Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2011

>

“ஐயா நான் சொன்ன கதையை ஒருதருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ…”

குரல் கேட்டது ஆளைக் காணவில்லை.

அறைக்குள் நுழைய முன்னரே திரைச் சீலைக்கு வெளியே இருந்தே சொல்லிக் கொண்டே வந்தாள் அந்த மூதாட்டி.

”தனது கதை வெளியில் பரவிடுவதற்கு முன் தடுத்துவிட வேண்டும் என்ற அவசரம்தான்  அவளை அப்படிப் பேச வைத்திருக்க வேண்டும்.

என்ன ஏடா கூடமான கதையை என்னிடம் சொல்லியிருப்பாள் என்பது ஞாபகத்தில் இல்லை.

“என்ன கதை சொன்னியள். ஞாபகமில்லை”

“போன முறை வரக்கை நானிருக்கிற வீட்டுக்காரர் பற்றிச் சொன்னனே …”

நான் புரியாமல் விழிக்க ….. ஞாபகப்படுத்த ஆரம்பித்தாள்

அந்த அம்மாவின் நிலைமை படுகவலைதான். கணவன் காலமாகிவிட்டார்.

மூன்று பிள்ளைகள். யாழ்பாணத்தில் குடியிருந்த அவர் தனது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் கொழும்பில்தான் கடந்த பத்து வருடங்களாக வாசம் செய்கிறாள்.

தனியே இருக்க முடியாததால் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறாள்.

அவளைப் பார்க்கவென வீட்டுகாரருக்கு பிள்ளைகள் கணிசமான தொகையை மாதாமாதம் கொடுக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அம்மாவை அக்கறையோடு பார்ப்பதில்லை. ஏனோதானோ என அலட்சியப்படுத்துகிறார்கள்.

தண்டச் சோறு என்பது போல நக்கல்.

இவளுக்கென தனியாக வரும் வேறு காசிலும் கை வைத்து விடுவார்கள்.

இவ்வாறு பல இடைஞ்சல்கள், மனக் கசப்புகள்.

இவற்றை மருத்துவன் என்ற முறையில் என்னிடம் சொல்லி மனம் ஆறியிருந்தாள். நான் இவற்றை விட்டுக்காரருக்குச் சொல்லிவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் வெளிவிட வேண்டாம் எனச் சொல்கிறாள்.

அம்மா சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன அவரது பிரச்சனையை எவருக்கும் நான் சொல்லப் போவதில்லை. அவரது பிரச்சனையை மட்டுமல்ல எந்த நோயாளியின் பிரச்சனையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. நான் மட்டுமல்ல எல்லா மருத்துவர்களும் அவ்வாறே சொல்வதில்லை.

இது அவர்களது தொழில் தார்மீகம்.

நோயாளர்களது தனிப்பட்ட பிரச்சனைகளை மட்டுமல்ல அவர்களது நோய் பற்றிய தகவல்களைக் கூட மற்றவர்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு வழங்குவது தவறு.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.

ஒரு மகன் அருகிலிருந்து பராமரிக்க முடியாத நிலையில் தனது தந்தையின் உடல்நிலை பற்றி அறிவதற்காக எடுத்திருந்தார்.

தந்தையின் மீதுள்ள அவரது பாசமும், தூர தேசத்திலிருந்து அவரது நிலை அறிய முயன்ற அக்கறையும் உண்மையானது. பாராட்டத்தக்கது.

ஆனால்! நான் தகவல் தர மறுத்துவிட்டேன்.

அவருக்கு சற்றுக் கோபமும் எரிச்சலும் ஏற்படவே செய்தன.

ஆனால் எனது நிலை இக்கட்டானது. நான் தகவல் தர மறுத்ததற்கு காரணங்கள் இரண்டு.

அழைத்தவர் உண்மையில் நோயாளியின் மகன் தானா அல்லது வேறு யாராவது துர்நோக்கங்களுக்காகக் கேட்கிறாரா என்பது நிச்சயமாக தெரியவில்லை.

இரண்டாவது மிக முக்கியமான காரணம்.

மகனாகவே இருந்தாலும் தனது உடல்நிலை பற்றி அவருக்கு தெரிவிக்க தகப்பனுக்கு விருப்பம் உள்ளதா என்பது பற்றியும் அவ்வேளையில் எனக்குத் தெரியாது.

ஆயினும் பின்னர், தகப்பன் தனது நோய் பற்றி மகனுக்குக் கூறும்படி கேட்ட பின்னர் தகவல்களை தயக்கமின்றித் தந்தேன்.

நோய் என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம். அதை அவர் மற்றவர்களுக்கு சொல்லவோ மறைக்கவோ செய்யலாம்.

இதனால்தான் எயிட்ஸ் நோயாளியிடம் கூட அவரது சம்மதம் இன்றி இரத்தப் பரிசோதனை செய்ய முடியாது. அவரது நோய் பற்றி மற்றவர்களுக்கு சமூக நலனுக்காகக் கூட வெளிப்படுத்த முடியாது.

மற்றவர்களுக்கு சொல்வதா வேண்டாமா என்பது நோயாளிகளின் விருப்பைப் பொறுத்தது.

மருத்துவர்கள் கூட அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

சரி! ஒரு நோயாளியின் உடல்நிலை பற்றி மற்றொரு மருத்துவர் கேட்டால் என்ன செய்வது?

