Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2011

மலை நகரின் சிறுகுன்றில்
தனிமரமொன்று வான் முட்ட
கால் உன்னி கிளர்ந்தெழுந்து
பாய்ந்தெழத் துடிக்கிறதோ!

கால்கட்டு விட்டொழித்து
கட்டற்ற சுதந்திரத்தை
நெஞ்சாழச் சுவாசிக்கும்
பெருவாழ்வு எட்டிடவா?

இல்லை!

காலடி பின்வைத்து
கண்சுருக்கி, தலை சரித்து
விழி கூர்த்துப் பாருங்கள்.
பெண் துணையை கைநீட்டி
அருகணைத்து முத்தமிட
முகம் நெருங்கி வருகிறதா?.

கண்மூடிக் கற்பனையை
சிறகடித்துப் பறக்கவிடுங்கள்.
சில் மனத்தில்
பொல்லாத காட்சிகள்
பொச்சடித்து விரிந்து வரும்.
நிறைவாழ்வு அதுவல்ல.

தன் சுகம் இழப்பதும்
தன் வலி மறப்பதும்
தாராள மனதுடன்
தயங்காது விட்டொழித்து
துணைக்காக வாழ்வதும்
தன்னைத் தொலைத்ததில்
மகிழ்வதும்  இழப்பல்ல.

அது சுதந்திரத்திலும் மேலானது.

0.0.0
மற்றொரு கவிதை மலையகம், இழப்பு, புகைப்படங்கள்

களிகொண்டு எழுந்த சூரியன் துயர் மூழ்கி ஒளிந்தான்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>

இல்லம் கழிவறை போலாவதைத் தடுக்கும் சிறுநீர் அகற்றும் குழாய்

ஒரு வீட்டினுள் நுழைகிறீர்கள். கழிவறை போல நாற்றம் விரட்ட முனைகிறது. உங்களையறியாது கை மூக்கைப் பொத்துகிறது. “ஐயாவிற்கு (அல்லது அம்மாவிற்கு) பாத்ரூம் போவதற்கிடையில் சிந்திவிடுகிறது. கொன்ரோல் இல்லை” என்கிறார் வீட்டுக்காரர் மிகுந்த சங்கோசத்துடன். அவமானம் மட்டுமல்ல சுகாதரக் கேடும் கூட.

இதற்கான தீர்வு சிறுநீர் அகற்றும் குழாய்தான் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மாறாக தெளிவாகப் புரிந்து, சரியாகப் பயன்படுத்தி மற்றவர் மதிக்கும் வண்ணம் உயர் தொழிலைத் தொடரும் வெற்றியாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆம்! சிறுநீர் அகற்றும் குழாய் இன்று பல முதியவர்களுக்கு இன்றியமையாத அங்கமாக இருக்கிறது. அவர்களின் உற்ற துணையாக வாழ்வின் பங்காளியாகி விட்டது.

கழிப்பதின் சுகமும் அதைக் கெடுப்பவர்களும் பற்றி  கழிப்பறையில் அழைப்பு

இரண்டு உதாரணங்கள்.

நான் வேலையாக இருந்தபோது திடீரெனக் கழிவறை நாற்றம் பொறுக்க முடியாதளவு வீச ஆரம்பித்தது. மருத்துமனையின் பின்புறத்தில்தான் கழிவறை. எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பார்கள். இன்று ஏன் இத்தனை நாற்றம் என எண்ணிக் கொண்டிருக்கையில் ‘நிறுத்து உன் சிந்தனையை’ எனச் சொல்வது போல நுழைந்தார் அந்த முதியவர். நாற்றம் அவரது ஆடைகளிலிருந்துதான்  அபரித விளைச்சல் கொண்டிருந்தது.

அவரால் சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மருந்துகள் கொடுத்தும் முடியவில்லை. உடைகள், படுக்கை, உற்காரும் நாற்காலி யாவும் புனித நீராபிசேகம் பெற்றதால் சிறுநீர் அகற்றும் குழாய் போட வேண்டியதாயிற்று.

மற்றவரும் முதியவர்தான். “மூத்திரம் சரியாகப் போகுதில்லை” என்ற இவர் சொன்ன பிரச்சனையைச் சரியாகப் புரியாத சுதேச மருத்துவர் தனது கல்வி சாராத மருந்தைக் கொடுத்த போது பிரச்சனை மோசமாகியது.

சிறுநீரை அதிகம் உற்பத்தி செய்யும் (Lasix) மருந்து அது. உள்ளே உள்ளதே வெளியேற முடியாதிருக்கையில் மேலும் சிறுநீரை உற்பத்தியாக்கும் மருந்தைக் குடித்ததால் வயிறு முட்டி வேதனை மோசமடைந்தது. எந்நேரமும் சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு. ஆனால் சிறுநீர் ஒரு சில சொட்டுகள் தவிர முழுமையாக வெளியேற மறுத்தது.

பரிசோதனைக்காகப் படுக்கையில் போடு முன்னரே அவரது அறிகுறிகளிருந்து அவருக்குள்ளது புரஸ்ரேட் பிரச்சனை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவருக்கும் சிறுநீர் அகற்றும் குழாய் ஒன்றே தீர்வாயிற்று.

