Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2010

இந்தப் பெண்ணின் முதுகில் கொப்பளங்கள் சிறிய சிறிய கூட்டங்களாக இருக்கின்றன.

மற்றொரு பெண்ணின் முதுகிலும் வயிற்றிலும் தோன்றியவற்றின் படம் இது. அதேபோன்ற கொப்பளங்கள் உள்ளன.

மென்மையான தோலினால் மூடிய கொப்பளங்கள். உள்ளே சிறிதளவு தெளிவான நீர் இருக்கிறது.

கொப்பளிப்பான் நோயில் வரும் கொப்பளங்கள் போலவே இருக்கின்றன. ஆனால் கொப்பளிப்பான் போல உடல் முழுவதும் வீசிப் போடவில்லை.

நடு முதுகில் முள்ளந் தண்டிற்கு அருகில் ஆரம்பித்து வயிறு வரை தொடர்கிறது. வயிற்றின் ஒரு பாதிப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது.

நடுவயிற்றைத் தாண்டி மறு பக்கம் போகவே இல்லை. இவருக்கு இடப் பக்கத்தில் மட்டுமே வந்தது.

முகத்தில் இது வந்தால் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களுக்குள்ளும் கொப்பளங்கள் போடக் கூடும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதுவும் ஒருவகைக் கொப்பளிப்பான்தான். இதனை நரம்புக் கொப்பளிப்பான் என்பர். முந்நாணிலிருந்து (Spinal Cord) வெளிவரும் ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றும்.

பொதுவாக கொப்பளங்கள் தோன்ற முன்னரே அந் நரம்பின் பாதையில் காரணம் சொல்ல முடியாத வலி இருக்கும்.

வலியிலிருந்து மீள்வதற்காக பலரும் தமக்குத் தெரிந்த ஓயின்மென்ட், கிறீம், எண்ணெய் பலவற்றையும் தேய்பதுண்டு.

ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றியதும் மருந்து ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற மயக்கம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.

பொதுவாக முன்பு எப்பொழுதாவது கொப்பளிப்பான் நோய் வந்தவர்களுக்கு மட்டுமே இது வரும். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள்.

முன்பு ஏற்பட்ட வெளிப்படையாக நோய் மாறிய பின்னர் நரம்பு மண்டலத்தில் மறைந்திருந்த கிருமிகள் மீளுயிர்ப்பதால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒரு நரம்பின் பாதையில் மட்டும் வருகிறது.

ஆங்கிலத்தில் Shingles என்பர். மருத்துவத்தில் Herpes Zoster என வழங்கப்படுகிறது.

தொற்று நோய். எல்லாக் கொப்பளங்களும் காய்ந்து அயறாகும் வரை நோயூற்றவரிலிருந்து ஏனையவர்களுக்குத் தொற்றும். தொற்றினால் கொப்பளிப்பான் நோய் வருமே ஒழிய நரம்புக் கொப்பளிப்பான் அல்ல.

Acyclovir போன்ற வைரஸ் எதிர் மருந்துகள் உள்ளன. ஆயினும் அவற்றை முதல் 48 மணிநேரத்திற்குள் ஆரம்பித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பொதுவாக 14 நாட்களுக்குள் கொப்பளங்கள் மருந்துகள் இல்லாவிடினும் தானாகவே காய்ந்து உலர்ந்து விடும்.

சிலரில் கொப்பளங்கள் நன்கு மாறிய பின்னரும் நோய் வந்த நரம்பின் பாதையில் கடுமையான வலி நீடிக்கக் கூடும். இதனை Postherpatic Neuralgia என்பர். ஒரிரு மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை அவ் வலி நீடிக்கலாம். அத்தகையவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சையைத் தொடர நேரிடும்.

 வீரகேசரி வாரவெளியீடு 17.10.2010 ல் வெளியான எனது மருத்துவக் கட்டுரையின் மீள் பதிவு
 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

>

2010ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு பரிசில்கள் வழங்க நிதி உதவி வழங்கியோர்.

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயதிலிருந்து மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாவருடம் இளஞானச் சுடர் விருதினையும், பணப் பரிசிலையும் வழங்கி வருவதை அறிவீர்கள்.

இவ் வருடம் 16 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர் என்பதை ஏற்கனவே அறியத் தந்தோம்.

அவர்களுக்கு எதிர் வரும் 22ம் திகதி போயா தினத்தில் நடைபெற இருக்கும் வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது பரிசில்கள் வழங்கப்படும். அதற்கான நிதியுதவி வழங்கியோர் விபரம் பின் வருமாறு

 1. திருமதி.கலா.சுந்தரலிங்கம் (கனடா)-  வியாபாரிமூலை அமரர்கள், பிரபல வர்த்தகர் திரு.நா.ம.பரம்சோதி, திருமதி.இராசரத்தினம் பரம்சோதி அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது இளைய மகள் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 2. திரு.இராசலிங்கம் சுந்தரலிங்கம் (கனடா)-  அமரர்கள் திரு.சு.இராசலிங்கம், திருமதி சேதுப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது மகன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 3. திரு.இராசநாதன் சுவாமிநாதன் – ரூபா 4000.00 (இருவருக்கு)
 4. திரு.முருகுப்பிள்ளை சோமசுந்தரம் – ரூபா 4000.00 (இருவருக்கு)
 5. திருமதி.கெங்கா இராமச்சந்திரன் – வியாபாரிமூலை வள்ளிவளவு அமரர்கள் பிரபல வர்த்தகர் பலாங்கொடை திரு.நடராசா, திருமதி அன்னபூரணி நடராசா ஞாபகார்த்தமாக அவர்களின் மகள் – ரூபா 4000.00 (இருவருக்கு)
 6. திரு.சிதம்பரம் வர்ணகுலசிங்கம்; – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 7. திரு.கதிர்காமத்தம்பி கலாகரன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 8. திரு.கதிர்காமத்தம்பி பிரபாகரன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 9. திரு.ஆறுமுகநாதன்.சிவநாதன் – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 10. திரு.கந்தயினார் முருகவேள் (அவுஸ்திரேலியா)- ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 11. திரு.கந்தயினார் பாலதாஸ் (கண்டி) – ரூபா 2000.00 (ஒருவருக்கு)
 12. திரு.சிதம்பரப்பிள்ளை வாசுதேவன்  (கண்டி) – ரூபா 2000.00 (ஒருவருக்கு)

இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி பரிசுப் பணத்தை வருடாந்தம் வழங்குவதற்கு இணங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விசேட பரிசுகள்

இவற்றைத் தவிர கீழ்கண்டவர்களால் வங்கியில் இடப்பட்ட வைப்புப் பணத்தின் வட்டிப் பணத்திலிருந்தும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

 1. டொக்டர்.M.K.இரகுநாதன் அவர்களால், அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு திரு திருமதி கனகசபாபதி வருடாந்த நினைவுப் பரிசிற்காக வைப்பிலிட்ட ரூபா 100,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும்.
 2. டொக்டர்.S.N.செல்வச்சந்திரன் அவர்களால், புள்ளிகள் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வருவோருக்கு இவ்வருடப் பரிசாக டொக்டர்.செல்வச்சந்திரனின் வருடாந்த புலமைப் பரிசில் வழங்கிய ரூபா 15,000.00 முறையே 50%, 30%, 20% என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்படும். அடுத்த வருடத்திலிருந்து அவர் வைப்பிலிட்ட ரூபா 200,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் முதல் மூவருக்கும் அதே விகிதத்தில் பரிசாக வழங்கப்படும்.
 3. திரு.கேதீஸ்வரன் அவர்களால் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு அமரர் முன்னாள் அதிபர் ந.சிவபாதசுந்தரம் நினைவாக வைப்பிலிடப்பட்ட 15,000.00 (பதினையாயிரம்) ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும்.

Read Full Post »

>

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.

வயிற்றின் வலதுபுற கீழ்ப்பகுதியில்

அப்பன்டிக்ஸ் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலில் விரல் போல நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது.

உண்மையில் இந்த உறுப்பின் பயன் என்ன என்பது எவருக்கும் தெரியாது. மனிதனின் கூர்ப்பின்போது தேவையற்றுப்போன ஒரு பகுதி எனக் கருதுவாரும் உளர். இதில் சளி போன்ற ஒரு திரவம் சுரப்பதுண்டு. அது வழிந்து பெருங்குடலில் சேர்ந்துவிடும்.

எவ்வாறு ஏற்படுகிறது?

அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும்.

இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.

வீங்கிச் சிவந்த அப்பென்டிக்ஸ்

உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்து அதனை  அகற்ற வேண்டும்.

இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழவதும் பரவி ஆபத்தாக மாறிவிடும்.

வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis)என்பார்கள்.

எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகள்

நிறபதும் நடப்பதுவும் வேறெதுவும் வலியைத் தணிக்காது.

இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?

 • திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
 • ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
 • முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
 • படுத்தல், தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.

வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்

 • பசியின்மை
 • வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
 • மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
 • கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
 • வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
 • ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்

பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பாரப்பதன் மூலம் மருத்தவரால் நோயை நிச்சயிக்க முடியும்.

சிகிச்சை

அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.

