கார்த்திகாயினி சுபேஸ் அவர்களின் ‘தாய் மடி தேடி..’வெளியீட்டு விழா சென்ற ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு வெளியீட்டு விழா நடைபெற்றது.
வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற அவ் விழாவில் நான் கலந்துகொண்டு ஆற்றிய தலைமையுரையை இங்கு முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
விழா நிகழ்வில் எடுக்ப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் காணலாம்.
 |
தலைமையுரை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன். |
திருமதி கார்த்திகாயினி சுபேஸ் எழுதிய தாய்மடி தேடி.. என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டிற்காக இங்கு கூடியிருக்கிறோம்.
 |
தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்களிமிருந்து முதற் பிரதி பெறும் பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கே.தர்மராஜா |
தாய்மடி மீது அமர்ந்திருப்பதின் சுகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாம் இன்று வளர்ந்த மனிதர்கள். உங்களில் பலரும் சிறிய பிள்ளைகளின் தாய் தகப்பனகவோ அல்லது பேரன் பேத்தியாகவோ இருப்பீர்கள். அவர்களை அணைத்து பாதுகாப்பும், ஆறுதலும் தரும் நிலையில் இருப்பீர்கள். ஆனால் பின்நோக்கிப் பார்க்கும் எமக்கு ஆறதல் தந்த, ஆசுவாசம் காட்டிய, தேறுதல் கூறிய அம்மாவின் மடியில் கிடக்க வேண்டும் என்ற தாபம் எழுவதை மறுக்க முடியாது. தாயின் அன்பு அத்தனை விசாலமானது.
கார்த்திகாயினியின் கதைகள் பல விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. சாதீயம், பெண்ணியம், மானிட நேயம், ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள், குழந்தையின்மை, சுனாமிப் பாதிப்பு. மிருகங்கள் மீதான பிரியம், இவ்வாறு பலவற்றைப் பேசினாலும், அடிப்படையாக இருப்பது போரினால் சிதைந்த எமது வாழ்வுதான்.
 |
விழாத் தலைவர் எம்.கே.முருகானந்தனிடமிருந்து சிறப்புப் பிரதி பெறும் தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள் |
போர் சார்ந்த இந்தப் படைப்புவெளி கார்த்திகாயினிக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. எழுபதின் பிற்கூறுகளில் கவிதையில் வெளிப்படத்த தொடங்கிய இந்த அம்சம் பிற்பாடு சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எமது படைப்பிலக்கியம் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
தாய்மை
 |
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் |
வெளிப்படையாகப் பார்க்கும்போது கார்த்திகாயினியின் படைப்புகள் போரினால் தமிழ் சமூகம் சந்தித்த துன்ப துயரங்களை, அவர்கள் எதிர் கொண்ட அவமானங்களை, உயிர் இழப்புகளை, அங்கயீனங்களை, சமூக அவலங்களைப் பற்றியே பேசுகின்றன.
ஆனால் இவற்றையெல்லாம் இணைத்துக் கோர்க்கும் நார்போல அமைந்திருப்பது அன்புதான். அவற்றின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பது, அளப்பற்ற அன்பு, அள்ள அள்ள வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கும் அன்பு, கைமாறு எதிர்பார்க்காது வழங்கிக்கொண்டே இருக்கும் அன்பு.
 |
மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரை வழங்குகிறார் |
அதிலும் சிறப்பாக அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பானது, தாயன்பு என்றே எனது மனத்திற்குப் படுகிறது. அத்துடன் போரினால் தாயை மாத்திரமின்றி தனது குடும்பத்தை இழந்து தனிமரமாகிவிட்டதுடன், அங்கங்களையும் இழந்து வேதனைப்படும் ஒரு குழந்தை தாயன்பிற்காக ஏங்குவதும் மற்றொரு படைப்பாக அமைந்துள்ளது.
 |
திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை) வாழ்த்துரை வழங்குகிறார் |
எந்த ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக இருந்தாலும், அது வாசகனது உள்ளத்தில் கள்ளமாகப் புகுந்து கொள்ள வேண்டும், குறுணல்களாக இருக்கும் சீனியைத் தேநீரில் கலந்தால் அது எவ்வாறு தனது உருவத்தை இழந்துவிடுகிறதோ அவ்வாறு தனது வெளிப்படை உருவை முற்றாக மறைந்துவிட வேண்டும். ஆனால் எவ்வாறு தேநீரின் ஒவ்வொரு துளியிலும் அதன் சுவை செறிந்துள்ளதோ அவ்வாறே எழுத்தாளனின் படைப்புகளும் வாசகனின் உள்ளமெங்கும் படர வேண்டும். அதற்கு மேலாக அவனது மூளையின் நரம்புகளை இதமாகச் சுண்டிவிட வேணடும்.
