Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2010

>

 “தம்மையா சிதம்பரப்பிள்ளை ‘சமதர்மக் கூட்டுறவுச் சிற்பி’” என்ற தொகுப்பு நூல் நேற்று எனது கைக்குக் கிட்டியது. பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும் நூலாக இருந்தது.

அவருடைய தலைமைத்துவப் பண்பையும், ஆளுமையையும் பக்கங்கள் ஊடே பற்றிக் கொண்டே மெல்லென நகர முடிந்தது. அத்துடன் அவரது தன்னலமற்ற சமூகப் பணிகளையும் நினைவு கூர வைத்தது.

எமது வரலாற்றின் மிகத் துன்பம் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் யாழ் மண்ணில் வாழ்ந்தவன் நான். அக்காலத்தில் அவரது நட்பும் ஆதரவுக் கரமும் கிட்டியது எனக்கு கிடைத்த பாக்கியமாகும். எனக்கு மட்டுமல்ல வடமராட்சி மண்ணில் வாழ்ந்த பலரும் அவரால் மகிழ முடிந்திருக்கிறது.

எமது வாழ்வும் பணியும் எங்களுக்காக என்றிருக்கக் கூடாது. மக்களுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக, அவர்கள் துயர் துடைப்பதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்பதை தனது வாழ்வின் கூடாகச் செய்து காட்டியவர் அவர்.

அவரது வாழ்வின் பல அத்தியாயங்களை நூலின் பக்கங்களுடே தரிசிக்க முடிந்தது.

  • மறந்துவிட முடியாத சாதனையாளன் – பேராசிரியர் சிவத்தம்பி,
  • யுகமனிதர் – பண்டிதர்.கலாநிதி.செ.திருநாவுக்கரசு,
  • அமரர் சிதம்பரப்பிள்ளையின் பன்முகத் தோற்றம் – கி.நடராசா
  • தலைவர் நம்ப முடியாத எளிமையும் வலிமையும் – குப்பிளான் ஐ.சண்முகம்
  • மனிதநேயத்தின் மனச்சாட்சியாக வாழ்ந்தவர் – சி;கா.செந்திவேல்
  • சாதிமத பேதமற்ற கூட்டுறவாளன் – செ.சதானந்தன்
  • சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் சில நினைவுகள் – புலோலியூர்.ஆ.இரத்தினவேலோன்
  • தரிசனம் மிக்க கூட்டுறவு வாண்மையாளர் – பா.தனபாலன்
  • சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் கர்ஜனை குறையவில்லை – வீ.எஸ்.சுவாமிநாதன்
  • ஆளுமை மிக்க நல்லாசிரியப் பெருந்தகை – ச.விநாயகமூர்த்தி.
  • தேம்பி அழுகின்றன நூல்கள் – த.அஜந்தகுமார்
  • அமரர் சிதம்பரப்பிள்ளையின் நினைவுப் பதிவுகள்- பேராசிரியர்.சபா.ஜெயராசா

இவை தவிர

  • வ.சிவராஜசிங்கம், 
  • ந.பார்த்தீபன், 
  • டொக்டர்.தி.ஞானசேகரன், 
  • சு.குணேஸ்வரன், 
  • பேராசிரியர்.எஸ்.சிவலிங்கராஜா, 
  • க.சிதம்பரநாதன், செ.கு.சண்முகநாதன், வைத்தியகலாநிதி.ஆ.கேதீஸ்வரன், 
  • இ.இராகவன், 
  • ஆ.இரகுநாதன், 
  • வேல்நந்தகுமார் 

ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன.

ம.பா.மகாலிங்கம் அவர்கள் மாஸ்டருடன் நடாத்தி உதயன் பத்திரிகையில் (22.06.208) வெளியான செவ்வியும் இடம்பெறுகிறது.

அந்தச் செவ்வியில் ஓரிடத்தில் தெணியான், குப்பிளான் சண்முகம் போன்ற எழுத்தாள நண்பர்களுடன் எனது பெயரையும் குறிட்டதை கண்டபோது மனம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. மறுகணம் துணுக்கிட்டது. பெரிதாக எதுவும் செய்யாத எனது பெயரையும் மறக்காத பரந்த அவரது உள்ளத்தை நினைத்து மீண்டும் பரவசத்தில் ஆழ்ந்தேன்.

எமது எல்லோரது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரித்தவரான சிதம்பரப்பிள்ளை மாஸ்டரின் மறைவின் துயர் கனத்த பாறையாக நெஞ்சை அழுத்துகிறது. தனக்காக அன்றி தனது சமூகத்தின் வளர்ச்சிகாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரின் பிரிவானது உற்றார் உறவு குடும்பம் என்பதற்கு அப்பால் முழுச் சமூகத்தினதும் ஆழ்துயராக மாறுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய பெருந்தகை ஒருவர்தான் சிதம்பரப்பிள்ளை மாஸ்டர்.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் என்றால் அரிசியும் பருப்பும் மானிய விலையில் கிடைக்கச் செய்யும் நிறுவனம் என்பதற்கு மேலாக, அதனை மக்களின் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் பங்காளியாக்கிய பெருமை அவரைச் சாரும்.

ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மிகு ஆர்வம் கொண்டவர்.

  • நூல் வெளியீடுகள், 
  • திரைப்படக் காட்சிகள், 
  • இலக்கியக் கருத்தரங்குகள், 
  • ஈழத்து நூல் விற்பனை நிலையம் 

என அவர் ப.நோ.கூ.ச ஊடாக தொடக்கி வைத்த நற்பணிகள் ஏராளம்.
படைப்பாளிகளாகவும், இரசனையாளர்களாகவும் தமிழிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாக நின்று ஒத்தாசையும் ஆதரவும் வழங்கியதுடன் நூலாசிரியர்களுக்கு உதவிக் கரம் நீட்ட என்றுமே தயங்காதவர்.

