Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2010

>முதுமையிலும் இளமை என்று சொன்னால் அவரைச் சொல்லலாம். வயது 85 ஆகிறது. மனைவியும் உயிரோடு இருக்கிறா. ஆனால் அவ வருத்தக்காறி. பிள்ளை குட்டியள் பேரக்குழந்தைகள் எனப் பெரிய குடும்பம்.

தனது ஆரோக்கியத்தில் வலு கவனம். சின்ன வருத்தம் என்றாலும் உடனடியாக மருந்து எடுக்க வந்துவிடுவார்.

“எந்த வருத்தத்தையும் வச்சுக் கொண்டிருக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே கிளைஞ்சு போட வேணும்” என்பார்.

தடிமன், காய்ச்சல், தலையிடி, முழங்கால் நோ, உழைவு குத்து இப்படி சில்லறை வருத்தங்கள்தான். டயபிடிஸ், பிரஷர், இருதய நோய் போன்ற ஆரோக்கியக் கேடுகள் எவையும் அவரை அண்டியது கிடையாது. இனி அண்டவும் வாய்ப்பிலை. வயசானதால் விரைவில் இனி அவை வர வாய்ப்பில்லை.

அதற்கிடையில் மறு உலகமடைந்து விடுவார் என்பதாலும் அல்ல. உண்மையிலேயே உடல் உள நலங்கள் நல்ல நிலையில் இருக்கிறது.
மருந்திற்கு வரும்போது இந்த வயதிலும் எவரது துணையுமின்றித் தனியாகவே வருவார்.

பசையுள்ள மனிதன். காரில் வருவார். தான் ஓட்டுவதில்லை. இவருக்கென டிரைவர் இருக்கிறான். ஆனால் என்னைச் சந்திக்க உள்ளே வரும்போது தனியாகவே வருவார்.

வலு பம்பல்க் காரன். பகடிகளுக்கும் குறைவில்லை. இடையிடையே என்னோடு கதைச்சுக் கொண்டிருப்பதில் வலு புளுகம். அதுவே அவருக்கு டொனிக் மாதிரி.

ஆனால் ஒரு பிரச்சனை. பேரைக் கேட்டால் வயசைச் சொல்லுவார். வருத்தம் என்ன எண்டு கேட்டால் காலையில் ‘காரில் வோக்கிங்’ போன கதையைச் சோடிச்சுச் சோடிச்சுச் சொல்லுவார்.

காது மந்தம்.!!

ஆனால் காது கேட்கும் கருவி போடுவதிலும் விருப்பமில்லை.
“உந்தச் செவிட்டு மிஷின் எனக்குத் தோதுப்படாது”
என அடியோடு நிராகரித்துவிடுவார்.

ஒருவாறு கடைசியில் எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். நவீன விலையுயர்ந்த Hearing aidனை ஒன்றை காதுநோய் நிபுணர் ஊடாக பெற்றுக் கொண்டார்.

மிக அதிசயமாக நன்றாகப் பொருந்தியது. தெளிவாகக் கேட்டது. சந்தோசப்பட்டார்.

அடுத்த முறை சந்தித்தபோது எவ்வாறு இருக்கிறது என்று கேட்டேன்.

“நல்லா இருக்கு. முந்தியே போட்டிருக்கலாம். தப்ப விட்டுட்டன்”
சிறிய ஏக்கம் இழையோடினாலும் மகிழ்ச்சி மேலோங்கி நின்றது.

“எப்படி வீட்டை மனிசி பிள்ளையளுக்கு உங்களுக்கு காது கேட்பதில் சந்தோசமோ” எனக் கேட்டேன்

“அவையளுக்கு எப்படியோ ! ஆனால் என்ரை லோயருக்கு நல்ல சந்தோசம்.”

“லோயருகுக்கோ ….”

காது கேட்பதற்கும் லோயருக்கும் என்ன சம்பந்தம். குடும்பத்தினரை மீறிய சந்தோசம் லோயருக்கு எப்படி வரும்.

“ஓம்!  நாலுதரம் உறுதியை மாத்தி மாத்தி எழுதினால் அவருக்கு நல்ல வரும்படிதானே”

சுருங்கிய தோல்களுக்கிடையே கண்கள் சிமிட்டின.

“எனக்கு காது கேக்கும் என்ற விசயத்தை வீட்டை ஒருவருக்கும் சொல்லயில்லை. ஒண்டும் விளங்காதவன் போலை இருந்த கொண்டு அவையடை கதையளைக் கேட்டுக் கொண்டிருந்தன். ..”

…அதாலைதான் உயிலை மாத்தி எழுத வேண்டி வந்தது.”

வழமைக்கு மாறாக இன்று ஏக்கப் பெருமூச்சு அவரிலிருந்து பிறந்தது.
 பிறந்த வந்த ஏக்கமா?

0.0.0.0.0

Read Full Post »

>எனது ஊர் பயணத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது நான் எனது ஆரம்பப் பாடசாலைக்கு சென்ற தினமாகும். அறிஞர்கள் பலரும் கல்வியால் பெருமை பெற்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளம் இட்டது அந்தச் சிறிய பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் தான் என்பதை நினைக்கும்போது ஆச்சரியம் மேலிடுகிறது.

பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் , சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆகியோரின் புனித பிஞ்சுப் பாதங்கள் பதிந்த மண் அது.