அதே விடைதான். சொல்ல முடியாது.

அதாவது தனிப்பட்ட தேவைகளுக்காகக் கேட்டால் சொல்ல முடியாது.

ஆனால் அந்த மருத்துவரும் நோயாளியின் சிகிச்சையில் சம்பந்தப்பட்டிருந்தால் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மருத்துவர்களின் கடமையாகும்.

“இவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால் பத்திரிகையில் எழுதுகிறீர்களே” என்று கேட்கிறீர்களா?

எழுதுகிறேன்!

எழுதுகிறோம் !!

ஆனால் அவை எதுவும் எந்தத் தனிப்பட்ட நோயாளியை அல்லது நபரைக் குறிப்பவை அல்ல.

விடயத்தை இலகுவாக விளக்குவதற்கான அவர், அவள் என எழுதுவதுண்டு. ஆனால் அவை எவரையும் குறிப்பாகச் சுட்டாது.

சொல்லப்படும் சம்பவங்களும் தேவைக்கு ஏற்ப கற்பனையில் உருவாக்கப்பட்டவையே.

ஆனால் அனுபவத்தால் பெறப்பட்ட விடயங்களுக்கு கொடுக்கப்படும் உருவங்களேயாகும்.

இது ‘ஓவியர் அனுபவம் சார்ந்து கற்பனையில் ஓவியம் தீட்டுவது போன்றது. அன்றி புகைப்படங்கள் போன்றவை அல்ல.’

வீரகேசரி பத்திரிகையின் ஞாயிறு  வெளியீட்டில் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை. சில படங்களுடன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

Read Full Post »

>

வாயினுள் கட்டி வளர்ந்தால் எவருக்குமே மனக்கிலேசமாகத்தான் இருக்கும். ஏனெனில் இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மிக அதிகமாகக் காணப்படும் ஒரு நோய் என்பதால்தான்.

இந்த நோயாளியும் அவ்வாறு திகிலுடன் வந்திருந்தார்.

அவரது வாயின் உட்புறத்தில் வழவழப்பான மேற்பரப்புடன், நீள்வட்ட தோற்றத்தில் ஒரு கட்டி தென்பட்டது.

சற்று மினுமினுப்பாகவும் இருந்தது. பார்த்த மாத்திரத்திலேயே அது புற்றுநோயல்ல என்பது தெளிவாகியது. அது ஒரு நீர்க்கட்டி அதை Mucous Cyst என மருத்துவத்தில் கூறுவார்கள். அவை எச்சில் சுரப்பிகளுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

எவ்வாறு ஏற்படுகின்றன?

இந்த கட்டிகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆயினும் ஏதாவது சிறுகாயம் காரணமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

கடைவாய்ப் பக்கமாக அதிலும் முக்கியமாக கீழ் உதடுகளை அண்டிய பகுதிகளிலேயே இவை அதிகமாகத் தோன்றுகின்றன என்பது காயங்கள் காரணமாகத் தோன்றலாம் என்ற கருத்திற்கு வலுவூட்டுகின்றன.

வாயினுள் தோன்றும் இத்தகைய நீர்க்கட்டிகள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆயிரம் பேரில் 2.5 எண்ணிக்கையளவில் தோன்றுவதாக கூறப்படகிறது.

ஆண் பெண் என்ற வேறுபாடின்றி இருபாலாரிடமும் ஒரேவிதமாகத் தோன்றுகிறது. ஆயினும் வெள்ளையர்களில் கறுப்பு இனத்தவரைவிட அதிகமாகத் தோன்றுவதுண்டாம்.

எந்த வயதினரிடையேயும் தோன்றலாம் என்ற போதும் வயதானவர்களை விட இளவயதில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும் 30 வயதிற்குக் குறைந்தவர்களிடையே அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.

இதில் இரண்டு வகைகள் உண்டு.

முதலாவது வகை ஆழமற்று மிகவும் மேலாக இருக்கும். தெளிவான நீருள்ள சிறிய கொப்பளங்கள் போலத் தோன்றித் தானாகவே விரைவில் உடைந்துவிடும். உடையும்போது ஏற்படும் சிறு புண்கள் விரைவில் தானாகவே ஆறிவிடும். அதே இடத்திலோ அருகிலோ மீண்டும் தோன்றலாம். இவை பெரும்பாலும் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பது குறைவு.

வாய்த் தோலின் ஆழமான பகுதியில் தோன்றும் நீர்க்கட்டிகளின் வளர்ச்சி வேகம் மிகக் குறைவானதாகும். தெளிவான ஓரங்களுடன் தொட்டால் வழுகுவது போன்ற இறுக்கமான நீள்வட்ட வடிவானதாக தோற்றமளிக்கும். வலிக்காது. பல செ.மீ வரை வளரக் கூடும் ஆயினும் 75 சதவிகிதமானவை ஒரு செ.மீ வரை மட்டுமே வளரும்.

உற்றுப் பார்த்தால் வெளிர் நீல நிறமாகத் தோன்றலாம். நாட்பட்டால் சற்று சொரசொரப்பாக இருக்கும். கீழ் உதடு, வாயின் அடிப்புறம், கன்னங்களின் உட்புறம், அண்ணம், கடைவாய்ப் பல்லை அண்டிய பகுதி போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும். மேலுதட்டில் தோன்றுவது குறைவு.

