>
வெற்றிகரமாகத் தாய்ப்பால் ஊட்டல் பற்றிய அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
Posted in தாய்ப்பால், மருத்துவம் on 29/05/2010| Leave a Comment »
>
வெற்றிகரமாகத் தாய்ப்பால் ஊட்டல் பற்றிய அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
Posted in நகைச்சுவை, விடலைப் பருவம் on 23/05/2010| 3 Comments »
>
ஆசிரியர்:- “இறுக்கமான ஆடைகள் குருதிச் சுற்றோட்டத்தைக் குறைக்கும்.”
ஒரு மாணவன் எழுந்தான்.
அவன் தனது ஜீன்ஸ்சின் முற்புறத்தை அழுத்திப் பிடித்தபடி நின்றதை ஆசிரியர் கவனிக்கவில்லை. அவன் சொன்னான்…
“ஆனால் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ்சும், சுருக்கமான ரீ சேட்டும் அணிந்தால் எனது குருதிச் சுற்றோட்டத்தை அதிகரிக்கிறதே”
அடுத்த வரிசையில் இருந்த மாணவிகளை கடைக்கண்ணால் விழுங்கியபடி சொன்னான்.
மாணவர்களுக்கான ஒன்று கூடல் நடந்துகொண்டிருந்தது.
உணவுகள் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கப்ட்டிருந்தன.
ஒரு கூடை நிறைய கொய்யாப் பழம் வைக்கப்பட்டிருந்தது.
“ஒன்றுக்கு மேல் எடுக்க வேண்டாம். கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்” என்ற வாசகம் அதன் மேல் ஆசிரியரால் எழுதப்பட்டிருந்து.
சற்றுத் தள்ளி மற்றொரு கோப்பையில் மோதகம் வைக்கப்பட்டிருந்தது.
“தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதிய பையன்
அதன் கீழே ….
“கடவுள் கொய்யாப் பழக் கூடையை அவதானித்துக் கொண்டிருக்கிறார்” என எழுதி முடித்தான்.
“அப்பா Sex என்றால் என்ன?”தகப்பனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
பாடசாலை செல்ல ஆரம்பித்த பையன் இவ்வாறு கேட்டதால் எவ்வாறு புரிய வைப்பது என அறியாது திணறிவிட்டார்.
தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பாலுறுப்புகள், பாலுணர்வு பற்றியெல்லாம் மிக விபரமாக அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்கிக் கொண்டே போனார்.
“அப்பா நீங்கள் சொல்வதையெல்லாம் எழுத இதில் போதிய இடம் இல்லையே.. என்ன செய்ய?” என்று சொல்லி கையிலிருந்த பாடசாலை நுளைவுப் பத்திரத்தைக் (Admission form) காட்டினான்.
அந்தப் பையன் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருந்தான்.
நாடியில் கை வைத்தபடி விகாரமஹாதேவி பார்க் வாங்கில் அமர்ந்திருந்தபோது அவனருகே ஒருவர் வந்து உற்கார்ந்தார்.
அவனது துயருக்கான காரணத்தை வினவினார்.
“ஒரு காதலியைத் தொலைப்பதைவிட வேறு பெரும் துயர் ஏதும் இருக்க முடியுமா?” விம்மி அழாத குறையாகக் கேட்டான்.
“நிச்சமாக இருக்க முடியாது.”..
“என்னைப் போல மற்றொரு புதுக் காதலியைப் பெறும் முயற்சியில் இறங்காவிட்டால்!.
மறுமொழி சொன்னவரை இவன் ஏறிட்டுப் பார்த்தான்.
புற்தரைப் பாதையால் சென்ற பெண்ணுக்கு
சைகை மொழி பேசி
வளைக்கும் முயற்சியில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அவரது வெண்முடி மாலைச் சூரிய ஒளியில் பளபளத்தது.
அவள் தனது போய் பிரண்டின் நெருங்கிய நண்பனுடன் படுக்கையில் இருந்தாள்.
செல்போன் அனுங்கியது.
“ஓகே நல்லா விளையாடு Bye” என்று சொல்லி போனை அணைத்தாள்.
“யார் பேசியது”
“எனது போய் பிரண்ட் …
தான் உன்னுடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான்”
Posted in புகைத்தல், மருத்துவம் on 16/05/2010| Leave a Comment »
>புகைத்தல் ஆபத்தானது என அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதனால் ஏற்படும் மிக முக்கிய பாதிப்பு நுரையீரல் புற்றுநோயாகும். புகைப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கும், அதனால் மரணமடைவதற்குமான சாத்தியம் புகைக்காதவர்களை விட 10 முதல் 20 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்க புள்ளிவிபரங்கள் படி அங்கு நுரையீரல் புற்றுநோயால் மரணமடையும் ஆண்களில் 90 சதவிகிதமும், பெண்களில் 80 சதவிகிதமும் புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
நுரையீரல் புற்றுநோயைத் தவிர, குரல்வளை, களம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சதையம், இரைப்பை, கருப்பைக் கழுத்து, குருதிப் புற்றுநோய் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் புகைத்தலே முக்கிய காரணமாகிறது.
நீங்கள் புகைக்காதவராக இருந்தபோதும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் புகைப்பதாலும் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
மற்றவர்கள் புகைத்து வெளிவரும் புகையில் 4000 ற்கு அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 50 புற்றுநோயை ஏற்படுத்துவையாகும்.