 |
ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்குகிறார் |
தேநீரில் சினி மறைந்து இனிப்புச் சுவை கலந்திருப்பது போல, கார்த்திகாயினியின் படைப்புகளைப் படித்தபோது எனது உள்ளத்தில் கலந்துவிட்ட சுவை அந்த அன்புதான், அதிலும் முக்கியமாக தாயன்பு என்பதாகவே உணருகிறேன்.
வெளியே சென்ற கணவனின் வருகையைக் காத்திருக்கிறாள் மனைவி என்பதை நாம் எமது பழம்தமிழ் இலக்கியங்களில் படித்திருக்கிறோம். “அந்தி சாயும் வேளை அத்தான் வருவான்..” என எமது நாயகிகள் காத்திருந்ததையும் நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இவை அன்புக்கு ஏங்கி, அரவைணைப்பின் சுகத்திற்கான காத்திருத்தல்கள் ஆகும்.
 |
திருமதி தேவகெளரி சுரேந்திரன், திருமதி கார்த்திகாயினி சுபேஸ், திருமதி ராணி ஸ்ரீதரன் |
ஆனால் பயத்தினால் காத்திருப்பு நிகழ்கிறது. இலங்கைவாழ் தமிழ்ச் சமூகம்தான் பீதி கலந்த காத்திருப்பை நன்கு அறிந்திருக்கிறது. வெளியே சென்ற கணவன் திரும்பி வருவானா? பள்ளிக்கும் போன மகன் திரும்பி வருவானா?, ரியூசனுக்குப் போன மகள் திரும்பி வருவாளா என தெருமேல் விழி வைத்துக் காத்திருந்தது எமது சமூகம் பல வருடங்களாக.
வெளியிலிருந்து ஆவேசமாக வந்த வல்லுறுகளும், உள்ளிருந்து நசுக்கிடாமல் ஓசையின்றி நகர்ந்த அரவங்களும் எமது பிள்ளைகளைக் கவர்ந்து சென்ற கதைகளைச் சொல்லி அழுதவர்கள் பல பேர். சொல்லவும் முடியாது, கண்ணீர் சிந்தவும் முடியாது மனதிற்கள் மறுகிப் பித்துப் பிடித்தவர்கள் ஏராளம்.
 |
பிரபல விமர்சகர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் சிறப்புப் பிரதி பெறுகிறார். |
தன் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட பக்கத்துவீட்டில், உறவுகளில் இவை நடப்பதைப் பார்த்து கையறு நிலையில் நாம் இருந்திருக்கிறோம்.
இத்தகைய ஒரு சூழலில் தாய் படும் மன உளைச்சலை கார்த்திகாயினி தனது சிறுகதைகளில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.
 |
தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார் |
“போனவளைக்காணேல… வாசலுக்கும், வீட்டுக்குமாக மாறிமாறி நடந்தாள். நெருப்பு மேல் நிற்பது போலத் தவித்தாள். அவள் உள்ளம் பிள்ளையாரையும் பலமுறை வேண்டிக் கொண்டது. இது ஒரு கதையில்.
மற்றொரு கதையில்..
“காலம்பிற எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனவள் ஆறுமணி மட்டும் என்ன செய்கிறாளே, ஊருலகம் கெட்டுக் கிடக்குற கேட்டுக்கு இவளும் யோசனை இல்லாமல் நிக்கிறாளே” என்று சலித்தபடி வீட்டு வாசற்படியில் அமர்ந்து கொண்டாள்.
“தாயில்லாப் பிள்ளை எண்டு பொத்திப் பொத்தி வளர்த்தேனே. எந்தப் பாடையிலை போவாரின் கண்பட்டதோ…” என தாயில்லாப் பிள்ளையைத் தாயைப் போல வளர்க்கும் ஆச்சியின் பாசம் தாய்ப்பாசமாக மற்றொரு இடத்தில் வெளிப்படுகிறது.
 |
திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்) வாழ்த்துரை வழங்குகிறார் |
குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்ல கணவன் முயன்றபோது, “சத்தியமாக நீ இந்தப் பிள்ளைக்கு அப்பன் இல்லை.. உன்னாலை நல்ல அப்பனாக இருக்கவும் முடியாது” என்று முழக்கமிட்டு, தாலி கட்டிய கணவனையே உதறித் தள்ளிவிட்டு கெட்டவள் என்ற அவப் பேரையையும் பொறுக்கத் தயங்காத தாயாக மற்றறொரு கதையில்..
