>இந்த நோயாளியன் கால்களில் கரி அப்பியதுபோல கறுத்தத் திட்டுத் திட்டுகளாக கால்கள் இரண்டிலும் இருக்கிறது. அவற்றில் கடுமையான அரிப்பும் இருக்கிறது. நீண்ட நாட்களாக மாறாது இருக்கிறது என்றார்.
இது ஒரு வகை எக்ஸிமா ஆகும். நுமலர் எக்ஸிமா Nummular eczema என அழைப்பர்.
வழமையாக நாம் காணும் எக்ஸிமா போல கண்டபடி பரந்து கிடக்காமல், அதன் ஓரங்கள் நாணயங்கள் போல கூர்மையான சுற்றுவட்ட அடையாளத்துடன் இருக்கின்றன.
லத்தின் மொழியில் நுமலர் (Nummular) என்பதன் பொருள் நாணயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரத்தில் குணமடையாது. குளிர்காதத்தில் சற்று அதிகமாகும்.
காலம் செல்லச் செல்ல நடுப்பகுதி சற்று வெளிர் நிறமடைந்து சொரசொரப்பாக பங்கஸ் தொற்றுப் போன்ற மாயத் தோற்றத்தை அளிக்கும்.
பொதுவாகக் கால்களில் காணப்படும்.
சில வேளை முதுகு, நெஞ்சுப் புறத்திலும் காணப்படும். பொதுவாக ஏதாவது ஒவ்வாமையால் ஏற்படும் எக்ஸிமா ஆகும்.
வரட்சியான சருமம் உள்ளவர்களில் அதிகம் ஏற்படுகிறது.
இதனால் சருமத்தை உறுத்துபவை நோயைத் தீவிரமாக்கும்.
உதாரணமாக கம்பளி உடைகள், சோப், அடிக்கடி குளித்தல் ஆகியன நோயைத் தீவிரமாக்கும்.
ஏனைய சொரசொரப்பான துணிகளாலான ஆடைகளும், கடுமையான சோப்பில் துவைத்த ஆடைகளும் அவ்வாறே தீவிரமாக்கும்.
பொதுவாகச் சற்றுக் காரமான கோர்ட்டிகசோன் (Clobesterol) மருந்துகளே தேவைப்படும். அவற்றை தினமும் ஒரு முறைக்கு மேல் பூசக் கூடாது. சிறிய அளவு கிறீமை எடுத்தால் போதுமானது. சற்றுத் தேய்த்துப் பூசினால் நன்கு உறிஞ்சப்படும்.
ஆனால் அத்தகைய மருந்துகளை நொய்த தோலுடைய இடங்களான முகம், அக்குள், மலவாயில், பாலுறுப்பை அண்டிய இடங்களில் பூசக் கூடாது. அத்தகைய இடங்களுக்கு ஏற்ற வேறு காரம் குறைந்த மருந்துகள் உள்ளன.
இவர்களுக்கு வரட்சியான சருமம் இருப்பதால் தினமும் குளித்த பின் சருமத்தைக் குளிர்மையாக வைத்திருப்பதற்கு வசிலின் Vaseline கிறீம் உபயோகிக்கலாம்.
அது பிடிக்காதவர்கள் விலையுர்ந்த கீர்ம்களான Efaderm, Neutrogena போன்றவற்றை உபயோகிக்கலாம்.
இவையும் பிடிக்காதவர்கள் இயற்கையான ஒலிவ் ஓயில், நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்துத் தமது சருமத்தை வரட்சியின்னிறிப் பாதுகாக்க முடியும்.
இவர்கள் சுடுதண்ணீர் உபயோகிப்பது நல்லதல்ல. எமது சூழலில் சாதாரண நீரே போதுமானது. இல்லையேல் நகச் சூட்டு நீரில் குளிக்கலாம். குளித்த பின் டவலினால் அழுத்தித் தேய்த்துத் துடைக்கக் கூடாது. நீரை ஒற்றி எடுப்பதே சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
ellam ok but photos pakarappatan aruvaruppa iruku payama iruku sir sory to say this im afraid fr ur photos