சிகிச்சை

வாயில் தோன்றும் நீர்க்கட்டிகளுக்கு பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. தானாகவே உடைந்து மறைந்துவிடும்.

ரனுயுலா (Ranula)

வாயின் அடிப்பகுதியில் நாக்குக் கீழே சற்றுப் பெரிய கட்டிகள் தோன்றுவதுண்டு. 2-3 செ.மீ வரை வளரும் இவை நாக்கிற்குக் கீழ் உள்ள எச்சில் சுரப்பியுடன் தொடர்புடையது.

வெளிர் நீலநிறமுடைய இவை வலியை ஏற்படுத்தாது. நன்கு வளர்ந்தால் சப்புவது, பேசுவது, உண்பது போன்ற செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கலாம். இவை தவளைகளின் தொண்டையில் உள்ள வீக்கம் போலத் தோற்றமளிப்பதாலேயே சயரெடய என அழைப்பார்கள்.

இவை சில வேளைகளில் வளர்ந்து தொண்டைப் பகுதிக்கும் சென்றுவிடுவதுண்டு. அதனைச் சத்திர சிகிச்சை மூலமே அகற்ற முடியும்.

வாயில் தோன்றிய புற்றுநோய்க்கட்டி பற்றிய Stethஇன் குரல் வலைப்பூ பதிவிற்கு…

வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ……

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

அவ்வழியே பஸ்சில் பிரயாணம் பண்ணும் போது மனசும் கண்களும் குளி்மையில் நிறையும்.

காற்றினில் அசைந்தாடும் பச்சம் பசிய நிற வாழை இலைகள். அவற்றைத் தாங்கி நிற்கும் மஞ்சள் நிறத் தூண்கள் போன்ற வாழை மரங்கள். இவற்றைப் போசிக்கும் செந்நிற மண்.  பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த ஊர் அது.

வாழைக் குலைகளைக் கண்டாலும் நினைவுக்கு வருவது அந்த நீர்வேலிக் கிராமம்தான்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலட்சக்க கணக்கான இலங்கையரில் நீர்வேலி மக்களும் அடங்குவர். கனடாவில் வாழும் இவர்களில் பலர் ஒன்றிணைந்து வருடாவருடம்  ஒவ்வொரு மலரை வெளியிட்டு வருகின்றனர்.

டிசம்பர் 2010 ல் வெளியான இவர்களது ‘வாழையடி வாழை 2010’ நான்காவது மலர் பார்வைக்குக் கிட்டியது. எழுத்தாற்றல் இருந்தும் இலைமறை காயாக இருக்கும் தம்மவர்களது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதே இந்த மலரின் நோக்கம் என ஆசிரியர் அன்பழகன் தனது முன்னுரையில் கூறுகிறார்.

வாழ்த்துகள் செய்திகள் புகைப்படங்கள் போன்றவற்றிற்கு அப்பால் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல படைப்பாக்கங்களையும் காணக் கிடைக்கிறது.

அதில் சிரசு போல அமைகிறது நீர்வை கிராமத்திற்கு  தனது முற்போக்கு கொள்கைகளாலும், தனது சிறந்த சிறுகதைப் படைபுகளாலும் பெருமை சேர்த்த நீர்வை பொன்னையன் அவர்களது ‘மூடுதிரை’ என்ற சிறுகதையாகும். விடுதலைப் போராட்ட காலத்தின் ஒரு இருண்ட பக்கத்தை இக்கதை வெளிப்படுத்துகிறது.

மோகன் கார்த்திகா எழுதியது ‘வாழ்வெனும் போரட்டத்தில் நான்’ என்ற படைப்பாகும். நினைவலையா, சிறுகதையா என்ற மயக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு நல்ல படைப்பாகும். எதை இழந்தாலும் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் இழக்காது இருந்தால் வாழ்வில் குப்பை மேட்டிலிருந்து குன்றின் உச்சிக்கும் செல்ல வழிபிறக்கும் என்பதை வலியுறுத்தும் படைப்பாகும்.

த.சிவபாலு எழுதிய “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையும் என்பது மாற்றப்பட முடியாததா?- நாமும் எமது எமது பழக்கவழக்கங்களும் என்ற கட்டுரையும் விதந்து சொல்லக் கூடியது. எம்மை நாமே அறிந்து திட்டமிட்டு, வெற்றிகான சூழ்நிலையை உருவாக்கி முழுமுயற்சியோடு செயற்பட்டு முன்னேறும் வழியைக் காட்டும் நல்ல கட்டுரையாகும்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள மருத்துவக் கட்டுரையொன்றும் மிகவும் பயனுள்ளது. Why is Osteoporosis an important public health issue by Dr.Radhika Natgunarajah. Osteoporosis என்றால் என்ன, அதைக் கண்டறிவது எப்படி? அது வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் எனப் பலவற்றையும் சுருக்கமாகத் தருகிறது.

வீட்டை விற்பது எப்படி, சேமிப்புத் திட்டம், விளையாட்டும் நாமும், சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படும் திருமணமே… என்ற கட்டுரை என மேலும் பலவும் நிரவிக் கிடக்கின்றன.

தொடர்புகளுக்கு:- editor@neervely.ca
64 Lockheed Crescent, Brampton
Ontario. L7A 3G4, Canada

Read Full Post »

>

“உள்ளை வாங்கோ டாக்டர்”

அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.

