Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2010

>“இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.”

மனைவியை இழந்த அவர் புலம்பினார்.

தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்).
நினைவில்லை.
வாயால் பேச முடியாது.
வேண்டியதைக் கேட்க முடியாது.
சாப்பிட முடியாது.
சலம் மலம் போவது தெரியாது.
செத்த பிணம்போலக் கிடந்தாள்.

நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின.

நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன.

ஆனால் காப்பாற்ற முடியவில்லை.
காப்பாற்றக் கூடிய நோயாளியல்ல.
காப்பாற்றியிருந்தாலும் இன்னும் சிலகாலம்
அவ்வாறு மயக்கமாக கோமா நிலையிலேயே
கிடந்திருப்பாள்.

கணவர் இளைப்பாறிய அரச பணியாளர். உள்ள பணம் அனைத்தையும் மருத்துவனைக்கு தாரை வார்த்துவிட்டார். பிள்ளைகளும் இல்லை.

தனது எதிர்கால வாழ்வு என்னவாகப் போகிறதோ என்ற கவலையில் அவரும் கரைசேர்ந்து விடுவாரோ என எண்ணத் தோன்றியது.

இப்படிப் பலநோயாளிகள் சுய உணர்வின்றிக் கிடக்கின்றார்கள். தான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா எனத் தெரியாத நிலையில் இருக்கிறார்கள். பராமரிப்பவர்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை. பொருளாதார ரீதியாகவும் உள, உடல் ரீதியாகவும்.

அவ்வாறு இரண்டு வருடங்களுக்கு மேலாக நோயாளியை கோமா நிலையில் வைத்துப் பராமரித்தவர்களும் உள்ளனர்.

இவ்வாறு வைத்துப் பராமரிப்பது தங்கள் கடமை என்று பலரும் கருதுகிறார்கள்.
தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை வைத்துப் பாராமரிப்பது தமது கடமை, மகிழ்ச்சி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆயினும் கூர்ந்து கவனித்தால் அவர்கள்
ஆழ்மனத்துள் படும் வேதனையும்,
உடல் உள நெருக்கீடுகளும்
அளப்பரியது என்பது தெரிய வரும்.

மருத்துவத்தின் வளர்ச்சியும் எதிர்கொள்ளும் சவால்களும்

அவ்வாறான நிலைக்குக் காரணம் என்ன?

மருத்துவ விஞ்ஞானம் அபரிதமாக வளர்ச்சியடைந்து விட்டது.
புதிய மருந்துகள் கிடைக்கின்றன.
உடல் இயக்கத்தை மிக நுணுக்கமாக கண்டறியக் கூடிய அறிவு வளர்ந்திருக்கிறது.
அதற்கு உதவக்கூடிய பரிசோதனை உபகரணங்கள் பாவனையிலுள்ளன. செயற்கையான முறையில் மரணத்தைத் தள்ளிப் போட்டு,
வாழ்வை நீடிக்கக் கூடிய உயிர்காப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.

நோயாளிக்கும் உறவினருக்கும் பயன் இல்லை

ஆனால் இவை யாவும் ஒரு இக்கட்டான நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சியின் அபத்தமான நிலை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய எவையுமே மரணத்தை நெருங்கிவிட்ட நோயாளிக்கு நன்மை பயப்பனவாக இல்லை.

அதேவேளை நோயாளியை உயிருடன் வைத்திருக்கிறோம் என்ற திருப்தியைவிட வேறேந்த நன்மை உறவினர்களுக்கும் கிடையாது.

நோயாளியின் விருப்பு

மரக்கட்டை போலக் கிடக்கும் நோயாளிக்கும் தனது விரும்பங்களை சொல்ல முடியாதுள்ள நிலை.

“என்னைத் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாகச் சாக விடுங்கள்.” எனப் பேச முடிந்தால் அவர் சொல்லக் கூடும்.

தானே தீர்மானிதல்

தனக்கு எத்தகைய சிகிச்சை அல்லது கவனிப்பத் தேவை எனத் தீர்மானிக்கும் உரிமை எந்த ஒரு நோயாளிக்கும் இருக்கவே செய்கிறது.

தற்போது செய்ய வேண்டியது என்ன, எதிர்காலத்தில் சிகிச்சை செய்ய வேண்டியவை எவை என்பது பற்றியும் அவரே தீர்மானிக்க வேண்டும்.

தெளிவுபடுத்தல்

ஆனால் அதற்கு முதல்
அவரது நோயென்ன,
அதற்கு எத்தகைய சிகிச்சைகள் செய்ய முடியும்,
சிகிச்சையின் பலன்கள் எவ்வாறு அமையும்,
நோய் எத்திசையில் பயணிக்கும் போன்ற விபரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அவர் தெளிந்த மனநிலையில் இருக்கும்போது தெளிவுபடுத்த வேண்டும். அத்தகைய சூழலில் அவர் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஏற்கக் கூடும். அல்லது வேண்டாம் என மறுக்கவும் கூடும்.

பத்திர வடிவில்

எதிர்காலத்தில் நோய் தீவிரமாகி அவர் சுயநினைவிழந்தால், அல்லது காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கத் தள்ளப்பட்டால் அந்த நேரத்தில் எத்தகைய கவனிப்பு கொடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதே அவர் தனக்குத்தான் தீர்மானித்து அதை பத்திர வடிவில் கொடுக்கலாம்.

அதற்கு உதவ வேண்டியது சுற்றியிருப்பவர் கடமை.
முக்கியமாக, உயிரோடு இருக்கும் காலத்தை நீடிக்கும் எத்தகைய சிகிச்சைகள் எதிர்காலத்தில் தனக்கு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைத் தானே இதன் மூலம் தெளிவுபடுத்த முடியும்.

சுருக்கமாகச் சொல்வதாயின் அந்திம கால மருத்துவ பராமரிப்புக்கான முன்னேற்பாடு (Advance Care Planning) என்பது பின்வரும் விடயங்களில் நோயாளிக்கு உதவுவதாகும்.