சிறுதுளைகள் மூலம் சத்திரசிகிச்சை

சில தருணங்களில் அதைச் சுற்றிச் சீழ்க்கட்டி (Appendiciel Abscess) தோன்றலாம். நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) கொடுத்து அதைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றறையில் குழாய் விட்டு சீழை அகற்றவும் செய்வர். 6 முதல் 8 வாரங்களுக்குப் பின் சத்திர சிகிச்சை மூலம் அப்பென்டிக்சை அகற்றுவார்கள்.

சத்திரசிகிச்சை வசதி கிட்டாதபோது அல்லது நோயாளி சத்திரசிகிச்சைக்கு உட்படக் கூடியளவிற்கு ஆரோக்கியமாக இல்லையெனில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமும், நார்ப்பொருள் குறைந்த இலகுவாக சமிபாடடையும் ஆகாரங்களுடனும் சிகிச்சை அளிப்பதுண்டு.

சில ஆய்வுகள் சத்திரசிகிச்சை செய்யாமலே அப்பென்டிசைடிஸ் குணமாகும் என்று கூறுகின்றன. ஆயினும் சத்திரசிகிச்சைக்கான வசதிகள் இருக்கும்போது அவ்வாறு ரிஸ்க் எடுப்பது புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது.

அப்பென்டிசைடிஸ் நோயின்போது நோயுற்ற அப்பன்டிக்சை டொக்டர் அன்ரு லப்பரஸ்கோப்பி சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதை வீடீயோவில் காணுங்கள்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதி 04.09.2010 அன்று வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

“கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ….” என்று சொல்லிக் கொண்டே போனாள்.

அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின.

அவரை நோட்டமிட்டேன்.

தைரொயிட் ஹோர்மோன் குறைவாகச் செயற்படல்

வயது அய்ம்பது இருக்கும். ‘வதனமே சந்திரபிம்பமோ’ என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.

குறைவாகச் செயற்படும் தைரொயிட்

அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்

 • குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
 • மறதி,
 • மனச் சோர்வு,
 • தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.

நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.

“உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்” என்றேன்.

“எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?” என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.

தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கட்டி அல்லது கழலை இருக்கும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.

பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் (Iodine) குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.

சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது

 • குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
 • அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
அதீத தைரொயிட் செயற்பாடு

தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட

 • அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது
 • நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம்.
 • புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம்.

எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.

தொண்டையில் கழலையுள்ள தைரொயிட் (Goiter)

இது பொதுவாக கடற்கரையிலிருந்து தொலை தூரத்தில் இருக்கும் பகுதியில் அயடின் குறைவான பகுதியில் உள்ளவர்களுக்கே வருகிறது. இதைத் தடுக்கவே இப்பொழுது அயடின் கலந்த உப்பு பாவனையில் உள்ளது.
இத்தகைய கட்டி பொதுவாக

 • பெண்களில் அதிகமாக இருக்கும்
 • பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம்
 •  ஒரே குடும்பத்தில் பலருக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்
 • உணவில் போதிய அயடின் இல்லாதவர்களுக்கு வரும்

மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.

ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்

 • வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும்.
 • காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது.
 • மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இது 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இட்ட பதிவின் மீள்பிரசுரம். விளக்கப் படங்களுடனும் புதிய விடயங்களுடனும் இப்பொழுது வருகிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்திய நிபுணர்

Read Full Post »

>’நான் வெள்ளை அரிசிச் சோறுதான் சாப்பிடறனான். தவிட்டரிசிச் சோறு பிடிக்காது. செமிக்காது. வயிறு பொருமிக் கொண்டிருக்கும்.’ என ஒதுக்கி வைத்த பலரும் இன்று அது பற்றி மீள யோசிக்க வேண்டியிருக்கிறது.

தீட்டிய அரிசியில் தவிட்டுப் பொருள் இருக்காது

ஏனெனில் நீரிழிவு, கொலஸ்டரோல், கொழுத்த உடம்பு என நோய்களின் எண்ணிக்கையை அவர்களில் பலர் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கிய உணவைக் கைவிட்டதின் பலன் அது.

பெரும்பாலான இள வயதினர் சோறே வேண்டாம் எனச் சொல்லி நூடில்ஸ், பிட்ஷா, மக்ரோனி, கொத்து எனச் சொகுசு உணவுகளுக்கு மாறிக் கொண்டிருப்பது மேலும் கவலைக்குரியது.