பாரதி போற்றிய
அருளம்பல சுவாமிகள்
(Arulampala Swamy)

எத்தனை கல்விமான்கள் அந்தப் பாடசாலை மாணாக்கர்களாக இருந்திருக்கிறார்கள்.

Thuraisamipillai

பரமேஸ்வராக் கல்லூரியில் அத்தக் காலத்தில் அதிபராக இருந்த துரைச்சாமிப்பிள்ளை,

திரு.வே.தா.சி.சிவகுருநாதன்.

 ஆனந்தக் கல்லூரி ஹெட் மாஸ்டராகவும், Raja’s Picture Lessons என்ற ஆங்கில பாடசாலை நூலாசரியருமான தே.தா.சி.சிவகுருநாதன்,

Raja’s Picture lessons by
V.T.S.Sivagurunathan

கவிஞர் யாழ்ப்பாணன், கற்கண்டுப் பண்டிதரான பொன்.கிருஸ்ணபிள்ளை, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர்.வை.கா.சிவப்பிரகாசம், என அடுக்கிக் கொண்டே போகலாம்.

திரு.வை.கா.சிவப்பிரகாசம்

இன்றைய தலைமுறையில் பல வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கணக்காளர்கள், தொழிலதிபர்கள், ஆசரியர்கள் எனப் பலரின் ஆற்றல் வெளிப்படுவதற்கு உந்துகோலாக இருந்திருக்கிறது. நானும் அங்கு படித்தேன் என்பது என்னைப் பெருமை கொள்ள வைக்கிறது.

புதிதாகக் கட்டப்பட்ட வாகனத் தரிப்பிடத்தில் சைக்கிள்கள் ஒழுங்காக விடப்பட்டிருக்கின்றன.

புதிய வானத் தரிப்பிடம்

பாடசாலைக்கு சென்ற 04.08.2010 அன்று செல்லக் கிடைத்தது.

அதிபருடன் நான் அவரது அலுவலகத்தில்

சுமார் 50 வருடங்களுக்கு முன் படித்த அதே பாடசாலைதானா இது ஆச்சரியாக இருந்தது. அந்தக காலக்கதையை விட்டாலும் சுமார் 15 வருடங்களுக்கு முன் நான் பார்த்த பாடசாலையாகவும் இது இல்லை. முற்றாகப் புதுப் பொலிவு அடைந்திருக்கிறது. இவை கடந்த 5 வருடங்களுக்குள் நடந்த அதிசய மாற்றங்கள். அதற்கான மந்திரக்கோல் அதிபர் கனகலிங்கம் கையில் இருந்தது.

வாசலில் வரவேற்கிறது வண்ணச் சுவர். தொடர்ந்து இரண்டை வாசல் பெரிய கதவு. கார் லொறி ஈடாகச் சுலபமாக உள்ளே நுழைக் கூடியளவு பெரிதாக, மேலே பாடசாலைப் பெயர் வளைவுடன்.

பாடசாலை மண்டபங்கள் வகுப்பறைகள் மண்டபங்கள் யாவும் வண்ணப் பொலிவுடன் கண்களுக்கு இதமாக இருக்கின்றன. பாடசாலைச் சூழல் குப்பை கூளமின்றி மிகத் துப்பரவாக இருக்கினறன.

ஓவ்வொரு மரத்தின் மீதும் அதன் பெயர் எழுதப்பட்டு மாணவர்களை சூழலுடன் இணைத்துக் கல்வி புகட்டுகின்றன.

மண்டபங்களுக்கு வெளியே பூஞ்செடிகள் அழகாகக் காட்சியளிக்கின்றன. போதிய நீரும் கவனிப்பிலும் ஆனந்தமாகத் தலையசைத்து எங்களுக்கு வணக்கம் கூறுகின்றன.

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

வகுப்பறைச் சுவரில் வகுப்பாசிரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. வசதியான தளபாடங்கள் சிறார்களுக்குக் கிடைத்துள்ளன.

சமைலறை சுத்தமாக இருந்தது. பணியாளர்கள் சீருடையணிந்து சமையல் செய்கிறார்கள்.

பயிற்றங்காய் வெட்டப்பட்டு நீரில் கழுவிச் சமைப்பதற்குத் தயாராக இருப்பதை காணக் கூடியதாக இருந்தது.

கணனி அறை நவீனமயப்பட்டுத்தப்பட்டுள்ளது.

கணனி அறையில் அதிபர்.மு.கனகலிங்கம்.

புதிய கம்பியூட்டர்களுடனும் வசதியான தளபாடங்களுடன் மாணவர்களுக்கு கல்வியூட்டத் தயாராக இருக்கிறது.

போதிய இடவசதி இல்லாததால் விளையாட்டு மைதான அரங்கில் மாணவர்களுக்கான ஒரு வகுப்பு நடைபெறுவதை அவதானிக்கலாம்.

விளையாட்டு மைதான அரங்கில் வகுப்பு

பாடசாலையின் பாலர் பிரிவு புதிய கம்பிவலை வேலியுடன் அழகாகக் காட்சியளிக்கிறது.

கிணறு அசுத்தப் பாமதவாறு கம்பி வலையால் மூடப்பட்டுள்ளது. தண்ணீர்த் தாங்கியும், அதை நிரப்ப மோட்டாரும் இருப்பதால் நீர் வசதிக்குக் குறைவில்லை.

பாலர் பிரிவின் நவீன மலசல கூடம்

 பாலர் பிரிவிற்கு நவீன மலசல கூடம் கிடைத்திருக்கிறது.