  • நோய் பற்றிய விபரங்களையும் அதன் எதிர்காலம் எப்படி அமையும் என்பதையும் தெளிவுபடுத்துவது.
  • இப்பொழுது உள்ள நோய்க்கு எதிர்காலத்தில் மருத்துவம் அளிக்கக் கூடிய சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கங்கள்.
  • தற்போதும் எதிர்காலத்திலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் கிடைக்கக் கூடிய நல்விளைவுகளையும், மாறாக அதன் சுமைகளையும் தெரியப்படுத்தல்.
  • நோயாளி தனது விருப்பத்தையும் தெரிவுகளையும் குடும்ப அங்கத்தவர்களுடனும். மருத்துவருடனும் கலந்தாலோசித்து முடிவுகளை ஆவணப்படுத்தல்.
  • தன்னால் முடிவு எடுக்க முடியாத வேளையில் புதிய பிரச்சனைகள் வந்தால் அதற்கான முடிவை தனக்காக அந்நேரத்தில் எடுப்பதற்கான ஒரு பிரதிநிதியை நியமித்தல்.
உறவினருக்கும் மன அமைதி

“இவ்வாறான அந்திம கால மருத்துவச் சேவைகளுக்கான முன்னேற்பாடு செய்வதன் மூலம் நோயாளிகளை இறுதி காலத்தில் பராமரிப்பதில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், உறவினர்களிடையே

  1. உளநெருக்கீடு,
  2. மனப்பதகளிப்பு நோய்,
  3. மனச்சோர்வு நோய்

ஆகியன ஏற்படுவதைக் குறைக்கவும் முடிகின்றது”.

இவ்வாறு பிரபல மருத்துவ இதழான BMJ அண்மையில் வெளிவந்த கட்டுரை கூறுவதானது இதற்கு ஆய்வுரீதியான வலுவையும் கொடுக்கிறது.
இது அவுஸ்திரேலியாவில் செய்யப்பட்ட ஆய்வு. இது பற்றி மேலும் அறிய கீழே .சொடுக்கவும்

இது எமது நாட்டிற்கான ஆய்வு அல்ல எனக் கூறி இப்பிரச்சனையை மூடி மறைப்பதில் எவ்வித பிரயோசனமில்லை.

காலாசார செழுமைக்கு இழுக்கா?

கலாசார செழுமைமிக்க எமது வாழ்க்கை முறையில் இது அவசியமற்றது என்று எண்ண வேண்டாம்.

முதியோர் இல்லங்களின் அவசியம் பற்றி சுமார் 20-25 வருடங்களுக்கு முன் பேசியபோதும் இவ்வாறே பலரும் தட்டிக்கழித்தனர். ஆனால் அப்படிப் பேசிய சிலரே நல்ல முதியோர் இல்லம் எங்கே இருக்கிறது எனக் கேட்டு இப்பொழுது வருகின்றனர்.

எனவே பிரச்சனை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்வரை வாழாதிருக்க வேண்டாம்.

வீரகேசரி வாரவெளியீட்டில் ஏப்ரல் 18, 2010 அன்று வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>கை கால் வாய்ப்புண் நோய் (Hand Foot and Mouth Disease)

பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார் தாய். ஒரே நோய் எல்லோரையும் தாக்கியிருந்தது.
இவர்களை மட்டுமின்றி வேறு பல பாடசாலைப் பிள்ளைகளையும் அண்மையில் பாதித்திருந்து. சில பாடசாலைகளில் நிறைய பிள்ளைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.

வாய்க்குள் புண்கள். சாப்பிட முடியாது அவதிப்படுகிறார்கள்.போதாக்குறைக்கு கை கால்களில் கொப்பளங்கள்.

கொப்பளிப்பான் (Chicken pox) போல மெல்லிய நீர்க் கொப்பளங்கள் அல்ல. சற்று மஞ்சள் நிறமாக ஓரளவு தடித்தவை. ஆயினும் சீழ்ப் பிடித்த கொப்பளங்களும் அல்ல.

இது என்ன நோய்?

கை கால் வாய்ப்புண் நோய் எனலாமா?

Hand Foot and Mouth Disease (HFMD) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

தானாகவே மாறக் கூடிய ஒரு சாதாரண தொற்று நோய்தான். Coxsackievirus என்ற வைரசால் தொற்றுகிறது. இது போலியோ நோயை ஏற்படுத்தும் கிருமியை ஒத்தது. ஆனால் அத்தகைய பாரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவதில்லை. எனவே பயப்பட வேண்டியது இல்லை.

அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் பலவாறாக வெளிப்படலாம்.

உடம்பு அலுப்பு, தொண்டைநோய், சாதாரண காய்ச்சல் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கும். பசியின்மையும் சேர்ந்து இருக்கலாம். வாயினுள் சிவப்பாக கொப்பளங்கள் போல ஆரம்பிக்கும். பின் உடைந்து ஏற்படும்

வாய்ப்புண்கள்தான் இந்நோயின் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண சூட்டு வாய்ப் புண்கள் (Apthous Ulcer) போலவே தோற்றமளிக்கும்.

அவற்றில் வலியும் இருக்கும். பொதுவாக காய்ச்சல் தோன்றி ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றும். காய்ச்சல் கடுமையாக அடிப்பதில்லை.

இதே போன்ற கொப்பளங்களும் புண்களும் பாதங்களிலும் உள்ளங் கைகளிலும் தோன்றும்.

குண்டிப் பக்கமாகவும் தோன்றுவதுண்டு.

இவை அரிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது முக்கிய அம்சமாகும்.

பரவுவது எப்படி?

ஒருவரிலிருந்து மற்றவருக்கு வேகமாகத் தொற்றக் கூடியது.

மூக்கிலிருந்து சிந்தும் நீர், எச்சில் போன்றவற்றலிருந்து பரவும். நோயுள்ளவர் தும்மும் போதும் இருமும் போதும் தெறிக்கும் துளிகள் மூலமே முக்கியமாகப் பரவும்.

எனவே கை லேஞ்சியால் அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது அவசியம். இது எந்த நோய்க்கும் பொருந்தும்.

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இதனைப் பழக்க வேண்டும்.

கொப்பளங்களிலுள்ள நீரின் மூலமும் பரவலாம். பிள்ளைகள் அடிக்கடி வாயுக்குள் கைகளை வைப்பதால் கிருமியால் மாசடைந்த கைகளால் வேகமாகப் பரவுகிறது.