உதாரணத்திற்கு மண்ணின் மைந்தரான சிரித்திரன் சுந்தரின் கார்ட்டூன்கள் அடங்கிய நூலை வெளியிட்டு வைத்தமை நேற்று நடந்தது போலப் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது. நண்பர் டொக்டர்.கனக சுகுமாரின் முதல் உதவி நூல் அவ்வாறே வெளியிடப்பட்டது.

தான் ஆற்றிய நற்பணிகளுக்காகச் சிலுவை சுமக்க நேர்ந்த போதும் தளர்ந்து விடாது, சுதாகரித்து எழுந்து மக்களுக்கு மீண்டும் அயராது பணியாற்றினார்.

இவற்றிற்கான அத்திவாரம் அவரது இளவயதிலேயே ஏற்பட்டிருக்கிறது. சமதர்மக் கொள்ளையை தனது வாழ்க்கை இலட்சியாக வரித்துக் கொண்ட அவர் அதில் என்றுமே தளர்ந்ததில்லை. தனது வளர்ச்சிக்காக கொள்கையைக் கைவிட்டதில்லை. தனக்காக, தனது குடும்பத்திற்காக என எதையும் சேர்த்து வைக்காது சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதை நினைக்கும்போது அவர் உருவம் ஓங்காரமாக உயர்ந்து நிற்கிறது.

அவருடன் பழகக் கிடைத்த நாட்களை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது. மறைவு மனத்தை அழுத்துகிறது. இருந்தபோதும் அவரது இழப்பை சாதாரண இழப்பாகக் கொள்ளாது, சவாலாகக் கொள்ள வேண்டும். அவரின் பணிகளில் வெற்றிடம் ஏற்படாதிருக்கும் வண்ணம் அவரது பணிகளை முன்தொடர வேண்டும் என்பது எனது அவா. இந்தக் கருத்தே நூல் முழுவதும் இழையோடுகிறது. சொல்லில் அன்றிச் செயற்படுவோமாக.

கட்டைவேலி நெல்லியடி ப.நோ.சங்கத்தின் கலாசாரக் கூட்டுறவு பெருமன்றத்தால் வெளியிடப்பட்ட நூல் இது. செ.சதானந்தன் மற்றும் பு.இராதாகிருஸ்ணன் இணைந்து தொகுத்தது.

விலை ரூபா 200 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.கே. முருகானந்தன்.
    
                      

Read Full Post »

>மிக மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ் வருடமும் 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவ, மாணவி்கள் சித்தியெய்தி உள்ளனர்.

மொத்தமாக 16 பேர் சித்தியெய்தியுள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்கள் 54 பேர் மட்டுமே எனும் போது இது நல்ல விகிதாசாரம் ஆகும்.

அதி உச்ச புள்ளியைப் பெற்றவர் செல்வி Y.தர்சிகா ஆகும். அவர் 161 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அடுத்து செல்வன்.R.யதுர்ஸன் 160 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடத்தில் S.அபிலாஜினி 157 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியெய்தி உள்ளார்.

அடுத்து செல்லி.R.சரண்யா 155 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்லி K.பவித்ரா 154 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

 செல்வன்.S.குகநிசாந்தன்154 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வன்.G.சஜீசன் 153 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.T.சஜீசா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.T.நிர்மலா 150 புள்ளிகளைப் பெற்றுள்ளார்

செல்வி.V.சுகன்யா 149 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.V.மதுப்பிரியா 148 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவரது புகைப்படம் கிடைத்ததும் வெளியடப்படும்.

செல்வி.S.வைஸ்ணவி 147 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.S.வேணுஜா 146 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

 செல்வன்.B.பானுகாந் 143 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

செல்வி.K.கலைநிலா 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 

செல்வி.R.சர்மிகா 142 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இவர்களைத் தவிர இன்னும் பல மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள். இன்னும் பலர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஏனைய மாணவர்களுக்கும் அவர்களது அயராத முயற்சிக்குப் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன், இடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்ர்க் கொள்கிறோம்.

Read Full Post »

>இன்று 26.09.2010 திகதி உலக இருதய தினமாகும். பத்தாவது தடவையாக இத் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஓவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு தினத்தில் இது அனுஷ்டிக்கப்படுகிறது.

உங்கள் இருதயத்தைக் காப்பாற்றுங்கள்

உலக இருதய சங்கத்தின் தூண்டுதலினால் முதன் முதலாக 2000 வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் இத் தினம் கொண்டாடப்பட்டது.

இருதய நோய்களாலும் பக்கவாதத்தாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு இவ்வருடமும் முயலுமாறு அரசாங்கங்களையும் உடல்நலத்துறை சார்ந்த அறிஞர்களையும், சகல தொழில் வழங்குனர்களையும், தனிப்பட்ட மனிதர்களையும் உலக இருதய சங்கம்; அழைத்திருக்கிறது.