பிரதான பாடசாலையின் பழைய சிறுநீர்க் கூடம்

ஆயினும் பிரதான பாடசாலையின் சிறுநீர் கழிப்பிடம் மிகப் பழையது. சிறந்த நவீன மலசல கூடம் புதிதாக அமைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

புலமைப் பரிசில் அளித்தவர்களினதும் பாடசாலை வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த ஏனையவர்களின் தரவுகளும் சுவர்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

 
அதிபர் அறை கணனிமயப்படுத்தப்பட்டு தரவுகள் மிக ஒழுங்காக பேணப்படுகின்றன.

பாடசாலையில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனதும் தரவுகள் புகைப்படத்துடன் கணனி  ஏற்றபட்டுள்தை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

மதிய போசனம் அளிப்பதற்காக தரவுகன் தினமும் Excel ல் செய்யப்பட்ட மென்பொருள் மூலம் கணக்கிடப்பட்டுப் பேணப்படுகின்றன. தினமும் பாடசாலைக்கு வந்த மாணவர்களின் தொகையை உள்ளீடு செய்தால். இன்றைக்குத் தேவையான அரிசி, மரக்கறி, எரிபொருள், சமையல் கூலி போன்ற சகல விடயமும் கணக்கிடப்படுகிறது.

மாத முடிவில் மாதாந்தச் செலவுக் கணக்கு விபரம் உடனடியாகக் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான பாடசாலைகளில் அத் தரவுகளை எழுதிக் கணுக்கிட்டுப் பேணுவதற்கு ஒரு ஆசிரியரின் வேலை நேரம் ஒதுக்கப்படுவதைக் காணலாம்.

இவ்வாறு நவீன வசதிகளை எமது சினஞ்ச் சிறு பாடசாலைக்குக் கொண்டு வந்த அதிபரும், அவருக்கு வலது கையாக நின்று உதவும் உபஅதிபர்,  மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவராவார்கள்.

பாடசாலைக்கு அவசியம் தேவைப்படும் ஏனைய வசதிகள் பற்றி மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.

Read Full Post »

>

எண்பது வயதிலும் மனிதநேய எழுத்துப் பணி துறக்காதவர் 
சாகித்தியப் பரிசு கிடைக்காத சிறந்த மூத்த படைப்பாளி
எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள்? தமது ஆத்ம திருப்திக்காக எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தாங்கள் கொண்ட இலட்சியத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். சமூகத்தில் தனது அடையாளத்தை பதிக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். 
எல்லோரும் எழுதுகிறார்களே நானும் முயன்று பார்க்கலாம் என முயற்சிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பலரும் இவ்வாறான எண்ணத்துடன் எழுத்துத்துறைக்குள் நுழைகிறார்கள். ஆனால் கால வெள்ளத்தில் பொறுப்புணர்வு அதிகரித்து, சமூக அக்கறையும் மேலோங்க அவர்களது பார்வை விரிவடைகிறது.
‘நாம் ஏன் எழுதுகிறோம்’ என்று தனது எழுத்துலகப் பாதையை வெளியுலகிற்கு துல்லியமாக வெளிச்சம்போட்டுக் காட்டி எழுதுபவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்க முடியும். உள்ளத்தில் கள்ளமில்லாத படைப்பாளியால்தான் அவ்வாறு எழுத முடியும். 
அண்மையில் 80 வயதை எட்டிய ஒருவர் 
 • தனது இளமைப் பருவம் முதல் கடந்த சுமார் 5 தசாப்தங்களாக கொள்கைப் பிடிப்போடு சிறுகதைகளைப் படைத்து வருகிறார். 
 • கலைத்துவமாகவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக சிறப்பாகவும் எழுதி வருகிறார். 
 • அடக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும் அவரது படைப்புகள் குரல் கொடுக்கின்றன. 
 • முற்போக்கு இலக்கியத்தில் அவருக்கெனத் தனியிடம் உண்டு. 
 • இலங்கையின் பெரும்பாலான பத்திரிகைகள் அவரது படைப்புகளை விருப்போடு பிரசுரிக்கின்றன. 
 • வாசகர் மட்டத்திலும் எழுத்தாளர் மத்தியிலும் மதிக்கப்படுபவர். 
 • ஆயினும் இன்றுவரை அவருக்கு இலங்கைத் தேசிய சாஹித்தியப் பரிசு கிடைக்கவில்லை. 
இவரது முதல் சிறுகதைத் தொகுதி 1961 ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் ‘சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை’ எனத் தடுத்துவிட்டதாக தெரிகிறது. 
அந்த ஒரே ஒரு வருடம் மட்டும் சிறுகதைக்கென சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது.

இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன, தனிப்பட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. 

அவர் பரிசுகளைத் தேடி ஒருபோதும் ஓடியதில்லை. முற் கூறிய சாஹித்திய மண்டலம் உட்பட எந்தப் போட்டிக்கும் தனது நூலை அனுப்பியதில்லை. 
‘ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்தே வரவேண்டும். பாரதிக்கும் கார்க்கிக்கும் யார் பரிசு கொடுத்தார்கள்’

எனக் கூறி போட்டிகளையும் பரிசுகளையும் நிராகிரிக்கிறார் அவர். 

 • இருந்தபோதும் கொழும்பு பல்கலைக் கழகம் 1998 லும், 
 • போராதனைப் பல்கலைக்கழகம் 2009லும் 

அவரது படைப்புப் பணிகளைச் சிலாகித்து இலக்கிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கத் தவறவில்லை.

