Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2010

>நோய் நொடி அண்டாத,
மருத்துவரும் பத்தியமும்
கசப்பான மருந்துகளும்
கிட்டவும் நெருங்காத
நலமான புத்தாண்டு
அனைவர்க்கும் கிட்டட்டும்
வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>காவடி ஆட்டங்கள் அதுவும் துலாக் காவடி போன்றவை மிகவும் ஆபத்தானவை. அண்மையில் காவடியாட்டத்திற்காக, கொக்கிகள் குத்திய இடத்தில்  சீழ்ப் பிடித்துத் துன்பப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் செய்ய நேர்ந்தது.

அது ஏற்பு நோயாக மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்?

ஆயினும் அவர் அப்பொழுதும் அசுத்தமான ஊசிகளைக் குத்தியதால்தான்
புண் ஏற்பட்டது என நம்பவில்லை.
விளக்கிச் சொல்லியும் புரியவில்லை.
புரிந்து கொள்ள முயலவும் இல்லை.

நம்பி்க்கைகள் பலமானவை. அவை மூடநம்பி்கைகளாக இருந்த போதும்.
பஸ் பிரயாணம் செய்யும் போது அப் பகுதியானது இருக்கையில் அண்டியதால்தான் நோயுற்றதென நம்பினார்.

ஆயினும் தனது நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ததால் அவரது மனக்குறை தீர்ந்திருந்தால் அவர் ஏதோ ஒரு வழியில் பலன் பெற்றார் என அவருடன் பிணக்குறாது மகிழ வேண்டியதுதான்.

சமயச் சடங்குகள் பலவற்றிற்கும் ஏதோ பலன் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதும் சடங்குகளை நம்புவர்கள் நினைப்பது போல அவை இறைவன் அருளால் கிட்டுபவை அல்ல.

ஆறறிவு மனிதருக்கு மேலான அறிவுடைய கடவுளர் இருக்கக் கூடுமேயானால், மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்தும் அதனைப் பயன்படுத்தத் தவறியதைக் கண்டு தலை கவிழ்ந்திருப்பார்.

பலன்கள் உளவியல் சார்ந்தவை. தான் விட்ட பிழைக்கு மன்னிப்புப் பெற்று மனச் சாந்தியடைய வைக்கின்றன. அல்லது தனக்குக் கிட்டிய, கிட்டப்போகிற ஆதாயங்களுக்கு நன்றிக் கடனாக லஞ்சமாகவும் இருக்கலாம்.

எதுவாக இருந்தபோதும் தன்நம்பிக்கையுடன், சுயமுயற்சியால் முன்னேறுபவனுக்கும் இதில் ஈடுபாடு இருக்க நியாயமில்லை.

ஆனால் அதனை ஒரு ஆடற் கலையாகக் கொள்வதில் தவறில்லை.

பாரம்பரியம் சார்ந்தவையாக இருந்தபோதும், சடங்குகள் சம்பிரதாயங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை என்றால் தவிர்க்க வேண்டியவையே.

அவற்றில் பல இன்றைய அறிவு விஞ்ஞானப் பின்புலத்தில் மீள் மதிப்பீடு செய்ய வேண்டியவை. அல்லது சுகாதார ரீதியான திருத்தங்களுடன் ஆற்றப்பட வேண்டியவை.

காவடியாடுதல் என்ற சொல்லுக்கு வேறொரு அர்த்தமும் உண்டு.
கவிஞர் மப்றூக் கவிதை அதைப் பேசுகிறது.
காவடியாட்டம் பற்றிய அவரது ‘காற்று’ இணையப் பதிவுக் கவிதை படிக்க கிளிக் பண்ணுங்கள்.

அவர் கவிதை என் மனத்தை அலைத்தது.
சில வார்த்தைகள் சொல்ல வைத்தது.

நடமாடும் கடவுளர் முன்
காவடியாட்டம்
கடவுளரைக் கட்டி வைக்குமோ
எச்சிலுக்கு வழிய வைக்குமோ
அறிந்திலேன்.
தன்னிலும் வலிந்தவன் முன்
அவரவர்
ஆடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
நிர்வாணமாக,
நம்பிக்கைகள் சூழ.
கடவுளரின்
சூழ்ச்சிகளும் கயமைகளும்
புரியாத வெண்
மனசுப் பேதையராக.

