Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2011

மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உயிரைப் பறிப்பது  மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.

பாலஸ்தீனர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மிகுதி மண்ணில் அடையாள அட்டை, வேலை செய்வதற்குப் பாஸ், இஸ்ரேலியர்களை எதிர்த்துப் பேசினால் கடும் தண்டனை எனக் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள். இந்த நிலையை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். பலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றியும், இனவெறி பிடித்த இஸ்ரேலிய அரசின் வெறித்தனமான செயற்பாடுகளையும், அதற்குத் துணை போகும் மேலைத் தேச அரசுகள் எனப் பலதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆயினும் றீமிக்சிங் செய்யும் ஊடக ஒலிகளுக்கு அப்பால், அங்கு வாழும் சாதாரண மக்களின் குரலை இயல்பாகக் கேட்டது அரிது. நான்கு பெண்களின் வாழ்வின் நாதமாக, போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் குரல் இத் திரைப்படத்தில் ஒலிக்கிறது. ஆனால் அந்த நான்கு குரல்களும் ஒரே லயமானவை அல்ல. சுரதிபேதம் கொண்டவை. அவர்களது பார்வைகள் ஒரே விதமான பார்வைகள் அல்ல. வௌ;வேறு கோணங்களில் தெறிக்கும் பார்வைகள். ஒரே அடிப்படைப் பிரச்சனையை, வஞ்சிக்கப்பட்ட அந்த ஒரே வாழ்வை நால்வரும் அனுபவித்தாலும் அவர்களது எண்ணம், எதிர்பார்ப்புகள், எல்லாம் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.

மிரால் என்ற இச் சினிமா அமெரிக்க தயாரிப்பாளரால், அமெரிக்க நெறியாளர் ஊடாக அமெரிக்க சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது. இருந்தபோதும் ரூலா ஜெப்ரியல் என்ற பெண்ணினது சுயசரிதை நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் பலாஸ்தீனக் குரல் அடிநாதமாக ஒலித்தபடியிருப்பதைத் தடுக்க முடியவில்லை எனலாம். ஆங்கிலப்படம். ஆயினும் இடையிடையே அரபி மொழி கலந்திருக்கிறது. முக்கியமாக அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்போது. இதனால் ஆங்கில உபதலைப்பின்றியும் புரிவதில் சிரமமிருக்கவில்லை.

படத்தின் பிரதான பாத்திரம் மிரால் என்ற இன்றையப் பெண். இவள் வாழ்வே படத்தின் முக்கிய பகுதி. இவளது வாழ்க்கைப் பாதையைச் செதுக்குவதில் ஏதொவொரு வழியில் உதவியவர்கள் ஏனைய மூவருமாகும். பிரதான பாத்திரம் திரையில் வருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட படத்தின் மூன்றில் ஒரு பகுதி ஓடி முடிந்துவிடுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனையை ஓரளவு புரிந்து கொள்ள இது அவசியம்தான். ஆனாலும் கருவின் மையத்துள் நுளைவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது சற்றுச் சோர்வு அளிக்கிறது. அத்துடன் ஆரம்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வதில் சற்று சிக்கல் இருந்தது. வேறு விதமாக எடிட் பண்ணியிருக்க முடியாதா என எண்ணத் தோன்றுகிறது.

முதல் பெண் ஹின்ட் ஹீசெனி. இவள் முதலாமவள். பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அறிமுகமாகிறாள். இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரில் அனாதைகளான, வாழ வழியில்லாத மக்களின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து, கல்வியூட்டி நல்ல பிரஜைகளாக்குவதற்காக தனது சொந்த வீட்டையே பள்ளியாக்குகிறாள். அது Tifl Al-Arabi Institute என்ற பெயரோடு அரசியல் சாயல் படியாத மனிதாபிமான கல்வி நிறுவனமாகத் தொண்டாற்றுகிறது.

இரண்டாமவள் நடியா. இவள்தான் மிராலின் தாய் ஆகும். பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டவள். ஒரு இஸ்ரேலியப் பெண்ணை பஸ்சில் வைத்து அடித்தற்காகச் சிறை செல்கிறாள். அங்கு மூன்றாமவளான பற்றிமாவைச் சந்திக்க்pறாள். பற்றிமா இஸ்ரேலியரின் அடாவடித்தனமான நடவடிக்கைளில் கோபமும், இன உணர்வும் தாய் நாட்டில் பற்றும், கொண்ட பெண். தீவிரவாதி எனலாம். இஸ்ரேலியர்கள் சினிமா பார்க்கும் அரங்கில் வெடி குண்டு வைத்ததால் அகப்பட்டுச் சிறை செல்கிறாள். சிறையில் இருவரும் அறிமுகமாகிறார்கள்.

நான்கு பெண்களின் கதையாக இருந்தபோதும் ஹின்ட் ஹீசெனி, அவளது பள்ளிக்கூடம், அவளது நம்பிக்கைகள் என்ற அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட மாளிகையாக சினிமா அமைகிறது. மாளிகையாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான மிராலின் வாழ்க்கை.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினரின் மூர்க்கத்தனமும், எதேச்சிகார நடவடிக்கைகளும், அடாவடித்தனங்களும் கோபப்பட வைக்கின்றன. தமது வீட்டில் வாழ்ந்தவர்களை ஒரு சிலநிமிட அறிவித்தலுடன் வெளியேற்றி வீதியில் கலைத்துவிட்டு அவர்களது வீட்டை பாரிய இயந்திரங்களால் நிர்மூலமாக்கும் காட்சி மனதைக் குடைகிறது. மனதில் இயலாமையும் கோபமும் கொப்பளிக்க எதுவும் செய்ய முடியாது ஏக்கத்திடன் பார்த்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. வீதியில் நின்று கல்லெறிந்து தமது எதிர்ப்பைக் காட்டும் சாமானியர்கள் துப்பாக்கி குண்டுகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

மற்றொரு காட்சியில் பற்றிமாவுக்கு ஆயுற்காலச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. குண்டு வைத்ததற்காக இரண்டு, இஸ்ரேலிய நீதிபதிக்கு முன் எழுந்து நின்று மரியாதை செய்யாததற்காக மூன்றாவது. சட்டமும், நீதியும் கூட எதேச்சிகார ஆட்சிகளுக்கு  முண்டுக் கொடுப்பதற்காக பாகுபாடு காட்டுகின்றன. ஈவிரக்கமின்றியும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கின்றன. இவை வெறுக்க வைத்தாலும், நாம் அறியாதது அல்ல.