அதனால்தான் பெற்றோர்களை முந்திக்கொண்டு பிள்ளைகள் இயற்கைக் காரணங்களால் மரணமடையும் காலம் முதல் தடவையாக உலகில் வந்திருக்கிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அண்மையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அது நீரிழிவு உள்ள பெண்களைப் பற்றியது.
7822 பெண்களின் மருத்துவக் கோவைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன.
210,000 பெண் தாதியர்கள் பற்றி
1976 ல் ஆரம்பிக்கப்பட்ட ((Nurses Health Study)
பாரிய ஆய்வின் ஒரு அங்கம்தான் இது.

அதன் பிரகாரம் தமது உணவில் அதிகளவு தவிடு (Bran) சேர்த்துக் கொண்ட நீரிழிவு நோயாளர்கள்

 • இருதய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்பு ஏனையவர்களைவிட 35 சதவிகிதத்தால் குறைகிறதாம். 
 • அத்துடன் வேறு எந்த மருத்துவக் காரணங்களால் மரணமடையும் சாத்தியமும் 28 சதவிகிதத்தால் குறைகிறது என்கிறார்கள். 

மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏனையவர்களை விட மும்மடங்கு அதிகம் என்பதால் இது முக்கியமான செய்தியாகும்.

மாப்பொருள் உணவு எமது உணவில் முக்கிய பகுதியாகிறது. அதில்தான் இந்தத் தவிட்டுப் பொருள் இருக்கிறது. இது பற்றி மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள் மாப்பொருள், Carbohydrates

தவிடு சார்ந்த உணவு எமது பாரம்பரிய முறையாகும். தவிடு அரிசியில் இருப்பதை நாம் அறிவோம். அது அரிசியில் மாத்திரமல்ல கோதுமை, குரக்கன், சாமை போன்ற அனைத்துத் தானியங்களிலும் தவிடு உள்ளது.

தவிட்டில் விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை அதிகளவில் செறிந்துள்ளன. இவை எமது உடலாரோக்கியத்திற்கு மிகுந்த பலன் அளிப்பவை.

தீட்டாத தானியங்களில்தான் (Whole Grains) இவை அதிகம் உண்டு. அரிசியைப் பொறுத்தவரையிலும் அவ்வாறுதான். அதிலும் தீட்டாத நாட்டரிசி(புளுங்கல் அரிசி) யில் அதன் செறிவு அதிகம்.

ஆனால் இன்று அரிசி மில்காரர்கள் அரிசியை நன்கு தீட்டி வெள்ளை அரிசி போலவே எமக்குத் தருகின்றனர்.

தவிட்டை மாட்டுத் தீவனமாகி இரட்டை வருமானம் பெறுகின்றனர்.
மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியம்தான்.
ஆனால் மனிதர்களின் நலக்கேட்டின் வழியல்ல.

இந்தத் தவிட்டுப் பொருளானது எமது இரத்தக் குழாய்களின் உட்புறத்தில் உள்ள கலங்களில் அழற்சி ஏற்படுவதைத் தடுத்து செயற்திறனை இழக்காது பாதுகாக்கிறது என முன்னொரு ஆய்வு கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் அறிய கீழுள்ள வழியை கிளிக் பண்ணுங்கள்.
Dietary prevention of atherosclerosis: go with whole grains

அதாவது அவை எமது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதில் இரத்தம் உறைந்து மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்த ஆய்வு பெண்கள் பற்றியதுதான். ஆயினும் அது தானியங்களைத் தீட்டாமல் முழுமையான நிலையில் தவிட்டுடன் உண்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்கிறது.

முக்கியமாக நீரிழிவாளரின் வாழ்நாளின் நீடிப்பைப் பேசுகிறது. ஆனால் அது எவருக்குமே பொருந்தக் கூடியதுதான். அதை நாங்களும் பின்பற்றினால் எமது வாழ்வும் நோயின்றி பல்லாண்டு காலம் வாழ வகிக்கும்.

எமது மூதாதையர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் தெரியாது. ஆனால் இயற்கையின் ஓட்டத்தில் அதற்கு முரண்படாது வாழ்ந்தார்கள்.

 • ஆரோக்கியமான உணவுகளை உண்டார்கள். 
 • அளவோடு உண்டார்கள்.

அதனால்தான் அவர்களை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை நெருங்கியது குறைவு.

ஆதாரம்:- Circulation:- Journal of American the American Heart Association May 2010.

 தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் 16.06.2010 வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

கூம்புக்குள் கருவாக
கூர்ப்படையும்
வண்டுகளே
பூ மலரக் காத்திருக்கிறீரோ
கூடுடைத்து வெளிவந்து
சுதந்திரமாக் காற்றளைந்து
சிறகு விரித்துத்
தேனுண்ணப் புறப்படக்
காலம் இன்னும் கனியவில்லையா?

Read Full Post »

« Newer Posts