துலாக் காவடி

தாவாரம் இணைய தளத்தில் ஜெகன் அவர்களது காவடி பற்றிய சிறந்த சமூகவியல் கட்டுரையைத் தந்துள்ளார். படிக்க கீழே சொடுக்குங்கள்.

மேலும் சிந்திப்பதற்கும் உரையாடுவதற்குமான விடயம்.

Read Full Post »

>சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்புவில் நடைபெற இருக்கிறது.

வெள்ளவத்தை உருத்திரா மாவததையின் 57 ஆம் ஒழுங்கை 7ம் நம்பரில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் எதிர் வரும் 2011 ஜனவரி, 06, 07, 08 திகதிகளில் நடை பெறும்.

ஆய்வரங்குகள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் பி்.ப 01.00 மணிவரை நடைபெறும்.
ஆய்வரங்கம் பின்வரும் விடயங்களில் நடைபெறு இருக்கின்றன.

 • கணினி வலைப்பதிவு
 • ஈழத்து தமிழ் இலக்கியம்
 • ஆவணப்படுத்தல்
 • சிறுவர் இலக்கியம்
 • மொழிபெயர்ப்பு
 • சிற்றிதழ்
 • மகளிர் அரங்கு
 • உலகத் தமிழ் இலக்கியம்
 • செவ்விதாக்கம்
 • நிகழ்த்து கலைகள்
 • பல்துறை

கலை நிகழ்வுகள் மாலை 05.00 மணியிலிருந்து இரவு 08.00 மணிவரை நடை பெறும்.

நிறைவு நாள் நிகழ்வு 09.01.2011 ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 08.00 மணிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும்.

Read Full Post »

>

சரஸ்வதி சிலைகள்

கல்விக்கு உரியவள் சரஸ்வதி என்பது எமது சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கை. தினமும் பாடசாலை தொழுமையுடன் ஆரம்பிக்கிறது. மாணவர்கள் தேவாரம் மற்றும் துதிப் பாடல்கள் பாடி தினமும் நாளை அர்ப்பணிப்புடன் ஆரம்பிக்கும்போது அவர்கள் வணக்கத்திற்கு ஒரு சரஸ்வதி சிலை அவசியம் என சில மாதங்களுக்கு முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.

இப்பொழுது எமது பாடசாலையின் இரு வளாகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு சரஸ்வதி சிலை செய்வதற்கான நிதியுதவி கிட்டியுள்ளது.

 • பிரித்தானியாவில் (UK) வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவரான பத்மநாதன் சோதிநாதன் அவர்கள் ஒரு இலட்சம் பணத்தைஅன்பளிப்பாகத் தந்துள்ளார். இப் பணத்தில் பிரதான வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தனது தாயாரான திருமதி.இராசலட்சுமி பத்மநாதன் அவர்களது நினைவாக இந்தச் சிலையை செய்து தருகிறார். இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபரான திரு.செ.பத்மநாதன் அவர்களின் பாரியாரும், புகழ் பெற்ற உயிரியல் ஆசிரியர் நாகநாதன் அவர்களது தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 • திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் (USA) அவர்கள் ரூபா ஒரு இலட்சம் பணத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். இந்நிதியைக் கொண்டு பாடசாலையின் பாலர் வளாகத்தில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட இருக்கிறது. இது அவரது தகப்பனார் திரு.வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்பட இருக்கிறது. வை.கா.சி எனவும் A+ எனவும் அக்கால மாணவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு.வை.கா.சிவப்பிரகாசம் எமது பாடசாலை பெற்றெடுத்த சிறந்த கல்விமான்களில் ஒருவராவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் M.A. பட்டதாரியான இவர் காட்லிக் கல்லூரி ஆரம்பத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கொழும்பு சஹீராக் கல்லூரியிலும் கடைமையாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியன் அதிபராகவும் கடமையாற்றிவராவார்

நிதியுதி அளித்த திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் USA மற்றும் பத்மநாதன் சோதிநாதன்(UK) ஆகியோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந் நிதியுதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் ஊக்கம் செலுத்திய எமது பழைய மாணவர் ஒன்றிய கண்டிப் பிரிவின் தலைவர் திரு.சி.வாசுதேவன் அவர்களுக்கும் கண்டி பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் திரு.கந்தையா செல்வமோகன் அவர்களுக்கும் எமது நன்றிகள். அதேபோல நோர்வேயில் வாழும் திரு.இரத்தினசபாபதி கிருஸ்ணராசா அவர்களுக்கும் எமது நன்றிகள்.

இச் சிலைகளை  தம்பசட்டியைச் சார்ந்த ஆச்சாரியார் வேலுப்பிள்ளை அவர்கள்  செய்து தருவதற்கு இணங்கியுள்ளதாக அறிகிறோம்.

Read Full Post »

>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும்.  இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.

பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.

என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.

இவை ஒரு வைரஸ் நோயாகும்.  Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.

எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.

ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.

16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.

இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.

அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது.  இதுவும் ஒரு  வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.  

மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
 

இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.

பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.

சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.

இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.

ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.

எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.

சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.

மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.

அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
  
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

 மோகத்தால் வந்ததா? – வைரஸ் வோர்ட் (Virus Wart) 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>நண்பர்கள் இனைவருக்கும்
நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்

வாழும் வகை அறிதலின்றி
விழுமியங்கள் புரிதலின்றி
காட்டின விலங்கும் வெட்கும்
நெறியறியா நரக வாழ்வு வாழ்ந்த
மானிடர் தம்மை உய்விக்க
பூமியில் பாலகனாய் அவதரித்தார்.

மற்றவன் வலியில் மகிழ்வு கொள்ளும்
புல்லராய் வாழ ஒண்ணாது
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னம் காட்டும் வண்ணம்
புதுமொழிகள் பகர்ந்த மேலோன்.

“மற்றவனில் குறைகள் தேடி
மரணிக்க தண்டனை வேண்டாம்
நீ செய்த குற்றம் யாது
சிந்திப்பாய் முதலில்
குற்றமெதுவும் செய்யாதவனே
முதற் கல்லைத் தூக்கு” என்றார்.

தன்சுகம் பெரிதெனக் கொண்டு
மானிடம் வாழ்ந்த போது
பேதை மனித வாழ்வின்
மாண்பை உயர்விக்க
அவதரித்த பிரான்

“பசியானால் வாடி, வேதனையில் சோர்ந்து
உயிருக்காய் போராடும் மக்கள்
துன்பத்தை உன் துன்பமாகக் கொண்டு
அன்புக் கரம் நீட்டி வேண்டிய
உதவ செய்ய முன் நிற்பாய்”.

உலகில் மானிடத்திற்கு ஒளியேற்ற
தன்வலி பொறுத்துச் சிலுவை சுமந்து
இன்னுரை தானம் செய்த
யேசு பிரான் வாழ்வு
வழி காட்டல் செய்ய
அன்பு நிறை மனிதராய்
என்றும் வாழ இன்று நாம்
சங்கற்பம் கொள்வோம்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

>

சூரியோதயம்  

கீழே வருவது ஒரு பழைய பாடல்.

வியாபாரிமூலைக் கவிஞரான யாழ்ப்பாணன் சுமார் 60 வருடங்களுக்கு முன்னரே மிகவும் எளிய மொழியில் யாத்த பாடல்.
சூரியோதயம்  பற்றியது.

வண்டினம் இசைகள் பாட
மலரிதழ் முறுவல் பூப்ப
எண்டிசை சேவற் கூட்டம்
எதிர் எதிர் முறையில் கூவ
தெண்டிரை வாரி தன்னில்
செங்கதிர் செல்வன் தோற்றி
மண்டலம் புரக்க வந்தான்
வானத்திற் பவனி போந்தே.

காக்கைகள் கரைய எள்ளி
கருமைசேர் மேனி கொண்ட
போக்கிரி குருவி ஒன்றும்
புதுமைசேர் மொழிகள் செப்ப
நாக்கணப் புட்கள் கூடி
நளினங்கள் செய்யக் கிள்ளை
தூக்கம் விட்டெழவே பட்சி
நாலங்கள் சுருதி கூட்ட …….

அவர் கவிதையின் ஒரு பகுதி மட்டுமே மேலேயுள்ளது.  மீதி காண அவரது கவிதை நூல் நாடுங்கள்.

இப்பொழுது கிடைக்குமா எனக் கேடகக் கூடாது. நூலகம்.கொம் மில் இருக்கக் கூடும். இவ் வருட மத்தியில் யாழ் சென்ற போது எனது புத்தகக் குவியல்களுள் இருந்து உருவி எடுத்து வந்தேன்.

வெளியீடு
வடலங்கா புத்தகசாலை
நந்தன சித்திரை 1951

Read Full Post »

Older Posts »