மிராலின் அன்புக்குரியவன் பாதையால் செல்லும்போது சடுதியாக பாதுகாப்புச் சாவடியுள் இழுத்து ஓசையின்றி கொன்று முடிக்கிறார்கள். அவன் குற்றவாளியாக இருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கைது செய்தல், விசாரணை, நீதிமன்றம், வழக்கு என எதுவும் இல்லாது மறைவாகக் கொன்று தடயமின்றி அழிக்கப்படுகிறான். பல வருடங்களின் பின் புதைகுழியிலிருந்து மீட்கப்படக் கூடிய இனங்காணப்படாத உடலின் எச்சங்களில் இவனதும் அடங்கியிருக்கலாம்.

இனவாத அரசுகள் இவ்வாறுதான் தமது இராணுவங்களுக்கு புனிதக் கடமையெனப் பெயர் சூட்டி அளப்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. தட்டிக்கேட்க யாருமில்லை.

ஆனால் அதே நேரம் விடுதலை இயக்கங்கள் இனவிடுதலை என்ற பெயரில் தமது மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்கின்றன. பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லுதல் ஆட்கடத்தல் என பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றன. தாம் செய்யும் ஜனநாயக விரோத, தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என நம்ப வைக்கும் செயற்பாடுகளில் முனைகின்றன.

முரணான இந்த இரு பக்கங்களையும் இத் திரைப்படம் காட்சிப்படுத்த முனைகின்றது. அதனால் இஸ்ரேல் சார்பான அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் இது பலஸ்தீனக் குரலாக மட்டுமே ஒலிக்கிறது. பக்க சார்பானது எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பாலஸ்தீன பக்கம் சார்பானவர்கள் இது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என கோபப்படுகின்றனர்.

அன்பு, அமைதி, விட்டு;கொடுத்தல், கல்வியால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என்ற நம்பிக்கைளின் சின்னமாக ஹின்ட் ஹீசெனி இருக்கிறாள். நடியா பாதிக்கப்பட்ட அபலையாக இருக்கிறாள். பற்றீமா விட்டுக் கொடுக்காத முரட்டுப் போராட்டத்தை நாடுகிறாள். இவர்களுக்கிடையே வந்த புதிய பரம்பரையின் சின்னமான மிரால் வருகிறாள். அவள் தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? அதைத்தான் இப்படம் பேசுகிறது.

பாலஸ்தீனியப் போராளியான ஹனி, மிராலின் மனத்தில் இடம் பிடிக்கிறான். ஹனி மீதான ஈர்ப்பும், பாலஸ்தீனியப் விடுதலை இயக்கம் மீதான பற்று ஒரு புறமும் கல்வி, சச்சரவற்ற எதிர்காலம், தகப்பன் மேலோன அன்பு ஆகியவை மறுபுறமும் அலைக்கழிக்கின்றன. போதாக்குறைக்கு சந்தேகத்தின் மேல் கைது செய்யப்பட்டு கடுமையான விசாரணைக்கு ஆட்படுகிறாள். மிருதுவான அவளது முதுகுப்புறம் புண்படுமாறு அடிவாங்குகிறாள்.

ஒருவாறு விடுபட்டு வெளிவந்தபோது அவளது அன்புக்குரியவனே அவள் மீது சந்தேகப்படகிறான். காட்டிக் கொடுத்தவள் எனக் குற்றம் சாட்டுகிறான். குற்றம் செய்யாத அவள் மனம் துய்ந்து போகிறது. விடுதலை இயக்கம் மீதான முரட்டுப் பற்றுதலால் தமது அன்புக்குரியவர்களையே சந்தேகிக்கும், கொலையும் செய்யத் துணிந்த மனிதர்களைக் கண்ட எமக்கு இது ஆச்சரியமானதல்ல, ஆயினும் மனம் நோகிறது.

மிராலின் தகப்பனாக வரும் ஜமால் அற்புதமான பாத்திரம். Siddig கின் மிகையில்லாத நடிப்பில் சாதாரண அப்பனின் மனநிலையை உணரமுடிகிறது. தீவிரவாத இயக்கங்களிலிருந்து தனது மகளை காப்பாற்றி நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற தந்தையின் பாத்திரத்தை அழகாகச் செய்கிறார். மனத்தில் நிலைக்கிறார்.

படத்தை நெறியாழ்கை செய்திருப்பவர் Julian Schnabel ஆகும். ஏற்கனவே Before Night Falls, The Diving Bell and the Butterfly போன்ற சினிமாக்கள் மூலமாகக் கவனிப்பைப் பெற்றவராவார்.

Slumdog Millonaire Gfo; Fredia Pinto  புகழ் ; Fredia Pinto பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஆயினும் அவரது உருவம் அரபுப் பெண்கள் போலாக இல்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கமெரா Eric Gautier பல காட்சிகள் மனதை அப்பிக் கொள்கின்றன.

இலங்கையில் திரையிடப்படவில்லை. படம் டிவீடியில் கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள். எமது வாழ்வுடனான ஒற்றுமை வேற்றுமைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.

ஞானம் சஞ்சிகையிலும், பதிவுகள் ( http://www.geotamil.com/pathivukalnew/) இணைய இதழிலும் வெளியான எனது கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

தியானம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையோடு இணைந்தது. புராணங்களில் நாம் அறிந்த ஞானிகளும் முனிவர்களும் இவற்றைக் கடைப்பிடித்து ஆன்மீக உச்சங்களை எட்டியுள்ளார்கள்.