அவர்தான் நீர்வை பொன்னையன். சிறந்த தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு பெறாத சிறுகதைத் தொகுதி ‘மேடும் பள்ளமும்’ ஆகும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாது ஒழிய வேண்டும் என்ற மனிதநேயக் கொள்கையை தனது கல்விப் பிராயத்திலேயே வரித்துக் கொண்டவர் அவர்.

தனது ஊரில் ஆரம்பக் கல்வியைப் பெற்றாலும் பட்டப் படிப்பை மேற்கொண்டது வங்காளத்தில். போராட்ட உணர்வும் முற்போக்குக் கொள்கைகளும் இவரது உள்ளத்தில் பதிவதற்கு அங்கிருந்த சூழலும் முக்கிய காரணங்கள் ஆகின்றன. 

இளமைப் பிராயத்திலேயே முற்போக்கு எண்ணங்கள் தனதுள்ளத்தில் ஆழப் பதிந்த அவர் தான் கொண்ட இலட்சியத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறார். எழுத்து இவரைப் பொறுத்த வரையில் ஒரு சமூகப் பணி. தன்னை ஒரு சமூகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். சாதி, மதம், பிரதேசம், பொருளாதாரம் ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்படும் சகல மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து தன் எழுத்தாணியை கூர்மையாகப் பயன்படுத்துகிறார்.
மண்ணின் மீது பற்றுக் கொண்டவர் இவர்;. இதனால் தனது பிறப்பிடமான நீர்வேலியை தனது பெயரோடு நீர்வை என இணைத்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பொன்னையா என்ற தனது பெயரையே பொன்னையன் எனச் சுருக்கிக் கொண்டவர். இருந்தபோதும் நீர்வை பொன்னையனான அவர் நண்பர்கள் பலருக்கும் நீர்வை மட்டுமே. 
நீர்வை பிரதானமாக ஒரு சிறுகதைப் படைப்பாளி. இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை அவர் எழுதியபோதும், அவற்றில் சில ‘நாம் ஏன் எழுதுகிறோம’; என்ற கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தபோதும், அவர் தன்னை சிறுகதையாளனாகவே முனைப்புப் படுத்தியுள்ளார். 
ஈழத்து முற்போக்கு சிறுகதை எழுத்தாளர்களின் மூத்த தலைமுறையைச் சார்ந்த இவரது ஆரம்பகாலப் படைப்புகளே மிகுந்த கலைத்துவம் மிக்கவையாக அமைந்தது ஆச்சரியமிக்கது. இவரொத்த பலரும் சூழலுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் கொண்ட, கற்பனை வரட்சியான, பிரச்சார வாசனையால் வெறுக்க வைக்கும், கலைவரட்சியுடனான போர்முலா ரீதியான கதைகளாகக் கட்டிக்கொண்டிருந்த நேரத்திலேயே மண்மணம் மிக்க கலைத்துவப் படைப்பகளைத் தந்துள்ளார். 
எமது நாடு ஒரு விவசாய நாடு. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சொந்தக் காணியற்றவர்கள். குத்தகைக் காணிகளில் பயிர் செய்பவர்கள். வயல்கள் மாத்திரமின்றித் தோட்டப் பயிர்களும் குடாநாடெங்கும் செழித்தருந்தன. ஆனால் விவசாயிகள் வறுமையில் வாடினர். இவர்களைப் பற்றி தமது படைப்புகளில் பேசாது கற்பனையான தொழிலாள வர்க்கப் பிரச்சனைகள் பற்றி பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது நீர்வை மட்டும் விவசாயிகள் பிரச்சனையை தனது படைப்பகளில் முதன்மைப் படுத்தினார். குடாநாட்டு விவசாயிகளைப் பற்றி மட்டுமின்றி வன்னிப் பிரதேச விவசாயிகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் எழுதத் தவறவில்லை. 
முக்கியமாக மேடும் பள்ளமும் என்ற இவரது முதற் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் கிராமிய மணம் ரம்யமானது. அத்துடன் பல்வேறுவிதமான பாணியில் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலைநேர்த்தியில் அவை மிகச் சேர்ந்தவை. 
வங்காளத்தில் படிக்கும்போது மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு பற்றியதால் அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் பரந்த அனுபவம் கிட்டியது, அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதாலும் இவருக்கு நவீன இலக்கியங்களுடனான பரிச்சியம் கிட்டியது. இவற்றின் ஊடாக  படைப்புகளில் கருத்தாளம் இருக்கும் அதே நேரம் உருவ நேர்த்தியும் கலையழகும் சேர்ந்திருக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிந்திருக்கிறார். இதனால்தான் நீர்வையால் தனது சமகால எழுத்தாளர்கள் பலருக்கும் இல்லாதவாறு சிறுகதைப் படைப்பின் சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது. யதார்த்தம், நனவோடை, குறுங்கதை போன்ற மாறுபட்ட வடிவங்களை பரீட்சித்து அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கல்வி கற்று இலங்கை திரும்பிய நீர்வை தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முழு நேர அரசியல் பணியாளராக இருந்ததால் தொழிலாளர்களுடனும், உழைக்கும் மக்களினதும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்களது பிரச்சனைiயை அனுபவபூர்வமாக அறிந்தார். அவர்களது பிரச்சனைகளுக்காக அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்தார். 
இதனால் இவர் எழுதிய கட்சி அரசியல் சிறுகதைகளிலும் செயற்கைத்தன்மை இருக்கவில்லை. பிரச்சார வாடை அவற்றில் இருந்தபோதும் பட்டறிவும் அனுவமும் இணைந்ததால் அவற்றில் உண்மைத்தன்மை வெளிப்பட்டது. 
இவர் அதிகம் எழுதுபவரல்ல. இதுவரை சுமார் 70-80 சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.
 • மேடும் பள்ளமும், 
 • உதயம், 
 • பாதை, 
 • ஜன்மம், 
 • வேட்கை, 
 • நீர்வை பொன்னையன் சிறுகதைகள், 
 • நிமிர்வு 

ஆகியன இவரது ஏழு சிறுகதைத் தொகுப்புகளாகும். 

இவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்கள் என்ன என யோசிக்கும்போது பல விடயங்கள் முக்கியமாகப் படுகின்றன. நீர்வையின் படைப்புகள் கருத்தாளம் நிறைந்தவை. எப்பொழுதும் அவை சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய அவசியமான கருத்துக்களை முன்வைப்பவையாக இருக்கும். தேர்ந்தெடுத்த சொற்கள், சுருக்கமான வசன அமைப்பு, தெளிவான நடை, உரையாடல்கள் ஊடாக கதை சொல்லும் பாணி, சிறப்பான முடிவு, செறிவான குறும் தலைப்புகள் எனப் பலவாகும்.
பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் கதை சொல்லும் கலையை நீர்வை பரீட்சித்திருக்கிறார். இவற்றில் பல அவரது படைப்புலகின் ஆரம்ப கட்டங்களில் இடம் பெற்றன. தனக்கென ஒரு பாணி உருவாகியதும் அதன் வழியிலேயே நீண்ட காலம் பயணித்தார். 
ஆயினும் அண்மைக் காலங்களில் அதன் வடிவம் சார்ந்த மற்றொரு புது முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கதை முழுவதையும் தனித்தனி வாக்கியங்களாக பந்தி பிரிக்காமல் எழுதி வருகிறார். சிறிய வசனங்கள். கவிதையாக இல்லாமல் அதே நேரம் புதுக்கவிதை போன்ற தோற்றத்துடன் படைக்கப்படுகின்றன. அண்மையில் வெளிவந்த ‘நிமிர்வு’ தொகுதியில் இத்தகைய படைப்புகளைக் காண்கிறோம்.
ஏற்கனவே குறிப்பட்ட ‘நாம் ஏன் எழுதுகிறோம்’ என்பது இவரது கட்டுரைத் தொகுதியாகும். 
‘உலகத்து நாட்டார் கதை’ என்பது இவரால் மீள மொழியப்பட்ட நாட்டார் கதைத் தொகுப்பு. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலுள்ள நாட்டார் கதைகளின் தொகுப்பு இது பல பதிப்புகள் கண்ட ஒரு சிறந்த நூலாகும்.
விபவி கலாசார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதுடன், ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்ற’த்தின் முக்கிய அங்கத்தவராகவும் செயற்படுகிறார். ஆயினும் தாய்ச் சங்கமான ‘முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் ஆரம்ப காலம் முதல் அதன் செயற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்தவர். அதன் வளரச்சிக்கு உதவியவர். அதன் மகாநாடுகள் சிறப்பாக நடைபெற முக்கிய பணியாற்றியவர். 
அவ்வாறு இருக்க எதற்காக இப்பொழுது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் எனப் பிரிந்து நின்று செயற்படுகிறீர்கள் எனக் கேட்டபொழுது, 
“முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயலிழந்து போய் பல வருடங்களாகிறது. அதற்கு புத்துயிர் கொடுக்க பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போயிற்று. அதன் நீண்ட காலச் செயலாளரான பிரேம்ஜி கனடாவிலிருந்து வந்து முயன்றும் முடியாமல் போயிற்று. எனவே முற்போக்கு கருத்துகளை உடைய படைப்பாளிகளை ஒன்று சேர்த்து பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது” 
என்கிறார்.
“சிறுகதை, கவிதை நூல் வெளியீடுகளுக்கு அப்பால், மூத்த முற்போக்கு சிறுகதையாளர்களையும் கவிஞர்களையும் இன்றைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் தொகுப்பு நூல் வெளியீடுவது, தோழர் காரத்திகேசன், பேராசிரியர்.க.கைலாசபதி போன்றோரது நினைவுச் சொற்பொழிவுகள் நடாத்துவது, இலக்கியச் செல்நெறிகள், இலங்கையின் கல்வி முறை, சூழலியல், சேதுசமுத்திரத் திட்டம், புவிவெப்படைதல், உலகமயமாதல் போன்ற சமூதாய மேம்பாடு நோக்கிய விடயங்களில் கருத்தரங்குகளும் நூல்வெளியீடுகளும் என இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் முழு மூச்சுடன் செயலாற்றி வருகிறது.” 
என அதன் செயற்பாடுகளை விளக்கினார். 
இவர் பிறந்தது 1930 ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதியாகும். யாருக்கும் தெரியாமல், எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அவரது 80 பிறந்த தினம் கடந்த மார்ச் மாதத்தில் கடந்துவிட்டது. மணிவிழா, பவளவிழா என எழுத்தளார்கள் பலரும் (நான் உட்பட) தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்து உலகில் இவர் வித்தியாசமானவர். தன்னை முதன்மைப்படுத்தாதவர். கொள்கைகளுக்காக வாழ்பவர். 
வயதில் முதிர்ந்தாலும் சோர்வின் சாயல் படியாது, இளமைத் துடிப்புடன் இன்றும் தொடர்ந்து செயற்படும் நீர்வை பொன்னையன் பல்லாண்டு காலம் வாழ்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட வேண்டி வாழ்த்துகிறேன்.