இருதயத்திற்காக வீட்டில் மட்டுமின்றி தொழில் புரியும் இடங்களிலும் முயற்சியுங்கள்

இருதயத்திற்கு நல்ல செய்தி

இருதயத்திற்கு நல்ல செய்தியை வழங்கும் இடமாக இவ் வருடம் தொழில் புரியும் இடங்களை முன்னிலைப்படுத்துகிறது உலக இருதய சங்கம். தொழில் வழங்குவோர், தொழில் புரிவோர் மற்றும் சமூகத்தினருக்கு நன்மை செய்யும் விதத்தில் நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கை முறை மாற்றங்களை தொழிலகங்களிலும் ஏற்படுத்துவதே இவ்வருடத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த உலக இருதய நாளிலே ஒவ்வொருவரும் தனது இருதயத்தின் நலனுக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு, ‘நான் எனது இருதயத்துடன் வேலை செய்வேன்’ என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காப்போம்

வழமையான வைத்திய முறைகள் இன்று கேள்விக்குரியதாகிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். வைத்தியர் சிகிச்சை முறைகளைச் சொல்லுவதும் நோயாளிகள் அவற்றைக் கேட்டு நடப்பதுமான வழமையான முறை வெற்றியளிக்கவில்லை. இது நோயாளர் இறப்பு விகிதத்தை போதியளவு குறைக்கவில்லை.

  • நோய் வராமல் தடுப்பதும், 
  • நோயை நேர காலத்துடன் இனங்காண்பதும், 
  • ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும் அவசியமாகும். 

இதனை நோயாளரின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்பினோடுமே செயற்படுத்த முடியும். நோயாளிகள் தமது முக்கிய பங்களிப்பை உணர்ந்து, ஏற்று மருத்துவ உதவியுடன் செயற்பட்டால் தமது ஆரோக்கியத்தை நன்கு பேண முடியும் என்பது இப்பொழுது நன்கு உணரப்படுகிறது.
எனவே உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் முக்கியமானது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இதய நோயையும் பக்க வாதத்தையும் தடுப்பதில் இத்தகைய அணுகுமுறையே நல்ல பலனை அளிக்க முடியும்.

மனிதனைப் பாதிக்கின்ற பல்வேறு நோய்களில் இதயநோய் மிகவும் முக்கியமான இடத்தைப் ஏன் பிடிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.  காரணங்கள் பல உள்ளன.

இருதய நோய்கள் ஏன் முக்கியமானது

  •  மனிதர்களின் மரணத்திற்கான முதற்காரணியாக இருக்கிறது
  • எதிர்பாராது திடிரென தாக்கும் நோயாகவும் இருக்கிறது.
  • அதிகம் பயமுறுத்தும் நோயாக இருக்கிறது.
  • மனிதர்கள் தமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவதற்குத் தூண்டக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் முதலாவதாக இருப்பது இருதய நோயாகும். இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் இன்று இதுவே முதற் காரணியாக இருக்கிறது.

வீட்டில்

நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குச் செய்ய வேண்டியவை யாவை?

உணவு- உடல் நலத்திற்கு ஏதுவான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 5 பரிமாறலுக்கு குறையாதளவு பழவகைகளையும் காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிரம்பிய கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிக உப்புள்ள உணவுகளையும் தவிருங்கள். முக்கிய கடையுணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அத்தகையவையே.

உடல் உழைப்பு:- உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுங்கள். அதில் உங்கள் இருதயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் அல்லது உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுங்கள்.

எடை:- உங்கள் எடையைக் கவனத்தில் எடுங்கள். அதீத எடை உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுவரும். அதே நேரம் ஒருவர் தனது அதீத எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

புகைத்தல்:- புகைத்தலைக் கைவிடுங்கள். நீங்கள் அதனைச் செய்தால் ஒருவருட காலத்திற்குள்ளேயே மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உங்களுக்கு அரைமடங்கு குறைந்துவிடும்.

மது:- மது அருந்துவராயின் அதைக் கைவிடுங்கள் அல்லது அதன் அளவை நன்கு குறையுங்கள். அதிகமாக உட்கொள்ளும் மது உங்கள் எடையை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்தை கொண்டு வருவதற்கான முதற் காரணி என்பதுடன் மாரடைப்பைக் கொண்டுவருவதற்கு ஏதுவான காரணி என்பதை அறிவீர்கள்.

மருத்துவரை சந்தியுங்கள்:- “எனக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லை” என எண்ணி வாழாதிருக்க வேண்டாம். மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு போன்றவை நோய் முற்றும் வரை வெளிப்படையான அறிகுறிகள் எவற்றையும் காட்டுவதில்லை.

எனவே ஒழுங்கு ரீதியில் உங்கள் மருத்துவரை அணுகி

  • பிரஷர், கொலஸ்டரோல் மற்றும் சீனி அளவை அறிந்து கொள்ளுங்கள். 
  • அத்துடன் உங்கள் எடையையும், வயிற்றின் சுற்றளவையும் அவர் அளந்து பார்த்து உங்களுக்கு இருதயநோய் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவார். 
  • இவை அதிகமாக இருந்தால் அவற்றைச் சரியான அளவில் குறைப்பதற்கு முயல வேண்டும்.

தொழில் தளத்தில்

இருதய நலத்தைப் பேணும் நடவடிக்கைகளை வீட்டில் எடுத்தால் மட்டும்போதாது, உங்கள் வேலைத்தளத்திற்கும் விஸ்தரியுங்கள்.

புகைக்காத வேலைத்தளம்:- உங்கள் வேலைத்தளம் புகைத்தலுக்கு தடைவிதித்திருக்கிறதா எனப் பாருங்கள். இல்லையேல் அது புகைத்தில் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்குவதற்கு முழு முயற்சி எடுங்கள்.

உடலுக்கு வேலை:- உங்கள் தொழில் உடல் உழைப்பு அற்றதாயின் அங்கு உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கக்  கூடிய வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.

  • லிப்டைத் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துங்கள். 
  • மதிய உணவை மேசையில் உட்கார்ந்தபடி உண்ணாமல், வெளியே நடந்து சென்று பெற முடியுமானால் அதைச் செய்யுங்கள். 
  • வேலைக்குப் போவதற்கு பஸ், கார் போன்றவற்றுக்குப் பதிலாக சைக்கிளைப் பயன்படுத்த முடியுமானால் சிறந்தது.