அவர்கள் மட்டுமின்றி இன்றைய சாமிகளும் ஆசாமிகளும் கூட இவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். தொடர்ந்து செய்யும்படி ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். பல ஆன்மீக நிறுவனங்கள் இலவச தியான வகுப்புகளை நடத்தவும் செய்கின்றன.

கீழைத்தேய வாழ்வியலோடு கூடிய தியானம் இப்பொழுது மேலை நாடுகளிலும் பிரபலமாகிவிட்டது.

அமெரிக்க அரசின் ஆதரவோடு 2007ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9.4 சதவிகிதமானோர் அதற்கு முந்தைய ஒரு வருட காலப்பகுதியில் தியானம் செய்திருப்பது தெரியவந்தது.

தியானங்கள் பல வகைப்படும். ஆயினும் அவற்றின் அடிப்படை நோக்கமானது ஒன்றுதான். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளரச் செய்து உளவியல் ரீதியான சமநிலை நோக்கி முன்னேறுவதுதான். பொதுவாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோய்களிலிருந்து விடுபட்டு நல்லாரோக்கியமான நிலையை அடைவதற்கான முயற்சியாகக் கொள்ளலாம்.

அடிப்படைத் தேவைகள்

தியானம் செய்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன?

முக்கியமாக அமைதியான சூழல் தேவை. புறச் சூழலுக்கள் எம்மை ஈர்த்துவிடும் புலன்கள் ஐந்து ஆகும். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றை ஐம்புலன்கள் என்றார்கள். இவற்றால் எமது சிந்தனைகள் திசைமாறச் செய்யாத அமைதியான இடம் தேவை.

அமைதியான சூழல் தேவை

தியானம் செய்யும்போது எமது உடல் சௌகர்யமாக இருக்க வேண்டும்.

  • கால்களை மடக்கிப் பத்மாசனம் போட்டு, முதுகை நேர்கம்பமாக நிமிர்த்தி வைத்து, கையிரண்டையும் முழங்கால்கள் மேல் வைத்திருப்பது ஆன்றோர் வழி வந்த முறை. நின்றோ,
  • நடந்தோ, நிமிர்ந்தோ, படுத்தோ கூடத் தியானம் செய்யலாம். எவ்வாறாயினும் சௌகரியமாக இருந்தால் போதுமானது. ஆயினும் சொகுசு மிகுந்து தூங்காதிருந்தால் சரி!

 

முழுக் கவனமும் ஏதாவது ஒன்றில்

தியானம் இருக்கும்போது முழுக் கவனமும் ஏதாவது ஒன்றில் பதிந்திருக்க வேண்டும்.

  • ஒளியைத் தியானம் பண்ணுவர் சிலர்,
  • ஒரு மந்திரத்தில், அல்லது நாமத்தில் கவனத்தை விழுத்துவர் சிலர்.
  • தனக்குகந்த கடவுளின் உருவத்தில்
  • அல்லது உருவமில்லா உள்ளொளியில் அமைதி காண்பர் வேறு சிலர்.
  • தனது சுவாசத்தையே நினை பொருளாகக் கொள்வோரும் உண்டு.

மனைவியைத் சதாநேரமும் தியானம் பண்ணித் தாஜா செய்வது வேறு!

  • மனதைத் திறந்து வைத்திருத்தல் மற்றொரு முறையாகும். கவனத்தை திசை திருப்பும் விடயங்களை ஓர்மமாக ஒதுக்கித் தள்ளாமல் வருவதையும் போவதையும் இயல்பாக வந்துபோக விட்டுவிட்டு அதில் சிந்தனையை ஆழ்த்தாமல் திறந்த வெளியாக வைத்திருப்பதும் உண்டு.

நோய் தீர்க்க உதவுமா?

மனம் சார்ந்த நோய்கள்

ஒருவரது வாழ்வில் நெருக்கீடு அதிகரித்தால் அதனால் மனப் பதகளிப்பு, மனச்சோர்வு போன்றவற்றிற்கு அவர் ஆளாகலாம். இவை தூக்கக் குழப்பம், கோபம், எரிச்சல், மனத்திருப்தியின்மை ஆகியவற்றைக் கொண்டு வரலாம். இத்தகைய உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட தியானம் நிச்சயம் உதவும்.

உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட


உடல் சார்ந்த நோய்கள்

ஆனால் இவற்றைத் தவிர உடல் சார்ந்த நோய்களுக்கும் உதுவுமா? பல மருத்தவ ஆய்வுகள் உதவலாம் எனக் கோடி காட்டினாலும் தெளிவான முடிவுகள் கிடையாது என்றே சொல்ல வேண்டும்.

ஆயினும் பல உடல் சார்ந்த நோய்கள் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக

  • ஒவ்வாமைகள்,

போன்றவை பல்வேறு மனரீதியான தாக்கங்களையும் கொண்டு வருகின்றன. இவற்றின் தாக்கத்தைக் குறைக்க தியானம் நிச்சயம் உதவும்.

மூட்டு வலிகள், உடல் வலிகள்,தீர்க்க உதவுமா

ஆயினும் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வழமையான மருந்துகளுக்குப் பதிலாக தியானம் முழுமையாகக் கைகொடுக்காது. எனவே அத்தகைய நோய்களை தியானம் முற்றாகப் பூரணமாக்கும் என்ற எண்ணத்துடன் அவற்றைச் செய்ய வேண்டாம். நோய்க்கான மருத்துவத்தைத் தொடர வேண்டும். அதற்கு ஒத்தாசையாக தியானமும் உதவும்.

எவ்வாறு உதவுகிறது
  • எமக்கு ஏற்படுகிற நெருக்கீடுகள் பற்றி ஒரு முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதற்குத் துணை செய்யும்.
  • நெருகீட்டைச் சமாளிப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கான ஆற்றலை வளர்க்கிறது
  • தன்னை அறியும் (self-awareness) நிலையை அதிகரிக்கும்
  • மறை உணர்வுகளைக் (negative emotions) குறைக்கும் ஆற்றலை வளர்க்கும்
  • பல விடயங்களை மனதில் இட்டுக் குழப்பாமல் ஒன்றில் மாத்திரம் மனத்தைக் குவிக்க உதவும்.

