வெள்ளவத்த காலி வீதியை மேவிய நடை பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென கால் தடக்கி விழுந்தாள். எழ முடியாது வேதைனையில் துடித்துக் கொண்டிருந்தாள். பாதையால் சென்று கொண்டிருந்த ஓரிருவர் ஓடி வந்து அவளைத் தூக்கிவிட முயன்ற போதும் அவளால் எழவே முடியவில்லை.
தெரிந்தவர் யாரோ தற்செயலாக வந்ததால் அம்பியுலன்சை அழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவளது இடுப்பு எலும்பு உடைந்திருப்பது தெரிந்தது. சத்திரசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.
ஏன் அவ்வாறு நிகழ்ந்தது

வயதும் ஒஸ்டியோபொரோசசின் தாக்கமும்
- முக்கியமாக அவளது வயது 70தை நெருங்கியிருந்தது. அத்துடன் அவளது நடுநிலை (Postural imbalance) சற்று தழும்பியிருந்தது. அதனால் சிறிது தடுக்கியதும் விழ நேர்ந்தது.
- தடக்கியதற்குக் காரணம் மாநகரசபையின் அக்கறையீனம். மின்சார, குடிநீர் குழாய் அல்லது கழிவு நீர் அகற்றும் வேலைகளுக்காக கிண்டிய நடைபாதை சரியாகச் செப்பனிடவில்லை. ஏனோ தானோ எனத் திருத்தியதால் நடைபாதைகள் திட்டியும் பிட்டியுமாக கிடந்ததால் தடக்கியது.
- தடக்கி விழும் எல்லோருக்கும் எலும்பு உடைவதில்லை. இவளது எலும்புகள் வலுவிழந்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிறிய விழுகையே அவளது இடுப்பு எலும்பை எடைத்துவிட்டது.
- பரிதாபம் என்னவென்றால் தனக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அதற்கான சிகிச்சையை எடுத்ததும் இல்லை. பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியாததால் பாதுகாப்பாக இருக்கவும் இல்லை.
மற்றொரு பெண் குளியறையில் செருப்பு இல்லாமல் சென்றபோது வழுக்கிவிட்டது. விழும்போது அடிபடாது இருப்பதற்காக கையைத் தரையில் ஊன்றியபோது மணிக்கட்டு எலும்பு முறிந்துவிட்டது. இவருக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்தான்.
ஒஸ்ரியோபொரோசிஸ் என்றால் என்ன?
எமது எலும்பு எஃகு போலக் கடினமானது. ஆனால் அதன் உறுதித்தன்மை மிக உச்சமான கட்டத்தில் இருப்பது 25-30 வயதுகளில்தான். அதன் பின் என்ன நடக்கிறது.
கடினமான இரும்பினுள் நுண்ணிய துவாரங்களை இட்டால் என்ன செய்யும்? அதன் உறுதித்தன்மை குறைந்தவிடும். மேலும் அதிகமாக துவாரம் இட்டால் கையால் முறித்து உடைக்கும் அளவிற்குக் குறைந்துவிடும். அதே போல இளம் வயதில் கடினமாக இருக்கும் எலும்பின் அடர்த்தி வயது ஏற ஏற குறையும். இது இயற்கையின் நியதி.

ஆனால் சிலருக்கு அதிகமாக அதன் உறுதித்தன்மை மிக அதிகமாகக் கெடுவதால் அவை மிகவும் பலவீனம் அடைந்து எளிதில் உடைந்து விடுகின்றன. இந்த நிலைதான் ஒஸ்ரியோபொரோசிஸ் என்பதாகும்.
ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்?
பரம்பரை அம்சம்
இது மிக முக்கியமானதாகும். உங்களது எலும்புத் திணிவைத் தீர்மானிப்பதில் பரம்பரை அம்சமானது 60 முதல் 70 சதவிகிதமளவில் பங்களிக்கிறது.
உங்கள் அப்பா, அம்மா, சகோதரங்கள் அல்லது பாட்டன் பாட்டி. போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் அல்லது இடுப்பு எலும்பு உடைவு (Hip fracture) இருந்திருந்தால் உங்களுக்கும் எதிர்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
அவ்வாறெனில் இளவயதிலேயே உணவு முறைகளாலும் உடற் பயிற்சிகளாலம் எலும்பகளின் திடத்தை அதிகரிக்க முயல்வது அவசியமாகும்.
இனம்
நீங்கள் ஆசியப் மற்றும் Caucasian பகுதியைச் சார்ந்தவராயின் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அமெரிக்க ஆபிரிக்கப் பெண்களுக்கு மிகக் குறைவாகும். Hispanic பெண்களுக்கு இடைநடுத்தர வாய்ப்பு உண்டு. எனவே ஆசியப் பெண்களான நீங்கள் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் வரக் கூடும் என்பதை மனதில் இருத்தி அதற்கேற்ற உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மெலிவான உடல்வாகு
அதீத எடைக்கும் பல நோய்களுக்கும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மெலிந்த உடல் வாகை உள்ளவர்களை ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் தாக்குவது அதிகம். ஒருவரது எடை அவரது உயரத்திற்கு எற்ப சரியானதா, அதிகமா, குறைவா என்பதை உடற் திணிவு (Body mass Index) மூலமே அறிய முடியும். (உங்கள் உடற் திணிவை அறிய ஹாய் நலமா புளக்கின் இடது கொலமின் கீழ்ப் பகுதியில் பார்க்கவும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களது எலும்புகள் திடமற்று இருப்பதால் அதிகமாக நோயுறுகிறது.
மாறாக வயிற்றறைக் கொழுப்பும் காரணமாகலாம். இணைப்பில் படியுங்கள்
மாதவிடாயக் குழப்பங்கள்
மாதவிடாய் ஒழுங்காக இல்லாதவர்களுக்கு பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் குறைபாடு இருக்கக் கூடும். இதனால் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
15 வயதிற்கு மேல் பருவமடைதல் தாமதமாகும் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைவாக (Osteopenia) இருப்பதுடன் பிற்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதும் அதிகமாகும். அதேபோல காலத்திற்கு முந்தி (45வயது) மாதவிடாய் முற்றாக நின்ற (Menapause) பெண்களுக்கும், கர்ப்பம் தங்காத சாதாரண காலங்களிலும் மாதவிடாய் இடையிடையே நீண்ட நாட்களுக்கு வராது இருப்பவர்களுக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகமாகும்.
வாழ்க்கை முறைகள்
மனிதனின் உடல் உழைப்பிற்காக வடிவமைக்கப்பட்டது. அதனால் உழைப்பிற்கு ஏற்பவே உடல் திண்ணமமடையும். அதேபோல எலுப்புகளும் உங்கள் உடலைச் சுமப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ப உறுதியாக மாறும். முக்கியமாக எலும்பு உருவாகும் காலமான இளமைப் பருவத்தல் உடல் உழைப்பு அவசியம்.
முக்கியமாக மாணவர்களுக்கு அவசியம். பாடசாலை ரியூசன். ரீவி, கம்பியூட்டர் என உடலுக்கு பயிற்சியற்ற வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களது எலும்புகள் திடம் பெறுவது எங்ஙனம். இப்பொழுது பெரும்பாலான பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய ஒரு சில வாரங்களே உடற் பயிற்சி நடைபெறுகிறது. இந்நிலை மாற வேண்டும். தினமும் விளையாட்டிற்கு என அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.
நோயுற்று படுக்கையில் கிடந்தாலும், சக்கர நாற்காலியில் திரிந்தாலும் எலும்புகள் தேய்ந்து விடுகின்றன. அதைத் தடுக்கவே பிசியோதிரபி கொடுக்கப்படுகிறது.
மொத்தத்தில் அனைவருக்கும் அவர்களது வயதிற்கு ஏற்ற உடற் பயிற்சிகள் கட்டாயம் தேவை.
புகைத்தலும் மதுவும்
இந்த இரண்டு பழக்கங்களும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு வழி வகுக்கின்றன.
உணவு முறைகள்
உணவு முறைகளைப் பொறுத்த வரையில் கல்சியம் விற்றமின் டி செறிந்த உணவுகளை நீங்கள் உண்பது அவசியம். முக்கயமாகப் பழவகைகளை தினமும் சேர்க்க வேண்டும். பால், முட்டை, கருவாடு ஆகியனவும் நல்லது.
அதீதமாக கோப்பி இருந்துவதும் நல்லதல்ல. புரதங்களை மிதமிஞ்சி உண்பதும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு இட்டுச் செல்லும் என நம்பப்படுகிறது.
நீங்கள் செய்யக் கூடியது என்ன?
உங்கள் இனத்தையோ பரம்பரையையோ உங்களால் மாற்ற முடியாது.
ஆயினும் உங்கள் வம்சத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் இருந்தால் அது உங்களுக்கு எதிர்காலத்தில் வராதிருப்பதற்கான உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் செய்வது அவசியம்.
சில மருந்துகளும் காரணமாகலாம்
- கருத்தடைக்கு உபயோகிக்கும் டிப்போ புரொவிரா ஊசி,
- வயிற்றப் பொருமல் அல்சர் போன்றவற்றிற்கு உபயோகிக்கும் அலுமினியம் கலந்த மருந்துகள் (டைஜீன், பெல்சிட் போன்றவை),
- தைரொக்சின் (Thyroxine),
- வலிப்பு நோய் மருந்துகள் (Anticonvulsants) போன்ற பல மருந்துகள் ஒஸ்ரியோபொரோசிஸ் நோயை ஊக்குவிக்கும் என்பதால் மருத்தவருடன் கலந்து ஆலோசியுங்கள்.
- நீண்டகாலம் அன்ரிபயோடிக் மருந்துகளை உபயோகிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன

ஒஸ்டியோபொரோசிஸ் வர சில காரணங்கள்
புகைத்தல். மதுபானம் அருந்தல் போன்ற பாதகமான பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிடுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
Read Full Post »