உணவு:- உங்கள் உணவு உள்ளக கன்ரீனில் பெறப்படுகிறது என்றால் அங்கு ஆராக்கியமான உணவு கிடைக்க வழிசெய்ய வேண்டுங்கள். முடியாவிட்டால் நல்லாரோக்கிய உணவை கொடுக்கும் நல்ல உணவகத்தைத் தேடுங்கள். அதன் மூலம் உடலாரோக்கியத்திற்கான நடையும், நல்ல காற்றும் கிடைக்கும் அல்லவா?

ஓய்வு:- தொடர்ந்து ஒரே விதமான வேலையெனில் இடையில் இரண்டு தடவைகளாவது 5 நிமிடங்கள் ஓய்வு பெற்று உங்கள் அங்கங்களை நீட்டி நிமிர்த்தி அவற்றைச் சுறுசுறுப்பாக்குங்கள்.

உங்கள் இருதயம் உங்கள் பொறுப்பில் உள்ளது. அதனைச் சுறுசுறுப்பாக நீண்ட காலத்திற்கு செயற்பட வைப்பதோ, அன்றி அதன் செயற்பாட்டிற்கு ஊறு விழைவித்து நோயில் ஆழ்த்துவதோ உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

 உளநெருக்கீடு
உங்கள் வேலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யுங்கள். மனப்பதற்றத்திற்கும், நெருக்கீட்டிற்கும் (Stress) மாரடைப்புடன் தொடர்பு இருப்பதாக சிலஆய்வுகள் கூறுகின்றன. வேலைத்தளத்தில் நெருக்கீடுகள் இருக்குமாயின் நீக்க முயலுங்கள்.

மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு.. 

மனப்பதற்றமும் மாரடைப்பும்

மாரடைப்பும் மாரடைப்பலாத நெஞ்சு வரிகளும்
மாரடைப்பும் பெண்களும்
ஈ.சீ.ஜீ பரிசோதனை தேவையா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லால் அடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
வாயில் பிராணியை வதைக்காதே

கோழிக் குஞ்சைத் திருகாதே
குருவிக் கூண்டைச் சருவாதே
ஆழி சூழுலம் உலகேத்தும்
அன்பு காட்டி வதிவாயே.

ஊனைத் தின்று வாழாதே
உயிரைக் கொன்று தாழாதே
மானைக் கொன்றால் மான் கன்று
வருந்தல் நீயும் அறிவாயோ?

கிளியைக் கூண்டில் அடைக்காதே
கேடுனை வந்து சூழ்ந்திடுமே
ஒளியே யில்லாச் சிறைதனிலே
உன்னை வைத்தாற் சகிப்பாயோ?

எல்லா உயிரும் இறைமகவே
இன்பம் நாடி உழைப்பனவே
பொல்லாப் பொன்றும் செய்யாதே
புனித வாழ்வு காண்பாயே.

இந்த இனிய பாடல் பாடலைப் பாடியவர் கவிஞர் யாழ்ப்பாணன். எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சார்ந்தவர். இந்த கவிதை அவரது கவிதை நூலான ‘மாலைக்கு மாலை’ யிலிருந்து எடுக்கப்ட்டது. 1948 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னுரை வழங்கியது இலங்கைப் பல்கலைப் கழகப் பேராசிரியரான க.கணவதிப்பிள்ளை ஆகும்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் வாழ்த்துரை வழங்கியிருந்தார் என்பது குறிப்படத் தக்கது.

திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)

பருத்தித்துறை வியாபாரிமூலைச் சார்ந்த அறிஞர்களி் ஒருவர் திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்)
  • மாலைக்கு மாலை, 

    • முல்லைக் காடு,  

      • கவிதைக் கன்னி 

        • பாலர் பாடல்கள்

ஆகியன இவரது கவிதை நூல்களாகும்.

  • ஜீவ யாத்திரை  இவரது நாவலாகும்

இவை தவிர பூமிசாத்திரம், மனக்கணிதம் போன்ற பல பாட நூல்களையும் இயற்றி அன்றைய  மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றினார். 

அக்காலத்தில் வடமாகாண மாணவர்கள் கணிதத்தில் மிகவும் முன்னணியில் திகழ்ந்ததற்கு இவரது மனக் கணித நூல்கள் காரணமாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இவர் ஆரம்பித்து நடாத்தி வந்த ‘வடலங்கா புத்கசாலை’ அன்று எமது வாசிப்புத் தீனிக்கு அன்றைய காலகட்டத்தில் தீனி போட்டதை மறக்க முடியாது. 

அதே போல அவரது கலாபவனம் அச்சகமும் அன்றைய காலகட்டத்தில் ஆற்றிய அச்சக சேவை மிகவும் பிரபலமானது.

மாலைக்கு மாலை என்ற இந்த நூலானது நூலகம் இலங்கை நூல்களை இணையத்தில் தரும் தளமான நூலகத்தில் கிடைக்கிறது.