ஏச்சிலால் வாயுலிலுமுள்ள கிருமிகள் பரவுவதால் நோயுள்ள ஒருவர் உபயோகித்த பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்யாமல் உபயோகிகக் கூடாது. வீட்டில் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் ஒரு வார காலத்தில் மட்டும் பரவும் என்றில்லை. பின்னரும் பரவலாம். சிலரில் நோய் வெளிப்படையாகத் தெரியாது. ஆயினும் அவர்கள் நோய் காவிகளாக இருந்து மற்றவர்களுக்குப் பரப்புவதும் உண்டு.

ஆபத்தான பின் விளைவுகள் எதனையும் இது ஏற்படுத்தாது. ஆயினும் வாய்ப் புண்கள் கடுமையாக இருந்தால் சில பிள்ளைகள் உணவுகளை உண்ணவும், போதிய நீராகாரம் எடுக்கவும் மறுப்பார்கள். அவ்வாறான நிலையில் நீரிழப்பு ஏற்பட்டால் நாளங்கள் ஊடாக ஏற்ற (IV Fluid) நேரிடலாம்.

உணவு

இதைத் தவிர்க்க பிள்ளைகள் உண்ண விரும்பும் நீராகாரங்களைத் தாராளமாகக் கொடுங்கள். ஐஸ் வோட்டர். ஐஸ் கிறீம் போன்ற குளிர்மையான நீராகாரங்கள் இந்நேரத்தில் வாய்க்கு இதமாக இருக்கும். குளிர்ந்த பாலும் நல்லது.

ஆயினும் வாய்ப் புண்களை உறுத்தக் கூடிய புளிப்புத்தன்மையுள்ள பழச்சாறுகளையும் ஏனைய நீராகாரங்களையும் தவிருங்கள்.

அதேபோல அதிக காரம் மற்றும் உப்பு சேர்ந்த உணவுகளும் புண்களை வேதனைப்படுத்தும்.

மென்மையான அதிகமாக மெல்லத் தேவையற்ற உணவுகளை குழந்தைகள் அந்நேரத்தில் விரும்பி உண்பர்.

உண்ட பின் நகச்சுட்டு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.

மருந்துகள்

மருந்துகள் எதுவும் தேவைப்படாது. காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றிற்கு பரசிட்டமோல் போதுமானது.

மருத்துவரின் ஆலோசனையுடன் வலியைத் தணிக்கும் இதந்தரும் ஓயின்மென்ட் பூசுவது வாய்ப்புண்களுக்கும் ஏனைய புண்களுக்கும் உதவும்.

அன்ரிபயடிக் எதுவும் தேவைப்படாது.

ஓரு வாரமளவில் தானாகவே குணமாவிடும்.

தடுப்பது எப்படி

சுத்தத்ததையும் சுகாதாரத்தையும் பேணுவதே அடிப்படை உத்தியாகும். முக்கியமாக மலம் கழித்தபின் சோப் போட்டுக் கைகளைச் சுத்தம் செய்வது அவசியம்.

என்னிடம் வந்த ஒரு தாயார் இந்நோயுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைகள் மலம் கழித்தால் கழுவுவது இவர்தான். ஆனால் அதன் பின் வெறுமனே கைகளை கழுவுவார்.
சோப் போட்டுக கழுவுவது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினேன்.

வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல்(டைபோயிட்), செங்கண்மாரி, பன்றிக் காய்ச்சல் H1N1   போன்ற பல நோய்களும் அவ்வாறுதான் பரவுகிறது என்பதையும் புரிய வைக்க வேண்டியிருந்தது.

வாய்க்குள் கை வைப்பது, நகங் கடிப்பது போன்ற பழக்கங்களாலும் அத்தகைய நோய்கள் பரவும் என்பதைச் சொல்ல வேண்டுமா?

குழந்தைகளுக்கு இவை பற்றிய அறிவை வளர்ப்பதில் ஆசிரியர்களது பங்களிப்பு அவசியமானது.

பெற்றோரின் முன் உதாரணமும் அறிவுறுத்தல்களும் அதைவிட மிக முக்கியமாகும்.

நோயுற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. இல்லையேல் பாடசாலைப் பிள்ளைகளிடையே இப்பொழுது பரவுவது போல வேகமாகப் பரவுவதைத் தடுக்க முடியாது.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய்நலமா? பத்தியில் (23.06.2010) நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான். ஆயினும் ஒரு காலமும் ஆஸ்த்மா நோய் வராத சிலருக்கு ஆஸ்த்மா இருப்பதாகக் கூறியவுடன், நான் சொல்வது சரிதானா என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்ததை உணர முடிந்தது.

ஒவ்வாமை நோய்கள்

ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.

அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘கிரந்தி உடம்பு’ என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

சுகாதாரமான சூழல் கோட்பாடு

அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?

(விளக்கப் படத்தை தெளிவாகப் பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணுங்கள்)

கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.

முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.

அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை!

கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.

ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.

நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)

தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.

தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.

அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.

ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.

இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.

மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.

ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.

இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.

ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்.

ஒவ்வாமை,அலர்ஜி, ஆஸ்த்மா சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.

Read Full Post »

>

சாதாரண தொலைபேசியால் தான்  தொல்லை என்றால் இப்பொழுது செல்லுலர் தொலைபேசிகள் வேறு வந்து விட்டன.
எவரைப் பார்த்தாலும் கைகளுக்குள் கைக்குண்டு வைத்திருப்பது போலப் பற்றிக் கொண்டு வீரநடை போடுகிறார்கள்.
கையில் இருக்கும், இல்லாவிட்டால்
ஷேட் பொக்கற்றுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்.
அல்லது இடுப்பில் தொங்கும்.

ரெஸ்ராரன்டில் நண்பர்களுடன் குளிர் ஊட்டப்பட்ட பியர் அடித்துக் கொண்டிருந்த கந்தசாமியாருக்கு முடுக்கிக் கொண்டு வந்தது.
கொஞ்சம் தாமதித்தால் முட்டி வழிந்து மார்பிள் தரையில் சிந்தி
தன்னையும் மற்றவர்களையும் சறுக்கீஸ் விளையாட வைத்துவிடும். 