வீரகேசரி ஞாயிறு இதழில் இவ்வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம் 
எம்கே.முருகானந்தன்
0.0.0.0.0.0

Read Full Post »

>கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது.

போலிக் அமிலம் என்பது என்ன? அது ஒரு வகை விட்டமின் ஆகும்.

எத்தகைய பாதிப்பு

இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.

எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும்.

இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.

இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.

அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.

ஏன் குறைபாடு ஏற்படகிறது

எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும்.

அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.

குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.

இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.

ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?

கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே  ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது.  குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால்  இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.

எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.

எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.

காணொளியில் காணுங்கள்

கீழே ஒரு வீடியோ. போலக் அமிலம் பற்றியும், கரப்பகாலத்தில் அதை உட்கொள்வதன் மூலம் தனது நலத்தையும் வளரும் கருவின் நலத்தையும் பேணுவது பற்றியது.

நன்றி:- March of dimes இன் Healthy Pregnancy, Healthy Baby: Folic Acid for Women

மேலதிக தகவல்களுக்கு

பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் ‘போலிக் அமிலம் ஏன் பெண்களுக்கு அவசியம்?’ என்ற தொடுப்பிற்கு Why Folic acid is important in pregnancy

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.

Read Full Post »

>நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் பிரயாணம் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது.

எனது ஊர் வியாபாரிமூலை என்ற ஒரு சிறு கிராமமாகும். இது இலங்கையின் வடபுலமான யாழ்ப்பாண தீபகற்பத்தின் வட கிழக்கு மூலையில், பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருக்கிறது.

இலங்கையின் பல பகுதிகளிலும், சிலர் மலேசியா போன்று கடல் கடந்தும் வியாபாரம் செய்வதை தொழிலாக, முற்காலத்தில் கொண்டதால் இப் பெயர் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.

பல அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.

அதிலொன்று இன்று காரமாக விமர்சிக்கப்படுகின்ற சுவாமிகள் தொடர்புடையது. ஆனால் இது நித்தியானந்தர் பற்றியது அல்ல.

சத்ய சாயிபாபாவை முன்நிறுத்தி நடாத்தப்படுகின்ற சாயிகுடில் பற்றியது.

ஊர் மத்தியில் நாச்சிமார் கோவில் சுற்றாடலில் அழகான சிறு ஆலயமாக அமைந்துள்ளது. சூழ்ந்து நிற்கும் பெரு மரங்களின் ரம்யமான தோற்றமும், குளிர்ச்சியான சீதோசன நிலையும் பக்தர்களுக்கு வரப்பிரதாசமாக அமைந்துள்ளது.

இந்த நிலையத்தின் வாயிற் கதவு மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு புராதன வாயிற் கதவாகும்.

கைவிடப்பட்டுக் கிடந்த அந்தக் கதவைக் கொண்டு வந்து இந் நிலையத்தில் இணைத்த கலை உள்ளம் நயக்கத்தக்கது.

ஆன்மீகப் பணி

வாராந்திரம் வியாழக் கிழமை தோறும் பஜனையும் பூசையும் நடைபெறுகிறது. அதில் பலர் கலந்து கொள்கிறார்கள் என அறிகிறேன். ஆனால் அதற்கு மேலாக பகல் முழுவதும் திறந்திருக்கும் அங்கு பலர் தமக்கு வசதியான நேரங்களில் மௌன வழிபாடு செய்து வருவதை அறியும் போது, அந்த நிலையம் பலருக்கு மனச் சாந்தியை அளிப்பதை உணர முடிந்தது.

பசியாற்றும் பணி

ஞாயிறு தோறும் மதியம் குறுகிய நேர ஆன்மீக சாதனையுடன் வயிறு நிறைய மதிய போசனம் அளிக்கப்படுகிறது.

நாராயண சேவை என்ற பெயரில் நடை பெறும் இதில், வறுமை காரணமாக நல்ல ஆகாரம் பெற்றுக் கொள்ள முடியாத பலர் வயிறு நிறைவது மட்டுமின்றி,  நல்ல ஆகாரம் உண்ட மகிழ்ச்சியுடன் மனமகிழ்ச்சியுடன் செல்வதைக் காணக் கூடியதாக இருந்தது.

சுமார் 60-70 அவ்வாறு வாராவாரம் பயன் பெறுகிறார்கள். 3-4 மைல் தூரத்திலிருந்து கூட ஒரு சில மாணவர்கள் வந்து வயிறாறுவதைக் காணும் போது இந்தப் பணியின் மகத்துவம் புரிந்தது.

வயது முதிர்ச்சி காரணமாகத் தாமே சமைக்க முடியாத சில வயோதிபர்களுக்கு சமைத்த உணவை வீட்டிற்கே அனுப்பி வைத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்கள்.

இதற்கு வாராந்திரம் ரூபா 3000 முதல் 4000 வரை செலவாகிறது. உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் வாழும் பலரும் மறைந்த தமது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் ஞாபகமாக கொடுத்து உதவுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் புதியவர்களும் இணைந்து பங்களிப்பது வரவேற்கத்தக்கது.