படிப்பதற்கு கிளிக் பண்ணுங்கள்

மாலைக்கு மாலை

Read Full Post »

>


யா|மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய
பழைய மாணவர் ஒன்றியம் – கொழும்பு

வரவு செலவு அறிக்கை 2008

பரிசளிப்பு விழா நன்கொடைகள் 2008

வரவு

சென்ற வருட மீதி முற்கொணர்ந்தது 5,500.00
அங்கத்துவப் பணம் 3,000.00
2008ம் ஆண்டு பரிசளிப்பு விழாவிற்காகக் கிடைத்த நன்னொடை 17,500.00
மொத்தம் 26,000.00

செலவுகள்

2008ம் ஆண்டு பரிசளிப்பு விழாவிற்காகக் அனுப்பிய நன்னொடை 12,000.00
நினைவுப் பரிசில் விளம்பரப் பலகை 1,400.00
மீதி 12,600.00

2008 டிசம்பர் 31ம் திகதி அன்றுள்ளவாறான ஐந்தொகை

திரண்ட நிதி சொத்துக்கள்
ஆரம்ப மீதி 5,500.00 ரொக்கம் 12,600.00
கூட்டு சேகரிப்புகள் 20,500
கழி:
கொடுப்பனவுகள் 13,400.00
12,600.00 12,600.00

பரிசளிப்பு விழா நன்கொடைகள்
திரு.சுவாமிநாதன் 5,000.00
திரு.மு.சோமசுந்தரம் 2,000.00
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் 2,000.00
திரு.இராஜ் சுப்பிரமணியம் 2,000.00
திருமதி வள்ளி பிரபாகர் 1,000.00
திரு.எஸ்.கே.சண்முகசுந்தரம் 1,000.00
திரு.கே.சிதம்பரநாதன் 1,000.00
திரு.எஸ்.சற்குளராஜா 1,000.00
திரு.எஸ்.இரட்ணசிங்கம். 1,000.00
திரு.எஸ்.வர்ணகுலசிங்கம் 1,000.00
மொத்தம் 17,5000.00

நினைவுப்பரிசில் நன்கொடைகள்

திருமதி. கதிரவேற்பிள்ளை அவர்களது ஞாபகார்த்தமாக
திரு. .க. மகேஸ்ஸவரன் வழங்கியது 15000.00
திருமதி. செல்லாட்சி இராஜரட்ணம் ஞாபகார்த்தமாக
திரு. ராஜ்சப்பிரமணியம் வழங்கியது 15000.00
திருமதி. மனோன்மணி சுவாமிநாதன் ஞாபகார்த்தமாக
திரு. எஸ். சிவபாலன் வழங்கியது 20000.00
திரு. வ. துரைசாமிபபிள்ளை ஞாபகார்த்தமாக
திரு. து. ராஜசேகரன் மற்றும்
திருமதி. இராஜேஸ்வரி பரமெஸ்வரன் வழங்கியது 20000.00
திரு. சி. சிதம்பரம் ஞாபகார்த்தமாக
திரு. வர்ணகுலசிங்கம் வழங்கியது 15000.00
திரு. திருமதி. கனகசபாபதி ஞாபகார்த்தமாக
திரு.க. இரகுநாதன் வழங்கியது 100000.00
திரு. திரு.நாவுக்கரசு ஞாபகார்த்தமாக
திருமதி. கௌரிமனோகரி வழங்கியது 15000.00
திரு. காசி விஸ்வநாதன் ஞாபகார்த்தமாக
திருமதி. கா. தேவாம்பிகை வழங்கியது 15000.00
திரு. நா. சிவபாதசுந்தரம் ஞாபகார்த்தமாக
திரு. பொ. குகதீஸ்வரன் வழங்கியது 15000.00
திரு. மூ. பொன்னையா ஞாபகார்த்தமாக
திரு. வேல். நந்தகுமார் வழங்கியது 15000.00
னுச. த. பரமகுருநாதன் ஞாபகார்த்தமாக
திருமதி. ப. தங்கம்மா வழங்கியது 15000.00
திரு. க. நாகப்பர் ஞாபகார்த்தமாக
திரு. நா. சண்முகதாசன் வழங்கியது 20000.00

Read Full Post »

>’…காதலிக்க நேரமுண்டு
காதலிக்க ஆளுமுண்டு…”

எனப் பாடித் திரிந்த காலங்கள் இனிமையானவை. மறக்க முடியாத அந்த நினைவுகள் மனத்துள் துள்ளிக் குதிக்கின்றன.

‘காதலிக்க நேரமில்லை’  என்ற அந்தப் படம் நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது பார்த்தது.

கஷ்மீர் அழகும், இளமையின் துள்ளலும், கமெடியும் இணைந்த வித்தியாசமான படம். ஸ்ரீதர் நெறியாள்கை. ரவிச்சந்திரன் ஆடிப்பாடுவார்.

சுற்றுலாக்கள் செல்லும்போது பஸ்சில் எங்கள் வாயில் அப் பாடல் ஓங்கி ஒலிக்கும். சகமாணவிகளும் இருப்பார்கள் அல்லவா? சேர்ந்து பாடும் துணிவும் அவர்களில் சிலருக்கு இருந்தது எம் அதிர்ஷ்டமே.

பின்னோக்கிய பார்வை

அன்று அது கிளுப்பூட்டும் வெறும் காதல் பாடலாகத்தான் இருந்தது. ஆனால் இன்று மருத்துவனாக யோசிக்கும்போது காதலுக்கும் உடல்நலத்திற்கும் இடையே ஆன நெருங்கிய தொடர்பை நினைக்க வைக்கிறது.

ஈருடலும் ஓருயிரும் என்பது போல உண்மையான அல்லது ஆழமான காதல் உடல் நலத்துடன் பின்னிப் பிணைந்ததாகும்.

“காதல் இனிமையான உணர்வுகளைத் தருகிறது, காற்றில் மிதப்பது போன்ற அற்புதமாக உணர வைக்கிறது. மனக்கிளர்ச்சியைத் தருகிறது.” என்றெல்லாம் காதலர்கள் சொல்லுவார்கள்.

‘..அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதமும் குடித்து வந்தேன்..’

என்று பாடவும் செய்வார்கள். ஆம் காணாத புது உலகெல்லாம் காண வைப்பது அல்லவா காதல். மோட்சமும் இந்திரலேகமும் கிட்டவும் வராது.