எனவே தியானம் நிச்சயம் நோய்களின் தாக்கத்தைத் தணிப்பதில் உதவக் கூடிய ஒரு மாற்று முறை என்பதில் ஐயமில்லை. தியானத்தை ஆரம்பித்த உடனேயே பலன் கிடைக்கும் என எண்ணாதீர்கள். தொடர்ந்து பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

அத்துடன் இது ஒரு தினசரிக் கடமை எனவோ மேலதிக பாரமா என எண்ணாதீர்கள். அதை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்.

அது பலன் அளிக்கிறதா என நீங்களே முடிவு எடுக்க முயலாதீர்கள். திறந்த மனத்தோடு தொடருங்கள். காலத்திற்கு இடம் அளியுங்கள். நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உதவும்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

இலங்கைத் தமிழர்களின் அரசியலில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. காலத்திற்கு காலம் இதன் தாக்கம், வேகம் ஆகியன மாறுபட்டு வந்தாலும் அதன் முக்கியத்துவத்தை மறந்து விட முடியாது.

“இங்கு வாழும் மக்களின் இன்றைய நிலை புரியாமல் எமது நிகழ் வாழ்வில், எமது அரசியலில், எதிர்காலத்தில் தேவையில்லாமல் தலையிடுவதற்கு இவர்கள் யார் ?” என இவர்களது பங்களிப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எம்மிடையே இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் “இலங்கைத் தமிழ் அரசியலில் வெற்றிடமும், கையாலாகாத்தனமும் நிலவுகின்ற இன்றைய நிலையில் இவர்கள்தான் எம்மைக் காப்பாற்றப் போகிறவர்கள்” என நம்புகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இத்தகைய சூழலில் புலம் பெயர்ந்த தமிழர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன? பத்திரிகைகளிலும் இணையத்திலும் எழுதப்படுபவை எந்தளவிற்கு உண்மை நிலையைப் பிரதிபலிக்கின்றன என்ற கேள்வியும் எழுகின்றன. அங்கு வாழும் சாதாரண மக்களின் கருத்து என்ன?

இந்த நிலையில் இது பற்றிய ஒரு கருத்துரைக்காக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர் ஒருவரை அழைக்க இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் முன் வந்துள்ளது.

திரு.சிவா.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முன்பு தினகரன் பத்திரிகையில்பணியாற்றியவரும் தற்பொழுது புலம் பெயர்ந்து கனடா நாட்டில் வசிப்பவருமான திரு.எஸ்.மனோரஞ்சன் “புலம் பெயர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

எதிர்வரும் ஞாயிறு (24.07.2011) மாலை 4.30 மணிக்கு நடைபெறும்

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்
58,தர்மாராம வீதி
கொழும்பு 06.

கலந்துரையாடலும் இடம்பெறும்.
ஆர்வமுள்ள அனைவரையும்  கலந்து கொள்ள அழைப்பதாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்ற அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Post »

நேற்று மாலை (14.07.2011) போயா தித்தன்று எமது பழைய மாணவர் ஒன்றியத்தினது செயற்குழுக் கூட்டம் பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரியில் நடை பெற்றது.

ஒன்றியத் தலைவர் டொக்டர் எம்.கேஇரகுநாதன் தலைமையில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது.

               டொக்டர் எம்.கேஇரகுநாதன் தலைமையில்…

இக் கூட்டத்திற்கு திரு.க.சண்முகசுந்தரம், திருமதி.யோகா சண்முகசுந்தரம், திருமதி. வள்ளி பிரபாகர், திரு.மு.சோமசுந்தரம், திரு.இரத்தினசிங்கம், திரு.உ.வரதராஜன், திரு.க.தயாலிங்கம், திரு.க.சிதம்பரநாதன், திரு.இரவீந்திரன், திருமதி நீலா கோபாலசிங்கம், திரு.க.சச்சிதானநதம்,எம்.கே.முருகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்ற கூட்ட அறிக்கை செயலாளர் திரு.க.சண்முகசுந்தரம் அவர்களால் வாசிக்கபட்டது.

சிலை திறப்பு, பழைய அதிபர்.திரு.மு.கனகலிங்கம் இடமாற்றம், புதிய அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் பதவியேற்பு உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

வேறு பல விடயங்களும் கலந்துரையாடப்படன.

புதிய அதிபருடன் கலந்துரையாடிய தகவல்களை முருகானந்தன் கூட்டத்தினருக்கு விளக்கினார்.
உடனடியாக பாடசாலைக்கு தேவையான விடயங்களாக இனங்காணப்பட்டவை பின் வருமாறு

  • போட்டோ கொப்பி இயந்திரம் அவசியமாகத் தேவைப்படுகிறது. முக்கியமாக பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த  பயிற்சி வினாத்தாள்களை பிரதி பண்ண இது தேவை எனஅதிபர் வேண்டியிருந்தார்.
  • போட்டோ பிரதி இயந்திரம், கணனி ஆகியன வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை மேம்படுத்த அதற்கு இரும்பிலான கதவு தேவை என உணரப்பட்டது.
  • பாடசாலையில் பாலர் வளாகத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அதிபர் வலியுறுத்தியமையும் கவனத்திற்கு எடுக்கப்பட்டது.
  • பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என ஒரு மருத்துவ முகாம் நாடாத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
  • இவற்றிற்கான நிதி வளங்களைப் பெறும் வழிகள் பற்றியும் ஆராயப்பட்டது.
  • இடமாற்றம் சென்று அதிபர்.மு.கனகலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடைக் கூட்டம், புதிய அதிபருக்கு வரவேற்புக் கூட்டம் ஆகியவற்றை இணைத்துச் செய்வது பற்றியும் ஆராயப்பட்டது.