பயம் கிளம்ப கழிவறையைத்
தேடிக் கண்டு பிடித்தார்.

முதல் கூடு மூடிக்கிடந்ததால் அடுத்ததை நோக்கி விரைந்தார்.
நல்ல காலம் அதற்குள் யாருமில்லை.
உள்ளே நுழைந்த அவர் சிப்பை திறந்து
வெளியில் எடுத்து,
பாரம் இறக்கத் தொடங்கினார்.

“எப்படிப் போகுது”
அமானுசக் குரல் எழுந்தது.
யாராவது எட்டிப் பார்க்கிறார்களா என்ற திகைப்பு எழுந்தது,
சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமில்லை.
குரல் முதலாவது கூடத்திலிருந்து வருவது புரிந்ததும் திகைப்பு அடங்கியது.
ஆயினும் பொதுக் கழிப்பறையிலிருந்து
மற்றவர்களுடன் பேசுவது
இவருக்கு உவப்பானதல்ல.
வெட்கமாகவும் கோபமாகவும் இருந்தது.
“என்ன சத்தத்தைக் காணவில்லையே”
மற்றவர் திரும்பவும் கேட்டார்.
“கேடுகெட்ட மனிதன்.
என்ன பேசுவது என்று தெரியாமல்
கதைக்கிறான்.”
கந்தசாமியாருக்கு என்ன மறுமொழி சொல்வது
என்று தெரியவில்லை.
“நல்லாப் போகுது”
எரிச்சலை அடக்கிக் கொண்டு பதிலளித்தார்.
உண்மையிலேயே எரிச்சல் இன்றி
குழாயைத் திறந்தது போல
பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது.
“எனக்கு வேலை முடிஞ்சுது.
நான் புறப்படப் போறன். நீயும் வாறியா”
மற்றவர் கேட்டார்.
இவருக்கு இன்னமும் அரைவாசி மீதமிருந்தது.
முழுவதையும் இறக்கினால்தான்
நிம்மதியாகும்.
அதோடை இவன்ரை பேச்சுத் தொல்லையையும்
வெட்ட நினைத்தார்.
“எனக்கு முடியவில்லை.
நான் முடிச்சுக் கொண்டு வாரன் நீ போ”
இவர் பதிலளித்தார்.
“மடையன்”
பக்கத்துக் கூட்டிலிருந்து கோபமாகக் குரல் எழுந்தது.
இதைக் கேட்டதும் கந்தசாமியாரின்
கையும் மனமும் சேர்ந்து பதறின.
“டார்லிங்!
…நான் உன்னோடை செல்லில் பேசுறதுக்கு
 பக்கத்து யூரினலில் நிற்பவன்
தானே மறுமாழி சொல்லுறான்….
இடியட்”
விசயம் புரிவதற்கிடையில் 
நடுங்கிய கை விட்டுப் போனதால் 
கந்தசாமியாரின் ரவுஸ்சர் 
நனைந்துவிட்டது.
0.0.0.0.0.0

Read Full Post »

>குளிராக எதுவும் சாப்பிட முடியுதில்லை என்று சொல்பவரா நீங்கள்? அல்லது காரம் புளிப்புச் சாப்பிட்டால் பல் கூசுகிறது என்கிறீர்களா? ஆம் நீங்கள் சொல்வது சரிதான் உங்களுக்குப் பற்கூச்சம் இருக்கிறது.

பற்கூச்சம் என்பது பாரதூரமற்றதாக அலட்சியம் பண்ணும்படி இருக்கலாம் அல்லது தாங்க முடியாத வேதனையாகவும் இருக்கலாம். சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் நீடிப்பதாகவும் இருக்கலாம்.

பிரிட்சில் இருந்து எடுத்தது போன்ற குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும்.

அதேபோல புளிப்பு அதிகம் உள்ள பழங்கள், புளிப்பான உணவுப் பண்டங்களை உண்ணும்போதும் கூசும். சிலருக்கு கடுமையான இனிப்பும் கூசவைக்கும்.

பொதுவாக எமது பற்களின் மேற்புறம் எனாமல் எனப்படுவது கடினமானது. எமது உடலின் மிகக் கடுமையான பகுதி இதுதான். உணர்வற்றது அதனால் வலி தெரிவதில்லை.

ஆனால் எனாமலுக்கு உள்ளே மென்மையான நரம்புச் செறிவுள்ள டென்ரீன் இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள டென்ரீன் வெளிப்பட்டால் அது வலியை உணரும்.

பற்களும் முரசும் சந்திக்கும் பகுதியில் எனாமலின் தடிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் சிறிய சேதம் அதில் ஏற்பட்டாலும் பற்கூச்சம் ஏற்படும்.

காரணங்கள்

மிக முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை நீங்கள் உபயோகிக்கும் முறையும்தான்.

பிரஸ்சைப் பொறுத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸ்சை (Soft or Medium)மட்டுமே உபயோகியுங்கள்.

மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே தடிப்பமான (Hard) பிரஸ் தேவை.

 பல் துலக்கும் முறை

பல் துலக்கும் முறையும் முக்கியமானதாகும்.
அடுப்புக் கரி மண்டிய சமையல் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்துக் கழுவுவதுபோல பிரஸ்சால் கண்டபடி பற்களை உரச வேண்டாம். பற்களை மட்டுமில்லாது முரசுகளையும் புண்படுத்திவிடும்.

மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழ் நோக்கித் துலக்குங்கள். அதே போல கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேல் நோக்கித் துலக்குங்கள். இவ்வாறு துலக்கும்போது முரசு காயப்பட்டு தேயாது.

பல் அரிப்பு Dental Erosion என்பது பற்கூச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.

இது பல்லின் மேற்பரப்பான எனாமலில் ஏற்படும் நுண் அரிப்புகளாகும். அமிலத் தன்மையான உணவுகளாலும் பானங்களாலும் அவ்வாறு ஏற்படும். எனாமல் கரைந்தால் உள்ளே இருக்கும் டென்ரீன் வெளித் தெரியவரும்.

