>
பாடசாலையின் பிரதான வளாகத்தின் தெற்குப் புறமாக இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் காலையில் சிலையைப் பார்த்தபடி காலைத் துதி செய்யும்போது முற்றுக் கொற்றாவத்தை பிள்ளையார் கோவில் ஆலயமும் அத் திசையிலேயே பார்வைக்கு எட்டிய தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் நினைவாக இச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினர்அதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.
அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இச் சிலை திறப்பு விழாவின்போது பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் மகளான திருமதி.மீனலோசனி மற்றும் மருமகன் திரு. தம்பிராசா ஆகியோர் கலந்து சிறப்பித்து, திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இச் சிலையை தம்பசிட்டியைச் சார்ந்த கலாபூசணம்.கோ.வேலுப்பிள்ளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
மற்றச் சரஸ்வதி சிலையானது பாடசாலையின் சிறிய வளாகத்தின் மேற்குப் புறமாக கிணற்றடிக்கு அருகில் இரு மண்டபங்களுக்கும் இடையே உள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
எமது பாடசாலையின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவரான அமரர்.வை.கா.சிவப்பிரகாசம் (முன்னாள் அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) அவர்களது ஞாபகார்த்தமாக அவரது மகன் திரு.வை.கா.சி.முகுந்தன் அவர்களது நிதியுதவில் அமைக்கப்பட்டுள்ளது. இது பாடசாலை உபஅதிபர் கணநாதன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை அமரர் வை.கா.சிவப்பிரகாசம்அவர்களது இளைய சகோதரரான திரு.வை.கா.இராமச்சந்திரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சார்பாக திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
![]() |
பாலர் வளாகத்தில் உள்ள சிலையை தென்னிந்தியாவைச் சார்ந்த சிற்பக் கலைஞர்கள் வடிவமைத்துக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு சிலைகளுமே மிக அழகாக கலைஅம்சம் நிறைந்தனவாக அமைந்தமை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. அவற்றில் உள்ள தெய்வீகக் களை மாணவர்கள் தம் மனத்தை ஒருமனப்படுத்தி, கற்கைச் செயற்பாட்டில் ஈடுபட வைக்கும் என நம்பலாம்.
இரண்டு சரஸ்வதி சிலைகளையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது பிரதான வளாகத்து சிலையானது எமது பாரம்பரிய சிற்பக் கலையை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாக என் மனத்தில் பட்டது.
பாலர் வளாகத்துச் சிலை அழகில் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. இது நவீன சிறப்பக்கலையி்ன் நுணுக்கங்களை உள்வாங்கிப் படைக்கப்பட்டதாக மனதில் படுகிறது.
எவ்வாறாயினும் எமது பாடசாலை மாணவர்களின் நீண்ட காலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது.
இச்சிலை நிறுவுவதற்கான முயற்சிகளை எடுத்த அதிபர்.திரு.மு.கனகலிங்கம், முழு ஒத்துழைப்பு வழங்கிய உப அதிபர் திரு கணநாதன், மற்றும் ஆசிரியர்களுக்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இதற்கான நிதியுதவையை அளித்து, எமது பாடசாலை மாணவர்களின் கனவை நனவாக்கிய அமரர்களான பத்மநாதன். இராஜலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தினருக்கும், அமரர்.வை.கா.சிவப்பிரகாசம்குடும்பத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
மற்றும் சிலைகளை வடிவமைத்த சிற்பிகள், விழாவில் கலந்து கொண்ட பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்