>நீரிழிவின் முன்நிலை என்றால் என்ன?
நீழிழிவு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் நீழிழிவின் முன்நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ தெரியாது. நீரிழிவின் முன்நிலை (Prediabetes) என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய ஆரம்ப கட்டமாகும்.
குழந்தைகள் பாடசாலைக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்னர் ‘முன்நிலைப் பள்ளி’க்குப் (Pre School) போகிறார்களே அது போன்றது. ஆரம்பப் பாடசாலை எனவும் சொல்வர். அதே போல ‘நீரிழிவின் ஆரம்பநிலை’ எனவும் சொல்லலாம்.
இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சீனியின் அளவு (Fasting blood sugar) 110 முதல் 125 வரை இருந்தால் `நீரிழிவின் முன்நிலை’ எனலாம். இது 126க்கு மேல் அதிகரிக்குமாயின் அவருக்கு நீரிழிவு எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.
மற்றொரு பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு, இதனை குளுக்கோஸ் ரொலரன்ஸ் டெஸ்ட் (Oral Glucose Tolerance test -OGTT) என்பர்.
50 முதல் 75 கிராம் வரை அளவுள்ள குளுக்கோஸ் கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு 2 மணிநேரத்தின் பின் குருதி குளுக்கோஸ் அளவை கணிப்பர்.
இது 140 ற்குக் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு இல்லை. 140 முதல் 199 வரை இருந்தால் அது நீரிழிவின் முன்நிலை (Prediabetes) ஆகும். 200க்கு மேல் இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என நிச்சயம் சொல்லலாம்.
நீரிழிவின் முன்நிலை பற்றி முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதுவே ஹாய் நலமா? புளக்கின் முதற்பதிவும் (26.6.2007) கூட. இது மூன்று ஆண்டு நிறைவைக் குறிக்கும் பதிவு. பழைய பதிவு பல மாற்றங்களுடன் உங்கள் பார்வைக்கு.
யாருக்குப் பரிசோதனை அவசியம்
உங்களுக்கு வயது 45ற்கு மேல் என்பதுடன் உங்கள் எடையும் அதீதமானது எனில் (Obese) உடனடியாகச் செய்து பார்ப்பது அவசியம். எடை சரியான அளவில் இருந்தால் கூட அடுத்த முறை மருத்துரிடம் செல்லும்போது இதை எப்பொழுது செய்வது என்பது பற்றிக் கலந்தாலோசியுங்கள்.
இன்று பலரது எடைகளும் அதீதமாக அதிகரித்து வருகிகறது.
இதன் காரணமாக எடை அதீதமாக உள்ளவர்களுக்கு பிரஸர், குருதியில் அதிகரித்த கொலஸடரோல், அதிகரித்த ரைகிளிசரைட் (Triglyceride) அளவு, நல்ல கொலஸ்டரோல் ஆன HDL குறைந்திருப்பது சேர்ந்திருந்தால் 45 வயது எனக் காத்திருக்காது சந்தேகம் ஏற்படும் போது மருத்துவர்கள் செய்யும்படி ஆலோசனை கூறுவர்.
இதைத் தவிர தமது பரம்பரையில் நீரிழுவு உள்ளோர், கர்ப்பமாயிருக்கும்போது நீரிழிவு வந்த பெண்கள்(Gestational Diabetes)
பழைய பெயர்கள்
முன்பு இதனை Impaired Fasting Glucose என அழைத்தார்கள். அல்லது Impaired Glucose Tolerance என்றும் சொன்னார்கள்.
ஆயினும் மருத்துவப் பின்னணி அல்லது மருத்துவச் சொற்களில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் தெளிவாக அதன் கருத்தைப் புலப்படுத்துவதற்காக புதிய பெயர் கொடுக்கப்பட்டது.
நீரிழிவின் முன்நிலையின் பின் விளைவுகள்
நீரிழிவின் முன்நிலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் சாதாரண மனிதர்களை விட1.5 மடங்கு அதிகமாகும். ஆயினும் முழுமையான நீரிழிவு வந்தவர்களுக்கு இது 2 முதல் 4 மடங்குகள் அதிகமாகும்.
இந்த நிலையில் உள்ளவர்கள் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். அல்லது அதுவராமல் நீண்டகாலம் தள்ளிப்போடலாம் என்பது இப்பொழுது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.
அத்துடன் மேற் கூறிய மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சாத்தியத்தையும் குறைக்கும். எனவே
எப்படித் தடுப்பது
உங்களுக்கு `நீரிழிவின் முன்நிலை’ இருக்குமாயின் அது நீரிழிவு நோயாக மாறாமல் தடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.
- வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குருதியில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவது
- மருந்துகள் உட்கொள்வதன் மூலம் செய்வது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன எவை?
* உணவு முறையில் மாற்றங்கள் செய்தல்,
* எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்.
* அது முடியாது விட்டால் குறைந்தது தமது எடையில் 5முதல் 10 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும்.
* தினசரி உடற்பயிற்சி செய்தல். தினசரி முடியாவிட்டால் கிழமையில் 5 நாட்களுக்காவது 30நிமிடம் செய்ய வேண்டும். துரித நடைப் பயிற்சி நல்லதாகும்.
ஆகியனவே அவை.
இவற்றை ஒழுங்காகக் கைக்கொண்டால் அவருக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதத்தினால் குறைகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
மேலதிக நலன்கள்
இதில் முக்கியமான விடயம் என்னவெனில், வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கின்ற காலம் வரைதான் நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என்பதில்லை. அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட அது நீடிக்கிறது.
உதாரணமாக இந்த ஆய்வு ஏழு வருடங்களுக்குச் செய்யப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடித்த அந்த நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட மேலும் 3 வருடங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருந்தது என்பது நம்பிக்கை அளிக்கும் முடிவாகும்.
வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயற்படுத்த முடியாதவர்களுக்கும் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தும் குருதியில் சீனியின் அளவைக் குறைக்க முடியாதவர்களுக்கும் மருந்துகள் உதவக்கூடும்.
மருந்துகள் உதவுமா?
மெட்போமின் (Metformin), அகாபோஸ் (Acarbase), ரொஸிகிளிட்டசோன் (Rosiglitazone) ஆகிய மாத்திரைகள், நீரிழிவு வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன. இதுவும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, நீரிழிவு வரவாய்ப்புள்ளவர்கள், மேற்கூறியவற்றில் ஒரு முறையை வைத்திய ஆலோசனையுடன் கடைப்பிடிப்பது உசிதமானது.
வேறு நோய்களுக்கான மருந்துகள்.
அத்துடன், பிரஸர் இருந்தால் அதற்கு உபயோகிக்கும் மருந்துகளையும் அவதானமாகத் தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில், அடனலோல் (Atenolol), எச்சிடி (HCT) ஆகியனவும் அவை சார்ந்த மருந்துகளும் நீரிழிவு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும்.
தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
Read Full Post »