அவ்வாறான தன்செயலின்றிப் புகைத்தல் காரணமாக வருடாந்தம் 3000 பேர் அமெரிக்காவில் மரணமடைகிறார்கள்.
தன்செயலின்றிப் புகைத்தல் என்பது ஒருவரது சுற்றாடலிலுள்ள புகையிலையின் புகையால் Enviromental tobacoo smoke (ETS) ஏற்படுகிறது.
இது இரண்டு வழிகளில் நேர்கிறது.
புற்றுநோயைக் கொண்டு வருவது மாத்திரமின்றி வேறும் பல உடல் நலக் கேடுகளை இது ஏற்படுத்துகிறது.
எவ்வாறு நீங்கள் தன்செயலின்றிப் புகைத்தலுக்கு ஆளாகிறீர்கள்.
இலங்கையில் சினிமா அரங்கு, பஸ் போக்குவரத்து ஆகியவற்றில் புகைத்தலைத் தடை செய்திருப்பது முன்னேற்ரகரமான செயலாகும்.
ஆயினும் வியாபார ஸ்தலங்களில் தடை செய்யப்படவில்லை.
வீட்டினுள் புகைக்காதிருப்பது மிக முக்கியமாகும். வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் காற்றில் புகையின் செறிவு அதிகமாகும். இதனால் ஒருவரது மனைவி, குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்கள் என எல்லோரையும் பாதிக்கும்.
இதிலிருந்து நீங்கள் தப்புவதற்கு வழி என்ன?
நீங்கள் முன்மாதிரியாக இருந்து உங்கள் குடும்பத்தினர் புகைக்காதிருக்க வழி காட்டுங்கள். அது புகைக்காத சமூகத்தை நோக்கி முன்நகர்வதற்கான முதல் படியாகும்.
புகைத்தல் பற்றிய எனது மற்றொரு கட்டுரையான ‘வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல்’ பற்றிப் படிக்க கிளிக் செய்யுங்கள்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
Posted in சினிமா, திரைப்பட விமர்சனம், பிரன்சுத் திரைப்படம் on 15/05/2010| 1 Comment »
>
சோகத்தில் உழலும் வாழ்வுதான் இல்லத் தலைவியெனப் போற்றப்படும் பெண்களுக்கு சபிக்கப்பட்டதா?
இல்லக் கடமைகள் அனைத்தும் அவள் தலையில்தானா?
பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அவர்களை வளர்ப்பது, சமைப்பது, துணிகள் துவைப்பது, கூட்டுவது துப்பரவு செய்வது என, என்றுமே மீளமுடியாத சுழல் சக்கரத்தில் மாட்டியிருக்கிறாளா?
கணவனை மகிழ்ச்சிப்படுத்துவதும்
அவன் விரும்பும்போது அவனோடு படுத்தெழும்புவதும் அவளது மற்றொரு கடமை என்று சொல்லலாமா?
இவை யாவற்றையும் அவள் மனம் கோணமால் செய்தபோதும், கர்ப்பமாயிருக்கும் காலத்திலும்
பாலூட்டும் நேரத்திலும் உறவு கொள்வதில் சிரமங்களும் தடங்கல்களும் ஏற்படும்போது என்னவாகிறது?
தனது இச்சைகளைத் தணித்துக் கொள்ள வேறு பெண்ணை அவன் நாடுவது என்ன நியாயம்?
இவற்றை அவள் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதானா?
தனது மனஉணர்வுகளை வெளிப்படுத்தாது, பரத்தையிடம் கணவனைச் சுமந்து சென்ற சங்ககாலப் பெண்போல அடங்கிக் கிடப்பதுதான் குடும்பப் பொறுப்புள்ள பெண்ணின் தலைவிதியா?
இது போன்ற பல கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. கில்லீசின் மனைவி என்ற பிரஞ்சுத் திரைப்படத்தைப் பார்த்த போது ஏற்பட்டது.
நம்பிக்கைத் துரோகங்களும், துன்பங்களும் அவளைத் துரத்திய போது அவள் பொங்கி எழவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. கண்ணீர் விட்டுக் கலங்கவும் இல்லை.
மாறாத புன்னகை அவள் முகத்தை எப்பொழுதும் அலங்கரித்தது.
மோனா லிசாவின் புன்னகை போன்றதே எலிசாவின் புன்னகையும். மௌனமாக பொதிந்தும் ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தியது.
அந்தப் புன்னகை ஒரு புதிராக திரைப்படம் முழுவதும் எம்முடன் பயணித்துக் கொண்டேயிருந்தது.
எலிசாவாக நடிப்பவர் திறமையான நடிகையான Emmanuelle Devos ஆகும். The beat that my heat skipped, Read my Lips மற்றும் Kings and Queen போன்ற படங்கள் ஊடாகப் பரிச்சமானவர்.
துயரங்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, புன்னகை முலாம் பூசிய அவளது உளநெருக்கீடும் மனத்துயரும் ஒரு சில தடவைகள் கட்டு மீறி வெடித்துச் சிதறி வெளிப்படவே செய்கிறது. மிக நுட்பமாக அவளது உணர்வை காட்சிப்படுத்த நெறியாளர் எடுத்த யுக்தி மிகவும் வித்தியாசமானது.
அமைதியும் மென்பனியும் பூத்துக்கிடங்கும் ஒரு காலை நேரம். அவள் தனது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்கிறாள்.