கீழே உள்ள படங்கள் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வளாகத்தில் உள்ள சரஸ்வதி, திருவள்ளுவர், கம்பர் ஆகியோரது அழகிய சிலைகளாகும். போட்டோக்கள் அலைபேசி கமராவால் எடுக்கப்பட்டவை என்பதால் தெளிவு குறைவு என்பது குறிப்படத்தக்கது.

கொழும்பு இந்துக் கல்லூரியில் சரஸ்வதி சிலை
…..
கொழும்பு இந்துக் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை
……
கொழும்பு இந்துக் கல்லூரியில் கம்பர் சிலை

எமது பாடசாலையில் சரஸ்வதி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. அவற்றிற்கான பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இது எமது பாடசாலையின் பிரதான வளாகத்தின் சரஸ்வதி சிலை.

இதற்கு தகரத்திலான கூடம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு மேம்படுத்தலாம்.

 0.0.0.0.0.0.0

Read Full Post »

>

மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது அதில் ஏதோ கட்டியாகத் தட்டுப்பட்டது.
மூல வருத்தமோ, வேறு ஏதாவது ஆபத்தான கட்டியாக இருக்குமோ எனப் பயந்து வந்தாள் ஒரு நோயாளி.

மலவாயிலில் அரிப்பாக இருக்கிறது என சொன்னார் மற்றொரு ஐயா.
பரிசோதித்துப் பார்த்தபோது அவர்களுக்கு குதத்தை அண்டிய பகுதியில் சிறிய தோல் வளர்த்திகள் தென்பட்டன. (Anal Skin Tags) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

இவற்றின் தோற்றத்தில் பல மாறுபாடுகள் இருக்கக் கூடும். குறிப்பிட்ட ஒரு வடிவமாக இருக்காது. நீளமாக, உருண்டையாக, தட்டையாக, பெயரற்றவை எனப் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். சதைக்கட்டி போலவும் இருக்கலாம்.

இவை காண்பதற்கு அரிதானவை அல்ல. பல நோயாளிகளுக்கு இருக்கின்றன. பலருக்கு அவ்வாறு இருப்பது தெரிந்திருப்பதில்லை.

இவை ஆபத்தானவை அல்ல. பொதுவாக எந்தத் துன்பத்தையும் கொடுப்பதில்லை. பேசா மடந்தைகளாக அடங்கிக் கிடக்கும். மிகச் சிலருக்கு அரிப்பு, வலி தோன்றலாம்.

பொதுவாக இவை குதம் சம்பந்தப்பட்ட வேறொரு நோயுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லது அதன் தொடர்ச்சியாக அல்லது பின்விளைவாக இருக்கும்.

எவ்வாறு ஏற்படுகிறது?

  • மலம் இறுகும்போதுஇ முக்கிக் கழிக்க நேரிடும். அவ்வேளையில் குதத்தில் சிறு உராய்வுகள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை காலகதியில் குணமாகும்போது அதில் சிறுதோல் வளர்ச்சியாக மாறும்.
  • அல்லது வெளியே இறங்கிய ‘வெளிமூலம்’(External hemorrhoid)சரியான சிகிச்சையின்றி தானாகக் குணமடையும்போதும் அவ்விடத்தில் சிறு தோல்வளர்ச்சியாக வெளிப்படும்.
  • குதப் பகுதியில் முன்பு செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின் விளைவாகவும் தோல் வளர்வதுபோலத் தோன்றும்.

வலி வேதனை எவையும் ஏற்படுவதில்லை ஆதலால் நோயாளியின் கவனத்தை ஈர்ப்பதில்லை. தற்செயலாக மலம் கழுவும்போது அது இருப்பதை உணரக் கூடும்.

அவ்வாறான தோற்சிறு கட்டியுடன் வலியிருப்பதாக நோயாளி சொன்னால்; பெரும்பாலும் குதத்துடன் சேர்ந்த மூல வீக்கம், குத வெடிப்பு, போன்ற வேறு ஏதோ நோயும் சேர்ந்திருப்பதாகக் கருதலாம்.

இந்நோயுள்ளவர்கள் குதவாயிலை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மலம் கழித்துவிட்டுக் கழுவும்போது பெரும்பாலும் ஒரு பக்கமாகவே கழுவுவோம்.

பெரும்பாலானவர்கள் குதத்தின் பின் பக்கத்தில் ஆரம்பித்து முன்னுக்கு வருமாறு தமது விரல்களைத் தேய்த்தே கழுவுவார்கள். இதனால் தோல் வளர்த்தியின் மறுபுறத்தில் மலம் சிறுதுணிக்கைகளாக அடையும் சாத்தியம் உண்டு. கட்டிகள் பல அவ்வாறான இருந்தால் சுத்தத்தைப் பேணுவது மேலும் சிரமமாகும்.

சுகாதாரக் குறைவு காரணமாக அவ்விடத்தில் அழற்சி ஏற்படும். இது அரிப்பை ஏற்படுத்தும். அரிப்பு அடங்கச் சொறியும்போது புண்பட்டால் கிருமித் தொற்றும் ஏற்பட்டு நிலையை மோசமாக்கும்.

சிகிச்சை

எந்தவித பிரச்சனையும் இல்லாவிட்டால் அவ்வாறான தோற்சிறு கட்டிகளுக்கு யாதொரு சிகிச்சையும் அவசியமில்லை. அரிப்பு, வலி, சுகாதாரத்தைப் பேணுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை வெட்டி நீக்கிவிடலாம்.

அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி போட்டுவிட்டு சிறு சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். மருத்துவ நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிபெற்று நின்று செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலும் வெளிநோயாளியாகச் செய்துவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பக் கூடிய சாதாரண சிக்கிச்சையே இது.

வீக்கமடைந்த பப்பிலே (Enlarged Papillae) , வைரஸ் வோர்ட், நீர்க்கட்டி (Polyps), போற்றவையும் குதத்தருகே தோன்றக் கூடும். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியாக நோயை நிர்ணயிப்பது அவசியம்.

குத வெடிப்பு (Anal fissure)

பிஸ்டுலா (fistula) போன்ற கிருமித் தொற்றுள்ள மலக்குடல் சார்ந்த புண்களில்,

Fistula in ano

 அவற்றின் குத ஓரமான முனையை மூடி தோல் வளர்த்தி ஏற்படுவதுண்டு.  இதனை sentinel tag என்பார்கள். சற்று தீவிரமான அந்த அடிப்படை நோய்க்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவம் செய்வது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

ஒருவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறது என்பது தெரிந்ததும் அவர் கேட்கும் முதற் கேள்வி என்ன சாப்பிடலாம் என்பதுதான். உண்மைதான் உணவுமுறைக்கும் கொலஸ்டரோலுக்கும் தொடர்பு இருக்கிறதுதான்.

ஆனால் உணவு மட்டும் காரணம் அல்ல.

உங்களது இரத்தத்தில் உள்ள கொலஸ்டலோலுக்கும் உங்கள் உணவிலுள்ள கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தங்களது உணவிலுள்ள  கொலஸ்டரோல்தான் தங்கள் இரத்தத்தில் பிரதிபலிக்கிறது எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் இரண்டிற்கும் இடையே தொடர்பு மிகக் குறைவே. உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோல் அப்படியே உங்கள் இரத்த கொலஸ்டரோலாக மாறுகிறது என்றில்லை.

ஒருவரது இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு அவரது

  • சகலவிதமான உணவு முறைகளும்,
  • பரம்பரைக் காரணங்களும், 
  • வாழ்க்கை முறைகளும் காரணமாகின்றன.

உண்மையில் உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோலுக்கும் உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. தாவர உணவுகளில் கொலஸ்டரோல் அறவே கிடையாது.

ஆனால் நாம் உண்ணும் நிரம்பிய கொழுப்பிலிருந்து (Saturated fatty acids) எமது உடலே கொலஸ்டரோலை உருவாக்கிக் கொள்கிறது.

இதனால்தான் தமது உணவில் மிகச் சிறிய அளவு கூட கொலஸ்டரோலை உட்கொள்ளாத முழுமையான தாவர உணவாளர்களுக்கும் கூட இரத்த கொலஸ்டரோல் பிரச்சினையும், இருதய நோய்களும் வரச் செய்கின்றன.

மறுதலையாகப் பார்க்கும்போது தாய்வான், ஐப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் தமது உணவில் அதிகளவு முட்டையையும், வேறு அதிக கொலஸ்டரோல் உணவுகளையும் உட்கொண்டு வந்த போதும் அவர்களுக்கு இருதய நோய்கள் வருவது குறைவாக இருக்கிறது. அதாவது முழுமையான தாவர உணவாளர்களைவிடவும் பாலுணவும் சேர்த்து எடுக்கும் தாவர உணவாளர்களை விடவும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படிக் கூறுவதின் அர்த்தம் “கொலஸ்டரோல் அதிகமுள்ள உணவுகளை வேண்டியளவு உண்ணுங்கள், உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கு எதுவும் நடக்காது” என்பதல்ல. உங்கள் இரத்த கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பதற்கு உணவைத் தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன, அவற்றையும் கவனித்தல் அவசியம் என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglyceride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.
இவற்றின் அதிகரிப்பிற்கு

  • உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75% மும், 
  • உணவு சார்ந்த காரணிகள் 25% ஆகும். 

ஆனால் தனி ஒரு அலகாகப் பார்க்கும்போது ஏனைய எந்த ஒரு அலகும் உணவு சார்ந்த காரணிகளான 25%யை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளாவன

1. பரம்பரை 15%
2 அதிகரித்த எடை 12%
3 ஹோர்மோன்களும், நொதியங்களும் 8%
4 உயர் இரத்த அழுத்தம் 8%
5 அதிக மது பாவனை 2%
6 மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8மூ
7 நீரிழிவு 7%
8 உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6%
9 புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6%
10 பால், வயது, மருந்துகள், ஏனைய காரணிகள் 5%

இவற்றில் சில உங்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. பரம்பரை, பால், வயது, ஹோர்மோன்களும், நொதியங்களும் போன்ற ஏனையவை உங்கள் கட்டுப்பட்டிற்கு அப்பாற்பட்டவை.

கொலஸ்டரோல் பற்றிய எனது ஏனைய பதிவுகள்

கட்டுப்படுத்தக் கூடிய அலகுகளான

  • எடை, 
  • பிரஸர், 
  • மதுபாவனை, 
  • நீரிழிவு, 
  • புகைத்தல், 
  • மனப்பழுவும், 
  • உணர்ச்சி நிலைகள் 

போன்றவற்றை நல்ல நிலையில் பேணுவதுடன் ஆரோக்கியமான உணவை உண்பதும் உங்கள் கொலஸ்டரோலை கட்டுப்படுத்தும். அதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவும்.

“கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி“ என்ற  எனது மருத்துவக் கைநூலிலிருந்து.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எனது உறவினர் ஒருவர் இருந்தார் வயதானவர். நான் பள்ளிச் சிறுவனாக திரிந்தபோது அவருக்கு எழுபது வயதிருக்கும். அவர் கழிப்பறை சென்றால் வெளியே வர குறைந்தது ஒரு மணிநேரமாகும். அவ்வளவு நேரம் அதற்குள் என்ன செய்கிறார் சில குறும்புப் பையன்கள் ஆராச்சி செய்ய முனைவார்கள். ஆனால் அதன் இரகசியம் உள்வீட்டுப் பையனான எனக்குத் தெரிந்திருந்தது. முதல் நாள் வெளிவந்த ஆங்கிலத் தினசரியுடன் உள்ளே சென்றால், அதில் கரை கண்டு முடியவும் அவரது கழிப்புக் கடன் தீரவும் சரியாக இருக்கும். அதன் பின்தான் மிகுதி வேலை எல்லாம்.

அவரைப் போலவே பலருக்கும் தினசரிகள் இல்லாமல் காலை விடிவதில்லை.

மற்றொரு வயதானவரையும் எனக்குத் தெரியும். பத்திரிகையின் முற் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வெளியூர்ப் பதிப்பு என்ற வசனத்தில் படிக்க ஆரம்பித்தால், எந்த நிறுவனத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என்ற கடைசி வரி படித்து முடியும் வரை சார்மனைக் கதிரையிலிருந்து எழுந்திருக்கவே மாட்டார்.

இவை அந்த நாள்கதைகள். இப்பொழுது காலையில் ரீவி ஒலிபரப்பில், பத்திரிகை நியூஸ் வாசிப்பதை அவ்வப்போது அரைக் காது கொடுத்துக் கேட்பது மாத்திரமே பலருக்கு பத்திரிகை படிப்பதாகிட்டது.

சில தகவல்கள்

இத் தருணத்தில் பத்திரிகை என்ற ஊடகத்தின்; தோற்றம் பற்றியும் சில தகவல்களை நினைத்துப் பார்ப்பது சுவார்ஸமாக இருக்கும்.
2009 ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் 12,297 பத்திரிகைகள் பிரசுரமாகின்றன என World press trends அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் மிக அதிகமான எண்ணிக்கையில் பிரசுரமாகும் பத்திரிகை ஜப்பானிலிருந்து வெளிவரும் Yomiuri Shimbun என்பதாகும். தினமும் 10,020,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன என அறியும்போது ஆச்சரியம் மேவுகிறது.

உலகில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை எது என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன. பத்திரிகைகளின் முன்னோடியான வடிவங்கள் ஜேர்மனியில் தொடங்கியதாகத் தெரிகிறது. கையால் எழுதப்பட்ட அந்தப் பிரதிகளாவன அங்குள்ள வர்த்தகர்களிடையே பரவியிருந்தன. நாட்டு நடப்பு, போர் செய்திகள், பொருளாதார வர்த்தகச் செய்திகள் எனப் பல அவ்வாறு அவர்களிடையே பகிரப்பட்டன. இது கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தது.

அச்சில் முதலில் வெளிவந்ததும் ஜேர்மனியில்தான். கைப்பிரசுங்கள் வடிவில் வந்த அவை பெரிதும் பரப்பான விடயங்களைப் பேசின. இவை 1400களின் பிற்பகுதியில் தோற்றம் பெற்றன.

லண்டன் கஸட் என்ற பத்திரிகையே ஆங்கிலத்தில் முதல் முதலாக வந்த செய்திப் பத்திரிகையாகும். இத 16666ம் ஆண்டு வெளியான போதும் அதற்கு முன்னரே இதற்கு முன்னோடியான 1662 The Weekly Newes ல் வெளிவர ஆரம்பித்துவிட்டது.

பணிகள்

செய்திப் பத்திரிகைகள் என்றால் என்ன என்பது பற்றி எங்கள் எல்லோருக்கும் தெரியும். உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகள், உபயோகமான தகவல்கள் இவற்றோடு பத்திரிகைகளை வாசகர் வாங்கும் அளவில் குறைந்த விலையில் விற்பதற்கு உதவியாக விளம்பரங்களும் நிறைய இடம் பெறும். நூல்களைப் போல உயர்தரக் கடதாசியாக அல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்ட் பேப்பரில் வெளியாவதும் விலை உயராமல் தடுப்பதற்கே ஆகும்.

இப்பொழுது பத்திரிகைகளின் எல்லைகள் அகன்றுவிட்டன. தனியே செய்திகள் என்றில்லாமல் இலக்கிய ரீதியாக கதை, கட்டுரை, கவிதைகள், விஞ்ஞானத் தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என் பலவற்றையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஒரு காலகட்டத்தில் இணைந்தது. இப்பொழுது அவற்றுக்காக தனி இணைப்புகளை சஞ்சிகைகள் வடிவில் வழங்க வேண்டியும் இருக்கிறது.

தினசரிப் பத்திரிகைகள் எதிர்நோக்கும் போட்டிகளும் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாகின்றன. போட்டி என்பது பத்திரிகைகளுக்கு இடையே என்ற நிலையையும் தாண்டி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என புதிய சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஆனால் இவற்றால் வாசகர்கள் மேலதிக பயன்பெறுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

தினக்குரல்

தினக்குரலும் இத்தகைய போட்டிகளுக்கு ஈடுகொடுத்து தனது தனித்தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான பத்திரிகையாக தினக்குரல் இன்று இருக்கிறது. தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் நெருக்கடியான நிலையிலிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களை வெளிப்படுத்தவும், அவர்களது குரலைத் தேசிய அளவில் ஒலிக்கச் செய்யவும், தமிழ்தேசிய உணர்வுக்கு ஆதரவாகவும் ஆரம்பிக்கப்பட்டதால் மிகுந்த இக்கட்டான நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சவால்களைத் தாண்டி கட்டிளம் பருவமான 15 வருட காலத்தை வெற்றிகரமாக எட்டிப்பிடித்து இருக்கிறது.

எனது விருப்புகள்

தினக்குரலை எடுத்ததும் முற்பக்கச் செய்திகளை மேய்ந்துவிட்டு நான் தாவிப் பாய்வது அதன் நடுப்பக்கத்திற்கே ஆகும். முக்கியமாக கவனத்தை ஈர்ப்பது அங்கு நாலாம் பக்கத்தில் இடம்பெறும் ஆசிரியர் தலையங்கம் ஆகும். கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் அதில் அலசப்படுவது வழக்கம். மிகவும் சிறப்பாகவும், பரந்த பார்வையுடன், நல்ல தமிழில் அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.

நல்ல பல புதிய தமிழ்ச் சொற்களை அங்கு ஆசிரியர் பயன்படுத்துவது வழக்கம். தமிழ் எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பயனுடையாக இருக்கிறது. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலையங்கங்கள் ‘ஊருக்கு நல்லதைச் சொல்வேன்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்ததும் அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றதும் அறிந்ததே.

