
எழுபதுகளின் நடுக்கூற்றில் எழுத ஆரம்பித்த ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு”ஈழநாடு’ பத்திரிகையும் “சுதந்திரன்’ பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து வெளியான “சுடர்’ சஞ்சிகையும் “மல்லிகை’ மாசிகையும் களம் அமைத்துக் கொடுத்ததில் கணிசமான பங்காற்றியிருந்தன. அக்களங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி இலக்கிய உலகில் இனங்காணப்பட்டவர்களுள் ஒருவராகக் கொள்ளத்தக்க கோகிலோ மகேந்திரன் இன்று தனது அறுபதாவது அகவையைப் பூர்த்தி செய்கின்றார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில், கணக்கியல் துறை மாணவனாகக் கொழும்பில் நான் பயின்றுகொண்டிருந்த காலகட்டங்களில் சுடரில் வெளியான “குரூர ரசனைகள்’ என்ற அவரது சிறுகதையினைப் படித்ததன் பின்னரே அவரது அறிமுகம் எனக்குக் கிட்டியதாக ஞாபகம். கடித மூலம் அக்கதைக்கு நானெழுதிய விமர்சனமே எம்தோழமையின் முதற்பாலமாக விளங்கிற்று எனலாம். தொடர்ந்து என்கதைக்கு அவரும், அவரது கதைகளுக்கு நானுமாக எழுதிய கடிதங்களே எம் நட்பினை இடைவெளியின்றி நீடித்து வளர்த்தது. ஓர் ஆசிரியையாக நின்று அவர் வழங்கிய அறிவுரைகளும் கருத்துகளும் மாணவனான எனக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தி நின்றன. தெண்மையைத் தந்தன.
தவறுகளைத் தவறாது சுட்டிக்காட்டி தட்டிக்கொடுக்கும் அவரது தனிப்பட்ட இயல்பு தரமான இலக்கியவாதியாக மிளிர எனை இட்டுச்சென்றதற்கும் அப்பால், இற்றைவரை சுமார் மூன்று தசாப்தகாலங்களாக எம்நட்பு தொடர்வதற்கும் வித்திட்டது என்றால் அது மிகையாகாது.
எங்கள் இலக்கிய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்றும் பரஸ்பரம் ஆக்கங்களை மதிப்பிட்டுக்கொள்ளும் வழக்கம் சுருதி பேதங்களின்றித் தொடர்வதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
நான், கோகிலா மகேந்திரனைச் சந்தித்த காலங்களில் எதையுமே சாதித்தவனல்லன். ஆயினும் “முரண்பாடுகளின் அறுவடை’ எனும் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்கு விமர்சகனாக என்னையும் அழைத்திருந்தமை “ஊக்குவித்து நிற்கும்’ அவரது பண்பிற்கு சான்று பகர்வது. தனியாளாக நின்று எனது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர முடியாது தத்தளித்து நின்ற அந்த நாட்களில், தனது சிறுகதைகளையும் சேர்த்து “அறிமுக விழா’ எனும் நூலினை அறுவடைசெய்த அவரது துணிச்சல் என்றும் இலக்கிய உலகில் பதிவு செய்யப்படத்தக்கது.
இத்தகு தனிப்பட்ட இயல்புகளைத் தன்னகத்தே கொண்ட கோகிலா மகேந்திரன் தான் எத்தனித்த துறைகளிலெல்லாம் உச்சம் பெற்றமையே அவரை வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனலாம்.
பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றில் தன் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்துகொண்டு 1974 இல் பொலிகண்டி இ.த.க.பாடசாலையில் முதன் நியமனம் பெற்றது முதல் 2007 ஆனி மாதத்தில் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெறும் வரையில் அவரது ஒவ்வொரு அடைவானதும் அவரது திட்டமிடுதலையும் கடின உழைப்பையும் விடா முயற்சியினையும் பறைசாற்ற வல்லது.
பணிநிலை வழியாக எய்யப்படும் உச்சமானது பொதுவாக எவருமே விரும்பும் இலக்கெனக் கொண்டால், இலக்கியத்தில் கோகிலா மகேந்திரன் பதித்த தடங்களே மிக முக்கியமானவை.
கவிதை, அறிவியல் கட்டுரை, உருவகம், நடைச்சித்திரம், நூல் திறனாய்வு, உளவியல் கட்டுரை, நாடகம், நாவல், சிறுகதை என இலக்கியத்தின் மூலை முடுக்கெங்கிலும் கோகிலா மகேந்திரனின் எத்தனிப்புகள் மிக விரிவானது. ஆழமானது. வாதங்களும் விளக்கங்களும் கொண்டது. ஈழத்து தமிழ் வாசகர்களின் தரத்தை நீங்காது நினைவில் கொண்டு தன் கருத்துகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சிரத்தையுடன் முழுமனதுடன் அவர் இயங்கி உள்ளார்.
எத்துறையிலும் முதல் எத்தனிப்பிலேயே வெகு அனாயாசமாக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விடுவதைக் காணலாம். இதுவே அவரது வெற்றியும் எனலாம்.
1972 இல் “குயில்’ சஞ்சிகையில் வெளியான “அன்பிற்கு முன்னால்’ எனும் சிறுகதையினை இவரது முதலாவது சிறுகதையாகக் கொள்வோமாயின் அண்மையில் தகவத்தின் சிறப்புப் பாராட்டினைப் பெற்ற “தாயகம்’ சஞ்சிகையில் வெளியான “கால் ஒப்பம்’ சிறுகதை வரையில் மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக அறுவடையாகியுள்ளன. இவற்றுள் “பிரசவங்கள்’, “வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றமை குறிப்பிடற்பாலது. பின்னைய நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.
ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக இவர் பல குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும் “துயிலும் ஒருநாள் கலையும்’, “தூவானம் கவனம்’ ஆகிய இரு நாவல்களுமே நூலுருப் பெற்றுள்ளன. நாடகங்களில் குயில்கள், கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. “விஞ்ஞானக் கதைகள்’ எனும் புத்தகமானது இவரது விஞ்ஞானப் புனைகதை ஆற்றலுக்கே சாட்சியாக வல்லது.
தனது தந்தை,தாயாரை நினைவிற்கொண்டு முறையே “விழிசைச் சிவம்’, “விழி முத்து’ ஆகிய இரு நூல்களையும் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவாக “தங்கத்தலைவி’ எனும் நூலினையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இன்றைய பெண் பிரமாக்களுள் அதிகளவில் கோகிலா மகேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறுமளவிற்கு இவரின் எழுத்துகளில் மேவி நிற்கும் அம்சங்களுள் முதன்மையானதாகச் சீர்மியத்தினைக் கொள்ளலாம். தனது சிறுகதைகள், நாவல்களில் எல்லாம் இத்தகு அம்சங்களினூடாகக் கதையினை நகர்த்துவதற்கும் அப்பால் கட்டுரைகளாகவும் சிறுவர்களுக்குப் போதனையாகவும் கேள்வி பதில் உருவிலும் உளவியலை இவர் வாசகரிடையே அடையச்செய்யும் பாங்கு அவருக்கே உரியது. இவ்வகையிலும் இவரது பத்து நூல்கள் அறுவடை செய்யப்பட்டிருப்பினும் எங்கே நிம்மதி (2000), மனமெனும் தோணி (2008), உள்ளப்பெருங்கோயில் (2009) போன்ற பனுவல்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.
பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியிருப்பினும் “சைவநற்சிந்தனையில்’ ஒலித்த இவரது குரலே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. விருந்து, பண்புடையாளர் தொடர்பு, அன்பு, இசை, விதி, இறைவன் எங்கே போன்ற தலைப்புகளில் இவர் ஆற்றிய உரைகள் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன் முத்திரையினைப் பதிக்க இவர் தவறவில்லை.
கோகிலா மகேந்திரன் தனது ஆளுமையினை நிரூபித்த மற்றுமோர் பரிமாணமாக அவர் நடித்த நாடகங்களைக் கொள்ளலாம். தனது 1652 வயதிற்குட்பட்ட காலப்பகுதிகளில் மொத்தமாகப் பத்து நாடகங்களில் இவர் நடித்துள்ளார். இதில் “கேள்விகளின் முழக்கம்’ எனும் நாடகம் , வட இலங்கைச் சங்கீத சபையின் “நாடக கலாவித்தகர்’ என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளமையினையும் இவ்விடத்தே மனங்கொள்ளல் தகும்.
கோகிலா மகேந்திரனின் இலக்கிய வெற்றிக்கு அவரது மரபணுவும் முக்கிய காரணமாகின்றது. இவரது தந்தையார் சிவசுப்பிரமணியம் நீண்டகாலம் அதிபராகக் கடமையாற்றியவர். பண்ணிசைப் புராண படனத்தில் தேர்ந்தவர். சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நகுலகிரிப் புராண உரையை ஆக்கியவர். இவரும் சிறிய தந்தையாராகிய உமாமகேஸ்வரனுமே சிறுவயது முதல் கோகிலாவுக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியதுடன் நெறிப்படுத்தியவர்களுமாவார்கள். 1982 முதல் இந்த நிமிடம் வரை ஏறத்தாழ 275 உரைகளை கோகிலா மகேந்திரன் ஆற்றிட வித்திட்டவர்களாகவும் இவர்களைக் கொள்ளலாம். மேலும் புலவர் பார்வதி நாதசிவம், சைப்புலவர் செல்லத்துரை, அதிபர் அப்புத்துரை போன்ற பலரின் அருகாமையும் இவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்றால் அது மிகையாகாது.
சிறுகதை,குறுநாவல்களில் பரீட்சார்த்த முயற்சியாகச் சிறுகதையின் முதற்பகுதியை அல்லது குறுநாவலொன்றின் முதல் அத்தியாயத்தை ஒருவர் ஆரம்பிக்க, மற்றொருவர் மிகுதியினை எழுதிமுடிக்கும் இணைப்புனைக்கதை முயற்சியில் எண்பதுகளில் தேசியபத்திரிகைகள், மாசிகைகள் ஈடுபட்ட காலகட்டத்தில் கோகிலா மகேந்திரன் அம்முயற்சிகளில் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் “அந்தரங்கம் நினைவுகளில்’, “யுகோதயம்’ போன்ற இவரது முயற்சிகள் கால்நூற்றாண்டு கடந்திருந்தும் நினைவில் கொள்ளத்தக்கவை.
தெல்லிப்பழை கலை இலக்கிய களம் அதன் சொந்த இடத்தில் இயங்கிவந்த காலத்திலும் தற்போது தலைநகரில் தனது நிகழ்வுகளை விரிவுபடுத்தியிருக்கும் வேளையிலும், அது முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கெல்லாம் மூலவிசையாக நின்று கோகிலா மகேந்திரன் ஆற்றிவரும் பணியும் பங்கும் குறிப்பிடத்தக்கது.
தனது மணிவிழாவை முன்னிட்டு “சோலைக் குயில்’ எனும் மலரை தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தினூடு கோகிலா மகேந்திரன் வெளிக்கொணர்ந்துள்ளார். இலக்கியம் முதல் சீர்மியம் வரை, அறுபது வருட காலவாழ்வில் தான் நிகழ்த்திய சாதனைகளை அம்மலரில் தினம் தவறாது அச்சொட்டாக அவர் பதிவு செய்துள்ளார். இவரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்நூல் உ சாத்துணையாக விளங்கும் என்பதற்கும் அப்பால் தனது ஆளுமை மிக்க வாழ்வியலைப் பிறர் கற்றுக்கொள்ளத்தக்க ஒரு பாடநூல் போலவும் வடிவமைத்திருப்பது வாசகரை வியக்க வைக்கிறது.
இந்நாட்களில் பெரும்பாலும் ஒரு சீர்மியராகவே கோகிலா மகேந்திரன் அறியப்படும் சூட்சுமமானது,பரிபூரண மனிதரை இந்நாட்டில் உருவாக்க வேண்டும் எனும் கோகிலா மகேந்திரனின் பெரிய கனவின் வெளிப்பாடகவே அமைகின்றது.
தனது வெற்றி பெற்ற வாழ்வின் உற்ற துணையான, ஓய்வுபெற்ற அதிபர் கி.மகேந்திரராசாவுடனும் புதல்வன் கலாநிதி ம.பீரவீணனுடனும் அவுஸ்திரேலியாவிற்கு அவர் மிகவிரைவில் குடியகலவுள்ளார் எனும் செய்தியினை நிர்ப்பந்தம் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது.
புகலிடம் மாறினும்,மாறாத புகழுடன் அவர் நீடுவாழ வேண்டி “தினக்குரல்’ வாயிலாக நாமும் வாழ்த்துவோமாக!
நன்றி தினக்குரல் :-
இணைப்பிற்கு