Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2011

>

‘தவறிப் போனவள்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முன்னால் ‘நடத்தை’ என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டால் அதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.

ஆனால் அவ்வாறான  ‘தவறிப்போனவன்’ பற்றித் தமிழில் எழுதுவார் யாருமில்லை. எமது இனிய தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பாலியல் ரீதியான பாகுபாட்டு அம்சத்தின் அல்லது ஒடுக்குமுறை அம்சத்தின் கயமையான வெளிப்பாடுதான் பெண்பாலான, அந்த சொற்பிரயோகம் எனச் சொல்லலாம்.

‘நடத்தை தவறிப்போனவன்’கள் இல்லாத ‘கோவலன்’ வழி வந்த புனித சமூகம் அல்லவா எம்மது?.

தமிழர்களாகிய நாம் இன ரீதியான பாகுபாடு பற்றிப் பேசுவோம். மொழி ரீதியான ஒடுக்குமுறை பற்றிப் பேசுவோம். பிரதேச ரீதியான பாகுபாடுகள் பற்றியும் வாய்கிழியப் பேசுவோம். பால்ரீதியான பாரபட்சம் பற்றி  மட்டுமே மேலோட்டமாக அவ்வப்போது பட்டும் படாமாலும் பேசுவோம்.

ஆனால் எழுத்து வடிவில் அதிகம் பயன்படுத்தாத மொழிப் பிரயோகத்தைப் தனது படைப்பின் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார்; எழுத்தாளர் தெணியான். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் தெணியான் அவ்வாறு செய்வது அதிசயமல்ல. ஆனால் அவர் பேசுவதும் ஒழுக்க ரீதியாகத் தவறிப் போனவன் கதையை அல்ல என்பதும் உண்மையே.

எமது பக்கத்தில் பேச்சுவழக்குத் தமிழில் ‘தவறிப் போனான்’ என்று சொல்வது வழக்கம். அந்த அர்த்தத்தில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தவறிப் போனவன் கதை மட்டுமல்ல. தவறிப்போனவன்கள் பலர் பற்றிய கதையாகவும், தவறிப்போனவனாகக் கருதப்பட்டுத் தப்பியவன் கதையாகவும் இருக்கிறது.

எதையும் வழமைபோலச் சொல்லக் கூடாது சற்று வித்தியாமாகச் சொல்ல வேண்டும் எனத் தெணியான் அடிக்கடி சொல்லுவார். அது அவரது படைப்பின் தலைப்பிலும்  வெளிப்படுகிறது.

தவறிப்போனவன் கதை என்பது தெணியான் எழுதிய நாவலாகும். தினகரன் வாரமஞ்சரியில் 2005ம் ஆண்டில் ஆறு மாதங்களாகத் தொடராக வெளியான இந்நாவல் இப்பொழுது கொடகே நிறுவனத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

தணிகாசலம் ஒரு ஆசிரியர். தனது பாடசாலையில் உபஅதிபராகக் கடமையாற்றுகிறார். தனது பதவி பற்றி இவ்வாறு சொல்கிறார். “உபஅதிபர் கதிரை இரண்டும் கெட்டான் நிலையுள்ள போலி ஆசனம். கேலியாகப் பேசப்படும். பார்க்கப்படும்…. சம்பளமில்லாத வேலை என்கிறார். இது நூலாசிரியர் தெணியானது ஆசிரியத் தொழில் பற்றிய ஒரு விமர்சனம் எனக் கொள்ளலாம். காலை மணி அடிப்பதற்கு முன் ஆரம்பித்து முடியும் வரை ஒரு பாடசாலையின் நாளந்த நடப்புகளில் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் நடவடிக்ககைளில் கதையாகவும் சுய விமர்சனமாகவும் வருவது சுவார்ஸமாக இருக்கிறது. அது முதல் அத்தியாயம்.

திடீரென நோய்வாய்ப்பட்ட அந்த மனிதனின் வாழ்வில் சிலநாட்களுக்குள் நடந்த நிகழ்வுகளாகக் கதை சுவார்சமாக விரிகிறது. நோயுற்ற அவன், வீடு தனியார் மருத்துவமனை ஆதார வைத்தியசாலை யாழ் பொது ஆஸ்பத்திரி என அலையும் நேரத்தில், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள் ஊடாக சமூகத்தைப் பார்ப்பதாக அமைகிறது.

நோய்வாய்ப்பட்டவன் கதையான போதும் உயிர் பறிக்கும் நோயல்ல, ஆனால் பார்த்தவர்களைப் பயமுறுத்துகிற நோய். திடீர் திடீரென மூக்கிலிருந்து இரத்தம் வடியும். மண்டை ஓட்டிற்குள் ஏதோ வெடித்து மூக்கினால் குருதி வடிகிறது என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இதனால் பயந்தடித்து மருத்துவமனை நோக்கி ஓடுவார்கள். இங்கும் ஓடுகிறார்கள். தனது உடலில் வேறு ஒரு நோய் உபாதியும் இல்லையே என எண்ணி அவன் பயப்படாதபோதும் குடும்பம் சுற்றத்தவர் நெருக்கடியால் ஓட நேர்கிறது. அங்கெல்லாம் பல்வேறு சுவார்ஸமான நிகழ்வுகள் நடக்கின்றன.

மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தின் கதை இது.

“யுத்த அனர்த்தத்தினால் சிதைந்துபோன கடற்கரைப் பட்டினம் பருத்தித்துறை”,

“கூலாகக் குடிக்கிறதுக்கு ஒண்டுமே இல்லை, ஒரு சோடா வாங்கேலாது,

“இந்த மண்ணில் வாழும் சிந்திக்கத் தெரிந்த ஆருக்கு பிறஸர் வராமல் இருக்கும்”,

“பெற்றோலும் லாம்பெண்ணையும் கலந்து புக்குபுக்கென்று புகைகக்கிக் கொண்டுஅருந்தலாகச் சில கார்கள் அந்தரத்திற்கு ஓடுகின்றன, இறுதியில் மாட்டு வண்டியில் ஏற்றிப்போவதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி ஏதுமில்லை…. ஊரடங்கு நேரத்தில் தனது உயிருக்கு அஞ்சாமல் யார் புறப்பட்டுப் போய் வண்டியைக் கொண்டு வருவார்கள்…. வண்டிக்குள் பாயை விரித்து அதன் மேல் படுக்கைச் சேலையை விரித்து.. கிடத்தினார்கள்…. வண்டி நகர்ந்து நூறு மீட்டர் தூரம் போயிருக்க மாட்டாது.. அந்த வண்டிக்குள்ளேயே அவள் உயிர் பிரிந்தது.”

அதே போல அரிக்கன் விளக்கு, சிக்கன விளக்கு, சிரட்டைக்கரி போட்ட ஸ்திரிக்கைப் பெட்டி அந்த நேரத்தில் யாழ் மக்கள் பட்ட துன்ப, துயர அவலங்கள் அநேகம் ஆங்காங்கே படைப்பில் சொல்லப்படுகின்றன.

இவற்றை விடசொல்ல முடியாதவை பல. பதில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. சொல்ல முடியாத சூழ்நிலை. பெண்டாட்டிக்கும் சக்களத்திக்கும் இடையே மாட்டுப்பட்டவன் நிலையிலும் மோசமானதாக இருந்தது மனித வாழ்வு அக்காலகட்டத்தில்.

“அப்பு வெளியிலை திரிய வேண்டாம். படிக்கிற பிள்ளையள் எண்டு பாராமல் பிடிச்சுக் கொண்டு போகிறான்கள், சின்னவனையும் வெளியிலை விடாதையுங்கோ”. பிடித்துக் கொண்டு போவார்கள் யார் என்று சொல்ல முடியுமா?

மற்றொரு சம்பவம். ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

“யார் சுட்டது”

பதில் “தெரியாது”,

“ஏன்?’

“தெரியாது?”

‘அறிவுள்ள எந்த ஒரு மனிதன் இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது பதில் சொல்லுவான்?’ என்பது கேள்வியாக நாவலில் ஆசிரியர் கூற்றாக வருகிறது.
மகாத்மா காந்தியின் குரங்குப் பொம்மைகள் போல கண் மூடி, வாய் பொத்தி, காது அடைத்து நின்ற வாழ்வு. தீயனவற்றை ஒதுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தம் உயிர் காப்பதற்காக ஒண்டி ஒதுங்கிக் கிடந்த நரக வாழ்வு.

ஒருவரல்ல! யார் யாரோவெல்லாம் எமது குழந்தைகளை கழுகுகள் போல கொத்திக் கொண்டு போனார்கள். உளவாளி என்றும், காட்டிக் கொடுப்பவன் என்றும், பயங்கரவாதி என்றும் வயது வேறுபாடின்றிச் சுட்டுக் கொன்றார்கள்.

தாம் நினைப்பவற்றை எம்மைப் பேசச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அல்லது ஊமைகள் போல வாய் மூடி இருக்கச் சொன்னார்கள்.

அந்த வாழ்வை அப்படியே வெளிப்படையாகச் சித்தரிந்திருந்தால் நூலாசிரியரும் அக்காலத்திலேயே தவறிப் போனவன் ஆயிருப்பார். “கத்தி முனையில் நடப்பதுபோல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லியிருக்கிறேன்.” என நூலாசிரியர் தனதுரையில் சொல்லிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் நாவல் என்பது சிறுகதை போன்றதல்ல. அது ஒரு மையக் குறியை நோக்கி நகர வேண்டியதில்லை. பரந்த வாழ்வின் அகண்ட் சித்தரிப்பு. அதனால்தான் இந்த நாவலிலும் பல விடயங்கள் பேசப்படுகின்றன. யாழ் சமூகத்தின் போர்க்கால வாழ்வு, சாதீயம், சமூக சீர்கேடுகள் எனப் பலவும் பேசப்படுகின்றன. பருத்தித்துறையில் ஆதியில் சேவை புரிந்த செல்லப்பா, விசுவலிங்கம், தம்பிப்பிள்ளை போன்ற மருத்துவர்களின் ஒரு முகம் புலப்படுகிறது. சுமார் 40-50 வருடங்களுக்கு யாழ் மாவட்டத்தில் எமக்குக் கிடைத்த மருத்துவ வசதிகளின் கோட்டு வரைவும் இருக்கிறது.

துறைமுகமும், சந்தை,கோடு(Magistrate and district Courts)  பொலீஸ் ஸ்டேசன், என எந்நேரமும் கலகலப்பாக இருந்த நகரம் அது. அந்த நகரின் நினைவுகளைக் கிளற வைக்கிறது இந் நூல்.

சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னான அக்கால வாழ்வு முறையில் காதல் உணர்வு எவ்வளவு அடக்கமானதாக இருந்ததையும், வெளிப்படுத்;த முடியாத சூழல் கொண்டதாகவும் உணரமுடிகிறது.

கதை முழுவதும் நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல தமிழாசியரின் அழகான வசன நடை. ஆங்காங்கே யாழ் மண்ணின் பேச்சுத் தமிழ் மென்முறுவல் காட்டி நயக்க வைக்கிறது. கட்டிளம் பருவத்தில் தோன்றுகின்ற முகப்பருக்களுக்கு ‘குமர்ப் பருக்கள்’என்றும், சத்திர சிகிச்சைக்கு “கொத்தித்தான் பார்க்க வேண்டும்” என டொக்டரே ஓரிடத்தில் சொல்வதும் நயக்கின்றன. தகப்பனை ‘அப்போய்’ என ஆசையோடு அழைப்பதில் உள்ள நேசம் மனதில் நிற்கிறது. அதே போல தந்தை மகனை ‘அப்பு’ என நேச நெருக்கத்தோடு விளிப்பதையும் காண முடிகிறது.

மற்றொரு சுவார்ஸமான விடயம் அந்தக் காலத்துப் பேதி குடித்தல் பற்றியதாகும். இன்றும் ஒரு சிலர் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் பேதி குடிக்க மருந்து கேட்பதுண்டு. மருத்துவ ரீதியாகப் பேதி இப்பொழுது கொடுக்கப்படுவதேயில்லை. கொடுப்பது தீது என்பதே காரணம். சின்னப் பையனாக இருந்த காலத்தில் வயிற்று வலிக்காக சுதேசிய மருத்துவரால் தணிகாசலத்திற்கு கொடுக்கப்பட்டது. பேதி போவதற்குப் பதிலாக கடுமையாக வயிற்றை வலித்து வாந்திதான் போனது. அதற்குப் பிறகு யார் என்ன சொன்னபோதும் அதைக் குடிக்க மறுத்துவிட்டார்.

தெணியானின்  மற்றொரு நூல் பற்றிய எனது விமர்சனம் படிக்க …  

சுவாரஸ்சமாக நாவல் நகருகிறது. ஒரே மூச்சில் படித்து முடிக்க வைப்பது அதன் சிறப்பு. சிறந்த ஆற்றொழுக்கான நடையும் வாழ்வோடு ஒன்றிய சுவார்ஸமான நிகழ்வுகளும், மனித வாழ்வின் பல்வேறு பக்கங்களை பூமாலை போலத் தொடுத்த நுணக்கமும் அதற்குக் காரணமாகும்.

சில எழுத்துப் பிழைகளும், சொற்கள் பிரிந்து கிடப்பதும் மனத்தை அருட்டினாலும் சிறந்த வகையில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல் வெளியீட்டுத்துறைக்கு கொடகே நிறுவனம் பங்களிக்க முன்வந்தமை பாராட்டத்தக்கது. ஆயினும் பரந்த வளமும் அனுபவ விஸ்தாரமும் கொண்ட அவர்கள் இன்னமும் செம்மையாகச் செய்யலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த நாவல் எனக்கு  பிடித்ததற்கான காரணங்கள் பலவான போதும்,
தனிப்பட்ட காரணமும் உண்டு. ஏனெனில் இது எனது பிரதேசத்தின் கதை. கதை மாந்தர்கள் பெரும்பாலானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். தவறிப் போனவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள். தவறிப்போனவனாகக் கருதப்படும் தணிகாசலம் ஆசிரியர் எனது மிக நெருங்கிய நண்பர். அவர் வேறு யாருமல்ல. நூலாசிரியர் தெணியான் அவர்களே. எனவே இது தெணியானின் சொந்த அனுபவம்.