இது சிறுநீர்த் துவராம் ஊடாகச் செலுத்தப்படும் ஒரு குழாயாகும். அதன் ஒரு முனை சிறு நீர்ப்பையினுள் செலுத்தப்பட்டு இருக்கும். வெளியே உள்ள முனை ஒரு பிளாஸ்டிக் பையுடன் இணைந்திருக்கும். சலப்பையினுள் உள்ள சிறுநீரை தொடர்ச்சியாக அகற்றி, வெளியிலுள்ள அப் பையினுள் சேர வைக்கிறது.

சேரும் சிறுநீரை பை நிறைந்ததும் அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பையி;ன் மறுமுனையில் உள்ள மூடியைத் திறந்து அகற்ற வேண்டும். குழாயைக் கதீட்டர் (Catheter) என்பார்கள். தொடர்ந்து அணிந்திருப்பதால் உள்ளுறையும் Indwelling Catheter என்பர்.

சிறுநீர் அகற்றும் குழாய் போடுவதற்கான காரணங்கள் அவை இரண்டும்தான்.

  • கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறல்
  • சிறுநீர் தானாக வெளியேற முடியாமல் தடைப்படுதல்

இவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைதான். அத்தகைய நோயாளிகள் வீட்டிலேயே இருக்க நேர்வதால் அதனைச் சரியான முறையில் கையாள வீட்டில் உள்ளவர்களுக்கு தெளிவு தேவை. நடமாடக் கூடிய நோயாளர்கள் எனில் நோயாளிகளே அக்கறை எடுக்க வேண்டும்.

  • குழாய் சரியான முறையில் செற்;பட்டு சிறுநீர் ஒழுங்காக வெனியேறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
  • அந்தக் குழாயும் அதனைச் சுற்றியுள்ள சருமமும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் குழாய் ஊடாக கிருமிகள் சிறுநீர்ப்பைக்குள் சென்றுவிடக் கூடிய ஆபத்து உண்டு. அத்துடன் சருமத்தில் அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

குழாய் பராபரிப்பு

குழாய் எப்பொழும் உங்கள் இடுப்புப் பகுதிக்கு கீழே இருப்பதை உறுதிப்படுத்துங்கள். உயரத்திலிருந்து பதிவான இடத்தை நோக்கி சிறுநீர் இலகுவாக வெளியேறும். குழாயில் மடிப்புகள் சுருக்கங்கள் இல்லாதிருப்பதும் சிறுநீர் சுலபமாக வெளியேறுவதை உறுதி செய்யும். போதியளவு நீராகாரம் அருந்துவது அவசியம்.

வெளியேறும் சிறுநீரில் படிவுகள் இருக்கிறதா, இரத்தம் கலந்திருக்கிறதா, அதன் மணம் மற்றும் நிறத்தில் மாற்றம் இருக்கிறதா போன்றவற்றை அவதானிக்க வேண்டும்.

சருமத்தை சுத்தம் செய்தல்

சிறுநீர்க் குழாயை அண்டியுள்ள சருமம் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதைச் சுத்தப்படுத்துவதற்கு முதல் உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் கையிலுள்ள கிருமி அங்கு பரவிவிடும்.

முதலில் உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். முக்கியமாக விரல் இடுக்கள், நகக் கண்கள் ஆகியவற்றை அக்கறை எடுத்து நன்கு கழுவவேண்டும். நகக்கண் சூடுள்ள நீர் நல்லது.

சுத்தமான துணியை எடுத்து நீரில் நனைத்து அதில் சோப்பை போடுங்கள். குழாய் உங்கள் சிறுநீர்த் துவாரத்திற்குள் புகும் இடத்தை சுற்றிவர அத்துணியால் துடையுங்கள். ஆண்கள் ஆண்குறி நுனியிலிருந்து பின்புறமாகத் துடைக்க வேண்டும். பெண்கள் சலவாயில் பக்கமாக ஆரம்பித்து பிற்புறமாகத் மலவாயிலை நோக்கித் துடைக்க வேண்டும்.

அடுத்து துணியில் உள்ள சோப்பை நிறைய நீரினால் கழுவி சோப்பை அகற்றுங்கள். மீண்டும் புதிதாகச் சோப் இட்டு உங்கள் தொடைகளையும் குண்டிப் பகுதியையும் அதனால் சுத்தப்படுத்துங்கள். மீண்டும் துணியில் உள்ள சோப்பை நன்கு கழுவி அகற்றிய பின் அதனைப் பிழிந்து நீரையும் அகற்றுங்கள். அத்துணியால் ஈரங்களை ஒற்றி எடுங்கள். குழாயைச் சுற்றியுள்ள இடத்திற்கு கிறீம், பவுடர், ஸ்பிரோ போன்றவற்றைப் பாவிப்பது நல்லதல்ல.

இவ்வாறு தினமும் ஒரு தடவையாவது செய்ய வேண்டும். தேவை ஏற்படின் திரும்பவும் செய்யலாம்.

குழாயைச் சுத்தம் செய்தல்

சருமத்தைப் பேணுவது போல அல்லது அதைவிட அதிக கவனத்துடன் இதனைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே தினமும் இரண்டு தடவைகளாவது இதனைச் சுத்தம் செய்வது நல்லது. முதலில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல உங்கள் கைகளுக்கு சோப் போட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.

வேறொரு துணியை எடுத்து அதை வெந்நீரில் நனைத்து சோப் போடுங்கள். உங்கள் சிறுநீர்த் துவாரத்தை அண்டிய பகுதியிலிருந்து கீழ் நோக்கி சிறுநீர் அகற்றும் குழாயை இத் துணியால் சுத்தப்படுத்துங்கள். அவசரப்பட்டு வேகமாக குழாயை இழுப்பது போலச் சுத்தம் செய்யலாகாது. உங்கள் சிறுநீர்த் துவாரத்தையோ அல்லது சிறுநீர்ப் பையையோ உறுத்தாதவாறு மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலிருந்து கீழ் நோக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

ஒருபோதும் கீழிருந்து மேலாக அதாவது சிறுநீர்த் துவாரத்தை நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. மற்றொரு துணியால் குழாயின் மேல் படர்ந்துள்ள ஈரத்தை துடைத்துவிடுவதுடன் இப்பணி நிறைவு பெறும்.

வேறு ஆலோசனைகள்

புதிதாகக் குழாய் போட்டால் அல்லது பழையதை அகற்றிப் புதுக் குழாய் பொருத்தினால் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதை 10 நாட்களுக்காவது தவிருங்கள்.

சற்றுக் கூடுதலாக நீர் அருந்துவது குழாய் தடையின்றி நன்கு செயற்பட உதவும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீராவது அருந்துவது நல்லது.

குழாய் உங்கள் உறுப்பில் பொருந்தும் இடத்தில் வலி ஏற்பட்டால், அல்லது குழாயிலிருந்து அல்லது உறுப்பிலிருந்து சிறுநீர் சிந்தினால், அல்லது சிறுநீர் சரியான  முறையில் குழாயூடாக வெளியேறவில்லை என்றால் மருத்துவரை நாடுவது அவசியம்.

வெளியேறும் சிறுநீரில் இரத்தம் கலந்திருந்தாலும் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். பெரும்பாலும் குழாய் பொருத்திய ஆரம்ப நாட்களில் இது நேரலாம்.

சிறுநீரின் நிறம் மங்கலாதல், படிவுகள் ஏற்படல், சிறுநீர் கடுமையாக மணத்தல் போன்றவை சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம். குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டாலும் அதே காரணமாயிருக்கலாம். கட்டாயம் மருத்துவ ஆலோசனை அவசியம்.

இவற்றைக் கவனம் எடுத்தால் சிறுநீர்த் தடை மற்றும் கட்டுப்பாடின்றிக் கழிதல் ஆகியவற்றால் நோயாளி தனக்கும் மற்றவர்களுக்கும் இடைஞ்சலின்றி வாழ முடியும்.

பிரச்சனைகளைக் கண்டு மனம் சோராமல் அவற்றை உறுதியோடு வெற்றி கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி என்றும் அவர் பக்கமே.

நான் வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் எழுதிய கட்டுரை 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0

Read Full Post »

>

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.  

முன்னைய பதிவு  ஆண் பருவமடைதல்

கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

  • 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 
  • ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது.

காரணங்கள்

இதற்குக் காரணம் என்ன? பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது.

  • போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது. 
  • இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுறுகிறது. 
  • எடை அதிகரிக்கிறது. 
  • அதீத எடை ஹோர்மோன்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 

பருவமடையும் வயது முன் நகர்வதற்கு இது காரணம் எனலாம்.
இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக முன்னைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

  • தொலைக்காட்சி மற்றும் கணனி காரணமாக இன்றைய பிள்ளைகளில் அறிவு விருத்தி வேகமாக கிடைக்கிறது. 
  • அதேபோல பாலியல் சம்பந்தமான அறிவும் விரைவில் கிட்டுகிறது. தொலைக்காட்சி, சினிமா ஊடாக இவை பற்றிய உணர்வுகளையும் பெறுகிறார்கள். 

    இவையே பாலியல் ஹோர்மோன்கள் விரைவில் தூண்டப்படுவதற்கு மற்றொரு காரணம் என நம்பப்பட்டது.

    இதைத் தவிர

    • குழந்தைகள் பாலகர்களாயிருக்கும் காலத்தில் சோயா சார்ந்த பால் மாக்களையும் போசாக்கு மாக்களையும் பிரதான உணவாக உட்கொள்வதும் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    சோயாவில் உள்ள பைற்ஈஸ்ரஜின் (Phytoestrogen) பெண்களின் ஹோர்மோனான ஈஸ்ரஜின்னை ஒத்தது. இது பொதுவாக உடலுக்கு நல்லது என்றே கருதப்படுகிறது. ஆயினும் குழந்தைகளில் சோயா சார்ந்தவை பிரதான உணவாக அமைந்தால் பாதகமாக அமையலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    • பரம்பரைக் காரணிகளும் அடங்கும். தாய் குறைந்த வயதில் பருவமடைந்தால் குழந்தைக்கும் அவ்வாறு நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

    புதிய கருத்து

    ஆனால் கலிபோனியாவில் அண்மைய ஆய்வு (Young Girls’ Nutrition, Environment and Transitions -CYGNET) ஒன்றானது இதற்குப் புதிய ஒரு காரணமும் இருக்கலாம் எனச் சொல்கிறது. 

    • பெற்ற தகப்பன் வீட்டில் இல்லாத பெண் குழந்தைகள் இளவயதிலேயே பருவமடைவதாக அது கூறுகிறது. 

    ஆனால் இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. அதிக வருமானங்கள் உள்ள குடும்பங்களில் மட்டும்தான் இது அவதானிக்கப்பட்டது.
    6 வயது முதல் 8 வயது வரையான 444 பெண் குழந்தைகளில் 2 வருடங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பருவமடைதல்

    இந்த ஆய்வானது பருவமடைதல் (Puberty) பற்றியதே அன்றி பூப்படைதல் (Menarche) பற்றியது அல்ல. மார்பகங்கள் பெருப்பதையும், பாலுறுப்புகளை அண்டிய பகுதிகளில் முடி வளர்வதையுமே இந்த ஆய்வில் பருவமடைவதாகக் கொண்டார்கள். 

    பூப்படைதல்

    பூப்படைதல் என்பது முதல் முதலாக பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு ஏற்படுவதாகும். அதாவது முதல் முதலாவது மாதவிடாய் ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் பருவடைதல் என்பது பூப்படைதலுக்கு முன்னோடியான நிகழ்வு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    Puberty, Menarche  ஆகிய சொற்களுக்கு இடையோயன பொருட்களைத் தெளிவுபடுத்தக் கூடிய சரியான தமிழ்ப் பதங்கள்  இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான முறையே பருவமடைதல், பூப்படைதல், ஆகிய பதங்களை உபயோகப்படுத்தியுள்ளேன். 

    தகப்பன் வீட்டில் இல்லாது இருப்பதற்கும் மகள் விரைவில் பருவமடைவதற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும்? தகப்பன் வீட்டில் இல்லாததால் உண்டாகக் கூடிய சமச்சீர் அற்ற குடுப்பச் சூழல் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    அப்படியானால் அது ஏன் அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் மட்டும் நடக்கிறது? குறைந்த வருமானங்களில் பொதுவாக குழந்தைகளைக் கவனிப்பதற்கான ஆதரவு சமூகத்திலிருந்து கிடைக்கிறது. பெற்றோர்களின் தாய் தகப்பன்மார் வீட்டில் இருந்து கவனப்பர். அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கை கொடுப்பர்.

    மற்றொரு காரணமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. மேலை நாடுகளில் வசதியான குடும்பங்கள் பலவற்றில் தாய் தனியாகவே வாழ்பவளாக இருப்பாள். குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளாக இருப்பர்.

    இதனால் தாய் நீண்ட நேரம் தொழில் செய்பவராக இருக்கக் கூடும் என்பதால் தாயின் ஆதரவு குழந்தைக்குக் கிடைப்பது குறைவாக இருக்கும். தாயுடனான நெருக்கமான உறவு குறைந்த பெண் பிள்ளைகள் விரைவாக பருவடைகிறார்கள் என வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

    பெற்றோரின் ஆதரவு

    இரு ஆய்வுகளையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டால் தாயோ, தந்தையோ எவராக இருந்தாலும் பெற்றோருடனான ஆதரவு குறைந்த பிள்ளைகள் விரைவில் பருவமடைகிறார்கள் என்பது புரிகிறது.

    இது எமது சூழலுக்கான ஆய்வு அல்ல என உதறித் தள்ளுவது புத்திசாலித்தனம் அல்ல.

    எமது சூழலிலும் குழந்தைகளுக்கு தாய் தகப்பனுக்கு அப்பால் பேரன் பேத்தி உறவினர்களின் ஆதரவும் அரவணைப்பும் குறைந்து வருகிறது. அதற்கு மேலாக இங்கும் எமது பெண் குழந்தைகள் முன்னைய விட விரைவிலேயே பருவமடைவது அதிகமாகி வருகிறது. எனவே இவ்விடயங்கள் பற்றிய அறிவு அவசியம்.

    பாதகங்கள்

    காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். காரணங்கள் இருக்கின்றன.

    • எதிர்காலத்தில் இப் பெண்களுக்கு பாலுறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
    • ஆஸ்த்மா வருவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
    • சமூக ரீதியாக அத்தகைய பெண் பிள்ளைகள் தவறான பாலியல் செயற்பாடுகளில் வயதிற்கு முன்னரே ஈடுபடுவதும், போதை பொருட்கள் பாவனையில் சிக்குவதும் அதிகம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
    • வகுப்பறை சிநேகிதர்களாலும் வெளி நபர்களாலும் இவர்கள் அதிகளவில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் உளநெருக்கீடு, மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு ஆளாக நேர்வது துர்ப்பாக்கியமே.
    • பருவமடைதலானது மூளை வளர்ச்சி நிறைவுறுவதுடன் தொடர்புடையது. எனவே காலத்திற்கு முந்திப் பருவமடைந்தால் மூளை வளர்ச்சி பூரணமடைவது பாதிப்படையலாம் எனவும் நம்பப்படுகிறது.

    எனவேதான் ஆய்வாளர்கள் இப் பிரச்சனையில் அக்கறை காட்டுகிறார்கள்.

    SOURCE: Journal of Adolescent Health, published online September 23, 2010

    தமிழ் சமூகத்தில் மாதவிடாய்  தொடர்பான நிலவும் நம்பிக்கைகள், தவறான கருத்துக்கள் தொடர்பான எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் கண்ணுங்கள்.

    எமது  பாரம்பரியத்தில் நிலவும் மற்றொரு பழக்கம் பற்றிய நகைச்சுவைப் பதிவுக்கு…. இது ஆண்கள் பற்றியது.

    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
    0.0.0.0.0.0.0.0

    Read Full Post »

    >

    ஆழமான வாசிப்பிற்கான சஞ்சிகைகளின் வரவு இலங்கைத் தமிழிலில் மிகக் குறைவாக இருக்கிறது. அதுவும் உளவியல் சமூக தளங்களில் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

    இந்த வகையில் பார்க்கும்போது ஆறுதல் என்ற உள சமூக இதழின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.

    இதன் இரண்டாவது வரவு ஜனவரி- மார்ச் இதழாக அண்மையில் கிடைத்தது. இந்த இதழில் கட்டிளம் பருவம் தொடர்பான பல்வேறு ஆக்கங்கள் இடம் பெறுகின்றன.

    இதழ் ஆசிரியர் உரையான “உங்களுடன் ..“ காத்திரமாக அமைந்துள்ளது. பொதுப் புத்தி சார்ந்து சிந்திக்காது மாற்று வழியில் எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

    “இன்று பரவலாக கட்டிளமைப் பருவத்தினரது பிரச்சனைகளையே பெரும் சமூகப் பிரச்சினைகளாக நோக்கும் மனப்பாங்கு செல்வாக்குப் பெற்றுள்ளது” என்கிறார்.

    ஆனால் கட்டிளமைப் பருவத்தினரது பிரச்சனைகள் என்று கருதுவது சரியானதா. உண்மையாக அவர்கள் பிரச்சனையாக இருக்கிறார்களா அல்லது சமூகம் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதிருந்து பிரிச்சனை என்கிறதா?

    “எம்மீது ஆக்கிரமித்துள்ள மோசமான பார்வைகள் புரிதல்கள் பிடியிலிருந்து எம்மை எவ்வாறு விடுவிப்பது? இதுபோன்ற பல வினாக்களுக்கு பதில்கள் அல்லது விளக்கங்கள் தேடிக்கொள்ள வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த நோக்கத்திற்காகவே இந்த இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது”  என்கிறார்.

    இந்த இதழில் அடங்கும் கட்டுரைகளாவன

    1. மனநிலை மாற்றங்களும் விளைவுகளும் – தொகுப்பு ஆத்மன்
    2. மனதில் ஒரு சுனாமி – மருத்துவர்.என்.கங்கா
    3. புரிதல்கள் தேவைப்படும் பருவம் – க.சுவர்ணராஜா
    4. நாளைய உலகம் உங்கள் கையில் – மருத்துவர்.எம்.கே.முருகானந்தன்
    5. உணவும் ஆரோக்கியமும் – தொகுப்பு ஆத்மன்
    6. இளையோர்: அடையாளமும் அரசியலும் – அ.றொபின்சன்
    7. இசை தொடர்பான சீர்மியமும் – சபா.ஜெயராசா
    8. காதல் காதல் காதல் – புவிராஜ்
    9. உதிர்வு – நெடுந்தீவு மகேஷ்
    10. மன அழுத்த முகாமைத்துவம் – சு.பரமானந்தம்
    11. சமூகநிலை உளவளச் செயற்பாடு – பேரா.தயா.சோமசுந்தரம்

    மருத்துவர்.என்.கங்கா அவர்களது கட்டுரை கட்டிளம் பருவம் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது. கட்டிளம் பருவம் என்றால் என்ன? அவர்களது விசித்திர குணங்கள், விடலையரின் ஏக்கங்கள் என்ன? இவ்விடயத்தைப் பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என விளக்குகிறது.

    மருத்துவர்.எம்.கே.முருகானந்தனது கட்டுரை கட்டிளம் பருவத்தினரை நோக்கி எழுதப்பட்டதாகும். உணவும் போஷாக்கும், போசாக்குக் குறைபாடு, சமபலவலு உணவு, பாலியல் மற்றும் இனவிருத்தி அறிவை வளர்த்துக்கொள்ளல், பாலியல் கல்வி, இளமைப் பருவத்தினர் கிளினிக்குகள், பாலியல் அத்துமீறல்கள், கருச்சிதைவு, உளநலம், போதைப்பொருள் பாவனை, வன்முறையை நிராகரியுங்கள் ஆகிய உபதலைப்புகளில் விளக்கங்களைத் தருகிறது.

    பேரா.தயா.சோமசுந்தரம் அவர்களது கட்டுரை மிக முக்கியமானது. கருத்துச் செறிவு கொண்டது. வடகிழக்கு பகுதிகளில் யுத்தச் சூழலில் மாணவர்கள் இடையே செய்யப்பட்ட ஆய்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். ‘ஆசிரியர்களை உளவளத் துணையாளர்களாகவும், நட்புதவியாளர்களாகவும் பயிற்றுவித்தல்’, ‘ஆசிரியர் உளவள துணையாளர்களின் பொறுப்பும் கடமைகளும்’ பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.

    பேரா.சபா.ஜெயராசாவின்  கட்டுரை இசையின் சமூக அரசியலைப் பேசுவதுடன் அதன் எதிர்மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் விளக்குகிறது.

    ‘உதிர்வு’ ஒரு சிறுகதையாக பாடசாலையில் ஏற்படும் சம்பவம் ஊடாக கட்டிளம் பருவ உணர்வுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த முனைகிறது.

    நீளங் கருதி ஏனைய கட்டுரைகள் பற்றிக் கூறாவிட்டாலும் அவை ஒவ்வொன்றும் கட்டிளம் பருவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் கருத்தில் கொண்ட சிறந்த கட்டுரைகளாகும்.

    திரு.தெ.மதுசூதனன் அவர்களை ஆசிரியராகவும், திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களை நிருவாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் இதழ் இது.

    பொதுவான வாசிப்புக்கு ஏற்ற வகையில் இலகுவாக எழுதப்பட்டுள்ளதாயினும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,  சமூகவியலாளர்கள், ஆற்றுகைப்படுத்துவோர் போன்றோருக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    விலை:- ரூபா 100/=

    வெளியீடு:-
    “ஆறுதல்”
    இல.09,முதலாவது ஒழுங்கை
    லிங்கநகர், திருகோணமலை
    இலங்கை

    இணையதளம் :- http://www.aaruthal.org
    மின்னஞ்சல் :- aaruthaltrinco@gmail.com
    படைப்புகள் அனுப்ப :- 2010aaruthal@gmail.com

    Read Full Post »

    >

    உணவு வேண்டாமெனும் நோய்- Anorexia Nervosa

    அம்மாவுக்குத்தான் சரியான கவலை. பார்க்கும் எல்லோருமே “உன்ரை மகளுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கிறாள்.” என அக்கறையோடு விசாரிக்கிறார்கள்.

    மருத்துவனான எனக்கும் இது அக்கறை எடுக்க வேண்டிய விடயம் எனப் புரிகிறது.

    ஆனால் மகள் அதை சட்டை பண்ணுவதாகத் தெரியவில்லை.

    வேறோன்றும் இல்லை. அவள் சாப்பிடுகிறாள் இல்லையாம். எல்லா அம்மாக்களும் தனது மகள்மாரைப் பற்றிச் சொல்வது போன்ற வெற்றுப் பேச்சல்ல இது. தாய் சொல்வது உண்மை என்பதற்கு ஒல்லிக்குச்சான அவளது உடல் மறுக்க முடியாத சாட்சியாக நிற்கிறது.

    வெளிறிய முகம், குச்சியான உடம்பு, வளர்ச்சி குன்றிய தசைகள், மென்மையான நோஞ்சி முடி, வரண்டு மஞ்சள் பூசியது போன்ற சருமத்துடன் சோர்ந்திருந்தாள். வயதிற்கேற்ற துடியாட்டம் இல்லை. எப்பொழுதும் குளிராக இருப்பதாகவும், சாதாரண குளிரைக் கூடத் தாங்க முடியாதிருப்பதாகவும், மலச்சிக்கல் தொல்லை கொடுப்பதாகவும் சொன்னாள். ஓரளவு இரத்தசோகையையும் அவதானிக்க முடிந்தது.

    இவை அவளில் மட்டுமல்ல, Anorexia Nervosa எனப்படும் உணவு உட்கொள்ளல் குளறுபடியில் உள்ள பலருக்கும் ஏற்படுகிறது. குளறுபடி என நான் பொதுப்படையாகச் சொன்னாலும் மருத்துவம் செய்ய வேண்டிய ஒரு நோய்தான் இது.

    இதற்கு அடிப்படைக் காரணம் தமது உடல் சம்பந்தமான தவறான கருதுகோள்தான். இது பொதுவாக இளம் பெண்களிடையே காணப்படும் பிரச்சனையாகும். இளைஞர்களிடையே காணப்படலாம் என்ற போதிலும் பெரும்பாலும் பெண்களே பாதிப்படைவது அதிகம்.

    தனது உடல் பற்றிய தவறான கருதுகோள் – தான் கொழுத்துவிட்டதான மனப் பிராந்தி

    ‘மெல்லிய உடலாக இருப்பதுதான் ஆரோக்கியமானது, அதுதான் அழகையும் கொடுக்கும். தான் கொழுக்கக் கூடாது. தனது உடை அதிகரிப்பது கூடாது. அதற்காகக் குறைவாக உண்ண வேண்டும். கண்ட சாப்பாடுகளையும் சாப்பிடக்கூடாது.’ என எண்ணுவதே அடிப்படைப் பிரச்சனையாகும்.

    சிலர் உணவுக் கட்டுப்பாடுடன் எடையைப் பேணுவதாக எண்ணி கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்வர். உண்ட உணவை வெளியேற்ற தாமாக முனைந்து வாந்தி எடுப்பதும், மலங்கழிய மாத்திரைகள் உண்பதும், சிறுநீர் அதிகமாக அடிக்க மருந்துகள் சாப்பிடுவதும் என பல காரியங்களைச் செய்யவும் கூடும்.

    தம்மை அடிக்கடி நிறுத்துப் பார்ப்பதும், தான் உண்ணும் உணவுகளின் நிறையை அளந்து பார்ப்பதும், எடையை அதிகரிக்காது எனத் தாம் கருதும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டுமே உண்பதும் மற்றவர்களுக்கு நகைப்பை ஊட்டினாலும் அவர்கள் கடமையுணர்வோடு செய்வர்.

    இது நகைப்பிற்கு உரிய நோய் அல்ல. அலட்சியப்படுத்தக் கூடியதும் அல்ல. ஏனெனில் இவர்கள் இறப்பதற்கான சாத்தியம் சாதாரணமானவர்களைவிட 10 மடங்கு அதிகமாகும். இருதயம் திடீரென நிற்றல், உடலிலுள்ள நீர் மற்றும் கனிய உப்புகளின் அளவுகளில் ஏற்படும் கடுமையான மாற்றங்கள் காரணமாகின்றன. சிலர் தற்கொலை செய்து இறப்பதும் உண்டு.

    மனச்சோர்வு, மனப்பதகளிப்பு நோய், மாற்ற இயலா எண்ணங்கள் போன்ற உளநோய்கள் இவர்களிடையே இருப்பது அதிகம். பெண்களிடையே மாதவிடாய் கோளாறுகளும் அதிகமாக காணப்படும். சிலர் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் இருக்கக் கூடும். நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் சோதித்துப் பார்ப்பர்.

    மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அது மூன்று படிகளைக் கொண்டதாகும்

    1. நோயாளின் எடையை சாதாரண அளவிற்கு கொண்டுவருதல் முக்கியமானது.
    2. நோயாளியின் உணவு உண்ணல் குளறுபடி நிலைக்கு அடிப்படையான உளவியல் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளித்தல்
    3. தவறான உணவுமுறைகளுக்கான பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மாற்றுதலும், மீள வராமல் தடுத்தலுமாகும்.

    மருந்துகள் மட்டும் இவற்றிற்கு உதவப் போவதில்லை. தனிப்பட்ட ரீதியிலும் குடும்பத்தினருடனும் கலந்துரையாடுவது, உளவளத் துணை ஆகியன நல்ல பலனைக் கொடுக்கும்.

    உணவு உண்ணல் சம்பந்தமான வேறு நோய்கள்

    உணவு உட்கொள்ளல் முறையோடு சம்பந்தமான வேறு இரு நோய்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

    அதீதமாக உண்ண வேண்டும் என்ற அடக்க முடியாத அவா, இதனால் எடை அதிகரிப்பது, அது பற்றி குற்ற உணர்வுக்கு ஆளாவது. குற்ற உணர்விலிருந்து மீள மேலும் உண்பது என்பது (Binge eating) நோயாகும்


    கட்டுப்படுத்த முடியாது அதீதமாக உண்பதும் பின் அதன் பாதிப்பை நீக்க தானாக வாந்தியெடுத்தல், பேதிபோக வைத்தல் (Bulimina nervosa) மற்றொரு நோயாகும்.

    இவை யாவும் மருத்துவ ஆலோசனையுடன் குணப்படுத்தக் கூடியவையே.

    உடையைக் குறைக்கும் அற்புத வழிகளுக்கு கீழே சொடுக்குங்கள்

    வயதிற்கும் எடைக்கும் இடையிலான தொடர்பு பற்றி சிரித்துக்கொண்டு அறிய கீழே சொடுக்குங்கள்

    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

    நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் வெளியான கட்டுரை

    0.0.0.0.0.0.0

    Read Full Post »

    >

    “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..”
    என்பது வாழ்க்கையின் அந்திம ஓரத்தில் இருக்கும் கலைஞர் அரசியல் ஜனன ஆரம்பத்தில் எழுதிய வசனம்…. பராசக்தியில் சிவாஜி பேசியது…

    ஆனால் தொடர்வது வேறு கதை. ..

    “இருமினாள் இருமினாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமியவள்..”; கதை இது.

     “என்னாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை..” அனுங்கிக் கொண்டே வந்த அந்தப் பெண்ணின் முகத்தில் சோர்வும், சோகமும் ஒட்டியிருந்தன.
    களைப்போடு வந்தவள் உட்கார்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்ள சில நிமிடங்களாயிற்று.

    வயதானதால் ஏற்பட்ட களைப்பு அல்ல. இளம் பெண் 20-22 வயது மட்டுமே இருக்கும். சோர்ந்த கண்களைச் சுற்றி மடல்கள் சற்று வீங்கியிருந்தது. கண்களும் சற்றுச் சிவந்திருந்தது.

    இரண்டு வாரங்களாக இருமலாம். மிகக் கடுமையான இருமல். இருமி இருமி முடியாமல் சத்தியிலும் முடிவதுண்டாம். இதனால் சாப்பிடுவதும் குறைவு. சற்று மெலிந்தும் விட்டாளாம்.

    மருந்தெடுத்தும் குறையவில்லை. இரண்டு வாரங்களுக்கிடையில் மூன்று வைத்தியர்களைக் கண்டும் குறையவில்லை.

    சிறிய கட்டாக பரிசோதனை ரிப்போட்டுகளை என் முன் வைத்தாள்.
    சரியாகத்தான் அவர்கள் ஆராய்ந்திருந்தார்கள். இரத்தம், சிறுநீர், சீனி, சளி, எக்ஸ் ரே என எதையும் விட்டு வைக்கவில்லை.

    நிதானமாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது எந்த பிழைகளும் தெரியவில்லை. நியூமோனியா. சயரோகம், கட்டி, புற்றுநோய் எதற்கான அடையாளங்களும் கிடையாது.

    மிகக் கடுமையான அன்ரி பயரிக் மருந்துகள், ஆஸ்த்மாவிற்கான மருந்துகள், ஸ்டீரொயிட் என்று சொல்லப்படும் மருந்துகள், பல வகை இருமல் சிறப் மருந்துகள் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானித்தேன்.

    தொண்டை, சுவாசப்பை, மூக்கு, காது என முக்கிய உறுப்புகளைப் பரிசோதித்துப் பார்த்த போது அவை யாவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

    “எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டு விட்டேன். ஒண்டும் பிரயோசனமில்லை. வயிறு ஊதி, வாய் கசந்து, சாப்பிட முடியாது போனதுதான் மிச்சம். வயிற்றையும் பிரட்டுகிறது. கொஞ்சமும் சுகமில்லை” என்றாள்.

    உண்மைதான் மாறி மாறி மூன்று வகை அன்ரிபயோடிக் மருந்துகளையும் பிரட்னிசலோன் போன்றவற்றையும் உட்கொண்டால் வயிற்றில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியாதுதான்.

    மருந்துகளுக்கு மேலாக ஆஸ்த்மாவுக்கான இன்ஹேலரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வேலை செய்யவில்லை.
    ஆஸ்த்மா இருந்தால்தானே அது வேலை செய்யும்.

    “இது என்ன வருத்தம்” அவள் கேள்வி எழுப்பினாள்.

    வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும், இருமல் வாந்தியில் முடிவதும், அது என்ன நோய் என்பதை எனக்கு ஓரளவு புலப்படுத்திவிட்டன. ஆயினும் நிச்சயப்படுத்தாது சொல்ல முடியாது.

    நிச்சயப்படுத்துவதாயின் அவளது இருமல் எப்படியானது என்பதை அறிய வேண்டும்.

    “எப்படியானது உங்கள் இருமல்? தொடர்ந்து வருமா, திடீரென வருமா, வந்தால்…” 

    பீறிட்டு வந்தது இருமல். எனது கேள்வி முடிவதற்கிடையில்.
    இருமினாள், இருமினாள், இருமிக் கொண்டேயிருந்தாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமினாள்.

    தொடர்ந்து இருமினாள்.

    முகம் சிவந்துவிட்டது. கண்கள் பீறிடுப் பிதுங்கி வெளியே பாய்ந்து விடுமோ எனப் பயமுறுத்தியது.

    திடீரென ஒரு கேவல் சத்தம். உயிர் பிரியுமாற் போன்ற அவல ஒலி.

    நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து.

    பயப்படாதீர்கள்!

    எதிர்பார்த்ததுதான்.

    இவ்வளவு நேரமும் சுவாசத்தை உள்ளெடுக் முடியாது, இருமி இருமி வெளியே விட்ட காற்றைத் திடீரென ஒரே மூச்சில் உள்ளெடுத்ததால் பீறிட்டு எழுந்த சத்தம்.

    Whoop அதுதான் அந்தச் சத்தம். அந்தச் சத்தத்தை வைத்துத்தான் அந்த நோயின் பெயரே வந்திருக்கிறது. அதை கொண்டே நோயை நிச்சயப்படுத்த வேண்டும். இருமல் எப்படியானது என்ற கேள்விக்கு விடை சொற்களாக அன்றி செயற்பாடாகவே வந்துவிட்டது.

    எனது வேலை சுருங்கியது. நோய் தெளிவானது.

    வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும்…..

    Operation success. Patient dead  என்பது போலல்ல.

    வூப்பிங் கொவ்  (Whooping Cough) என ஆங்கிலத்தில் சொல்வது, மருத்துவத்தில் Pertussis ஆகும். தமிழில் குக்கல் என்போம்

    இப்பொழுது பெருமளவு காணப்படுவதில்லை. காரணம் சிறுவயதில் போடப்படும் முக்கூட்டு ஊசிதான். இந்நோய் குணமடைய நீண்டகாலம் எடுக்கும். சுமார் 6 வாரங்கள் முதல் 2 மாதங்கள் எடுக்கும்.

    ஆரம்பகட்டத்தில் மட்டுமே அன்ரிபயோரிக் மருந்துகள் உதவும். அதுவும் ஒரு குறிப்பிட வகை அன்ரிபயோடிக் மட்டுமே. இவள் சாப்பிட்டதில் அது இல்லை. வீணாக ஏனையற்றை உண்டதுதான் மிச்சம்.

    நீண்ட நாள் தொடரும் இந் நோயைப் பற்றி விளக்கி, அன்ரிபயோரிக் மருந்துகள் நிறுத்தி, இருமலைத் தணிக்கும் சாதாரண மருந்துகளை கொடுத்தேன்.

    தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது.

    எனது மருந்தால் அல்ல!

    இருமலுக்கு மற்றொரு காரணம் பற்றிய எனது முன்னைய பதிவு


    நாட்பட்ட இருமலும் காதுக்குடுமியும்

    பசுப்பாலுக்கும் சளிக்கும் உள்ள தொடர்பு பற்றிய பதிவுக்கு


    பசுப்பால் சளியை தடுக்கும்

    வீரகேசரி வாரவெளியீடு “Steth இன் குரல்” இதழ் கீற்றில் 03.04.2011 ல் வெளியான எனது கட்டுரை (மருந்துகளால் மாறாத இருமல்.)
    டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

    Read Full Post »