கோழி குஞ்சைப் பாதுகாப்பது போல மற்றொருதாய். வானத்திலிருந்து குண்டு பொழியும் நேரத்தில் பாதுகாப்புக்காக பதுங்கு குழி, மறைவிடம் எதுவும் இல்லாத சூழல். தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு அதன் மேல் தனது உடலைப் போர்வை போலப் போர்த்திப் பாதுகாக்கும் தாய் என தாயன்பு நூல் முழவதும் பரவிக்கிடக்கிறது.
தாயன்பு போன்ற உணர்வு ஆண்களிடமும் வெளிப்படலாம் என்பதை தெருநாய்கள் மீது ஒருவர் கொண்ட பாசத்தின் ஊடாக எடுத்துக்காட்டுகிறார்.
மருத்துவன் என்ற ரீதியில்
மருத்துவன் என்ற ரீதியில் இத் தொகுப்பில் சொல்லப்பட்ட கதைகளில் இரு சம்பவங்கள் என்னைக்; கவர்ந்தன.
 |
ஊடகவியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி தேவகெளரி சுரேந்திரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார் |
சுட்டெரிக்கும் நெருப்பின் மீது நடப்பது போலிருந்தது என ஒரு கதையை ஆரம்பிக்கிறார். மணல் நிறைந்த ஒழுங்கையில் அவ்வாறு நடக்கிறார். ராணுவ நடவடிக்கைகளால் மரங்கள் அழிந்து, மரநிழல்கள் இல்லாத ஒழுங்கையில் வெய்யில் தகிக்கும் வேளையில் அவர் நடக்கிறார். 70 வயதான அந்த முதிர்ந்த மனிதன். வெறுங்காலோடு நடக்கிறார்.
ஏன் அவ்வாறு நடக்கிறார். செருப்பு அணிய வசதி அற்றவரா? இல்லை. வசதியுள்ளவர்தான். வழியில் தொலைத்துவிட்டாரா அதுவும் இல்லை. அப்படியாயின் ஏன் அவ்வாறு நடக்கிறார்.
காரணம் அடுத்த வரியில் வருகிறது.
 |
திருமதி கார்த்திகாயினி சுபேஸ் அவர்களது ஏற்புரை |
கால்கள் கல்லைப் போல விறைத்திருந்தன. சரி கால் விறைத்தால் ஏன் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும்? பாதங்களில் விறைப்பு ஏற்பட்டதால் காலிலிருந்து செருப்புக் கழன்றுவிடுவது அவருக்குத் தெரிவதில்லை. காலிலிருந்து விடுபட்டு அவை தெருவில் கிடப்பதற்கு அடம் பிடித்ததால் செருப்பிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டார் எனச் நகைச்சுவையாகச் சொல்கிறார்.
நகைச்சுவையாகச் சொன்னாலும் மருத்துவ ரீதியில் உண்மையானது. பாதங்கள் விறைத்து உணர்வு தெரியாமல் இருப்பதை மருத்துவத்தில் Peripheral Neuropathy என்போம். வயதான காலத்தில் பலருக்கும் இது ஏற்படுவதுண்டு. இவ்வாறு விறைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நீரிழிவு நோய்தான். ஆனால் இவருக்கு நீரிழிவு இருந்ததாக எவ்விடத்திலும் ஆசிரியர் கூறவில்லை.
 |
திரு.மு.தயாபரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார் |
மூட்டு வாதம், மது அதீத பாவனை, போதைப் பொருள் போன்றவையும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எனவே அவரது கால் விறைப்பிற்குக் காரணம் என்ன என்று மருத்துவனான எனது மூளை ஆராயத் தொடங்கியது.
இராணுவ வடவடிக்கைகளால் அப்பகுதியில் உள்ள தாவரங்கள் அழிந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருந்தார். எனவே போசாக்கான காய்கறி, கீரை வகைகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அத்துடன் மனைவி இறந்து இரண்ட வருடங்களாகிவிட்டது. எனவே வாய்க்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியதுமான உணவு கிட்டியிருக்காது. எனவே விட்டமின் குறைபாட்டால்தான் அவரது காலில் விறைப்பு ஏற்பட்டது என்ற முடியவுக்கு வந்தேன்.
இரண்டாவது விடயம் கை வைத்தியம், வீட்டு வைத்தியம் பற்றியது. பொதுவாக எல்லோருக்கும் மேலைத் தேய மருத்துவ முறைகளில் பிடிக்காத விடயம் அந்த மருந்துகளின் பக்க விளைவுகள்தான். தாவரங்களிலிருந்து அதாவது மூலிகைகளிலிருந்து பெறப்படும் கை மருத்துவம் மற்றும் சுதேசிய மருந்துகள் ஆபத்தற்றவை, பக்கவிளைவுகள் அற்றவை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது உண்மையானதா?
இக் கதையில் இராணுவத்தினாரால் ஒரு பெண் கெடுக்கப்படுகிறாள். அவளுக்கு கர்ப்பம் தங்கிவிடக் கூடாது என்பதற்றகாக மூலிகைகளிலிருந்து காசாயம் செய்து கொடுக்கிறாள் ஆச்சி. ஆனால் அதையும் மீறி கரு தங்கிவிடுகிறது. குழந்தை ஊனமாகப் பிறக்கிறது.
 |
வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் விழாவிற்கு முழுப்பொறுப்பா க இருந்து நடாத்திய காரத்திகாயினியின் கணவர் திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்) |
கருத் தங்கியிருக்கும்போது தேவையற்ற மருந்துகளை உபயோகிக்கக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றின் பக்கவிளைவுகளால் கரு அழிந்துவிடவோ ஊனமாகப் பிறக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பதும் தெரியும். இங்கு ஆச்சி அவளுக்குக் கொடுத்திருப்பது மூலிகைகள் மட்டும்தான். ஆனால் குழந்தை ஊனமாகிவிடுகிறது.
மூலிகைகளாலும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை இது காட்டுகிறது. மேலைத்தேய மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளை மருத்துவர்கள் நன்கு அறிவர். இவை பற்றி ஒவ்வொரு மருந்துப் பெட்டியிலும் தெளிவாகப் பிரசுரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடமும் இருக்கிறது. ஆயினும் மூலிகை மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவை பற்றிய ஆய்வுகள் கிடையாது.
ஆயினும் கதாசிரியர் இந்த கருத்தை வலியுறத்த கதையை எழுதவில்லை. கருத்தைத் திசை திருப்புவது நான்தான். ஆக்கிரமிப்பு இராணுவத்தால் ஏற்படுகிற தாக்கங்களை சொல்ல வருகிறது அக்கதை. ஆனால் மூலிகை மருந்துகளினாலும் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்ற விளக்கம் என்னுடையது.
கார்த்திகாயினி இயற்கை வளம் கொளிக்கும் கிராமத்ததைப் பிறப்படமாகக் கொண்டவர். உசன் என்பது அழகான கிராமம். பண்புள்ள மக்கள். எனது மருத்தவ படிப்புக்கால நண்பன் டொக்டர் செல்வராசா என்பவர் அவ்வூரைச் சேர்ந்தவர். 70களில் அவ்வூருக்குச் சென்றிருக்கிறேன். பின்பு ஒரு கருத்தரங்கில் பங்குகொள்ளவும் சென்றுள்ளேன்.
அந்த ஊர். வயல்கள். ஊரை அண்மத்திருக்கும் சிறு காடு. அங்கு பெண்கள் விறகு பொறுக்கப் போதல் என ஒரு அழகான சித்திரத்தை நூலாசிரியர் தந்திருக்கிறார். சூதுவாதற்ற அந்த மக்களின் வாழ்வு எவ்வாறு ஆக்கிரமிப்பினால் சிதைவுறுகிறது என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
கார்த்திகாயினியின் படைப்பாற்றல் பற்றி
சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழில் வந்து சுமார் 150ஆண்டுகள் ஆகின்றன. உலகில் எப்பொழுது தோன்றியது? ஆயிரத்து ஒரு இரவுகள் சிறுகதை வடிவின் முன்னனோடி எனக் கருதலாம். ஆயினும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில்தான் முதல் முதாலாக சிறுகதை என்று இலக்கிய வடிவம் கொடிகட்ட ஆரம்பித்தது. தமிழில் சுமார் 150 வருடகால சரித்திரம் இருக்கும்.