“தவறிப் போனவன் கதை” என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாக வைத்துக் கொண்டே இந்த நாவல் நகருகிறது” என வாக்குமூலம் தருகிறார்.

அதற்கு மேலாக நானும் அந்த நாவலில் பாத்திரமாக வருகிறேன். டொக்டர் ஆனந்தன், ஆனந்தன் வைத்தியசாலை யாவும் நானும் என்னைச் சுற்றியவையுமே.

எனது பருத்தி்த்துறை மருத்துவநிலையம் அன்று

அந்தச் செய்தி எட்டியபோது நானும் எனது நண்பர்களும் பட்ட மனஅவஸ்தை சொல்லி மாளாது. நண்பர் குலசிங்கம் உடனடியாகவே தகவல் தந்தார்.

நேற்றுப் பார்த்த நண்பனை இவ்வளவு விரைவாக இழப்போம் எனக் கனவும் கண்டதில்லை. ஆனால் இழப்பது அன்றைய போர்ச் மூழலில் ஆச்சரியமானதல்ல. இரவு 7 மணிக்கு சந்தித்த நண்பன் நெல்லை.க.பேரனை காலையில் கண்விழ்த்தபோது இழந்ததாகச் செய்தி கேட்ட போது பட்ட துயரத்திற்கு மேலானது தெணியான் பற்றிய செய்தி.

நோயாளிகள் காத்திருந்ததால் என்னால் விட்டகல முடியவில்லை. என்ன நடந்தது என அறிய நண்பர்கள் குலசிங்கமும், ரகுவரனும் தெணியானது வீடு நோக்கி சைக்கிளில் விரைந்தனர். நான் மனப்பதற்றத்துடன் பணியில் ஈடுபட நேர்ந்தது. எதிர்பாராதது! ஆனால் நல்ல செய்தியுடன் திரும்பி வந்தனர்.

“தெணியான் சுகமே உள்ளார். காலமானது வேறொரு ஆசிரியர்.” என்றார்கள். மகிழ்ந்தோம். மற்றொருவர் இறப்பில் நாம் மனமகிழ்ச்சியடைய நேர்ந்தது வாழ்க்கையில் அந்த ஒரே தடவையாகத்தான் இருக்கும். நண்பர் தப்பிவிட்ட நிம்மதியானது வேறு சிலர் துன்பத்தைக் கணக்கெடுக்காது மகிழ வைத்த முரண் அனுபவம் அது.

பன்முக ஆற்றல் கொண்ட தெணியானின் எழுத்தாள முகத்தின் ஒரு பக்கம்தான் நாவல். நாவல் படைப்புத்துறையில் பஞ்சம் மிக்க எமது நாட்டில் நாவல், குறுநாவல் என ஏற்கவே எட்டு நூல்களை தெணியான் எழுதி வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன் வெளியான ‘கழுகுகுள்’ என்ற நாவலும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் சுற்றிப் படர்ந்திருந்தாலும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட முடியாத மிக வித்தியாசமான படைப்பு ‘தவறிப்போனவன்’ ஆகும்.

அவர் எழுதிய சிறுகதைகளில்; பெரும்பாலானவை நான்கு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. சிறுகதை, கட்டுரை, கவர்ச்சியான பேச்சாற்றல், ஆசிரியத்துவம் என கைவைத்த ஒவ்வொரு துறையிலும் தன் ஆளுமையைப் பதித்துள்ளார்.

சுமார் 5 தசாப்தங்களாகப் படைப்புலகில் இருந்தாலும் அவரது படைப்பாற்றல் இன்னும் வற்றாத சுனையாகப் பிரகாவித்து, வித்தியாசமான புனைவுகளுடன் மெருகேறிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் பல பொக்கிஸங்கள் அவரது பேனாவிலிருந்து சுரந்து கொண்டே இருக்கும் என நம்பலாம்.

எம்கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>

உங்கள் வீட்டில் ஒரு வயதானவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அண்மைக் காலங்களாக அவரது வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன என வைத்துக் கொள்வோம்.

மறதி, நினைவுத் தடுமாற்றம், வழமையாக முகம் கழுவுதல் ஸேவ் எடுத்தல் போன்ற பணிகளையும் செய்வதில் சிரமம் ஏற்படுதல், இப்படியாகப் பல. அத்தோடு அவர் முன்னரைப் போல மற்றவற்றில் ஈடுபாடின்றி ஒதுங்கிப் போவது போன்றவற்றை அவதானிக்க முடிகிறதா?

வயசானால் இப்படித்தான் என அலட்சிப்படுத்தாதீர்கள். ஏனெனில் அது ஒரு நோயாக இருக்கலாம். உதாரணம் வேண்டுமென்றால் Black என்ற ஹிந்தித் திரைப்படத்தில் அமிதாப் பச்சான் நடித்த பாத்திரத்தை நினைவுறுத்துங்கள்.

அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease) என்பதை வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். ‘முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய்’ எனலாம். இது பொதுவாக 65க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி, வழமையான வயது முதிர்வதின் தாக்கம் அல்ல.

இது படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்றது. ‘மூளை அசதி நோய்’ எனவும் சொல்கிறார்கள் அதுதான் அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease).

இது வரவர தீவிரமடைந்து செல்கிற நோய். மாற்ற முடியாதது. சிகிச்சைகளினால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியுமே அன்றி, முற்று முழுதாக நிறுத்த முடியாது. எனவே அல்ஸீமர் நோயை ஆரம்பத்தில் கண்டறிய முயலுங்கள்.

அல்ஸீமர் நோயல்லாத வேறு நினைவு மங்கும் நோய்களும் உள்ளன. ‘அறளை பெயர்தல்’ என்ற சொல் அவற்றிக்குப் பொருந்தலாம். முதுமையில் ஏற்படும் மறதி, அறிவாற்றல் இழப்பு, மறதி போன்றவற்றை ஆங்கிலத்தில் (Dementia) என்பார்கள். ‘மூளைத் தேய்வு’ என்ற சொல் Dementia ற்கு பொருத்தமாக இருக்கும். இவை வயதாவதால் ஏற்படுபவை.

அல்ஸீமர் நோய்.

இந்த நோயைக்  கண்டுபிடிப்பதற்கு முக்கியமாக அறிகுறிகள் தாம் உதவுகின்றன.ஆனால் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிப்பது மிகவும் சிரமமானது.


நாளாந்த வாழ்க்கை முறையைக் குலைக்கும் நினைவுத் தடுமாற்றம்.

அண்மையில் நடந்த சம்பவங்களையும், அறிந்து கொண்ட, கற்றுக் கொண்ட விடயங்களையும் மறந்துவிடுவதுதான் அல்ஸீமர் நோயின் மிக முக்கியமான ஆரம்ப அறிகுறி எனலாம். மிக நெருக்கமானவர்களின் திருமண நாள், பிறந்தநாள்  போன்ற முக்கிய தினங்களை மறந்து விடுவதும், மிக முக்கிய சம்பவங்களை நினைவில் காப்பாற்ற முடியாததும் இந்நோயின் ஏனைய அறிகுறிகளாகும்;.

மறந்து விடாதிருக்க கலண்டரில் அல்லது டயறியில் குறித்து வைப்பதும், குறித்து வைத்ததையே மறந்துவிடுவதும், மறதியைத் தாண்ட காலத்தோடு சேர்ந்து ஓடும் சில வயதானவர்கள் கணனியை அல்லது வேறு இலத்திரனியல் கருவிகளை நினைவுறுத்துவதற்கு பயன்படுத்துவதுண்டு.

பெயர்களை மறப்பதும், செய்ய வேண்டிய முக்கிய வேலைகளையும், நிகழ்வுகளையும் மறப்பது அல்ஸீமர் நோயின் முக்கிய அறிகுறி எனலாம்.

திட்டமிடுவதிலும் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் சவால்களை எதிர்கொள்ளல்

ஒரு பணியைத் திட்டமிடுவதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம். சில்லறைக் கணக்குகள் பார்ப்பதிலும், வழமையான மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதிலும் பிரச்சனைகள் தோன்றலாம். வழமையான பல செயற்பாடுகளை செய்வதற்கு இப்பொழுது முன்பை விட கூடியளவு நேரம் தேவைப்படலாம்.

வீட்டிலோ, வேலைத்தளத்திலோ அல்லது ஓய்வின் போதோ நன்கு பரிச்சயமான வழமையான பணியைச் செய்வதில் சிரமங்களை எதிர் கொள்ளல்.

நாளாந்தக் கடமைகளை செய்து முடிப்பது பல அல்ஸீமர் நோயாளிகளுக்கு கடினமாயிருக்கும். உதாரணத்திற்கு வழமையாகச் சென்று வரும் வங்கி, கோயில், நண்பர் வீடு போன்ற இடத்திற்கான வழியை மறந்து விடுவார். வழமையாக செஸ், சீட்டாட்டம் போன்ற ஏதாவது விளையாடுபவர் அந்த விளையாட்டின் விதிகளை மறந்துவிடக் கூடும்.

காலம், நேரம், இடம் பற்றிய தடுமாற்றம்

பல அல்ஸீமர் நோயாளிகளுக்கு அன்றைய திகதி என்ன?, காலையா, மாலையா அல்லது மாரி, கோடைஇ காலநிலை போன்றவற்றை நினைவுக்கு கொண்டுவருவதில் குழப்பம் ஏற்படலாம். சில தருணங்களில் தாங்கள் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு அவ்விடத்திற்கு வந்தோம் என்றவற்றை மறந்து தடுமாறுவர்.

உதாரணத்திற்கு இன்று ஞாயிறா திங்களா எனக் குழம்புவார். ஆயினும் பின்னர் நினைவுக்கு கொண்டு வந்துவிடுவார்.

உருவங்களை சூழலுடன் பொருத்திப் பாரப்பதில் ஏற்படும் சிக்கல்கள்.

ஒரு சிலருக்கு பார்வைக் கோளாறு மட்டுமே அல்ஸீமர் நோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் சிலருக்கு சிரமம் தோன்றும். சிலருக்கு கண்ணில் படும் உருவங்களுக்கு இடையேயான தூரம், நிறவேறுபாடு ஆகியவற்றை வேறுபடுத்தி நிர்ணயிப்பது கஸ்டமாயிருக்கும். உதாரணத்திற்கு முகம் பார்க்கும் கண்ணாடியைத் தாண்டிச் செல்லும் போது அதில் உள்ள விம்பத்தைப் பிரித்தறிய முடியாது வேறு யாரோ அறையில் இருப்பதாக உணரக் கூடும்.

உரையாடுதலிலும் எழுதுவதிலும் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளல்.

மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அதனை புரிந்து கொள்வதிலும் அதில் இணைந்து கொள்வதும் இவர்கள் பலருக்கும் முடியாதிருக்கும். தான் பேசிக்கொண்டிருக்கையில் அதனை எவ்வாறு தொடர்வது எனப் புரியாமல் பேச்சை நிறுத்துவார். அல்லது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லவும் கூடும். சரியான சொற்கள் வேண்டிய நேரத்தில் வராமல் திணறுவர். உதாரணத்திற்கு டோர்ச் லைட் என்பதை விளக்கு என்றோ, புத்தகம் என்பதைப் பேப்பர் என்பதாகவோ சொல்லக் கூடும்.

பொருட்களை அதற்கான இடத்தில் வைக்காமல் வேறு இடங்களில் வைப்பதும், அவற்றைப் பின்பு கண்டு பிடிக்கத் திணறுவதும்.

ஒரு பொருளை அதற்கான இடத்தில் வைக்காது பொருத்தமற்ற இடத்தில் வைப்பது அல்ஸீமர் நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாகும். உதாரணமாக  புத்தக அலுமாரியில் வைக்க வேண்டிய புத்தகத்தை வழிபாட்டு மேடையில் வைப்பார், அல்லது பர்சில் வைக்க வேண்டிய பணத்தை மூக்கு கண்ணாடி உறையில் வைப்பார். பிறகு அதனைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாது திணறுவார். யாராவது அதனைத் திருடிவிட்டதாக குற்றம் சாட்டக் கூடும். காலம் செல்லச் செல்ல 

தீர்மானம் எடுப்பதில் சிரமம்

அல்ஸீமர் நோயாளிகள் சரியான தீர்மானம் எடுப்பதில் சிரமப்படுவார்கள். தவறான முடிவு எடுக்கவும் கூடும். உதாரணமாக பெருந்தொகை பணத்தை தவறான நபருக்கு கொடுக்க திடீரென முடிவு எடுக்கக் கூடும். குளிப்பது, முகம் கழுவுவது, சுத்தமான ஆடைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பார். தனது சுத்தத்திலும், வீடு படுக்கை போன்றவற்றின் சுத்தத்திலும் அக்கறையற்று இருப்பார்.

தொழில் மற்றும் சமூகக் கடமைகளில் இருந்து ஒதுங்கக் கூடும்

ரீவீ பார்ப்பது, பத்திரிகை, புத்தகம் படிப்பது, விழாக்களுக்கு செல்வது, நண்பர்களுடன் பொழுது போக்குவது போன்ற தனது வழமையான நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கக் கூடும். தனக்கு விருப்பமான செயற்பாடுகளைக் கூட செய்து முடிக்க முடியாது மறப்பதும் இவர்களுக்கு இயல்பு. கட்டாயம் செல்ல வேண்டிய திருமணம், மரணவீடு ஆகியவற்றிக்கு செல்வதிலும் அக்கறை அற்று இருப்பது சகசம்.

அவரது வழமையான மனநிலை, குணஇயல்பு மாற்றம்.

முன்னரைப் போன்ற மனிதராக இருக்கமாட்டார். மனக்குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, பீதி, மனப்பதற்றம் போன்றவை மேலோங்கக் கூடும். மிக அற்பமான விடயங்களுக்கும் நிலை ததும்புவராக மாறுவார். இதனால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழிலகத் தோழர்கள் இடையே ஆன உறவுகள் விரிசலடையலாம்.

இத்தகைய அறிகுறிகளில் ஒரு சிலவாவது உங்கள் உறவினருக்கு இருந்தால் அது அல்ஸிமர் நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஏதற்கும் நீங்களாக முடிவெடுக்காது நல்ல மருத்துவரை அணுகுங்கள்.

இது முற்று முழுதாகக் குணப்படத்த முடியாத நோய் என்ற போதும், அது மேலும் தீவிரமாகி வாழ்வை நாசமாக்காது தடுக்க முடியும்.

இந்த நோயை முதல் முதலாக இனங்கண்டவர் ஒரு ஜேர்மன் மருத்துவர். Dr.Alois Alzheimer என்பது அவர் பெயர். அவரது நோயாளி Frau Augste என்பராவார்.

வயதான காலத்தில் ஏற்படும் மூளை மங்குதலைத் தடுப்பது பற்றி மேலும் வாசிக்க…மூளை மங்குதலைத் தடுக்க நடைப்பயிற்சி

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

‘அக்குரோணி’
மன்னார் அமுதனின் கவிதை நூல்

மன்னார் அமுதனின் அக்குரோணி என்ற கவிதை நூல் இது. இனிமையான குணங்கள் நிறைந்த ஒரு அழகிய இளைஞனின் மிக அழகான நூல் இது. அட்டை கண்ணைக் ஈர்க்கும் கவர்ச்சியுடையதாக இருக்கிறது.

இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுதி. முதலாவது கவிதைத் தொகுதியான ‘விட்டு விடுதலை காண்’ சில காலங்களுக்கு முன் 2009ல் வெளிவந்தபோது நிறையப் பேசப்பட்டது.  பலராலும் பாராட்டப்பட்டது. விமர்சனங்களுக்கும் ஆளானது.

இன்றைய இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மன்னார் அமுதன்  இருக்கிறார். மிகுந்த வீச்சுடன் படைப்புலகில் இயங்குபவராக இருக்கிறார். இவரது ஆக்கங்கள் வராத பத்திரிகை இருக்க முடியாது என்று சொல்லுமளவு அதிகம் எழுதுகிறார். ஜீவநதி, ஞானம், இருக்கிறம், படிகள், கலைமுகம், பூங்காவனம், நீங்களும் எழுதலாம் போன்ற சஞ்சிகைகளில் இவரது கவிதைகளைப் படிக்க முடிகிறது.

தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைளிலும் இவரது படைப்புகளைத் தரிசிக்க முடிகிறது. இலக்கியத்திற்காகவே வாழ்பவர் போல, அதுவே தனது உயிர் மூச்சுப்போல கவிதைகளைப் படைக்கிறார். இவ்வளவு வேகமாக எழுதும் வேறொருவரைக் காண்பது அரிது.

‘மன்னார் அமுதனின் பக்கங்கள்’ http://amuthan.wordpress.com/home என்பது இவரது வலைத் தளமாகும். அதற்குள் நுளைந்து பார்க்கும்போது இவரது படைப்பாளுமையின் பரந்த வெளியில் பயணிக்க முடிகிறது. கவிதை மட்டும் இவரது படைப்பு உலகு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், நூல் விமர்சனம், சமூக விமர்சனம் எனப் பல படைத்துள்ளார். அண்மையில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ‘பண்டைய இலக்கியமும் ஈழத் தமிழரின் சமகால வாழ்வியலும்’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று நான் கூகுளில் சென்று கவிதைகள் பற்றி அறிய ஒரு தேடுதல் நடத்தியபோது எனது வலையில் சிக்கியவை பெரும்பாலும் இவரது கவிதைகள்தான். பல இலக்கியக் கட்டுரைகளிலும், இணையக் கருத்தாடல்களிலும் கூட இவரது பெயர் அதிகமாகச் சிக்கியது. இணைய இதழ்களிலும் இவரது பெயர் மிக அதிகமாக இடம் பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

யாழ்தேவி, தமிழ்மணம், திரட்டி, சிறந்த தமிழ் பூக்கள், இலங்கை வலைப் பதிவாளர் திரட்டி, தமிழ்க் கணிமை, இன்ட்லி, தமிழ்வெளி, மென்தமிழ் போன்ற பல இணையத் திரட்டிகளில் இவரது படைப்புகள் வெளியாகின்றன. இவ்வாறாக இன்றைய இலக்கிய உலகில் அதிலும் முக்கியமாக இளம் எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலமானவராகவும் வசீகரம் மிக்கவராகவும் திகழ்கிறார்.

இலக்கிய நிகழ்வுகளிலும் இவரது பெயர் அதிகமாக அடிபடுவதை பத்திரிகை, சஞ்சிகைகள் ஊடாகக் காண முடிகிறது. முக்கியமாக திருமறைக் கலாமன்ற பௌர்ணமி நிகழ்வுகளில் இவரது பங்களிப்பை அதிகம் காண்கிறோம். மன்னார் எழுத்தாளர் பேரவையின் முக்கிய அங்கத்தவராகவும் இருக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளதாக அறிகிறேன்.

மன்னார் அமுதன் எனது நண்பன். மேடைக்காகப் பேசிய அலங்கார வார்த்தைகள் அல்ல. இந்த முதியவருக்கும் இளைஞனுக்கும் இடையில் நட்பு இருக்க முடியாது என்பீர்கள். ஆனாலும் நாம் நண்பர்கள்தான். முகப்புத்தக (Facebook) நண்பர்கள். எண்ணெட்டுத் திசையில் இருப்பவர்களை இணைக்கும் பாலமாக இன்று முகப்புத்தகம் இருக்கிறது. வயது வேறுபாடின்றி, பால் வேறுபாடின்னிறி பலரும் அதன் ஊடாக நட்புப் பேண முடிகிறது. ஈடுபாடுகளில் ஒற்றுமை உள்ள பலரும் அதனூடாக தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் மட்டுமின்றி நேரடியாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றிலும் இவருடன் கலந்துரையாடியிருக்கிறேன்.

கவிதை என்பது ஒரு இனிய அனுபவம். எல்லாப் படைப்பிலக்கியங்கள் போலவே கவிதையும் படைப்பாளியின் கருத்தை அல்லது உணர்வை கற்பனை கலந்து வாசகனுக்குத் தருகிறது. அவனது மெல்லுணர்வுகளை மீட்டி உள்ளத்தில் இசைபோலத் தழுவச் செய்கிறது.

ஆனால் இவற்றிடையே வேறுபாடுகள் உண்டு. கவிதையில் சொல்லப்படுபவை வசன நடையில் அமையாது என்பது தெரிந்ததே. கவிதையில் கருத்துச் செறிவு இருக்கும். சுருக்கமாகவும் ஓசை அமைதியுடனும் இருக்கும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கவிதையில் கவித்துவம் இருக்க வேண்டும்.

ஒரு படைப்பில் கவித்துவம் இருக்கிறதா என எப்படி அறிவது.  அது கட்டுக்குள் அகப்படாத, வார்த்தைகளுள் சிக்காத, அதியுயர் அனுபவம் என்றே சொல்லலாம். பூவின் நறுமணம் போலக் கண்களால் காண முடியாதது. நுகர மட்டுமே முடிவது. பூவின் மணம் எவ்வாறு மனத்தைப் புளங்காகிதப் படுத்துகிறதோ அவ்வாறே கவிதை, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் அதியுயர் அக நிறைவைத் தருவதாகும்.

உணர்வாலும் அனுபவத்தாலும் கவிஞனையும் வாசகனையும் இணைப்பது கவிதையின் சொற்களாலான பாலமாகும். இருவரும் இணையும் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கவித்துவம் உச்சங்களை எட்டும். அவ்வாறு இணையச் செய்யும் ஆற்றல் படைப்பாளியின் சொற்களுக்கு வேண்டும்.

இதனால்தான் படைப்பனுக்கு மட்டுமல்ல படிப்பவனுக்கும் கூட அது மனநிறைவைத் தரும்.

சிறுகதை போல கவிதை தமிழுக்கு புதிதாக அறிமுகமான இலக்கிய வடிவம் அல்ல என்பதை நாம் அறிவோம். கவிதையே எமது பாரம்பரியம். ஐம்பெரும் காப்பியங்களைக் கொண்டது தமிழ். அதற்கு மேலாக கம்பனும் வள்ளுவனும் அண்மையில் பாரதியும் அதற்கு உரம் ஊட்டினார்கள்.

பாரதி தமிழ்க் கவிதையின் போக்கையே மாற்றினான்.

“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது   
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை.”

என இலகு தமிழில் எழுதினான். அதில் வசன கவிதையும் அடங்கும்.

அவனது வசன கவிதை பின் யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, நவீன கவிதை, புதுக் கவிதை எனப் பல பெயர்களைத் தாங்கி பரிணாமமடைந்து இன்றைய கவிதை ஆகிவிட்டது.

மஹாகவி, முருகையன், நீலாவண்ணன் போன்ற மூத்த ஆளுமைகளுக்குப் பிறகு, 80 களின் பின் ஈழத் தமிழ்க் கவிஞர்கள் வேறொரு பரிமாணத்தில் புதிய வீச்சைப் பாய்ச்சினார்கள். தமிழ் கூறு உலகெங்கும் எமது கவிதைகள் பேசப்பட்டன. போரும் அகதி வாழ்வும் எமது கவிதைகளின் பாடு பொருளாயிற்று.

இப்பொழுது போருக்குப் பின்னான வாழ்வு. வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு அமைதியாக ஓடுகிறது. நிறைய நூல்கள் வெளிவருகின்றன. பல இளைஞர்கள் கவிதைத்துறையில் இறங்கியுள்ளார்கள். எமது வாழ்வின் இன்றைய கோலங்கள் பலவும் எமது கவிதையில் பேசப்படுகின்றன.

மன்னார் அமுதனின் கவிதைகளும் அவ்வாறே நிகழ் வாழ்வைப் பேசுகின்றன. வெறும் கற்பனை வழி வந்த படைப்புகள் அல்ல. தன்னைச் சுற்றியுள்ளவற்றை அவதானிக்கிறார். உள்ளார்ந்த மனித நேயத்துடன் பார்க்கிறார். அவற்றினால் உணர்வூக்கம் பெறுகிறார். கவலையும், ஆனந்தமும், கோபமும், போன்ற பல்வேறு உணர்வுகள் அவரது மனதை அலைக்களிக்கக் கவிதை படைக்கிறார்.

இதனால்தான் இவரது படைப்புவெளி சமூக அக்கறை மிகுந்ததாக இருக்கிறது. அவரது கவிதைகள் எமது வாழ்வைப் பிரதிபலிக்கினறன. கடுமையா சொல் அலங்காரம் கிடையாது. இலகுவான தமிழில் எழுதுகிறார். புதிரான உவமைகளும், விளங்காத படிமங்களும் அவரிடம் இல்லை. இதனால் எனக்குப் புரிகிறது. சாதாரண மக்களுக்கும் புரிகிறது. எல்லோருக்குமே புரியும்படி எழுகிறார். புரியாமல் எழுதினால்தான் கவிதை என்ற சிறைக்குள் அவர் அகப்படாது இருப்பது மகிழ்வைத் தருகிறது.

புரியும்படி எழுதினால்தான் மக்களுக்குப் புரியும். சமூகஅக்கறையுள்ள படைப்பாளியால் அவ்வாறுதான் எழுத முடியும்.

உதாரணத்திற்குப் பாருங்கள். சாதீயத்திற்கு எதிரான குரல் கொடுக்கிறார்.

“..குளிப்பதற்கும் கும்பிடவும்
தனியிடங்களா? நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?..”

விழிம்பு நிலை மனிதர்களின் துயர் செறிந்த வாழ்வை ‘அவளும் அவர்களும் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். பிச்சைக்காரியைக் கூட விட்டுவிடாத கயவர்களின் கயமை வெளிப்படுகிறது.

“..குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிளிந்த உடைகளுக்குள்
எதையோ தின்று கொண்டிருப்பான்…”

அவரது கவிதையில் அரசியலும் இருக்கிறது. அரசியல் என்பது கட்சி அரசியல் அல்ல. மொழி சார்ந்த, இனம் சார்ந்த அரசியல். ‘நாம் தமிழர், எமது மொழி நீண்ட பாரம்பரியம் கொண்டது. நாம் தலை நிமிர்ந்து வாழவேண்டும். என நாம் எல்லோரும் நாடுவதையே அவரும் நாடுகிறார்.

அதிகாரத்துக்கு எதிரான அவரது கவிதைக் குரல் இவ்வாறு ஒலிக்கிறது.

“..ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது…”

புதுக் கவிதை, மரபுக் கவிதை என்ற இரண்டு வகைக் கவிதைகளையும் அவரது படைப்புகளில் காண முடிகிறது. பொதுவாக தமிழ் மொழியின் பெருமை, தமிழர் வாழ்வு, தமிழ்த் தேசியம் போன்ற கருவுடைய படைப்புகள் மரபு வழிக் கவிதைகளாக அமைந்திருப்பதை காண முடிகிறது.

‘வரம் தா தேவி’ என்பது நூலின் முகப்புக் கவிதையாக அமைத்திருப்பதிலிருந்தே அவரது தாய்மொழிப் பற்றை நாம் விளங்கிக் கொள்ளலாம். இவற்றைத் தவிர ‘தமிழாய் தமிழுக்காய்’, தமிழே எம் உடலே’, எனப் பல கவிதைகள் தமிழின் புகழ் பாடுகின்றன.

தமிழின் மீதுள்ள பற்றுப் போலவே தனது தாய் மண்ணிலும் பற்றுக் கொண்டவர். தான் பிறந்த பிரதேசத்திலும் பெருமை கொள்பவர்.