வழமையான அமைதியுள்ளவளாக இன்றி அவசரமாகவும் ஒருவித முரட்டுத்தனத்துடனும் செயற்படுகிறாள்.
களைகளைப் பிடுங்கி அதன் வேர்களில் ஒட்டிக் கிடக்கும் மண்ணை ஆவேசமாகத் தட்டி உதறி வீசுகிறாள்.
காய்கறி செடிகளின் சொந்த மண்ணில் அதற்கே உரித்தான போஷாக்கை கள்ளமாக மறைந்து நின்று வேர்பரப்பி நின்று உறிஞ்சும் களைகளைத்தான் அவ்வாறு ஆவேசமாக பிடுங்கி அகற்றுகிறாள். மற்றொரு தடவை போட்டோ பிறேம், கோப்பை ஆகியவற்றை உடைப்பதின் ஊடாகப் புலனாகிறது.
தனக்கே சொந்தமான தனது கணவன் கில்லியை, தனது சொந்த இரத்தத்தில் பிறந்த தனது சொந்தத் தங்கையே அபகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத ஒரு சாதுவான மனைவியால் அதைத்தான் செய்ய முடிந்தது.
கில்லிசின் மனைவி எலிஸா பொறுப்புள்ள மனைவி. அவளது கணவன் சுரங்கத் தொழிலின் கடும் வெப்பத்தில் வேலை பார்த்தபோதும் பொறுப்புள்ளவன். தனது மனைவியில் ஆறாத அன்பு கொண்டவன். வீட்டு பணிகளிலும் அவளுக்கு உதவுபவன்.
கில்லிஸ் Colvis Cornillac தனது வேலைத்தளத்திலிருந்து இரவு திரும்பும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது.
வீடு திரும்பிய அவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அணைத்து, முத்தமிட்டு மெதுவாகத் துயிலெழுப்பி உறவு கொள்கிறான்.
உறவின் பின் ‘நான் உனக்கு வலியைத் தந்துவிட்டேனா?’ என்று கேட்குமளவிற்கு அவளில் அன்பும் அக்கறையும் கொண்டவனாயிருக்கிறான்.
மிகக் குறைவான வசனங்களே பேசப்படுகின்றன. பேசப்படும் ஒவ்வொன்றும் மிகவும் அத்தியாவசியமானதாகவும், கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கின்றன.
உடலுறவு இப்படத்தில் குறியீடு போல மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது.
ஆனால் அவை கிளர்ச்சி ஊட்டுவதற்காக அங்கங்கள் அனைத்தையும் புட்டுக்காட்டும் காட்சிகள் அல்ல.
பெரும்பாலும் முகங்களும் கைகளுமே வெளியே தெரிகின்றன.
தடித்த போர்வையுள் மூடுண்டு கிடக்கும் உடல்களின் அசைவு அவ்வப்போது தெரிகிறது.
மூன்று தடவைகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அத் தம்பதிகளிடையே வெவ்வேறு நேரங்களில் நிலவும் உறவின் பரிணாமத்தை தராசுபோல அளந்து உணர்த்துபவையாக இருக்கின்றன. அன்பின் அன்னியோன்யம், நெருடல், விரிசல் ஆகியன தெளிவாக தெரிகின்றன.
சதா புன்முறுவல் மாறாத முகத்துடன் இருந்தாலும் மனதிற்குள் பொங்கியெழும் மாறுபட்ட உணர்வுகளை டிவோசின் (எலிசா) முகபாவங்கள் அற்புதமாகக் வெளிப்படுத்துகின்றன.
உறவு மிக நெருக்கமாக இருந்தபோது காட்டப்படும் முதலாவது காட்சியின், அக முக நிறைவு இரண்டாவதில் இருக்கவில்லை.
மூன்றாவதில் அவனது சற்று முரட்டுத்தனமான குதப்புணர்ச்சி அவளுக்கு வேதனையளித்தாலும் மாறாத புன்னகையுடன் சகிப்பது புரிகிறது.
உடல் உறவால் மட்டுமின்றி சாதாரணமாகக் கட்டியணைக்கும்போது கைகளின் நிலை, முத்தமிடும் போது உற்சாகமாக முத்தமிடுவது, அன்றி கடமைபோல ஏனோதானோ என முத்தமிடுவது, வீட்டை விட்டு வெளியேறும் போது கதவை மூடுவதில் உள்ள வேறுபாடுகள் ஊடாகவும் அவர்கள் குடும்ப உறவின் அன்னியோன்யமும் விரிசலும் எமக்கு தெளிவாகின்றன.
நாலாவது தடவை படுக்கையில் இருக்கும்போது, எலிசா அவனை அணைத்து உறவுக்கான சமிக்கையை விடுத்தபோது அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துவிடுகிறான்.
அவளது வசீகரமும், அணைப்பும் இப்பொழுது அவனது மனத்திலில்லை. அவனது மனத்தில் இப்பொழுது வேறு யாரோ குடிபுகுந்து இருக்கிறாள் அல்லது புதியவள் பற்றிய நினைவுகளால் அலைக்கழிந்து கொண்டிருக்கிறான் என்பதுதானே காரணமாக இருக்க முடியும்.
மன உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடாது, நெகிழ்ச்சியான சம்பவங்கள் ஊடாக மனதில் அப்பிப் பிடிக்கச் செய்யும் வண்ணம், நுட்பமாக படத்தை நெறியாள்கை செய்திருப்பவர் Frederic Fonteyne திறமான நெறியாள்கை. ‘A Poronograpic Affair’ என்ற படத்தை நெறியாள்கை செய்திருக்கிறார் என அறிகிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை.
அவசியத்திற்கு அப்பால் சிறு உரையாடல்கள் கூட இல்லை.
ஆனால் மௌனம் மொழியாகி எம்மோடு பேசுகிறது.
உணர்வுகளில் ஊடுறுவி அலைக்கழிக்கிறது.
அவளது மௌனம் பேசாப் பொருளெல்லாம் பேசுகின்றன.
உண்மையில் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருப்பது எலிசா என்ற அவளது பாத்திரம்.
ஆனால் அதற்கு அப்பால் அப் பாத்திரம் எம் மனத்தைவிட்டு அகலாதிருப்பதற்குக் காரணம் இம்மானுவல் டிவோஸ் என்ற அந்த நடிகையின் அபாரமான நடிப்பு.
அவளது நடிப்பின் வெற்றிக்கு முக்கிய பலமாக இருப்பது அவளது மர்மம் பொதிந்த புன்னகையும், விழியை மொழியாக்கிய அகன்ற விழிகளும்தான்.
கதை பிரான்சு தேசத்தின் குடியிருப்பு ஒன்றில் 1930 நடப்பதாக இருக்கிறது. 1937ல் பெல்ஜியம் நாட்டின் Madeleine Bourdouxhe எழுதிய நாவலான La Femme de Gilles தழுவியது. உலக மகா யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்திய காலம். திரைப்படத்தின் ஒரு கட்டத்தின் பின்னணியில், பயிற்சிக்காக நகர்ந்து செல்லும் சிறு இராணுவ அணியால் இச் செய்தி புலப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் அவ்வாறு இருக்க முடியாது.
தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் தாரைவார்த்து மனைவியாக நீடிக்க வேண்டும், தன்னை விட்டு தள்ளிச் செல்லும் அவனை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து செயற்படுவது, ஏற்க முடியாத பத்தாம் பசலிக் கொள்கையாக தெரியலாம்.
அவனது இன்றைய காதலியும் தனது தங்கையுமான விக்டோரியா வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்பதை அறிய அவனுக்காக வேவு பார்க்கச் செல்வதும் நம்ப முடியாத கற்பனைச் சம்பவமாக தெரியலாம்.
அவற்றை இன்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். ஆயினும் இக்கதை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் நடக்கிறது. அத்துடன் அது பிரான்சின் ஒரு கிராமப் பகுதியாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணால் அவ்வாறுதான் வாழ முடிந்தது. அவளுக்கான சுதந்திரம் அந்தளவுதான் இருந்தது.
அது அவர்களின் சின்ன உலகம். அதற்கு அப்பால் அவர்களது பார்வை நீண்டிருக்கவில்லை.
அது பற்றிச் சிந்திக்கவும் தெரியாது.
அவற்றைத் தாண்டி சாகசப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய துணிச்சலும் அப் பெண்களுக்கு இருக்கவில்லை.
தனக்காக தனது மகிழ்ச்சிக்காக அவள் வேவு பார்க்க முன்வரும்போது, அவள் எவ்வளவு தூரம் தன்வாழ்வை விட்டுக் கொடுக்கிறாள், தன் வாழ்வையும் உணர்வுகளையும் தியாகம் பண்ணுகிறாள் என்பதைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனாக அந்த ஆண்மகன் இருக்கிறான்.
சபல புத்தியும் சுயநலமனப்பாங்கும் மேலோங்கும் போது பகுத்தறிவு குழிதோண்டிப் புதையலுறுகிறது.
அவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்கிறான் என்பதை உணர்ந்தவுடன் அவளுக்கு கலந்தாலோசிக்க யாரும் இருக்கவில்லை. ஆறுதல் சொல்லவும் நாதியில்லை. மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தி தனது குடும்ப கௌரவத்தை இழக்கவும் முடியாது.
இந்த நிலையில் அவளுக்கு ஆலோசனை வழங்க, நெறிப்படுத்த இருந்தது ஒரே ஒரு இடம்தான். அதுதான் தேவாலயம். அங்கு பிரார்தனை செய்து மனமாற நினைக்கிறாள். சந்தடி மிகுந்த சூழலில் அவளால் முடியவில்லை.
பாதிரியாரிடம் செல்கிறாள். பாவமன்னிப்பு கேட்க.
தான் செய்யாத தவறுக்காக பாவமன்னிப்பு கேட்கிறாள். அபத்தமாகத் தெரிகிறதா. ஆனால் அதுதான் அவர்களின் நிஜ வாழ்வு.
தட்டுத் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறாள்.
“எனது கணவன் எனது தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ஆனால்… என்னால் எதிர்த்துப் பேச முடியவில்லை, அப்படிப் பேசினால் அவர் என்னை விட்டுப் போய்விடுவார். எனவே என்னால் எதுவுமே…”
அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. எதைக் கோருவது என்ற தெளிவும் இல்லை. சற்றுத் தாமதித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து “எனக்கு உதவி வேண்டும்… என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கிறாள்.
பாதிரியாரை நாம் காணவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. ஆனால் அது அவளது துன்பத்தைக் கேட்டு இரங்கும் குரல் அல்ல. ஆதரவு தரும் தொனியும் இல்லை. பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஆணின் உணர்ச்சியற்ற சடக் குரலாக ஒலிக்கிறது.
“இறைவனால் உனக்கு அளிக்கபட்ட சோதனை அது. இறைவனுக்கு எதிராக எதுவும் செய்வதைத் தவிர்த்துக் கொள்.” என்று சொல்லிய அவர் தொடர்ந்து,
“உனக்கான தண்டனையைப் பொறுத்தவரை நீ பத்துத் தடவைகள் ஜெபம் செய்வாயாக” என நிறைவு செய்கிறார்.
அவள் செய்த பாவத்திற்குத் தண்டனை ஜபம். அதன் மூலம் நிலமை மாறிவிடும் என்று சொல்கிறார் என்றே நாம் புரிந்த கொள்ள வேண்டியிருக்கிறது.
பெண்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஆண்தானே அந்தப் பாதிரியாரும்.
அவருக்கும் தேர்வு இல்லை.
தான் கற்றதை, தனக்குப் போதிக்கப்பட்டதை, புத்தகத்தில் உள்ளதைச் சொல்லிப் போகிறார்.
ஆனால் அவள் செய்த பாவம் என்ன என்று அவளுக்கும் புரியவில்லை. எங்களுக்கும் தெளிவில்லை.
அதன் பின் அவள் மனதைத் திடமாக்கிக் கொள்கிறாள். இயலாமை மேவ, அந்த வாழ்வுக்குள் சங்கமிக்க முயல்கிறாள். தான், தனது உணர்வு, தன்மானம் இவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி முதுகில் போட்டுவிடுகிறாள்.
எலிசாவாக என்றுமே அவள் வாழ முடியாது.
அவளுக்கு மட்டுமல்ல!
அப்படி வாழ்வதற்கான சாத்தியம் எந்த ஒரு பெண்ணுக்கும் அந்தச் சமூகத்தில் கிடையாது.
அவள் எலிசா அல்ல.
அவளுக்கென்று எந்தவொரு தனி அடையாளமும் கிடையாது.
அவள் கில்லீசின் மனைவி.
அவ்வளவுதான்.
அதைத்தானே படத்தின் பெயரான Gille’s Wife சொல்கிறது.
முடிவு இன்னும் சோகமானது. அதைச் சொல்வதற்கான வார்த்தைகளைக் கோர்க்க முடியாது மனது சோர்ந்து தவிக்கிறது. படம் முடிந்த பின்னும் BMICH இன் தியேட்டரிலிருந்து எழ முடியவில்லை. கனத்த மனது கதிரைக்குள் முடங்கிக் கிடந்து சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருக்கவே தூண்டியது.
பிரஞ்சுத் தூதுவராலயம் சார்பில் நடந்த Bonjour Cinema திரைப்பட விழாவில் பார்த்த படம். நல்ல படத்தைக் காட்சிப்படுத்திய அவர்களுக்கு நன்றி.
அந்த முடிவுக் காட்சி துயரம் மிகுந்ததாக இருந்தபோதும் கலைநேர்த்தியில் மிகவும் அற்புதமாக இருந்தது.
மிக வித்தியாசமான கோணத்தில் படமாக்கியுள்ளார்.
தோய்த்த துணிகள் உலருவதற்காக மாடிவீட்டில் கட்டப்பட்ட கொடிகள். கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் போன்று அதில் அவள் விரித்த துணிகள். தேவதைகளின் சிறகுகள் போல காற்றில் அவை அசைந்தாடும் லாவண்யம். திறந்து கிடக்கும் ஜன்னல்.
அதற்கு அப்பால் எல்லையற்று விரிந்து கிடக்கும் நீலவானம்.
தேவ லோகத்திற்கான பயணத்திற்கு வா வா என அழைப்பது போலிருந்தது.
துயர் சுமந்த அந்தப் பெண்ணின் மௌன மொழியிலான மர்மப் புன்னகையின் புதிர் எங்களையும் சூழ்ந்து கொள்கிறது.
இலங்கையில் திடையிடப்பட்டதாகத் தெரியவில்லை. டிவிடியில் கிடைத்தால் உங்களுக்கும் பார்க்கக் கிடைக்கும்.
எம்.கே.முருகானந்தன்.
Posted in நீரிழிவு, மருத்துவம், மருந்துப் பாவனை on 09/05/2010| Leave a Comment »
>நண்பன் எழுத்தாள நண்பர் தெணியான் ஒரு பகிடி சொல்லுவார்.
இவர் ஒரு மருத்துவரிடம் சென்றபோது மருந்துகள் உறையில் போட்டுக் கொடுக்கப்பட்டன.
அதில் மருந்துகள் தினமும் எத்தனை தடவை போட வேண்டும், ஒரு வேளைக்கு எத்தனை மாத்திரைகள் போன்ற குறிப்புகள் காணப்பட்டன.
அதற்கு மேலதிகமாக காணப்பட்ட குறிப்புத்தான் இவரை அசர வைத்தன.
“சாமுன் மருந்துகளைச் சாப்பிடலாம், ஆனால் சாவின் பின் எப்படிச் சாப்பிடுவது” என்று மருத்துவரைக் கேட்டாராம்.
இதைக் கேட்ட டொக்டர் மயங்காத குறை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என்பதை மருத்துவமனை உதவியாளர் சுருக்கமாக சா.முன், சா.பின் என எழுதியதால் வந்த வினை.
இப்பொழுது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள்.
எல்லோருமே மருந்துகள் சாப்பிடுகிறார்கள்.
பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்.
அவற்றைச் சா.முன், சா.பின் !!! சாப்பாட்டுவதா என்ற சந்தேகம்.
பல மருத்துவர்கள் இது பற்றி எதுவுமே தங்கள் நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லாததால் பலரும் சாப்பாட்டிற்கு பின்தான் எடுக்கிறார்கள்.
சா பின் அல்ல!!
நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.
1. சதையியைத் தூண்டி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்து அதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கொஸ் அளவைக் கட்டுப்படுத்துவன.
2. மேலதிக இன்சுலினை சுரக்கச் செய்யாது, ஏற்கனவே உள்ளதை கூடிய வினைத்திறனுடன் செயற்படச் செய்வது.
சாப்பாடிற்கு முன்
முதலாவது வகையான, இன்சுலினைக் கூடியளவு சுரக்கச் செய்யும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்னர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவானது உண்டதும் சமிபாடடைந்து, உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.
அவ்வாறு அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்சுலின் அதிகளவில் தேவை. எனவே இன்சுலினைக் கூடுதலாகச் சுரக்கச் செய்யும் மாத்திரைகளை உணவுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னராகவே உட்கொண்டால், உணவின் பின் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிசெய்யத் தயார் நிலையில் இருக்கும்.
ஆயினும் இவற்றை உணவுக்கு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) முன்னபதாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் இரத்தில் குளுக்கோஸ் குறைந்து களைப்பு, தலைச் சுற்று, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் எடுப்பதே நல்லது. சல்பனையில்யூரியா (Sulphanylureas) வகை Glibenclamide, Glipizide, Glimepride, Gliclazide போன்ற மருந்துகள் இந்த ரகத்தில் அடங்கும்.
சாப்பாடிற்கு பின்
இரண்டாவது வகையானவை இன்சுலின் சுரக்கச் செய்வதை அதிகரிக்காது அதன் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துபவை. இதில் மெட்போமின் மற்றும் தயசொலினிடயோன்ஸ் என இருவகை மருந்துகள் அடங்கும்.
பெரும்பாலான நோயாளிகள் உபயோகிப்பது மெட்போமின் மாத்திரை (Metformin) ஆகும். இது குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்கள் கூடிய திறனுடன் உட்செலுத்துவதன் மூலம் குரதியின் குளுக்கோஸ் அளவைக் குறைத்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது.
அதேபோல தயசொலினிடயோன்ஸ் (Thiazolidinediones) நோயாளிகளின் உடலின் இன்சுலின் எதிர்ப்பை (Insulin Rsistance) முறியடித்து, இன்சுலினை கூடிய வினைத்திறனுடன் செயற்பட வைக்கும். அத்துடன் ஈரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேறுவதையும் தடுக்கிறது.
தயசொலினிடயோன்ஸ் ரகத்தைச் சேர்ந்த பயோகிளிடசோன் (Pioglitazone) மருந்து இங்கு இலங்கையில் Pioglit, Pionorm, Glizone, போன்ற பல வியாபாரப் பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இந்த இரண்டு வகை மருந்துகளும், இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்யாது. இதனால் இரத்தில் குளுக்கோஸ் அளவை சரியான அளவிற்குக் கீழ் குறைக்கமாட்டாது. எனவே இவற்றை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற விளைவுகள் வராமல் தடுக்கும் வண்ணம் உணவுக்கப் பின்னர் எடுப்பது நல்லது.
சாப்பாடுடன்
இதனைத் தவிர அக்கரபொஸ் Acarbose மற்றொரு வகை நீரிழிவு மாத்திரை உண்டு. இது நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் அதாவது மாப்பொருள் பதார்த்தங்கள் சமிபாடு அடைவதைக் குறைத்து அதன் மூலம் இரத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.
உணவுச் சமிபாட்டுடன் தொடர்புடைய மருந்து ஆதலால் இதனை உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். முதல் வாய் உணவுடன் சப்பிச் சாப்பிடுவது சிறந்தது. சப்பிச் சாப்பிடப் பிரியமில்லாவிட்டால் சாப்பிட ஆரம்பிக்கும்போது சிறிதளவு நீருடன் விழுங்க வேண்டும்.
சா.முன், சா.பின் விடயம் இப்பொழுது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன். சா.முன், சா.பின் என்பதை உ.முன், உ.பின் (உணவின் முன், உணவின் பின்) என எழுதினால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
ஆனால் கீழே இருப்பவரின் கவலையிலும் நியாயம் இருக்கலாம்.
இவ்வளவு காலமும் அவளின் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு சாப்பாடே வெறுத்துப் போனவர் அவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
Posted in சினிமா, பாரதி, பெண்ணியம் on 04/05/2010| Leave a Comment »
>பாரதி எமது மொழியின் முக்கிய கவிஞன். தேசவிடுதலைதை அவாவிய அவன் பெண் விடுதலை பற்றியும் பாட ஆரம்பித்தான்.
அவனது பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை பாய்ச்சியவர் சகோதரி நிவேதிகா.
புத்துணர்வு பெற்ற பாரதியின் செயற்பாட்டை ‘பாரதி’ திரைப்படத்தில் இருந்து எடுத்துத் தந்திருக்கிறார்கள். இப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை தேவயானி பெற்றதாக ஞாபகம்.
பாரதியும் பெரியாரும் இன்னும் எத்தனை மனிதர்கள் வந்து பேசினாலும் பாடினாலும் பெரும்பாலான ஆண்களிடையே பெண்கள் பற்றிய பார்வை மாறவில்லை.
பல பெண்களும் கூட தங்களுக்கு இழைக்கப்படும் பொதுவான பாலியல் ரீதியான அநீதிகளையும், குடுப்பத்தில் தங்களுக்கு காட்டப்படும் பாரபட்சங்களையும் எதிர்க் கேள்வி எழுப்பாது ஏற்றுக் கொள்வது கவலைக்குரியது.
Posted in அனுபவம், டொக்டரின் டயறி, நகைச்சுவை on 02/05/2010| 1 Comment »
>‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர்.
இரண்டாயிரம் ஆண்டுகள் என்ன அதற்கும் மேலான காலாச்சார பாரம்பரியம் எமக்கு உண்டு. இன்றும் எங்கள் கலாசாரம் செழுமையாக இருப்பதற்கு அதுவே முக்கிய காரணமாகும்.
ஆனால் சில தடவைகளில் அது சுமையாகவும் இருக்கும் என்பதையே அவர் அவ்வாறு பாடினார்.
இரண்டாயிரம் என்ன,
ஐயாயிரம் ஆண்டுப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி
மேலும் சுமை ஏற்றத்
தயங்காதவர்கள் நாம்.
எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.
இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒளவையார் காலத்திலேயே
‘அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள்’
நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அவர் பாடிய காலத்தில்
அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
இன்று அதன் புதிய அர்த்தம்
என்னவெனச் சிந்திக்கிறோமா?
அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?
தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம்.
‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று’ எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.
‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும் என்று எமக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாக்க அவ்வாறு செய்தோமா?
அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப்பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்த எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது!
புண்ணிய ஸ்தலம் ஒன்றைத் தரிசிக்கும் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலையி லேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.
கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் தலையை மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தேன்.
லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது.
கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப்
பக்தி யோடு அள்ளியெடுக்கக்
கையை நீட்டினால்
அருகிலிருந்தவர்
நமுட்டுச் சிரிப்போடு எழுகிறார்.
லுங்கியை உயர்த்திக் கொண்டு ‘பாரம் கழிந்து’ விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.
சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.
அவருக்குக் ‘கிரந்தி’ உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா.
சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும்.
அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வீட்டுக்கு வருவார்.
வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும்.
உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.
மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து,
ஒரு உருண்டை உருட்டி
ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில்
ஒளித்து வைப்பார்.
பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும்.
அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.
கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார்.
புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக.
மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது.
கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.
கிணற்றுக்கட்டைச் சுற்றி,
வீட்டைச் சுற்றி,
பாட்டியைச் சுற்றி
என ஓட்டப்போட்டி தொடரும்.
ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.
அன்று ஓடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் (Tetanus) சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.
பசுவின் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது
இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது.
ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி.
கசத் தடுப்பு (TB) ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவரல்லவா அந்த மூதறிஞர்.
தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.
படித்தவர்கள் கூட அறிவியலை விட
வாழையடி வாழையாக வந்த
பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும்
நம்பிக் கடைப்பிடித்து வந்த காலம் அது.
பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.
முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம்.
பிறந்தவுடன் பொக்குள் புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம்.
இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்கரியம் உலகின் சில பகுதிகளில் நடக்கிறதோ நான் அறியேன்.
உலகெங்கும் இன்னும் குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் ஏற்பு நோயால் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. 2008ற்கான அறிக்கைப்படி 6658 இவ்வாறு இறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் 2000-2003 காலப்பகுதியில் 257,000 அவ்வாறான சிசு இறப்புகள் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி விபரமாக அறிய உலக சுகாதார ஸ்தாபனத்தின அறிக்கையைப் படிக்க கிளிக் பண்ணுங்கள்
பிறப்புக் கால சிசு ஏற்பு வலி நோயின் (Neonatal Tetanus) அறிகுறிகளாக
ஆனாலும் இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.
வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.
பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான்.
சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ட மலந்தின்னிகள் நாம்.
மனித மலத்தைக் கண்டாலே
மூக்கைப் பொத்தி
மறுபக்கம் திரும்பும் நாம்
மாட்டின் மலத்தைப் புனிதமாக,
பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத
‘புதுமை’ மனிதர்களாக இருக்கிறோம்.
கைப்புண்ணோடு
சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?
இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி’ வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?
ஆசாரக்கோவைகளும் சைவவினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்தமை எமது சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா
அல்லது
கேடு கெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?
எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல.
அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால்
பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும்.
தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
வந்ததும் அவ கூப்பாடு போடுவா.
அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீரூற்றுவா.
பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா.
செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
‘கண்ட கண்ட சனங்களெல்லாம்’ பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்த அசூசைக்காகக் குளிப்பாவோ
அல்லது
ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.
எப்படியிருந்த போதும் அது எமது மூதாதையரின்
நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆஸ்பத்திரிகளுக்குப் பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன.
அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் (Hospital acquired infecions) என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியதாகும்.
எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது மிக நல்ல பழக்கம்தான்.
டொக்டருடைய கைபட்டாலும் கிருமி பரவிவிடும் எனக் கையைக் கொடுக்கப் பயப்படுகிற அதிதீவிர சுகாதாரச் சிந்தனையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள்’ அருவருப்பு என்பதே கிடையாது.
பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள்.
அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள்.
குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள்.
நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள்.
பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள்
என்பது பலரின் அங்கலாய்ப்பு.
நாங்கள் கையுறைகள் உபயோகிப்பதும்,
அது இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும்
கைகழுவியே
எமது கைகள் சுருங்கிவிட்டதும்
ஒருவர் கண்களிலும்படுவதில்லை.
Posted in ஆணுறை, கருத்தடை, மருத்துவம் on 01/05/2010| Leave a Comment »
‘இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை..’ என்று சொல்லிக் கொண்டு வந்தவர் கையில் மருத்துவ ஆய்வு கூட ரிப்போர்ட் இருந்தது.
அவரது முகத்தில் ஆச்சரியமும் எரிச்சலும்.
அவள் முகத்திலோ கவலையும் இயலாமையும்.
அவர் கையில் இருந்தது சிறுநீர்ப் பரிசோதனை முடிவு.
கர்ப்பம் தங்கியிருப்பதாக ரிப்போர்ட் உறுதி செய்தது.
அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள்.
கடைசிக்கு இன்னமும் ஒரு வயது கூட ஆகவில்லை.
‘கருத்தடை முறைகள் எதையும் உபயோகிக்கவில்லையா?’ என்று கேட்ட போது ‘உறை பாவித்தேன்’ என்று சொன்னார்.
‘பாவித்தும் எப்படித் தங்கியது எனத் தெரியவில்லை’ என ஆச்சரியப்பட்டார்.
தீர விசாரித்த போது ‘இவருக்கு போடுவதில் விருப்பமில்லை. கடைசி நேரத்தில்தான் அவசர அவசரமாகப் போடுவார்’ என்பதை மனைவி மிகுந்த சங்கோசத்துடன் தெளிவுபடுத்தினார்.
ஆச்சரியப்படுவதுடனும் எரிச்சலுறுவதுடனும் அவருக்குப் பிரச்சனை முடிந்துவிடும். சுமக்கவும், பெறவும், வளர்க்கவும் சிரமப்படப் போவது அவள்தானே!
ஆணுறை என்பது மிகவும் உபயோகமான ஒரு கருத்தடை முறையாகும். மிகவும் சரியான முறையில் உபயோகித்தால் 98% சதவிகிதம் வரை நிச்சயமானது.
அதற்கு மேலாக ‘தெரு மேயப் போவபவர்களுக்கு’ எயிட்ஸ், கொனரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றாமலும் பாது காக்கிறது.
ஆணுறை என்பது விறைத்திருக்கும் உறுப்பை மூடும்படி போடப்படும் ஒரு மென்மையான உறையாகும். விந்து வெளியேறியதும் பெண் உறுப்பினுள் சென்று கருத்தரித்தலை அது தடுக்கும்.
அத்துடன் பாலியல் நோய் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றாமலும் பாதுகாக்கிறது.
ஆயினும் பூரண பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின் அதனைச் சரியான முறையில் அணிந்து கொள்வது முக்கியமாகும்.
அணியும்போது அவதானிக்க வேண்டியவை
ஓவ்வொரு பாலுறவின் போதும் ஆணுறைiயை சரியான முறையில் உபயோகித்தால் 98% கர்ப்பம் தங்குவதைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதேபோல HIV நோய் தொற்றுவதை 80%-95% தடுக்கும் எனவும் தெரிகிறது. உறவின்போது சராசரியாக 2% ஆணுறைகள் வழுகிவிட அல்லது வெடித்துவிடக் கூடும்.
ஆயினும் இது அதனை சரியான முறையால் அணியாததால்தான் நிகழ்வதாகத் தெரிகிறது. எனவே அதனை சரியான முறையில் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தவறான கருத்துக்கள்
இதுவும் தவறான கருத்து. பெரும்பாலும் அவை ஒரே சைசில் கிடைத்தாலும் Latex என்ற பொருளால் செய்யப்பட்டிருப்பதால் உறுப்பின் அளவிற்கு ஏற்ப விரிந்து அல்லது சுருங்கிக் கொடுக்கும்.
ஆரம்பித்தில் குறிப்பிட்ட தம்பதிகளுக்கு ஏன் கர்ப்பம் தங்கியது என்பது கட்டுரையை அவதானமாக வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.
ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு உறவின் போதும் ஆரம்பத்திலேயே சரியான முறையில் அணிந்தால் கர்ப்பம் தங்குவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
அத்துடன் புற மேச்சலுக்குப் போனாலும் எயிட்ஸ் வராமல் தப்புவதற்கான சாத்தியமும் உண்டு. அதனால்தான் டபுள் அக்சன் எனச் சொல்லப்படுகிறது.
முன்பு தமிழ் நாட்டில் புள்ளிராஜா விளம்பரங்கள் வெளிவந்தன. கிளிக் பண்ணவும் இப்பொழுது தில்லிதுர கலக்குகின்றனவாம். இது சென்னை ஒன்லைன் செய்தி.
ஆனால் கொண்டோமுக்கு வேறு பல பயன்களும் உண்டு.அதிலொன்று இது. உங்களுக்கும் அவ்வாறு பயன்படலாமே!
இருந்தபோதும் இப்படிப் பாவிப்பதைவிட உண்மையான தேவைக்கு பயனபடுத்துவது முக்கியமாகும்.