ஆனால் எல்லாக் காதலும் உடல் நல மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்டதா?

எத்தகைய காதல்

கண்டவுடன் காதல் போன்ற திடீரென எழும் கவர்ச்சியும், காமமும் கலந்த உணர்வுகள் அத்தகைய ஆரோக்கிய நன்மைகள் தருவதாக ஆய்வுகள் சொல்லவில்லை.

புதிதாக ஏற்படும் திடீர்க் காதல் அற்புதமான அனுபவமாக தோன்றினாலும்,

  • சிக்கலானதாகவும்,
  • தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாகவும்,
  • தொல்லைப்படுத்துவதாகவும் சில வேளைகளில் இருப்பதுண்டு.

இதனால் மனஅமைதியும் ஆரோக்கியமும் கெடவும் வாய்ப்புண்டு.
ஆனால்

  • ஒருவரை ஒருவர் புரிந்து
  • மனதால் நெருங்கி
  • படிப்படியாக வளர்த்து வரும் உறவுகள் மனதிற்கு மட்டுமின்றி உடலுக்கும் நிறைய நன்மைகளைச் செய்கின்றன.
  • ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, மனத்திருப்தியுடன் கூடிய, நீண்ட நாள் தொடரும் காதல் உணர்வுகள் நிச்சயமாக நன்மை பயக்கின்றன என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது.

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.

மற்றவர்களுடன் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது,

  • நீங்கள் மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள்.
  •  வேண்டப்பட்டவராக உணர்வீர்கள்,
  •  பாதுகாப்பு உணர்வு கிட்டும்.

இவை ஆண் பெண் காதலால் மட்டும் கிட்டுவதில்லை.

  • பெற்றோர் பிள்ளைகள்,
  • நண்பர்கள்,
  • நெருங்கிய உறவினர் மூலமும் கிடைக்கலாம்.
  • திருமண உறவின் பின் மனமொத்த தம்பதிகள் இடையே நிறையவே கிடைக்கிறது.
மருத்துவரிடம் ஓட்டம் குறையும்

காய்சல், தலையிடி, உழைவு இப்படி எத்தனையோ பிரச்சனைகளக்கு மருத்துவரிடம் பலரும் ஓட வேண்டியிருக்கிறது.

  • மருத்துவரிடம் ஓடுவதும்,
  • மருத்துவமனைகளில் அட்மிட் பண்ணி நிற்க நேருவதும்

மணமுடித்து மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளிடையே குறைவு என ஒரு ஆய்வு கூறுகிறது.

மனவிரக்தி

மனவிரக்திக்கு ஆளாவதும், உள நெருக்கடிகளால் துன்புறுவதும் காதல் சூழலில் வாழ்பவர்களிடையே குறைவாகும்.

மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்

அண்மையில் காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என நியூ யோர்க் ஸ்டோனி புறுக் பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் கண்டறிந்த முடிவு இது.

வலிகளைத் தாங்கும் தன்மை

127,000 தம்பதிகளைக் கொண்டு செய்த ஆய்வின் படி மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு நாரிவலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.

நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்தல்
  • வேலை இழப்பு,
  • வாழும் சமூகத்தில் ஏற்படும் நெருக்கடி,
  • அல்லது வேறு ஏதாவது நெருக்குவாரங்கள் எற்படும்போது,

உங்களில் அன்பாக இருக்கும் ஒருவரது ஆதரவு கிடைக்குமாயின் அதற்கு முகம் கொடுத்து தாண்டி முன்நகர்வது சுலபமாக இருக்கும்.

இரத்த அழுத்தம்
  • மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது.
  • தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும்,
  • மணமுடித்து பிரச்சனைகளுடன் மகிழ்ச்சியற்று வாழ்பவர்களிடையே கூடுதலாகவும் இருந்ததாக

Annals of Behavioral Medicine மருத்துவ இதழில் வெளியான மற்றொரு ஆய்வு கூறியிருக்கிறது.

அதன் முக்கியத்துவம் என்னவெனில் மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதைச் சுட்டுகிறது

சாதாரண காய்ச்சல் அதிகம் வராது

காதல் உணர்வினால் மனவிரக்தி, மனப்பதற்றம், நெருக்குவாரங்கள் போன்றவை அடிக்கடி ஏற்படாது என அறிந்தோம். அவ்வாறு நிகழும்போது எமது நோயெதிர்பு சக்தி ஆற்றல் பெறும். அதனால் வழமையாக ஏற்படும் தடிமன் காய்;சல் போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது ஒதுங்கிக் கொள்ளும்.

சாதாரண காயங்கள் விரைவில் குணமாகும்

காதலுணர்வுடன் வாழும் தம்பதிகளிரிடையே செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வானது சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்று சொல்கிறது.

நீண்ட ஆயுள்

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்ற தகவலை முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். திருமண உறவால்

  • பரஸ்பர ஆதரவும்,
  • பிள்ளைகளின் உதவியும்,
  • நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

அதே நேரம் மணமுறிவுகள் ஏன் என்ற எனது முன்னைய கட்டுரை மணவாழ்வின் துயர்மிகு பக்கத்தை ஆராய்கிறது

மகிழ்ச்சியான வாழ்வு
ராதையும்கிருஸ்ணனும் காதலுக்கு அடையாளம்

காதலின் மிகப் பெரிய கொடை

  • சந்தோசம், மகிழ்ச்சி, மனநிறைவு என்பது தெரிகிறது.
  • குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது.
  • அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர்.

ஆழமான காதலினால் உடல்நலம் பெறுவீர்.