1992 தை மாதம் முதலாம் திகதி வியாபாரிமூலையில் சத்யசாயி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இதற்கென 18.11.2007 புதிதாகக் கட்டடம் அமைத்துத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆலயத்திற்கான காணியை டொக்டர் கனகசபாபதியின் புத்திரர்களான இரத்தினவடிவேல், சண்முகநாதன், சற்குருநான் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கியதாக அறிவிப்பு வாசலில் தெளிவாகத் தெரிகிறது.

நிர்வாக அலுவல்கள் அனைத்தையும் கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளையின் மகனான ஆசிரியர் சிவநேசன் கவனித்துக் கொள்ள, பூசை, பஜனை போன்ற பணிகளை தணிகாசலம் பாலசுப்பிரமணியம் முன்னின்று செய்கிறார்.

சமையல் போன்ற பணிகளில் பல தொண்டர்கள் ஆர்வத்துடன் செய்கிறார்கள.

உணவு உண்ண வந்த ஒரு பெரியார் நிலையச் சுற்றாடலில் வீழ்ந்து கிடக்கும் இலை குழைகளை குத்தூசியால் குத்தி எடுத்து அகற்றுவதை கண்ட போது மெபைல் போனில் கிளிக் செய்து கொண்டேன்.

படத்தில் காணுங்கள்

எவரது கோரிக்கையும் இன்றி தாமாகவே முன்வந்து இவ்வாறு சமையல், கூட்டித் துப்பரவு செய்தல் போன்ற சமூகப் பணியாற்றும் மனோநிலையை ஆன்மீக நிலையங்கள் ஏற்படுத்த முடியும் என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

ஏனைய சமூகப் பணிகள்

 • பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் வகுப்பிற்கு வரும்போது,  உதவும் முகமாக அவர்கள் பெயரில் சிறுதொகையை வைப்பு நிதியாக கொடுத்தல். நண்பர் து.குலசிங்கம் மறைந்த தனது மனைவியின் நினைவாக ரூபா 10000 சென்ற ஆண்டு அளித்தார். இது 5 மாணவர்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருடாந்தம் செய்வதாக உத்தேசித்துள்ளார்.
 • சில வறிய மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 100 படிப்புச் செலவாக அளிக்கப்படுகிறது. இதற்கான நிதியை கி.சிவநேசன் அவர்களே அளித்து வருகின்றனர்.
 • மனித மேம்பாட்டுக் கல்வி. மனித விழுமியங்களை மாணவர்களிடையே வளர்ப்பதற்காக வாராந்தம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பாலவிகாஸ் என்ற பெயரில் இது நடைபெறுகிறது.
 • நன்னீர் வழங்கல். 

இந்த நிலையத்தின் குழாயக் கிணறு சவரத்தன்மையற்ற நல்ல நீராகும். நீர்த்தாங்கி கட்டி அதிலிருந்து எந்நேரமும் வேண்டியவர்கள் நீர் எடுத்துச் செல்ல வசதி அளிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிமூலையில் உள்ள பெரும்பாலானது கிணற்று நீர் சவர்த்தன்மை உடையது என்பதால் பலரும் இங்கு வந்து நீர் எடுத்துப் பயன் பெறுகின்றனர்.இன்னும் பலர் இச் சமூகப் பணிகளில் கை கொடுக்க முன் வந்தால் மேலும் பலர் பயன் பெறுவது நிச்சயம்.

தொடர்புகளுக்கு

கி.சிவநேசன்
சாயிகுடில்
நாச்சிமார் கோவிலடி
வியாபாரமூலை
பருத்தித்துறை
சிறிலங்கா

செல்பேசி :- 0778849508.

Read Full Post »

>பாலுட்டும் தாய்மார் என்ன சாப்பிட வேண்டும்.

தாம் உண்ண வேண்டியது என்ன என பாலுட்டும் தாய்மார் கேட்கும்போது இரண்டு விடயங்களை மனதில் வைத்தே கேட்கிறார்கள்.

 • குழந்தையின் நலத்திற்கும் வளர்ச்சிக்குமாக தாய் என்ன விசேட உணவுகளை உண்ண வேண்டும்
 • தனது உடல் நலத்தைப் பேணுவதற்காகத் பாலுட்டும்போது தாய் விசேடமாக உண்ண வேண்டியவை எவை?.

இவ் இரண்டு கேள்விகளுக்குமான விடை சுலபமானது.

 1. முதலாவதாக, குழந்தையின் நலத்தைப் பேணுவதற்காக நீங்கள் எதையுமே மேலதிகமாகவோ விசேடமாகவோ உண்ண வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணினால் போதுமானதாகும். உங்கள் உடலானது உங்கள் குழந்தைக்கு வேண்டியதைத் தானாகவே சுரந்துவிடும். 
 2. இரண்டாவதாக, நீங்கள் இப்பொழுது ஒரு குழந்தைக்குத் தாய். அதற்குப் பாலாட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கு மேலாக உங்கள் குழந்தையைப் பராமரிக்கிற பணியும் மேலதிகமாக வந்திருக்கிறது. அது மகிழ்ச்சியான பணியான போதும் சற்றுக் கடினமானதும் கூட. 

அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம்
உங்கள் உடலை,
அதன் ஆரோக்கியத்தை,
அதன் போசாக்கைக் கவனிப்பது அவசியமாகும்.

சமபல வலுவுள்ள (Balanced Diet) உணவு

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நல்ல உணவாக உண்பதுதான்.
நல்ல உணவு என்பது விலையுயர்ந்த உணவுகள் அல்ல.
போசாக்குள்ள உணவு.
இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் சமபல வலுவுள்ள (Balanced Diet) உணவு.

அதாவது உங்கள் உணவில்

 • மாப்பொருள், 
 • புரதம், 
 • கொழுப்பு, 
 • விட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள், 
 • கல்சியம் இரும்புச் சத்து போன்ற தாதுப்பொருட்கள் யாவும் தேவையான அளவில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

உண்ண வேண்டியவை

 • சோறு இடியப்பம், புட்டு, நூடில்ஸ், அப்பம், உருளைக்கிழங்கு போன்ற எமது முக்கிய உணவுகள் யாவும் மாப்பொருள் கொண்டவையே. இவையே எமது உணவின் பிரதான கூறு ஆகும். அளவோடு அவசியம் சாப்பிட வேண்டிய உணவு வகையாகும்.
 • காய்கறிகள் பழவகைகள். அனைத்துக் காய்கறிகளும் நல்லவையே. வெண்டிக்காய் குளிர், தக்காளி கிரந்தி, பயிற்றங்காய் வாய்வு என்றெல்லாம் பத்தியம் பார்க்காது அனைத்தையும் மாறி மாறி உண்ணுங்கள். கறியாக சமைத்தும் சாப்பிடலாம். சலட் ஆகவும் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாசிபழம் ஆகாது என்று சிலர் கருதுவது தவறானது.

 • குழந்தை பிறந்திருக்கும் காலத்தில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு. மலத்துடன் இரத்தம் போவது, மலம் வெளியேறும்போது வலிப்பது போன்ற சிக்கல்கள் இதனால் தொடரும். அவ்வாறு ஏற்படாமல் தடுக்க நார்ப்பொருள் உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். தவிட்டு அரிசி, கீரை, மற்றும் பயறு, சோயா, போஞ்சி பயிற்றங்காய் போன்ற அவரையின காய்கறிகளையும் அவசியம் சேர்க்க வேண்டும்.
 • புரதச் செறிவுள்ள முட்டை, மீன், கோழியிறைச்சி, பால் போன்றவற்றைத் தவறாது சேர்க்க வேண்டும். பாலூட்டும் காலத்தில் மீன் சாப்பிட்டால் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் சொல்கின்றன. மேலே குறிப்பிட்ட அவரையின உணவுகளிலும் புரதம் அதிம் உண்டு என்பது நீங்கள் அறிந்ததே.
 • பால், தயிர், யோகொட் போன்றவற்றில் புரதம் மட்டுமின்றி கல்சியம் சத்து இருப்பதால் சேர்ப்பது அவசியம்.
 • போதிய நீர் அருந்துங்கள். பழச்சாறுகள், மோர், இளநீர் போன்றவற்றை அருந்தலாம். வயிறு பெருக்கும், வயிற்றுப் புண் காயாது என்று சொல்லி மகப் பேற்றுன் காலத்தில் நீர் அருந்துவதைக் குறைப்பது தவறான செயலாகும். போதிய பால் சுரப்பதற்கும், சிறுநீர்த் தொற்று நோய்கள் ஏற்படாதிருக்கவும் போதிய நீராகாரம் அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள் உள்ளனவா?

மீன் சாப்பிட வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு ஏஜென்சியான (US Enviromental Agency) பாதரசம் அதிகமுள்ளதால் சில வகை மீன்களை கர்ப்பமாயிருக்கும் போதும், பாலூட்டும் காலத்திலும் அளவோடு உண்ண வேண்டும் என்கிறது.

Sword fish, King Mackerel, or Tile Fish  ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறது.

அதே நேரம் ஒரளவு பாதரசம் மட்டுமுள்ள Shrimp, Canned Light Tuna, Salmon, Pollock, and Cat Fish போன்வற்றை வாரத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் அளவோடு உண்ணும்படி சிபார்சு செய்கிறது.

கபேன் அதிகமுள்ள பானங்களை அதிகம் குடிக்க வேண்டாம்.
தேநீர், காப்பி, கொக்கோ போன்றவற்றில் அதிகம் உண்டு. பல மென்பானங்களிலும் உண்டு.
அதேபோல சொக்கிளற்றிலும் அதிகம் உண்டு.

தாய்பால் ஊடாக குழந்தைக்கு கபேன் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக குழந்தையை தூங்கவிடாது அதிக நேரம் விழித்திருக்க வைக்கும். எனவே வழமையாக அருந்துவதைத் தவிருங்கள். எப்போதாவது அருந்தினால் தவறில்லை.

மது அருந்துவது கூடாது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. ஆயினும் கர்ப்பமாயிருக்கும்போது மது அருந்துவது கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. தாயிலிருந்து குழந்தைக்கு தாய்ப்பால் ஊடாக மது செல்வது குறைந்த அளவில்தான்.

கச்சான் (Peanut) ஒவ்வாமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆயினும் பால் ஊட்டுவதால் குழந்தைக்கு பிற்காலத்தில் பீநட் ஒவ்வாமை ஏற்படும் என்பதற்கு திடமான ஆதாரங்கள் கிடையாது. எனவே குழந்தைக்கு கிரந்தி என்று சொல்லித் தவிர்க்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் உங்கள் நலத்திற்காக உட்கொள்ள வேண்டாம்.

0.0.0.0.0.0

Read Full Post »