அதனால்தான் மன்னாரை தனது பெயருடன் இணைத்துளாளர். தெளிவத்தை ஜோசப், திக்கவல்லை கமால், நீர்வை பொன்னையன், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் இரத்தினவேலோன், நாச்சியாதீவு பர்வீன், வல்வை அனந்தராஜ், திருமலை நவம், மருதமூரான், நீர்கொழும்பு முத்துலிங்கம், எனப் பலர் முன்னுதாரங்களாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் பற்றி எழுத்தாணி ஏந்தும் இயேசுக்கள்’கவிதையில் சொல்லும் வரிகள் இவ்வாறு அவர்களின் வாழ்வுக்கும் சாவுக்குமான சத்தியப் போரின் இருண்ட பக்கங்களின் வரிகளாக…

“..யுகம் யுகமாய்த்
தொடரும் காட்டிக் கொடுப்புகளும்
சிலுவை மரணங்களும்
உனக்கும் அவர்க்குமான
எழுதப்படாத ஒப்பந்தானே
காட்டிக் கொடுத்துவிடு..”
..
..மரணம் நிகழும்
வழிகள் தான் வேறு
சேருமிடம்மென்னவோ
கல்வாரி தானே,,’

காதல், ஊடல், பிரிவு, பிரிவின் துயர், கழிவிரக்கம் போன்ற மென் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன. இவை பெரும்பாலும் புதுக் கவிதைகளாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
உணர்வுகளை வாசகனின் மனதுக்கு நெருக்கமான வகையில் பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் மன்னார் அமுதனிடம் உண்டு. தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துகிறார்.

பிரிவு

“..உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
சிலந்தி வலைகள்
நிரப்புகின்றன…”

மற்றொரு கவிதையில்

“..கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை – இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே…”

இன்னொன்று இவ்வாறு

“…நெடுநாள் பிரிவை உடனே போக்க
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்…”

எவ்வளவு யதார்த்தமான வரிகள். போலி மருத்துவ சேர்டிபிக்கட்டுகளைத் தேடும் போலி நோயாளிகள் இவர்கள். ஆனால் காதலில் ஆரோக்கியமானவர்கள்.

நூலைப் பற்றி இன்னும் நிறையப் பேசலாம். ஆயினும் நேரமாகிவிட்டது. இன்றைய நூல் வெளியீட்டு அரங்கில் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி. பெருமளவு மருத்துவத் துறை சார்ந்த என்னை கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்த அவரது அன்பு நெகிழ வைக்கிறது.

இது மன்னார் அமுதனின் இரண்டாவது கவிதை நூல். இலக்கியப் பரப்பில் அவர் பயணப்பட இன்னும் நீண்ட வெளியும் காலமும் காத்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இன்னும் பல நூல்கள் வெளியிடுவதுடன், பல சாதனைகள் செய்ய வாழ்த்துகிறேன். சொந்த வாழ்விலும் இலக்கிய உலகிலும் உச்சங்களை எட்டி சமூகத்திற்குத் தொண்டாற்ற மீண்டும் வாழ்த்தி அமர்கிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய தலைமை உரையின் கட்டுரை வடிவம்.
0.0.0.0.0.0

Read Full Post »

>

ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.

இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அதற்குக் கிழே கண் மடலும் மொழுமொழுவென நீர்க்கட்டி போல அதைத்திருந்தது.

இவற்றை எமது மனத்தில் அகற்றிவிட்டுப் பார்த்தால் வழமையான அழகான முகமாக பிரகாசிக்கும் எனத் தோன்றியது.

பார்க்கப் பரிதாபமாக தோற்றமளித்தாள். ரத்தக்களரியாகச் சிவந்திருந்த முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அதையும் மீறிய வன்மம் அவளது கண்களில் உறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கண்களைக் கீழே இறக்கிப் பார்த்தபோது கழுத்தில் கருமையாகக் கண்டல். கைகளில் அங்காங்கே சிறு கீறல்கள்.

“என்ன நடந்தது?”

உடன் பதில் வரவில்லை. வாய் திறப்பதற்கு முன் எதைச் சொல்வது எப்படிச் சொல்வது எனக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். தானகவே பேசட்டும் எனக் காத்திருந்தேன்.

வழமையில் அவள் அப்படியானவள் அல்ல. மிகவும் துடிப்பானவள். கேட்பதற்கு முன் பட்பட்டெனப் பதில் வரும். எதிர்க் கேள்விகளும், சந்தேகங்களும் சரமாரியாகப் பாய்ந்து வந்து என்னைத் திணறடிக்கும்.

திருமணமாகி ஓரிரு வருடங்கள்தான். காதல் கலியாணம். அவனும் நல்ல வேலையில் இருக்கிறான். பண்பாகப் பழகுபவன். இன்னும் குழந்தைகள் இல்லை. இன்று தனியே வந்திருக்கிறாள்.

மனதில் அவளது சரித்திரப் பக்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

“எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை…” ஆரம்பித்தவள் சற்று நிதானித்தாள்.

“இதெல்லாம் இவராலைதான். குடிச்சுப் போட்டு வந்தார் என்றால் என்ன செய்யிறம் என்று அவருக்குப் புரியுதில்லை. அடிச்சு உதைச்சு என்னைச் சம்பலாக்கிப் போடுகிறார்”

எனக்கு ஆச்சரியாக இருந்தது. குடிப்பானா அவன்?

“குடிக்கிறவரே. அடிக்கடி குடிக்கிறவரோ. கூடுதலாகவும் குடிக்கிறவரோ” என விசார்த்தேன்.

“அதிகம் குடிக்கிறதில்லை. எப்பெண்டாலும்தான். பார்ட்டி, பிரண்ட்ஸ் என்று சேர்ந்தால் குடிப்பார்…”

“…ஆனால் குடிச்சிட்டு வந்தால் பிரச்சனைதான். கண் மண் தெரியாது, கோபம் பொத்துக் கொண்டு வரும். தேவையில்லாமல் என்னோடை சண்டை போடுவார்.”

காயங்களுக்கு பண்டேச் பண்ணி, உடல் வலிகள் தீர மருந்துகள் கொடுத்தேன்.

ஆனாலும் அவளது அடிப்படைப் பிரச்சனை தீரவில்லை என்பது நன்றாகவே புரிந்தது. தீராவிட்டால் மீண்டும் அடிகாயங்களுடன் வந்து நிற்பது நிச்சயம்.
பேச்சை ஆரம்பித்தேன்.

“ அவரது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாதா?”

“அடிக்கடி குடிக்கிறவரில்லை…

“..எப்பெண்டாலும்தான் குடிப்பார். அந்த நேரத்திலை அவர் அடியாமலிருக்க ஏதாவது செய்ய முடியுமா டொக்டர்”

சற்று சிக்கலான விடயமாக இருந்தது. மருத்துவ ரீதியில் குடித்துவிட்டு வருபரை உணர்ச்சி வயப்படாமல் தடுக்க முடியமா?

அதனால் எனக்கு ஒரு சவாலாக இருந்தது. சற்று யோசித்தேன்.

“நீங்கள் ஒரு முயற்சி செய்து பாருங்கள். அவர் குடித்துவிட்டு வரும் நேரங்களில் உங்களது வாயில் கிறீன் ரீயை விட்டு அலசிக் கொண்டே இருங்கள்…

…குடிக்கக் கூடாது,

….வெளியே துப்பவும் கூடாது.

…வாயில் வைத்து அலசிக் கொண்டே இருங்கள்.”

அவளுக்கு ஆச்சரியாக இருந்தது.

கிறீன் ரீயை குடியாமல் அலசிக் கொண்டே இருப்பதா. அதுவும் அடிக்கும் அவரல்ல! அடி வாங்கும் தான்!

அரை நம்பிக்கையோடு சென்றாள்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தாள். அடி, காயம் எதுவும் இல்லை. தடிமன் காய்ச்சலுக்கு மருந்தெடுக்க வந்திருந்தாள்.

“இப்ப அவர் குடித்தால் அடிக்கிறதில்லையோ”

“இல்லை…..” முழுமதியாக முகம் பூரித்தாள்.

“…என்ன அற்புதமான ஐடியா சொன்னீர்கள். அவர் குடிச்சிட்டு வந்தால் நான் நீங்கள் சொன்னபடி வாயில் கிறீன் ரீயை என்ரை வாயில் விட்டு அலசிக் கொண்டே இருப்பேன். அவர் அடிப்பதேயில்லை…
.
…என்ன அதிசயம். எப்படி நடக்குது டொக்டர்? அந்த கிறீன் ரீ மணத்திற்கு கோபம் வராமல் தடுக்கிற குணம் இருக்கிதா?”

நான் மறுமொழி சொல்லவில்லை. உண்மையைச் எப்படி முகத்துக்கு நேரே சொல்வது?

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் என்ற சிம்பிள் தத்துவம்தான்.

‘நீ வாயை மூடிக்காண்டிருந்தால் அவரது கை நீளாது’ என்பதை அவளுக்குக் கூறவில்லை.

வெறுமனே புன்னகைத்தேன்.

எனது வேறுசில ஆலோசனைகள் பற்றி அறியக் கீழே கிளிக் பண்ணுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி Steth இன் குரல் பத்தியில் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

பத்மாசனம் தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் குந்தியிருப்பது என்றாலே தெரியாத தலைமுறை வந்துவிட்டது. எமது இயற்கையான பழக்கங்களைக் கைவிடுவதால் எமது உடலுக்கு ஏற்படக் கூடிய பாதகங்களை அறிந்திருக்கிறோமா?

இதுவும் அத்தகையாதுதான். இயற்கையோடு வாழாததால் இழந்தது.

மிகவும் துன்பப்படுத்தும் நோய் அது. எழுந்து நடப்பதா, மசாஸ் பண்ணுவதா, யாரையாவது பிடித்துவிடச் சொல்வதா, அல்லது எதுவும் செய்யாது அசையாமல் படுத்துக்கிடப்பதா எனத் புரியாது திகைக்க வைக்கும்.

வலி தாங்க முடியவில்லை. கெண்டை பிடிக்கிறது.

பலருக்கு நட்டநடு நிசியில் வருவதால் துணைக்கு யாரும் இன்றிப் பயமாகவும் இருக்கும். ஆனால் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன இந்தச் சின்ன விசயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் எனச் சிரிப்பாக இருக்கும்.

ஆம் கிறாம்ஸ் (Cramps) எனப்படும் தசைக் குறட்டல் நோய் ஆபத்தற்றது. குறுகிய நேரம் மட்டுமே நீடித்தாலும் மிகவும் துன்பபப்படுத்துகிற நோயாகவும் இருக்கிறது.

இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு எந்த மருந்து மிகவும் உதவக் கூடியது போன்ற விடயங்களில் இன்னமும் தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.

கடுமையான உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சியும் அதனுடன் தொடர்ந்து வரும் நீரிழப்பு நிலையும்தான் காரணம் என்பது பரவலான நம்பிக்கையாகும். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்தபோதும், அதனுடன் உடல் உப்புகள் பெருமளவு வெளியேறியபோதும் குறண்டல் வரவில்லை என்கிறது ஒரு ஆய்வு. (Ref:- Med Sci Sports Exerc. 2010 Nov;42(11):2056-63.)

யாருக்கு வருகிறது

எவருக்கும் குறட்டல் நோய் வரக் கூடுமாயினும் சில வகை மனிதர்களை, சில சூழ்நிலையில் அதிகமாகப் பாதிக்கிறது.

 • கர்ப்பிணிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்போது கர்பமாயிருக்கும் பெண்களில் சுமார் அரைவாசிப் பெண்களுக்கு குறட்டல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
 •  வயதானவர்களில் 1ஃ3 பேர் பாதிக்கப்படுவதாக அறிய முடிந்தது. இவர்களில் பலர் 10வருடங்களுக்கு மேலாகத் துன்பப்பட்டிருந்தாலும் மருத்துவ உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • பல குழந்தைகளுக்கும் வருவதுண்டு
 •  இரவில் வரும் குறட்டல் அதிகமாகும்
 • கடுமையான வெய்யிலில் உடல் உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபட்டால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
 • ஈரல் நோயுள்ளவர்கள், அதீத மது பாவனையாளர்கள், டயலிசிஸ் செய்யப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் எனப் பல்வேறு தரத்தினரும் பாதிப்படைகிறார்கள்.
எவ்வாறு ஏற்படுகிறது

குறட்டல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு பல விளக்கங்கள் கூறுப்படுகின்றன.

 • தெரியாத காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் நரம்புகள் தூண்டப்படுவது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
 • ஏற்கனவே முழுமையாகச் சுருங்கியுள்ள தசை இழையங்கள் திரும்பவும் தூண்டப்படுவதும் மற்றொரு காரணமாம்.
 • குறிப்பிட்ட பகுதியிலுள்ள தசை இழையங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத போதும் நேரலாம். இது மாரடைப்பை ஒத்தது. மாரடைப்பின்போது இருதயத்தின் தசைநார்களுக்கு இரத்தம் செல்வது குறைவதால் அல்லது முற்றாகத் தடைப்படுவதால் மாரடைப்பு நெஞ்சுவலியாக வெளிப்படுகிறது.
 • தசைகளுக்கு நீட்டி மடக்குவது போன்ற பயிற்சிகள் குறைவாக இருப்பதாலும் ஏற்படலாம்.

உதாரணமாக முன்பு நிலத்தில் உட்கார்ந்த மனிதன் இப்பொழுது நாற்காலியில் உட்காருகிறான். மலசலம் கழிப்பதற்கு குந்தியிருந்தவன் இப்பொழுது கொமோட்டில் உட்காருகிறான்.

இவற்றினால் அவனது கால் தசைகளுக்கு பயிற்சி அற்றுப் போய்விட்டது இதுவே குறட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள்.

மருத்துவம்.

ஒரு குறிப்பிட்ட சிகிச்சை அனைவருக்கும் பயன்படும் என்று சொல்ல முடியாது. ஓவ்வொருவருக்கும் அவர்களது நோய்கான காரணம் எதுவென பகுத்தறிந்து செய்ய வேண்டியுள்ளது.

பொதுவாக குயினின் என்ற மருந்து இதனைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆயினும் உணவு சார்ந்த முறைகளில் இப்பொழுது ஆர்வம் திரும்பியிருக்கிறது. தசைகளின் செயற்பாட்டிற்கும் நரம்புகளின் தூண்டலுக்கும் பல மூலகங்கள் அடிப்படையாக இருப்பதே காரணமாகும். உதாரணமாக Potassium, Magnesium, Sodium and Calcium போன்றவை முக்கிய பங்களிக்கின்றன.

உப்புக் கரைத்துக் கொடுப்பது, இளநீர் அருந்துவது போன்றவை சிபார்சு செய்யப்படுவதற்கு இதுவே காரணம். ஆயினும் இவற்றை மேலதிகமாகக் கொடுப்பதால் கெண்டைப் பிடிப்பைத் தடுக்கலாம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல விட்டமின் சீ, ஈ (Vitamin C, Vitamin E) போன்றவையும் உதவலாம். ஆயினும் இவை பற்றியும் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே என யானை முகத்தானைப் பக்தர்கள் துதித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால் பானை வயிறுள்ளவர்கள் மற்றவர்களைக் காப்பது முடியாது என்பது மட்டுமல்ல தம்மையும் காப்பது கடினம் என நவீன மருத்துவம் கூறுகிறது.

பானை வயிறு என்றால் என்ன?

எமது உடலில் கொழுப்பு உள்ளது. உடலின் எடை அதிகரிப்பிற்கு இந்தக் கொழுப்பு மிக முக்கிய காரணமாகிறது. எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமான கொழுப்பானது எமது சருமத்தின் கீழ் இருக்கிறது.

அதே போல எமது வயிற்றறையிலும் இருக்கிறது. வயிற்றறையில் இருக்கும் கொழுப்பு, தசைகளுக்கும் கிழே உள்ளுறுப்புகளுடன் சேர்ந்திருக்கும்;போதே வயிறு அதிகம் பருமனாகிறது. தொந்தி விழுகிறது. ஆபத்து மிக அதிகமாகிறது.

அதீத எடை ஆபத்தானது
அதீத எடையின் ஆபத்துக்கள் பலவாகும்.

அதீத எடையானது பல ஆபத்தான நோய்களுக்குக் காரணமாகிறது என்பதை அறிவீர்கள்.

அதீத எடை என்பது உடற் திணிவுக் குறியீடு (BMI-30) 30ற்கு மேல் என மதிப்பிடுகிறார்கள்.

பணச் செழிப்பும் உணவு அதிகம் நிறைந்ததுமான அமெரிக்காவில் மட்டும் 72 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறான அதீத எடை கொண்டவர்களாகும்.

 • நீரிழிவு
 • குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு
 • உயர் இரத்த அழுத்தம்
 • ஆஸ்த்மா
 • முழங்கால் தேய்வு உட்பட்ட மூட்டு நோய்கள்
 • தூக்கத்தில் மூச்சுத் திணறல்

போன்ற பல நோய்களுக்குக் அடிப்படைக் காரணமாகிறது. எனவே தான் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 ஒரே ஒரு நன்மையா?

பாதிப்புகள் பல இருந்தபோதும் ஒரே ஒரு நன்மை அவதானிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களில் மட்டும். அதிக எடையுள்ள பெண்கள் மெலிந்த பெண்களைவிட குறைந்தளவே எலும்புத் தேய்வுக்கு ஆளாவதாக அறியப்படுள்ளது.

இருந்த போதும் இது பற்றி இப்பொழுது மேலும் நுணுக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதீத எடை கொண்ட பெண்களில் கொழுப்பானது வயிற்றறையில் இருந்தால் அவர்களது எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருப்பதுடன் எலும்பிலும் கொழுப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

இது காலகதியில் இடுப்பு எலும்பு முறிவு, முள்ளதண்டு எலும்புகளில் உடைவு ஆகியவற்றைக் கொண்டு வரும்.

அதாவது கொழுப்பு சருமத்தின் கீழ் இருப்பதை விட வயிற்றறையில் இருந்தால் பாதிப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒஸ்டியொபொரோசிஸ்

அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் மக்கள் எலும்பு அடர்த்தி குறைந்த ஒஸ்டியொபொரோசிஸ் (Osteoporosis) நோயினால் துன்பப்படுகிறார்கள். மேலும் 10 மில்லியன் மக்களின் எலும்புகள் நலிவுற்று அந்நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள்.

எமது நாட்டிலும்  இந் நோயினால் பலர் இடுப்பு எலும்பு முறிந்து சிரமப்படுகிறார்கள்.

இதற்கான சத்திர சிகிச்சைகள் இருந்தபோதும் அது செலவானதும் சிரமமானதும் ஆகும். முள்ளத்தண்டு எலும்பு உடைவு மற்றும் சிதைவு காரணமாக முதுகுவலி, கால்வலி, குனிந்து வேலை செய்ய முடியாமை எனப் பல தொல்லைகளுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பற்றிய தரவுகள் இங்கு கிடையாது. ஆனால் இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்றறைக் கொழுப்பின் ஏனைய பாதிப்புகள்

வயிற்றறைக் கொழுப்பு அதாவது தொந்தி வண்டியானது எலும்புப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இருதய நோய்கள், நீரிழிவு ஆகியன ஏற்படுவதற்கும் மிக முக்கிய காரணங்களாகும்.

அதனால்தான் பல மருத்துவர்கள் பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, எடை ஆகியவற்றை அளவிடுவதுடன் வயிற்றின் சுற்றளைவையும் அளந்து பார்க்கிறார்கள்.

அளந்து பாருங்கள்

உங்கள் வயிற்றில் கொழுப்பு அதிகமிருப்பதை அறிவது எப்படி? வயிற்றின் சுற்றளவை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி.

கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள். நாங்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு இருக்க வேண்டிய அளவுகளாவன

ஆண்களுக்கு 90 செமி அல்லது 35.4 அங்குலங்கள் குறைவாக
பெண்களுக்கு 80 செமி அல்லது 31.5 அங்குலங்கள் குறைவாக

இதற்கு  மேல் அதிகரிக்க விடாதீர்கள்.


வயிற்றறைக் கொழுப்புக்குக் காரணங்கள்

வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணங்கள் என்ன? பொதுவான எடை அதிகரிப்பிற்குக் காரணமான அதே தவறான உணவுமுறைகளும், போதிய உடற் பயிற்ச்சி இல்லாததுமே ஆகும். ஆனால் அத்துடன் பரம்பரைக் காரணங்களும் உள்ளன. இயற்கையாகவே மேலை நாட்டவர்களை விட ஆசிய நாட்டவர்களுக்கு வயிறு வைப்பது அதிகம்.

முயற்சி செய்யுங்கள்

ஆரோக்கியமான உணவுமுறைகளுடன் தினசரி உடல் உழைப்பு அல்லது பயிற்ச்சி மூலம் உங்கள் எடையையும் முக்கியமாக வயிற்றில் கொழுப்பையும் குறைத்து உடல் நலத்தை அக்கறையுடன் பேணவேண்டும்.

இரத்தத்தில் கொழுப்பு

இரத்தத்தில் கொழுப்பு என்பது முற்றிலும் வேறு விடயம். அது கொலஸ்டரோல் பற்றியது. அதீத எடையுள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாயினும் மெலிந்த எடை உடையவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.

Source: Radiological Society of North America, December 2010

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

பிரபல எழுத்தாளரான நீல.பத்மநாதனின் சிறந்த நாவலான ‘தலைமுறைகள்’ திரைப்படமாக வெளிவந்துள்ளது. வ.கெளதமனின் நெறியாள்கையில் ‘மகிழ்ச்சி’ என்ற பெயரில் இது வெளியாகியுள்ளது. இலங்கையில் திரையிடப்பட்டதாகத் தெரியவில்லை.

இத் திரைப்படத்தை எதிர்வரும் ஞாயிறு 15.05.2011 அன்று இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் காட்சிப்படுத்த இருக்கிறது.

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு மையம்
                கேட்போர் கூடம்
                58, தர்மாராம வீதி
                கொழும்பு 06.

நேரம்:- மாலை 4.30 மணி (ஞாயிறு 15.05.2011)

நல்ல திரைப்படங்களை ரசிக்க விரும்புபவர்கள் தப்பவிடக் கூடாத சிறந்த திரைப்படம்.

நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலைப் படிக்காத நல்ல வாசகன் இருக்க முடியாது. கைவிரல்களுக்குள் அடக்க கூடிய மிகச் சிறந்த தமிழ் நாவல்கள் எனப் பட்டியலிட்டால் அதற்குள் நிச்சயம் இது கட்டாயம் இருக்கும்.

கேரளத்தை அண்டிய தமிழ் பரப்பான குமரி மாவட்டத்தின் இரணியல் கிராமத்து செட்டிமார் சமுதாயதினரின் வாழ்வை இயல்பு கெட்டாமல் யதார்தமாகச் சித்தரிக்கும் படைப்பு எனலாம்.

வட்டார வழக்கு, சாதீயத்திற்கு எதிரான குரல், பெண்ணியம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் இந்நாவல் பிரச்சாரத்தனமான வரண்ட படைப்பு அல்ல.

ஒரு கிராமியச் சூழலில் சுமார் 50-60 வருடங்களுக்கு முன் நடந்ததாக வருகிறது. அக் காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத மறுமணம், அதுவும் கணவன் உயிரோடு இருக்கும்போது, அதே கிராமத்தில் நடப்பது முடியாத காரியம். இவற்றை துணிந்து கூறும் மிகச் சிறந்த இலக்கியம் எனலாம்.

அந்தக் கதையைத்தான் இப்பொழுது மகிழ்ச்சி என்ற திரைப்படமாகத் தருகிறார் இயக்குனர் கௌதமன்.

Read Full Post »

>

பத்மாசனம் தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் குந்தியிருப்பது என்றாலே தெரியாத தலைமுறை வந்துவிட்டது. எமது இயற்கையான பழக்கங்களைக் கைவிடுவதால் எமது உடலுக்கு ஏற்படக் கூடிய பாதகங்களை அறிந்திருக்கிறோமா?

இதுவும் அத்தகையாதுதான். இயற்கையோடு வாழாததால் இழந்தது.

மிகவும் துன்பப்படுத்தும் நோய் அது. எழுந்து நடப்பதா, மசாஸ் பண்ணுவதா, யாரையாவது பிடித்துவிடச் சொல்வதா, அல்லது எதுவும் செய்யாது அசையாமல் படுத்துக்கிடப்பதா எனத் புரியாது திகைக்க வைக்கும்.

வலி தாங்க முடியவில்லை. கெண்டை பிடிக்கிறது.

பலருக்கு நட்டநடு நிசியில் வருவதால் துணைக்கு யாரும் இன்றிப் பயமாகவும் இருக்கும். ஆனால் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன இந்தச் சின்ன விசயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் எனச் சிரிப்பாக இருக்கும்.

ஆம் கிறாம்ஸ் (Cramps) எனப்படும் தசைக் குறட்டல் நோய் ஆபத்தற்றது. குறுகிய நேரம் மட்டுமே நீடித்தாலும் மிகவும் துன்பபப்படுத்துகிற நோயாகவும் இருக்கிறது.

இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு எந்த மருந்து மிகவும் உதவக் கூடியது போன்ற விடயங்களில் இன்னமும் தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.

கடுமையான உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சியும் அதனுடன் தொடர்ந்து வரும் நீரிழப்பு நிலையும்தான் காரணம் என்பது பரவலான நம்பிக்கையாகும். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்தபோதும், அதனுடன் உடல் உப்புகள் பெருமளவு வெளியேறியபோதும் குறண்டல் வரவில்லை என்கிறது ஒரு ஆய்வு. (Ref:- Med Sci Sports Exerc. 2010 Nov;42(11):2056-63.)

யாருக்கு வருகிறது

எவருக்கும் குறட்டல் நோய் வரக் கூடுமாயினும் சில வகை மனிதர்களை, சில சூழ்நிலையில் அதிகமாகப் பாதிக்கிறது.

 • கர்ப்பிணிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்போது கர்பமாயிருக்கும் பெண்களில் சுமார் அரைவாசிப் பெண்களுக்கு குறட்டல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
 •  வயதானவர்களில் 1ஃ3 பேர் பாதிக்கப்படுவதாக அறிய முடிந்தது. இவர்களில் பலர் 10வருடங்களுக்கு மேலாகத் துன்பப்பட்டிருந்தாலும் மருத்துவ உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • பல குழந்தைகளுக்கும் வருவதுண்டு
 •  இரவில் வரும் குறட்டல் அதிகமாகும்
 • கடுமையான வெய்யிலில் உடல் உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபட்டால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
 • ஈரல் நோயுள்ளவர்கள், அதீத மது பாவனையாளர்கள், டயலிசிஸ் செய்யப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் எனப் பல்வேறு தரத்தினரும் பாதிப்படைகிறார்கள்.

எவ்வாறு ஏற்படுகிறது

குறட்டல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு பல விளக்கங்கள் கூறுப்படுகின்றன.

 • தெரியாத காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் நரம்புகள் தூண்டப்படுவது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
 • ஏற்கனவே முழுமையாகச் சுருங்கியுள்ள தசை இழையங்கள் திரும்பவும் தூண்டப்படுவதும் மற்றொரு காரணமாம்.
 • குறிப்பிட்ட பகுதியிலுள்ள தசை இழையங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத போதும் நேரலாம். இது மாரடைப்பை ஒத்தது. மாரடைப்பின்போது இருதயத்தின் தசைநார்களுக்கு இரத்தம் செல்வது குறைவதால் அல்லது முற்றாகத் தடைப்படுவதால் மாரடைப்பு நெஞ்சுவலியாக வெளிப்படுகிறது.
 • தசைகளுக்கு நீட்டி மடக்குவது போன்ற பயிற்சிகள் குறைவாக இருப்பதாலும் ஏற்படலாம். 

உதாரணமாக முன்பு நிலத்தில் உட்கார்ந்த மனிதன் இப்பொழுது நாற்காலியில் உட்காருகிறான். மலசலம் கழிப்பதற்கு குந்தியிருந்தவன் இப்பொழுது கொமோட்டில் உட்காருகிறான்.

இவற்றினால் அவனது கால் தசைகளுக்கு பயிற்சி அற்றுப் போய்விட்டது இதுவே குறட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள்.

மருத்துவம்.

ஒரு குறிப்பிட்ட சிகிச்சை அனைவருக்கும் பயன்படும் என்று சொல்ல முடியாது. ஓவ்வொருவருக்கும் அவர்களது நோய்கான காரணம் எதுவென பகுத்தறிந்து செய்ய வேண்டியுள்ளது.

பொதுவாக குயினின் என்ற மருந்து இதனைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆயினும் உணவு சார்ந்த முறைகளில் இப்பொழுது ஆர்வம் திரும்பியிருக்கிறது. தசைகளின் செயற்பாட்டிற்கும் நரம்புகளின் தூண்டலுக்கும் பல மூலகங்கள் அடிப்படையாக இருப்பதே காரணமாகும். உதாரணமாக Potassium, Magnesium, Sodium and Calcium போன்றவை முக்கிய பங்களிக்கின்றன. 

உப்புக் கரைத்துக் கொடுப்பது, இளநீர் அருந்துவது போன்றவை சிபார்சு செய்யப்படுவதற்கு இதுவே காரணம். ஆயினும் இவற்றை மேலதிகமாகக் கொடுப்பதால் கெண்டைப் பிடிப்பைத் தடுக்கலாம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல விட்டமின் சீ, ஈ (Vitamin C, Vitamin E) போன்றவையும் உதவலாம். ஆயினும் இவை பற்றியும் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

சுதந்திர வேட்கையுடன் நெடும் பயணம்

The way back  ஆங்கில சினிமா


சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட.

Janusz (Jim Sturgess)  சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.

மறுபுறத்தில் விசாரணை செய்யும் இராணுவ அதிகாரியின் இறுகிய முகம்.

“உன் மனைவியே நீ அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினாய் என்கிறாள். இப்பொழுது நீ குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?”

“நீங்கள் அவளுக்கு என்ன செய்தீர்கள்” எனக் கேட்கிறான். விடை கேள்வியாக, இல்லை என மறுப்பது போலத் தலை ஆட்டிக்கொண்டே.

அவளாகச் சொன்ன சாட்சியம் அல்ல. அவனுக்கு எதிராகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறாள். ஜனநாயக மரபுகள் குழிதோண்டிப் புதைக்கபட்டு, ராணுவம் நீதி வழங்கும் சூழலில் இதுதான் நடந்திருக்கும் என்பது சொல்லாமலே புரிகிறது. 

படம் இவ்வாறுதான் ஆரம்பித்திருந்தது.

1940ல் சைபீரியன் குலாக்கு (gulag)   சிறைக்கு மனித மந்தைகளாக அனுப்பப்படுபவனில் அவனும் ஒருவனாகிறான். சைபீரியாச் சிறை என்ற பெயர் சொன்னாலே மரணம் வந்துவிடும் அக்காலத்தில். கட்டங்களில் அடைத்து வைக்க வேண்டிய சிறை அல்ல. திறந்தவெளிச் சிறை. 5 மில்லியன் சதுர வெளி கொண்ட பாரிய பிரதேசம். சைபருக்குக் கீழ் பல பாகைகள் என்றதான கடும் குளிரில் விறைத்தே பலர் மரணடைவார்கள். ஜீவிதத்திற்கும் மரணத்திற்குமான போட்டி நிறைந்த சூழலில், அதன் பனி படர்ந்த பெருவெளிகளைத் தாண்டி எவனும் தப்பிச் செல்வதை நினைக்கவே முடியாது.

ஆனால் அவனும் இன்னும் ஆறு பேரும் சேர்ந்து அதிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சியிலிருக்கும் ரஷ்யாவின் சைபீரியாச் சிறையிலிருந்து தப்பி மொங்கோலியா நாட்டைச் சென்றடைவதுதான் அவர்களது இலக்கு.

தங்களிடையே இரகசிமான தொடர்பாடல்கள், மிகத் துல்லிமான திட்டமிடல், நீண்ட பயணத்திற்கான துரித ஏற்பாடுகள் யாவும் செய்யப்படுகின்றன. ஒளி கொடுக்கும் ஜெனரேட்டரின் செயற்பாடு இவர்களால் நிற்பாட்டப்பட்டு, மாற்று ஒளி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் காவலாளிகளால் செய்யப்படுவதற்கு இடையில் கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் இவர்கள் தப்பியாக வேண்டும். நம்ப முடியாததைச் செய்து முடிக்கிறார்கள்.

இதற்குப் பிறகும் கால்நடையான அவர்களது 4000 மைலுக்கு மேலான தப்பிக்கும் முயற்சியில் பல உயிராபத்து மிகுந்ததும், திகிலூட்டக் கூடியதுமான பல சவால்களை எதிர் கொள்கிறார்கள். சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மரண வாயில்களை துச்சமெனத் தாண்டிச் செல்லும் ஞானிகளின் முயற்சி போன்றது. வியக்கவைக்கும் காட்சிகள். ஆனால் அவை யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படுகிறன.

ஆனால் இவர்களை அழிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் காத்திருக்கின்றன. மனிதனால் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அல்ல. கொடூரமான சீதோசன நிலை. வடதுருவத்தை அண்டிய பிரதேசத்தின் பரந்த வெளியும், விறைக்க வைத்தே கொல்லும் அடர்ந்த பனியின் ஆவேசமும் இவர்களை எதிர்கொள்கின்றன. அவற்றை எதிர்கொள்கிறார்கள். தாண்டுகிறார்கள்.

இந்த அயரவும் அசரவும் வைக்கும் பயணத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும் ஒத்த கருத்துள்ள ஒரே தன்மையானவர்கள் அல்ல. மாற்றுக் கருத்துகளும், கொள்கை முரண்பாடுகளும் அவர்களிடையே இருக்கின்றன. இதனால் ஒருவருடன் ஒருவர் முரண்படவும் செய்கிறார்கள். ஆனால் சுதந்திரம் என்ற ஒரே குறிக்கோளால் ஒன்றுபடுகிறார்கள். இந்தப் பயணம் அவர்களது உடலைப் பாதிப்பது போலவே மனத்தையும் பாதிக்கிறது.

இந்த உடல் உளப் பாதிப்புகளை திரையில் கொண்டுவருவது மிகவும் சிரமமானது. ஆயினும் பொருள் செறிந்த வசனங்களும், சிறந்த நடிப்பும் கைகொடுக்கின்றன. அவர்களது உடல்உள மாற்றங்களை புலன் காட்சிகளாக கொண்டு வருவதில் அற்புதமான ஒப்பனை உதவுகிறது. முக்கியமாக அவளது மரணக் காட்சி. கடும் அனல்காற்றால் துவண்ட அவர்களது முகங்கள் ஆகியவற்றை நம்பவைக்கும் விதமாக காட்சிப்படுத்துவதில் ஒப்பனை கைகொடுத்திருக்கிறது.

இவர்களில் ஒருவனான இரவுப் பார்வையற்றவன் வழியில் குளிரில் விறைத்து இறந்துவிடுகிறான். வழிதவறிய அவன் இவர்களைத் தேடியலையும்போது இது நடக்கிறது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக அருகிலேயே அவன் மரணித்துக் கிடப்பதைக் காண்கிறோம். மரணத்திற்கும் வாழ்வுக்குமான இடைவெளி சில அடி தூரமாக அக்கணத்தில் இருந்தது. ஆனாலும் அவனால் இயற்கையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் இயற்கையின் ஆவேசங்களுக்கு எதிராகப் பல்லாயிரம் மைல் தூரத்தை தாண்டி சுதந்திரத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தார்கள்.

வழியில் இன்னொரு பெண்ணும் இவர்களோடு இணைகிறாள். பாலைவனத்து வெம்மை தாங்காது அவளும் வழியில் மரணிக்கிறாள்.

பயணத்திற்கு இடைஞ்சலாக இருந்தவை பனியும் வெயிலும் மட்டுமல்ல. பசியும் பட்டினியும் அவர்களைக் காவுகொள்ளத் துடிக்கின்றன. மீண்டும் அகப்படுவதிலிருந்து தப்புவதற்காக மனித சஞ்சாரமற்ற பிரதேசங்கள் ஊடாகப் பயணிப்பதால் உணவு கிடைப்பது பெரும்பாடாகிறது. ஊர்ந்து செல்லும் பாம்பையும் அவர்களது பசியின் கொடுமை விட்டு வைக்கவில்லை. நஞ்சுள்ள அதன் தலையை வெட்டி எறிந்துவிட்டு நெருப்பில் சுட்டு உண்கிறார்கள்.

மற்றொரு தருணம் சற்று அருவருப்பானது என்றால் கூட அவர்களுக்குச் சாத்தியமானது அந்நேரத்தில் அது ஒன்றுதான். ஓநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ஒதோ ஒரு மிருகத்தைப் புசித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை விரட்டியடித்துவிட்டு அந்த ஊனைத் தாங்கள் பங்கிட்டு பசி ஆறுகிறார்கள்.

இவ்வாறு நடக்க முடியுமா என நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவற்றை யாதார்த்தமான செயற்பாடுகள் ஊடாகத் திரையில் காட்டி எம்மை மலைக்கவும் திறந்த வாய் மூடாது பார்த்திருக்கவும் செய்த நெறியாளர் Peter Weir  பாராட்டுக்குரியவர். “The Truman Show”, “Dead Poets Society”, ஆகிய சினிமாக்கள் அவரது குறிப்பிடத்தக்க முன்னைய படைப்புகளாகும். சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னான இப்படத்திலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. 

சோவியத் யூனியன், ஸ்டாலின், கொம்யூனிசம் ஆகியவற்றிக்கு எதிரான அரசியல் சினிமாதான் இது. அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை அவர்கள் செய்வதாகக் காட்டுகிறது.  கோட்பாட்டு ரீதியாக நாம் அதை ஏற்று கொள்ள வேண்டியதில்லை. இன்றுள்ள உலக நடப்பில் இப்படத்தின் அரசியல் கூடச் செல்லாக் காசாகிவிட்டது. மேற்கு நாடுகளின் குள்ள நரித்தனமான அரசியலும் எமக்குத் தெரிந்ததுதானே.

ஆனால் இந்தச் சினிமா என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் மிக அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட படப்பிடிப்பும், யதார்த்தமான சித்தரிப்பும்தான். அதற்கு மேலாக அது கொண்டு வரும் மற்றொரு செய்தி முக்கியமானது. விடாமுயற்சியும் திடசங்கற்பமும் இருந்தால் செய்வற்கு அரியதையும் செய்து முடிக்கலாம் என்பதாகும். மனிதனால் முடியாதது எதுவுமில்லை.

இது ஒரு உண்மைக் கதை என்று சொல்லப்படுகிறது. Slavomir Rawicz முன்பு எழுதி வெளிவந்த சுயசரிதை நூலான “The Long Walk” இருந்துதான் இப்படத்திற்கான கதை எடுக்கப்பட்டது. ஆயினும் வேறு பலரின் அனுபவங்களும் கேட்டறியப்பட்டனவாம்.

பஞ்சு போலச் சொரிந்து கொண்டேயிருக்கும் பனித்துளிகள். மூடி நிற்கும் கனத்த வானம், பனி படர்ந்த வெறும் தரைகள். உறைந்து கிடக்கும் நதிகள். பனியால் ஆடை போர்த்தி இலையுதிர்த்தி உறைந்திருக்கும் நெடு மரங்கள்.

நீண்ட பயணத்தின் பின் சூழல் மாறுகிறது. வனப்புடைய இயற்கையான நிலப்பரப்புகள், மைல் கணக்கான தூரத்திற்கு நீரையே காண முடியாத வரண்ட வனாந்தரங்கள், மனிதனையே விழுங்கி ஏப்பமிடக் கூடிய மலைப் பாம்புகள் போன்ற மணற் புயல்கள். மலைகள், தேயிலைத் தோட்டங்கள். காணக்கிடைக்காத இயற்கையின் அற்புத கோலங்கள் எங்கள் முன் விரிகின்றன.

ஒருவாறு மொங்கோலிய எல்லையை எட்டிய மகிழ்ச்சியில் மூழ்கிய இவர்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பாதையில் உள்ள வரவேற்பு வளைவில் ஸ்டாலினதும், மாவோவினதும் சித்திரங்கள். இனி அங்கு போக முடியாது. அங்கும் கம்யூனிச ஆட்சி. அரசியல் புகலிடம் பெறமுடியாது. எனவே இந்தியாவுக்குப் பயணமாக முடிவெடுக்கிறார்கள். பனியையும், பாவைவனத்தையும் தாண்டி சுதந்திரத்தை நெருங்கி வந்தவர்கள் எதிரே பெரும்தடையாக உயர்ந்து நிற்கிறது இமயமலை.

இறுதிக் காட்சி. அவன் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். அதே வீடு, அதே விட்டு வாசல். அதே கதவு எல்லாமே அவ்வாறுதான் இருக்கின்றன. உள்ளே செல்கிறான்.

ஆனால் அங்கே! ஒரு முதியவள் சோகம் அடர்ந்த முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கிறாள். யாரோ வரும் அசமந்தம் கேட்டு நிமிர்ந்த அவள் புரியாத முகத்தோடு அவனைப் பார்க்கிறாள். புன்னகைத்த அவன் முதியவனாக அவள் கைகள் மேல் தன் கை வைத்ததும் நேசமானதும் அவளுக்குப் பரிச்சமானதுமான அவனது ஸ்பரிசத்தில் அவள் முகம் மலர்கிறாள். பல தாசப்தங்களாக அவன் நினைவுகளை மட்டும் சுமந்து காத்திருந்த அவளுக்கு பலன் கிட்டிவிட்டது.

பொய் சொல்லியேனும் உயிரோடு இருந்ததால்தான் அது சாத்தியமானது.

உயிருக்காப் பொய் சொல்வது கோழைத்தனமானது அல்ல. அது ஒரு தந்திரோபாய முயற்சிதான். ஏனெனில் உயிரோடு இருந்தால் வெல்வதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கலாம். மரணித்துவிட்டால் மீண்டும் வெல்வதாற்கான வாய்ப்பே இல்லாத இறுதித் தோல்வியாகும்.

ஞானம் மே 2011 இதழிலும், பதிவுகள் இணையத் தளத்திலும் பிரசுரமான எனது கட்டுரை

எம்.கே.முருகானந்தன்.
0.0.00.0.00.0

Read Full Post »

>

நாளைய உலகம் உங்கள் கையில்.
இன்றைய உங்களை எதிர்காலத்திற்காகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்
‘நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்’ இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர்.
குடும்ப அளவில் நோக்கினால் ‘நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை’ எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன.
இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன.
வேறு பல கடமைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்காவிட்டாலும் மகிழ்வைத் தராது போனாலும் கட்டாயம் செய்ய வேண்டியவை. நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
ஆனால் இவற்றை முன்னெடுப்பதற்கு அத்திவாரம் உங்கள் நலன் மட்டுமே. அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். நலம் என்பது உடல் நலம் மட்டுமல்ல. உடல், உள்ளம், சமூக நோக்கு, ஆன்மீகப் பார்வை யாவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.
உணவும் போஷாக்கும்
போசாக்கான உணவு எந்தவொரு உயிருக்கும் அவசியமானது. உங்களுக்கும் அவசியம். ஆனால் இன்றைய தiமுறையினராகிய உங்களில் பெரும்பாலானவர்களது உணவுமுறைகள் மாறிவருகிறது. எமது பாரம்;பரிய முறைகளிலிருந்து விடுபட்டு மேலைத் தேய நாகரீகங்களின் பாதையில் வழிமாறிச் செல்கிறது. சோறு, இடியப்பம், புட்டு, அப்பம், இட்லி என்பவை பலருக்கும் வேண்டாத உணவாக இருக்கிறது.
“இவன் நான் சமைச்சு வைச்ச இடியப்பமும் சாம்பாரும் சரியில்லை என்று சொல்லிப் போட்டு ‘Pizza’ ஓடர் பண்ணி எடுப்பிச்சுச் சாப்பிடுகிறான்” என்று கவலைப்படும் அம்மாக்கள் பலர்.
பிட்ஸா மட்டுமல்ல, கொத்து ரொட்டி, ரோல்ஸ், மிக்ஸர் எனப் பலப்பல ரெடிமேட் உணவுகள் உணவகங்களை நிறைத்திருக்கின்றன. அங்கிருந்து ஹோம் டிலிவரி, பார்சல் என வீடு நோக்கிப் படை எடுக்கவும் செய்கின்றன.
ஆம் அவை வாய்க்கு இதமானவை, உண்பதற்கு மென்மையானவை. கடைக்கு அருகில் சென்றாலே நாசியைக் கவர்ந்திழுப்பன. நாவின் சுவை மூளைகளை (Taste buds) சிலிர்க்க வைப்பவை. அதற்கு மேல் அது ஒரு பாஷன் போன்றதும் கூட. அவற்றிலிருந்து தப்புவதற்கு மிகுந்த மனஅடக்கம் தேவை.
ஆனால் இவற்றில் இருப்பவை என்ன? மாப் பொருளும் எண்ணெய், மாஜரீன், அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகள், கலரிங் ஆகியவைதானே உள்ளன. ஊதிய பலூனில் காற்று நிறைந்திருப்பது போல அவற்றில் நிறைந்திருப்பது வெற்றுக் கலோரிகள்! அது மட்டுமே. நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை. எனவே எடை அதிகரிக்கும்.
குனிந்து பாருங்கள்.
உங்கள் இடுப்புப் பட்டிக்கு மேல் தொப்பை வயிறு சரிந்து தொங்குகிறதா?
ஆம் எடை அதிகரிக்கும்போது கொழுப்பு உங்கள் உடல் முழவதும் படிகிறது. முகத்தில் கை கால்களில் உடல் முழுவதும். அதே போல வயிற்றிலும் படிகிறது. வயிற்றின் வெளிப் பகுதியில் மட்டுமின்றி வயிற்றறைக்குள்ளும் கொழுப்புப் படிகிறது. இவ்வாறு கொழுப்புப் படிவது நல்லதல்ல. அதனால் எதிர்காலத்தில் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பொரிப்பதாலும், ஓரே எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதாலும் மேற் கூறிய பாஸ்ட் பூட்ஸ் அனைத்துமே ரான்ஸ் கொழுப்பு அமிலங்களால் நிறைந்திருக்கின்றன. இவை கொலஸ்டரொலை அதிகரிப்பதுடன் இருதய நோய்களுக்கும் காலாகின்றன.
எதிர்காலம் நோக்கிய முன்னேற்றப் பாதையில் இருதய நோய்கள் ஒரு தடைக்கல்லாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனவே உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
போசாக்குக் குறைபாடு
அதீத எடை கொள்ளை நோய் போல உலகெங்கும் பிரச்சனையாக உருவாவதைக் கணக்கில் எடுக்கும் அதே  நேரம் குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் நிலவும் போசாக்குக் குறைபாடு எதிர் காலச் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தனது வெளியீடு ஒன்றில் சுட்டிக் காட்டுகிறது.
குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் தொடர்ந்து நிலவும் போசாக்குக் குறைபாடு ஒருவனது வளரச்சியைக் குன்றச் செய்வதுடன் சமூக மட்டத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். IQ யையும் குறைக்கும் உங்களது வளர்ச்சியும் ஆரோக்கியமும் உங்களில் மட்டுமல்லாது பெற்றோர்களின் ஆரம்ப காலக் கவனிப்பிலும் தங்கியுள்ளது. முக்கியமாக குழந்தை மற்றும் பதின்ம வயதிலும் அவர்களது அக்கறையும் கவனிப்பும் முக்கியமானது என்பது தெளிவு.
இரத்தசோகை எவரது உடல்ஆற்றலையும் செயற்திறனையும் குன்றச் செய்யும். சோர்வை ஏற்படுத்தும். சிந்தனை ஆற்றலையும் குறைக்கும்.
ஆனால் பெண்களில் இது மேலும் முக்கியமானது. காரணம்அவர்கள் வெறும் பெண்கள் மட்டுமல்ல. எதிர்காலத் தாய்மாரும் கூட. பெண்களாகிய நீங்கள் கர்ப்பம் தங்குவதற்கு முன்னரே உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தை சோகை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
சமபல வலு உணவு
ஆரோக்கியமான சமபல வலுவுள்ள உணவுமுறையைக் நீங்கள் கடைப்பிடித்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தை சோகை ஏற்படாமல் தடுக்கவும் முடியும். உணவில் மாச்சத்து 55 சதவிகிதமாகவும், புரதம் 35 சதவிகிதமாகவும், கொழுப்பு 15 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய உணவுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு உணவு வழிகாட்டி கூம்பகம் உங்களுக்கு உதவும்.
இதன்படி உணவு வகைளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.
கூம்பகத்தின் அடியில் இருப்பது மாப்பொருள் உணவுகள். சோறு, பாண், இடியப்பம், புட்டு, அப்பம், இட்லி. நூடில்ஸ் போன்றவை.
இவற்றிற்கு அடுத்து இருப்பது நார்ப்பொருள் அதிகமாக உள்ள காய்கறிகளும், பழவகைகளும் கொண்ட அடுக்கு ஆகும். அவை இரண்டும் மட்டுமே ஒருவரது உணவின் பெருப் பகுதியாக இருக்க வேண்டும்.
மீன், இறைச்சி. பால், மீன் வகைகள் 15 சதவிகிதம் இருக்கலாம்.
எண்ணெய், பட்டர் ஏனைய கொழுப்புகள், கேக், ஐஸ்கிறீம் அடங்கிய பகுதியானது கூம்பகத்தின் உச்சியில் உள்ளது.
இவற்றை மிகக் குறைவாகவே உட்கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைய நாகரீக உணவு முறையில் இது தலைகீழாக மாறிவிட்டமையே நீரிழிவு. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், அதீத எடை ஆகிய பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுவதற்குக் காரணமாகும்.
ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். உடல்நலத்திற்கு உதவக் கூடிய வாழ்க்கை முறைகளை உங்கள் இளவயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.
பாலியல் மற்றும் இனவிருத்தி அறிவை வளர்த்துக் கொள்ளல்
குழந்தைப் பருவத்திலிருந்து கட்டிளம் பருவத்திற்கு மாறும் போது உங்களது உடலிலே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது. தட்டையான மார்பில் மார்பகங்கள் உருண்டு திரள்கின்றன. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது. முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள். 
ஆண்களில் வேறுவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் வளர்கிறது. குரல் தடிப்படைகிறது. மீசை அரும்புகிறது. ஏனைய இடங்களிலும் முடி வளர்ச்சி ஏற்படுகிறது. 9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது. ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான்.
அவை உடல் ரீதியான மாற்றங்கள்.
ஆனால் அதற்கு மேலாக உணர்வுகள் தீட்சண்யம் அடைகின்றன. எதிர் பாலினரைக் காணும்போது உள்ளத்தில் ஏதோ ஒரு உணர்வு பெருக்கெடுக்கிறது. சிலரைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்குகிறது. உள்ளத்து உணர்வுகள் பாலுறுப்புகளுக்கும் தாவும். ஆண் பிள்ளைகளில் உறுப்பு வீறு கொண்டு எழுந்து நிற்கிறது. அதை அடக்கி வைக்க இறுக்கமான உள்ளாடைகள் தேவைப்படுகின்றன.
பெண் பிள்ளைகளிலும் உணர்வுகள் எழவே செய்கின்றன. ஆனால் அடக்கமானவை. வெளியே பெருமளவு தெரிவதில்லை. உள்ளத்து உணர்வுகளை முகம் மறைக்க முனையும். மற்றவர்களுக்கு மறைத்துவிடலாம். அவளது உறுப்பு சற்று ஈரலிப்பாகும். சில வேளைகளில் வெள்ளை போலப்பட்டு உள்ளாடை நனைந்து விடலாம்.
ஆணாயினும் பெண்ணாயினும் உள்ளம் குதூகலிக்கும். உடல் சிலிர்க்கும். முகத்தில் வியர்வை அரும்பவும் செய்யலாம். விரும்பியவரது நினைவு அருட்டும். இரவு படுக்கப் போகும்போதும் நினைவு கிளறும். கனவுகளும் வரலாம். இத்தகைய எதிர்பாலினர் மீதான ஈர்ப்பு இயல்பானது. பாலியல் ரீதியானது.
முழுமையான பாலுணர்வும் வேட்கையும் வர மேலும் சிலகாலம் செல்லலாம்.
பாலியல் கல்வி
இவை போன்றவற்றையும், உடல் உறுப்புகளின் அமைப்பு அவற்றின் வளரச்சி, இனப்பெருக்கத்தில் அவற்றின் பங்கு ஆகியன பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெற வேண்டும். உண்மையில் இவை பற்றி எமது கல்வித் திட்டத்தில் இருந்தாலும் அவை போதிக்கப்படாமை மிக முக்கிய குறைபாடாகும்.
இவை பற்றி சுயமாக நீங்கள் கற்பதற்கு ஏதுவான நல்ல நூல்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். பெற்றோர்களும் சொல்லித் தருவதில்லை.
ஏனெனில் எமது கலாசாரத்தில் இவை பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் இருக்கிறது. அது தவறானது. பெற்றோர் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும்.
இது நடைபெறாததால் அவை பற்றி அறிய நீங்கள் படிக்கப் புகும் பெரும்பாலான புத்தகங்களும் இணையத் தளங்களும் ஆபாசமானவை. வெறுமனே பாலியல் உணர்வுகளைக் கிளறுபவைகளே அன்றி அறிவு விருத்தியை நோக்கமாகக் கொண்டவை அல்ல.
எனவே பாலுறுப்புகள், இனப்பெருக்கம், பால் உறவு, கட்டிளம் பருவத்து உணர்வுகள் அவை பற்றிய விளக்கங்கள் போன்றவற்றை பதின்ம வயதினரும் கட்டிளம் பருவத்தினரும் இலகுவாகப் பெறக் கூடிய வசதி வாய்ப்புகள் வளர்க்கப்பட வேண்டும். இவை சமூக, தேசிய, அரசாங்க மட்டங்களில் பரவலாக மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பான பாலுறவு பற்றிய தெளிவு அவர்களுக்கு இலகுவில் கிட்ட உதவுவது அவசியம்.
தவறான நடவடிக்கைகள் அவற்றிற்கான தீர்வுகளும்.
மேற் கூறியவை கிட்டாத காரணத்தால் தவறான பாலியல் நடவடிக்கைகளில் இளவயதினர் பலரும் அறியாமையால் ஈடுபட நேர்கிறது.
இதனால் சிபிலிஸ், கொனரியா, கிளமிடா. ஹேர்பிஸ், வைரஸ் வோர்ட்ஸ் முதல் எயிட்ஸ் வரையான பாலியல் தொற்றக் கூடிய அபாயம் உண்டு. இவற்றில் ஹேர்பிஸ், வைரஸ் வோர்ட்ஸ்,; எயிட்ஸ் போன்ற சில முழுமையாக குணப்படுத்த முடியாதவை. கட்டுப்பாடிற்குள் மட்டும் வைத்திருக்கக் கூடியவை. இதனால் வாழ்நாள் முழுவதும் தொல்லை கொடுக்கக் கூடியன.
ஆனால் வேறு சில முற்றாகக் குணப்படுத்தக் கூடியன.
இளமைத் துடிப்பில் தவறான பாலுறவு கொண்ட பின் தனக்கு ஆபத்தான நோய்கள் தொற்றியிருக்குமா என அஞ்சி மருத்துவர்களை நாடுபவர்கள் பலர். அத்தகைய நோயோடு தொடர்பில்லாத வேறு பல அறிகுறிகளோடு அவற்றை வெளியே சொல்ல முடியாது மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள் மேலும் பலர். தகுதியான மருத்துவரைச் சந்தித்து வெளிப்படையாகப் பேசி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பழகுதல் வேண்டும்.