ஆடம்பர மார்பிள் பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தோம்.

கடைசியாக வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.

விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.

நாயை அடைத்து வைக்கும் அறைக்கு என்னை அழைத்து வருகிறாரா?

மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க தயங்கியே அடியெடுத்து வைத்தேன்.

அது முதியவர் அறை!!

பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர்.

தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு,மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் திசையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது!

அறை நிறைய இலையான்கள். அவரையும், கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.

கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன!

அறைக்குள் நுழையவே கால்கூசியது!

மனம் தயங்கியது.

ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன்.

நோயின் வேதனையிலும் பறக்கணிப்பின் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை!

“கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள்” என்று சொல்வது போலிருந்தது. அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!

கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.

“ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது.
பெரிய மனிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந்தானே.

பின் விறாந்தை என்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்” என்றார்.

பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ?|எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.

தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகிறோம்.

காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத்திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டி மூச்சடைக்கக் கொன்றவர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.

ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
 

Geoffrey Madan  ஒரு கருத்துச் சொன்னார்.
“ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்”.
இத்தகைய மனநிலையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

கனவாகிப் போன வாழ்வு
 80களில் சிரித்திரனில் எழுதி 90 களில் மல்லிகை வெளியீடாக வந்த ‘டொக்டரின் டயறி’ என்ற எனது நூலில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Read Full Post »

>

சென்ற தை மாதம் 6,7,8,9  திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல சலசலப்புகள் எழுந்தபோதும் அவற்றை மேவி மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாடு அதுவாகும். பல பயனுள்ள கட்டுரைகள் படிக்கப்பட்டன.

இது விழாவின் நிகழ்சிநிரல் நூலாக..

பல எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கக் கிடைத்தமை மிக அரிய அனுபவமாகும்.

தெணியான், செங்கை ஆழியான் மேடையில்

 அதிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைக் கண்டும் அவர்களுடன் நேரில் பேசியும் மகிழ்ந்ததை நேரில் காணக் கூடியதாக இருந்தது.

கூட்டத்தில் இரண்டாம் நிகழ்வு ஒன்றின்போது பார்வையாளர் சிலர்

ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் எனப் பல ஆய்வரங்குகள் நடைபெற்றன. அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றபோதும் எதில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப் பலராலும் முடிவெடுப்பதில் சிரமம் இருந்தது. இத்தகைய மநாடுகளில் இது தவிர்க்க முடியாததே.

நிகழ்வுகள் நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்தில் முடிவுற்றமைக்கு அமைப்பாளர்களையும் பங்கு பற்றியோரையும் ஒரே நேரத்தில் பாராட்ட வேண்டும்.

விழாவை ஒட்டி பல நூல்கள் வெளிடப்பட்டன.

1. கட்டுரைக் கோவை

2. விழா தொடர்பான சிறப்பு மலர்.

3. பேராளர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களில் முகங்கள் என்ற தலைப்பிலான புலம் பெயர்  பற்றிய சிறுகதைத் தொகுதி.

3. டொக்டர் சிவதாஸ் எழுதிய மகிழ்வுடன் என்ற உளவியல் நூல்.

பல சஞ்சிகைகள் தங்கள் அம்மாத இதழ்களை மாநாட்டுச் சிறப்பிதழ்களாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1. மல்லிகை ஆண்டு மலர் விழாச் சிறப்பிதழாக

2. ஞானம் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்.

 நூல் விற்பனை நிலையம் வாயிலருகே அமைந்திருந்தது. பலரும் அவற்றைப் பார்ப்பதும், தமக்குப் பிரியமானவற்றை வாங்குவதுமாக இருந்தனர்.

3. ஜீவநதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்

இதற்காக அயராது உழைத்த திரு.ஞானசேகரன், அஸ்ரப் சிஹாப்தீன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முருகபூபதி போன்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களாவர். ஆனால் இவர்களைத் தவிர ஒரு பெரும் படைப்பாளி உலகமே அவர்கள் பின் நின்று ஒத்தாசை வழங்கியதை மறக்க முடியாது.

மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன்.எஸ்.டி.சிவநாயம் அரங்கில் முதல் நாள் நடைபெற்ற ‘கணினியும் வலைப்பதிவுகளும்’ என்ற ஆய்வரங்கில் இணைத் தலைவராக.

இணைப்பேராசிரியை மு.சு.தங்கம்(இந்தியா) என்னுடன்  இணைத் தலைமையை  ஏற்றிருந்தார்.

அதற்காக ஒரு சான்றிதழ் எனக்கும் வழங்கப்பட்டது.

இணைத்தலைமை, கட்டுரை படித்தல் என பங்கு பற்றிய அனைவருக்குமே அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டம் நடந்த உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க வாயில் முன்னே நான்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

சென்ற 7ம் திகதி பெப்ருவரி 2011 ல் ஒரே நாளில் இரு சிறுவர்களை கடுமையான டெங்கு நோயென இனங்கண்டு விசேட சிகிச்சைகளுக்காக சிறுவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுமையான மழையின் பின்னான வெயில் பல இடங்களில் டெங்கு நோய் அதிகரித்திருக்கிறது.

டெங்கு நோயின் அறிகுறிகள்

இப்பொழுது புதிய அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பதால் பலரையும் காப்பாற்ற முடிகிறது.