5ம் 6ம் பக்கங்களில் வெளியாகும் சிறப்பான கட்டுரைகள் என்னைக் கவரும் மற்றொரு அம்சமாகும். உள்நாட்டு அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான முன்னேற்றம் போன்ற பல்வேறு விடயங்களில் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அங்கிருக்கும். அவற்றிடையே முற்போக்குச் சிந்தனையுள்ள கட்டுரைகளும் இடம்பெறுவது ஏனைய பத்திரிகைகளில் காண முடியாத விடயமாகும். மறைந்த எழுத்தாளர் டேவிட் ராஜ் அவர்களது இதழ்க் கீற்றான ‘ஒளிவு மறைவின்றி….’ கருத்துச் சித்திரம் ஆகியவற்றை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ஞாயிறு தினக்குரலில் வெளியாகும் நேர்காணல்கள், நூல் விமர்சனம், என்னைக் கவரும் பல சிறந்த சிறுகதைகளையும் அது தொடர்ந்து தருகிறது. பெண்ணியம், உளவியல் சார்ந்த கட்டுரைகளும் அதில் சிறப்பானவையாகும்.

தமிழ்ப் பத்திரிகைகள்

தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் விடயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளியிடும் முறைக்கு அளிப்பதில்லை. பக்க வடிவமைப்பில் நிறைய முன்னேற்றங்களுக்கு இடம் உண்டு. விடயங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் கண்களுக்கு இதமாக, வாசிப்புக்கு கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தால்தான் உள்ளடக்கம் வாசகனைச் சென்றடையும். பத்திரிகைத்தாளின் தரத்திற்கும் வாசக நுகர்ச்சியைத் தூண்டுவதற்கும் நிறையத் தொடர்பு உண்டென்பதையும் மறக்கக் கூடாது.

முற்பக்கத் தலைப்புச் செய்தி வாசகனைக் கவருமாறு எல்லாப் பத்திரிகைகளும் தலைப்புக் கொடுக்கின்றன. இது போலவே ஏனையவற்றிக்கும் கவனம் அளிப்பது அவசியமாகும். கவர்ச்சியும் கொச்சைத்தனமான இரண்டாம் தரத் தலைப்புகள் பொதுவாக இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆயினும் வாசிக்கத் தூண்டும் ஆவலை விதைக்காவிட்டால் அவை வாசகனைச் சென்றடையப்போவதில்லை.

இப்பொழுது பத்திரிகைகள் அதிகரித்துவிட்ட அளவிற்கு தேவையான விடயதானங்கள் கிடைப்பதில்லை போலிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் இணையத்தில் இருந்தும் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பல கட்டுரைகளும் தகவல்களும் எங்கிருந்து பெறப்பட்டன, யாரால் எழுதப்பட்டன என்ற தகவல்கள் இல்லாமல் அனாதைப் பிள்ளைகள் போல சிதறி வெளியாகின்றன. இதனால் அவற்றின் நம்பகத்தன்மை கெடுகிறது. பகுத்தறிந்து வாசிக்கத் தெரியாத வாசகனை மாயையில் சிக்க வைப்பதுமுண்டு.

உதாரணத்திற்கு நலவியல் தொடர்பான கட்டுரைகள் செய்திகளைச் சொல்லலாம். என்னிடம் வரும் நீரிழிவு நோயாளர்களில் சிலர் சீனியின் அளவு அதிகரித்த நிலையில் வந்தபோது அவர்களது உணவு முறையயைத் தீர விசாரிக்க நேர்ந்தது. பலர் பேரீச்சம் பழம் அதிகம் சாப்பிடுவதாகக் கூறியதுண்டு. “நீரிழிவுக்கு நல்லது” எனப் பத்திரிகைளில் படித்ததாகச் சொல்லுவார்கள். பத்திரிகைச் செய்தி என்பது உண்மையா பொய்யா என்பது தெரியாது.

அது கலோரிச் செறிவுள்ள பழம் என்பதால் மிகக் குறைவாகவே நீரிழிவு நோயாளர்கள் சாப்பிட வேண்டும். தகமையற்றவர்கள் எழுதியதைப் பகிர்ந்து கொள்வதால் வரும் வினை இது. யாரால் எழுதப்பட்டது, அவர் மருத்துவராயின் அவர் எத்துறை சார்ந்தவர், நவீன மருத்துவத்துறை சார்ந்தவரா சுதேசிய மருத்துவ துறை சார்ந்தவரா, அவரது கல்வித்தகமை என்ன அல்லது அது கை வைத்தியமா, என்பது போன்ற விடயங்களை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். வாசகன் தனக்கேற்றதைத் தெரிவு செய்து படிக்க உதவும்.

மருத்துவக் கட்டுரைகள் இணையத்தில் இருந்து பெறப்பட்டதாயின் அது எந்தத் தளத்திலிருந்து பெறப்பட்டது. அது நம்பிக்கையான தளம்தானா? அது தகுதியானர்களால் எழுதப்பட்டதா என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இணையம் கட்டுப்பாடுகள் அற்றது. யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் எழுதலாம்.

நலவியல் கட்டுரைகள் மாத்திரமின்றி எத்துறை சார்ந்த தகவல்களுக்கும் இது பொருந்தும்.

எதிர்காலம்

பத்திரிகைகளுக்கு சவால்கள் பல காத்திருக்கின்றன. வாசகர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. நடுநிலைமையுடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடப்பாடு உண்டு. ஆனால் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு மறைவான தடைகளும், உயிராபத்து அடங்கலான அச்சுறுத்தல்களும் முன் நிற்கின்றன. தினக்குரலுக்கு இது புதிய சவால் அல்ல. பொறுப்புகளை நிறைவேற்ற திறமையும், சாதுர்யமாக செயற்படும் வழிமுறையும் தெரிந்திருக்கிறது.

எனவே வளமான எதிர்காலம் தினக்குரலுக்கும் அதன் வாசகர்களுக்கும் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

தினக்குரல் 15 அகவை விசேட மலரில் என்னால் எழுதப்பட்ட கட்டுரை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »