வருவோம். பொங்கல் ஆரோக்கியமான உணவா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 
 
கஜூ, பயறு போன்றவை இருந்தபோதும் சர்க்கரை, கற்கண்டு, பசுப்பால், தேங்காய்ப்பால், நெய் போன்றவை அதிகமாகச் சேர்க்கப்படுவதால் ஆரோக்கிய உணவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் கொழுப்பும் இனிப்பும் அதிகம் உண்டு.

ஆயினும் முற்றாகத் தவிர்க்க வேண்டியதும் இல்லை.

பண்டிகை உணவாக விசேட தினங்களில் மட்டும் அளவோடு சாப்பிட்டால் ஆபத்து அதிகமில்லை.

வெண்பொங்கலை பல காய்கறிகளும் சேர்த்த சாம்பாருடன் சாப்பிடுவது மிகவும் நல்லது.  

 
வெண்பொங்கலுக்கு தேங்காய்ப் பால் சேர்க்கப்பட்டாலும் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருள்கள் அவற்றை ஆறுதலாகச் சமிபாடடையச் செய்வதால் ஓரளவு சமடையச் செய்கின்றன. அத்துடன் விற்றமின்களும் அதிகம் உண்டு.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

இருக்கிறம் சஞ்சிகையிலும், பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.


0.0.0.0.0.0.0

Read Full Post »

>அண்மையில் எனது ஹாய் நலமா? இணைய புளக்கில் ஒரு படம் போட்டிருந்தேன். இளைஞனும் யுவதியும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் படம். அது தொடர்பாக எனக்குப் சில ஈ மெயில்கள் ஒரு சில பின்னூட்டுகளும் கேள்விகளாக வந்திருந்தன.

காரணம் வேறொன்றும் இல்லை நான் அதற்குக் கொடுத்த விளக்க வாசகம்தான். அது பலரையும் யோசிக்க வைத்துவிட்டது.

எதிர்மாறாக மற்றொரு மரியாதைக்குரிய மனிதர் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்.
அவரது கையில் ஒரு மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை
ரிப்போட் இருந்தது.
நல்ல காலம் இது நெகட்டிவ் ஆக இருந்தது.

இரண்டுமே எயிட்ஸ் பற்றியவைதான்.

அவருக்கு மணஉறவுக்கு அப்பால் ஒரு பெண் தொடர்பு இருந்தது. அவளின் கணவன் ஊரோடு இல்லாதது இவருக்கு வாசியாகிவிட்டது.
இடையிடையே தாகம் தணித்துக் கொள்வார்.

ஆயினும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஆணுறை உபயோகிக்கத் தவறுவதேயில்லை.

நண்பர் ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். முத்தமிடும் போதும் தொற்றுமென!

“நெறிக்கட்டிக் காய்ச்சல் மட்டுமின்றி எயிட்ஸ் நோயும் முத்தமிடுவதால் தொற்றும்” என இணையப் படத்தில் வாசகம் எழுதியதற்காகவே என்னிடம் சந்தேகம் தீர்க்கப் பலர் தொடர்பு கொண்டார்கள்.

அக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக்குங்கள்

உண்மையில் முத்தமிடுவதால் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி (HIV) தொற்றமா?

அதற்கு விடை கூறுவதற்கு முதல் HIV எவ்வாறெல்லாம் தொற்றும் என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக முன்று விடயங்கள் பாதகமாக இருக்க வேண்டும்.

•    HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும்.
•    அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும். வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.
•    வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு கிருமி கடத்தப்பட வேண்டும்.
மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண்டும்.

H1N1 புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.

ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம் வாழாதிருந்து மனிதனைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம இச்சையால் நோயைத் தேட முன்னிற்கிறான்.

HIV கிருமி தொற்றும் முக்கிய வழிமுறைகளாவன.

1.    நோயுற்றவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்
2.    நோயுற்றவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவுவதற்குக் காரணமாகிறது.
3.    தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்திலும் பின் பாலூட்டுவதாலும்.
4.    இரத்த மாற்றீடு முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா

இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.

ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.

இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இதனால்தான் பலரும் என்னிடம் சந்தேகம் எழுப்பினார்கள்.

எச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?

எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.

இப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நோயுள்ளவர் தனது நோயானது பங்காளிக்குத் தொற்றக் கூடாது என்பதற்காக அல்லது தனது வாய் நாற்றத்தை மறைப்பதற்காக,
உறவுக்கு முன் குளித்து தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறார்.
அத்துடன் வாயையும் பிரஸ் பண்ணிக் கொள்கிறார்.

ஆனால் அவருக்கு முரசு கரைதல் நோயிருக்கிறது.
அதனால் பிரஸ் பண்ணும்போது சிறிது இரத்தம் கசிகிறது.
உடனடியாகவே உறவுக்குச் செல்கிறார்.

அவரது பங்காளிக்கும் முரசு கரைகிறது. அல்லது வாய்ப் புண் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV கிருமி மற்றவரது புண் ஊடாகத் தொற்றி விடும்.

உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.

HIV தொற்றும் முறைகள் பற்றி மேலும் விபரமாக அறிய  இங்கே கிளிக்குங்கள்

மற்றொரு சாத்தியத்தையும் கவனியுங்கள். நோயுற்றவர் உறவின் போது உணர்ச்சி வேகத்தில் மற்றவரது உதட்டைக் கடித்துவிடுகிறார்.
நுண்ணிய சிறுகாயம்தான்,
ஆனால் அதன் ஊடாக கிருமி பரவிவிடலாம் அல்லவா?

இவ்வாறு உறவின் போதல்ல, ஆனால் கோபத்தில் கையில் கடித்ததால் HIV தொற்றியதற்கும் ஆதாரம் உண்டு.

மற்றொருவர் வந்தார்.
அவர் அடிக்கடி மேயப் போவார்.
ஆனால் அவரும் ஆணுறை அணியத் தவறுவதேயில்லை.
ஆனால் அவருக்கு மற்றொரு பழக்கம் இருந்தது.

அதுதான் வாய்ப் புணர்ச்சி. மிக ஆபத்தானது.
நல்ல காலம்! இரத்தப் பரிசோதனையில் ஏற்கனவே தொற்றியிருக்கவில்லை.

விளக்கி அனுப்பியதால் பிறகு அவதானமாக இருந்திருப்பார் என நம்பலாம்.

பாலுறவால் அன்றி வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப் பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள் வரை தாமதமாகலாம். சிலருக்கு 3 மாதங்களுக்கு மேலும் செல்வதுண்டு. அவ்வளவு காலமும் நிச்சமான முடிவு தெரியாது பதற்றத்திலும் பயத்திலும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி உயிர் போய்விடுவதுண்டு.

இருந்தபோதும், பலரும் பயப்படுவதுபோல
தொட்டுப் பேசுவதாலோ,
அருகில் இருப்பதாலோ,
உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொளவதாலோ HIV தொற்றுவதில்லை.

காற்றினாலும் நீரினாலும் தொற்றுவதில்லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.

இவ்வாறேல்லாம் இலகுவில் இந்த நோய் தொற்றாமலிருக்க இயற்கை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. எமக்குக் கிட்டிய வரம் போன்றது. ஆனால் அடங்காத இச்சையால் முறை தவறி நடந்து தேடித் தேடி நோயைத் தொற்ற வைக்க முயல்கிறோம்.

முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற ஆரம்பக் கேள்விக்கு வருவோம்.

“உலகில் ஒரே ஒரு தடவைதான் இவ்வாறு தொற்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே நம்பத்தகுந்தது அல்ல என்றோ அல்லது அது போதிய ஆதாரம் அல்ல” என்று நீங்கள் கருதினால் உங்கள் தேர்வை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

சந்தோசமாக, ஆசைப்பட்டவருக்கு,
விரும்பியவருக்கு எல்லாம்
வாயால் ஆழ்
முத்தம் கொடுங்கள்.
கொடுத்துக் கொண்டேயிருங்கள்.

அதிர்ஸ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.

இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.

மேற் கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்ஐவீ தொற்றியிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட செல்லலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- இருக்கிறம் – 01-15 ஏப்ரல் 2010.

0.0.0.0.0.0

Read Full Post »

>புகைத்தலை கைவிட சில ஆலோசனைகள்.

புகைத்தலைக் கைவிடும்படி மருத்துவர் நோயாளிக்கு ஆலோசனை கூறிக் கொண்டிருந்தார்.

புகைத்தலின் தீய விளைவுகளை விளக்க ஆரம்பித்தார்.

நோயாளிக்கு கேட்டுக் கொண்டிருப்பதில் இஷ்டம் இல்லை.  பேச்சை நிறுத்த எண்ணினார்.

எனவே  “இறுதியாக என்ன நடக்கும்” எனக் கேட்டு வைத்தார்.

“சவப் பெட்டி”

என்றார் மருத்துவர்.

000000000

“புகைத்தலை விட வேண்டும் என எத்தனையோ தடவைகள் முயற்சித்துவிட்டேன். ஆனால் முடியவில்லை” என ஒருவர் கவலைப்பட்டார்.

“ஆனால் நீ பட்ச்சை (Patch- Nicotine Patch) முயற்சித்துப் பார்த்தாயா” நண்பர் ஆலோசனை கூறினார்.

” பரீட்சிக்கவில்லை. ஆனால் வேலை செய்யும் என்று நான் நம்பவில்லை”

“நிச்சயம் வேலை செய்யும். அதை வாய்க்குக் குறுக்காக ஒட்டினால்..”  என்றார் நண்பர்.

  0000000

000000000

0.0.0.0.0.0.0

0.0.0.0.0.0

0.0.0.0.0.0.0

புகைப்பவன் வாழ்வு புகைந்து போகும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

0.0.0.0.0.0

Read Full Post »

>சத்திரசிகிச்சை நிபுணர்கள் சிலர் கலந்துரையாடல் அது.

எத்தகைய நோயாளிகள் சத்திரசிகிச்சை செய்வதற்கு இலகுவானவர்கள் என்பது பற்றி தம்மிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“எனக்கு எக்கவுண்டன்ட் நோயாளிகளை சத்திரசிகிச்சை செய்யப் பிடிக்கும். சத்திரசிகிச்சை மேசையில் அவர்களை வெட்டித் திறக்கும் போது அவர்களது உள்ளுறுப்புகள் யாவும் எண்ணிக்கை இடப்பட்டு ஒழுங்காக இருக்கும்” என்றார் முதல் நிபுணர்.

“ஆனால் நீங்கள் எலக்ரீசியனை சத்திரசிகிச்சை செய்யவில்லைப் போலிருக்கிறது. நம்பர் ஏன்? அவர்களது உறுப்புகள் யாவும் வெவ்வேறு நிறங்களால் இலகுவாகப் பிரித்தறியும் வகையில் இருக்கும்” என்றார் இரண்டாமவர்.

மூன்றாவது சத்திரசிகிச்சை நிபுணருக்கு பொறுக்க முடியவில்லை.

“நீங்கள் என்ன மடைத்தனமாகக் கதைகிறீர்கள். நூலகர்களுக்கு இணை கிடைக்கவே கிடையாது. ஒவ்வொரு உறுப்பும் எழுத்து ஒழுங்கில் (Alphabetical Order) தெளிவாக இருக்கும்.”

‘கட்டடப் பணியாளர்கள்தான் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் புரிந்தணர்வு மிக்கவர்கள். சத்திரசிகிச்சை முடியும்போது சில உறுப்புகள் மிஞ்சிக் கிடந்தால் அதை தவறாக எடுக்க மாட்டார்கள். புரிந்து கொள்வார்கள். முன்னர் சொன்னதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டாலும் விளங்கிக் கொள்வார்கள்.’ என்றார் மற்றவர்.

ஐந்தாமவர் தனது கருத்தை வெளிப்படுத்தியவுடன் மற்றவர்கள் எல்லாம் வாயடங்க வேண்டியதாயிற்று.

“அரசியல்வாதிகளைப் போல சத்திரசிகிச்சைக்கு இலகுவானவர்கள் ஒருவருமே இருக்க முடியாது…
… சத்திரசிகிச்சை கட்டிலில் கிடத்தி அவர்களைத் திறந்தால்
அங்கு உணவுக் குழாய் இருக்காது.
விதைகள் கிடையாது.
இருதயம் இருக்கவே இருக்காது.
முள்ளந்தண்டின் சுவடே காணப்படாது.
மண்டை ஓட்டைத் திறந்தால் அங்கு மூளை இருந்த அறிகுறியே இருக்காது.

இரண்டே இரண்டு உறுப்புகள் மட்டும் ஓயாது இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஒன்று வாய்.
மற்றது குதம்.

சத்திரசிகிச்சையின் போது ஏதாவது தவறிழைத்தாலும் பயமில்லை.

ஏனெனில் அவர்களது வாயும் குதமும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடு செய்யக் கூடியவையாகும்.”

இது சத்திரசிகிச்சை நிபுணர்களின் தேர்வு.

தேர்தல் விரைந்து வருகிறது.

தேர்தல் இருக்கவே இருக்கிறது.

ஆனால் தேர்தலில் தேர்ந்தெடுக்க உங்களுக்குத் தேர்வு இல்லை.

எல்லா வேட்பாளர்களுமே ஒரே ரகம்தான்.

கடைசி சத்திரசிகிச்சை நிபுணருக்கு கிடைத்த மாதிரி.

(இணையத்தில் படித்ததற்கு சற்று கைச்சரக்கு சேர்த்தது)

நன்றி:- ஞானம் ஏப்ரல் 2010- 119

Read Full Post »

>தொலைக்காட்சி எனது தேர்வுக்குரிய பொழுது போக்காக என்றுமே இருந்ததில்லை.
ஆயினும் முன்னொரு காலத்தில் பாலு மகேந்திராவின் கதைநேரம் ஆர்வத்திற்குரியதாக இருந்தது.

இப்பொழுது ஜெயா ரி.வீயில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியை இயன்றவரை தப்பவிடுவதில்லை.
படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க முடியும் என்பதற்கு மேலாக படம், அதன் பின்னணி பற்றிய சுவார்ஸமான தகவல்களை சுஹாசினி தருவார்.

வேலையை இயன்றவரை நேரத்திற்கு முடித்துக்கொண்டு வந்து மதிய உணவுடன் நிகழ்ச்சியைப் பார்ப்பது பிடிக்கும். வழமையாக தமிழ்ப் படங்களையே பேசி வந்த சுஹாசினி இப்பொழுது இந்திப் படங்கள், உலக சினிமா என்று வலம் வர ஆரம்பித்ததும் இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது.

அண்மையில் அவர் ஒரு குறும் படத்தையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அதிலிருந்து சில காட்சிகளையும் காண்பித்தார். மிகுந்த கலைநேர்த்தி உள்ள படம். அதற்கு மேலாக அதன் சமூகப் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அது என்னைக் கவர்ந்ததற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு
நண்பர் பா.இரகுவரன் முயற்சியால்
‘செட்டி வர்த்தகன்’ என்ற
வட்டக்களரிக் கூத்து
பருத்தித்துறை து.குலசிங்கத்தின்
வீட்டின் பெரிய முற்றத்தில் அரங்கேற்றப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக சமூகம் உட்பட பல அறிஞர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டனர். அதனைச் செயற்படுத்திய அறிவோர் கூடலில் நானும் முக்கிய அங்கத்தவராக இருந்தேன்.

சுஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் சில காட்சிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. முழுக் குறும்படத்தையும் பார்க்க முடியாத நிலை. இங்கு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கவலை ஏற்பட்டது.

நேற்று இரவு திடீரென அதிர்ஸ்டக் காற்று என் பக்கம் விசியது. இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த நான் YouTube ல் சென்று தமிழ்க்குறும் படங்கள் எனத் தட்டியதும் கர்ண மோட்சம் முதல் தெரிவாக வந்தது.

இந்திய அரசின் தேசிய விருது முதல், தமிழக அரசின் சிறந்த குறும்பட விருது, கனடாவின் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது என 60க்கு மேற்பட்ட விருதுகள் பெற்ற குறும் படம் இதுவாகும்.

கேரளா சர்வதேச திரைப்பட விழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் பரிசுகளைப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை இரண்டு பாகங்களாக ஓடுகிறது. லுழரவுரடிந ல்.  பரிசுகள் பெற்ற காரணத்திற்காக  மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது .

கோவிந்தன் என்ற ஒரு கூத்துக் கலைஞனினதும் அவனினது 10 வயது மகன் கதிரின் வாழ்வின் ஒரு நாள் நிகழ்வையும் அற்புத காட்சியாகப் படமாக்கியுள்ளார்கள்.

பட்டணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கூத்து நடத்துவதற்காக வருகிறார் மகனுடன். மகனுக்கு கிரிக்கட் பட் வாங்கும் ஆசை. கூத்து ஆடிப் பெறும் பணத்தில் வாங்கித் தருவதாகச் சொல்லி மகனையும் அழைத்து வந்துள்ளார்.
வந்த இடத்தில் பாடசாலை பூட்டிக் கிடக்கிறது. பாடசாலை இயக்குனர் இறந்துவிட்டதால் பூட்டிக் கிடக்கிறதாம்.

கையில் காசில்லை. பசியில் இருக்கும் மகனுக்கு சாப்பிடக் கொடுக்க முடியவில்லை. ‘ஒன்னரை ரூபாவிற்கு’ ஒரே ஒரு இட்லி வாங்கிக் கொடுத்து விட்டு குடிக்கத் தண்ணீர் கேட்கப் போக கடைக்காரனும் அவமதித்துவிடுகிறான்.

கிட்டத்தட்ட மறைந்தொழிந்து போகும் நிலையில் இருக்கிறது இந்த கூத்துக் கலை. எமது பாரம்பரிய கலை வடிவை இன்று மட்டும் காப்பாற்றி வருகிற அந்தக் கலைஞர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

வீதியில் வீசி எறிந்து கிடக்கும் காலி பெப்ஸி டின்னை எடுத்து அதில் மீந்திருக்கும் திரவத்தைக் குடிக்க முயல்வதைக் காட்டுவதன் மூலம் அவர்களின் வறுமையின் தீவிரத்தை சிறப்பாக உணர்த்திவிடுகிறார்.

ஆனால் கூத்துக் கலைஞரோ கொடை வள்ளலாகிய கர்ணன் வேடம் போடுபவர்.

அந்த வேடத்திலேயே படம் முழுவதும் வருகிறார்.

“அஞ்சை பஞ்சைகள்
பஞ்சம் பறந்தோட
தானம் செய்தேன்.
தானம் செய்தேன்…”

பாரெங்கும் கீர்த்தி படைத்தேன்…’ எனப் பாடிக் கொண்டு அறிமுகமாகிறார். அதாவது கர்ணன் பாடுவதாக.

எஸ்.முரளி மனோகர் கதை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த இவர் தற்போது லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பண்யாற்றுவதாக இணையத்தில் படித்தேன்.

கதை, வசனங்களை எழுதியவர் பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
நெடுங்குருதி, கதா விலாசம் விரும்பிப் படித்த கட்டுரைத் தொடர்.
உப பாண்டவம் இது பாரதத்தின் இந்திய மனத்தின் தொன்மை நினைவுகளை அந்த மகா காவியத்தின் இடைவெளிகளை நிரப்புவதாக செய்யப்பட்ட நாவல் என சிலாகிக்கப்பட்டது.

முக்கிய பாத்திரமான கூத்துக் கலைஞர் பாத்திரத்தில் நடிப்பவர் கூத்துப் பட்டறையில் பயற்சி பெற்ற ஜார்ஜ் ஆகும். கனமான ஆடைகள்;, முகத்தை மூடி மறைக்கும் வர்ணங்கள். இவை யாவற்றையும் தாண்டி அவரது நடிப்பு அற்புதமாக வெளிப்படுகிறது. நல்ல நடிப்பு.

மனதைத் தொடும் கதை. முடிவு ஒரு விதத்தில் மனதை அலைக்கழிக்கிறது. மற்றொரு விதத்தில் புதிய தலைமுறையில் சிலராவது இதில் ஆர்வம் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அருமையான படப்பிடிப்பு. ஒளிப்பதிவு ஜி.சிவராமன். ஒலிப்பதிவு ஜி.தமுத்துராமன்.

படத்தின் இசை அமைப்பாளரால் இரா.பிரபாகர். தமிழ்துறைப் பேராசிரியர்.

“அப்பெல்லாம் ரா ராவா ஜனங்க முழிச்சிருந்து பாப்பாங்க.
இப்பெல்லாம் யார் கூத்து பார்க்கிறாங்க. எல்லாத்தையும் ரீவி பெட்டி முழுங்கிச்சிடு.”

“18 வருடங்களாக குருவிடம் கூத்துக் கற்றது”

“எத்தனையோ பேரு உசுரைக் குடுத்து வளர்த்த கலை”

போன்ற செய்திகளைப் பேச்சொடு பேச்சாக சொல்லிச் செல்வதன் ஊடாக அந்தக் கலையின் கடந்த காலப் பெருமைகளை வெளிப்படுத்துகிறது

கொடுத்துக் கொடுத்தே கை சிவந்த ‘கர்ணன்’. கடையில் வேலை செய்யும் குட்டிப் பெண் இவனின் பரிதாபத்தைப் பார்த்துக் கொடுத்த இட்லியை பிச்சைபோல வாங்கிச் சாப்பிடும்போது மனதைப் பிசைகிறது.

கொடி கட்டிப் பறந்த ஒரு கலை அழிந்து போகவிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்பதை எண்ணும்போது குற்ற உணர்வு தீயாக எரிக்கிறது.

இன்னும் எத்தனை அரிய பெரிய பொக்கிசங்களை எல்லாம் எதிர்காலத்தில் தொலைத்துவிட்டு கையைப் பிசைந்து நிற்கப் போகிறோம்.

தப்பவிடக் கூடாத குறும் படம்.

குறும்படத்தின் முதல் பாகத்தைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

குறும்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி 04.04.2010.

Read Full Post »

>நகர்புற மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் ரீவி பார்ப்பது முக்கிய பொழுது போக்காகிவிட்டது.

“நாள் முழுவதும் ரீவி பார்க்கிறதுதான் இவளுக்கு வேலை”
என்று குமுறுகிற ஆண்களும் கூட
வேலையால் வந்த பின்
விளையாட்டு, நடைப்பயிற்சி அல்லது நீச்சல்
என எந்த உடல் பயிற்சியிலும் ஈடுபடாது ரீவி அல்லது கொப்பியூட்டர் முன் அமர்ந்துவிடுகிறார்கள்.

உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதால் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். உடற் பயிற்சியின் நன்மைகள் பற்றி உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் செய்யப்பட்டு விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்டும் இருக்கிறது.

ஆனால் உடலுழைப்பு அற்று, உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லா வேலைகளையும் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகள் குறைவு.

அண்மையில் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் அதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். Australian Diabetes, Obesity and lifestyle Study (AusDiab)  எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வானது 8800 பேர்களை உள்ளடக்கியதாகும்.

டெலிவிசன் பார்ப்பது அல்லது அது போன்ற தொடர்ச்சியாக ஒரே விதமான உடலுழைப்பற்ற பொழுது போக்கில் இருப்பதற்கும், இருதய நோய்கள் மற்றும் ஏனைய காரணங்களினாலான மரணத்திற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என அறிவதற்கான 6.6 வருடகாலமாகச் செய்யப்பட்ட  ஆய்வு அது.

வயது, பால், இடுப்புச் சுற்றளவு, உடற்பயிற்சி ஆகியவற்றால் ஏற்படக் கூடிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்தார்கள்.

அதன் பின்னரும் எக்காரணத்திதாலும் ஏற்படக் கூடிய மரணம், இருதய நோய்களால் ஏற்படக் கூடிய மரணம், புற்றுநோய்களால் ஏற்படக் கூடிய மரணம் ஆகியன ரீவீ பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப அதிகரிப்பதை ஆய்வு உறுதி செய்தது. ஆயினும் புற்றுநோய் அதிகரிப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே அதிகரித்திருந்தது.

தினமும் இரண்டு மணிநேரத்திற்கு குறைவாக ரீவி பார்ப்பவர்களுடன் தினமும்,

2-4 மணிநேரம் ரீவி பார்ப்பவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது எந்த நோய்களினாலும் மரணிப்பதற்கான சாத்தியம் 1.13 சதவிகிதத்தாலும்,

4 மணிநேரத்தற்கு அதிகமாக பார்ப்பவர்களுக்கு 1.46 சதவிகிதத்தாலும் அதிகரித்தது.

மேற்கூறிய நேர அளவுகளில் ரீவி பார்ப்பதால் இருதய நோய்களால் மரணிப்பதற்கான சாத்தியம் முறையே 1.19 மற்றும் 1.8 சதவிகிதத்தினால் அதிகரித்தது.

ஆனால் நேரம் அதிகரிப்பதற்கும் புற்றுநோயால் இறப்பதற்கான சாத்தியம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.

எனவே நாம் செய்யக் கூடியது என்ன? ரீவி பார்க்கும் நேரத்தை 2 மணிநேரத்திற்கு மேற்படாது குறைக்க வேண்டும்.

ரீவி பார்ப்பது மட்டுமின்றி கொம்பியூட்டர், செஸ், காட்ஸ் போன்ற எந்த உடலசையாத பொழுதுபோக்குகளுக்கும் இது பொருந்தும்.

மிகுதி நேரத்தை விளையாட்டு, நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது வீட்டுத் தோட்டம் போன்ற உடலுழைப்புடன் கூடிய பொழுது போக்கில் செலவளிக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

> பார்த்து முடித்த நோயாளி வெளியேறுவதற்கிடையில், இடித்துப் பிடித்துக் கொண்டு ஒரு பெண். உள்ளே நுழைந்த அவள், இழுக்காத குறையாக ஒரு முதிர்ந்த அம்மாளை கூட்டி வந்திருந்தாள்.

“இருங்கோ” நான்.

அம்மா கதிரையில் அமர்ந்து முடிவதற்கிடையில்,
“இவவுக்கு ஒரு குளுக்கோஸ் ஏத்த வேணும் டொக்டர்” என்றாள் அந்தப் பெண்.

எனக்குக் கோபம் ஜிவ் வென்று மூக்கு நுனியில் ஏறியது.
நான் இன்னமும் நோயாளியோடு பேசவில்லை.
நோயாளியைப் பரிசோதிக்க வில்லை.
நோயை நிர்ணயிக்கவும் இல்லை.
அதற்கிடையில் என்ன வைத்தியம் செய்வது என்று இவள் எனக்குக் கட்டளையிடுகிறாள் என்ற தொழில் ரீதியான கோபம்.

ஆனால் முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. பதிலும் கூறவில்லை. நோயாளியை நிதானமாகக் கூர்ந்து அவதானித்தேன்.

வயது அறுபது இருக்கும். கறுத்து மெலிந்த தேகம். களைத்துச் சோர்ந்த உடல். சாதாரண நூற் சேலைதான். அதையுங்கூட ஒழுங்காகக் கட்டவேண்டும் என்று அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. தலைமுடியையும் ஏதோ இழுத்துக் அவசர கோலத்தில் முடித்துக் கொண்டது மாதிரி இருந்தது.

முகத்தைப் பார்த்தேன்.
பொட்டில்லை.
குழி விழுந்த கண்களில் ஆழ்ந்த சோகம்.
சுருக்கம் விழுந்த நெற்றி.
தனக்கும் தான் இங்கு வந்ததற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது போன்ற விடுபட்ட போக்கு.

கூட்டிக்கொண்டு வந்த பெண் ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. அவளை முந்திக்கொண்டு அம்மாவுடன் கதைக்க ஆரம்பித்தேன்.

 பெயர், வயது போன்ற மாமூலான கேள்விகளுக்கு மெல்லிய தொனியில் பதில் சொன்னாள் அம்மா.

“அம்மா உங்களுக்கு என்ன சுகமில்லை?” என மிகுந்த பரிவோடு கேட்டேன்.

“எனக்கு ஒண்டுமில்லை”
நறுக்காக வெட்டியது போல வந்தது பதில்.

“உவ இப்பிடித்தான் சொல்லுவா.
சரியான பெலயீனப்பட்டுப் போய்க் கிடக்கிறா.
ஒழுங்கா சாப்பிடுறதுமில்லை.
சத்தாகக் குடிக்கிறதுமில்லை.
இப்பிடிக் கிடந்தால் இவவை நான் எப்படி வாற கிழமை லண்டனுக்குக் கூட்டிக்கொண்டு போறது?
அதுதான் ஒரு குளுக்கோஸ் ஏத்திவிட்டால், நான் ஒரு மாதிரிச் சமாளிச்சு இவவைக் கூட்டிக்கொண்டு போடுவன்.”

உண்மையில் அம்மா பெலவீனப்பட்டுத்தான் கிடந்தாள்.

அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, கட்டிலில் கிடத்தி, தாதிமார் உதவியுடன் குளுக்கோஸ் செலுத்த ஆரம்பித்தேன்.

மகளின் முகத்தில் திருப்தி.

“நான் ஓருக்கால் கடைக்குப் போக வேணும்.
குளுக்கோஸ் முடியிறத்துக்கிடையில வந்திடுவன்.
அவ்வளவுக்கும் பார்த்துக் கொள்ளுங்கோ”
அவள் வெளியேறினாள்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் அம்மாவுடன் வெளிப்படையாகப் பேசவேண்டும்.
இனி அம்மாவை மனந்திறந்து பேசவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அவ பேசினால்தானே என்னால் நோயை நிர்ணயிக்க முடியும்.

“ஏனம்மா ஒழுங்காகச் சாப்பிடுறியள் இல்லை? உங்களுக்கு என்ன கஷ்டம்?” ஆதரவாகத் தோள்மூட்டில் தட்டியபடி கேட்டேன்.

“எனக்கு ஒண்டுமே பிடிக்குதில்லை”

“மகள் வந்து நிக்கிறா. உங்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு போகப் போகிறா. பிறகென்ன கவலை?”

அம்மாவின் கண்களில் நீர் முத்துக்கள். “எனக்கு லண்டனுக்குப் போக விருப்பமில்லை”

“ஏனம்மா?”

“நான் ஊருக்குப் போகவேணும். மகளிட்ட சொல்லுங்கோ ஐயா”
கண்ணீர் ஓடக்
கையெடுத்துக் கும்பிட முனைந்தாள்.

கையை ஆதரவோடு பற்றிக் கட்டிலில் மீண்டும் வைத்தேன். குளுக்கோஸ் ஏறுகிறது, கையை ஆட்டினால் ஊசி திரும்பிக் குத்தி கை வீங்கிவிடும்.

அம்மா இவ்வளவு காலமும் ஊரிலதான் இருந்தவவாம். கணவன் செத்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை. ஆறு பிள்ளைகள். மூத்த மகள் மனிசனிட்ட கனடாவுக்குப் போறதற்காக ஒரு வருஷமா கொழும்பில நிக்கிறா.

 மிச்சம் ஐந்தும் கண்டத்துக்கு ஒண்டொண்டாய்ப் பரந்து கிடக்குதுகள். நடுத்தியாள் ஐந்து வருடங்களாக லண்டனிலை இருந்தாள்.
அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொழும்புக்கு வர இருந்ததால் அம்மாவையும் கொழும்புக்கு வரச் சொல்லி எழுதினாள்.

(இக் கட்டுரை எழுதிய 1996-2004 களில் யாழ் கொழும்பிற்கு நேரடிப் போக்கு வரத்துக் கிடையாது. இராணுவத்திடம் அனுமதி வாங்கி கப்பலில்தான் வர வேண்டும்.)

அவளை எதிர்பார்த்து அம்மா நாலு மாசமாகக் கொழும்பில மூத்தவளோட தவம் கிடக்கிறாள்.

அவளுக்கு கொழும்பே பிடிக்கவில்லை. லண்டன் வேண்டவே வேண்டாமாம்.

ஊரில எண்டால் எவ்வளவு நிம்மதி. பக்கத்தில மருதடிப் பிள்ளையார் கோயில். ஒவ்வொரு நாளும் காலையில போய்க் கும்பிட்டுட்டு வந்தால் தான் அம்மாவுக்கு நிம்மதியாயிருக்கும்.
காலாற நடக்கலாம்.
கடை தெருவுக்குத் தனியப் போகலாம்.
அக்கம் பக்கத்தில் சகோதரர்களும், இனசனங்களும் இருக்கினை.
மனமாறக் கதைக்கலாம்.
இஞ்சை என்ன கிடக்கு?

“அதோட சொந்த வீட்டில இருக்கிறது போல வருமே. நான் சாகிற தெண்டாலும் சொந்த வீட்டிலதான் சாக வேணும். இதுகள் லண்டனுக்கு வா வா எண்டு அழுங்குப் பிடியாய்ப் பிடிக்குதுகள். எனக்குப் போகக் கொஞ்சமும் விருப்பமில்லை. மகளுக்குக் கொஞ்சம் சொல்லுங்கோ ஐயா” என்றாள்.

மகளுக்கு எப்படி அம்மாவின் நிலையைப் புரிய வைப்பது? நாசூக் காக ஆரம்பித்தேன்.

“உங்கட அம்மாவுக்கு மனம் சோர்ந்துபோய்க் கிடக்கு.
அதாலதான் இப்படி வெறுத்துப் போய்க் கிடக்கிறா.
மருந்துகள் தாறன்.
ஒவ்வொரு நாளும் பொழுதுபட ஆறு மணிபோல ஒன்று கொடுங்கோ. கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிடுவா.
ஒரு கிழமையால திரும்ப கொண்டு வந்து காட்டுங்கோ”என்றேன்.

“அதுக்கிடையில் போடுவம் போல இருக்கு” என்றாள்.

“அங்கைதானே பிரச்சனை. அம்மாவுக்கு வெளிநாடு போறதில கொஞ்சம் கூட விருப்பமில்லைப் போல இருக்கு. அவவைக் கட்டாயம் கூட்டிக் கொண்டுதான் போக வேணுமோ?” என நான் மெதுவாகக் கேட்டேன்.

“என்ன டொக்டர் இப்பிடிச் சொல்லுறியள்!
எல்லாப் பிள்ளையளும் வெளிநாட்டில.
அக்காவோடைதான் இஞ்சை இருந்தவ.
அக்காவுக்கும் பிள்ளையளுக்கும் கனடாவுக்கு விசா கிடைச்சிடுத்து. அவையளும் பத்துப் பதினைஞ்சு நாளைக்குள்ள போயிடுவின.
பிறகு ஆர் இவவைப் பாக்கிறது?”

“அம்மாவுக்கு கொழும்பு வாழ்க்கையும் பிடிக்கவில்லையாம்.
தான் ஊருக்குத்தான் போகவேணும் எண்டு சொல்லுறா.
சில வயதானவை யளுக்கு புதிய சூழ்நிலைகளுக்கு அட்ஜஸ்ட் பண்றது கஷ்டம்தானே.
அவவின்ர விருப்பப்படியே விடுங்கோவன்.
ஊரிர எண்டால் சகோதரம் இனசனம் எல்லாம் இருக்காம்.
தான் சந்தோஷமாக இருப்பாவாம். அதுகளும் இவவை அன்பாப் பாப்பினமாம்”என்றேன்.

அவள் முகம் சிவந்தது.
அவமானப்பட்டது போல வெகுண்டாள்.

“நல்ல கதை கதைக்கிறியள்.
இவவை ஊரில விட்டிட்டுப் போனால் ஊர் என்ன சொல்லும்.
எல்லாரும் வெளிநாட்டில சொகுசா இருந்து கொண்டு தாயைக் கைவிட்டிட்டினம் எண்டுதானே சொல்லுவினம்…
எங்களுக்குத்தானே வெக்கக்கேடு..”

“அப்பிடி ஏன் நினைக்கிறியள். அம்மாவின்ர சந்தோஷம் தானே பிள்ளையளுக்கு முக்கியம்”

“அம்மாவுக்கு இனி என்ன?
வயது போனவதானே.
என்னோட வந்து லண்டனில சொகுசாகப் பொம்மைபோல இருக்க வேண்டியதுதானே. ராணி மாதிரி இருக்கலாம்…”

‘ஆம் அரண்மனைக்குள் சிறைப்பட்ட ராணிதான்’ நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை.

“..எங்களுக்கு எங்கட மானமும் மரியாதையும்தான் முக்கியம்.
அவ என்ன நினைச்சாலும் பரவாயில்லை”

கோபத்துடன் தாயை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

அடுத்த வாரம் மருந்திற்கு அவர்கள் வரவில்லை. லண்டனுக்குப் போய்விட்டதாக எதிர்வீட்டுக்காரர் சொன்னார்.

மகளின் லண்டன் அப்பார்ட்மெண்ட் வரவேற்பறையில் சோகம் கவிழ்ந்த முகத்துடன் வயதான அலங்காரப் பொம்மை ஒன்று வீற்றிருக்கும்.

மல்லிகை சஞ்சிகையிலும் பின் மல்லிகை வெளியீடான ‘டொக்டரின் டயறியிலிருந்து’ நூலிலும் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி  
 
நன்றி:-  மல்லிகை

Read Full Post »