நான் எழுதி, ‘இருக்கிறம்’ சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>எமது பாடசாலை பல பெரியார்களுக்கு ஆரம்பக் கல்வியை அளித்த பாடசாலையாக இருந்திருக்கிறது. அவர்களில் பலர் செய்த சமூக, பாடசாலைத் தொண்டுகள் மறக்கவெண்ணாதவை.

அத்தகையவர்கள் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவற்றை நினை கூர்வது எமக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

தம்மிடம் இருக்கும் தகவல்களையும் புகைப்படங்களையும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் பகிர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (மனேஜர்)

எமது பாடசாலையின் முகாமையாளராக (மனேஜர்) ஆக இருந்த திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை அவர்களது புகைப்படம். அதற்கு முன்னர் அவரது தகப்பனாரான திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை அவர்களது பராபரிப்பில் 1884ம் ஆண்டு முதல் இயங்கியதாக ஆவணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

இப் புகைப்படத்தை  ஜெனி (Geni) ஊடாகப் பகிர்ந்து கொண்ட டொக்டர்.பா.கனகசபை அவர்களுக்கு நன்றி.

திரு.ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை (மனேஜர்)


திருமதி பாக்கியம் முருகேசு

மேலைப்புலோலி சைவ பாலிகா பாடசாலை 1893ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.

திருமதி பாக்கியம் முருகேசு அப்பாடசாலையின் ஆசிரியராகவும் பின்னர் அதன் அதிபராகவும் 1965ம் ஆண்டு வரை திறமையோடு பணியாற்றினார்.

திருமதி.முருகேசு பாக்கியம் (முன்னைநாள் அதிபர்)

நான் முதல் முதலாக பாடசாலைக்குச் சென்ற போது அவர்தான் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரின் கீழ் கற்கும் பாக்கியம் எனக்கும் கிட்டியது.

அவரது புகைப்படத்தை அளித்த பாக்கியக்காவின் மகளான ஜெயகெளரி அவரது கணவன் ராஜா முருகதாஸ் ஆகியோருக்கு நன்றி.

பொன்னம்மா அக்கா (ரீச்சர்)

திருமதி.பொன்னம்மா (முன்னைநாள் ஆசிரியர்)

எமது பாடசாலையின் பெண்கள் பிரிவாக இருந்த பாலிகா பாடசாலையில் ஆசிரியராக இருந்த பொன்னம்மா ரீச்சரை அண்மையில் ஊருக்கு சென்ற போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று போவே இன்றும் அதே தோற்றத்தில் இருக்கும் அவர் என்னைக் கண்டதும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். நான் முருகன் வேடம் இட்டு நடித்ததாகச் சொன்னார். ஆயினும் எனக்கு ஞாபகம் இல்லை.

அவர் பாதம் பணிந்து ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் கிடைத்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)

அடுத்து வருவது எமது பாடசாலையின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவரான திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்)

 மாலைக்கு மாலை, முல்லைக் காடு, கவிதைக் கன்னி ஆகியன இவரது கவிதை நூல்களாகும்.

இவை தவிர பூமிசாத்திரம், மனக்கணிதம் போன்ற பல பாட நூல்களையும் இயற்றி அன்றைய  மாணவர்களின் கல்வி வளரச்சிக்கு அரும் தொண்டாற்றினார்.

இவர் ஆரம்பித்து நடாத்தி வந்த ‘வடலங்கா புத்கசாலை’ அன்று எமது வாசிப்புத் தீனிக்கு அன்றைய காலகட்டத்தில் தீனி போட்டதை மறக்க முடியாது. 

அதே போல அவரது கலாபவனம் அச்சகமும் அன்றைய காலகட்டத்தில் ஆற்றிய அச்சக சேவை மிகவும் பிரபலமானது.

மேலும் தகவல்கள் கிடைக்கும் போது  ‘பாடசாலை சரித்திரத்தில் இவர்கள்’.. தொடரும்.

Read Full Post »

>இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழர் கார்த்திகேசன். தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலாக கம்பூனிஸ்ட் இயக்க விதைகளை ஊன்றியவர்களில் அவர் ஒருவர்.

முற்று முழுதாக இன்றைய தமிழ் அரசியல் முதவாளித்துவாதிகளின் கைகளில் சிக்கியிருந்தாலும், இன்னும் எம்மிடையே சிறிதளவாவது முற்போக்கு சிந்தனைகள் மிஞ்சியிருக்கிறது என்றால் அதற்கு அவரும் அவரது அரசியல் வாரிசுகளும் செய்த முன்னோடி முயற்சிகளே காரணம் எனலாம்.

அவரது நினைவாக திரு சண்முக சுப்பிரமணியம் தொகுத்த ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நகைச்சுவை, ஆளுமை, தீரக்கதரிசனம்’ என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.

எதிர்வரும் 19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் (யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்) நடைபெற இருக்கிறது.

தலைமை :- திரு. ரெங்கன் தேவராஜன் (வழக்கறிஞர்)

நினைவுரைகள்:- திரு.எஸ.ஜி.புஞசிகேவா (வழக்கறிஞர்)
                            திரு.எம்.ஜி.பசீர் (யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர)
                            கலாநிதி செல்வி திருச்சந்திரன் (பெண்கள் கல்வி ஆய்வு                  நிறுவன   பணிப்பாளர்)
                            திரு.வீ.சின்னத்தம்பி (இளைப்பாறிய ஆசிரியர்)

ஏற்பாட்டாளர்கள்

இந்த நூலை

  1. இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 
  2. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்அறக்கட்டளை நிதியம் 

ஆகியன இணைந்து வெளியிடுகின்றன.