வீணாகக் காலத்தைக் கடத்துவதால் நோயின் தீவிரம் அதிகரிக்கும். ஆனால் பாதகமான நோய்கள் இல்லாவிட்டால் வீணான மனஉளைச்சலால் துன்பப்படுவதே மிச்சம்.
இளமைப் பருவத்தினர் கிளினிக்குகள்
கார்ப்பணிகளுக்கு, தாய்மாருக்கு. குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனித்தனியான மருத்துவ கிளினிக்கள் உண்டு. இவை அவர்களுக்கு அரும் பணியாற்றி வருகின்றன. நோய் தீர்ப்பது மட்டுமின்றி வருமுன் காக்கவும் செய்கின்றன.
அதேபோல இளமைப் பருவத்தினருக்கு என்று தனியாக விசேட கிளினிக்குகள் (Adolcent Clinic) அமைப்பது நல்லது எனக் கருதுகிறேன். பாலியல் நோய்களுக்கு என விசேட கிளினிக்குகள் இருக்கின்றனவே அவற்றைப் பயன்படுத்தலாம் எனச் சிலர் சொல்லக் கூடும்.
உண்மைதான். ஆனால் அங்கு சென்றாலே தங்களுக்கு சமூகத்தால் கறுப்பு முத்திரை குத்தப்பட்டுவிடும் என தயங்குபவர்களின் உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பாலியல் அத்துமீறல்கள் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள்
இளமைப் பருவத்தினரின் பாலியல் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அதே நேரம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். அதற்கான விசேட சட்டங்களை கொண்டு வருவதும் விரும்பத்தக்கது.
வீதிகளில் நின்று பெண்களுக்கு தொல்லை கொடுப்போர், பாலியல் ரீதியான சேஷ்டைகளில் ஈடுபடுவோர் இடத்தில் கருணை கூடாது. சட்டம் தன் கையை வலுப்படுத்துவதுடன் செயலிலும் இறங்குவது அவசியம்.
கருச்சிதைவு சட்டமாக்கப்படுவது அவசியம்
அறியாமையால், அல்லது எதிர்பாராமல், அல்லது பாலியில் வன்முறை மூலம் ஒரு பெண் கரப்பமாகிவிட்டால் அத்தகையவர்களுக்கு எமது சமூகமும் அரசாங்கமும் என்ன பாதையைக் காட்டுகிறது? இது சட்டத்திற்கு முரணானது என்று சொல்லிக் கண்ணை மூடிக் கொள்கிறது.
எமது நாட்டுச் சட்டப்படி கருச்சிதைவு செய்வது குற்றம். ஒரு பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இரு மருத்துவர்கள் அத்தாட்சிப்படுத்தினால் மட்டுமே செய்ய முடியும்.
தவறுதலாலோ வன்முறையாலோ ஒரு பெண் தனது விருப்பத்திற்கு மாறாகக் கர்ப்பமானால் அவளால் அவள் அந்தக் கருவுடன் சமூகத்தின் கேலிக்கும் அவதூறுக்கும் ஆட்பட வேண்டியதுதான். அவமானத்துடன் வாழ வேண்டும். அல்லது தற்கொலை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படும். அவளது எதிர்காலம் பாழாகுகிறது.
இல்லையேல் சுகாதார முறைப்படி நடக்காத போலி வைத்தியர்களின் கிளினிக்குகளில் கருச்சிதைவு செய்து கொள்ள நேரிடும். இத்தகைய இடங்களில் அனுபவமும், கல்வியறிவும் இல்லாத மருத்துவர்களால் செய்யப்படும்; கருச்சிதைவுகளில் பல பெண்கள் நாளாந்தம் உயிரிழக்கிறார்கள் என்பதை பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
இந்தியா உட்பட கலாசார பாரம்பரியம் அதிகமுள்ள நாடுகள் பலவும் கருச்சிதைவை சட்டபூர்வமாக்கிய பின்னரும் ஆசாட பூதிகளாக நாங்கள் கண் மூடித் தியானத்தில் இருக்கிறோம். எமது கலாசார மேன்மைகளைப் பாதுகாப்பதாக வேசமிடுகிறோம். நாடகமாடுகிறோம். சமூகத்திற்கு பயன்தரக் கூடிய பல இளம் உயிர்களை சட்டத்தின் பேரால் பலியிடுகிறோம்.
அர்த்தமற்ற உயிர் இழப்புகளைத் தவிர்க்க வேண்டுமாயின் கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். அல்லது அது தொடர்பான சட்டங்களில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பது அவசியம்.
உளநலம்
பள்ளிப்பருவத்திலும் பதின்ம வயதுகளிலும் பல்வேறுவிதமான உளநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதை மருத்துவர்களாலும், அவர்களோடு அதிகம் பழகும் ஆசிரியர்களாலும் அவதானிக்க முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
1.    முக்கிய காரணம் குடும்ப அன்னியோன்யம் குறைந்து வருவதாகும். பெற்றோர்;கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூட்டுக் குடும்பமுறை சிதைவுறுவதால் உதவிக்கு பாட்டன் பாட்டி இல்லாமல் போவதால் குழந்தைகளின் மீதான அக்கறையும் அவதானிப்பும் நேச உணர்வும்; குறைந்து போகிறது.
2.    ஆனால் அதே நேரம் கல்வி ரீதியாக பிள்ளைகளிடமிருந்து உயர் பெறுபேறுகள் பெற்றோரால் எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றிற்கு ஈடு கொடுக்க முடியாத பிள்ளைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர் பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, முரட்டுத்தன்மை, தவாறான பழக்கங்கள் போன்ற நடத்தைப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். தவறான உணவு முறைகளைப் பழகிக் கொள்கிறார்கள்.
அதனால் மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பலரும் ஆளாகிறார்கள். தவறான பாலியல் பழக்கங்களுக்கும் ஆளாகி நோய்களைத் தேடும் அபாயமும் ஏற்படுகிறது. போதைப் பொருள் பாவனையும் இதன் நீட்சியே ஆகும்.
எனவே பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் சமூக நிலைகளில் இளம் வயதினர் உளவியல் பாதிப்புக்கு ஆளாகுமிடத்து அதனை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து நெறிப்படுத்துவது அவசியம். இதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றோர் ஆசிரியர்களிடத்து வளர்ப்பது அவசியமாகிறது. மேலதிகமாக இது சம்பந்தமாக தொழில் ரீதியான மருத்துவ பணியாளர்களை பயிற்றுவித்து சேவையில் ஈடு;படுத்துவது அவசியம்.
தேவையானவர்களுக்கு உளவளத்துணை, அறிவார்ந்த நடத்தை முறை மாற்றங்களுக்கான சிகிச்சை முறைகள் போன்றவை அவர்களுடாக இலகுவில் கிட்டும்படி செய்யலாம்.
போதைப் பொருள் பாவனை
மேற் கூறிய பல்வேறு காரணங்களால் இளம் பராயத்தினர் பலரும் மது, புகைத்தல் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையில் இறங்கி போலிச் சுகம் காண முயல்கிறார்கள். ‘ஒருக்கால் பாவித்துப் பார்ப்பம்’ என இவற்றில் விளையாட்டாக இறங்கிவிட்டால் கூட மீள்வது கடினமாகும். ‘சும்மா குடிச்சுப் பாரடா’ என நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டாகப் பரீட்சிக்கும் உங்கள் செயல் மீளாக் குளியில் தள்ளிவிடும் என்பதை மறக்கக் கூடாது.
மற்றவர்கள் முகத்திற்காக அவர்களது வேண்டுதலுக்காக இவற்றில் இறங்க வேண்டாம். ‘மாட்டேன், வேண்டாம்’ என முகத்திற்கு நேரே மறுக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்வது இளம் பராயத்தில் அவசியம். இதற்கான பயிற்சி பெற்றொர்களிடமிருந்துதான் வரவேண்டும்.
மது, போதைப் பொருட்கள், சிகரட் போன்றவை எங்கும் கேள்வியின்றி விற்பனையாவது ஆபத்தானதாகும். முக்கியமாக இளம் வயதினருக்கு அவ்வாறு கிட்டவிடக் கூடாது. சட்டங்களால் மட்டும் இவற்றை அமுல் படுத்த முடியாது. சமூகத்தில் இவற்றிக்கு எதிரான உணர்வு வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ரேடியோ, ரீவீ, இணையம் போன்றவை ஊடாக வழிகாட்டலாம்.
இதற்கு மகிழ்ச்சியான குடும்பச் சூழலும், முதியவர்களின் வழிகாட்டலும் துணைநிற்கும். புகைத்துக் கொண்டிருக்கும் அல்லது போதையில் மிதக்கும் அப்பனால் குழந்தைக்கு நல்லவற்றைப் போதிக்க முடியாது.
சட்டங்களாலும் கட்டாயப்படுத்தலாலும் செய்ய முடியாதவற்றை புரிந்துணர்வுள்ள அணுகுமுறை மூலம் செய்ய முடியும்.
சும்மா இருத்தல்
செயலின்றிய மனம் சாத்தானின் வீடு என்பார்கள். அதிலும் முக்கியமாக உடலிலும் உள்ளத்திலும் சக்தி வெள்ளமாகப் பாயும் இளமைப் பருவத்தில் வாழா இருப்பதைப் போல மோசமான செயல் எதுவும் இருக்காது.
“தம்பி என்ன செய்யிறார்” என விசாரித்தால், அவன் மறுமொழி சொல்ல முன் தகப்பன் அல்லது தாய்
“அவனுக்கு என்ன கொஞ்ச நாளில் வெளிநாட்டுக்குப் போகப் போறான்” என்பார்கள்.
எமது சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு இந்த வெளிநாட்டு மோகம்தான். பல இளைஞர்களும் யுவதிகளும் வெளிநாடு போகும் கனவுகளுடன் சும்;மா இருக்கிறார்கள்
சும்மா இருத்தலால் சாத்தான்கள் குடி கொள்கிறார்கள். உடல் ஆரோக்கியம் நலிகிறது, வேலை செய்யாமல் சோம்பேறிகள் ஆகிறார்கள். உள்ளுரில் இருக்கும் பெற்றோரினதும், வெளிநாட்டில் கூப்பிட இருக்கும் உறவினரதும் பணம் விரயமாகிறது. நீண்ட நாட்கள் செல்வதால் மனம் சோர்க்கிறது. போதைப் பழக்கங்கள் நெருங்கி வருகின்றன. எதற்கும் உதவாதவர்கள் ஆகி மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாகிறார்கள்.
இங்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அல்லது கல்வி இருக்கிறது. பட்டப்படிப்புகள் மட்டுமின்றி தொழிற் கல்விகளும் இருக்கின்றன. அவற்றில் பயிற்சி பெறுவது எதிர்காலத்தில் உதவும் அல்லவா? வெறும் கனவுகளுடன் வாழ்வதைவிட ஏதாவது வேலை பாரப்பது உடல் உள்ளம் பொருளாதாரம் அனைத்திற்கும் நல்லது.
அரசியல் ரீதியாக, ‘இது எங்களது நாடும் கூட’ என தமிழ் இளைஞர்களை எண்ண வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. கடந்தகால அரசியலாலும், போரினாலும், அதீத தமிழ்தேசிய உணர்வாலும் தாம் வேண்டப்படாதவர்கள் என்ற உணர்வு அவர்களில் விதைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கான விசேட தொழில்முறைக் கல்விகள், வேலைவாய்ப்புகள், சுயதொழில் ஊக்குவிப்பு போன்றவை செயற்பட வேண்டும்.
வன்முறையை நிராகரியுங்கள்.
சும்மா இருப்பது வன்முறைக்கும் இட்டுச் செல்கிறது. அதேநேரம் சரியான வாழ்க்கை நெறிமுறைகளை புரிந்து கொள்ளாததும், பரந்த சமூக அக்கறை இல்லாமையும், நான் என்ற அகந்தையும் காரணங்களாகின்றன.
நான், எனது சுகம், எனது மகிழ்ச்சி, எனது குடும்பம் என்பதற்கு அப்பாலும் சிந்திப்பது இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். மாறாக எமது சமூகம் எமது நாடு எனச் சிந்தனைகள் விரிந்தால், மற்றவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டால் வன்முறை உணர்வு ஏற்படாது.
தெருவில் நின்று பெண்களுக்கம் மற்றவர்களுக்கும் கொமன்ட் அடித்தும், சில்மிசங்கள் செய்வதைக் கைவிடுவதற்கு சமூகம் பற்றிய உணர்வு கைகொடுக்கும். இல்லையேல் சில்லறை அடிபிடி என ஆரம்பித்து பேட்டை ரவுடி, கொள்ளை கடத்தல் என விரிய ஆரம்பிக்கும்.
போரும் இனரீதியான ஒடுக்கு முறைகளும் எம்மிடமிருந்த நல்ல பல விழுமியங்களை அழித்துவிட்டன. வன்முறையால் எதற்கும் தீர்வு காணலாம் என்ற உணர்வு பலரிடம் குடி கொண்டுவிட்டது.
இது தவறு வன்முறையை நிராகரித்து எதனையும் பேசி இணக்கப்பாடு காணும் பாதையை தேர்ந்து எடுக்க வேண்டும். பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய அறிவு ஒவ்வொருவர்க்கும் தேவை.
பிரச்சனை என்பது வீட்டுப் பிரச்சனையாக இருக்கலாம், வெளியே காதல் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் சிக்கல்களாக இருக்கலாம். அல்லது கோயில், வாசிகசாலை போன்ற பொது இடங்களில் ஏற்படும் சங்கடங்களாக இருக்கலாம்.
எதையும் திறந்த மனத்தோடும் விட்டுக் கொடுப்புகளுடனும் செய்து சுமுகமாக தீர்வு காண்பதற்கான பயிற்சியை கல்வி மட்டுமின்றி ஆன்மீக ஸ்தாபனங்களும் செய்ய முடியும்.
எனவே காத்திருக்கும் எதிர்காலத்தை ஒளிமயமாகவும், பொன்விளைவதாகவும், மகிழ்ச்சி நிறைவதாகவும் ஆக்க முயலுங்கள். அதற்கு ஏற்றவகையில் உங்கள் உடலையும் உள்ளத்தையும் நலமாகப் பேணுங்கள்.
நாளைய உலகம் உங்கள் கையில் உங்களுக்காக மட்டுமல்ல முழு உலகத்திற்காகவும்.
எனது இக் கட்டுரை ஆறுதல் சஞ்சிகையிலும், பதிவுகள் இணையத் தளத்திலும் வெளியாகியுள்ளது.


எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0

Read Full Post »