முரசு கரைதல் மற்றொரு காரணமாகும். முரசின் கன அளவு குறைந்து கொண்டு போகும். வயதாகும் போது இது தானாக நடக்கும் செயலாகும்.
முரசு கரைந்து செல்லும்போது பற்களின் வேர் வெளித் தெரிய ஆரம்பிக்கும். பல் வேரை எனாமல் மூடியிருப்பதில்லை.
அதனால்தான் முரசு கரைந்து அவை வெளியே வந்ததும் பற் கூச்சம் ஏற்படுகிறது.

முரசு நோய்கள் மற்றொரு காரணமாகும் வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாது விட்டால் பற்களின் மேல் அழுக்கு மென்படலமாகப் படிய ஆரம்பிக்கும். இது பிளாக் (Dental Plaque) எனப்படும். இதைக் கவனியாது விட்டால் அது இறுகி காரையாகப் (Tartar) படியும்.  இவ்வாறான காரை படர்தல் முரசு கரைதல் தீவிரமாகும். முரசு நோய்களுக்கு நீரிழிவு நோயும் முக்கிய காரணியாகும்.

பல்லுக் கடித்தல் பழக்கம் காரணமாக பற்களின் எனாமல் படிப்படியாகக் கரைந்து பற் கூச்சத்தை ஏற்படுத்தும்.
பற்சொத்தை பல் உடைதல் ஆகியவற்றால் ஆரம்பத்தில் பற் கூச்சம் ஏற்பட்டாலும், அதன் பின் பெரும்பாலும் பல்வலிதான் ஏற்படும். நித்திரையில் பல் கடித்தல் கடுமையாக இருந்தால் உங்கள் பற்களைப் பாதுகாக்க Tooth guard உதவும்.

பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசைகள் பெரும்பாலும் பேக்கிங் பவுடர் மற்றும் பெரோட்சைட் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அவற்றை அதிகம் உபயோகித்தாலும் எனாமல் கரைந்து பற்கூச்சம் ஏற்படும்.

சில தருணங்களில் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று வந்தாலும் பற்கூச்சம் ஏற்படுவதுண்டு, பல் சுத்தப்படுத்துதல் மற்றும் பல பற்சிகிச்சைகளின் பின் ஏற்படக் கூடிய பற்கூச்சம் தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் செல்ல தானே குணமாகிவிடும்.

வாயைச் சுத்தமாக வைத்திருக்க உபயோகிக்கப்படும் சில மருந்துகளில் (Mouth Wash) அமிலத்தன்மை இருக்கிறது. ஏற்கனவே டென்ரின் சேதமுற்ற ஒருவர் தொடரந்து அத்தகைய வாய் கொப்பளிக்கும் மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தால் சேதம் மோசமாகி பற்கூச்சத்தை கொண்டுவரும்.

ஆனால் புளோரின் கலந்த வாய் கொப்பளிக்கும் மருந்துகள் பற்கூச்சத்தை குறைக்கும். எனவே பல் மருத்துவரின் ஆலோசனையுடனேயே அவற்றை உபயோகிப்பது உசிதமானது.

பற்கூச்சம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்.

வாய்ச் சுத்தத்தை ஒழுங்காகப் பேணுங்கள். காலை மாலை பல்துலக்குவதுடன், உணவுகள் நீராகாரங்களின் பின் வாயை அலசிக் கொப்பளிப்பது அவசியம். கடும் இனிப்பான மற்றும் புளிப்பு அமிலத் தன்மையுள்ள உணவு நீராகாரங்களின் பின் மிக முக்கியமாகும்.

மென்மையான பற்தூரிகையை உபயோகிங்கள்.
முற்புறம் வளைந்த தூரிகைகள் பல்வரிசைகள் முழுவதையும் இலகுவாக அடைந்து சீர்மையாகத் துலக்க உதவும்.
தூரிகையால் கடுமையாக அழுத்தித் தேய்ப்பது கூடாது.

மென்மையாகவும், கவனமாகவும் சரியான முறையிலும் பல் துலக்க வேண்டும்.
முக்கியமாக முரசும் பல்லும் இணையும் இடங்களில் மிக அவதானமாகத் துலக்கவும்.

பற்கூச்சத்தைக் குறைப்பதற்கான விசேட பற்பசைகள் பரவலாகக் கிடைக்கின்றன. புளோரின் கலந்த பற்பசைகள் நல்லது. படுக்கப் போகும்போது அத்தகைய பசையில் சிறிது கூசும் பல்லின் மேல் தடவுவது உதவலாம். பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் விசேட பற்பசைகள் பற்கூச்சத்திற்குக் கூடாது.

அமிலத்தன்மை, இனிப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிருங்கள். கடும் சூடு, கடும் குளிருள்ளவையும் கூடாது.

பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய
கட்டுரையின் மீள் பிரசுரம்

Read Full Post »

>

திக்குவல்லை கமாலின் மணிவிழா ஆண்டு இதுவாகும். அவரது மணிவிழா இன்று சனிக்கிழமை 12.03.2010 சனிக்கிழமை ஞாயிறு அன்று உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடை பெற இருக்கிறது.

முற்போக்குக் கொள்கைகளுடன் தன்னை ஆரம்ப காலம் முதல் இணைத்துக் கொண்ட  கமாலுக்கு மல்லிகையுடன் எப்பொழும் தனி உறவு உண்டு.

கலை இலக்கிய நண்பர்கள் சார்பில் எடுக்கப்படும் இவ் விழாவிற்கு மல்லிகை ஆசிரியரும் முது பெரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா தலமை தாங்குவது மிகவும் பொருத்தமானது.

மல்லிகையில் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த திக்குவல்லை கமால் சிரித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், தினபதி, ராதா, ஞானம் எனத் தனது படைப்புவெளியை அகலித்துக் கொண்டார்.

இன்று இலங்கையில் அவரது படைப்பு வராத பத்திரிகையோ சஞ்சிகையோ இருக்காது என எண்ணத் தோன்றுகிறது.  நிறைய எழுதினாலும் தனது படைப்பின் தரத்தில் சோர்வுக்கு இடம் தராதவர் கமால்.

நண்பர்களான கோகிலா மகே ந்திரன், ச.முருகானந்தன் ஆகியோரின் மணிவிழா, தெளிவத்தை ஜோசப்பின் பொன் விழா, நீர்வை பொன்னையனின் 80வது ஆண்டு நிறைவு என இந்த ஆண்டு அமர்க்களப்படுகிறது.

திக்குவல்லை கமாலின் எழுத்தை ஆரம்ப காலம் முதல் ரசித்துப் படிப்பவன் நான்.

முக்கியமாக அவரது படைப்புகளில் எப்பொழுதும் தவழும் தென்னிலங்கைத் தமிழின் அழகு எனக்கு எப்பொழுதுமே உவப்பானது. தமிழகத்தில் கரிசல் மண்ணின் தமிழுக்கு ராஜநாராயணன் எவ்வாறு இலக்கிய அந்தஸ்த்து கொடுத்தாரோ அவ்வாறே திக்குவல்லை பகுதி இஸ்லாமிய மக்களின் தமிழுக்கும், வாழ்வுக்கும் இலக்கிய அந்தஸ்த்து கொடுத்ததற்கு கமாலே முன்னோடி எனலாம்.

எனக்கு அந்நியமான அல்லது மிகவும் வித்தியாசமாகப் பட்ட
அந்த தென்னிலங்கை இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறையையும்
அவரின் படைப்புகள் மூலமே முதலில் அறியவும்,
புரிந்து ரசிக்கவும் முடிந்தது.

அவரது இயற் பெயர் முஹம்மத் ஜெமால்தீன் முஹம்மத் கமால் ஆகும். 
மாத்தறைப பகுதியைத் சேர்ந்த திக்குவல்லை என்ற கிராமத்தில் 1950ம் ஆண்டு  மார்ச் மாதம் 3ம் திகதி பிறந்தார். 

தனது கிராமத்தின் பெயரைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட புலோலியூர் சதாசிவம், தெளிவத்தை ஜோசப், நீர்வை பொன்னையன் போலவே  இவரது  எழுத்துலக் பெயரும் இணைந்துள்ளது
 
நான் மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் என நினைக்கிறேன், அவர்
எலிக் கூடு என்ற கவிதை நூலை வெளியிட்டிருந்தார்.
அதை தேடிப் பிடித்து வாங்கி 16 பக்களையே கொண்ட அந்த நூலை வரிவரியாக வாசித்து ரசித்தது நேற்றுப் போல இருக்கிறது.

அதனை எனது நூலகத்திலும் கவனமானப் பேணியிருந்தேன்.
இன்றும் அது எனது பருத்தித்துறை வீட்டில் இருக்கும் என நம்புகிறேன்.

இன்றும் கமாலின்படைப்புகள் மீதான எனது ஈர்ப்புக் குறையவில்லை.
சஞ்சிகைகளில் அவரது சிறுகதை அல்லது கட்டுரை வந்திருந்தால்
நான் முதலில் படிப்பது முடிப்பதும் அதுவாகத்தான் இருக்கும்.

இப்பொழுது மல்லிகையில் வெளிவரும் ‘வாழும் நினைவுகள்’ தொடரையும் ஆவலோடு படித்து வருகிறேன்.
இம் முறை அதில் இலக்கியப் போட்டிகள் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள்
பெரும்பாலும் எனக்கும் உடன்பாடானவைதான்.

அதில் அவர் கருணையோகன் என்ற கவிஞர் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அது கிழக்கு பல்கலைக் கழகதமிழ்த்துறைத் தலைவர் செ.யோகராசாதான்
என  நம்புகிறேன்.

இவை யாவற்றிற்கும் மேலாக கமால் என்ற மனிதன் எனக்கு மிகவும் உவப்பானவர்.
சாந்தமான முகம், விரிந்தும் விரியாத மலர் போன்ற மென்முறுவல், மென்மையான குரல் உயராத உரையாடல் என அவரது குணாதசியங்கள் மனத்தை மகிழ்விக்கின்றன.

முரண்பாடுகளைத் தவிர்த்து
எப்பொழுதும் புரிந்துணர்வுடன் நட்பைப் பேணும்
அவரது பண்பு என்னை எப்பொழுதும் கவர்ந்து வந்திருக்கிறது.

அவர் எழுதிய சிறுகதைகள் எத்தனை நுர்றுகள் என்பதை நான் அறியேன்.
ஆனால் அவர் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த நூல்களின் எண்ணிக்கை 23 த் தாண்டிவிட்டதாக அறிகிறேன்.

சிறுகதைகள் தவிர இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் வானொலி நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியம் எனப் பல் துறையிலும் தனது படைப்பாகத் திறனை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் மூலம் அயல் மக்களின் வாழ்வை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் செய்து வருகிறார்.

இதுவரை இவரது சுமார் 23 நூல்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளார். இவற்றில் குறைந்தது நான்கு சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவையாகும். 8 சிறுகதைகள், கவிதை 1, சிறுவர் இலக்கியம் 3, நாவல்கள் 5,  நாடகம் கட்டுரை நூல்கள் எனவும் மேலும் பல நூல்கள் உள்ளடங்கும்.

‘ஒளி பரவுகிறது’ நாவலுக்காகவும், ‘உதயபுரம்’ சிறுவர் இலக்கியத்திற்காகவும் தேசிய சாஹத்திய விருதுகளை முறையே 1995லும் 2005 லும் பெற்றுள்ளார். இன்னும் பல கெளரவப் பரிசுகளையும் போட்டிப் பரிசுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது நூல்களின் பட்டியலைக் காண DickwelleKamal  இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

அவர் பல்லாண்டு வாழ்ந்து இலக்கியப் பணிசெய்ய
எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கிய நண்பர்கள் அவ் விழாவில் கலந்து சிறப்பித்து அவரை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தினக்குரல் பத்திரிகை மற்றும் பதிவுகள் இணைய இதழ் ஆகியவற்றில் நான் எழுதி வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.

Read Full Post »

>இரவு நேரம் 7.45 இருக்கும். டெலிபோன் மணி கணீரிட்டது.

“டொக்டர் உங்களை அவசரமாகக் காண வேண்டும், இப்ப வந்தால் காணலாம் தானே?”

“இப்ப வந்தால் காணலாம், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஏலாது. 8 மணிக்குப் பூட்டிப் போடுவோம்.”

“உடனே வாறன்”

‘எப்படி வருவார்?’

அவர் இருப்பது மூன்று மைல் தொலைவில், பத்து நிமிடத்தில் வர முடியுமா? விசாரித்தேன்.

“எப்படியும் வந்து விடுவேன். ஒரு ஐந்து பத்து நிமிடம் பிந்தினால் பூட்டிப் போடாதீர்கள். ப்ளீஸ் மிகவும் அவசரம்….” கடிவாளம் போட்டார்.

காரில் வந்து விடுவாராக்கும் என எண்ணிக் கொண்டேன்.

இத்தகைய டெலிபோன் அழைப்புக்கள் எனக்கு வழமையானதுதான்.

தினமும் 7.15 ல் இருந்து 7.30 மணிக்குள் இத்தகைய அழைப்புக்கள் ஒன்று இரண்டு நிச்சயம் வரும்.

கடைசி நிமிடத்தில் டொக்டரை இழுத்துப் பிடிக்கும் பிஸியானவர்களிடமிருந்துதான்.

“சரி வாங்கோ” என்றேன்.

நோயாளிகள் மேலும் பலர் காத்திருந்ததால் நேரம் போனது தெரிய வில்லை. மீண்டும் டெலிபோன் கிணுகிணுத்தது. நேரத்தைப் பார்த்தேன். 8.20 ஆகிவிட்டது. ரிசீவரைத் தூக்கினேன். மணி நின்றிடக் குரல் ஒலித்தது.

“டொக்டர் கொஞ்சம் பிந்தி விட்டது. வாகனம் பஞ்சர். இப்ப சரி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. உடனே வந்திடுவன்”

எஞ்சியிருந்த ஓரிரு நோயாளர்களையும் பார்த்து முடிக்க நேரம் 8.30 ஆகிவிட்டது. போன் பண்ணியவரை அப்போதும் காணவில்லை.

நேர்ஸ்களுக்கும் வீடு போகும் அவசரம்.
எனக்கும் அப்பிடித்தான்.
ஆயினும் என்ன அவசரத்திற்காக தேடி வருகிறாரோ என்று அனுதாபம் மேவியது.

இன்னமும் சிறிது நேரம் பொறுத்துப் பார்க்க தீர்மானித்தேன். மேலும் 10 நிமிடங்கள் காத்திருந்து பார்த்தேன். காணவில்லை. பொறுமை கடந்து விட்டது.

டிஸ்பென்சரியைப் பூட்டி, வெளி கேற்றையும் பூட்டிக் கொண்டு வீதியில் இறங்கினோம். நர்ஸ்களும் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அப்பொழுது ஓட்டமும் நடையுமாக பூனையாக குறுக்கே வந்தார்.

“பூட்டிப்போட்டியளோ? நான் தான் போன் பண்ணியது”

“நீங்கள் போன் பண்ணியபடியால்தான் எட்டு மணிக்குப் பூட்ட வேண்டிய நான் இதுவரை காத்திருந்தேன்”

“சொறி டொக்டர் வந்த மினிபஸ் பஞ்சராகி நின்றதால் வேறு பஸ் பிடித்துவர நேரமாகிவிட்டது.”

ஓகோ! ஆடிப்பாடி பஸ்சில்தான் வந்திருக்கிறார்.

இவரது வீட்டிலிருந்து பஸ் ஸ்டான்டுக்கு வரவே பத்து நிமிடங்கள் வேண்டும். பிறகு காத்திருந்து பஸ் பிடித்து இங்கு வந்து சேர எப்படியும் குறைந்தது ஒரு மணித்தியால மாவது வேண்டும்.

அப்படி இருக்க பத்து நிமிடங்களில் வந்து சேர்வேன் என என்னை முழுமடையனாக்கி விட்டார்.

“பிளீஸ் டொக்டர்” காரியக்காரன் அழுவது போலக் கெஞ்சினார்.

“என்ன வருத்தமோ!” குமுறிய என் நெஞ்சு இளகியது.

“சரி வாங்கோ” எனத் திரும்பி நடந்தேன். பின் தொடர்ந்தார்.

பூட்டிய கதவுகளைத் திறந்து டிஸ்பென்சரிக்குள் நுழைந்து எனது கதிரையில் அமர்ந்து கொண்டேன். உள்ளே வந்த அவர் சர்வ சாதாரணமாக ஆறஅமரக் கதிரையில் சாய்ந்து கொண்டார்.

தான் வரப் பிந்துவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினார்.
தினசரி கடுமையான ஒபிஸ் வேலை, வேலையால் வர தாமதமாவது.
அடுத்த நாளைக்கான உடைகளைத் துவைத்தல்,
சமையலுக்கு மரக்கறி வாங்கப் போக வேண்டியமை,
இப்படிப் பல சோலிகள்.

“அதுதான் லேட். உங்கட குணம் எனக்குத் தெரியும் தானே டொக்டர். நோயாளிகளின் துன்பம் தெரிந்தவர். பாவம் பார்க்கிறவர். எப்படியும் காத்திருப்பியள் என்று தெரியும்”

ஐஸ் அடிப்பதுடன்
ஏமாந்த சோணாகிரிப் பட்டத்தையும்  சூட்டுகிறார்….

லேசாக கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

“டொக்டருக்கு நேரம் போட்டுதோ? இந்த நேரத்திலை வந்தால்தான் உங்களோடை ஆறுதலாகக் கதைக்கலாம். இல்லாவிட்டால் சனம் விடுமே? மற்ற நேரம் என்றால் சனமாயிருக்கும்.
எப்படிக் கதைக்கிறது?
உங்களுக்கும் எங்களைப் போலை சிலரோடை கதைச்சால் தானே மனம் ஆறும். எந்த நேரமும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டால் சலிப்புத்தானே வரும்”
மகாவலி கங்கை போல கருணை ஆறு பரவி வந்தது!

 கரிசனையான மனிதன்!

இந்த அரைச் சாமத்திலை வந்து கழுத்தறுக்கிறார். விட்டால் நடுச்சாமம் வரை இருப்பார். கேள்வியைப் போட்டு கதையை மாத்தினேன்.

“இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்”

“எனக்கோ வருத்தமோ? ஒன்றும் கிடையாது.”

“அப்ப ஏன் இந்த நேரத்திலை?”

“இரண்டு நாட்களாக வேலைக்குப் போகவில்லை. வீட்டிலை வேலை இருந்தது. நாளைக்குப் போக வேணும். அதுதான் ஒரு மெடிக்கல்
சேர் ட்டிபிக்கற் வாங்க வந்தனான்.”

எதையும் வாயடிச்சுச் சாதிக்கலாம் என நினைக்கும் கபடக்காரர்.

இன்றைய உலகில் டெலிபோன் என்பது மிகவும் அத்தியாவசிய மான சாதனம் ஆகிவிட்டது.

அது நடந்து பல வருடங்களாகிவிட்டன.

ஆனால் இன்றும் தொல்லைகள் தீரவில்லை. பண்டா போக சிறிமா வந்தார். அவர் போக ஜெயவர்த்தன, சந்தரிகா, மஹிந்த அந்தப் பக்கம்.
செல்வா, அமிர்தலிங்கம் பிரபா என மற்றொரு பக்கம்.

தீராத வியாதி.

இலங்கைத் தமிழர் பிரச்சனை போல என்றுமே தீராத தொடர் பிரச்சனைதான்.

ஒரு சின்னஞ்சிறு செய்தியைத் தெரிவிப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து 21 மைல் பிரயாணம் செய்து யாழ் செல்ல வேண்டிய காலம் 10-15 வருடங்களுக்கு முன் வரை இருந்ததை மறக்க முடியாது.

இன்று பருத்தித்துறையில் இருந்து கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் எல்லாம் கணப்பொழுதில் சாத்தியமாகிறது.

முகத்தோடு முகம் பார்த்துப் பேசுவது வசமாகிவிட்டது.

ஆனால் அதே நேரம் நவீன வசதிகளை துஸ்பிரயோகம் செய்பவர்களும் ஏராளம் என்பதையும் நாம் நினைக்கத்தான் வேண்டும்.
அன்று வந்த திடீர் தொலைபேசி அழைப்பு இது.

“டொக்டர் நான் டின்னர் ஒன்றிற்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
இவன் எனது மகன் திடீரென தனக்கு வயிற்றோட்டம் என்கிறான்.
இப்ப உங்களிட்டை வந்து காத்துக் கொண்டிருக்க எனக்கேலாது.
நேரமுமில்லை.
ஏதாவது மருந்து சொல்லுங்கோ.
மருந்தைப் போட்டிட்டுப் பேசாமல் படுத்துக் கிடக்கட்டும்.
நாளைக்கு நாளையின்றைக்கு கொண்டு வந்து காட்டிறன்”

அவ நாளைக்கும் வரமாட்டா,
நாளையின்றைக்கும் வரமாட்டா.
மகனுக்குக் குணமான பின் டாக்டரிடம் போக வேண்டிய அவ சியம் என்ன?

அம்மாவிற்கு டின்னருக்குப் பிந்தாமல் போவதற்கு நேரம் முக்கியம்.
மகனின் வருத்தம் இரண்டாம் பட்சம்.

டொக்டர் போனில் பேசும்போது,
ஏற்கனவே டாக்டருக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி நோயாளியின் நேரம் மூன்றாம் பட்சம்!

டொக்டரின் நேரம் கணக்கிலேயே சேராது!

ஒரு டெலிபோன் பண்ணும் செலவில் அம்மாவின் கொன்ஸ்சல்டேசன் முடிந்து விட்டது.

மிக அவசரத்திற்கு மருத்துவர்களை டெலிபோனில் அழைப்பதில் தவறில்லை.

ஆனால் வேலையில் மருத்துவர்கள் மும்மரமாக இருக்கும்போது சிறு காரணங்களுக்காக தொல்லைப்படுத்துவது சரியாகாது.

இன்று ஒரு நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  மூன்று அழையா விருந்தாளி அழைப்புகள்.

‘மருந்தைச் சாப்பிடுவது எப்படி’ என ஒன்று.

நோரடியாகவே மூன்று தடவைகள் விளங்கப்படுத்தும் போது ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விட்டவர்தான் அழைந்திருந்தார்.
மற்றக் காதுக்கு பஞ்சு அடைத்துவிட்டுப் பேசுங்கள் என்று சொல்லத்தான் மனம் வந்தது.

‘இப்ப வந்தால் காணலாமா’ என மற்றொன்று.

ரிசப்சன் பெண்ணிடம் கேட்டும் சந்தேகம் அடங்காத பெண்ணிடமிருந்து.

‘தலைவலிக்குப் பனடோல் போடலாமா’ என மற்றொருவர்.

ஏற்கவே அருகிருந்த நோயாளி டெலிபோன் அழைப்புகளால் சலித்து, எழுந்து  ஓடாதது நான் செய்த புண்ணியம்.

மீண்டும் கிணுகிணுத்தது. இது பொக்கறிலிருந்த செல்போன்!

“ஹலோ..” எனது குரலில்  உயிரில்லை என்பது எனக்கே புரிந்தது.

“மச்சாங் கோமத……” புரியாத குரல்,

தெளிவாக விளங்காத பாசை.

ரோங் கோல்…

தொல்லை அழைப்புகள் தொடரும்…..

நான் எழுதி முன்பு ‘மல்லிகை’ சஞசிகையில் வெளிவந்து  ‘டொக்டரின் டயறி’ நூலிலும் இடம் பெற்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. 
பல மாற்றங்களுடன்

Read Full Post »

>

சிறுவயதில் எனக்கு நீந்துவதற்கு ஆசை.
ஆனால் தண்ணீரில் மூழ்குவதற்கு சரியான பீச்சல் பயம்.
மழைக்கு நிரம்பிக் கிடந்த கிணற்றில் என்னொத்த வாலுகள் துள்ளிக் குதித்தன.
நானும் துள்ளிக் குதித்தேன்.
கிணற்று நீருக்குள் அல்ல.
பிற்புறமாக
புல் வளர்ந்திருந்த தரையில்.
நீண்ட காலமாக நீந்தப் பழகவில்லையே என்ற கவலை.
திர்ந்தது கவலை! 
Mr.Bean னின் தீரத்தைக் கண்டபின்.

Read Full Post »