Read Full Post »

>அண்மையில் யாழ் சென்ற போது சுப்பிரமணியம் பூங்காவிற்கும் செல்ல முடிந்தது.

இந்த வரண்ட பூமியில் இந்த அழகான செழிப்பான பூங்காவா என மூக்கில் விரலை வைக்க வைத்தது அது.
மிக அற்புதமாகப் பராமரிப்புச் செய்கிறார்கள்.

அங்கு ஒரு மூலையில் இந்த மரம் பூ விரித்து சுகந்த மணம் வீச கம்பீரமாக நிற்கிறது. எனது சிறு வயது வியாபாரிமூலை வீட்டில் நான் நீர் ஊற்றி வளர்த்தது இது போன்றதொன்று பெருமரமாக வளர்ந்து நின்றது.

ஆயினும் அது பூத்து மணங்கமழ முன்னர் நாங்கள் குடும்பமாக கொழும்பிற்கு எனது மருத்துவப் படிப்பிற்காக செல்ல நேர்ந்தது.

 பி்ன்னொரு நாளில் வீடு திரும்பிய போது மரம் நின்ற சுவட்டையே காணவில்லை. ஆழ் மனத்தில் ரணவடுவாக இருந்த வலி தீரும் வண்ணம் சில படங்களைக் கிளிக் பண்ணிக் கொண்டேன்

இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது. தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.

நாகலிங்கப்பூ மரம்

இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.

உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..

நாகலிங்கப்பூ

மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.

சுப்பிரமணியம் பூங்காவின் சிமெந்து இருக்கை பின்புலத்தில்

அம் மரம் பற்றி விக்கிபீடியாவில் மேலும் அறியுங்கள்

நான் இந்தப் படங்களை முகப்புத்தகத்தில் போட்ட போது நண்பர் மார்க் அன்ரனி ஆழமும் விரிவும் கொண்ட நீண்ட கருத்துரைக்கு வழங்கியிருந்தார்.

Mark Antony அளித்த கருத்துரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தோன்றும் நோய்களின் நிலைக்கேற்ப பல கடவுள் உருவங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலிகையை வழிபாட்டு மூலிகையாக பயன்படுத்தி, இறைவனின் பெயரால் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பு செய்யப்பட்டன.

இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

Read Full Post »

>எமது நாட்டில் பெண்கள் புகைப்பது குறைவு. ஆயினும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

சமூகத்தின் உயர்தட்டிலும் கீழ்மட்டத்திலும் பல பெண்கள் புகைக்கவே செய்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலும் இலைமறைகாயாக இருக்கக் கூடும்.

வயதான பெண்கள் மட்டும் புகைப்பதில்லை

புகைத்தல் ஆபத்தானது. பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது என்பதை அறிவோம்.

பெண்கள் கரப்பமாயிருக்கம்போது புகைத்தால் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில்

  • ஆஸ்த்மா, 
  • சுவாசநோய்கள், 
  • செவியில் கிருமித்தொற்று 

போன்ற பல பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுக்க நேரிடும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
அண்மையில் பின்லாந்து தேசத்தில் செய்யப்பட்ட ஆய்வானது கர்ப்பமாயிருக்கும் போது புகைத்த பெண்களின் குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் உளநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் என்கிறது.

அத்துடன் அவர்கள் வளரும் போது அதற்கான சிகிச்சையாக மருந்துகள் (Psychiatric Drugs) உட்கொள்ள வேண்டி நேரிடலாம் எனக் கூறுகிறது.

முக்கியமாக

  • மனச்சோர்வு (Depression) 
  • கவனக்குறைவு, 
  • அதீத துடியாட்டம் 

போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை செய்ய நேரலாம் என்கிறது.

மனநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இளவயதினரின் மருத்துவக் கோவைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் 19.2 சதவிகிதத்தினர் தாயின் கருவில் இருக்கும்போது புகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது தாய் கர்ப்பமாயிருக்கும்போது புகைத்திருக்கிறாள் என்பதாகும்.

அந்த ஆய்வின் பிரகாரம் தினமும் பத்து சிகரட்டுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகள் கூடியளவு பாதிப்புக்கு ஆளாயினராம்.

இதன் அர்த்தம் என்ன? கர்ப்பமாயிருக்கும்போது பத்து சிகரட்டுக்கு குறைவாகப் புகைக்க வேண்டும் என்பதா?

இல்லை. புகைக்காது இருப்பதே நல்லது.

கர்ப்பமாயிருக்கும் தாய் புகைக்கும்போது அதன் நச்சுப் பொருட்கள் தாயின் இரத்தத்தில் சேர்ந்து தொப்புள் கொடி ஊடாக கருவிற்குப் பரவி அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால்தான் அத்தகைய குழந்தைகள் உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாவது அதிகமாகிறது.

எனவே கர்ப்பாயிருக்கும் பெண்கள் தமது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புகைக்காது இருப்பது அவசியம்.

அத்துடன் தனது ஆரோக்கியத்திற்காகவும் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கணவனும் வீட்டில் உள்ள ஏனையவர்களும் தன்செயலின்றிப் புகைத்தலால் மனைவிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் தவிர்க்க வேண்டும். அத்துடன் தனது நலனுக்காகவும் புகைக்காதிருப்பது அவசியம்.

தன்செயலின்றிப் புகைத்தலால் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணவும்.

தன்செயலின்றிப் புகைத்தல்

ஒட்டு மொத்தத்தில் எல்லோரும் எக்காலத்திலும் புகைத்தலைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.

Sourse:- Presented at the Pediatric Academic Societies (PAS) annual meeting, Vancouver, British Columbia, Canada. May4, 2010.

தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

Older Posts »