சிறுகதையின் வடிவமும், சொல்லும் முறைகளிலும் பாரிய மாற்றங்களைக் கண்டுவிட்டோம். ஆரம்பம், மத்திய பகுதி, முடிவு என ஒழுங்கான அமைப்பில் கதை சொல்வதைக் கடந்து பல வருடங்களாகிவிட்டது. ஆயினும் இன்றும் எமது பல எழுத்தாளார்கள் பழைய குட்டைக்குள்ளேயே குடைந்து சேறு பூசிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
திடீரென கதையின் மையப்பகுதியிலிருந்து கதையை ஆரம்பிப்பது, பின்னோக்கிச் சொல்வது, சம்பவங்களை விட உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தல், சிறுகதையை முடிக்கும்போது இன்னமும் ஏதோ மறைந்திருப்பது போல எண்ண வைத்து வாசகனை படைப்பிலிருந்து விடுபட முடியாமல் மேலும் ஆழச் சிந்திக்க வைத்தல் போன்ற சிறந்த அம்சங்களின் கீற்றுகளை கார்த்திகாயினியின் படைப்புகளில் காணக் கடைக்கிறது.
கார்த்திகாயினி தனது படைப்புகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதுகிறார். வெறும் பொழுதுபோக்கிற்கான அவர் எழுதவில்லை. ஆழ்ந்த சமூக நோக்கோடு எழுதுகிறார். தனது மண்ணைப் பற்றி எழுதுகிறார். அந்த மக்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். அந்த மக்களின் பேச்சு மொழியை அழகாகக் கையாண்டு மண்ணின் மணம் பாரெங்கும் பரவும் வகையில் எழுதுகிறார்.
இவை பற்றி நிறைய உதாரணங்களைக் கூறலாம். நான் கூறுவதை விட நூல் வெளியீட்டுரையை நடாத்த இருக்கும் நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களும், ஆய்வுரை நடாத்த இருக்கும் தேவமனோகரியும், தயாபரனும் தெளிவாகவும் நுணக்கமாகவும் சொல்லுவார்கள்.
ஆயினும் மூத்த எழுத்தாளரான நீர்வை பொன்னையன் இவரது படைப்புலகம் பற்றிக் தனது முன்னுரையில் எழுதியதை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
“பாத்திரப் படைப்பு, கதை நகர்த்தல், மொழிவளம், கதை சொல்லும் எத்திகள், கற்பனை வளம், பிரதேச மண்வாசனை, சித்தரிப்பு, உள்ளடக்கமும் உருவகமும் சங்கமிப்பு, கதை;துவம் போன்ற அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும் உவமான உவமேயங்கள், குறியீடுகள் பொருத்தமான முறையில் கையாளப்பட்டுள்ளன” என்கிறார்.
அவரது கருத்தோடு நானு; உடன்படுகிறேன். நூலைப் படித்து முடித்ததும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்கிறேன்.
நூலாசிரியர் பற்றி
தனது சொந்தக் கிராமத்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், 9ம் ஆண்டுக்குப் பின்னர் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கும் தேர்வானார். ஆயினும் நாட்டு நிலைமை காரணமாக பொற்Nhறாரைப் பிரிந்து தனியே சென்று படிக்கக் கூடிய சூழல் இல்லததால் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாது போயிற்று.
கார்த்திகாயினிக்கு இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஏ.எல் படிக்கும் காலத்திலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். ளுடுடீஊ யில் இசையும் கதையும் எனத் தொடர்ந்தது இவரது இலக்கியப் பயணம். இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற போதும் சிறுவர்களுக்கான இரண்டு கதை நூல்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார்.
மாணவப் பருவத்தில் தனது படைப்பாற்றலை வளர்க்க உதவியாக இருந்தது தனது சித்தப்பா எனப் பெருமை கொள்கிறார். இப்பொழுது எழுத்துப் பணிக்கு உற்சாகம் ஊட்டி உதவி வருவது இவரது கணவன்தான்.
பல இலங்கைத் தமிழ் பெண் எழுத்தாளர்களுக்கு இவ்வாறாக கணவன்மார் ஒத்தாசையாக இருப்பதை எனது நட்பு வட்டத்தில் கண்டிருக்கிறேன். பத்மா சோமகாந்தன், கோகிலா மகேந்திரன், தமிழ்ச்செல்வி, பவானி சிவகுமாரன், ராணி சீதரன், சந்திரகாந்தா முருகானந்தன் எனப் பலருக்கு இலக்கிய உணர்வு உள்ள கணவன்மார் கிடைத்தது அதிஸ்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது
தினக்குரல் பற்றி
தமிழ் தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் மனத்தில் இடம் பெற்றுவிட்டது. இக்கட்டான சூழலில் இத்தகைய ஒரு பத்திரிகையை முக்கியமாக தமிழில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. ஆதைனைச் செய்து காட்டிய எஸ்.பி.சாமி சாமி ஐயா அவர்கள் பாராட்டுக்கு உரியவராவார். தினக்குரல் விரைவில் கட்டிளம் பருவமான 15 வயதில் நுழைய இருக்கிறது. அதற்கு எமது வாழ்த்துக்களை இப்பொழுதே சொல்லி வைப்போம்.
தினக்குரல் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தினமும் நான் அதன் வாசகனாக இருக்கிறேன். அதன் ஆரம்பகால ஆசிரியர் மறைந்த ராஜகோபால், பின்பு சிவநேசச்செல்வன், இப்பொழுது தனபாலசிங்கம், ஞாயிறு ஆசிரியர் பாரதி அனைவரும் எனது நண்பர்களாக இருக்கிறார்கள்.
கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து ஹாய் நலமா மருத்துப் பத்தியை தினக்குரலில் எழுதிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மருத்தவத்தில் பத்தி எழுத்து பற்றிய முதல் அனுபவம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையுடாகக் கிட்டியது. மருத்துவக் கலசம் என்ற தலைப்பில் 90களில் சுமார் இரண்டு வருடங்கள் எழுதியுள்ளேன். அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இவ்வளவு நீண்டகாலம் எழுதுவதற்கு நண்பர் தனபாலசிங்கம்தான் காரணம். தலையீடுகளும் இடையூறுகளும் செய்யாத நல்ல மனிதர். கட்டுரைகளை நான் நேரத்திற்குக் கொடுக்கத் தவறும்போதும் கரைச்சல் கொடுக்காதவர்.
மீரா பதிப்பகம் பற்றி
இந்த நூலை மீரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அழகான அட்டைப்படத்துடன் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
 |
நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததுடன் மீரா பதிப்பகம் சார்பாக நுர்லை வெளியிட்ட புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். |
மீரா பதிப்பகம் நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்களது சொந்த முயற்சி. அவரது அயராத முயற்சியின் அறுவடையாகும். தினக்குரலில் விளம்பர உதவியாளாரக இணைந்த அவர் தனது கடும் உழைப்பின் மூலம் இன்று வணிக ஊக்குவிப்பு முகாமையாளராக உயர்ந்துள்ளார். தினக்குரலில் எவ்வாறு உயர்நிலைக்கு வந்தாரோ, அதே போல தனது ஓய்வு நேரத்தையும் உழைப்பு நேரமாக்கி, துயில் தொலைத்து உடல்வலி நோக்காது செய்த முயற்சி காரணமாகவே மீரா பதிப்பகம் இன்று இலங்கைப் பதிப்பத்துறையில் முன்னோடியாக நிற்கிறது.
புலோலியூர் இரத்தினவேலோன் ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சுpறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இளைஞனாக எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து எனது நண்பராக இருக்கிறார். எழுத்தாளன், பத்திரிகை உயர் அதிகாரி இவற்றிறக்கு மேலான மற்றொரு பர்மாணம்தான் பதிப்பாளர் என்பது ஆகும்.
96ல் புதிய பயணங்களுடன் ஆரம்பித்த இப் பதிப்பகம் கடந்த 15 வருட காலவெளயில் 9 நூல்களை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் 91வது வெளியீடு.
பல் துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு மிகச் சிறப்பாக இயங்கிவருகிறது. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நூல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயல்கிறது. விரைவில் 100வது வெளியீட்டை எட்டிவிடும். இன்னும் பல நூறு நூல்களை வெளியிட்டு எமது எழுத்தாளர்களது திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
எனது பல நூல்களும் மீரா பதிப்பகம் ஏடாகவே வெளிவந்துள்ளன. நீங்கள் நலமாக, உடையைக் காத்து நலத்தைக் காப்போம், மறந்து போகாத சில ஆகியவையே அவை. இதில் நீங்கள் நலமாக 4 பதிப்புகளைக் கண்டதும், சாகித்தியப பரிசையும் பெற்றது. அதற்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
தலைமையுரை நீண்ட உரையாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பை எனக்கு அளித்த காரத்திகாயினி, அவரது கணவன் சுபேஸ் மற்றும் விழாக் குழவினருக்கு நன்றிகள்
வணக்கம்.
0.0.0.0.0.0.0