மேற் கூறிய இரு சிறுவர்களும் நலமாக வீட திரும்பிய செய்தியை இன்று (11.02.2011)பெற்றோர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

நோயை நேர காலத்துடன் நிர்ணயம் செய்வதும், அவசியம் ஏற்படுமிடத்து தாமதிக்காது அதற்கான மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச் சாறு சிறந்த பலன் அளிக்கும் என்ற செய்தி அண்மைக் காலமாக பத்திரிகை ரீவீ ஆகியவற்றில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தவறான செய்தி என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

தவறான செய்திகளால் பயனற்ற மருத்து முறைகளில் காலத்தைக் கடத்தாது சரியான மருத்துவம் செய்வது அவசியம்.

வெண்குருதி சிறுதுணிக்கை (Platelet)

டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்களுக்கு வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platelet) குறைதலும் அதனால் ஏற்படும் குருதி பெருக்கமுமே காரணம் என இதுவரை நம்பப்பட்டது.

புதிய சிகிச்சை முறையின் அடிப்படை

இதன் காரணமாக அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதே மருத்துவ சிகிச்சையின் நோக்கமாக முன்னர் கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platlet) மாற்றீடு செய்யப்படுவது உயிர்காக்கும் மருத்துவம் என எண்ணப்பட்டது.

டெங்குவின் அறிகுறிகள் இருக்கும் போது வெண்குருதி சிறுதுணிக்கை (Platlet)அளவு 100,000 லுக்குக் கீழ் குறைந்தால்  உடனடியாக மருத்துவ கனையில் அனுமதிப்பது அவசியம்.

ஆயினும் நவீன சிகிச்சை முறையில் இதனை மாற்றீடு செய்யப்படுவதில்லை. உள்ளெடுக்கும் நீரின் அளவையும் வெளியேறும் நீரின் அளவையும் நுணுக்கமாகக் கணித்து அதற்கேற்ற அளவில் கொடுப்பதன் மூலம் ஆபத்தான விளைவுகளைத் தடுப்பதே இன்றைய சிகிச்சையின் அடிப்படையாகும்.

இலங்கையில் இறப்பு விகிதம் மிக அதிகம்

ஆயினும் இத்தகைய சிகிச்சையால் போதிய பலன் கிடைக்கவில்லை.

உதாரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு வீதம்

 • மலேசியாவில் 0.34 சதவிகிதமாகவும், 
 • தாய்லாந்தில் 0.1 சதவிகிதமாகவும் இருக்கும்போது, 
 • இலங்கையில் இது 1 சதவிகிதமாக மிக அதிகமாக இருக்கிறது. 

டெங்கு நோயைப் பொறுத்தவரையில் இலங்கையானது டெங்குவின் தாக்கம் அதிகமுள்ள A வகை நாடுகளில் ஒன்றாக பகுக்கப்பட்டது.
இது ஏன்? இதை நிவர்த்திப்பது எப்படி என்பது ஆராயப்பட்டு எமது மருத்துவ நிபுணர்கள் சிலர் தாய்லாந்து நாட்டிற்கு பயிற்ச்சிக்காக அனுபப்பட்டபோதே எமது சிகிச்சை முறையின் போதாமை உணரப்பட்டதாகத் தெரிகிறது.

இறப்புகளுக்கான காரணங்கள்

 • உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்குக் காரணம் வெளித் தெரியாமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் குருதிப் பெருக்கைக் (Concealed bleeding) கண்டறிவதில் ஏற்பட்ட தாமதமும்,
 • உடற் திரவங்களின் (Body Fluids) அளவை சரியான முறையில் பராமரிக்காமையும் ஆகும்.

எமது நாட்டில் நோயாளியின் வெண்குருதி சிறுதுணிக்கை குறையும்போது அவசரப்பட்டு அதனை மாற்றீடு செய்ததால் உடல் திரவங்களின் நிலையில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டு அதனாலும் மரணங்கள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

பப்பாசிச்சாறு நோயைக் குணமாக்கவில்லை

பப்பாசி இலைச் சாறு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் யாவும் அதனை சிகிச்சைக்காக கொடுத்ததன் பலனாக நோயாளியின் குருதியில் வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரித்ததாகக் கூறின.

இது பப்பாசிச் சாறினால் நோய் குணமானதற்கான அடையாளமல்ல.

எந்தவித சிகிச்சையும் கொடுக்காவிட்டால் கூட நோய் சுயமாகக் குணமாகும்போது அந்த எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன் டெங்கு நோயின் மிக ஆபத்தான கட்டமான டெங்கு அதிர்ச்சி நிலையை பப்பாசிச் சாறு (Dengue Shock Syndrome) குணமாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அல்லாது நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

சருமத்தில் செம்மை பூத்தது போல புள்ளி புள்ளியாக இரத்தக் கசிவு

டெங்குவின் வகைகள்

சாதாரண டெங்குக் காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சற்றுக் கடுமையானதான டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் ஆபத்தானது என்ற போதும் உயிரிழப்புகளுக்குக் காரணம் அதுவல்ல. ஆனால் அது மோசமாகி அதிர்ச்சி நிலைக்குப் போனால் மிக மிக ஆபத்தானது. 

டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

 • அது தொற்றிய பலருக்கும் வெளிப்படையான எந்த அறிகுறியும் இருக்காது. 
 • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து தானாகவே மாறிவிடும். 
 • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். 
 • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
டெங்கு  குருதிப் பெருக்குக் காய்ச்சலில் கண்ணில் குருதிக் கசிவு

குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட

 • 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள். 
 • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

 மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நீங்கள் செய்யக் கூடியது

காய்ச்சல் வந்த உடனேயே இது டெங்குவாக இருக்குமோ எனப் பயந்து மற்றவர்களையும் கலங்கியழ வைத்து உடனடியாக மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை.

முதல் மூன்று நாட்களுக்கு பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை தாமதிக்காது நாடுங்கள்

 • கடுமையான தலையிடி
 • கடுமையான வயிற்று வலி
 • வயிற்றுப் புரட்டும் சத்தியும். இவை அதிகமாகி நீராகாரம் எதனையும் உட்கொள்ள முடியாதிருத்தல்
 • கடுமையான தாகம்
 • தோல் செந்நிறம் பூத்தது போல இருத்தல் அல்லது சிவத்தப் புள்ளிகள்
 • கடுமையான உடல் உழைவு, மூட்டு வலிகள்
 • உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல்
 • கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை
 • சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல். உதாரணமாக 6மணிநேரம் சிறுநீர் கழியாதிருத்தல்

இவற்றில் சில அறிகுறிகள் வேறு சாதாரண காய்சல்களின் போதும் ஏற்படக் கூடும். ஆயினும் டெங்கு பரவி வரும் காலங்களில் அவற்றை உசாதீனம் செய்யக் கூடாது.

அதிக கவனம் எடுக்க வேண்டியவர்கள்

மேற் கூறிய அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உதாசீனம் செய்யக் கூடாது. ஆயினும் கீழ்க் கண்டவர்கள் டெங்குக் காச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் கூடிய கவனம் எடுப்பது அவசியம்

 • ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்
 • வயதானவர்கள் – 65 வயதிற்கு மேல்
 • கொழுப்பான உடல் வாகை உடையவர்கள்
 • கர்ப்பணிகள்

எனவே பப்பாசி இலை, வீட்டு மருத்துவம் போன்றவற்றில் காலத்தைக் கடத்தாது டெங்கு நோயெனச் சந்தேகத்துக்கு உரியவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உலகளாவிய ரீதியில் டெங்கு நோயும் அதனைப் பரப்பும் நுளம்பும் காணப்படும் பிரதேசங்கள்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் அடைப்படை உண்மைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?

 டெங்குநோயைப் பரப்பும் Aedes aegyptiநுளம்பின் வாழ்க்கை முறை அதனை அழிக்கும் வழிமுறைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பாருங்கள்.

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்

அழுக்கு, கழிப்பறை, குப்பை கூளங்கள் யாவும் நுளம்மைபைப் பெருக்கும் இடங்களாகும். ஆனால் பொதுக் கழிப்பறையில் நடந்த இந்த சம்பவம்சுவார்ஸமானது.

கலங்கவைக்கும் டெங்கு பற்றிய தொடரைப் படித்த உங்களை மறந்து சிரிக்க வைக்கும் பதிவு இது.

கழிப்பறையில் அழைப்பு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வன்மைப் போட்டி இன்று 12.02.2011 சனிக்கிழமை நடை பெற இருக்கிறது.

பாடசாலை அதிபர் மு.கனகலிங்கத்தின் தலைமையில் மாலை 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகிறது.

பாடசாலை மைதானத்தில் நடைபெறும் இவ் மெய்வன்மைப் போட்டிக்கு யாழ் பல்கலைக்கழக நிதியியல் முகாமைத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர்.மா.நடராஜசுந்தரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்.

Read Full Post »

>

என்ன நடக்கிறது எமது நாட்டில்?

சென்ற ஆண்டு பங்குனி சித்திரை மாசங்களில் வரலாறு காணாத வெப்பம் எம்மை வாட்டி வதைத்தது. பின்னர் 62 வருடங்களுக்குப் பின்னர் சென்ற மாதம் கொழும்பில் வெப்ப நிலை 18 பாகையாகக் குறைந்து கடும் குளிரில் துன்பப்பட்டோம்.

இப்பொழுது வடக்கு கிழக்கு வடமத்திய மாகணங்களில் கடும் மழை, வெள்ளம் என அனர்த்தங்கள் தொடர்கின்றன. மலையகத்தில் மண்சரிவுகளால் பலர் மாள்கிறார்கள்.

பூகோளம் வெப்படைதலால் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்களை இவற்றின் ஊடாக நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. துன்பத்தில் ஆழவும் வைக்கிறது.

ஆனால் இவை பற்றியெல்லாம் முன்னோக்கிப் பார்த்து, கடந்த 2009ம் ஆண்டு  ஐப்பசி மாதம் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் உரையாற்றி இருக்கிறார்.

பாமர மக்களின் நலனுக்காகப் போராடிய தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுப் பேருரை இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அவர் ஆற்றிய உரை இப்பொழுது பூகோளம் வெப்படைதல் என்ற நூலூக வெளிவர இருக்கிறது.

அவுஸ்திரேலியா முதல் ஆசியா வரை காலநிலை நிலை மாற்றங்களால் அவஸத்தைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவரது இக்கட்டுரை தொகுக்கப்பட்டு முழுமையான நூலாக வெளிவருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பலருக்கும் பயனளிக்கப் போவதும் நிச்சயமாகும்.

இந்நூல் பற்றிய ஆய்வரங்கு எதிர்வரும் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6, 58, தர்மராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

தலைமை:- கலாநிதி செல்வி திருச்சந்திரன்.

ஆய்வாளர்கள்
1. த.இராஜரட்ணம்
2. பேராசிரியர். எம். கருணாநிதி
3. பேராசிரியர் சபா. ஜெயராசா

இறுதி நிகழ்வாக நூலாசிரியர் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் அவர்களின் ஏற்புரை நடைபெறும்.

சுற்றுப்புறம் சூழல், பூகோளம் வெப்பமடைதல் போன்ற சமூதாயத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றி ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை நிறைவுறச் செய்ய அழைக்கப்படுகிறார்கள்..

Read Full Post »

>

அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது நான் சொன்னதைக் கேட்டு. ஆனால் நானாக எதுவும் சொல்லவில்லை. அவர் தந்த இரத்தப் பரிசோதனை ரிப்போட்டுகளை வைத்துத்தான் கருத்துச் சொன்னேன்.

“உங்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாக இருக்கு” இதுதான் நான் சொன்னது.

அவர் ஆச்சரியப்பட்டதிலும் நியாயம் இருக்கிறது.

அவர் தனது உணவு முறைகளில் மிகுந்த அக்கறை உள்ளவர். அத்துடன் ஒரு வெஜிடேரியன். கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்து காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுபவர். தினசரி நடைப்பயிற்சி செய்வதாகவும் சொன்னார்.

“அம்மாவிற்கு கொலஸ்டரோல் இருந்து, ஹார்ட் அட்டக் வந்து இறந்தபடியால் நான் வலு கவனமாக இருந்தனான். இருந்தும் எனக்குக் கொலஸ்டரோல் வந்து விட்டதே” எனக் கவலைப்பட்டார்.

“நீங்கள் இவ்வளவு கவனமாக இருந்தபடியால்தான் உங்களுக்கு 45 வயதுவரை கொலஸ்டரோல் பிரச்சனை வராமல் தப்பியிருக்கிறீர்கள்.” என்றேன் நான்.

உண்மையில் மாரடைப்பிலிருந்தும் தப்பியிருக்கிறார். தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தால் எதிர்காலத்திலும் தப்பிவிடுவார்.

உணவுமுறை மட்டுமே காரணமல்ல

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.

 • இவை அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன. 
 • ஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.
ஏனைய காரணிகள்

குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.

 1. பரம்பரை அம்சங்கள் 15 சதவிகிதம்,
 2. அதிகரித்த எடை 12 சதவிகிதம்,
 3. ஹோர்மோன்களும் நொதியங்களும் 8 சதவிகிதம்,
 4. உயர் இரத்த அழுத்தம் 8 சதவிகிதம்,
 5. அதிக மது பாவனை 2 சதவிகிதம்,
 6. மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 சதவிகிதம்,
 7. நீரிழிவு 7 சதவிகிதம்,
 8. உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6 சதவிகிதம்,
 9. புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6 சதவிகிதம்,
 10. ஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5 சதவிகிதம்

எனச் சொல்லப்படுகிறது.

பரம்பரை அம்சத்தின் பங்கு

இவற்றில் மிக உயர்ந்த அளவான 25 சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே. எனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15 சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

மேற் கூறிய நோயாளி எவ்வளவு கவனமாக இருந்தும் கொலஸ்டரோல் அதிகரித்ததற்குக் காரணம் அவரது தாயாருக்கும் கொலஸ்டரோல் இருந்ததாகக் கொள்ளலாம்.

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு மாத்திரமின்றி நீரழிவு, பிரஸர், மாரடைப்பு, ஒஸ்டியோபொரோசிஸ், சில வகை புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் பரம்பரை அம்சங்கள் காரணமாகின்றன.

ஒருவரது தாய், தகப்பன், சகோதரங்கள் போன்ற நெருங்கிய உறவினர்களில் அவ்வாறான நோய்கள் இருந்தால் இவர்களுக்கும் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். 

மருந்துகளை நிறுத்தல்

மற்றொருவருக்கும் கொலஸ்டரோல் இருந்தது. மருந்துகள் சாப்பிட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் கொலஸ்டரோல் ரிப்போட்டுடன் வந்தார்.

“உங்கள் கொலஸ்டரோல் அளவு சாதாரண நிலைக்கு வந்துவிட்டது” என்றேன்.

முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. “அப்ப மருந்தை நிப்பாட்டலாம்தானே” எனக் கேட்டார்.

 • “உணவு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்துடன், உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய ஏனைய வாழ்க்கை முறைகளான 
 • தினசரி உடற் பயிற்சி, 
 • நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலன்றி உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை, 
 • மது புகைத்தல் ஆகியவற்றை நிறுத்தல், 
 • நீரிழிவு பிரஸர் போன்றவற்றைக் கட்டுப்படுத்தல், 
 • மனஅமைதியான வாழ்க்கை முறை 

என வாழ்ந்தால் கொலஸ்டரோல் தானே குறைவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் அது முக்கியமாக ஆரம்ப நிலையில் மாத்திரமே சாத்தியமாகும்.

ஆனால் உங்கள் வயதையோ, நீங்கள் ஆணா பெண்ணா என்பதையோ மாற்ற முடியுமா? அதேபோல உடலிலுள்ள ஹோர்மோன்களையும் நொதியங்களையும் உங்களால் மாற்ற முடியாது.

வேறு நோய்களுக்கான எல்லா மருந்துகளையும் நிறுத்த முடியுமா? அவ்வாறு செய்தால் கொலஸ்டரோலை மருந்துகள் இன்றிக் குறைக்க வாய்ப்பு உள்ளது.” என்ற விளக்கத்தை அளித்தேன்.

“ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடிய அதிகாரம் எனக்கு இருக்கிறது.” இவ்வாறு கூறியவர் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா.

ஆனால் அவராலும் அவரது வயதையோ, முதுமையையோ, மரணத்தையோ மாற்ற முடியவில்லை. இவற்றுடன் பரம்பரை அம்சங்களையும், குடும்பக் குணாதிசியங்களையும், கொலஸ்டரோலையும் இணைத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்த இரத்தப் பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனையும்

இவை முடியாது என்பதால் கொலஸ்டரோல் மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ஆனால் மருத்துவர் ஒரு முறை எழுதித் தந்த மாத்திரைகளை தொடர்ந்து பாவிக்க முடியாது.

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து அதிலுள்ள மாற்றங்களுக்கு எற்ப மருந்துகளின் அளவுகளிலும், வகையிலும் மாற்றங்கள் செய்ய நேரலாம்.

அவ்வாறு காலக்கிரமத்தில் இரத்தப் பரிசோதனைகள் செய்வது கொலஸ்டரோல் குறைந்திருக்கிறதா என்பதைக் கணிக்க மாத்திரமல்ல, தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு வேறு கேடுகள் இருக்கிறதா என்பதை அறியவும்தான். இதனால் தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் சாத்தியமும் இல்லை.

எனவே கொலஸ்டரோல் பிரச்சனைக்கு

 • மருந்துகள் தேவையா இல்லையா, 
 • எந்த மருந்து தேவை, 
 • எவ்வளவு காலத்திற்கு தேவை 

என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்கள் மருத்துவரிடம் விட்டுவிடுங்கள்.

ஆனால் அவை பற்றிய உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது.

நிறைவேற்று அதிகாரம் உள்ளவர்களும் மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டியுள்ளது அல்லவா? அது போலத்தான்.

கொலஸ்டரோல் மற்றும் மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு கீழே கிளிக் செய்யுங்கள்.

‘இருக்கிறம்’ சஞ்சிகையில் வெளியான எனது மருத்துவக் கட்டுரை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0

Read Full Post »

>

முன் வீட்டு அயல் வீட்டு
தெருவோரப் பூவெல்லாம்
பறித்தெடுத்து இறைவனுக்கு
அர்ப்பணித்தல் அடாத செயலென்பர்.
அதனையே மொபைல் போனில்
அமுக்கி வைத்து இணையத்தில்
பகிர்ந்து கொண்டால்
கலைப் படைப்பெனத்
திமிர் கொள்வர்.

வெண்மையும் இளம் சிகப்பும்
இன்னும் பெயர் தெரியா நிறமனைத்தும்
தெருவோரம் தான்தோன்றி புன்னகைக்கும்
செடிகளில் விதவிதமாய்
இதழ் விரிக்கும்.

மதராசப் பட்டினத்தில்
படகோட்டும்
கூவம் நதியல்ல
கொழும்பு நகரின் கனால் (Canal)
கழிவு நீரின் நாற்றம்
காத தூரம் ஓட வைக்கும்
ஆயினும் அதன் போசாக்கு
அதன் கரை ஜனனிக்கும்
கொடி செடியைப் போசிக்கும்.

கதிரவனின்  கரம் வாட்ட
சென்ட் பீற்றர்ஸ் மாணவர்கள்
நீண்டுழைத்து
நீரிழப்பால் உடல் தளர்வர்.
விளையாடும் மைதானத்தில்.

மறுகரையில்
நீரோரம் நிதமிருந்தும்
சிறு செடிகள் அனல் காற்றில்
அலையாடி சருகாவர்.

தடைபோட்ட தாழ்வாரத்தில்
அடைந்திருக்க மனதின்றி
கொட்டும் மழையில்
குதித்துக் கும்மாளமிட
தெருவோரம் தலை நீட்டி
உடல் நனைக்கும் ஆனந்தம்
தொடர்மாடி வீட்டு
முகப்போர அலங்காரச் செடிக்கு
சிலவேளை கை கூடும்..

வானத்தின் நீலத்தை
தன்னிதழில் வர்ணமிட்டு
கோலம் வரைந்திருக்கும்,
வானத்தைத் தன்வாழ்வில்
சிறுபொழுதும் காணாத
உள்வீட்டு குறும் செடி.

ஆண்டி, ஆண்டகை
இழிசனர், உயர்சாதி
உழைப்பவன், சுரண்டல்காரன்
என வர்க்க பேதமில்லா
பூக்களின்
சாம்ராஜ்யம் இது.

பூக்கள், செடிகள் பற்றிய கவிதையுடனான முன்னைய புகைப்படப் பதிவுகளுக்கு கீழே கிளிக்குங்கள்.:-

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »